https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, August 31, 2018

ஹெகல் துவங்கி   என்கிற மின்னூல்  freetamilebooks  இளம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழாமிற்கு எனது நன்றி. வர்த்தக நலன் ஏதுமின்றி
தமிழ் வாசகர்களுக்கு இலவசமாக தமிழ் எழுத்துக்களை  மின் புத்தக வடிவத்தில் சேர்ப்பது இந்த இளைஞர்களின்  நோக்கம். அவர்களின் ஆர்வமும் உழைப்பும் வெற்றிபெறட்டும்

http://freetamilebooks.com/ebooks/hegal-and-more/


Tuesday, August 21, 2018

இலக்கியம் காட்டும் நல் அமைச்சு


                        இலக்கியம் காட்டும் நல் அமைச்சு
-    ஆர்.பட்டாபிராமன்
 அமைச்சர் என்றால் மதியூகம் நிறைந்தவர்  என்றே இலக்கியங்கள் பேசின. ஆட்சிக்கு துணைவனாக ஆட்சியாளர்க்கு நல்லாசானாக இருக்கவேண்டிய பொறுப்பது.  தன்னலம் பேணாத சுயம் உணர்ந்த பொறுப்பது. நாவன்மையும், வினைத்தூய்மையும் அவரிடம்  எதிர்பார்க்கப்படும். பழமொழி நானூறு அவர்களை ’தாயொப்ப’  என்றது.
வள்ளுவர் பேசிய அரசாட்சி அங்கங்கள் படை,குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்கிற ஆறு. அவ்வாறு பெற்ற அரசாட்சி சிங்கநிகர் ஆட்சி என வள்ளுவம் பேசுகிறது. பத்து அதிகாரங்கள் அமைச்சு குறித்து பேசுகின்றன.
அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர் அய்ம்பெருங்குழுவினராக அறியப்படுகின்றனர். மன்னர் வெறுத்தாலும் நன்னெறி தருபவர் அமைச்சர் என கந்தபுராணம் கச்சியப்பர் சொன்னதாக அறியமுடிகிறது. மன்னன் வெகுண்டாலும் யானைப்பாகன் போல் அங்குசத்தால் வெருட்டி நேர் செய்தல் அமைச்சர் அழகு என குமரகுருபரர் சொன்னதை கேட்கமுடிகிறது.
நுண்ணிய அறிவுத்திறத்துடன் செய்யவேண்டியவைகளை செய்திட சொல்லி செய்திடவைத்து, தவிர்க்கவேண்டியவைகளை தவிர்க்கவைத்தல் மந்திரிக்கு அழகு என வள்ளுவம் சொல்லித்தருகிறது. வேண்டியவர்கள் பிரிந்து போகாமல் பார்த்து தோழமைபேணி உடன் வைத்துக்கொள்வதும், பகை என அறியப்படுவோரிடமிருந்து பெறவேண்டியவர்களை பிரித்து தன்னுடன் சேர்த்துக்கொள்ள காரியமாற்றுவதும் அமைச்சின் குணமாக சொல்லப்படுகிறது.
அவசரமின்றி நிதானமாக அதே நேரத்தில் கால எல்லைகளை உணர்ந்து செயல்படுதல், நூலறிவுடன், அனுபவச் சாறு ஏறிய ஞானம் வாய்க்கப்பெற்றவராக இருத்தல் அமைச்சர் இயல்பாக பேசப்படுகிறது. நாவன்மை, பயத்தக்க சொல்தல், நயம்பட உரைக்கும் மாண்பு, சுருங்க சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல், எப்போதும் நிலைத்தடுமாறாது இனிதாதல் ஆகியன பெருங்குணங்களாக எதிர்பார்க்கப்பட்டது.
 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் 
 எனக் குறள் சொல்லிக்கொடுக்கிறது.  பேசுவதுடன் செயலிலும் தூய்மை அமைச்சருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணமாக வள்ளுவம் எதிர்பார்க்கிறது. வினைத்தூய்மை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் என்பது அநியாய முறையில் செல்வம் குவிக்கவேண்டியதில்லை.  சுடுமண்ணில்லாமல் பச்சைமண் பாத்திரத்தில் நீர் ஊற்றும் செயல்தான் அரசாங்கத்தின் தீயவழி பொருட் சேர்ப்பு என எடுத்துரைக்கிறது குறள். மனத்திட்பத்துடன் குறுகிய உடனடித் திட்டம், நீண்டகாலத்திட்டம் என்கிற பாகுபாட்டுடன் செயல்படுதல் அமைச்சர்க்கு அழகு. இடமும் காலமும் அறிந்து எண்ணியுரைக்கும் அழகு பற்றியும் பேசுகிறது.

இரகசியம் காக்கவேண்டும், தலைமையிடம் ஒளிவுமறையற்று இருக்கவேண்டும்,  அவையறிந்தும் பேசவேண்டும் அஞ்சாமலும் சொல்லவேண்டும். பிறர் ஏற்கும் வகையில் இனிதாகவும் சொல்லவேண்டும் என அமைச்சர் எதிர்பார்க்கப்படுகிறார்.
தசரதன் அமைச்சரவையின் ஆயிரக்கணக்கானவரில் சுமந்திரன் என்பார் குறித்து கம்பர் பேசுகிறார். வரும் பொருள் உரைத்தல், நூல்களை அறிந்தவர்கள், மானத்தை மதிப்பவர்கள், அறவினைகளைக் கொண்டாடுபவர்கள், அரசனின் புகழுகு உற்ற செயல்மட்டுமன்றி நாட்டோர்க்கும் நலம் பயக்கும் செயல்நோக்கி அவரை அழைத்து செல்பவர்கள் என அமைச்சர் பண்புகள் விதந்து சொல்லப்படுகின்றன. தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் என இலக்கணம் வகுக்கிறார் கம்பர். அந்த அமைச்சர் பெருமான்கள் செங்கோண்மை தவறாது முக்காலம் உணர்ந்த வகையில் மூதறிஞர்களாக நின்று வழிகாட்டுவர் என்கிறார் கம்பர். அமைச்சன் மருத்துவனைப்போலவும் செயல்படுபவர் என்கிற சிறப்பும் பேசப்படுகிறது.
திருவாரூரை ஆண்ட மன்னன் மனுநீதி சோழனின் மைந்தன் வீதிவிடங்கன் தேரில் கன்று ஒன்று சிக்கி உயிர் இழந்தது. தாய்ப் பசு நீதிகோரியது. நடந்ததை அரசன் வினவ அமைச்சன் பக்குவமாக பதில் தருகிறார். பயமறியா கன்று எவரும் அறியாமல் ஓடிவந்து தேர்ச்சக்கரத்தில் சிக்கி மாய்ந்தது. தாய்ப்பசு துயர் உற்று ஆராய்ச்சி மணி அடித்தது. இறந்ததற்கு புதல்வன் குற்றவாளியல்ல என்பது போல் இருந்தது அமைச்சன் தந்த செய்தி. அமைச்சர்கள் நீதி உரைக்கவில்லை என மன்னனுக்குப்பட்டது. பசுவின்  இடரை நானும் பெறுவது தர்மம் மட்டுமல்ல கருமமும் ஆகும் என மன்னன் உணர்ந்து உரைத்தான். மகனை அதே இடத்திற்கு அழைத்துப்போ என சொல்லப்பட்ட அமைச்சன் தன் உயிர் நீத்ததால் தானே மகனை அழைத்து சென்றான் மன்னன்.
தருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம்தன் தேராழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்
என சேக்கிழார் பாடியதை அறிகிறோம்..  பிறர் உயிரை நீக்கும் வினையாற்ற வரும் எனில் தன் உயிர் மாய்த்தல் செயல் என அறிந்த அமைச்சர் தன் உயிர் மாய்த்த பெருமையும் பேசப்படுகிறது..
தூதர்க்குரிய இலக்கணத்தை மிக அழகாக  வித்வான் . நவநீதகிருட்டிணன் விளக்குகிறார். அமைச்சுரிமை, அரசர் விரும்பும் பண்பு, தோற்றப்பொலிவு, அயலரசர்பால்  சொல்லத்தக்க செய்திகளை தொகுத்து சொல்லும் ஆற்றல், தங்கள் ஆட்சிக்கு உண்மையாக நலம் பயத்தக்க சொல்வன்மை, உயிருக்கோர் ஆபத்து நேரினும் அஞ்சாது சொல்லவேண்டியவற்றை சரியாக சொல்தல் ஆகியன தலையாய தூதர் பண்புகள்.
 அதியமான் சார்பாக தொண்டமானிடம் அவ்வையார் சென்று மிக நேர்த்தியாக தொண்டமான் படைக்கருவிகள் புதிதாக எவ்வித சேதாரமும் இல்லாமல் இருப்பதை வியந்தும், அதியமான் கருவிகள் உலைக்களத்தில் பழுதுக்கு கிடப்பதாகவும் சூசகமாக தெரிவிக்கிறார். அதாவது தொண்டமான் கருவிகள் போரில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதையும் அதியமான் கருவிகளோ போரில் பயன்படுத்தப்பட்ட அனுபவம் நிறைந்ததாக இருப்பதையும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி தன் மன்னனின் பராக்கிரமத்தை பறைசாற்றினார் என்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
மதுரை சுந்தரபாண்டியன் அமைச்சர் குலச்சிறையார். சமணர் எண்ணாயிரம் அளவில்  அக்காலத்தில் சரண்புகுந்தனர். மன்னனும் நாளடைவில் சமணம் பரவத்துணை நின்றான். போற்றத்துவங்கினான். சிவனடியார்கள் குறையலாயினர். அரசப்பெருந்தேவி மங்கயர்க்கரசியும் இதில் கவலையடைந்தார். மன்னனிடம் பேசப்பட்ட தனி உரைகள் பயனற்றுப்போயின. திருஞானசம்பந்தரை அழைத்துவந்து தீர்வுக்காண அரசியும் அமைச்சரும் முடிவெடுத்தனர். நாவுக்கரசர் ஞானசம்பந்தரை பலிகொடுத்துவிடக்கூடாது என்கிற கவலையில் நாளும் கோளும் சரியில்லை போகவேண்டாம் என்கிற அறிவுரைத்தருகிறார். சம்பந்தர் நல்லதே நடக்கும் என செல்கிறார். அரசியாலும் அமைச்சராலும் வரவேற்கப்படுகிறார். சமணர்களுடன் அனல்வாதம் புனல்வாதம் புரிகிறார் என  சொல்லப்படுவடுவதை கேட்கிறோம். சம்பந்தர் ஏடுகள் வெள்ளம் எதிர்த்து நின்றது. அரசரின் கூன் மறைய சம்பந்தர் காட்சி உதவியது என்றெல்லாம் சொல்லப்பட்டதை அறிகிறோம். இங்கு அமைச்சர் அரசனின் உருவக்கூனை மட்டுமின்றி அறிவுக்கூனையும் அகற்றினார் என்பது செய்தி. சைவ சமண போராட்டம் குறித்தும் செய்தி கிடைக்கிறது.
அரிமர்த்தன பாண்டிய மன்னனுக்கு முதலமைச்சராக இருந்தவர் வாதவூரார் எனப்படும் மாணிக்கவாசகர். தென்னவன் பிரமராயன் என்கிற பட்டமும் அவருக்கு அரசரால் வழங்கப்பட்டது. அறம் செய்பவர்க்கு கண்ணும் கவசமாக, இறைஞ்சினார்க்கு இன்பமானவராக, அரசன் ஆணையை பொதுவற நடத்துபவர் என அவர் புகழ்வாய்க்கப்பெற்றார்.   கருவூல நிதியை எடுத்துக்கொண்டு அரசன் ஆணைப்படி குதிரை வாங்கச் அவர் சென்ற கதையை நாம் அறிவோம். ஆனால் சிவன் அருளைப்பெற திருப்பெருந்துறையில் தங்கிவிட்டார். நரி பரியானது பின்னர் நரியாகி இருக்கும் பரிகளையும் கொன்றது- பெருமான் பிரம்படிபட்டது எனக்கதை நீளும்.. அமைச்சுத்தொழில் நீங்கி பெரும் இறைத்தொண்டில் ஈடுபட்டதால் திருவாசகம் தமிழுக்கு கிடைத்தது.
சீவகசிந்தாமணியின் தலைவன் சீவகன் . அவரது தந்தை வேந்தன் சச்சந்தன். அவரின் முதல் அமைச்சர் கட்டியங்காரன். எனக்குயிர் எனப்பட்டவன் என மன்னரே சிறப்பித்துக்கூறும் தகுதி பெற்ற அமைச்சன். சரியான தருணத்தில் ஆட்சியையே எடுக்கலாம் என்கிற கனவுடன் இருந்த கட்டியங்காரனுக்கு சச்சந்தனே அந்த வாய்ப்பை தந்தார். அவரது அந்தப்புற மயக்கத்தில் இது நேர்ந்தது. நிமித்திகன் எனும் அமைச்சர் இது சரியல்ல என மன்னனுக்கு எடுத்துக்கூறினார். மன்னனோ கட்டியங்காரனும் யாமும் வேறல்ல என்றார். கட்டியங்காரனிடமும் அமைச்சராக இருந்து அரசை கவர்ந்தவர் எவரும் வாழ்ந்ததில்லை என அமைச்சின் அறம் பற்றி பல அமைச்சர்கள் பேசினர். கட்டியங்காரன் மன்னனைக்கொல்ல முடிவெடுத்தான். ஆணையும் இட்டான். அறிந்த மன்னன் கருவுற்ற அரசி விசயை தப்பிட வழி செய்தான். தான் நின்று போராடி மாய்ந்தான். சுடுகாட்டில் சீவகன் பிறந்தான். கந்துக்கடன் என்பான் எடுத்து வளர்த்தான். பின்னர்  வளர்ந்து கட்டியங்காரனை வீழ்த்தினான் சீவகன். திறமை வாய்ந்த அமைச்சன் கட்டியங்காரன் தன் சதி வஞ்சகத்தால் வீழந்த செய்தி கிடைக்கிறது.
பெரியபுராணம் தந்த சேக்கிழார் பெயர் அருண்மொழித்தேவர். இரண்டாம் குலோத்துங்க அநபாயனின் முதலமைச்சர். அவர் திருநாகேஸ்வரத்தில் இருந்து அலுவல் செய்துவந்தார். சீவக சிந்தாமணி பெரும் புகழுடன் இருந்தகாலம். சிவபக்தனாகிய மன்னன் அதைக்கேட்டு இன்புற்றுவருகிறான் என அறிந்த அருண்மொழி அது சமணகாவியம் என எடுத்துச்சொன்னார். காமக்கதை என விமர்சித்தார். அருள் நிறைந்த சிவக்கதைகளை நாம் கொண்டாடுவோம் என்றார்.  அரசர் வேண்டுகோளுக்கிணங்க திருத்தொண்டர் புராணம் எழுதினார். அரசர் சிவனடியார்களைக்கூட்டி அதை அரங்கேற்றம் செய்தார்.  தமிழ்வேதம் என அதைக் கொண்டாடினார். அமைச்சரை யானைமீது  ஏற்றி ஊர்வலம் வரச்செய்து தொண்டர் சீர் பரவுவார் என பட்டமளித்தார். இனி சைவத்திருமறைகள் 12 என்றார் மன்னன்.
மன்னன் ஒருமுறை நிலம்,மலை, கடல் மூன்றினும் பெரியன எவை எனக்கேட்டார். அதற்கு ஞாலத்தைவிட காலத்தாற் செய்த நன்றி பெரிது, மலையைவிட நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் பெரியது, கடலைவிட பயன்தூக்கார் செய்த உதவி பெரிது என மூன்று குறள்களை சுட்டி சேக்கிழார் அனுப்பிய செய்தியை அறியமுடிகிறது.
   உதவிய நூல்
  இலக்கிய அமைச்சர்கள்- செஞ்சொற்புலவர் . நவநீதகிருட்டிணன்