IV பகுதி 4 விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்
டேராடூன் சிறையிலிருந்து 1936 நவம்பரில் வெளிவந்தது முதல் ராய் உடனடி அவசியம்
நாட்டின் விடுதலைதான் சோசலிசமல்ல என பேசத்துவங்கினார். காங்கிரசில் கவனம் செலுத்தி
அவ்வியக்கத்தை கூடுதல் ஜனநாயகப்படுத்துவதும் திட்டங்களை தீவிரப்படுத்துவது என்பதில்
கவனம் செலுத்திட ராய் முடிவெடுத்தார். 1936 ஃபைசபூர் மாநாட்டில்தான் காந்தியை அவர்
சந்திக்கிறார். ராஜேந்திரபிரசாத், வல்லபாய் படேல் போன்றவர்களுடன் விவாதிக்கிறார். ராஜேந்திரபிரசாத்தும் ராயை சதகத் ஆசிரமத்திற்கு அழைக்கிறார். நேருவின் இடத்திற்கு நீங்கள்தான் என ராயை சந்தித்து
சில காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாகவும் செய்திகள் வந்தன. காங்கிரசில் வலதுசாரி தலைவர்கள் ராய் பக்கம் பேசுவது போன்ற காட்சிகள் தெரிந்தன. காந்தியிடம் ராய் தனது சோசலிசம் குறித்த பார்வையை
விளக்கும்போது விடுதலைதான் முதல் குறிக்கோள், காங்கிரசை பலப்படுத்துவது குறித்து தாங்கள்
குறிப்பு தந்தால் அதை செயற்குழு ஏற்க செய்து தீர்மானம் ஆக்கிட தான் உதவ முடியும் என்றார் காந்தி. தனது பிரார்த்தனை
(Prayer) கூட்டத்திற்கு ராய் வரவேண்டும் என்றார் காந்தி. ராயின் தயக்கம் அறிந்த காந்தி
தனக்கு அது எவ்வளவு தேவையாக முக்கியமாக இருக்கிறது
என்பதை விளக்கினார்.
தனது வாரப்பத்திரிக்கை நடத்திட நிதி உதவி தேவை என ராய் கோரியபோது,
காந்தி முதலில் நாடு முழுக்க சுற்றி வாருங்கள் என்றார். ஃபைஸ்பூர் மாநாட்டில் ராஜேந்திர
பிரசாத்தால் அரசியல் அமைப்புசட்ட அசெம்பிளி தீர்மானம் கொணரப்பட்டது. டாங்கே சோவியத்,
பிரான்ஸ் நடைமுறைகளை சுட்டிக்காட்டி நமது விடுதலை போராட்டம் வெற்றிக்கு பின்னர் சி
ஏ (CA) என்றார். ஜெயபிரகாஷ் நாரயணன் டாங்கேவிற்கு
ஆதரவு தெரிவித்தார். ராய் அவர்கள் சி ஏ அவசியம் குறித்து உரையாற்றினார். ஃபைஸ்பூர்
காங்கிரஸ் இதற்காக தேசிய கன்வென்ஷன் ஒன்றை கூட்ட முடிவெடுத்தது. ராய் காட்ஸ்கி ஆகிவிட்டார் என்ற விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள்
வைத்தனர். நரேந்திரதேவ் புரட்சிகர கருத்து
என ராயை பாராட்டினார். லோகியாவும் நம் கையில் கிடைக்கும் சிறந்த ஆயுதம் என்றார். இப்படி
இடதுசாரிகளாக செயல்பட்டவர்கள் யார் எப்பக்கம் என்பது ஒவ்வொருமுறையும் கணிக்க முடியாமல்
இருந்தது.
இந்திய அரசாங்க சட்டம் 1935 அடிப்படையில் 1937 தேர்தல்கள்
முடிந்தவுடன் கவர்னர்கள் மந்திரிசபையின் அன்றாட செயல்பாட்டில் தலையிடக்கூடாது என்பது
வற்புறுத்தப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு என்ற அளவிலாவது காங்கிரஸ் தனது
தொளதொளப்பை விட்டு பலவீனங்களை களைந்து புரட்சிகர அமைப்பாக எழவேண்டும் என ராய் வற்புறுத்தினார்.
மக்கள் தொடர்பு கமிட்டி ஒன்றை ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ், தெளலத்ராம் கொண்டு காங்கிரஸ்
அமைத்தது. காங்கிரஸ் அமைப்பு சட்ட திருத்தமும்
நிகழ்ச்சிநிரல் ஆக்கப்பட்டது. வலது பிரிவினர் தனிநபர்களை உறுப்பினர்களாக வைக்கலாம்
ஆனால் அமைப்புகளை கார்ப்பரேட் உறுப்பினர்களாக கூடாது என்றனர். இதில் கம்யூனிஸ்ட்கள்
காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கருத்து ஏற்கப்படவில்லை. முதலில் ராய் Collective Affiliation என்கிற கருத்திற்கு
ஏற்புடையவராக இருந்தாலும் பின்னர் தனது நிலையை அவர் மாற்றிக்கொண்டார். வர்க்க அமைப்புகளை
முழுமையாக காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வது சரியல்ல என பேசினார். ஒவ்வொரு
வர்க்க ஸ்தாபன உறுப்பினரையும் தனி உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் உறுப்பினராக
ஏற்கலாம் என்றார் ராய். 1935 சட்டப்படி அமைச்சரவை பங்கேற்பு குறித்தும் விவாதம் இருந்தது.
நேரு போன்றவர்களுக்கு கூட தயக்கம் இருந்தது. ராய் பங்கேற்பை ஆதரித்தார். அரசுக்குள்
அரசாக (State within state) செயல்படுவதற்கான வலுவை காங்கிரஸிற்கு பங்கேற்பு தரும் என
ராய் கருதினார்
விவசாய அமைப்புகள் அவ்வப்போது ஏற்படுத்தும் கிளர்ச்சிகள்
புரட்சியாகாது- அவர்களால் தனித்து புரட்சி உருவாக்கவும் இயலாது என ராய் கருதினார்.
அதே நேரத்தில் நில சொத்துரிமை என்பதில் தீவிர மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும் என விரும்பினார்.
தேசிய இயக்கங்களின் முழு வெற்றி என்பது விவசாய பிரச்சனை தீர்வில் இருக்கிறது என்றார். .
பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டாலும் இடதுசாரி சிந்தனை தேசிய
இயக்கங்களில் வளரத்துவங்கியது. இடது தேசியம் என்பதின் குரலாக சுபாஷ் போசை காங்கிரஸ்
தலைவராக்கிட முயற்சிகள் நடந்தன. இடது பார்வையை கொள்கை பூர்வமாக முன்வைக்காமல் மேலெழுந்தவாரியாக
போஸ் பேசுகிறார் என்ற குற்ற சாட்டை நேரு வைத்தார். காந்தியின் மனநிலைக்கு எதிராக நேரு
செயல்பட தயாராக இல்லாதது இடதுசாரிகளை பலவீனமாக்கியது. திரிபுரா காங்கிரசில் 1939ல்
காங்கிரசில் காந்தியின் உயர்நிலையை அங்கீகரிக்காது போட்டி என போஸ் நிற்பேன் என்ற நிலைப்பாட்டை
பட்டேல் தலைமையில் வலது பிரிவு எதிர்க்க முடிவு செய்தது. பட்டாபிசீதாராமையாவை நிற்கவைத்தது.
பட்டாபிசீதராமையா தோல்வியை தன் தோல்வியாக கருதி வெளிப்படையாக காந்தி பேசினார். காந்தி
என்ற ஒற்றை தலைமை போல் இடதுசாரிகளுக்கு என ஒற்றை தலைமை இல்லாதது குறைதான் என சுபாஷ்
கருத்து தெரிவித்தார். ஜெயபிரகாஷ்நாரயண் காந்திக்கும் சுபாஷிற்கும் இடையில் இணக்கம்
உருவாக்க முயற்சித்தும் அது சாத்தியமாகவில்லை.
பரத்வாஜ் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் காந்தியின் விருப்பம் ஏற்கப்படவேண்டும் என்றாலும்
போஸின் தலைமை என்பதையும் வலியுறுத்தினர். காங்கிரசை தீவிரப்படுத்தவேண்டும் என்பதற்கு
ராய் காட்டிய அவசரத்தை நேரு ஏற்க மறுத்தார். கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஆகிய இருபக்கத்தினரும்
ராயை தனிமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தததாக ராயிஸ்ட்கள் குற்றம் சாட்டினர்.
போஸ் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கமிட்டியில் விலகுவதாக
அறிவித்தார். தனது 4 ஆதரளவாளர்களாவது கமிட்டியில் என்பதற்கு காந்தி இரண்டுதான் என்றதும்
தான் அனுப்பிய பெயர்களில் ஒருவரை மட்டும் காந்தி ஏற்றதும் போஸிற்கு ஏற்கனவே இருந்த
அதிருப்தியை அதிகப்படுத்தியது. போஸ் விலகல் சீர்குலைவு வேலைகளை அதிகரித்துவிடும் என
ஜெயபிரகாஷ் எச்சரித்தார். ராயிஸ்ட்கள் காங்கிரஸ்
தலைவரை பொம்மையாக வைத்துக்கொண்டு காரியமாற்றுவது சரியல்ல எனவே போஸ் ராஜினாமா சரியானதே
என விவாதித்தனர். ராய் போஸ் அணியுடன் நெருக்கம்போன்ற
காட்சி வரத்துவங்கியது. ஆனால் போஸ்
ஒத்துழைப்பை கோரவில்லை என்ற வருத்தமும் ராயினருக்கு இருந்தது.
பிப் 1939ல் ராய் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட்கள், போஸ் அணியினர்,
சோசலிஸ்ட்கள் என அனைத்து இடது தரப்பினரும் பங்கேற்ற மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இந்த
ஒற்றுமை மாநாட்டை தொடர்ந்து நீட்டிக்கமுடியவில்லை. மே மாதம் பார்வார்ட் பிளாக் உருவாக்கத்தை
போஸ் அறிவித்தார். ஜெயபிரகாஷ், ஜோஷி போன்றவர்கள் அனைத்திந்திய இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழுவை
பலப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினர். போஸ் அழைப்பை ஏற்று பார்வார்ட் பிளாக்கில்
சேர்வது என்பதை கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஏற்கவில்லை. Left Consolidation Committte (LCC) Left Radical Congressmen (LRC) போன்றவைகளுக்கு
ராய் முக்கியத்துவம் தந்தார். அக்கூட்டங்களிலும் நான்கு வகையினராக செயல்பட்ட இடதுசாரிகளின்
வேறுபாடுகளை குறைக்க முடியவில்லை. போஸ் கொள்கைபூர்வமான
போராட்டங்களைவிட தனது முக்கியத்துவத்திற்காக போராடுகிறார் என்ற எண்ணம் ராயிடம் வரத்துவங்கியது.
சோசலிஸ்ட்களின் செயற்குழுவிலிருந்து ஜூலயில் லோகியா, மசானி,
பட்வர்தன் போன்றவர்கள் விலகுவதாக முடிவெடுத்தனர். LCC என்ற
பெயரில் காங்கிரஸை பலவீனப்படுத்துவதை ஏற்பதற்கில்லை என்பது அவர்களின் குற்றசாட்டாக
இருந்தது. கொள்கையற்று சீர்குலைவு வேலைகளை செய்வதாக ராயினரை கம்யூனிஸ்ட்கள் தாக்கினர்.
போஸ் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை பதிலுக்கு விமர்சித்தார். டிசம்பர் 1939 பார்வர்ட்
பிளாக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களுடன் உறவுமுறிவு என அறிவித்தார். LRCயை மக்கள் திரள்
இயக்கமாக மாற்ற ராய் விழைந்தார். மாவட்டந்தோறும் குறைந்தது 5 தீவிர களப்பணியாளர்களாவது
வேண்டும் என கருதினார்.
ராம்கர் மாநாட்டில் காங்கிரஸ் தலைமைக்கு ராய் பெயர் எழுப்பப்பட்டபோது ஒருமித்த கருத்து இல்லையெனில்
தனது பெயரால் பிளவு தேவையில்லை என தெரிவித்தார். போஸ், கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள்
மத்தியில் ஆதரவு எழவில்லை என்பதையும் ராய் அறிந்திருந்தார். ராயுடன் வேறுபாடுகள் இருந்தபோதினும் அவர் மதிக்க
தகுந்த வேட்பாளர் என ஜெயபிரகாஷ் தெரிவித்தார். ராய் புரட்சிகரவாதியல்ல, சீர்குலைவுவாதி
அவருக்கு ஆசாத் வேட்பாளர் என்பது எவ்வளவோ மேலானது என கம்யூனிஸ்ட்கள் தெரிவித்தனர். ராய் காங்கிரஸ் தலைவருக்கு நின்று படுதோல்வி அடைந்தார்.
மெளலானாஆசாத் 1854 வாக்குகளையும், ராய்
183 வாக்குகளையும் பெற்றனர். ராம்காரில் தேர்தலிலும்
தீர்மானங்கள் நிறைவேற்றத்திலும் இடதுசாரிகள் பல்வேறு நிலைபாடுகளை எடுத்தனர்.
Comments
Post a Comment