காந்தியும் மார்க்சும் 1
-ஆர்.பட்டாபிராமன்
காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி-
காந்தியம் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளனர். சோசலிஸ்ட்களுடனும் காந்தி தனது உரையாடலை
நடத்தியுள்ளார். காந்தி- மார்க்ஸ் குறித்த கட்டுரைகள் சிலவற்றை எழுதிப் பார்க்க வேண்டும்
என்கிற எண்ணம் ஏற்பட்டது. எனது மார்க்சிய
வாசிப்பும் காந்திய வாசிப்பும் மிக ஆரம்பநிலையில்தான் இருக்கிறது என்பதை நான் அறிந்தாலும்
எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள எழுதி பார்த்துக்கொள்வது உதவும் எனக் கருதி முதல்
கட்டுரை ஒன்றை தந்துள்ளேன். இக்கட்டுரை எழுத உதவிய ஆக்கம் ஆர் பி சின்ஹா அவர்களின்
MAHATMA GANDHI AND KARL MARX (A STUDY OF SELECTED SOCIAL THINKERS). ஆர் பி சின்ஹா பாட்னா ஏ என் சின்ஹா சோசியல் ஆய்வு மய்யம் சார்ந்தவர். அந்த மய்யம் 1958 ஜனவரியில் டாக்டர்
பாபு ராஜேந்திரபிரசாத் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
எனது முயற்சியை தொடர வாய்ப்பு இருந்தால் கே ஜி மஷ்ரூவாலா
காந்தியம் சார்பில் எழுதிய காந்தி மற்றும் மார்க்சை அடுத்து எழுத உத்தேசம். எனது திட்டத்தில்
லோகியா, ஹிரன்முகர்ஜி, இ எம் எஸ், எம் என் ராய் ஆகியோர்களின் ஆக்கங்களின் அடிப்படைகளும் இருக்கின்றன.. காந்தி- லெனின் ஒப்பீடு போன்றவற்றையும்
சரி செய்து கொள்ளும் விருப்பம் இருக்கிறது.
மார்க்ஸ் மறைந்தபோது காந்திக்கு வயது14. மார்க்சைப்
பற்றி அவர் அவ்வயதில் அறிந்திருக்க முடியாது. உலக விவகாரங்கள் பற்றி கவலை ஏதுமின்றிக்கூட இருக்கின்ற வயது. அவருக்கு 13 ஆம் வயதிலேயே மணமுடிக்கப்பட்டது. தந்தை ஸ்தானத்தில் இருந்த
அவர் தனது 19 ஆம் வயதில் சட்டம் படிக்க லண்டன் சென்றார். அங்கு மாதம் 20 டாலரில் சிக்கனமாக 3 ஆண்டுகள் இருந்தார். பாரிஸ்டராக நாடுதிரும்பினார்.
தனது 23ஆம் வயதில் வழக்கு நிமித்தம் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி அங்கிருந்த இந்தியர் உரிமைகளுக்கு போராடத்துவங்கினார். அரசியல் விஷயங்களின் தீர்விற்கு சிவில் ஒத்துழையாமை என்பதை அவர் பரிசோதித்தார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை அவசியமாக்கினார். இந்து எனில் பலமொழியினர், சாதிக்காரர்களுடன் தீண்டாமை அனுசரிக்கப்படாமல் உடன் இருக்க கற்றுக்கொண்டார் -கற்றுக்கொடுத்தார்.
எவருக்குமே
அவரது குடும்பச் சூழல்தான் முதல் கற்கைநெறிகளை தருகிறது. காந்திக்கும் அவரின் தாய் தந்தை பெரியவர்கள் மற்றும் நட்பு சூழல் செல்வாக்கை செலுத்தின. பின்னர் டால்ஸ்டாய், ரஸ்கின் செல்வாக்கு செலுத்தினர். புத்தர், ஜீசஸ், நபிகள், கீதை என அனைத்திலும் அவர் அகிம்சைவழிப்பட்ட தன்மைகளை எடுத்துக்கொண்டார்.
இந்திய மக்களின் அரசியல் பொருளாதார சமூக சூழல்களை
உள்வாங்கி அகிம்சை, ஒத்துழையாமை சத்தியாக்கிரகம், உண்மை- கடவுள், தர்மகர்த்தாமுறை, சோசலிசம் போன்றவற்றிற்கான விளக்கங்களை அவர் தந்தார்.. அவர் நடைமுறைக்கு முன்னுரிமை தந்தவர். எனவே அவரை இசம் சார்ந்து அதில் வைத்து பேசுவது கடினமாக இருக்கும். அவர் பழமைவாதியாக தெரிவார்- அனார்க்கிஸ்ட் ஆகவும் காணப்படுவார். முதலாளித்துவவாதி எனவும் அதே நேரத்தில் புராதன கம்யூனிஸ்ட் ஆகவும் தெரிவார். He belongs to all these camps and none என்கிற வரையறையை ஆர் பி சின்ஹா தனது மகாத்மாவும் மார்க்சும்
என்கிற ஆக்கத்தில் தருகிறார்.
உண்மை அகிம்சைக்குரிய அளவுகோலிருந்து தான் அனைத்தையும் அவர் பார்த்தார். சுயமாக வரித்துக்கொள்ளும் எளிமை, உடல் உழைப்பிற்கு மரியாதை, அனைத்துமத சமத்துவம், மனித சகோதரத்துவம், வர்க்க மோதல் மூலம் சமூக அமைதிக்கு பங்கம் என்பதை ஏற்காமை, மனிதர்களுக்கு தொண்டு என்பதைவிடாத துறவு மனப்பாங்கு, சுயத்துயர் மூலம் பிறர் மனதை மாற்ற முயற்சி போன்றவற்றை அவர் சோதித்தார். My bent is not political but religious என்பார். அவரிடத்தில் பொதுவாழ்வு நடைமுறைக்கும் தனி வாழ்வு நடைமுறைக்குமான பேதமில்லை.
அவர்
தன்னை கோட்பாட்டாளராக முன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் அதில் ஆர்வம் கொண்டவராகவும்
காட்டிக்கொண்டதில்லை. தனது பெரும் அனுபவங்களை கோட்பாடாக சாரப்படுத்தவும் அவர் முயற்சிக்கவில்லை.
அவர் நடைமுறை இலட்சியவாதியாக அறியப்படலாம். Satyagraha is not a subject for research. you
must experience it, use it, live by it என அவர் சொல்வார்
.
ஒவ்வொரு தனிநபரும் மரியாதையுடன் கெளரவத்துடன் அதேநேரத்தில் உழைப்புடன் வாழவகை செய்திடும் முறைக்கு அவர் நின்றார். தேவைகளை அதிகரித்துக்கொண்டே போவதற்கும் உழைப்பை குறைப்பதற்கும் அவர் ஏற்பை தெரிவிக்கவில்லை. அகிம்சை மற்றும் அன்பு எனும் சக்கரங்களால் வாழ்க்கைத்தேர் இயங்கட்டும் என்பார். வலுத்தவர் நோஞ்சான்களை காக்கும் நெறிநிறை சமூகத்தை அவர் விழைந்தார். அதை கடமையாக்கிக்கொள்ள வேண்டினார். கடமையை சரியாக செய்து மற்றவற்றை கடவுளின் தீர்ப்பிற்கு விட்டுவிடலாம் என்கிற பார்வை கொண்டிருந்தார்.
சர்வோதயா அனைவருக்கும் ஆக உயர் நன்மை என்பது அவரால் பேசப்பட்டது. அனைவருக்கும் நன்மை என்பது உரிமைகோரல்களால் வராது என்றார். கடமைகளால் தியாகங்களால் தான் அதை நிறைவேற்ற
இயலும் என வற்புறுத்தினார். தனது இலட்சிய கனவுகொண்ட சமூக கட்டுமானம் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதில் முற்று முழுதான நம்பிக்கை என எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.(“ When
society is deliberately constructed in accordance with the law of non violence,
it structure will be different from what it is today. But I cannot say in
advance what the govt based wholly on non- violence , will be like")
காந்தியின் பிரதி
உரையாடல் செயல் என்பதில் தீர்வுமட்டுமல்ல
அதற்கான வழிமுறைகளும் மிக முக்கியமானவை. இன்னும் சொல்லப்போனால் தீர்வைவிட வழிமுறைகளுக்கு
முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் ( emphasis on means rather than
ends). சோசலிசம் ஸ்படிகம் போல் தூய்மையானது எனில் அதற்கு ஸ்படிகம் போன்ற தூய நடைமுறைகளும் அவசியமாகிறது என்றார். உண்மையற்ற வழிமுறைகளால் உண்மையை பெற இயலாது என்பதில்
வலுவாக நின்றார். (Truthful conduct alone can reach truth.)
வழிமுறைகள்
என்பன நம்சக்திக்குள் நிற்பவை. முடிவுகளை நாம் அறியமுடிவதில்லை. நமது அற்புத உணர்வுகளை முடிவுகள் என்பதற்காக நாம் இழந்துவிடக்கூடாது. மோசமான வழிமுறைகள் மோசமான முடிவுகளுக்கே இட்டு செல்லும்.
It is dangerous ethics to make the end as the criterion என்கிற பார்வையை அவர் தந்தார்.
மனிதகுலத்துடன் ஒன்றி அடையாளப்படுத்தமுடியாத சமய வாழ்க்கையை என்னால் நடத்தமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. இதற்கு அரசியல் பங்கேற்பு அவசியம். அவசியப்பட்ட அரசியலில் அகிம்சை எனும் போராட்டவடிவைக் கலந்தது காந்தியின் பிரதான பங்களிப்பாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மதம் என்பதில் சுரண்டல் கூடாது என்றவர் காந்தி
(In the scheme of religion cum economics, there is no room for exploitation
or americanisation..)
தனிநபர் உடலில் எப்படி உறுப்புகள் தலைமுதல் கால்வரை சமமாக பாவிக்கப்படவேண்டுமோ அவ்வாறே உறுப்பினர்களாகிய மனிதர்கள் சமூகத்தில் சமமாக இருக்கவேண்டும் என்கிற சோசலிசம் அழகானதுதான் என்றார். அதில் இளவரசரும், விவசாயியும் செல்வந்தரும் ஏழையும் சம மட்டத்தில் இருப்பர். அதே நேரத்தில் எந்த நாடும் முழுமையாக நடைமுறையில் சோசலிஸ்ட் நாடாக இருப்பதாக தெரியவில்லை என்றார்.
காந்தியின் திட்டத்தில் 18 அம்சங்கள் இருந்தன
1. மத ஒற்றுமை
2. தீண்டாமை ஒழிப்பு
3. மதுவிலக்கு
4. காதி பயன்பாடு
5. கிராமத்தொழில்கள்
6. கிராம சுகாதாரம்
7. அடிப்படைக் கல்வி
8. வயதுவந்தோர் கல்வி
9. பெண்கள் கல்வி மற்றும் மேம்பாடு
10. ஆரோக்கியம்
11. மாநில மொழிகள்
12. தேசிய மொழி
13. பொருளாதார சம்த்துவம்
15. விவசாயிகள் நலன்
16.. தொழிலாளர் நலன்
17. தொழுநோயாளர் நலன்
18. மாணவர் மீதான அக்கறை
எதுவும் இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை. அனைத்தும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சுழற்சியில் இல்லாமல்
(கடவுளாக இருந்தால் தவிர) யாரும் இருக்கமுடியாது. அகிம்சை மார்க்கத்தில் செல்ல செல்ல வளர்ச்சியின் தூரங்களும் புலப்படும். சத்தியாக்கிரகம் என்கிற நாணயத்தில் நீங்கள் ஒருபுறம் அன்பையும் மறுபக்கம் உண்மையையும் காணமுடியும். அது சிறந்த தற்காப்புக்கருவி. எதிரி தடுக்கும்போது அது அதிகமாக ஒளிரும். எதிரியை காயப்படுத்தாது அவரின் சிந்தனைக்கு வேண்டுகோள் வைக்கும்
முறையது. (Satyagraha is
twice blessed. It blesses him who practices it and also him against whom it is
practised. It never injures his opponent and always appeals either to his
reason by gentle arguments or his heart by the sacrifice of the self.)
கடவுள் மறுப்பு கொண்ட சோசலிசம் மீது
அவருக்கு சந்தேகம் இருந்தது. மனிதனை எங்கே அது அழைத்துச் செல்லும் என கேள்வி இருந்தது. அவர் கடவுள்- சோசலிச இணைப்பு தேவை எனக் கருதினார். வர்க்க போராட்டம் தவிர்க்கப்படவேண்டியது என்பதில் நின்றார். உண்மையில் போராட்டம் புரிதலுக்கும் அதன் இன்மைக்குமானதே என்றார். புரிதலின்மையை நாம் நீக்கவேண்டும் When labour is intelligent enough to
organise itself and learn to act as one man, it will have the same weight as
money if not much greater. மூலதனமும் உழைப்பும் ஒன்றுகொன்று நிரப்பிகளாக இருக்க வேண்டும். துணைபுரிவதாக இருக்க வேண்டும் என விழைந்தார். அவர் நிகழ்ச்சிநிரல் எதையும் ஒழிப்பது என்பதல்ல, சீர்படுத்துவது என்பதாக இருந்தது..
In india a class war is not only not inevitable but it is avoidable if
we have understood the message of non violence என்ற குரலை அவர் எதிரொலித்தார்.
மூலதனத்திற்கு எதிராக காந்தி இருந்தாலும் முதலாளிகளுக்கு எதிராக இல்லை என்கிறார் சின்ஹா. மூலதனம் உழைப்பாளரை மாஸ்டராக கொள்ளவேண்டும் என விரும்பினார். When an individual had more than his
proportionate portion, he became a trustee of that portion for God's
people. இந்த பொருளாதார நியதி சமயத்தன்மைக்கு உகந்ததாக அவருக்கு தோன்றியது. அகிம்சைக்கு பொருத்தமானதாகவும் தோன்றியது.
உயர்ந்தவர் அடங்கிப்போகவேண்டியவர் என்பதில்லாமல் பரஸ்பர நலன்களுக்கானது தர்மகர்த்தா கொள்கை எனக் கருதினார். ( It is perfectly a mutual
affair and each labour and capitalist believes that his own interest is best
safeguarded by safeguarding the interest of the other). இன்றைய முதலாளித்துவம் தன்னை ஒழுங்குபடுத்தி சரிப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது அக்கொள்கை. தர்மகர்த்தா கொள்கை தனியார் சொத்துரிமை பெருக்கத்திற்காக நிற்கவில்லை. அரசாங்க சட்டவிதிகளுடன் கூடிய தர்மகர்த்தாமுறை என்று அவர் பரிந்துரைத்தார். குறைந்தபட்ச வாழும் ஊதியம் என்பது போலவே அதிகபட்ச வருவாய் உச்சவரம்பும் தேவை. அந்த வித்தியாசம் பெருமளவு இருந்துவிடக்கூடாது. அவ்வப்போதைய சூழலில் அது
equitable தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்..
அவர் மார்க்சிய சோசலிசம், அனார்க்கிச கொள்கைகளை ஏற்கத் தயாராக
இருந்தார். ஆனால் அகிம்சை, கடவுள் நம்பிக்கை, சத்தியாக்கிரகம் என்கிற கருத்துக்களுடன்
சேர்த்து என்பதில் நின்றார் . ஆனால் அவரை எந்த
அரசியல் கோட்பாட்டிற்குள்ளும் அடைத்துவிட செய்யும் முயற்சி தோல்வியிலேயே முடியும் என
சின்ஹா வரையறுக்கிறார். (He is prepared to embrace the concept
of Marxian socialism, anarchism, conservatism but only with due modifications
effected by his tools on Non violence, belief in God and technique of
satyagraha.. The most serious efforts to classify Gandhi in terms of any school
of political theory have failed- Sinha)
ரஸ்கினும் காந்தியும் உயர்தட்டுப்பகுதியினருக்கு வேண்டுகோள்
கொடுப்பவராக இருந்தனர்.அவர்களின் மனமாற்ற சாத்தியம் குறித்துப் பேசினர். காந்தியின்
தனிச்சிறப்பு சாதாரண மக்களின் பலத்தை செயலுக்கு வெளிக்கொணர்ந்ததில் இருக்கிறது. தனிநபருக்கு முக்கியத்துவம் என்றாலும் மனிதன் சமூக பிராணி என்ற புரிதல் காந்திக்கு இல்லாமல் இல்லை. தனிநபர்தன்மையை சமூக முன்னேற்றத்துடன் சரிகட்டிக்கொள்ள தெரிந்தவனாக மனிதன் இருக்கிறான் என அவர் தெரிவிக்காமல் இல்லை. தளையற்ற வரம்பற்ற தனிநபர்வாதம் என்பதை அவர் ஏற்கவில்லை.
பாரம்பரிய சமூகத்தின் ஊடாகவே காலத்திற்கு தேவைப்படும் மாற்றங்களை தனிநபர் நன்மை கருதி அனுசரிக்கவேண்டியதன் அவசியத்தை- அதனால் வரவேண்டிய சமூக மாற்றத்தை அவர் வலியுறுத்தாமல் இல்லை.
We must gladly give up custom that is against reason, justice and
religion of the heartஎன தெரிவித்தவர் காந்தி. கஞ்சப்பிரபுக்களிடம் தவறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வம் போன்றவையே மோசமான சமூக பழக்கங்கள்- அவை விட்டொழிக்கப்படவேடியவை என்றார்.
தலைவர் என்றால் தைரியம், சகிப்புத்தன்மை, தியாக மனப்பாங்கு இருத்தல் வேண்டும் என்றபடி வாழ்ந்து காட்டியவர் காந்தி. வெகுஜனங்கள் மீதான நம்பிக்கை இழப்பு என்கிற கன்சர்வேடிவ் குணம் அவரிடம் இல்லை. தனது ஜனநாயகத்தில் ஒடுக்குமுறைக்கு இடமிருக்கக்கூடாது எனக்கருதினார். அகிம்சைபாற்பட்டதாக இருக்கவேண்டும் என்றார்.
மனம் செயல் மொழிகளால் காயம் ஏற்படுத்தாமை என தன் அகிம்சைக்கு விளக்கம் தந்தார். அவர் இலட்சிய மனிதராகவும் நடைமுறை வாழ்விற்கு முக்கியத்துவம் தருபவராகவும் இருந்தார். Ideal ceases to be an ideal when it is
realised. அடைந்துவிட்டபின் இலட்சியம் இராது என்பார். மனித குணத்தின் முழுமையடையாத குறை குணங்களால் வன்முறை நடந்தேறிவிடுகிறது என்கிற உண்மையை அவர் உணராமல் இல்லை. அவர் வெறும் கனவுலக சஞ்சாரியல்ல- அவரை pratcitical idealist எனக் கருத முடியும். ’கடவுள் மனிதர்கள்’ என்பாரிடமும் குறைகள் இருக்கும், தவறுகள் இருக்கும். ஆனால் அவர்கள் அதை உணர்ந்தவராக அறிந்தவராக இருக்கின்றனர். சரி செய்ய முயற்சிப்பவராக இருப்பர் என்பதில்தான் அவர்கள் உயர்வு இருக்கிறது எனக் கருதியவர் காந்தி. Gandhian ideal is to attain perfectibility
and not perfection என்கிறார் சின்ஹா.
நேரு சாத்வீகமான வழியில் சோசலிசத்தை அடையமுடியாவிட்டால் வேறுவழிகளில் சாத்தியம் என்றால் ஏற்கத்தான்வேண்டும் என சொல்லிவந்தபோது காந்தி தனது எதிர்வினையை தந்தார். வழிமுறைகள் குறித்த வேறுபாடுகள் எங்கள் மத்தியில் இருக்கிறது
என்றார். வன்முறை வழியில் விடுதலை எனில் அது உண்மையானதல்ல என்றார் காந்தி. மனித நடத்தையைவிட புத்திக்கு நேரு முக்கியத்துவம் தர விரும்பினார். காந்தி அவ்வாறு செய்யவில்லை. புத்திக்கு அடுத்த நிலையையே அவர் தந்தார். அரசு என்பது திரட்டப்பட்ட வன்முறை வடிவக் கருவி என காந்தி கருதினார். அவரது இலட்சிய அகிம்சையை அரசு எனும் கருவி மேற்கொள்ளாது எனவும் கவலைப்பட்டார். அவர் பொன்னுலகு என கற்பனை செய்துகொள்ளாவிட்டாலும் தனிநபரின் வளர்ச்சிக்கு ஊறுவிளவிக்காத, கிராம சமுதாயங்களின் கூட்டமைப்பு பற்றி
பேசினார். அரசற்ற ஜனநாயகம்
stateless democracy குறித்த பார்வையை கொண்டிருந்தார். அவரது இலட்சிய அரசை கீழ்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்
1. முற்றுமுழுதலானது என்கிற கொள்கை ஏற்காமை
2. உடல் உழைப்பிற்கு மரியாதை
3. அனைவருக்குமான உயர் நன்மை
4. குறைந்த அளவிலான அரசின் செயல்பாடு
5. குற்றம் தண்டணை என்கிற அளவில் மட்டுமே ஒடுக்குமுறை
6. சிறைக்கூடங்கள் சீர்திருத்தக்கூடங்கள் என்கிற அணுகுமுறை
7. போலிசார் மக்களின் நண்பர்கள் என்கிற தன்மையை பலப்படுத்தல்
8. முடிந்தவரை வழக்குகளை பஞ்சாயத்து மட்டத்தில் தீர்த்தல்
9. சமூக நிதிக்கு உகந்த பொருளாதர நிலைமைகளை உருவாக்குதல்
10. தர்மகர்த்த கொள்கை சார்ந்த நடைமுறை செயல்கள்
11. வருவாய் முறைகளை மாற்றுதல்- மதுபானங்களிலிருந்து வருவாய் ஏற்காமை
12. உழைப்பவர்களுக்கான ஊதிய கூலி முறைமை
13. அடிப்படைக்கல்வி மேம்பாடு
14. உரிமைகளைவிட கடமை சார்ந்த சமூகம் கட்டுதல்
போன்றவை சில அம்சங்கள்
கார்ல் மார்க்ச் (1818-1883) குறித்து மிகச் சுருக்கமான குறிப்புகளை சொல்லி சின்ஹா காந்தி
மார்க்ஸ் ஒப்பீட்டை செய்கிறார்.
மார்க்ஸ் பல்கலை படிப்பிற்கு பின்னர் பத்திரிகை துறைக்கு நுழைந்தவர். அன்றுள்ள ஜெர்மன் சூழலில் அவரது பத்திரிக்கை எழுத்துக்கள் தீவிரப்பட்டதாக பார்க்கப்பட்டது, எனவே
வெளியேறி தனது 25 ஆம் வயதில் பாரிஸ் செல்கிறார். பாரிசில் புருதான் போன்ற பிரஞ்சு சோசலிச செல்வாக்கில் இருக்கிறார். பின்னர் அவருடன் வேறுபடுகிறார். எங்கெல்சின் தோழமை கிடைக்கிறது. பிரஸ்ஸல்சில் தங்குகிறார். 1848ல் இருவரின் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகிறது. தொடர்ந்த வாழ்க்கைப்போராட்டத்திற்குப் பின்னர் லண்டன் வந்து வாழ்நாள் முழுதும் தங்குகிறார். அமெரிக்க பத்திரிகைகளுக்கு ஆரம்பத்தில் எழுதிவந்தார். அவரின் மூலதனம் முதல் வால்யூம் 1867ல் வெளியாகிறது. அவர் 1883ல் மறைகிறார். அவரது அடுத்த
வால்யூம்கள்
1885, 1895ல் வெளியாகின்றன.
மார்க்ஸ் இயக்கவியல் பார்வையை
ஹெகலிடம் கற்று அதை நேர்படுத்திக்கொண்டார். பெரும் உழைப்பாலும் மேம்பட்ட அறிவுத்திறனாலும் பலநாடுகளின்
நிலைமைகள் குறித்து கற்றறிந்தார். ஹெகல், மார்க்ஸ் இருவருமே மனித வாழ்க்கையின் முன்னெற்றத்தை கட்டம் கட்டமாக பார்த்தனர் என்கிறார் சின்ஹா.. மார்க்ஸ் ஒன்றை மறுத்து அதிலிருந்து எழும் அடுத்த உயர்நிலையாக சமூக வரலாற்றைப் பார்த்தார். ஹெகலின் அந்நியமாதலையும் மார்க்ஸ் ஏற்றார். முதலாளித்துவ சமூகம் குறித்த தீவிர ஆய்வும் அதை வீழ்த்தி
எழும் சோசலிச சமூகம் கட்டமைக்கும் அனைவருக்குமான பெரும் நன்மைகள் பற்றிய உரையாடலை சின்ஹா போன்றவர்கள் பொருளாதார தீர்மானகரவாதம் என குறிப்பிடுகின்றனர்.
Critique of
political economy ல் மார்க்சின் கோட்பாடு சொல்லப்படுகிறது. உற்பத்திஉறவுகள் மனிதர்களின் மிகமுக்கிய பரஸ்பர உறவாகிறது. சமூக கட்டத்தின் அடிப்படையாக இந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன. அதன் மேல்கட்டுமானமாகத்தான் அரசியல், சட்டம் போன்ற சமூக உணர்வுகளின் தொடர்புகள் பிரதிபலிக்கின்றன. இருப்புதான் உணர்வை தீர்மானிக்கிறது. உணர்வு சமூக இருப்பை தீர்மானிக்கவில்லை. நிலபிரபுத்துவ சமுதாய உறவுகளிலிருந்து மாறிவந்த முதலாளித்துவ சமுதாயமும் உற்பத்தி சார்ந்த சமூக நடவடிக்கைகளில் பகைமை முரண்பாடுகளை கொண்டிருக்கிறது. அச்சமூகத்தில் எழுந்து வரும் உற்பத்தி சக்திகள் அதன் தீர்விற்குரிய பொருளாதாரம் உருவாக்கும் காரணிகளில்ஒன்றாகவும் இருக்கிறது. இது வர்க்கப்போராட்டத்திற்கு இட்டு செல்கிறது.
அடிப்படையில் மார்க்சிய பொருளாதார நிர்ணயவாதம் சமுகத்தை அடிப்படையாக கொள்கிறது- தனிநபரை அல்ல. எனவே அதன் தீர்மானகர வாதம் சமுகத்தில் தங்கியிருக்கிறது. ( It is the
social situation that dicatates a given course of action... The concept of
class has been visualised by Marx from the productive forces working in a
productive unit and serves as the basic foundation of social system- Sinha)
முதலாளித்துவ உற்பத்திமுறையில் ஊதியம் பிழைத்துவாழும் நிலையில் வைக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்திற்கு போட்டியின் காரணமாக உழைப்பாளர் சந்தையில் கிடைக்கின்றனர். இந்த
iron law of wages மூலம் பெரும் சுரண்டலுக்கு உழைப்பாளர் உள்ளாக்கப்படுகின்ரனர். சுரண்டலால் உபரி மதிப்பு கிடைக்கிறது. உபரிமதிப்பை அதிகரிக்க முதலாளிகள் நடவடிக்கைகள் எடுப்பர். முரண்பாடு எதிர்வினையாக தொழிலாளிவர்க்க உணர்வை அதற்கான அமைப்புவடிவங்களைலை உருவாக்குகிறது. பாட்டாளிகளின் பலம் அதிகரிக்க முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டப்படும். உற்பத்தி சாதனங்கள் தொழிலாளர்கைக்கு மாறும். அதை அவர்கள் சோசலிச முறைகளில் நிர்வகித்து அனைவருக்குமான நல்வழிகளை உருவாக்குவர்.
ஒவ்வொரு புரட்சிகரப்போரட்டமும் அதுகாறும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு வர்க்கத்திற்கு எதிராகவே நெறியாண்மை செய்யப்படுகிறது. கம்யூனிஸ்ட் உணர்வு பேரளவான வீதத்தில் உருவாவதற்கும், இந்த லட்சியத்தின் வெற்றி சாதனைக்கும் ஒருங்கே மனிதர்கள் பேரளவான வீதத்தில் மாறுதல் அடைவது அவசியம். இந்த மாறுதல் ஒரு புரட்சியில் மட்டுமே நடைபெறமுடியும். ..புரட்சியில் காலகாலமான குப்பைகளைக் களைந்தெறிவதில் வெற்றிகண்டு சமுதாயத்தை புதிதாக நிறுவுவதற்கு தகுதி வாய்ந்ததாக முடியும்
முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு தொழிலாளர் ஆட்சிநிர்வாகம் என்பதை ஒருவகை தர்மகர்த்த முறை என வகைப்படுத்துகிறார் சின்ஹா. ( Class conflict inevitable and
workers overthrow capitalists together with the govt which they control,
forming thier own govt to serve as their trustee)
பாட்டாளிவர்க்க அரசாங்கம் செய்யவேண்டிய சில நடவடிக்கைகளை மார்க்ஸ் சொல்கிறார்
1. வாரிசு சொத்துரிமை ஒழிக்கப்படும்
2. நிலவுடைமை இருக்காது. வாடகைமுறையில் பயன்படுத்தவழியிருக்கும்
3.முற்போக்கான வரிவிதிப்பு
4. தேசிய வங்கி முறையில் கடன்கள்
4.போக்குவரது, வர்த்தக முறைகள் நாட்டுடைமை
5.கட்டாய உழைப்பு
6.இலவச கல்வி- பொதுப்பள்ளி, ,. கல்வியை பொருள் உற்பத்தியுடன் இணைத்தல்
7.கிராம நகர நம்பிக்கையிழப்பு பகைமைகளைஅகற்றல்
8.ஆலை உற்பத்திகருவிகள் விரிவாக்கம்- தரிசு நிஆல் மேம்பாடு
9.உழைப்பு அனைவரின் கடமை
10.விவசாயத்தை தொழில் துறையுடன் இணைத்தல்
11. குழந்தை உழைப்பு ஒழிப்பு
பொதுப்பட சொத்துடைமையை ஒழிபதல்ல, முத்லாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான ப்கைஅமையை அடிப்படையாகக் கொண்டதாகும்.மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி.
கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது த்ழொழிலாளியின் வாழ்வை விரிவுபெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும். சமுதாயத்தின் உற்பத்திப் பொருட்களை சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை. இப்படி சுவீகரிபதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப்படுதுகிறனாகும் வாய்ப்பைத்தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது என மார்க்ஸ் விளக்கி செல்கிறார்.
மார்க்சிய கோட்பாடுகளை ஆய்வு செய்தால்
வழிமுறைகள் குறித்த முக்கியத்துவம் ஏதும் இராது என்கிற முடிவிற்கு சின்ஹா வருகிறார். இறுதி இலக்கு முக்கியத்துவம் பெறும். முதலாளித்துவ சக்திகள் ஒழிக்கப்படவேண்டும்.. தொழிலாளர் அரசு அதே நேரத்தில் மையக் கட்டுப்பாட்டுடன் ஏற்படும். மார்க்சை நாம் சமூகவியலாளர் என சொல்லவேண்டும். என்கிறார் சின்ஹா. ஆனால்
பின்வரும் எங்கெல்சின் விளக்கத்தை சின்ஹா பரீசீலிக்கவில்ல்லை போல் தெரிகிறது.
”கேள்வி 16 தனியார் சொத்துடைமை ஒழிப்பை சமாதான முறைகளில் ஏற்பாடு செய்ய முடியுமா? நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்க காரியம். சதிதிட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமல்ல, கேடு விளைவிப்பவையுங்கூட என்பதைக் கம்யூனிஸ்ட்கள் நன்கு அறிவார்கள். புரட்சிகள் முன் கருதலுடனோ தன்னிச்சையாகவோ செய்யப்படுவதில்லை என்பதையும், அவை எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் முழு வர்க்கங்களின் சித்தம் மற்றும் தலைமையில் இருந்து அறவே சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றிமையாத விளைவே என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள் எங்கெல்ஸ் ).”
மார்க்ஸ் காந்தி ஒப்பீட்டில் அவரவர் அணுகுமுறையில், வர்க்க முரண்பாடு, வர்க்க உணர்வு,முதலாளித்துவ ஒழிப்பு, சோசலிசம், தர்மகர்த்தாமுறைக்கான வழிகளை பேசினர். சோசலிசம் உருவாக்கத்தில் வர்க்கமோதல், வழிமுறைகளுக்கான முக்கியத்துவம், மய்யம்நீக்கிய அதிகாரமுறை என்பதில் அடிப்படையான வேறுபாடுகள் இருவர் இடையேயும் பார்க்கமுடிகிறது. இசம் என்கிற வகையில் சோசலிசத்திற்கான பல்வேறு விளக்கங்களும் வந்துள்ளன. வன்முறை தவிர்க்கமுடியாத வழி என்பதை காந்தி ஏற்கவில்லை. காந்தி
Man is the measure of reason என்பதில் பாயர்பாக் அருகில்
வருகிறார். வர்க்கப்போராட்ட முறையில் வர்க்கமற்ற சமூகம் என்பதுடன் மார்க்சிய இயக்கவியல் நின்றுபோவதாக சின்ஹா கருதுகிறார் Gandhian dialectic, which is quite distinct
from that of marx describes a process resulting from the application of a
technique of action to any situation of human conflict, a process essentially
creative and inherently constructive என்பது சின்ஹாவின் மதிப்பிடலாக இருக்கிறது.
கார்ல் பாப்பர் மார்க்சிய கொள்கையை
வரலாற்றுபூர்வ கொள்கை என்றும் எதிர்கால பொருளாதாரம், அதிகாரம் ,அரசியல் வளர்ச்சி எவ்வாறு என கணிக்கும் வரலாற்றுபூர்வ வழியிலான கொள்கை என்றார். மார்க்சிடம் இருந்ததுபோலவே காந்தியிடமும் நம்பிக்கைகளை செயல் மூலம் சோதிக்கவேண்டும் என்ற உறுதியிருந்தது. ஆனால் காந்தி முன்முடிவுகளையும், இப்படித்தான் மோதல் போகும் என்பதையும் வரையறுத்து வைக்காமல் இருந்தார். அவரது சத்யாக்கிரகம் என்பது தெரியாத தீர்வை நோக்கிய நகர்தலாக இருந்தது. மனிதன் பகுத்தறிந்து நடந்துகொள்வான் என்கிற நம்பிக்கையின்பாற்பட்ட செயல் வடிவமாக இருந்தது என்கிற சுருக்கத்தை சின்ஹா தெரிவிக்கிறார்.
காந்திக்கு சமயம் மறுத்த அரசியல் அல்லது சோசலிசம் என்பது இல்லை. (Interms of religion there is no
duality in socialism.. In the unity of my conception, there is perfect unity in
plurality of designs. Socalist begins with the first convert).. ஆனால் மார்க்சிய சோசலிசத்தில் இறைவனுக்கு இடமில்லை.
Never covet
any body's position என்கிற ஈசோ உபநிடத வாக்கியத்தில் சோசலிச வேரை காந்தி கண்டதாக சின்ஹா சொல்கிறார். வன்முறை வழியாக பாட்டாளிகள் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெறுமானால் அதைவிட கூடுதல் வன்முறையால் அதை அவர்கள் இழப்பர் எனக் காந்தி கருதினார். எனது அரசு மக்களின் விருப்ப உறுதியை நிறைவேற்றவேண்டுமே தவிர அவர்களை கட்டாயப்படுத்தி கட்டளையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது என்றார்.
மேற்கித்திய சோசலிஸ்ட்கள் அரசாங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொணர்ந்தால்தான் சமத்துவத்தை கொணரமுடியும் என்கிறார்கள் என்கிற சந்தேகப்பார்வையை அவர் முன்வைத்தார். ( They say they can do
nothing to bring out economic equality today. When they get control over the
state, they will enforce equality)
OUr socialism
and communism should be based on non violence and harmonious cooperation of labour
and capital, landlord and tenant என்றார் காந்தி. ஆனால் மார்க்சிய மொழி இதை ஏற்பதில்லை. வேறுபட்ட வர்க்க நலன்கள் நிலவுவதால் இணக்க ஒத்துழைப்பு ஏற்படாது, மோதல் புரட்சி மூலமே பெரும்பான்மை வர்க்கமான பாட்டாளிகளின் ஆட்சி
உருவாகி வர்க்கமற்ற இணக்க சமுதாயத்தை மலர செய்யும். வன்முறையா சமாதான வழியா என்பது எதிரி ஏந்தும் ஆயுதங்களைப்
பொறுத்தது என்கிற பொதுப் புரிதலை நாம் அங்கு அறியமுடியும்.
காந்தியின் இலட்சிய வன்முறையற்ற அரசுக்குரிய திட்டத்தில் ( Constructive Programme)
18 அம்சங்கள் காணப்படுகிறது. மத ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, காதி, கிராமத்தொழில்கள், கிராம சுகாதாரம், அடிப்படைக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி, மாநில மொழிகளை வளர்த்தல், தேசிய மொழி, பொருளாதார சம்த்துவம், விவசாயிகள் முன்னேற்றம், தொழிலாளர், ஆதிவாசிகள், தொழுநோயாளிகள், மாஇ ணவர் மீதான
கவனம் ஆகியவை திட்ட அடிப்படைகள்
மார்க்ஸ் ,
காந்தி இருவர் திட்டத்திலும் செயல்களிலும் ‘பங்கேற்போர் தியாகம்’ வலிந்து சொல்லப்படுகிறது. வன்முறையில் தியாகம் தேவைப்படலாம் என மார்க்சியம் பேசினால், காந்தி எதிராளிகளின் மனமாற்றத்திற்கு போராளிகளின் சுயவதைகளை self suffering பற்றி வலியுறுத்துகிறார். மார்க்சியம் காந்தியம் இரண்டிலும் இலக்கு அடைவதற்கான உறுதிப்பாட்டிற்கு முக்கியத்துவம் இருப்பதை நம்மால் உணரமுடியும்.
துணைநூல்கள்:
Mahatma and
Marx R P sinha
மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்தொகை 1
This red colour is straining my 70 year old eyes.please make it normal so that I can read it easily.
ReplyDelete