Skip to main content

இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ

 

             இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ

மார்க்ஸ் எங்கெல்ஸ்ஸால் 1848 பிப்ரவரியில் ஜெர்மன் மொழியில் வெளியான கம்யூனிஸ் கட்சி அறிக்கை 1850லேயே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பார்த்தது. ரெட் ரிபப்ளிகன் வெளியிட்டனர். முன்னதாக 1848லேயே அதன் பிரஞ்சு பதிப்பு வெளியானது. தொடர்ந்து போலீஷ் பதிப்பு, ருஷ்ய பதிப்பு டேனிஷ் பதிப்புகள் வெளியாயின. ருஷ்ய மொழியாக்கத்தை பகுனின் செய்தார். இவ்வாறு உலக மொழிகளிலெல்லாம் மொழியாக்கம் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை இந்திய மொழிகளில் எப்படி எவ்வாறு மொழியாக்கம் பெற்றது என பார்த்துக்கொண்டு இருக்கும் போது கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டதுதான் இக்கட்டுரை.

விடுதலைக்கு முன்பாகவே கம்யூனிஸ்ட் குழுக்களின் தாக்கம் வரத்துவங்கிய காலத்திலிருந்தே இந்த இந்திய மொழிகளில் அதன் பயணம் துவங்கிவிட்டதைக் காண்கிறோம்.  இன்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் பலர் அன்று இளம் எழுச்சியாளர்களாக இந்தப் பயணத்தில் முன்கை எடுத்துள்ளதையும் காண்கிறோம். கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர் வரிசையில் அபுல் கலாம் ஆசாத், பெரியார் இந்த பயணத்தில் பங்காற்றியுள்ளனர்.




அக்டோபர் 1920ல் தாஷ்கண்ட்டில் நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வழியாக  மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கில புத்தகம் இந்தியாவிற்கு கடத்தப்பட்டது. பம்பாயில் 1922ல் ராஞ்சோதாஸ் புவன் லோட்வாலா விஞ்ஞான சோசலிசம் குறித்து அறிக்கைகளை கொணரத்துவங்கினார். லிபர்ட்டி வெளியீடுகள் என அவை வெளித்தெரியலாயின. இந்த வெளியீடுகளில் ஒன்றாக மானிபெஸ்டோவும் வெளியானது. இளம் டாங்கேவை அழைத்து தனது நூலகத்தை லோட்வாலா முழுமையாக அவருக்கு திறந்துவிட்டார். ஆரம்ப நாட்களில் டாங்கேவின் அறிவார்ந்த வளர்ச்சியில் லோட்வாலா முக்கிய பங்காற்றினார். டாங்கேவின் நினைவுப்படி அடுத்தடுத்து 12 பிரசுரங்களை லோட்வாலா கொணர்ந்ததாக அறிகிறோம். மானிபெஸ்டோ 6 அணா விலையில் கொடுக்கப்பட்டது.  wage, Labour and Capital by Engels, Religion of Capital by Lafargue, Communism by R P Dutt போன்றவைகளையும் அவர்கள் கொணர்ந்தனர்.  டாங்கே தனது சோசலிஸ்ட் பத்திரிகையில் இந்த நூல்களை விளம்பரப்படுத்தியிருந்தார்.

 டிசம்பர் 1922ல்லோட்வாலா டிரஸ்ட் என ஒன்றை சோசலிசம் குறித்து பரப்புவதற்காக லோட்வாலா நிறுவினார். அவர் லண்டன் சென்றபோது இடதுசாரி லேபர் தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இந்துஸ்தான் பிரஸ் என ஒன்றை நிறுவி தனது சேவையை அவர் தொடர்ந்தார்.

இந்திய மொழிகளில் (பெங்காலி) வங்கமொழியில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் வெளிவந்தது. முசாபர் அகமதை ஆசிரியராக கொண்ட கணவானி எனும் மக்கள் குரல் வங்கப் பத்திரிக்கையில்தான் ஆறு வரிசைகளாக அறிக்கை ஆகஸ்ட் 12, 1926 முதல், ஜூலை 21, 1927வரை வெளிவந்தது. அதை மொழியாக்கம் செய்தவர் தாகூரின் உறவினரான செளமியேந்திரநாத் தாகூராவார். செமியேந்திராவும் மே 1927ல் ஜெர்மனி சென்றார். கடைசி இரு பகுதிகளை அங்கிருந்துதான் அவர் அனுப்பிவைத்தார். பிரிட்டிஷாரால் இடைமறிக்கப்பட்டு அவரால் முசாபர் அகமது அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படும் வரிகள்:

I am sending the translation of the remaining portion of the Communist Manifesto beginning from the second chapter. I think that the translation of the first chapter is already out in Ganavani. Please have it compared once. Please have the entire thing published in two issues. Then arrange to publish it in book form. I am making arrangement for money. . . . As soon as my translation has been published in Ganavani please advertise that the Communist Manifesto will be out shortly in book form. This will be the first publication of the Ganavani series. 

S N  தாகூர் விரும்பியபடி 1930 ல் அது புத்தகமாக வந்தது.

1925ல் எஸ் என் தாகூர் கல்கத்தாவில் லேபர் ஸ்வராஜ் கட்சி ஒன்றை கவிஞர் நஸ்ருல் இஸ்லாம், முசாபர் உதவியுடன் அமைத்தார். 1927ல் அவர் சி பி அய் தொடர்பிலும் , 1928ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.. இந்தியா வந்தபின்னர் 1934ல் சி பி அய்யிலிருந்து வெளியேறினார். கம்யூனிஸ்ட் லீக் என்றும் பின்னர் ஆர் சி பி அய் கட்சியையும் உருவாக்கினார்.

1933ல் டாக்டர் சாரு சன்யால் ஜல்பைகுரியிலிருந்து கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு வேறு ஒரு மொழிபெயர்ப்பைக் கொணர்ந்தார். புகழ்வாய்ந்த மார்க்சியரான சுஷோபன் சர்காரால் 1944ல் மற்றொரு மொழிபெயர்ப்பு வந்தது. நேஷனல் புக் ஏஜென்சி சார்பில் இவரால் கொணரப்பட்ட மொழிபெயர்ப்பு சரிபார்க்கப்பட்டு progress publishers மாஸ்கோ 1968ல் அதைக் கொணர்ந்தனர்.




உருதுவில்அல் ஹிலால் வாரப்பத்திரிகை சார்பில் கல்கத்தாவிலிருந்து அறிக்கையை கொணர்ந்தனர். மெளலான அபுல் கலாம் ஆசாத் அப்பத்திரிகையின் ஆசிரியர். அவர் பெரும் இஸ்லாமிய அறிஞராக கருதப்பட்டவர். இரு பகுதிகள்  Bourgeois and Proletarians, communists and Proletarians  உருது மொழியாக்கத்தில் வெளியானது. நவம்பர் 4, 11, 18 நாட்களில் 1927ல் அவை வெளியாயின. எடிட்டர் குறிப்பில் ருஷ்ய புரட்சி எதார்த்தமாகிவிட்டது. கம்யூனிசம் குறித்து ஒவ்வொரு நாடும் அறிந்துகொள்ளவேண்டும். அரசியல்ரீதியாக மட்டுமின்றி மார்க்சை அறிவார்ந்த முறையில் தெரிந்துகொள்ளவேண்டும். உருதுவில் சரியான புத்தகங்கள் இன்மையால் அல் ஹிலால் இதை வெளியிடுகிறது.

 communism and its Aims  என்கிற தலைப்பை உருதுவில் கொடுத்து அதை அவர்கள் வெளியிட்டனர். இதை வெளியிடுவதால் இதன் எடிட்டருக்கு அக்கோட்பாட்டின்மீது முழு ஏற்பு இருக்கிறது என்ற எண்ணம் வேண்டாம் என்ற செய்தியும் அதில் சொல்லப்படுகிறது. கீழ்கண்ட வரிகள் (உருதுவிற்கான) இடம்பெற்றன:

In our view Communism is the natural reaction to the bourgeois inequities of modern civilization, and just as the capitalism of modern civilization has reached an extreme, Communism too isa manifestation of the other extreme. The way to virtue and truth cannot be through these extremes, it will always be a middle path.

உருதுமொழிபெயர்ப்பை செய்தவர் யார் என நேரிடையாக போடாவிட்டாலும் அதை ஆசாத்தின் நெருங்கிய காங்கிரஸ் தோழர் அப்துர்ரசாக் மலிஹாபடி செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதற்கு பின்னர் 1930களில் லாகூரிலிருந்து அப்துல் பாரி என்பவர் தனது மொழிபெயர்ப்பை அறிக்கைக்கு தந்தார். தோழர் ஜோஷி வற்புறுத்தலால் ஏற்கப்பட்ட உருது மொழிபெயர்ப்பாக 1946ல் அலி அஷ்ரப் பீகாரின் மூத்த கம்யூனிஸ்ட் கொணர்ந்தார்.  people's publishing House  உருது பிரிவின் சார்பில் லாகூரிலிருந்து இது வந்ததாக அறிகிறோம்

மராத்தி மொழியில் தோழர் கங்காதர் அதிகாரியால் அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டது. அதிகாரி அவர்கள் 1928ல் ஜெர்மனியிலிருந்து திரும்பிய பின்னர் அவரும் மீரத் சதி வழக்கில் சிறைவைக்கப்படுகிறார். மீரட் சிறையில்தான் 1930-31ல் அவர் மொழிபெயர்ப்பை செய்கிறார். காம்கார் வங்மயா பிரசாரக் மண்டல் சார்பில் பரேலில் அக்டோபர் 1931ல் 160 பக்கங்கள் 8 அணா விலைக்கு கொணர்ந்தனர். மராத்தியில் பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் சார்பில் 1948ல் மீண்டும் கொணரப்படுகிறது.

 தமிழில் ஏறத்தாழ மராத்தி மொழிபெயர்ப்பு வந்த காலத்தில் சமதர்ம அறிக்கை என்ற பெயரில் பெரியார் அவர்கள் தனது குடியரசில் அக்டோபர் 4 1931 முதல் வரிசைப்படுத்தி கொணர்ந்தார். ஈரோட்டிலிருந்து வெளியான அப்பத்திரிகையில் 5 வரிசையில் அறிக்கையை பெரியார் வெளியிட்டார். நேரிடையாக எவர் மொழிபெயர்த்தார் என்ற செய்தி இடம் பெறவில்லை. பெரியார் அதற்கான அறிமுக குறிப்பை எழுதி வெளியிட்டார். ருஷ்யாவிற்கு முந்தியே இங்கு இந்தியாவில் சோசலிசம் வந்திருக்கமுடியும் இங்குள்ள சக்திகளின் சதியால் வரவில்லை. இங்கு பணக்காரன்- ஏழை என்பதுடன் மேல்ஜாதியார்- கீழ்ஜாதியார் என்பது இருக்கிறது. கடவுள் மதம் என்ற பெயரில் உள்ள தடைகளையும் அவர் சுட்டிக்கட்டுகிறார். குடியரசு தொகுப்பு 1931 பகுதி 2ல் பக்கம் 262-263ல் அவரது அறிமுகம் முழுமையாக போடப்பட்டுள்ளதைக் காணலாம்.

நவம்பரில் அடுத்த பகுதி வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடரவில்லை. தொடர்ந்து அவர் அய்ரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சோவியத்தில் 6 வாரங்கள் இருந்தார். ஸ்டாலின் சந்திப்பு வாய்ப்பு கிட்டியும் அது  நடைபெறாமல் போனது என்பதை நாம் அறிவோம்.

அடுத்து தமிழில் ஏப்ரல் 1948ல் ஜனசக்தி பிரசுரமாக சி பி அய் சார்பில் இஸ்மத் பாஷா மொழிபெயர்ப்பில் 1948 ஏப்ரலில் அறிக்கை வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை 12 அணா என்று விலையில் அது கொணரப்பட்டது. 16 பக்க அறிமுகத்துடன் 91 பக்க அளவில் அதைக்கொணர்ந்ததாக அறிகிறோம்.

 எங்கெல்லாம் கம்யூனிஸ்ட் குழுக்கள் ஆரம்ப காலத்தில் வலுவாக இருந்தனவோ அங்கு தாய்மொழிகளில் அறிக்கையைக் கொணர முயற்சிகள் நடந்துள்ளதைக் காண்கிறோம்.

 தமிழ் மொழிபெயர்ப்பு வந்த காலத்தில் மலையாளத்தில் அறிக்கையைக் கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. டால்ஸ்டாய், தாஸ்தவஸ்கி நூல்களை மொழிபெயர்த்துவந்த கருணாகர மேனன் 1932ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்க்கிறார். சமஸ்தி வாத விஞ்ஞாபனம் என்ற பெயரில் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதற்கு முன்பே அறிக்கை வெளியாகிறது. 1940களில் மார்க்சிய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணியில் தோழர்கள் எம் எஸ், உன்னிராஜா, தேவதாஸ் ஆகியோர் முனைகின்றனர். அதன் ஒரு பகுதியாக அடுத்த மலையாள மொழிபெயர்ப்பாக அறிக்கையையும் கொணர்கின்றனர். பின்னர் 1948ல் டி எம் பொட்டேகாட் மொழிபெயர்ப்பு வருகிறது. தொடர்ந்து பிரபாத் புக்ஸ்  அறிக்கைகளை மலையாளத்தில் கொணர்ந்தது.




இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அன்றைய இளைஞர் பி சுந்தரையா அவர்களால் 1933ல் கம்யூனிஸ்ட் அறிக்கை தெலுங்கு மொழிபெயர்ப்பைக் கண்டது. பிரிண்ட் செய்யப்படாமல் சைக்கிளொஸ்டையில் செய்து சுற்றுக்குப் போனது. அதேபோல் பொறுப்புடன் எங்கெல்ஸ் அவர்களின்  principles of Communism  என்பதும் மொழிபெயர்க்கப்பட்டு இத்துடன் அனுப்பப்பட்டது. அதற்குப் பின்னர் கம்பம்பட்டி சத்யநாராயணா அவர்களால் மற்றொரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதை கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடாக கொணர்ந்தார்கள். தொடர்ந்து தோழர் பி ராமச்சந்திர ரெட்டியால் அறிக்கை மொழியாக்கம் செய்யப்பட்டது. தெலுங்கு மொழிபெயர்ப்பில் மாஸ்கோ பிராக்ரஸ் நிறுவனம் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தது.

 குஜராத் மொழிபெயர்ப்பை 1934ல் நவி துனியா கார்யாலயா சார்பில் கொணர்ந்தனர். அகமதாபாதில் இயங்கிய முதல் இடதுசாரி குழு நவி துன்யா. அங்கிருந்த கம்யூனிஸ்ட் குழுவிற்கு திங்கர் மேத்தா செயலராக இருந்தார்.  அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் இருந்தார். குஜராத் கம்யூனிச இயக்கத்தின் துவக்க நாயகராக மேத்தா பார்க்கப்பட்டார். நவி துனியா சார்பில் கிரந்தமாலா எனும் பெயரில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதன் வரிசையில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கையும் வெளியானது. 6 அணா விலை. ஜவஹர்லாலின் ருஷ்யா குறித்த புத்தகம், எங்கெல்ஸ் எழுதிய உடோபியன் சோசலிசம் போன்றவைகளையும் அவர்கள் மொழியாக்கம் செய்தனர். சந்திராபாய் பட் என்பார் கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் குறித்து 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் என அறிகிறோம். அவரது மொழிபெயர்ப்பில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை வந்துள்ளது. மிக முக்கிய அம்சம் அந்தக்காலத்திலும் 39 அடிக்குறிப்புகள் மூலம் அவர் விளக்க முற்பட்ட செய்தியையும் நாம் காணமுடிகிறது.

இந்தியில் கம்யூனிஸ்ட் அறிக்கையை அயோத்திய பிரசாத் மொழிபெயர்த்தார். தனது சிறைத்தண்டனைக் காலத்தில் 1933ல் மொழிபெயர்த்த அவரால் 1934ல் தான் அச்சில் கொணரமுடிந்துள்ளது. ஜான்சியிலிருந்து மாத்ருபூமி எனும் அச்சகத்தில் வெளியிடப்பட்ட இந்நூலை பிரிட்டிஷார் தடை செய்தனர்.

 ஒரியா மொழியில் பகபதி பாணிகிரகி என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். விஞ்ஞானிக் சம்யபாத் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் 1936ல் இது அச்சேறியது. பானிகிரகி ஒரிஸ்ஸா கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவராக அறியப்படுகிறார். அவர் ஒரிஸ்ஸா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் செயலராகவும் இருந்தார். ஆனால் 1943 பஞ்ச காலத்தில் நிவாரண வேலைகள் இடையேயே அவர் தனது 34ஆம் வயதில் மறைந்துள்ளார். சிறு வயதிலேயே போற்றத்தகுந்த காரியங்களை செய்து மறைந்துள்ளார் பானிகிரகி.

 பஞ்சாபி மொழியில் லாகூரிலிருந்து 1944ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். அடுத்த மொழிபெயர்ப்பு 1950ல் டெல்லியிலிருந்து வந்தது. இதை புகழ்வாய்ந்த மார்க்சிய அறிஞரான பேரா ரந்தீர் செங் செய்துள்ளார். இதை மேம்படுத்தி 1959ல் ஜலந்தரிலிருந்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மேலே கூறப்பட்ட தகவல்கள் முழுமையான பதிப்பு வரலாறல்ல. கிடைக்கப்பேற்ற செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. விவரம் முழுமையாக அறிந்தவர்கள் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் பதிப்பு விவர வரலாறு என்பதைக் கொணரமுடியும்.

26-12-2021


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...