https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, November 30, 2016

Speech of Com Pattabi on Nov 12 2016 Ambedkar- Marxists Caste Question

<iframe width="100%" height="450" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/294688763&amp;auto_play=false&amp;hide_related=false&amp;show_comments=true&amp;show_user=true&amp;show_reposts=false&amp;visual=true"></iframe>

Sunday, November 27, 2016

The Marxist Sociology in India- A study of the Contribution of A R Desai என்ற ஆய்வு புத்தகத்தை அர்பிதா முகர்ஜி என்ற பேராசிரியை எழுதியுள்ளார். நேஷனலிசம் என்கிற உருவாக்கம் அதில் பங்கேற்றவர்களின் வர்க்கப் பின்னணி, செயல்பாடுகள், இந்திய விவசாயம்- விவசாய வர்க்கம், இந்தியாவில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசு, சமுக இயக்கங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர் மார்க்சிய ஆய்வாளர்கள் பலரின் மேற்கோள்கள், வந்தடைந்த முடிவுகளுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர், சமுகவியளார், மார்க்சிய ஆய்வாளர் தேசாயின் பார்வையில் என அர்ப்பிதா தனது வாதங்களை நகர்த்துகிறார்.
அக்சய் குமார் ரம்ன்லால் தேசாய் குஜராத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெற்ற மார்க்சிய ஆய்வாளர். ஏப்ரல் 16,1915ல் பிறந்து 80 ஆண்டுகள் வாழ்ந்து செயல்பட்டு நவம்பர் 12, 1994ல் மறைந்தவர்.. இந்தியாவில் சோசியாலஜி என்கிற ஆய்வுவகைதனை நூற்றாண்டாக பலர் செழுமைபடுத்தியுள்ளனர். ராதாகமல் முகர்ஜி, குர்யி, மஜும்தார், பினாய் குமார், தேசாய், சீனிவாஸ், திபங்கர் குப்தா போன்றவர்கள் இந்திய சமூகம் குறித்து ஏராளம் எழுதியுள்ளனர். தேசாய் புகழ்வாய்ந்த ஜி எஸ் குர்யி அவர்களிடம் கற்றவர். இந்திய தேசியம் சமுக பின்புலம் குறித்து எழுதியவர். ஊரக இந்தியாவின் சமுகவியல், அரசும் சமுகமும், விவசாய போராட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை போன்ற மிக முக்கிய ஆய்வு நூல்களை தந்தவர்.
தனது இளமைக்காலத்தில் சி பி ஐ கட்சியில் செயல்பட்டவர். ஸ்டாலினிச கொள்கைகளால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாறுபட்டு டிராட்ஸ்கியவாதியாக போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி என்பதில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் நூல்களுடன் டிராட்ஸ்கி, காட்ஸ்கி, மெளரிஸ் டாப், கார்ல் மேன்ஹய்ன் எழுத்துக்களுடன் பழக்கப்படுத்தி கொண்டவர் தேசாய். பின்னர் 1953-81 காலங்களில் ஆர் எஸ் பி கட்சியின் மிக முக்கிய கோட்பாட்டாளராக விளங்கினார். இந்திய சமுகவியலாளர் சொசைட்டியில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டிஷ் காலத்தில் தொழிற்சங்கங்கள் என்ற புத்தக தொகுப்பை வழங்கினார். குஜராத்தி மொழியில் சோசலிச கருத்துக்களை பரவ செய்யும் வகையில் இதழாசிரியராக இருந்தார். நான்காம் அகிலத்துடன் தொடர்ந்து உறவுகளை வைத்திருந்தார் தேசாய். அவரது ஆய்வுகள் மார்க்சியர் வட்டாரத்தில் போதுமான கவனம் பெறாமல் போனது வருத்ததிற்குரிய ஒன்று.. அர்ப்பிதா எழுத்து நடை வசீகரமாக நம்மை அழைத்து செல்வதாக இல்லை என எனக்கு தோன்றுகிறது. சோர்வை ஏற்படுத்துகிறது . எனினும் தேசாய் போன்ற மறக்கடிக்கப்பட்ட ஆய்வாளர்களை மறு வாசிப்பு செய்ய இப்புத்தகம் உதவுகிறது. வழக்கம் போல் இம்மாதிரி புத்தகங்களை வெளியிடும்கல்கத்தா கே பி பக்ஷி நிறுவனம்தான் இதையும் வெளியிட்டுள்ளது. கன்னிமாரா சென்னை நூலகத்தில் 335.4 எண் கொண்டதாக இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 795 தான். 2015 பிப்ரவரியில் கன்னிமாரா வந்த இந்நூலை 2015 ஏப்ரலில் ஒருவர் எடுத்துள்ளார். தற்போது 2016ல் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

Saturday, November 19, 2016

U R அனந்தமூர்த்தி  அவர்களின் Hindutva or Hind Swaraj படித்தவுடன் சாவர்க்கரின் Essentials Of Hindutaவாவையும் - காந்தியின்  Hind Swaraj or Indian Home Ruleயையும் படிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. காந்தியின் புத்தகம் குறித்த உரையாடலை தோழர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது அதை தொட்டுவிட்டு விட்டுவிட்டேன். தோழர் சீனிவாசன் மதுரை BSNLல் பணிபுரிந்தவர். ஜெகன்மீது அளவற்ற மதிப்பு கொண்டவர். பெரும் படிப்பாளி. ஜெகனுக்கு காந்தி நிறுவனங்களில் மேடை அமைத்துக் கொடுத்தவர். ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களிடம் நெருக்கமான தொடர்புகளை பெற்றிருந்தவர். என்னிடம் மதுரை கூட்டங்களுக்கு செல்லும்போது சில rare குறிப்புகளை அனுப்புகிறேன் படித்துப் பாருங்கள் என சொல்லி வந்தவர். ஆய்வுபணிகளுக்காக இலாகா வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டவர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பின்னர் கெளரவ பேராசிரியராக சேர்ந்தார். அவ்வாறு இருந்தபோது ஒருமுறை சாஸ்த்ரா மாணவர்களிடம் பேசுவதற்கு எனக்குக் கூட வாய்ப்பை உருவாக்கினார். அவருக்கு இந்நேரத்தில் எனது நன்றி.
 வீர சாவர்க்கரின் புத்தகத்தை படித்தேன். பலமுறை விவாதிக்கப்பட்ட புத்தகம். அவரின் ”1857 முதல் சுதந்திரப்போர்” பலமுறை பேசப்பட்ட புத்தகம் பகத்சிங் போன்றவர்கள் அவரை சந்தித்து வெளியிட அனுமதி பெற்ற புத்தகம். சாவர்க்கர் ஆதரவு- எதிர்ப்பு- கண்டன உரையாடல்கள் தொடர்ந்து இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் புரட்சியாளர் என அவரை உயர்த்திய எழுத்துக்களும் ஒரு பயந்த ஆட்டை சிங்கமாக காட்டும் எத்தனம் என்ற விமர்சனமும் பெரிதாக நடந்து வருகிறது. சாதிகளுக்கு அப்பால் சீக்கியர் உட்பட அனைவரும்வேதங்களின் தாயகமான இந்தியாவை புனிதபூமியாக கருதும்  அனைவரும் நிவேதிதா, அன்னிபெசண்ட் போன்றோர் உட்பட- அனைத்து மத(அனுஷ்டான) நடைமுறை சார்ந்த வேறுபடுகளையும் மூடிவைத்துவிட்டு - இந்துத்வா என ஒன்றுபடவேண்டும். இதற்கான போர்க்குணம் மெச்சப்படவேண்டும் என்ற முறையில் அவரது புத்தகம் தனது விவாதத்தை வைக்கிறது. காந்தியையும்  முழுமையாக படித்தபின்னர் செழுமையாக விவாதிக்க முடியும் என கருதுகிறேன். சாவர்க்கர் காந்தி கொலைவழக்கு உள்ளிட்ட பல முரண்களில் சிக்கியவர்.  கோட்சேவின் மதிப்பை பெற்றவர்.  த்னது புரட்சிகர ஆரம்ப ஆண்டுகளில் அந்தமான் சிறையில் தனது சகோதரருடன் வதைபட்டு அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதிமொழியை தந்து ரத்னகிரியில் தங்கியவர். இந்நிகழ்வை பக்த்சிங் வீரத்துடன் ஒப்பிட்டு சாவர்க்கரை விமர்சித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளது. லண்டனில் பிரான்சில்  புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு கப்பலில் வரும்போது தப்ப முயற்சித்து கைதாகி அந்தமான் அனுப்பப்பட்டவர். மேடம் காமா, வ வேசு அய்யர், மதன்லால் திங்க்ரா, விரேந்திரநாத் சட்டோபத்யாய் ஆகிய புரட்சியாளர்களுடன் செயல்பட்டவர். இத்தாலியின் மாஜினியால் கவரப்பட்டவர். ருஷ்ய புரட்சியாளர் அனார்க்கிஸ்ட் குரொபட்கின் அவர்களை தனது செயல்களுக்கு மேற்கோள் காட்டியவர்.

ஷ்யாமஜி கிருஷ்ணவர்மாஎன்கிற புரட்சியாளர் நடத்தி வந்த Indian Sociologist பத்திரிக்கை தொடர்பை வைத்திருந்தவர். மதன்லால் திங்க்ரா லண்டனில் செய்திட்ட கர்சான் வைல்லி படுகொலை வழக்கிலும் சிக்கியவர். இந்த படுகொலையை மிதவாத தலைவர் சுரேந்திரபானர்ஜியும், தீவிரத்தலைமை பிபின் சந்திரபாலும் விமர்சித்த்னர். ஆனாலும் சாவர்க்கர் தங்க பிபின்பால் இடமளித்தார் புரட்சியாளர்கள் தங்கிய இந்தியன் ஹவுஸ் துப்பாக்கிகள், வெடிமருந்துகளின் ரகசிய இடமாகவும் -இருந்த இடமாகவும் ஆக்கப்பட்டது, காந்தி அங்கு தங்கியுள்ளார். சாவர்க்கர் அனுப்பிய துப்பாக்கிகள் திலகர் , வீரவாஞ்சிவரை வந்ததாக சாவர்க்கர் ஆதரவாளர்கள் பேசிவருகின்றனர். பாரதிதாசன் மூலம் வாஞ்சிக்கு என்ற பேச்சும் உள்ளது. காந்தியடிகளுடன் பெரும் வேறுபாடுகளை இந்தியன் ஹவுஸ்(1907-8 நாட்களில்) விவாதம் துவங்கி தொடர்ந்து வைத்திருந்தவர் சாவர்க்கர். சாவர்க்கர் கருத்துக்கள் மீது பெரும் விமர்சனம் காந்திக்கு இருந்தது. நேதாஜி சுபாஷ் சாவர்க்கருடன் தொடர்பில் இருந்ததாக சாவர்க்கர் நண்பர்கள் பேசிவருகிறார்கள். இந்து மகாசபா துவங்கி முஸ்லீம்கள் மற்றவர் மீதான துவேஷ அரசியலின் தந்தையாக சாவர்க்கர் கருதப்படுகிறார். ஆதாரஙளுடன் பல்வேறு  ஆய்வாளர்கள் இதை நிறுவியுள்ளனர், இன்றுள்ள அரசியல் சூழல் போர்க்குணமிக்க இந்துத்வா மூலம் தொடர்ந்து ஆள நினைக்கிறது. ஹிட்லர் தந்த அதே துயரம் என்ற அனுபவத்தை மனிதகுலம் பெறவேண்டுமா என நாம் கேட்டால் சிறுபிள்ளைத்தனம் என ஆர்னாப் போன்ற டைம்ஸ்நெள இரைச்சல்கள் நம்மை அடக்கப் பார்க்கும். தேசத்துரோகம் என்கிற முத்திரைக்கூட குத்தப்படும். காந்தி கண்டிப்பாக சாவர்க்கரைவிட இளைத்துவிடக்கூடாது என்கிற அனந்தமூர்த்தி போன்ற சிந்தனையாளர்களின் கவலையுடன் நானும் தூக்கம் குறைந்து அவதிப்படுகிறேன். இதன் பொருள் சில எனது நண்பர்கள் சொல்வதுபோல் படிப்பதால்  பைத்தியமாவது என்பதல்ல.

Monday, November 14, 2016

யு.ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர். அவரின் சம்ஸ்கரா உலகப்புகழ் பெற்றது. சாகித்ய அகாதமியின் தலைவராக இருந்தவர்.ஞானபீடம் பெற்றவர். மோடி ஆட்சிக்கு வந்ததை கொடுங்கனவாக நினைத்து வருந்தியவர். வெளிப்படையான கருத்துக்களால் பெரும் அவமதிப்பை சந்தித்தார். மரணத்திற்கு முன்னர் மிக சிறந்த புத்தகம் ஒன்றை அவர் நமது சமுகத்திற்கு கொடுத்து சென்றுள்ளார். 2014ல்  HINDUTA  OR HIND SWARAJ என்பது கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றது. காந்தியின் புகழ்வாய்ந்தநூற்றாண்டை கண்ட’ ஆக்கமான Hind Swaraj- Indian Home Rule மற்றும் வினாயக் தாமோதர் சாவார்க்கர் வழிகாட்டிய Essential of Hindutva ஆகிய  இரண்டையும் அனந்தமூர்த்தி ஒப்பீட்டு காந்தியின் ஆக்கம் ஏன் தனக்கு சிறந்து விளங்குவதாக எடுத்துரைக்கிறார். திரு மோடியை பெரிதும் விரும்பக்கூடியவர்களை கூட நிதானப்படுத்தும் அற்புத ஆக்கமாக அனந்தமூர்த்தியின் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கோட்சே காந்தியை படுகொலை செய்ததும், அதை நியாயப்படுத்தி கொடுத்த வாக்குமூலமும் அனந்தமூர்த்தியால்  தரப்பட்டுள்ளது. சாவர்க்கரின் எழுத்துக்கள்தான் கோட்சேவாவை தூண்டியதாக அனந்தமூர்த்தி பதிவு செய்கிறார். சாவர்க்கர் தனது 1857 முதல் சுதந்திரப்போர் புத்தகத்தை மராத்தியில் எழுதி அது பிரான்ஸ், ஜெர்மன் என எந்த நாட்டிலும் பதிப்பிக்கபடமுடியாமல் போகி பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில அரசு எவ்வளவு உளவு பார்த்தாலும் கண்டுபிடிக்கப்படமுடியாமல் வெளிக்கொணரமுடிந்த பெருமிதத்தை முந்திய ஜனசங்கத்தினர் பெருமிதமாக சொல்லுவார்கள். அனந்தமூர்த்திகூட தான் சிறுவயதில் சாவர்க்கர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார். அவருக்கு  திரு.அத்வானி போன்றவர்களிடம் கூட பழக்கம் இருந்தது. ஆனாலும் மோடி குறித்த விமர்சனங்களை வைத்ததால் கடும் கண்டனத்திற்கு ஆளானர்.

காந்தியின் பார்வையில் அனைத்து மதங்களும் தன்னளவில் நிறைவு கொண்டவையல்ல. அவருக்கு தன் மதம் முக்கியம் என்பது போலவே மற்றவர்க்கு அவரவர் மதம் முக்கியம் என்பதில்- UNIVERSAL MAN கருத்தாக்கத்தில் நின்றார்நான் ஆளப்பிறந்தவன் என்கிற சத்ரிய பார்வையை சாவர்க்கர் வழங்குவதாகவும்  கட்டுப்படாத மற்றவரின் இருப்பை அது தொந்திரவு செய்யும் என அனந்தமூர்த்தி பேசுகிறார். ரூ 200க்கு கிடைக்கிறது. இன்றுள்ள இந்திய சூழலில் பொருட்படுத்தி படிக்கவேண்டிய புத்தகம் என எனக்குப்படுகிறது.