https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, January 17, 2017

M N ROY VI

விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்  VI பகுதி 6
யுத்தத்திற்கு பிந்தியுள்ள நிலைமைகளை சீர்படுத்திட 1944 ஜாரியா கட்சி மாநாட்டில் மக்கள் திட்டம் என ராய் முன்மொழிந்தார். ஏழை விவசாயிகள், கைத்தொழிலாளர், நுகர்வோர் பங்கேற்கும் மக்கள் கூட்டுறவுகள் என அத்திட்டம் பேசியது. நாட்டின் 70 சத கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த விவசாய புரட்சி என அத்திட்டம் தெரிவித்தது. ருஷ்யாவிலிருந்து சில முழக்கங்கள் கடன் வாங்கப்பட்டன. வாலண்டரி கலெக்டிவிஷேசன்(Collectivisation) என்ற நில சீர்திருத்தம் முன்மொழியப்பட்டது.  விடுதலை இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் என்கிற கான்ஸ்டிட்யூஷன் நகல் ஒன்றை ராய் தயாரித்தார். காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டால் மக்களை திரட்டும் பணியில் காங்கிரஸ் பின்னால் வருவோம் என ராய் அறிவித்தார். தங்கள் கட்சியில் 1940-1944 4 ஆண்டுகளில் 3500 லிருந்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் உயர்ந்துவிட்டதாக ராயினர் தெரிவித்தனர். இதில் ஆலைத்தொழிலாளர்கள் 15சதம், படித்த மத்தியதர வர்க்கம் 20 சதம் என்றனர்.  1943ல் AITUC விட தங்கள் IFL தொழிற்சங்கத்தில் அதிக சங்கங்கங்களும் உறுப்பினர்களும்  இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். ரயில்வே தொழிற்சங்க தலைமை பதவிக்கு தங்கள் ஆதரவுடன் ஜம்னதாஸ்மேத்தாவை என் எம் ஜோஷிக்கு எதிராக நிறுத்தி வெற்றிபெற வைத்தனர். 1945ல் பாரிசில் WFTU துவக்க நிகழ்விற்கு AITUC மற்றும் ராயின் IFLஆகிய இரு அமைப்புகளும் பங்கேற்றன.  ஆரம்ப நாட்களில் கம்யூனிஸ்ட்களுடன் மிக நெருக்கமாக செயலாற்றி வந்த பிலிப் ஸ்பிராட் ராயுடன் இணைந்தார்.
போருக்குப் பின்னர் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றும், பிரிட்டன் முழுமையாக இடது பக்கம் திரும்பும் என ராய் கருதினார்.  வின்ஸ்டன் சர்ச்சிலை விமர்சித்தும் வந்தார். பிரிட்டனில் செல்வாக்கு பெற லண்டனில் கட்சி அலுவலகம் ஒன்றையும் ராய் நிறுவினார். ஆனால் லேபர் கட்சியின் மீது தான் கொண்டிருந்தது மாயை என பின்னர் உணர ஆரம்பித்தார். 1945 ஜூனில் வேவல் தற்காலிக அரசாங்க திட்டம் குறித்த மாநாடு ஒன்றை சிம்லாவில் கூட்டினார்.. அதில் எந்த இடது பிரிவிற்கும் இடமில்லை.  வேவல் திட்டம் மக்களுக்கு துரோகம் என ராய் விமர்சித்தார்.  காங்கிரஸ் முஸ்லீம் லீக் மத்தியில் இருந்த வேற்றுமையால் பலனின்றி முடிந்தது அம்மாநாடு. 1945 ஜூலையில் அட்லி லேபர் சர்க்கார் பதவிக்கு வந்தது.
INA முக்கிய வீரர்கள் விடுதலை, RIN போராட்டம் ஆகியவற்றால் காங்கிரசின் மதிப்பும் செல்வாக்கும் பெருகியிருந்தது. ரின் எழுச்சியில் கம்யூனிஸ்ட்களும் அருணாஆசப்அலி போன்ற சோசலிஸ்ட்களும் தலையாய பங்கை வகித்தனர். புரட்சியாளர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் லீக் என மூன்று  கொடிகளையும் உயர்த்தினர். பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும்  கடும் சண்டை நடந்தது. பம்பாய் மக்கள் ஆதரவும் பெருகியது. ஆனால் படேல் இதனை கலகம் என கடுமையாக கண்டித்தார். உடனடியாக வாபஸ் பெற வற்புறுத்தினார். நேரு போராட்டத்தை ஆதரவுடன் பார்த்தாலும் தவறான தந்திரம் என்றார். காங்கிரஸ் தலைவர் ஆசாத் ராணுவ வீரர்களின் நேரடி போராட்டம் என்பது தவறானது, அறிவிற்கு உகந்த செயல் அல்ல என்றார்.  200க்கும் மேற்பட்டவர்கள் மடிந்தனர். ஆயிரக்கணக்கானவர் படுகாயம் அடைந்தனர். இதுபோன்ற குறுகியகால எழுச்சிக்கு ஆதரவு தரக்கூடாது என்ற நிலையை எம் என் ராய் எடுத்தார்.  பிரிட்டிஷார் ஆட்சி மாற்றம் செய்யப்போவதற்கான சூழலில் அரசியல் போராட்ட இயக்கங்கள்தான் தேவை- இதுபோன்ற அமைதியற்ற ராணுவ நடவடிக்கைகள் கூடாது என  ராய் குழுவினர் கருதினர். அஞ்சல் ஊழியர்களின் 1946 ஜூலை வேலைநிறுத்தத்தில் கம்யூனிஸ்ட்கள் முக்கிய பங்காற்றினர். அப்போராட்டத்திற்கு ராய் தனது ஆதரவை நல்கினார். அதேபோல் ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், கராச்சி கப்பல் தள தொழிலாளர்கள் போராடினர்.  ஆங்காங்கே ஜமீன்தாரர்களுக்கு எதிராக நடந்த விவசாயிகளின் போராட்டத்திலும் ராய் கட்சியினர் பங்கேற்றனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அட்லி இந்தியாவிற்கு அதிகார மாற்றம் 1948 ஜூனிற்கு முன்பாக செய்யப்படும் என அறிவித்தார். ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கு லீக் தலைவர்களை  ஏற்க வைக்க யாராலும் முடியவில்லை. பிரிட்டன் வெளியேற்றத்திற்கான முழு பொறுப்பும் மெளண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது. இரு இறையாண்மை நாடுகள், ஆகஸ்ட் 15, 1947ல் என்ற அறிவிப்பை மெளண்ட்பேட்டன் ஜூன் 3 1947ல் அறிவித்தார். மதவழியில் பிரச்சனையை பிரிட்டிஷ் அதிகப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை ராய் வைத்தார். மைனாரிட்டிகளுக்கு நம்பிக்கை உண்டாக்கவேண்டியது பெரும்பான்மையினரின்  கடமை. அதில்  காங்கிரஸ் தவறிவிட்டது என்றார் ராய். மையப்படுத்தப்பட்ட அதிகாரமிக்க மத்திய அரசு என்பது பல்வேறு வேறுபட்ட தன்மையிலான நமது நாட்டில் சுதந்திரம், தன்னாட்சி என்பதை  இல்லாமல் ஆக்கிவிடும். இந்திய சம்மேளனம் என்ற ஆட்சிமுறை தேவை என ராய் பேசினார். திராவிடஸ்தான் என்பதைக்கூட அவர் ஆதரிக்க துவங்கினார். ஜெயப்ரகாஷ்நாரயண் நாட்டின் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். ராஜாஜி மக்களிடம் உண்மையை சொல்லத் தவறுகிறார் என அவர் விமர்சித்தார். 1947 மார்ச்சில் நடந்த தங்கள் கான்பூர் மாநாட்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் அதிகார மாற்றம் உழைப்போர் கையில்வரவேண்டும் என தீர்மானம் இயற்றியது. அதிகார மாற்ற விவாதங்களில் அதற்கு எந்த பங்கையும் காங்கிரஸ் தலைமை தரப்போவதில்லை என்ற ராயின் எச்சரிக்கையை அவர்களால் அப்போதுதான் உணரமுடிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளின் எழுச்சியில் தெபகா, தெலங்கானா போராட்டங்களில் தீவிர பங்காற்றியது.
இடதுசாரிகள் ஒன்றுபட்டு நிற்கவில்லையெனில் அரசியல் சட்ட அசெம்பிளி முற்றிலுமாக சொத்துரிமைக்காரர்கள் வசமாகிவிடும் என ராய் தனது கவலையை தெரிவித்தார். ராயின் குரல் எடுபடவில்லை. மார்க்சியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு அவரிடம் பற்றியது. தீவிர அரசியலிருந்து ஒதுங்கிவிடலாமா என்கிற எண்ணத்தை கடிதம் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். அவரின் ஆதரவாளர்களுக்கு  ராயின் விரக்தி அதிர்ச்சியை தந்தது. 1946 இறுதியில் தனது தீவிர ஜனநாயகத்திற்கான (Radical Democracy) 22 ஆய்வுகள் என்பதை முன்வைத்தார். அதிகார அரசியல் என்ற தீவிரத்திலிருந்து தத்துவ தேடல் நோக்கி அவர் திரும்பினார்.  Renaissance, Radical Humanism என்பதை முன்வைக்க துவங்கினார்.
ராயின்  விடுதலைக்கு முன்னரான அரசியல் பயணம் குறித்த  சில முக்கிய கட்டங்கள் மேலே பதிவிடப்பட்டுள்ளது.  அவர் 1887ல் நரேந்திரநாத் பட்டாசார்யாவாக பிறந்து ஆரம்ப நாட்களில் பயங்கரவாத சதி சாகச அரசியல் கொள்ளை இயக்கங்களிலிருந்து மார்க்சியம்  வர்க்க போராட்ட அரசியல்  திசைக்கு திரும்பினார். லெனின், ஸ்டாலின், புகாரின் போன்றவர்கள் மட்டுமல்லாது மாவோ, பிரிட்டிஷ் கட்சித்தலைவர்கள், ஜெர்மானிய தலைவர்கள் ஆகியோருக்கு இணையான முக்கியத்துவம் பெற்று கம்யூனிஸ்ட் அகிலத்தில் பணியாற்றி, இந்திய இயக்க முன்னோடி தலைவர்கள் சிங்காரவேலர், டாங்கே, காட்டே என பலருக்கும் வழிகாட்டிய நிலைக்கு உயர்ந்திருந்தார், அகிலத்தின் தலைமையிடம் நம்பிக்கையிழப்பை பெற்ற பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் மோதல் ராய்க்கு முற்றியது. இந்திய விடுதலை இயக்க முன்னோடி தலைவர்களாக இருந்த  காந்தி, நேரு, போஸ் போன்றவர்களுடன் நல்லுறவு, வேறுபாடுகள் என தான் எடுத்த முயற்சிகளில் பல தோல்விகளை கண்டார். காங்கிரஸ் தலைவராக முடியாமல் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் சோசலிச தலைவர்களுடனும் இதே நிலையைத்தான் அவரால் அனுபவமாக்கிக் கொள்ளமுடிந்தது. வாழ்நாளில் மக்களால் பெருமளவு ஏற்கப்பட்ட பெருந்தலைவராக ராயால் பரிணமிக்க முடியவில்லை. ராய், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் கட்சிகளற்ற அரசியல் என பின்னாட்களில் பேசத்துவங்கினர்.

தனக்கான ஆதரவாளர்களுடன் உச்சம் செல்வதும்  எழுவதும் வீழ்வதுமாக அவரது அரசியல் பயணம் அமைந்தது. விடுதலைக்கு பின்னர் அவர் சில ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். 1952 ஜூனில் மலைசரிவு ஒன்றில் 50 அடி கீழே விழுந்த விபத்தால் அவர் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தனது 67ஆம் வயதில் சில மாதங்கள் நோய்வாய்பட்ட நிலயில் டேராடூன் இல்லத்தில் ஜனவரி 25, 1954 இரவில் மறைந்தார். விடுதலைக்கு பின்னர் மிக முக்கிய அவரது பெரிய அளவிலான படைப்பான  Reason Romanticism and Revoultion யை கொணர்ந்தார்.. ஜனவரி 24 1954ல் அவர் மறைவிற்கு முதல் நாள் கூட தீவிர மனிதாபிமானம் பற்றிய தனது  கட்டுரை ஒன்றை தனது துணைவியாருக்கு வாய்மொழியாக சொல்லி எழுத பணித்துக் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுதும் தனது ஆளுமையை சிந்தை திறனை மட்டுமே நம்பி பயணப்பட்டவர் ராய். தான் சரி என கருதியதற்காக தோல்விகளை கண்டு  துவளாமல் ஓயாமல் தீவிரமாக உழைத்த  சிந்தனையாளர் ராய்.


Reference:
M N Roy and Indian Politics   by S M Ganguly
Lohiatoday-MN roy

M n roy G D Parikh

No comments:

Post a Comment