Friday, September 10, 2021

வ உ சி 150

 

                          வ உ சி 150

வ உ சி அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்ட புத்தகங்கள் சிலவற்றில் பொதுவாக சொல்லப்பட்ட செய்திகள் ஏராளம். சில செய்திகள் ஒரு புத்தகத்தில் இல்லாமல் வேறு ஒரு புத்தகத்தில் காணப்படும். அப்படி என் கண்ணில்பட்ட சில செய்திகள் மட்டுமே இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. அவர் குறித்த அனைத்து புத்தகங்களிலும் காணப்படும் ஒரே மாதிரியான செய்திகள் இங்கு சொல்லப்படவில்லை.சி வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என நான் பார்த்ததில் என்னை அதிகம் ஈர்த்த புத்தகம் சிதம்பரம் பிள்ளைஎன்கிற புத்தகம். 1997ல் பப்ளிகேஷன் டிவிஷன் வெளியீட்டில் வந்த நூல். என் சம்பத்- பெ சு மணி இணைந்து எழுதிய புத்தகம்.

ஆங்கிலத்தில் வெளியாகி பின்னர் தமிழில் பெ சு மணி தந்துள்ளார்.  280 பக்க அளவிலான விரிவான நூலாக இதைக்கொள்ளலாம். என் பார்வையில்படுகிற இந்நூலின் சிறப்பு அதன் ஒருங்கிணைந்த அணுகுமுறை- முடிந்தவரை ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்களை கட்டித் தருதல் என்பதாக உள்ளது . இது ஆய்வாளர் பெ சு மணியின் சிறப்பும்கூட.. ஆங்கில புத்தகம் 1992ல் வெளியானது. அதில் ஆசிரியர்கள் என ஆர் என் சம்பத்- பெ சு மணி எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழில் ஆசிரியர் என் சம்பத் ஆகிவிடுகிறார்.

பொ சி அவர்கள் எழுதிய நூல் 1944 ல்  வெளிவந்த கப்பலோட்டிய தமிழன். மிகமுக்கிய முன்னோடி நூல் என்கிற வகையில் இந்நூல் பின்னவர் பலருக்கும் வழிகாட்டியிருக்கும்.  இதில்  1920ல் காங்கிரசைவிட்டு வெளியேறிய சி தொடர்ந்து 17 ஆண்டுகள் 1936வரை அரசியலில் ஈடுபடவில்லை என்கிற செய்தியை ஆரம்ப பக்கங்களில் பொ சி தந்திருப்பார். ஆனால் 1927ல் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த செய்தியையும் பின்னர் அவர் தருவார்.அதன் சொற்பொழிவை (அரசியற்பெருஞ்சொல்) பற்றியும் குறிப்பிடுவார்.

வித்வான் நா இராமைய்யா பிள்ளை எழுதிய நூல்வீர சிதம்பரனார்’. இதில்  சி கப்பல் வாங்கும் சூழல் உருவானதை  ஆசிரியர் விளக்குகிறார். முதலில் கப்பலை தங்களுக்கென வாங்க நினைத்து பிறகு பின்வாங்கி மாறிப்போன சிவபுரம் நல்லபெருமாள் பிள்ளை தூத்துக்குடி- கொழும்பு வியாபாரியை அவர் சொல்கிறார். பம்பாயிலிருந்து ஏஜெண்ட் வந்துவிட்ட நிலையில் வியாபாரிகள் நல்லபெருமாள் உட்பட பின்வாங்கியது சிதம்பரனார் அவர்களுக்குதுணிவோம்’ என்ற உந்துதலைத் தந்ததாக இவ்வாசிரியர் சொல்கிறார்.

 பல வியாபாரிகளை சம்மதிக்க வைத்த வ உ சி முயற்சி கைகூடும் நிலையில் நல்லபெருமாள் பிள்ளை எதிர்நிலை எடுத்ததையும் அவர் குறிப்பிடுகிறார். கொழும்பு சென்று கப்பல் பெற்றது இரண்டே மாதத்தில் இருபதினாயிரம் இலாபம் கிடைத்தது, பின்னர் ஏற்பட்ட நெருக்கடியை வித்வான் விரிவாக இந்நூலில் தருகிறார்.

’சிவகாசி கொள்ளை’ என்பதில் பெயர் எடுத்து சிறையில் இருந்த வடுகுராமத்தேவர் . சி யை வணங்கியதால் எச்சரிக்கப்பட்ட செய்தியை இதில் இவ்வாசிரியர் கூடுதல் விவரங்களுடன் தந்துள்ளார். ஜெயிலர் தாக்கப்பட்டவிவரத்தை அதற்காக மூன்று அரிவாள்கள் பெறப்பட்ட சூழல்- வ உ சி உயிர்வதை கூடாதென சொன்ன அறிவுரை எல்லாம் இதில் சற்றுக் கூடுதலாக பேசப்படுகிறது. ஜெயிலர் ’செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்ன செய்தி இதில் வேறுவகையில் சொல்லப்பட்டுள்ளது.

சியும் திருநெல்வேலி எழுச்சியும் என்கிற புத்தகம் 1987ல் வந்த ஒன்று. ஆய்வாளர் .இரா. வேங்கடாசலபதி எழுதிய புத்தகம். சி , சுப்ப்பிரமணிய சிவா என்பதுடன் பொதுவாக சி பற்றி பேசுபவர்கள் நிறுத்திவிடுவர். இவ்வாக்கத்தில் பத்மநாப அய்யங்கார் சேர்ந்து மூவர் மீதும்தான் வழக்கு என்பதை ஆசிரியர் தந்துள்ளதைக் காணலாம். கலகம் எனச் சொல்லப்பட்டதை எழுச்சி என்கிற வகையில் ஆசிரியர் வரையறை செய்வார். அது குறித்து சான்றாதாரங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளதைக் காணலாம். இதற்கு உதவிய ஆங்கில ஆவணங்களையும் ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார்.

..சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி  என்பது பேரா நா வா அவர்கள் 1976-77ல் எழுதி 1980ல் பதிப்பாக வெளிவந்தது. சிறிய  அளவிலான நூல்.

இதற்கு  பதிப்புரை எழுதியுள்ள மே து ரா சியின் ஒருங்கிணைந்த பார்வையை’ தந்துள்ளார். ”இந்திய விடுதலைப் புரட்சி, தொழிற்சங்கம், வகுப்புவாரி முறை, தமிழ் மறுமலர்ச்சி ஆகிய யாவும் இணைந்த முழுமையான அரசியல் இயக்கம் எதுவும் இல்லாத நிலையில், சி ஒதுங்கிய  வாழ்வு வாழ்ந்தாலும் அவரது சிந்தனையோட்டம் இவை இணைந்த இயக்கமொன்றைக் கனவு கண்டிருக்கலாம்”.

நா வா அவர்கள் சி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளைச் சொல்லி செல்லும்போது அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அறிந்துமனைவியும் இச்செய்தி கேட்டு மூளைக் குழப்பமடைந்து, சாகும்வரை பைத்தியமாகவே வாழ்ந்தார்என எழுதியுள்ளார். ஆனால் 1940களிலேயே வெளிவந்த பொ சி உள்ளிட்ட பிறர் புத்தகங்களில்  சகோதரர் பைத்தியமானதே சொல்லப்பட்டுள்ளது.

கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் என்கிற நூலை என் வி கலைமணி எழுதியுள்ளார். டிசம்பர் 2001ல் வெளியானது. இதில் சொல்லப்பட்ட செய்திகள் பலநூல்களில் காணப்படுவதாகவே இருக்கிறது.

..சி குறித்து மா ரா அரசு எழுதிய புத்தகம் சாகிதய அகாதமி வெளியீடாக 2005ல் வந்தது. இப்புத்தகம் பெரும்பாலும் பெ சு மணி, வெங்கடாசலபதி, . சிவசுப்பிரமணியன் ஆகியோர் புத்தகங்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்கொண்டுபேசுகிறது. சி கட்டுரைகள் 19 என தனியாக இப்புத்தகம் விவாதிப்பது சிறப்புக்குரியது.

தமிழ் தந்த சி 1986ல் வந்த புத்தகம். டாக்டர் லீலாவதி எழுதியுள்ளார்.

சி பன்முகப்பார்வை எனும் புத்தகத்தை டாக்டர் எஸ். கண்ணன் 2005ல் எழுதியுள்ளார். அதில் சி சிறையில் இருந்த காலத்தில்  பாரதியார் சுதேசிக் கப்பல்நிதி என வசூலித்து விவரத்தை இந்தியா பத்திரிகையில் 2-2-1909ல் தந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. காலணா அரையணா கூட வாங்கப்பட்டதென அறிகிறோம். வெள்ளை அரசின் கருணைச் சட்டத்தால் சி 1912 டிசம்பரில் வெளிவந்தார் எனவும் இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  சிறைமீண்டபின் முதலில் கோவை திருப்போரூர்த்தலத்தில் வங்கி அலுவலராக பணிபுரிந்தார் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. அதிலிருந்து ஏன் வெளியேறி சென்னை சென்றார் என எவராவது எழுதியுள்ளனரா எனப் பார்க்கவேண்டும். சென்னை பெரம்பூரில் அஞ்சல்துறை ஊழியர் சங்கத்தை துவங்கினார் என்கிற செய்தி P&T தோழர்களுக்கு உதவும் செய்தி.

1917-18ல் சபர்மதியில் காந்தியை சந்திக்கிறார். தில்லையாடி வேதியப்பிள்ளை கொடுத்தனுப்பிய ரூ 5000த்தை மகாத்மாவிடம் கேட்டுப்பெறுகிறார் என்கிற செய்தியை இவ்வாசிரியர் தருகிறார். ஆனால் இது தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் நிலவுவதை நாம் பார்க்கிறோம்.

சென்னையில் குடியிருந்தபோது சாமியார் ஒருவருடன் பாரதி சி வீட்டிற்கு வந்த செய்தி தரப்படுகிறது. ஆனால் வந்த இருவரும் போதைதரும் லாகிரி வஸ்துவை எடுத்துப் போட்டுக்கொண்டு உரக்க சிரித்துப் பேசியதில் சற்று சிக்கு வருத்தம் என்ற செய்தியையும் இதில் காணலாம். இதை வி சி கண்ட பாரதியிலிருந்து இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.

1922ல் கோவில்பட்டியில் இருந்த சி நீதிக்கட்சியின்பாற் ஈர்க்கப்பட்டார்- 1926 பெரியார் நடத்திய பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் சி பங்கேற்கிற செய்தியும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சிறை நிகழ்ச்சி ஒன்றை சி சுயசரிதையில் சொன்னபடி இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். சாதிமதம் பார்க்காத சி இப்படி சொல்லியது ஏனோ என்ற கேள்வியையும் கண்ணன் எழுப்புகிறார். சி க்கு உணவு வழங்க வந்தவரிடம்ஜாதி என்ன… முதலி என்றான்..என்னடா முதலி நீ என்றேன்..பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால் உண்பேன் என்று ஜெயிலர்பால் இயம்பெனச் சொன்னேன்

சகஜானந்தாவுடன் இருந்த தொடர்பை பிற புத்தகங்கள் சொல்வதுபோல் இந்த புத்தகமும் சொல்கிறது. அவர் குடும்பத்தில் ஒடுக்கப்பட்ட சாதி நண்பருக்கும் உணவு உபசரிப்புகளும் சொல்லப்பட்டுள்ளது.

ரா வை தன் வறுமைநிலையையும் பொருட்படுத்தாது அவர் கொழும்பு வீரகேசரி தலைமை ஆசிரியராக செல்க என கடிதம் எழுதி உற்சாகப்படுத்துவதும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

1932ல் காங்கிரஸ் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட செய்தி இதில் சொல்லப்படுகிறது. 1927 சேலம் மாநாட்டுடன் பலர் நின்றுவிட்ட நிலையில் இப்புத்தகம் அதைப் பேசுகிறது. அங்கு கைத்தறி உடுத்திவந்த சியிடம் எழுந்த கேள்விக்குதாம் கதர்ச் சிதம்பரம் அல்ல- சுதேசிச் சிதம்பரம்’ என்கிறார் சி.

சியும் பாரதியும்  .இரா வேங்கடாசலபதி   தொகுத்து 1994ல் வெளியான புத்தகம். இதில் சுதேசிக் கப்பல் தருமநிதி பட்டியல் தரப்பட்டுள்ளது. பாரதியார் ரூ 5ல் துவங்கி நூற்றுக்கணக்கான பெயர்களிடம் ரூ 215க்கு மேல் வசூலான கணக்கு காணப்படுகிறது. இதில் மேலப்பாலையூர் கிருஷ்ணசாமி அய்யர் ரூ1 , எஸ் பஞ்சாபகேசய்யர் 4 அணா என்பதும் சொல்லப்படுகிறது. திருச்சேறையில் ஒருவர் வருவதால் இந்த மேலப்பாலையூர் குடவாசல் அருகிலானதாக இருக்கலாம்.

’பிரைவி கவுன்சில் அப்பீல்’ பணம் இல்லாக் குறையால்தான் காலதாமதம் ஆகிவருகிறது என்ற செய்தியை பாரதி எழுதியிருப்பதை இதில் காணலாம்.

நான் பார்த்த இப்புத்தகங்களில் பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து தண்டனை குறைக்கப்பட்டது. அந்தமான் தவிர்க்கப்பட்டது என சொல்லப்படுகிறதே தவிர அவர் அப்பீல் நகல் எங்கும் காணப்படவில்லை. சி  அப்பீல் நகல் கிடைக்கும் என்றால் உதவியாக இருக்கும்.

9-9-21

Sunday, August 22, 2021

தோழர் காந்தி புத்தகத்திற்கு ஆகஸ்ட் 2021ல் வந்த திறனாய்வுகள்

 தோழர் காந்தி  மகாத்மாவின் சோசலிச உரையாடல் புத்தகத்திற்கு நான்கு  தோழர்களின் திறனாய்வுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. தோழர்கள் ரகுபதி, பால்சாமி, கணேசன், பீட்டர் ஆகிய தோழர்கள் புத்தகத்தை பொருட்படுத்தி உள்வாங்கி தங்கள் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளனர். தோழர் கணேசன் திறனாய்வு காந்தி கல்வி நிலையம் சார்பில் புதன் உரையாக அமைந்தது. மற்ற மூவரும் கொடுத்த எழுத்து வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தோழர்களுக்கும்- காந்தி கல்வி நிலையம் திரு அண்ணாமலை, மோகன், சரவணன் உள்ளிட்டோருக்கும், அறம் சாவித்ரி கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றி. 


திருச்சி தோழர் பால்சாமி அவர்களின் திறனாய்வு


அன்புள்ள பட்டாபி

வணக்கம். இப்போதுதான் தோழர்காந்தி படித்து நிறைவுசெய்தேன். தோழமைமிக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள். எனக்குதெரிந்து காந்தியத்தை தன்கட்சிக்காரர் ஆக்கி வழக்காடத்துணிந்த முதல்சிகப்புஅங்கி வக்கீல் நீங்கதான்.

காந்திக்கு பல எதிர் தரப்பு உண்டு. தலித் முஸ்லீம் இந்துத்வா கம்யூனிஸ்ட் இதில் எந்த தரப்பினராவது காந்தி உயிரோடிருந்தபோது காம்ரேட்காந்தி என அழைத்திருக்கிறார்களா எனக்குதெரிந்து நீங்கள்தான். காந்தி நூறாண்டுகள்

காத்திருந்தார். மகிழ்ச்சி அடைந்து இருப்பார். 

இதுவரை நான் படித்த கம்யூனிஸ்ட்கள் காந்தி நல்லவர்  பட்  காந்தியம் நவீனமனிதனுக்கு உகந்தது அல்ல என்றே எழுதியிருக்கிறார்கள். நீங்கள்தான் உலக.. இந்தியமேதைகளின் மேற்கோள்வழியாக காந்தியம் இன்றும் செல்லுபடியாகும் தத்துவம் என்று

அவர்களுக்கு பிடித்த விஞ்ஞான அனுகுமுறையில் விளக்கியிருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட்கள் அன்று தவறவிட்ட பஸ்ஸை இன்றையதலைமுறை தவறவிடக்கூடாது என்ற உங்கள் அக்கறையின் ஆக்கபூர்வமான வெளிப்பாடே இந்நூல்.

தனிமையான இனிமையான ஒற்றை வயலின்இசை காந்தியம். டமாரக்காதுகளுக்கு உங்கள் மென்மையான மேன்மையான காந்திய இசை போய்ச்சேர விரும்புகிறேன்.


இனி என் தனிப்பட்ட கருத்துக்கள்.

முன்னுரையில் அறம்சார்ந்த அரசியலுக்கு காந்தியைவிட உகந்தவரை மார்க்ஸீயர்கள் உணர முடியாது என்கிறீர்கள். அறம்சார்ந்த அரசியலுக்கு மார்க்ஸீயம் உகந்ததா இல்லை என்றே உணர்கிறேன். சர்வாதிகாரம் என்ற பிரகடணத்தில் அறத்திற்கு இடமுண்டா

Turn the search light inward புரட்சிகளின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சி உயர்ந்தது என்றால் காந்தியும் மார்க்ஸும் இயற்கை கூட்டாளிகளாக இருக்கமுடியுமா.. உங்கள் கட்டுரைகளில் உள்ள மேல்நாட்டு இந்திய அறிஞர்களுக்கு இல்லாத ஒரு தகுதி

உங்களுக்கு உண்டு. காந்திக்குப்பின் நடந்த நூறாண்டு உலக வரலாறு உங்களுக்கு தெரியும். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் நாற்பது ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்ட கம்யூனிஸ்ட் நீங்கள் என்பது கூடுதல் தகுதி.


படிப்பறிவு பட்டறிவின் துணைகொண்டு மார்க்ஸீயத்தின் போதாமைகளை கூர்மையாக தீட்டியிருக்கலாம்.  ஆனால் உங்கள் நூலைப்படிக்கப்போகும் கம்யூனிஸ்ட் சகாக்களை அதிகமாக கவனத்தில்கொண்டு அதிகமான எச்சரிக்கை உணர்வுடன் வார்த்தைகளை சுத்திகரித்திருக்கிறீர்கள். சத்தியத்தின் கவுச்சிவாசனை விரும்பும் என் போன்ற வாசகர்களுக்கு ஏக்கம்தான். உங்கள் ஓய்வுகாலவாழ்க்கை பயனுள்ள வழியில் பயணிப்பது கண்டு மகிழ்ச்சி. ஒரு தொழிற்சங்கதலைவர் குறுகியகாலத்தில் இத்தனை நூல்கள். நிச்சயம் சாதனைதான். இனி எழுத்தில் என்றும் வாழ்பவராக இருப்பீர்கள். தோழனாக பெருமிதம் கொள்கிறேன். காந்தியை கண்ணீரின்றி நான் படித்ததில்லை. என் கம்யூனிஸ்ட் தோழன் எழுதிய காம்ரேட்காந்தி நூலில் உங்களை அந்த புனிதமான கண்ணீருடன் பல முறை சந்தித்துக் கொண்டேன். அதற்காக நன்றி.


என்றும் அன்புடன்

எஸ். பால்சென்னை தோழர் பீட்டர் திறனாய்வு  ( அறம் இணைய இதழில் வெளியானது)


தோழர் காந்தி : ஆர்.பட்டாபிராமன்

===========================

காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. காந்தி அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம்  என பலவற்றையும்  தொடர்ந்து பேசி, எழுதி வந்திருக்கிறார். 'பொது இடத்தில் பலர் மத்தியில் 24 மணிநேரமும் இருப்பவராக இருந்தார்'. காந்தி உலகம் முழுவதும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார். இங்குள்ள ஒவ்வொரு தத்துவங்களோடும் காந்தி ஒப்பிடப்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் ஆர்.பட்டாபிராமன் எழுதியுள்ள 'தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்'.


ஆர்.பட்டாபிராமன் ஒரு தொழிற்சங்கவாதி; சோசலிச கண்ணோட்டம் கொண்டவர். ஆனாலும் காந்தியைப் பார்த்து  அவர் வியக்கிறார். காந்தியை 'எழுதிப் பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும், செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது' என்கிறார். மார்க்சியர்கள், காந்தியோடு ஒத்துப்போக ஏராளமான காரணிகள் உள்ளன என்பதை தத்துவநோக்கில் சொல்லும் ஒரு நூல்தான் தோழர் காந்தி.


இந்த நூலில்  199 பக்கங்களே உள்ளன. ஆனாலும் பல நூறு பக்கங்களின் பிழிவாக இது  உள்ளது. பல அறிஞர்களின் வாதங்களைச்  சுட்டி  எழுதப்பட்டுள்ளது. மார்க்சியர்களும், காந்தியவாதிகளும் இணைந்து பணிபுரிய வேண்டிய இணைப்புப் புள்ளிகளை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த நூலைப் படிக்கும் காந்தியர்கள், மார்க்சியர்களை ஆதரவோடு பார்ப்பார்கள். மார்க்சியர்கள்  பெரியாரைப் போல, அம்பேத்கரைப் போல காந்தியையும் இயல்பாக தமது வழிகாட்டியாக கொள்ளும் வாய்ப்பு உள்ளது.


இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. 'காந்தியின் நடைமுறை' என்ற முதல் அத்தியாயம்,  காந்தி ஒரு  'அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட் என்றே புரிந்து கொள்ள வேண்டும்' என்று பேராசிரியர் பேணுதார் பிரதான்   கருதுகோளோடு முடிவடைகிறது. இந்த  நூலின் பெரிய கட்டுரை இதுதான். காந்தி ஒரு தோழராகவே வாழ்ந்தார் என்பதை ஆசிரியர் சொல்ல வருகிறார். 'காந்தி தன் வாழ்நாட்களிலேயே சனாதனவாதி, பழமைவாதி,எதிர்ப்புரட்சி சக்தி, முதலாளித்துவ ஊதுகுழல் என ஏளனங்களுக்கு உள்ளானவர். ஆனால் அவர் சோசலிசம் என்பதை தான் உணர்ந்த வகையில் அந்த இலட்சியத்திற்கு நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார்" என்கிறார் நூலாசிரியர்.


வைஸ்ராய் - க்கு எழுதிய கடிதத்தில் உங்களின் மாத  ஊதியம் ரூ.21,000, அதாவது தினம் ரூ.700 வீதம் பெறுகிறீர்கள். ஆனால் இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ.180 வீதம் மாதம் ரூ.54000 பெறுகிறார் என எழுதுகிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய  போனிக்ஸ் பண்ணையில் அனைவருக்கும் சமமான 3 பவுண்டு ஊதியம்தான் வழங்கப்பட்டது. 'இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார்.அவர்களைப் போல உடையணிந்தார். அவர்களின் மொழியில் உரையாடினார். அவர் உண்மையாக இருந்தார். மக்கள் அளித்த மகாத்மா என்பது அவரின் உண்மைப் பெயராயிற்று'. 'நேரு,நேதாஜி ஆகியவர்களை விலக்கிப் பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார்' என்கிறார் நூலாசிரியர். மீரத் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு போன்றவைகளில் குண்டு வீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத் தோழர்கள்பாற் கரிசனத்தைக் காட்டியவராகவே காந்தி இருந்தார். 'இதை நாம் புரிந்துகொள்ளாமல் 'miss'செய்துவிடக் கூடாது' என்கிறார் பட்டாபிராமன்.


காந்தியவாதிகளும், சோசலிசவாதிகளும் அரசை எப்படிப் பார்கிறார்கள் ! காந்தி - லெனின், காந்தி - மாவோ, காந்தியும் அரசும் போன்ற அத்தியாயங்கள் காந்தியர்களும், மார்க்சியர்களும் உடன்படும்/முரண்படும் பகுதிகளைச் சொல்லுகிறது. காந்தியைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டவர்களை, சோசலிசம் என்ற கருதுகோள்பால் அக்கறை உள்ளவர்களை இந்த நூல் யோசிக்க வைக்கும். இருசாராரும் உரையாடும் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம்.காந்தி கூறும் ஆலோசனைகள்,  கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்டக் குழு தன் அணிகளுக்கு விடுக்கும் அறைகூவல் போல உள்ளது " கிராமத்திற்குச் சென்று பணிபுரியுங்கள் என நான் சொல்லுவதை நீங்கள் இன்று கேட்கத் தயார் இல்லாமல் போனால் ஒரு நாள் உங்கள் பிரசங்கங்களை கேட்க யாருமே இல்லாத சமயம் வந்துவிடும்".


காந்தி சோசலிசவாதிகளோடு முரண்படும் இடங்ளை, காந்தியின் பொருத்தமான வார்த்தைகள் மூலம் சொல்லுகிறார் ஆசிரியர். "மார்க்சின் முறையைத் தவிர வேறு இல்லை- அது மட்டுமே சிறந்த முறை என்பதை நான் ஏற்கவில்லை" என்று காந்தி சொன்னதாக, அவரது உதவியாளராக இருந்த பியாரிலால் பதிவிட்டுள்ளார். "மார்க்சிற்கு இருந்த கல்வித் திறமை எனக்கு இல்லை. அது இருந்திருக்குமானால் மார்க்ஸ் தத்துவத்தை மார்க்ஸைவிட இன்னும் நன்றாக எழுதியிருப்பேன்" என்று காந்தி, தனது 74 ம் வயதில் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை படித்துவிட்டு  சொன்னதாக அறிகிறோம்.      'பலாத்காரம் இல்லாமல் கம்யூனிசம் வந்தால் தானாக வரட்டுமே' என்று சொன்னதையும் பார்க்கிறோம். இரண்டாவது உலகப் போரில் ' ருஷ்யா தோற்றுவிட்டால்' உலகில் ஏழைகள் வேறு எவரை நோக்க முடியும்' என்று கவலைப்பட்ட காந்தியையும் நாம் பார்க்கிறோம்.


காந்தி தான் கடைபிடிக்காத எதையும் சொன்னதில்லை. போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் போன்ற காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை முறை ஒருவகைப்பட்ட சோசலிச சிறு சமூக குடியேற்றமாகப் பார்க்கப்படுகிறது. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, வாழ்வூதியம் , கூட்டம் கூடும் உரிமை, பேச்சுரிமை,மத வழிபாட்டுரிமை, சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள் போன்றவை குறித்த 'கராச்சி தீர்மானம்', 1931ல் நேருவும், காந்தியும் இணைந்து உருவாக்கியவை.


காந்தியின் உப்பு யாத்திரையானது 241 மைல்கள் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1934 ல் மாவோ தனது long march ஐ நடத்தினார். இப்படி போராட்டங்கள் நடத்துவதை,ஏகாதிபத்தியத்தை மதிப்பிடுவதில், அடிப்படை உரிமைகள் குறித்த அநேக விஷயங்களில் இருதரப்பாரும் உடன்படுவதை காண முடியும்.' மார்க்சிய வகைப்பட்டு காந்தி வர்க்கப் போராளியல்ல; ஆனால் பாட்டாளிவர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர்' என்று ராஞ்சி கூறியுள்ளார். அதனால்தான் பொதுவுடைமைவாதியான எஸ்.ஏ.டாங்கே தனது மிக இளம் வயதில் அதாவது 21 வது வயதிலேயே  காந்தி Vs லெனின் என்ற நூலை எழுதினார் என்கிறார் பட்டாபிராமன்.


அரசின் பாத்திரம், வன்முறையின் எல்லை, மரண தண்டனை போன்ற விஷயங்களில் காந்தி தன் கருத்தை மறைத்ததே இல்லை." எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார். பொருளாசை, சொத்து பேராசை,  குறுகிய மனோபாவம்,  மிருகத்தனம்,  சுயநலம் என அனைத்தையும் அகற்ற காந்தியம் மிக முக்கிய வழியாகவே தெரிகிறது. மார்க்சியர்கள் தங்களுக்கு மிக நெருக்கமாக கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே காந்தியின் உரையாடல்கள் தொடர்கின்றன"  என்று இந்த நூல் முடிகிறது. இதுதான் இந்த நூல் சொல்லும் சேதி.


பக்கங்கள் 199/ விலை ரூ.155/ உவேசா பிரிண்ட்ஸ்/ 9578078500. பொள்ளாச்சி தோழர் ரகுபதி திறனாய்வு ( முன்பே ரகுபதியின் முகநூல் பக்கத்தில் வெளியான ஒன்று)


தோழர் காந்தி- மகாத்மாவின் சோசலிச உரையாடல்


ஆசிரியர் : ஆர். பட்டாபிராமன்


பட்டாபியிடமிருந்து புதிய நூல். காந்தியைக் கண்டுணர்தலின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். நூலின் பெயர் கவனம் பெறுகிறது.


இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்படும், விமர்சிக்கவும் படும் தலைவர் மகாத்மாதான். தேசப்பிதா என்பதால் சிறு வயதிலே நமக்கு கற்பிக்கப்படுகிறார். அவரைக்  கற்பிப்பவர்கள், கொண்டாடுபவர்களைப் பொறுத்து காந்தியைப் புரிந்தும், புரியாமலும், மறுத்தும் வளர்ந்தது எங்கள் தலைமுறை. காந்தியை சுட்டுக் கொன்றவர்களைப் பொறுத்து,  இன்றைய காந்திய பார்வை கூர்மையடைவதுதானே நியாயம்.


இந்திய இடதுசாரிகள் காந்தியை முழுமையாக துணைக்கு வைத்திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் காந்தியை உள்வாங்கத் துவங்கிய பின்னர் நூலாசிரியருக்கு தலைப்படடிருக்கிறது. அதன் உந்துதலாக காந்தியின் சோசலிச உரையாடல் குறித்த கருத்துகளை எழுதியுள்ளார். காலம் இந்த முயற்சிக்கு அழுத்தம் தருகிறது. முயற்சியின் போது காந்தியின் சோசலிச உரையாடல் தெறிப்புகளுடன் அவை தன்னிடம்  ஏற்படுத்திய எதிர்வினைகளையும் சேர்த்துத் தந்துள்ளார்.  


உரையாடல் தெறிப்புகளில் சில ............


- தன்னை வன்முறையை போதிக்காத கம்யூனிஸ்ட் என அழைத்துக் கொள்ள முடியும் என்றார் காந்தி.


-  'முதலாளிகளின் மனமாற்றம்' என்கிற நம்பிக்கை, வரலாற்றில் நடக்காத ஒன்று என்பதால் நடக்கவே முடியாத ஒன்று என அவர் ஏற்கவில்லை.


- காந்தி வர்க்கப் போராளி அல்ல, ஆனால் பாட்டாளி வர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர்.


- நிரந்தரமற்ற வேலையெனில் அதிக கூலி கொடுங்கள்- காந்தி


- சோசலிசம் விரும்புவோர் மாற்றத்தை தன்னிடமிருந்து தொடங்க வேண்டும்.


- தனி மனிதருக்கு ஆன்மா இருக்கும்- அரசுக்கு அப்படி ஒன்று இல்லை


- சமூக மாற்றத்தில் நம்பிக்கை வைத்து செயலாற்றும் ஒவ்வொருவருக்கும் காந்தி தந்த செய்தி Turn the searchlight inward.


- மானுட பொருளாயத தேவைகள் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் காந்தியின அவசியம் உலகினரால் உணரப்பட்டு வருகிறது.


-  எந்திர மோகத்தைதான் எதிர்க்கிறேன். எந்திரங்கள் எஜமானன் ஆவதை எதிர்க்கிறேன்- காந்தி


'காங்கிரசில் சோசலிச கருத்துகள் வளர்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை.'


- காந்தி அகிம்சைவாதி - நடுநிலை வாதி அல்ல


- மக்களுக்கு அச்சம் என்பதை அறியாமல் செய்தவர்.


- காந்தி - means and ends should be equally pure.

சோசலிசம் என்பது உன்னதமான நெறி மிகுந்த சமுதாயம் என்றால் அதை அடைவதற்கான வழிமுறைகளும் நெறி மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

   - உங்களது வன்முறை பாதையை என்னால் ஏற்க இயலாது.

   - உண்மையைத் தவிர ராஜதந்திரம் என ஏதுமில்லை. அகிம்சையை தவிர வேறு கருவி என்னிடம் இல்லை.


- எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார்.

---------------------------------------------------------------

படித்து முடிக்கும் போது, இன்றைய சூழலில் இருந்து எதிர்வினைகள் எழுந்து நிற்கின்றன....


.. காந்தியிலிருந்து கடவுளை எடுத்து விட்டால்?


.. லட்சியத்திற்கு உரிய நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார். (அதனால்தான் மகாத்மா, ஆனால் அது மட்டும் போதுமா?)


.. காந்தி காலத்தை விட இன்று பிரச்சனைகள் வளர்ந்திருக்கின்றன - விரிந்திருக்கின்றன - அபத்தமாகியிருக்கின்றன.


.. அவர் இருந்திருந்தால் இன்றைய மதவெறியில் என்ன செய்திருப்பார்- ஏற்கெனவே ஒரு முறை உயிரை விட்டாரே?


.. மார்க்சிய வழியில் புரட்சிக்கு  முயன்றவர்களே தடுமாறிய போது...?


.. கம்யூனிசம் பற்றிய பேச்சு Vs கம்யூனிச வாழ்வு


- நாம் - எதை தேடுகிறோம்? சோசலிச பாணிகளின் தோல்வி - விஞ்ஞான வளர்ச்சி - மனிதனின் தோல்வி - மதவாதிகளின் வெற்றி - இந்தியாவில்?


- இந்திய விடுதலை காந்தியத்தால் மட்டுமே வந்ததா?

சர்வதேச நெருக்கடிகள் எவ்வாறு உருவாகின? உள்நாட்டு போராட்டங்கள்?


- காலம்தானே காந்தியை, கருத்துகளை உருவாக்கியிருக்கும்?  நிலைமைகள் மாறும் போது கருத்தை மாற்றியிருப்பார்


- சோற்றுக்கு அலையும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்வது எப்படி?


-  காந்தியின் நிர்வாக அனுபவம்?


- காந்தியிடம் விருப்பம், விமர்சனம் இருந்தது.


- காந்தியால் கடவுளை கேள்வி கேட்க, விமர்சிக்க, நிராகரிக்க முடியுமா?


- காந்திய மாதிரி இந்தியாவிலேயே வர முடிந்ததா?


- காந்தி கடவுளிடம் தோற்றார்?

அவர் காந்தியாக இருந்ததால்...

------------------------------------------------------------

நூலின் மய்ய சரடு- கடைசி பத்தியில் ....


எவ் வழியில் சோசலிசம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்க பலமாக மார்க்சியம் நிற்கும் என்பது சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார்..


நல்ல மனிதர் - நன்னெறிகள், போராட்டம்...எல்லாம் சேர்ந்த மகாத்மா - தோழர் என அழைத்துக்  கொள்வோம் - மண்ணுக்கேற்ற மார்க்சியப் பெருமையுடன்...

---------------------------------------------------------------

புத்தகம் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறும்.

லெனின் குருசாமி

சன் கிரியேஷன்ஸ், 57/1 காலேஜ் ஜங்ஷன் ரோடு

அழகப்பாபுரம், காரைக்குடி 630003

Ph 9578078500          

Rs 155

----------------------------------------------------------------

- மெர்சோ

04.08.2021 
Saturday, July 3, 2021

நினைவுச் சுழல்

 

நினைவுச் சுழல்

பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல  எனக்கு பழங்கதையாகி வருகிறது. பழைய தீவிரம் மனதில் நிழலாடுகிறது. தீவிரம் என்றால் அப்படி பேய்த்தீவிரம் தொழிற்பட்ட காலம் இருந்தது.  1970களின் இறுதியில்தான் இந்த தீவிரம் பற்றத்துவங்கியது. 1980-2005 எனும் 25 ஆண்டுகளில் அதன் உச்சம் சென்றது. பின்னர் மெதுவாக இறக்கம் காண ஆரம்பித்தது.

சாதாரண அலுவலக பணியில் ஒரு சிற்றூரில் இருந்துகொண்டு அது சாத்தியமானதாகவும் அமைந்தது. அப்படியொரு தீவிரம். எதையும் வாங்கிவிடுவது- படிப்பது என்கிற அசுர மனசு. இடது பத்திரிகைகள் எனில் வாய்ப்புள்ள அனைத்தையும் வாங்கிய காலமது. இடது மட்டுமல்ல வேறு பத்திரிகைகளும் வலது கூட வாங்கிப்படித்தக் காலம்.

 CPI – New Age, Party Life, Information Bulletin, social science Probings ( very few issues), ஜனசக்தி, தாமரை

CPIM – PD, Marxist, Social Scientist ( few Issues),  தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட், உழவன் உரிமை, student Struggle ( சிறு பையனாக மகன் தீக்கதிரை எடுத்துக் கொடுக்கும்போது ’சுடுதுப்பா’ என satire செய்தது…)

CPIML- Liberation, தீப்பொறி, சமரன் ( சில இதழ்கள்)

Suci- Proletarian Era

UCPI- New Thinking Communist,  ஜீவாமுழக்கம்

RSS- Organiser ( பாலு என்கிற இந்து முன்னணி நண்பர் கொண்டுவந்து போடுவார்)

International Journals Like  Monthly review, New Left review ( some Issues)

Mainstream, Janata Weekly, Frontier weekly , manushi, Link ( some issues) Periyar Era, Yojana, திட்டம்,  சிந்தனையாளன், உண்மை, காலச்சுவடு, சதங்கை போன்ற ஏராள பத்திரிகைகள்  வீட்டிற்கு வந்தன. அவ்வப்போது ரகுபதி, சிவகுருநாதன் போன்ரவர்கள் தரும் இதழ்கள். தனிநபர் வீடே நூலக வரவு போல் இருந்தது.தொழிற்சங்கத் தீவிர செயல்பாட்டால்  AITUC, CITU,HMS, BMS, Telecom, Bank, EB, Teachers, Insurance, Railways, Motor  என அனைத்து தொழிற்சங்கப் பத்திரிகைளும் வந்தன. ’போஸ்ட்மேன்’ தோழர்கள் வராத நாள் இல்லை என்ற காட்சியிருந்தது. பெயரும் ஊரும் போட்டால் போதும்- எதுவும் வீடு தேடி வந்துவிடும் என்கிற அளவிற்கு அறிமுகம் இருந்தது. மேலே சொல்லப்பட்ட சில பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பும் கிட்டின.

இந்த வாசிப்புகள் எந்த மேடைக்கு சென்றாலும் ஒருவித நம்பிக்கையை தந்தன. அனைவரும் பேசி முடித்தாலும் சொல்ல ஏதோ இருக்கும் என்கிற இரகசியத்தை தந்துகொண்டேயிருந்தன.

எனது இயக்கம் மட்டுமே- எனது தலைவர் மட்டுமே என்பதிலிருந்து பல இயக்கங்களை உள்வாங்க சொல்லித்தந்தன. தோழமையை கற்றுக்கொடுத்தன. பிறருடன் நிற்கச் செய்தன. அதே நேரத்தில் இப்படியொரு இயக்கத்திலிருந்து இவர் போன்றவர்கள் என பிறர் எண்ணத்தில் சொந்த இயக்கத்திற்கு பெருமையையும் சேர்த்தன.

எத்துறை மேடையிலும் அத்துறையின் சிறந்தவர்களுக்கு இணையாக செய்திகளை சொல்வதற்கான பயிற்சியை கொடுத்தன.

தோழர் ஞானையா போன்றவர்களுடன் விவாதிக்க பெரும்பாலும் மன்திலி ரிவ்யூ, பிராண்டியர், மெயின்ஸ்ட்ரீம், ஜனதா பயன்பட்டன. பல்லாண்டுகள் வந்த  பத்திரிகைகளை ஆண்டு இறுதியில் வகைப்படுத்த தீனன் என்ற டெலிகாம் தோழர்  பேருதவியாக இருந்தார். அனைத்தையும் அற்புதமாக பைண்ட் செய்து தருவார். அடக்கச் செலவைத்தவிர ஏதும் வாங்க மாட்டார். கேட்டால் எங்களுக்கு உழைக்கும் உங்களுக்கு செய்வதற்கு பணம் எதற்கு என்பார்.

ஒருமுறை தோழர் ரகுபதியின் அறையிலும், மற்றொரு முறை சிபிஐ எம் மாவட்ட அலுவலகத்திலும் CPI- CPIM- CPIML திட்டங்கள் குறித்த பெரும் விவாதத்தை மேற்கொண்டோம். மூன்றுதரப்பிலும் தோழர்கள் பங்கேற்றனர். உள்ளூர் சார்ந்த வகையில் வெங்கட்ராமன் அன்று சிபிஅய் எம், சிபிஅய்யில்பேரா ராமசாமி, நான் பங்கேற்றது நினைவில் இருக்கிறது. கடுமையான உச்சி பிளக்கும் விவாதங்கள்…

பேரா ராமசாமியுடன் சேர்ந்து துவங்கி பிறகு பேரா பழ கெளதமன் பொறுப்பில் சமூக சிந்தனையாளர் இயக்கம் நடந்தது. ஏங்கெல்ஸ் மறைவு நூற்றாண்டு சொற்பொழிவிற்கு மரியாதைக்குரிய பேரா அ. மார்க்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பான உரையை அவர் நல்கியபோதும் அவரிடம் சற்று கசப்புண்டாக்கும் வகையில் நான் நடந்துகொண்டது குறித்து தற்போது தலைகுனிகிறேன். பிராண்டியர் முகவரியை எனக்கு தந்துதவியர் தோழர் பேரா அ. மார்க்ஸ்.

கார்ல் மார்க்ஸ் சார்ந்த எழுத்துக்கள் படித்தபோது பெரும்பாலான நேரம் தெருவிலும், பயணத்திலுமான காலமாக இருந்தது. ஆனாலும் இப்பத்திரிகைகளை எங்கு போனாலும் கையில் வைத்துக்கொண்டு படிக்க முயன்றது நினைவில் நிற்கிறது.

இப்போதும் மார்க்ஸ் எழுத்துக்களுடன் பேசிக்கொள்ளாமல் இல்லை. காந்தி அதிகமாக எடுத்துக்கொள்கிறார். அம்பேத்கர் அவ்வப்போது வந்து செல்கிறார். ஆனால் எனது பத்திரிகை வாசிப்புகள் ?

 

Wednesday, June 30, 2021

கடலூர் NFTE நடத்திய அம்பேத்கரின் 125 வது பிறந்ததினம் சொற்பொழிவு ஏப்ரல் 15 , 2016

 

அம்பேத்கரின் ஆளுமைப் பயணம்

 (கடலூர் NFTE நடத்திய அம்பேத்கரின் 125 வது  பிறந்ததினம் சொற்பொழிவு -  ஏப்ரல் 15 , 2016    உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்)

 அம்பேத்கர் மகத்தான சமூகப்போராளியாக எப்படி உருவானார், எவற்றை உருவாக்க விரும்பினார் என்பதை இன்றைய நாளில் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அவரின் எழுத்துக்களின் தொகுப்பில் பத்தாயிரம் பக்கங்களாவது நமது தொடர்தேடலுக்காக காத்து நிற்கின்றன.பிரித்தானியர் வருகைக்கு முன்பான இந்திய சமூகம் தொடர்ச்சியான ஒரேநாடாக இருந்ததா- தொடர்பறா சமூகமாக விளங்கியதா என்பதைப் பற்றி புராதன இந்தியா குறித்து ரொமிலா தாப்பர் உள்ளிட்டவர் தங்கள்ஆய்வுகளை தந்துள்ளனர். பிரிட்டிஷாருக்கு இந்திய நாடு பெரும் சுரண்டல்காடாக இருந்ததுடன் பல ஆய்வுக்களனாகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும் இருந்தது. வாழ்க்கைமுறையில் உணவு, உடை, மொழி, கலாச்சார வித்தியாசங்களை அவர்கள் கண்டனர்.  தங்கள் அய்ரோப்பிய கலாச்சாரத்தின் பெருமைதனை உணரத்தக்க  சமூகத்தட்டு ஒன்றை அவர்கள் ஏற்படுத்த முனைந்தனர். நமது மொழிகளைக்கூட அவர்களில் சிலர் கற்றனர். நமக்கு வீரமாமுனிவர். ஜி யு போப் போன்றவர்கள் கிடைத்தனர்.

பிரிட்டிஷார் வரவால் இந்தியர்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வரத்துவங்கின. ஆங்கிலமொழி அறிவால் மேற்கத்திய கருத்துக்களின் செல்வாக்கு படரத்துவங்கியது. பிரஞ்சு புரட்சி, பிரிட்டிஷ் நாடாளுமன்றமுறை, அமெரிக்க விடுதலைப்போர், இத்தாலியின் மாஜினி கரிபால்டி, சோவியத் புரட்சிஎன பல்வேறு தாக்கங்களுக்கு இந்தியர்கள் தொடர்ந்த பல ஆண்டுகளில்உள்ளானார்கள். மேற்கு எழுத்துக்களால் பாதிக்கப்படாத முன்னணி தலைவர்களே இல்லை எனலாம். ஆங்கிலேயர் உதவியுடன் இந்தியச்சமூகத்திற்கு தேவைப்பட்ட சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளும் நடந்தேறின. ராஜாராம் மோகன் ராய் போன்றவர் இதில் பங்காற்றினர். பிரம்மசமாஜம் ஆரிய சாமாஜங்கள் உருவாயின. தாகூரின் மூத்தோர்கள் இவற்றில் ஆர்வம்காட்டினர். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர், மராட்டியத்தில் பூலேதம்பதிகளின் சிந்தனைகள் தாக்கத்தை உருவாக்கின. சமஸ்தான மன்னர்கள் சிலர் ஆங்கிலம் கற்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் நின்றனர். பரோடாமன்னர் கெய்க்வார்டு அத்தகையவர்களில் ஒருவராக இருந்தார்.

மகாத்மா பூலே சாதிக்கொடுமைகளை சாடிப்போராடினார். பிராம்மண எதிர்ப்பு போராட்டமாகவே அவை அமையமுடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி அறிவுமேம்பாடு, நாகரீகமான இருப்பிட சூழல், அடிமைப்போல் உழைக்கும் நிலையை மாற்றல், எதிர்க்கவேண்டியவைகளுக்கு மெளனம் கலைத்து போராடுதல்  என்பதற்கான போராட்டக்களத்தை பூலே அமைத்தார்.

தமிழகத்தில் அயோத்திததாசர் பண்டிதர் ஒரு பைசா தமிழன் என்கிற பத்திரிகைமூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், பெரியார் என்கிற பெரும் ஆளுமைகள் தமிழகத்தில் இப்போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த இந்திய சூழலில்தான் அம்பேத்கர் பிறக்கிறார். வளர்ந்துவருகிறார். அவரின் மூதாதையர்கள் இரத்தினகிரி மாவட்டத்தில் மஹர் என்கிற பிரிவைச்சார்ந்தவர்கள். 1890களில் அவர்கள் குடும்பம் பிரிட்டிஷ் இராணுவ ஆளெடுப்பில் வாய்ப்பை பெற்றனர். மஹர் என்பதற்கு பொதுவாக தாய்வீடு என்கிற பொருள்உண்டு. தாய் வீட்டில், பிறந்தவீட்டில் இருக்கிறோம் என்கிற பெருமிதஅடையாளமது. ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களாக இருந்த சிலருக்கு வாய்ப்புக்கிடைத்தது.

முதல் உலகப்போர் காலத்தில் மஹர் பட்டாலியன் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. மஹர் இனத்தாருக்கு பெருகிய செல்வாக்கு சிலருக்கு கண்களை உறுத்தியது. அவர்கள்கிரிமினல் டிரைப் என சிலசாட்சியங்களை எடுத்துக்காட்டி இராணுவவேலைக்கு அவர்களை சேர்க்கக்கூடாது எனசட்டம் கொணர சிலர் போராடினர். திலகர்கூட ஆதரவாக பேசினார் என்கிற செய்தி கிடைக்கிறது. இதனால் அரசாங்க வேலை என்கிற வாய்ப்பு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தடைப்பட்டது. விவசாய வேலையும் பெரும் பலனை தரவில்லை.

அம்பேத்கரின் தந்தை ராம்ஜி இந்தப்பிரச்சனையை புகழ்பெற்ற மகாதேவரானடே அவர்களிடம் எடுத்து சென்றார். ரானடே, கோகலே ஆகியோருக்குஆங்கிலேயர்களிடம் மரியாதை இருந்தது. காந்திக்கு முன்பான பெருந்தலைவர்களாக திலகருடன் சேர்த்து அறியப்பட்டவர்கள். பின்னாட்களில் அம்பேத்கர் இவர்கள் அனைவருடனும் கருத்து மோதல் செய்தார். காந்தியுடன்ஆனாலும், கம்யூனிஸ்ட்களுடன் ஆனாலும் அவர் தன் நிலைப்பாட்டைவெளிப்படுத்தி போராடுபவராக இருந்தார். ரானடே தலையீட்டால் மஹர்பிரிவினர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அம்பேத்கர் வளர்ந்த பின்னர் புகழ்வாய்ந்த எல்பின்ஸ்டன் கல்லூரிக்கு செல்கிறார்.

மஹர் சமூகத்திலிருந்து முதல்முறையாக வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகம் ஆய்வுகளின்முன்னோடி கல்விநிறுவனம். அங்கு அம்பேத்கர் தனது மிகமுக்கியஆய்வறிக்கைகளை வெளியிடுகிறார். வர்த்தகரீதியாக ரூபாயின் மதிப்பு  என்பது வருகிறது, இந்தியாவில் சாதிகள்  எனும் புகழ்வாய்ந்த செவ்வியல் தாக்கம்நிறைந்த அறிக்கை இந்தியன் ஆண்டிக் எனும் பழமைகளை- வரலாறுகளைபதிவு செய்யும் இதழில் வெளியாகிறது.

 இந்தியத் தலைவர்கள் பலரையும் போல அம்பேத்கரும் மேற்கித்தியசிந்தனைகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறார். அவர் மறைவதற்கு  முன்னர் 1952ல்என்னுடைய ஒட்டுமொத்த அறிவிற்கும் நான் யாருக்காவது கடமைப்பட்டிருக்கிறேன் என்றால் அந்த அறிவார்ந்த கடனுக்குரியவர் (Intellectual debt) ஜான் பிரடெரிக் துவெ ( John Frederik Dewey) என தெரிவிக்கிறார்.  தனதுஅமெரிக்கப் பயணத்தின்போது அவரை சந்திக்கவும் அவர் விருப்பமாகஇருந்தார். ஆனால் பேராசிரியர் ஜான் துவே ஜூன் 1952ல் மறைந்துவிடுகிறார். பேராசிரியர் செலிகன்  என்பவரும் அம்பேத்கரிடம் செல்வாக்கு செலுத்தியவர்.

இரண்டு முக்கிய முழக்கங்களை அம்பேத்கர் மேற்கித்திய சிந்தனைமரபிலிருந்து, புரட்சிகளின் வரலாற்றிலிருந்து எடுத்துக்கொண்டார்.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற பிரஞ்சு புரட்சியின் புகழ்வாய்ந்த முழக்கம். இந்த வாசகத்தை அம்பேத்கர் தொடர்ந்து முழங்கிவந்தார். இந்திய தன்மையில்இதன் பொருள் என்ன என்பதை ஆழமாக விளக்கியுள்ளார். இரண்டாவதுமுழக்கம் , தமிழகத்தில் அவர் சிலையுள்ள இடங்களில் எல்லாம் காணப்படும்முழக்கமான கற்பி, ஒன்று சேர், போராடு ( Educate, Organise, Agitate)  .  இம்முழக்கம் Fabian Socialist கள் வெளிப்படுத்திய முழக்கம். மார்க்சியவகைப்பட்ட சோசலிச சொல்லாடல்கள் நமக்கு பழக்கமானவையாக இருக்கும். ஜெயபிரகாஷ் , நரேந்திரதேவ் போன்றவர்கள்டெமாக்ரடிக் சோசலிசம்  எனப்பேசினர். இங்கிலாந்தில்  வெப், கோல், பெர்னாட் ஷா போன்றவர்கள் புகழ்வாய்ந்த பேபியன் சோசலிஸ்ட்களாக இருந்தனர். அன்னிபெசண்ட் கூட தன்இளமைப்பருவத்தில் இத்தலைவர்களுடன் பணியாற்றி சோசலிச தாகம்கொண்டவராக இருந்தார்.

 பொருளாதார அறிஞர்களுக்கு லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் பெருமைக்குரிய ஒன்று. இந்த லண்டன் பொருளாதாரப்பள்ளியையும் பேபியன்தலைவர்கள்தான் நிறுவினார்கள். அங்கே அம்பேத்கர் செல்கிறார், கற்கிறார்.

 லாகூரில் 1922ல் சற்று முற்போக்கான ஜாட் பட் தோடக் மண்டல் சாதி எதிர்ப்புநிறுவனமாக உருவானது. ஆர்ய சமாஜ் உடன் அதற்கு மோதல் போக்கு ஏற்பட்டது. 1931ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதியை சொல்லாதே என்கிற இயக்கத்தை மண்டல் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 1936ல்அவர்களது ஆண்டு மாநாட்டிற்கு தலைமை உரையாற்ற  அம்பேத்கரை அழைத்திருந்தனர். இது தொடர்பான கடிதப்போக்குவரத்து மண்டல் நிர்வாகிக்கும் அம்பேதக்ருக்கும் நடந்தது. உடன்பாடின்மை காரணமாக அம்பேத்கரால் அங்கு உரையாற்றமுடியாமல் போனது. அப்படைப்பு இன்றுமிகவும் புகழ் வாய்ந்த ஒன்றாக கருதப்படும்   சாதியை ஒழிக்க வழி Annihilation of Casteஆகும்.

 அம்பேத்கர் ஒருவிஷயத்தில் மிகத்தெளிவாக இருப்பார். பலநாட்கள் கண்விழித்து ஆய்வு செய்து  சரி என வந்தடைந்தவற்றை மாற்ற அவர் சம்மதிக்கமாட்டார். ஆய்வில்லாமல் எச்சொல்லையும் அவர் பயன்படுத்துவதில்லை. பிறருக்கு எரிச்சல் தருகிறது என்பதற்காக எதையும் மாற்றமாட்டார். இப்படிப்பட்ட தீவிர கமிட்மெண்ட் அவரது எழுத்துக்களில் இருக்கும்.

ஆற்றப்படமுடியாமல் போன அவ்வுரை லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, விவேகானந்தரின் சிகோகோ உரை போன்றவைகளுக்குரிய மரியாதையைபெறத்தக்கதோர் உரை என கருதப்படவேண்டும். செவ்வியல்தன்மை கொண்டநூலாக அதைப் பார்க்கவேண்டும். அருந்ததிராய் அம்பேத்கர்-காந்தியை முன்வைத்து  Doctor and the saint என இப்புத்தகம் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அதற்கு எதிர்வினையை ராஜ்மோகன் காந்தி, நிஷிகாந்த் கோல்கே போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

 அம்பேத்கர் தன்னளவில் பத்திரிகையாளராகவும் போராடியுள்ளார். மூக்நாயக்என்கிற வாய் அடைக்கப்பட்டோரின் குரல், பகிஷ்கரித் பாரத், மூன்றாவதாக ஜனதா என்கிற பத்திரிகை. ஜனதா எனும் பத்திரிகையை பின்னர் சோசலிஸ்ட்களும் நடத்தினர். லோகியா, ஜெயபிரகாஷ், பேராசிரியர் மதுதண்டவதே ஆகியோர் ஆசிரியராக இருந்துள்ளனர்.

அரசு சட்டக் கல்லூரியின்பேராசிரியராக அம்பேத்கர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன்முதல்வராகவும் ஆனார். சைமன் கமிஷனில் சாட்சியம் சொல்ல வாய்ப்புபெற்றார். வட்டமேஜை மாநாடுகளில் தனித்த தன் வாதங்களை வைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் தலித்களுக்கு தனித்த வாக்குரிமை என்பதையும் தரவேண்டியிருந்தது. பிரிட்டிஷ் பிரதமரின் இந்த அவார்டுகாந்தியை பட்டினிப்போராட்டம் நோக்கித் தள்ளியது. அமபேதகருக்கும் சில இந்து தலைவர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு காந்தியின் உயிர் காக்கப்பட்டது. தலித்களுக்கு தனித்தஇடங்கள் பொது வாக்குரிமை என்கிற பூனா உடன்பாடாக அது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் லேபர் பார்ட்டி போன்ற ஒன்றை இந்தியாவிலும்சோதிக்க அம்பேத்கர் விரும்பினார். ILP கட்சி உருவாக்கி சோதித்தார். பின்னர் தனித்த தலித்களுக்குரிய பிரத்யேகமான செட்யூல்ட் ஃபெடரேஷன்  SCF உருவாக்கினார். கிருபளானி , ஆச்சார்யா நரேந்திரதேவ், லோகியா போன்றவர்கள்கூட அம்பேத்கருடன் உடன்பட்டு செயல்பட விரும்பினார்கள். அம்பேத்கர் காந்தியுடன், சோசலிஸ்களுடன், கம்யூனிஸ்ட்களுடன், பெரியாருடன் இன்னும் இந்துத்துவா பேசிவந்த தலைவர்களுடன் கூட தன் உரையாடலை நடத்தியிருக்கிறார். இந்தியாவில் முஸ்லீம்கள், பாகிஸ்தான் பிரச்சனை போன்ற ஆய்வுகளை அம்பேத்கர் நடத்தியிருக்கிறார்.

 காந்திஜி பயன்படுத்திய ஹரிஜன் என்பதை அம்பேத்கர் பயன்படுத்தவில்லை. அவர் டி சி (  depressed class) என்ற பதத்தைப் பயன்படுத்தினார். வைஸ்ராய் கவுன்சில் மெம்பராக இருந்தபோது ஏராள தொழிலாளர் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளார்.

 அம்பேத்கரின் இந்தியாவில் நாணயம் என்கிற ஆய்வுதான் ரிசர்வ் வங்கி சட்டம் உருவாக வழிவகுத்தது. அதேபோல் நிதிக்கமிஷன் என்கிற மத்திய மாநில நிதிஉறவுகளுக்கான அமைப்பு உருவாகவும் அவரது ஆய்வுகள் அடிப்படையாக இருந்தன. பட்டேலுக்கு சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் என்கிற புகழ்கிடைத்தது. இந்தியா ஒற்றை அரசாக இருக்கவேண்டுமா- மாநிலங்களின் சம்மேளனமாக இருக்கவேண்டுமா என்கிற விவாதத்தையும் முன்னெடுத்தவர் அம்பேத்கர்.

 அரசியல் சட்ட உருவாக்க அசெம்பிளி விவாதங்கள் வால்யூம்களாக பதிவாகியுள்ளன. அங்கு இருந்தவர்கள் எல்லோரும் தங்கள் வாதங்களை வலுவாக வைக்கும் ஆற்றல் நிறைந்தவர்கள்.  வரைவுக்குழு தலைமைப்பாத்திரத்தில் உரிய விளக்கங்களை முன்வைத்து அரசியல் அமைப்பு சட்டம் அற்புதமாக எழுதப்பட தன் தூக்கத்தை தொலைத்தவர் அம்பேத்கர். அவரின் பலபுகழ் வாய்ந்த மேற்கோள்கள் அங்கு உரையாற்றும் போது தரப்பட்டவை.

தேசியம் என்பது குறித்தும் பெரும் விவாதம் எழுந்தது. இந்தியா சாதிகளின் கூட்டமைப்பு என அம்பேத்கர் சமூக யதார்த்தத்தை எடுத்துரைத்தார். உட்புகமுடியாத மூடிய சமூகமாக இந்தியா இருந்து வருகிறது என்றார் அவர். இந்திய சமூகம்  ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய சமூகமாக மாறவேண்டும் என அவர் விழைந்தார். ’காம்போசிட் கல்ச்சர் எனபதும்சாதியற்ற சமூகம் உருவாகுமா என்பதும் அவரது கேள்விகளாக இருந்தது.

இப்படியொரு சமூக அமைப்பு உருவாக்கம் என்பதற்கு நூறு ஆண்டுகள் கூடப்பிடிக்கலாம். இந்தியாவில் மேல்நிலையாக்கம் எவ்வகையில் நடந்துவருகிறது. அனைவரும் மத்தியதரவர்க்கம் என்கிற பொருளாதார நிலை ஏற்பட்டு அதுசமூக உறவில் ஜனநாயக வெளியை உருவாக்குமா என்பதே அம்பேத்கரின் கவலையாக இருந்தது.

அம்பேத்கர் இந்துமதத்தை கடுமையாக சாடியிருந்தாலும் அவர் சமய விரோதியல்ல. இந்துமதம்சூப்பர் மனிதர்களின் சொர்க்கமாக இருக்கலாம்- சாதாரணமானவர்க்கு அது சாக்கடையாக இருக்கிறது என்றுகூட அவர் எழுதியிருக்கிறார்.

  ’My philosophy is based on Religion only’  என்கிற வாக்குமூலத்தை அவர் தருகிறார். அதற்கு சில சிறப்புத்தன்மைகளை அவர்வரையறுக்கிறார். எந்தமதம் வறுமையை போற்றுகிறதோ (ennobling poverty), எந்த மதம் உங்களின் இன்றைய கஷ்டத்திற்கு உங்களின் முன் ஜென்மப் பலன்என காரணம் காட்டுகிறதோ அந்த மதத்தை நான் சகியேன் என்றார். அது மதமேஅல்ல என்றார். எந்த மதம் பகுத்தறிவு காரணகாரிய அறிவிற்கு உட்பட்டுநடக்கிறதோ, சமத்துவமாக மனிதனை நடத்துவதற்கு தயவு தாட்சண்யமின்றி போராடுகிறதோ, பொதுவெளிக்குள் அனைத்து மனிதர்களையும் அனுமதிக்கிறதோ அந்த மதம்  இருக்கட்டும் என்றார் அம்பேத்கர். ’பெண்கள்வந்தால் பாதுகாப்பில்லை என்று தடுக்காமல் எந்த மதம் பெண்களும் வரலாம் பாதுகாப்போம் என அனுமதிக்கிறதோ அந்த மதம் இருக்கட்டுமே என இன்று நமக்கு பேசத்தோன்றுகிறது.

 மார்க்ஸ் கூட அபின் என நிறுத்திக்கொள்ளவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மதம் புகலிடம், நிர்கதியான மனிதனுக்கு ஆறுதல் நம்பிக்கை கிடைக்கும் இடம் என்றார். அம்பேத்கருக்கு மதசார்பின்மை என்பது மதநீக்கம் அல்ல. இந்துக்களுக்கு மட்டும் என்றோ முஸ்லீம்களுக்கு மட்டும் என்றோ சட்டம் இயற்றும் இடமாக நாடாளுமன்றம்  இருக்கவேண்டாம் என்பது அவர்தம்நிலைப்பாடு.

சமூகக் கொடுமைகளை அனுபவித்த பகுதியிலிருந்து தான் வந்தாலும் நாட்டில்மாற்றம் வருவதற்கு இரத்தக்களறி கூடாது என்றவர் அம்பேத்கர். சாதி ஒழிப்பு பிரச்சனையில் அவர் கம்யூனிஸ்ட்களுடன் விவாதம் செய்தவர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற முழக்கத்தில் அவருக்கு ஏற்பு இல்லை. இந்தியாவிற்கு நாடாளும்ன்ற ஜனநாயகமே பொருந்தும் என்றவர். அதன் தனித்துவமான மூன்று கூறுகளான நாடாளுமன்றம், மந்திரிசபை, நீதிமன்றம் ஆகியவற்றின் வெற்றி என்பது அவ்வமைப்புகளில் பொறுப்புக்கு வரும் மனிதர்களைப் பொறுத்தே அமையும். எங்களுக்குள் விவாதித்து நாங்கள் அரசியல் அமைப்புசட்டத்தை நிறைவேற்றியிருந்தாலும் அது மனிதர்களைப் பொறுத்தேவெற்றிப்பெறும் என்றார் அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப்பற்றிய கிரான்விலி ஆஸ்டின் என்பார் எழுதிய  The Indian Constitution: Corner stone of a Nation  என்பதில் அம்பேதகரின் ஆளுமை வியக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமராகவுள்ள திரு மோடி அவர்கள் தன்னைப்போன்ற பாத்திரம் தேய்த்த குடும்பத்து பிள்ளை நாடாளமுடியும் என்பதற்கு அம்பேத்கர் வகுத்தசட்டமே காரணம் என அம்பேத்கர் பிறந்த பகுதி கூட்டமொன்றில் பேசினார்.அதைவிடமுக்கியமாக அம்பேத்கரை நவீன மனு என்றழைத்தார். மனுவை வாழ்நாள் முழுக்க எதிர்த்து போராடியவர் அம்பேத்கர்.

நேபாள காத்தமண்ட் புத்த பிக்குகள் கூட்டம் ஒன்றில் மார்க்ஸா புத்தரா என்கிறவிவாதத்தை அம்பேத்கர் எழுப்பினார். அந்த உரைக்கு பின்னர் அவர்கள் அங்கே தந்த பட்டம் நவபௌத்தா என்பதாகும்.

 விடுதலை இந்தியாவில் நேருவின் அமைச்சரவையில் அம்பேத்கரும் சட்ட அமைச்சராக பங்கேற்கிறார். நேருவுடன் கருத்து மோதல் ஏற்படுகிறது. இந்துகோடு பில் பிரச்சனையானது. கருத்துவேறுபாடு ஏற்பட்டு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் வெளியேறுகிறார். 1952 தேர்தலில் அம்பேத்கர் தோற்கடிக்கப்படுகிறார். இதுதான் முரண் நிகழ்வு. யார் எதற்காக வாழ்நாள் முழுதும் நிற்கிறார்களோ அதனாலேயே அவர்கள் தோற்கடிக்கப்படுவதும் நிகழ்கிறது. அம்பேத்கர் இராஜ்யசபாவில் இடம் பெறுகிறார்.

பாகிஸ்தானில் தீண்டாமை பிரச்சனை அறிந்து ஜின்னாவிடம் பேசிப்பார்க்கிறார்.  All untochables you come to India- I will safeguard you என்கிற வேண்டுகோளை விடுக்கிறார். மொழி குறித்த அவரது கருத்துக்கள் முரண்பட்டதாக இருக்கும். இந்தியாவிற்குபொதுமொழி தேவை எனக் கருதினார். அது இந்தியாக இருக்கலாம் என்றார்.

 அவர் சோசலிசத்திற்கு எதிரானவராக காட்டிக்கொள்ளவில்லை. ’அரசாங்கசோசலிசம் எனப் பேசினார்.. நிலப்பிரச்சனையில் ஒரு ஏக்கர் என்றெல்லாம் பிரித்துக்கொடுத்தால அவர்களால் அதை காப்பாற்ற முடியாது எனக் கருதினார். கூட்டு பண்ணைகள் என்றார். அங்கு அவர்கள் சம்பளத்திற்கு பணியாற்றலாம். விவசாய சட்டம் வேண்டும் என்றார்.

 இந்தியாவில் சோசலிசம் கொணரவிரும்பும் கம்யூனிஸ்ட்களிடம் மிக முக்கியகேள்வி ஒன்றை அவர் எழுப்பினார். இந்த நாட்டின் சமூகபிரச்சனையாகசாதியை பார்க்காமல் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் சோசலிசத்தைக் கொணரமுடியுமா என்பதே அக்கேள்வி. ஏன் அரசியல் அமைப்பு சட்டத்தில் சோசலிசம் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி அவரிடம் எழுப்பட்டபோது வழிகாட்டுக் நெறிகளை படித்து புரிந்துகொள்ளுங்கள் அதைவிட சிறந்த சோசலிச  பிராஜக்ட் என்ன வேண்டும் என மறுமொழி தந்தார்.

அரசியல் சட்டத்தில் தங்களுக்கு பிடித்த ஷரத்து எது என அவரிடம் கேட்டபோது ஷரத்து 17- உயிர் வாழும் உரிமை என்றார். அதில்தான் தீண்டாமை குற்றம் என்பது இருக்கிறது. ஷரத்து 15( 4 ) இட ஒதுக்கீடு பற்றியது , 16 (4) கல்வி வேலைஉரிமை பற்றியது.  ஆனால் ஷரத்து 32 தான் எனக்கு பிடிக்கும் என்றார். அதில்தான்  constitiuional remedy  இருக்கிறது.  எவராக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சனையை எழுப்பவும் தீர்வுகளைப் பெறவும் அந்த ஷரத்து வழிசெய்கிறது - சட்டரீதியான மருந்தாகிறது என்றார்.

 இந்தியாவில் விடுதலை காரணமாக  அரசியல் ஜனநாயகம் ஒரு மனிதன் ஒருவாக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் சமூக மதிப்பு அப்படி இருக்கிறதா- ஒருமனிதன் ஒரே மதிப்பு இருக்கிறதா என அவர் மிக முக்கிய கேள்வியை  அனைவரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் எழுப்பினார். அப்படி ஒரேமதிப்பு என்பது வராவிடில் இந்திய ஜனநாயகம் இரத்தக் களறியை சந்திக்க நேரும் என்றார். இந்திய குடியரசு நோஞ்சான்களின் குடியரசாக வளராமல் வறுமை நீக்கப்பட்ட சம சமூக மதிப்புள்ள மனிதர்களின் குடியரசாக வேண்டும் என்கிற பெரும் கனா அவரிடம் இருந்தது.