https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, November 19, 2016

U R அனந்தமூர்த்தி  அவர்களின் Hindutva or Hind Swaraj படித்தவுடன் சாவர்க்கரின் Essentials Of Hindutaவாவையும் - காந்தியின்  Hind Swaraj or Indian Home Ruleயையும் படிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. காந்தியின் புத்தகம் குறித்த உரையாடலை தோழர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது அதை தொட்டுவிட்டு விட்டுவிட்டேன். தோழர் சீனிவாசன் மதுரை BSNLல் பணிபுரிந்தவர். ஜெகன்மீது அளவற்ற மதிப்பு கொண்டவர். பெரும் படிப்பாளி. ஜெகனுக்கு காந்தி நிறுவனங்களில் மேடை அமைத்துக் கொடுத்தவர். ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களிடம் நெருக்கமான தொடர்புகளை பெற்றிருந்தவர். என்னிடம் மதுரை கூட்டங்களுக்கு செல்லும்போது சில rare குறிப்புகளை அனுப்புகிறேன் படித்துப் பாருங்கள் என சொல்லி வந்தவர். ஆய்வுபணிகளுக்காக இலாகா வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டவர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பின்னர் கெளரவ பேராசிரியராக சேர்ந்தார். அவ்வாறு இருந்தபோது ஒருமுறை சாஸ்த்ரா மாணவர்களிடம் பேசுவதற்கு எனக்குக் கூட வாய்ப்பை உருவாக்கினார். அவருக்கு இந்நேரத்தில் எனது நன்றி.
 வீர சாவர்க்கரின் புத்தகத்தை படித்தேன். பலமுறை விவாதிக்கப்பட்ட புத்தகம். அவரின் ”1857 முதல் சுதந்திரப்போர்” பலமுறை பேசப்பட்ட புத்தகம் பகத்சிங் போன்றவர்கள் அவரை சந்தித்து வெளியிட அனுமதி பெற்ற புத்தகம். சாவர்க்கர் ஆதரவு- எதிர்ப்பு- கண்டன உரையாடல்கள் தொடர்ந்து இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் புரட்சியாளர் என அவரை உயர்த்திய எழுத்துக்களும் ஒரு பயந்த ஆட்டை சிங்கமாக காட்டும் எத்தனம் என்ற விமர்சனமும் பெரிதாக நடந்து வருகிறது. சாதிகளுக்கு அப்பால் சீக்கியர் உட்பட அனைவரும்வேதங்களின் தாயகமான இந்தியாவை புனிதபூமியாக கருதும்  அனைவரும் நிவேதிதா, அன்னிபெசண்ட் போன்றோர் உட்பட- அனைத்து மத(அனுஷ்டான) நடைமுறை சார்ந்த வேறுபடுகளையும் மூடிவைத்துவிட்டு - இந்துத்வா என ஒன்றுபடவேண்டும். இதற்கான போர்க்குணம் மெச்சப்படவேண்டும் என்ற முறையில் அவரது புத்தகம் தனது விவாதத்தை வைக்கிறது. காந்தியையும்  முழுமையாக படித்தபின்னர் செழுமையாக விவாதிக்க முடியும் என கருதுகிறேன். சாவர்க்கர் காந்தி கொலைவழக்கு உள்ளிட்ட பல முரண்களில் சிக்கியவர்.  கோட்சேவின் மதிப்பை பெற்றவர்.  த்னது புரட்சிகர ஆரம்ப ஆண்டுகளில் அந்தமான் சிறையில் தனது சகோதரருடன் வதைபட்டு அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதிமொழியை தந்து ரத்னகிரியில் தங்கியவர். இந்நிகழ்வை பக்த்சிங் வீரத்துடன் ஒப்பிட்டு சாவர்க்கரை விமர்சித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளது. லண்டனில் பிரான்சில்  புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு கப்பலில் வரும்போது தப்ப முயற்சித்து கைதாகி அந்தமான் அனுப்பப்பட்டவர். மேடம் காமா, வ வேசு அய்யர், மதன்லால் திங்க்ரா, விரேந்திரநாத் சட்டோபத்யாய் ஆகிய புரட்சியாளர்களுடன் செயல்பட்டவர். இத்தாலியின் மாஜினியால் கவரப்பட்டவர். ருஷ்ய புரட்சியாளர் அனார்க்கிஸ்ட் குரொபட்கின் அவர்களை தனது செயல்களுக்கு மேற்கோள் காட்டியவர்.

ஷ்யாமஜி கிருஷ்ணவர்மாஎன்கிற புரட்சியாளர் நடத்தி வந்த Indian Sociologist பத்திரிக்கை தொடர்பை வைத்திருந்தவர். மதன்லால் திங்க்ரா லண்டனில் செய்திட்ட கர்சான் வைல்லி படுகொலை வழக்கிலும் சிக்கியவர். இந்த படுகொலையை மிதவாத தலைவர் சுரேந்திரபானர்ஜியும், தீவிரத்தலைமை பிபின் சந்திரபாலும் விமர்சித்த்னர். ஆனாலும் சாவர்க்கர் தங்க பிபின்பால் இடமளித்தார் புரட்சியாளர்கள் தங்கிய இந்தியன் ஹவுஸ் துப்பாக்கிகள், வெடிமருந்துகளின் ரகசிய இடமாகவும் -இருந்த இடமாகவும் ஆக்கப்பட்டது, காந்தி அங்கு தங்கியுள்ளார். சாவர்க்கர் அனுப்பிய துப்பாக்கிகள் திலகர் , வீரவாஞ்சிவரை வந்ததாக சாவர்க்கர் ஆதரவாளர்கள் பேசிவருகின்றனர். பாரதிதாசன் மூலம் வாஞ்சிக்கு என்ற பேச்சும் உள்ளது. காந்தியடிகளுடன் பெரும் வேறுபாடுகளை இந்தியன் ஹவுஸ்(1907-8 நாட்களில்) விவாதம் துவங்கி தொடர்ந்து வைத்திருந்தவர் சாவர்க்கர். சாவர்க்கர் கருத்துக்கள் மீது பெரும் விமர்சனம் காந்திக்கு இருந்தது. நேதாஜி சுபாஷ் சாவர்க்கருடன் தொடர்பில் இருந்ததாக சாவர்க்கர் நண்பர்கள் பேசிவருகிறார்கள். இந்து மகாசபா துவங்கி முஸ்லீம்கள் மற்றவர் மீதான துவேஷ அரசியலின் தந்தையாக சாவர்க்கர் கருதப்படுகிறார். ஆதாரஙளுடன் பல்வேறு  ஆய்வாளர்கள் இதை நிறுவியுள்ளனர், இன்றுள்ள அரசியல் சூழல் போர்க்குணமிக்க இந்துத்வா மூலம் தொடர்ந்து ஆள நினைக்கிறது. ஹிட்லர் தந்த அதே துயரம் என்ற அனுபவத்தை மனிதகுலம் பெறவேண்டுமா என நாம் கேட்டால் சிறுபிள்ளைத்தனம் என ஆர்னாப் போன்ற டைம்ஸ்நெள இரைச்சல்கள் நம்மை அடக்கப் பார்க்கும். தேசத்துரோகம் என்கிற முத்திரைக்கூட குத்தப்படும். காந்தி கண்டிப்பாக சாவர்க்கரைவிட இளைத்துவிடக்கூடாது என்கிற அனந்தமூர்த்தி போன்ற சிந்தனையாளர்களின் கவலையுடன் நானும் தூக்கம் குறைந்து அவதிப்படுகிறேன். இதன் பொருள் சில எனது நண்பர்கள் சொல்வதுபோல் படிப்பதால்  பைத்தியமாவது என்பதல்ல.

No comments:

Post a Comment