Skip to main content

M N Roy III

III பகுதி 3 விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்
லாகூரில் கவுன்சில் அரசியலுக்கு மாறுபட்டு ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தலைமை காங்கிரசிற்கு தேவை எனக் கருதி ஜவஹர்லாலை தலைமைக்கு காந்தி கொணர்ந்தார். டொமினியன் அந்தஸ்து விவாதத்தில் இருந்த நேரத்தில் ஜவஹர் தனது தலைமை உரையில் முழு விடுதலை என பேசினார். 1921லிருந்து தடுக்கப்பட்ட அதற்கான தீர்மானமும் நிறைவேறியது.
1931ல் ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகிலிருந்து ஜவஹர் ஒதுங்கினார். லீகும் அவரை கமிட்டியிலிருந்து வெளியேற்றியது. ராய் முழுவிடுதலைக்கு அரசியல் அமைப்பு அசெம்பிளி என்ற கோரிக்கையுடன் தனது அறிக்கையை வெளியிட்டார். ராய் நேரு- சுபாஷ் ஆகிய அனைவரையும் கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்க துவங்கினர்.  சோவியத்தான் சரியான முழக்கம் என்றனர். அகிலத்தின் தவறான வழிகாட்டுதலைக் கொண்டு சரியான கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் நிறுவ முடியாது என பேசத்துவங்கினார் ராய்.
லெனினையும் துணைக்கு அழைத்து பிரஞ்சு புரட்சி தாக்க ஜாகோபியனிசம் என்றார். பல்வர்க்க தலைமை (Multi class leadership) என்றார். தொழிலாளர் தலைமையில் விவசாயிகளுடன் குட்டி முதலாளித்துவாதிகளை இணைத்து தேசிய ஜனநாயக புரட்சி என முன்வைத்தார். பம்பாயில் 1930ல் பத்து நண்பர்கள் துணையால் ராய் குரூப் துவங்கப்பட்டது. டாக்டர் மக்மூது என்ற பெயரில் பல்வேறு அரசியல் விவாதங்களை ராய் நடத்த துவங்கினார். பம்பாயில் ராயிஸ்ட்கள் மராத்தியில் காம்கிரஞ்ச லால் பவதா மற்றும் மக்கள் என்ற ஆங்கில பத்திரிக்கைகளை துவங்கினர். மும்பையில் தங்கியிருந்தபோது வல்லபாய் படேல், என் எம் ஜோஷி, அம்பேத்கார் போன்ற தலைவர்களை ராய் சந்தித்தார். ராயின் நடமாட்டம் அறிந்த போலீசார் தேடத்துவங்கினர். பின்னர் உ பி பகுதிகளுக்கு பானர்ஜி என்ற பெயரில் சென்றார் ராய். அங்கு நேருவை சந்திக்கிறார். தனது தோழர் கபாடியை அனுப்பி  மீரத் வழக்கில் சிறையிலிருந்த டாங்கேவை சந்திக்க வைக்கிறார். கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷை சந்திக்கிறார். மாநாட்டில் ராய் தங்கியிருந்த பகுதிக்கு நேரு வந்து காந்தியின் திட்டத்தை ஏற்பதற்கில்லை மேலும் கூடுதலாக தீவிர திட்டம் ஒன்றிற்கு ஆலோசனை பெறப்பட்டதாக ராய் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ராயின் கருத்துக்களில் சில நேருவின் தீர்மானத்தில் இடம் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் புனே சென்று தென்னிந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராய் விரும்பினார். ஆனால் ஜூலை 1931ல் அவர் கைது செய்யப்படுகிறார்.

பரேலி சிறையில் கக்கோரி வழக்கு புரட்சியாளர்களை சந்திக்கிறார். இக்காலத்தில் சோமனாத் லாகிரி, டாக்டர் அனாதி பாதுரி, ரஜானி முகர்ஜி போன்றவர்கள் ராய்க்கு நெருக்கமாயினர். கல்கத்தாவில் சிறிய குழு ஒன்று ராய்க்கு ஆதரவாக இருந்து வேன்கார்ட், யங் சோசலிஸ்ட் பத்திரிக்கைகளை கொணர்ந்தது. 1934ல் இக்குழு காந்தி பகிஷ்கரிப்பு கமிட்டி என்ற ஒன்றையும் தொடங்கினர்.  ராயின் ஆதரவாளர்களை இணைக்கும் வகையில் இந்திய தொழிலாளிவர்க்க புரட்சிகர அமைப்பு என்ற ஒன்றும் துவங்கப்படுகிறது.
விவசாயிகள் பிரச்சனையில் காந்தியால் போதுமான வெற்றியை கொணரமுடியவில்லை என இடதுசாரி பிரிவினர் கருதினர். வரிகொடா இயக்கம் வேகமாக பரவியது. குத்தகையாளருக்கும்  நிலச்சுவான்தாரர்களுக்குமான மோதல் எழக்கூடாது என காந்தி கருதினார். ராய் விவசாயிகள் இயக்கம் மேலும் தீவிரமாக எழவேண்டும் என விரும்பினார். அலகாபாத் மாவட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. நேரு இப்போராட்டம் இறுதி போராட்டம் ஆகட்டும் என பேசிக்கொண்டிருந்தார்.
AITUC தொழிற்சங்கங்களிலும் ராய் ஆதரவாளர்கள் செல்வாக்கு செலுத்திட பெரும் முயற்சி எடுத்தனர். ராய்கர், முகுந்தலால் சர்க்கார், நிம்ப்கர், ஹரிஹர சாஸ்த்ரி போன்றவர்கள் இதற்கு துணை நின்றனர். AIRF லும் 1933ல் நாக்பூரில் நடந்த ரயில்வே மாநாட்டில் தோழர் ரணதிவே ஆதரவாளர்களின் செல்வாக்கை குறைப்பதில் ராயிஸ்ட்கள் பணியாற்றினர்.  ராய் முன்வைத்த  Platform for Unity என்பதை கம்யூனிஸ்ட்கள் ஓடுகாலி திட்டம் என்ற பார்வையில் நிராகரித்தனர். தொழிலாளி வர்க்கத்தை அதன் புரட்சிகர பாதையில் பாதியிலேயே நிறுத்த ராய் சதி என கடுமையான விமர்சனங்களை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர். AITUCலிருந்து வெளியேறி ரெட் தொழிற்சங்கம் துவங்கினர். இதில் ரணதிவே, சோம்நாத்லாகிரி, ஜமாலதீன் புகாரி , பங்கிம் முகர்ஜி போன்றவர் முன்நின்றனர்.

1933ல் காட்டே, மிராஜ்கர், நிம்ப்கர் போன்ற மீரத் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தங்கள் ராயினரையும் கம்யூனிஸ்ட்களையும் சற்று நெருங்க வைத்தது. நாட்டில் பார்த்த யதார்த்த நிலைகள் ராயை  நிதானப்படுத்தின. அவர் முன்பு எழுதியவைகளின் பொருத்தப்பாடுகள் குறித்தும் அவரை சிந்திக்க வைத்தன. பிரிட்டிஷ் அரசு ஆகஸ்ட் 1934ல் சி பி அய் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்தது. AITUC கல்கத்தா அமர்விற்கு மிராஜ்கர் வந்தார். ரெட் தொழிற்சங்கத்தை கலைக்க வேண்டும் என்பதை ராய் ஆதரவாளர்கள் கோரினர். இதை கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டு 1935ல் AITUCக்கு திரும்பினர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகில் செயல்பட்ட விரேந்திர சட்டோ புரட்சிகர இயக்கத்திற்கும் காங்கிரசிற்கும் இடையில்தான் போராட்டம் என பேசத்துவங்கினார். நாஜிகளின் செல்வாக்கு ஜெர்மனியில் உயர்ந்த சூழலில் கோமிண்டர்னின் 7வது மாநாட்டில் டிமிட்ராவ் ஐக்கிய முண்ணனி தந்திரம் என்பதை முன்வைத்தார். காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி என்ற முழக்கம் வைக்கப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு தத்-பிராட்லி (Dutt - -Bradley Thesis) அறிக்கை மூலம் அகிலத்தின் பார்வை தெளிவுபடுத்தப்பட்டது, காங்கிரசையே/ காங்கிரஸ் சோசலிஸ்ட் மேடையையே  ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடையாக மாற்ற முடிவானது. வளர்ந்துவரும் பாசிச அபாயம் கம்யூனிஸ்ட்களையும்  சமுக ஜனநாயகவாதிகளையும் நெருங்க செய்யும் என ராய் கருதினார். கோமிண்டர்ன் தலைமைக்கு காங்கிரசை மேடையாக மாற்றுங்கள் என்ற கடிதமும் எழுதினார். தான் மீண்டும் அகிலத்திற்கு அழைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு புரட்சிகரவாதிகள் இருக்க வேண்டும் என்ற லெனின் அறிவுரையை ராய் வற்புறுத்தினார். ஆறாவது அகிலத்திற்கு பின்னர் ஓடுகாலி என முத்திரை குத்தப்பட்ட ராய் 7வது அகில முடிவில் உடன்பட்டிருந்தாலும் அவருடன் எந்த தொடர்பையும் அகிலம் வைக்கவில்லை..
ராயிஸ்ட்கள் மக்களின் உடனடி தீர்விற்குரிய கோரிக்கைகள் என வலியுறுத்தியபோது வர்க்கப்பார்வையில் கோரிக்கைகள் என்று கம்யூனிஸ்ட்கள் வேறுபட்டனர். Constituent Assembly என ராயிஸ்ட்கள் எழுப்பியதும் வேறுபாட்டை உருவாக்கியது. அரசியல் சட்ட அமைப்பையும் நாடாளுமன்றத்தையும் கம்யூனிஸ்ட்கள் குழப்பிக் கொள்வதாக ராயிஸ்ட்கள் விமர்சித்தனர். நேரு இரண்டாவது முறையும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினராக செயல்பட்ட நரேந்திரதேவ், ஜெயபிரகாஷ், பட்வர்த்தன் ஆகியோரை செயற்குழுவில் இணைத்தார்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள், ராயிஸ்ட்கள் என்ற பிரிவுகள் இயங்கின. தனிநபர் துதி - கொள்கை பலவீனங்களுடன் இந்த இடதுகள் செயல்படுவதாக ராய் விமர்சிக்க துவங்கினார். சோசலிச முழக்கம் மூலம் காங்கிரஸ் தலைமையை கைப்பற்றுவது கடினம், வலதுசாரிகள் பலம் பெறுகிறார்கள் என உணர்ந்த ராய் தேசிய ஜனநாயக  ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம், புரட்சி என்ற முழக்கங்களை வற்புறுத்தினார். சுபாஷ் அவர்களும் தனது ஹரிபுரா காங்கிரஸ் தலைமையுரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற இடதுநிலைதான், சோசலிசமல்ல என்ற கருத்திற்கு வந்திருந்தார். இந்திய நிலைமைகள் போல்ஷ்விசத்திற்கு கனியவில்லை என்ற தெளிவான பார்வைக்கு ராய் வந்திருந்தார். CSPல் பிளவுவேலை செய்கிறார் ராய் என்ற குற்றசாட்டை எம் ஆர் மசானி போன்றவர்கள் சொல்லத் துவங்கினர். 1936 CSP ஃபைஸ்பூர் மாநாட்டில் ராய் கலந்துகொண்டார். தீர்மானங்களும் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளால் 1937ல் ராய் குழுவினர் வெளியேறினர். 1940 ராம்கார் காங்கிரஸ்வரை கம்யூனிஸ்ட்கள் CSPல் தொடர்ந்தனர். காங்கிரஸ்சோசலிஸ்ட் இயக்கத்தில் சோசலிஸ்ட்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் மோதல்கள் தொடர்ந்தன. ராம்கர் மாநாடு கம்யூனிஸ்ட்களை வெளியேற்றியது,

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா