Skip to main content

Com B T RANADIVE தோழர் ரணதிவே

தோழர் பி டி ரணதிவே (B T Ranadive)
                                        -ஆர்.பட்டாபிராமன்
இந்தியாவில் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு சோசலிசம் மலரவேண்டும் என்று மார்க்சியத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ்நாள் முழுதும் போராடியவர்களில் தலையானவர் தோழர் பி டி ரணதிவே.. மும்பாய் தாதர் பகுதியில் டிசம்பர் 19, 1904ல் பிறந்தவர் . அவரின் முழுப்பெயர் பாலசந்திர திரிம்பக ரணதிவே. தந்தை திரிம்பக் மொரேஷ்வர் ரணதிவே வருமானத்துறையில் பணிபுரிந்தார். தாயார் யசோதா. புகழ்பெற்ற அகல்யா ரங்கனேகர் உட்பட ரணதிவேவிற்கு 4 சகோதரிகள், மூன்று சகோதரர்கள். தந்தையார்  கோகலே  ஈர்ப்புடையவர். சமய நல்லிணக்க சபாவில் இருந்தவர்.
ரணதிவேவிற்கு பள்ளி நாட்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திலகர், காந்தி குறித்த பேச்சுகள் மாணவர் மத்தியில் இருந்தன. 1921ல்  புகழ்வாய்ந்த புனேவின் பெர்குசான் கல்லூரியில் சேருகிறார். அடுத்த ஆண்டு டாங்கே போன்றவர்கள் படித்த வில்சன் கல்லூரி பம்பாயில் சேர்கிறார். வரலாறு, பொருளாதாரத்தில் பட்டம் பெற்று முதுகலையும் சேர்கிறார். காந்தி மீது ஈர்ப்பு இருந்தாலும் செளரி செளரா நிகழ்வில் காந்தி திடிரென போராட்டத்தை விலக்கிக்கொண்டது குறித்த விமர்சனம் ரணதிவேயிடம் அப்போதே இருந்தது. தனது MAவில் Gold Medalistஆக அவர் வெளிவந்தார்டாக்டர் ஆய்விற்குஇந்தியாவில் ஜனத்தொகை”  என்பதை எடுத்துக்கொண்டார்.
புகழ்வாய்ந்த மார்க்சிய அறிஞர் டாக்டர் அதிகாரி பி டி ஆரின் உறவினர். ஜெர்மனியில் வேதியல் டாக்டர் பட்டம் பெற ஆய்வு மாணவராக அங்கு சென்றவர். ஜெர்மனியில் அவருக்கு மார்க்சியம்- கம்யூனிஸ்ட் கட்சி நூல்கள் கிடைக்கப் பெற்றன. சிலவற்றை அவர் இந்தியாவிற்கும்  இரகசியமாக அனுப்பிக் கொண்டிருந்தார். BTRக்கு ரஜினிபாமிதத்தின் லேபர் மன்த்லி கிடைக்கத் துவங்கியது. லெனின் நூல்களை வாங்கமுடிந்தது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு 1928ல் அவர் அதில் உறுப்பினராகிறார். கிராந்தி என்கிற மராத்தி வாரப்பத்திரிக்கைக்கும் ஆசிரியராகிறார். 1929 கிரினிகாம்கார் சங்க வேலைநிறுத்தம், ரயில்வே வேலைநிறுத்தங்களில் முன் நிற்கிறார். ரயில்வே சங்கத் தலைவராகிறார். வேலைநிறுத்தங்கள் காரணமாக வழக்கிற்கு உள்ளாகி ஒராண்டு சிறையில் வாடுகிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ராயல் கமிஷன் என்கிற விட்லி கமிஷனை நேரு பகிஷ்கரிக்கவேண்டும் என்ற நிலை எடுத்தார். பிடிஆர் போன்றவர்கள் நேரு நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள் ஆனால் என் எம் ஜோஷி, திவான் சமன்லால் போன்றவர்களை (AITUCஆரம்பகால தலைவர்கள்) அதன் உறுப்பினர்கள் என அரசாங்கம் அறிவிக்கிறது. இதனால் கருத்து வேறுபாடுகள் உருவாகி அவர்கள் AITUCலிருந்து வெளியேறுகின்றனர்.
1931ல் ஒர்க்கர்ஸ் வீக்லி என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு ரணதிவே ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அந்த ஆண்டில் ஏ ஐ டி யு சி யில் சுபாஷ்சந்திர போசுடன் கருத்து வேறுபாடு எழுந்து கம்யூனிஸ்ட்கள் வெளியேறுகின்றனர். 1934வரை தனியாக ரெட் யூனியன் நடத்துகின்றனர். பம்பாயில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்தி பேசிய மேடையிலேயே ஏறி  பகத்சிங்கை காப்பாற்றுவது எனும் பிரச்சனையில் காந்தி துரோகம் செய்துவிட்டார்  என விமர்சித்து பி டி ஆர் பேசுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியைவிட போல்ஷ்விக் கட்சிதான் பொருத்தமானது, அதனை அமைக்கவேண்டும் என கருதி பிடிஆர் போல்ஸ்விக் கட்சி அமைக்கிறார். சீனா, பிரிட்டன், ஜெர்மனி கட்சித்தலைவர்கள் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுகோள் விடுத்தனர் . 1934ல் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மையம் ஒன்றை துவங்கி செயல்பட ஆரம்பித்தது. ரணதிவே அதில் மத்திய கமிட்டி உறுப்பினராகிறார்.

கிரினிகாம்கார் சங்க நடவடிக்கைகளால் டாகடர் அதிகாரியும் ரணதிவேவும் கைதாகி 2 ஆண்டுகள் சிறை வைக்கப்படுகின்றனர். மார்க்சியத்தை ஆழமாக கற்பதற்கு அவரது சிறைவாசம் உதவியது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் போராட்டங்களில் முன்நின்றார். 1938ல் டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் அம்பேத்கார் ஆதரவுடன் நடந்தது. அதில் ரணதிவே  முக்கிய பங்காற்றினர். தொழிலாளர் மத்தியில் பணியாற்றிவந்த விமல் சர்தேசாயை ரணதிவே மகிழ்வுடன் திருமணம் செய்துகொள்கிறார்.
1939 செப்டம்பர் இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் கட்சி பத்திரிக்கைகள் தடை செய்யப்படுகின்றன, பி டி ஆர் உட்பட தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ராஜஸ்தான் தியோலி சிறையில் அவர்கள் அடைக்கப்படுகின்றனர். 1942 வெள்ளையனே வெளியேறு போரட்டத்தை  காந்தி அறிவிக்கின்றார். யுத்தத்தில் சோவியத் பங்கேற்ற சூழலில் மக்கள் யுத்தம், ஹிட்லர் தலைமையிலான பாசிசம் வீழ்த்தப்படவேண்டும் என்ற பார்வையில் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் செயல்பட்டனர். காந்தி அறைகூவலில் கட்சி பங்கேற்கவில்லை. இதனை சோசலிஸ்ட்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு போராட்ட நாயகர்களாக தங்களை உயர்த்திக் கொண்டனர். ரணதிவே உட்பட கம்யூனிஸ்ட் இளம் தலைவர்கள் தங்கள் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு பதிலை தந்து கொண்டிருந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943 மே மாதம் பம்பாயில் நடந்தது. 1935 முதலே பி சி ஜோசி பொதுச்செயலர் பொறுப்பில் பணியாற்றிவந்தார். Working Class and National Defence- Report on Production என்கிற ஆவணத்தை தோழர் ரணதிவே எழுதி இக்காங்கிரசில் முன்வைத்தார், பின்னர் PPH வெளியீடாக அது வந்தது. வங்க பஞ்சம், தெபகா, வார்லி, புன்னப்புரா, ரின் போராட்டங்களில் பி டி ஆர் தனது பங்களிப்பை நல்கி கொண்டிருந்தார். ஆகஸ்ட் 1947  இந்திய விடுதலை அறிவிப்பிற்கு பின்னர் கட்சி சீர்திருத்த பாதையில் போவதாக ரணதிவே கருதினார். எதிர்த்து போராட துவங்கினார். ஜோஷி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கல்கத்தாவில் 1948 இரண்டாவது கட்சி காங்கிரசில் ரணதிவே பொதுச்செயலராகிறார். யதார்த்தத்திற்கு புறம்பாக இடது அதிதீவிர தவறுகளை அவர் செய்ததாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இக்காலத்தில் ரணதிவே மாவோவைக்கூட பிற்போக்குவாதி என விமர்சித்த காலமது. ரணதிவேயின் ருஷ்ய பாதை, ராஜேஸ்வர்ராவின் சீனப்பாதை என்ற விவாதங்கள் கட்சிக்குள் எழுகிறது. ரணதிவே பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். தவறை ஏற்றுக்கொண்டு,என் முகத்திரையை நானே அகற்றிக் கொள்கிறேன் என அவர்  சுய விமர்சன அறிக்கை வைத்துக்கொண்டார்.  பின்னாட்களில் CPIML கட்சியின் லிபெரேஷன் பத்திரிக்கை இதனை வெளியிட்டது.
BTR சாதரண நிலை உறுப்பினராக கட்சியில் பொறுமையுடன் தொடர்ந்தார். சீனப்பாதை என்கிற ஆவணத்தை சீனாவிற்கு மொகித்சென் எடுத்து செல்கிறார். சீனத்தலைமை அதை அங்கீகரித்து உதவும் என ராஜேஸ்வரராவ்  உள்ளிட்ட ஆந்திர தீசீஸ் தோழர்கள் அக்காலத்தில் நம்பியிருக்கலாம். டாங்கே  காட்டே அஜாய் ஆகிய மூவரும் இணைந்து 3 பி ( Three P ) ஆவணம் தருகிறார்கள்.பிரச்சனைகளை தீர்ப்பதற்காக டாங்கே, அஜாய், ராஜேஸ்வர், பசவபுன்னையா ஆகிய நால்வர் டீம் மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்து வழிகாட்டுதல் பெறுகின்றனர். இச்சந்திப்பு பிப்ரவரி 1951ல் நடந்ததாக ருஷ்ய ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. மெயின்ஸ்டீரிம் நிகில் சக்கரவர்த்தி இத்தோழர்கள் கப்பலில் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ததாக மொகித்சென் தனது பதிவில் தெரிவிக்கிறார்.  பின்னர் அஜாய் பொதுச்செயலராகிறார்.
பொருளாதார நெருக்கடி குறித்தும், 5 ஆண்டு திட்டங்கள் குறித்தும் ரணதிவே எழுதிய கட்டுரைகள் பாராட்டை பெற்றன. அவர் மகராஷ்ட்ரா கமிட்டிக்கு செயலராக பொறுப்பேற்கிறார். நான்காவது கட்சி காங்கிரசில் அவர் மத்திய கமிட்டிக்கு தேர்வு பெற்று தேசிய பொறுப்புகளுக்கு மீண்டும் உயர்த்தப்படுகிறார். நியுஏஜ் ஆசிரிய பொறுப்பேற்று டெல்லியில் பணிபுரியத் துவங்குகிறார். 1958 அமிர்தசரஸ் காங்கிரஸ், 1961 விஜயவாடா காங்கிரசில் கட்சியில் நடந்த பெரும் விவாதங்களில் தோழர் ரணதிவே முக்கிய பங்காற்றுபவராக விளங்கினார். விஜயவாடாவில் மாற்று ஆவணத்தை முன்வைத்தார். டாங்கே தலைமையிலான திருத்தல்வாதிகளை முறியடிப்போம்- ஆனால் கட்சிக்குள் இருந்து போராடலாம் என்ற கருத்தை டம்டம் சிறையிலிருந்து ஜோதிபாசு அக்டோபர் 1963ல் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். பின்னர் வெளியிடப்பட்ட கட்சி ஆவணங்களில் பாசுவின் கடிதத்தை பார்க்க முடிந்த்தாக பிரண்ட்லைன் கட்டுரையில் ஏ ஜி நூரணி தெரிவித்தார்.

இந்திய சீன யுத்தத்தின்போது கருத்து வேறுபாடுகள் தீவிரமாயின. தேசியகவுன்சில் கூட்டத்திலிருந்து பி டி ஆர் உள்ளிட்ட 32 தலைவர்கள் வெளியேறி தெனாலியில் கூடி CPIM கட்சியை உருவாக்கினர். தோழர்கள் நம்பூதிரி, ராமமூர்த்தி ,கோபாலன், ரணதிவே, சுர்ஜித், சுந்தரையா, பசவபுன்னையா, பிரோமோத் தாஸ், ஜோதிபாசு  ஆகிய 9 மூத்த தலைவர்கள்  CPM மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்ப்யுரோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
AITUCல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளால் 32 ஜெனரல் கவுன்சில் உறுப்பினர்கள் வெளியேறி 1970ல் கோவாவில்கூடி CITU தொழிற்சங்கம் அமைத்தனர். கல்கத்தாவில் கூடிய மாநாட்டில் தோழர் ரணதிவே தலைவராகவும், தோழர் ராமமூர்த்தி செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். CPIM, CITU  இரண்டு அமைப்புகளிலும் மிக முக்கிய பங்களிப்பாளராக தலைமை பாத்திர தகுதியுடன் தோழர் பி டி ஆர்  செயல்பட துவங்கினார்.
இந்திரா அம்மையார் ஆட்சி, எமர்ஜென்சி, ஜே பி போராட்டங்கள், ஜனதா அனுபவங்களுக்கு பின்னர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் தங்கள் கட்சி காங்கிரசில் கூடி 1978ன் துவக்கத்தில் இடதுசாரி ஜனநாயக மாற்று என்ற ஒத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு வந்தனர். இக்காலங்களில்  CPI- CPM மத்தியில் தங்கள் பத்திரிக்கைகளில் பெரும் விவாதங்களை நடத்திக்கொண்டனர். தயவற்ற விமர்சனங்கள் ஒருவர் கொள்கை நிலைப்பாடுகளை மற்றவர்  தாக்கி கடுமையாக நடைபெற்ற ஆண்டுகள் அவை. ருஷ்யா- சீன அனுபவங்கள், நக்சலைட்டுகள் பிரிந்து போதல் போன்ற அனுபவங்களும் கிடைக்கப்பெற்றன. கேரளா, மேற்குவங்க ஆட்சி அனுபவங்கள், மத்திய ஆட்சியில் பங்கு பெறுவது குறித்த விவாதங்கள்,CPI பங்கேற்ற அனுபவங்கள் என பல நடந்தேறின.

 தோழர் பி டி ஆர்  பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சோசியல் சயின்டிஸ்ட், மார்க்சிஸ்ட் பத்திரிக்கைகளில் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் கற்பிக்கும் வண்ணம் ஆழமான கட்டுரைகளை எழுதிவந்தார்.  CITU  மாத இதழில் அவர் எழுதிய பல புகழ்வாய்ந்த கட்டுரைகள் மூன்று வால்யூம்களாக தொகுக்கப்பட்டு கொணரப்பட்டன. வேலையின்மை, விலைஉயர்வு, பொதுத்துறைகள், இந்திய பொருளாதாரம், அரசின் அவ்வப்போதைய கொள்கைகள், தொழிற்சங்க ஒற்றுமை, மத்திய சங்கங்கள் இணைந்து கான்பெடெரேஷன் அமைப்பது, தொழிலாளரும் அரசியலும். மத நல்லிணக்கம் என பல்வேறு அமசங்களில் அவர் எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத் தலைவர்கள் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய சிறந்த தொகுப்பு அவை. P&T தோழர்களுக்கு சில கேள்விகள் எனக்கூட  ஓரிரு கட்டுரைகள் இருந்தன. உழைக்கும் பெண்களுக்கு தனி மாநாடுகள் என்பதில் அவர் வழிகாட்டியாக இருந்தார். மத்திய மாநில பொதுத்துறை போராட்டங்களுக்கு வழிகாட்டினார். தொழிற்சங்க இயக்கத்தில் தொழிலாளர்கள் Guest போல் நடந்து கொள்ளக்கூடாது- நடத்தப்படவும் கூடாது  என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியவர்.
Euro communism, இந்தியாவில் நிலம் சாதி பிரச்சனைகள், சோவியத் புரட்சி, மார்க்ஸும் தொழிற்சங்கமும், விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் போன்ற அவரது ஆக்கங்கள் இடதுசாரிகள் மத்தியில் அதிகமாக வாசிக்கப்பட்டன. மார்க்ஸ் - மார்க்சியம்  குறித்த எளிய ஆழமான அவரது கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. அவர் 1958ல் டாங்கே குறித்தும், சர்வோதயாவும் கம்யூனிசமும் பற்றி புத்தகங்கள் எழுதியதாக அறிகிறோம். வறட்டுத்தனமாக இடது நிலையிலிருந்து பேசியவர் என்ற விமர்சனம் ரணதிவே மீது இப்போதும் இருந்து வருகிறது. நவீன வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா போன்றவர்கள் பொருத்தமான கட்டத்திற்கு பொருத்தமான ஆய்வுகளை அற்புதமாக தந்தவர் ரணதிவே என கட்சிக்காரர்கள் எழுதுவதை கடுமையாக விமர்சித்தார். பி டி ஆர் யாந்திரிகமாகவே விஷயங்களை எழுதியதாகவும் காரில்லோ குறித்துக்கூட அவர் எழுதியதை ஏற்கமுடியாது எனவும் எழுதினார். இதற்கு தோழர் பிரகாஷ் காரத் தகுந்த பதிலையும் தந்திருந்தார்.

நோய்வாய்பட்ட நிலையில் தோழர் ரணதிவே பம்பாயில் ஏப்ரல் 6 1990ல் மறைந்தார். தனது வாழ்நாளில் இந்தியாவில் சோசலிச புரட்சி சாத்தியமில்லாமல் போனதே என்ற வருத்தத்தை அவர் பதிவு செய்பவராகவே இருந்தார். இந்தியாவில் மார்க்சிய இயக்க முன்னோடி என்கிற தன்மையில் ரணதிவே வரலாறாக நிற்கிறார்.


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா