https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 28, 2022

புத்தக அறிமுக உரை


       காந்தி கல்வி நிலையத்தில்   (Gandhi Study Centre) ஏப்ரல் 27, 2022  ராமச்சந்திர குஹாவின்   ஜனவரி 2022ல்  வெளியான Rebels Against Raj புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியது

https://www.youtube.com/watch?v=jRRFz0yKc-A&t=54s

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpattabi.raman.5648%2Fposts%2F5956618417686914&show_text=true&width=500" width="500" height="506" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> 

Tuesday, April 26, 2022

70 ஆண்டுகளுக்கு முன்னர்

 70 ஆண்டுகளுக்கு முன்னர் ... 

விடுதலைக்குப் பின்னர் உட்கட்சி விவாதங்களின் அடிப்படையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தனது  Draft Programme of the CPI  என்பதை 1951ல் வெளியிட்டது.  16 பக்கங்களில் அச்சடிக்கப்பட்ட  ஆங்கில பிரசுரம் ஏப்ரல் 1951ல் இரண்டு அணாவிற்கு பம்பாயிலிருந்து வெளியானது. மே, ஜூன் என அப்பிரசுரம் அடுத்தடுத்த பதிப்புகளையும் கண்டது. பிபின் சந்திரா போன்ற வரலாற்றாய்வாளர்கள் இந்த பிரசுரத்தை மிக முக்கிய விவாத பொருளாக தான் எடிட் செய்த  The Indian Left Critical Appraisals என்ற பெரிய புத்தகத்தில் செய்திருப்பார். அவர் எழுதிய அந்த அத்தியாயம்  A strategy In crisis- The CPI Debate 1955-56  என்பதாகும். ஆர்வமுள்ளவர் தேடி படித்துவிடமுடியும். அந்த டிபேட்டிற்கு மேற்கண்ட 1951யை அவர் ஆதாரமாக்கி பேசியிருப்பார்.


மேற்கண்ட நகல் திட்டம் இந்தியாவில் வந்தபோதே - பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது திட்டத்தை  Independent, Democratic and Prosperous Pakistan- Programme of the Communist Party of Pakistan  என 1950ல் கொண்டு வந்தனர். 18 பக்கங்களைக்கொண்டு அதன் அச்சு வெளியீடு வந்தது. அதுவும் 2 அணா என வைக்கப்பட்டிருந்தது.


இரண்டு திட்டங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பிடியில்தான் இந்நாடுகள் என்கிற முடிவிற்கே வந்தன. சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பின. அப்படி தாங்கள் உணர்வது ஏன் என்பதற்கான ஆதாரங்களை நியாயங்களை இரு திட்டங்களும் எடுத்து வைத்தன. ஒன்று அன்றிருந்த காங்கிரஸ் அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. மற்றது முஸ்லீம்லீக் மீதான கேள்விகளை அவநம்பிக்கையை வெளிப்படுத்தியது. இரு திட்டங்களும் புதிய அரசாங்கங்கள் பிரிட்டிஷ் தொடர்புகளை அறுத்துக்கொள்ளவேண்டும் என்றன. அதாவது  Total freedom from Imperialism.

தொழிலாளர், விவசாயி, மத்தியதர வர்க்கம் வாழ்க்கைத்தர உயர்விற்கான திட்டமிடுதல் என்பதை இரு திட்டங்களும் வலியுறுத்தின. பாகிஸ்தான் கட்சி திட்டம் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், நவாப்கள் எதிர்த்து people`s democratic government of workers, peasants and middle classes- People's Democracy  என்றது. இதற்காக ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக முன்னணி கட்டவேண்டியதை பேசியது. சீனாவில் கம்யூனிஸ்ட்கள் பெற்ற வெற்றி கண் முன் நிற்கிறது என்று சொல்லி அத்திட்டம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தது


The Communist Party of Pakistan asks the people who are honest and want to see their country free should look at our actions and if they think that this is the party which is sincere, courageous, correct and brave enough to fight for the rights of the people and democracy than they should support us. They should become a member of the party and help the party morally and financially.


அதேபோல் மதநம்பிக்கை குறித்து பாக் கட்சி இவ்வாறு உறுதிமொழியை- கூடவே தன் சமூகம் பற்றிய இயல்பையும் சொல்லியது. சமூகத்தில் நிலவும் கருத்தமைவுகள் குறித்த புரிதல் பற்றி அது பேசியது

The Communist Party of Pakistan accepts and follows the principle of freedom of conscious, faith, religion and all the practices of faith according to every culture and tradition.

The Communist Party of Pakistan not only accepts the rights of conscience but also fights against any kind of aggression, suppression, hate or any activity against the religious freedom of any individual, group or minority. The Communist Party of Pakistan gives assurance to all minorities to struggle with them for their equal rights and conscience. 

At the same time, the Communist Party of Pakistan tries to understand the nature and history of the ideas and concepts about faith which are prevailing in our society.


உருதுவில் எழுதப்பட்ட திட்டம் தோழர் அலி ஜாபர் சைதியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று சோவியத் பிராவ்தாவில் அக்டோபர் 27 1950ல் வெளியாகியிருக்கிறது. அந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் அச்சாக்கத்திலிருந்து மேலே  சொல்லப்பட்டவை எடுக்கப்பட்டுள்ளன.


இந்திய கட்சியின் நகல் அனைவருக்கும் வாக்குரிமை என்பது வந்தாலும் இந்த தேர்தல்கள் கண் துடைப்பே என வரையறுத்தது. It is deception to say under the new constitution the masses or the Govt elected by them can work their way to freedom and hapiness என்கிற பார்வையையும் வைத்தது.


திட்டம் பல கடமைகளை வரையறுத்துக்கொண்டது


தேசிய இனங்கள் எனும் பிரச்னையில் கீழ்கண்ட புரிதலை வெளிப்படுத்தியது. 

The Right of all nationalities to self determination. The Republic of India will unite the peoples of various nationalities of India not by force but by their voluntary consent to the creation of a common state


மொழிப்பிரச்னையை இவ்வாறு முன்வைத்தது

 Right of People to receive instruction in their own national language in schools; use of the national language in all public and state institutions. The Use of Hindi as an all India State language will not be obligatory.


 மதசார்பின்மை என்பதற்கு இவ்வாறு தனது கடமையை திட்டம் வைத்துக்கொண்டது

 separation of the State from all religious institutions. the State to be a secular State.


 கல்வி பொறுத்தவரை 14 வயதுவரை அனைவருக்கும் இலவச கல்வி என சொல்லப்பட்டது. மருத்துவ சேவை என்பதில் நாடு முழுதும்  people's health service  என முன்மொழியப்பட்டுள்ளது.


அன்று நாட்டின் வெகுஜனங்களின் பொருளாதார நிலைகளை கணக்கில்கொண்டு சோசலிச மாற்றங்கள்-  not demanding  establishment of socialism or socialistic transformations  என முடிவிற்கு திட்டம் வந்தது. மக்கள் ஜனநாயக அரசாங்கம் உருவாக்க திட்டம் என்றது. ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக முன்னணிக்கு தொழிலாளர்- விவசாயி- மத்தியதர வர்க்கம்- அறிவுத்துறையினர்- தேசிய முதலாளிகளிடம் திட்டம் வேண்டுகோள் விட்டது.

இந்த திட்டத்தை guided by teachings of மார்க்ஸ்- எங்கெல்ஸ்- லெனின் - ஸ்டாலின்

அமுல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை திட்டம் வெளிப்படுத்தியது. சீனாவின் வெற்றி கண் முன்னே. இந்தியாவும் மக்கள் ஜனநாயக திட்டப்படி உலக அரங்கில் அமைதி  வளம் மகிழ்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையை திட்டம் பறைசாற்றியது.


#கம்யூனிஸ்ட்கட்சி #CPI


Monday, April 25, 2022

ராஜாஜியை வாசிக்கலாம்

 ராஜாஜியை வாசிக்கலாம்..வரலாற்று மாணவர் என்ற வகையில் ஒருவருக்கு எப்போதும் வாசிப்பு நேர்மை தேவைப்படும். தனக்கு உவப்பான விஷயங்களை கொண்டாடுவது- உவப்பில்லாத அம்சத்தை கண்ணை மூடிக்கொண்டு காணாததுபோல் நகர்ந்துவிடுவது அல்லது அதை மறைத்துவிடுவது என்பது வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர் செய்யத்தகாத செயலாகும். வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் குறித்த பல பக்கங்களை பார்க்கும்போதுதான் சற்று balanced  மதிப்பீட்டிற்கு ஒருவரால் விருப்பு- வெறுப்பை குறைத்துக்கொண்டு வரமுடியும். எழுதுவது என்பது வெறும் Hagiography புனிதர்களின் திருச்செயல்களாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்பது முக்கியமானது. அதேபோல அவர்களின் தவறுகள் குறித்த வெறும் குற்றப்பத்திரிகைகளாகவும் அவை சுருக்கப்படக்கூடாது. critical appraisal- appreciation  என்கிற பழக்கம் பொதுப்பழக்கமானால் சமூகம் நின்று நிதானமாக செயல்பட அப்போக்கு உதவிசெய்யும். ராஜாஜி குறித்த வாசிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும். 


ராஜாஜி குறித்து அவரது பேரன் ராஜ்மோகன்காந்தி உடபட பலர் எழுதியுள்ளனர். ஆயினும் காந்தி, நேரு, அம்பேத்கர்,பெரியார் போல ராஜாஜியின் அரசியல் பொருளாதார சமூக சிந்தனைகள் ஏன் தொகுக்கப்பட்டு விவாத வெளியை போதுமான அளவு எடுத்துக்கொள்ளவில்லை என்கிற கேள்வி கூட ஏன் எழவில்லை? சிந்தித்தால் கிடைக்கும் பதில் அவருக்கான தனித்த தொண்டர்படை- பக்திகுழாம்- அமைப்பு இந்தியாவில், தமிழகத்தில் இல்லை என்பதாக அமையலாம். 


ராஜாஜி என்றால் மூதறிஞர் என்ற அடைமொழி- அரசியல் வித்தகர் என்ற பார்வை இருக்கலாம். அவரின் இராமாயணம்- மகாபாரதம் ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருக்கலாம். அவர் அறிவை- சிந்தனைப்போக்கை- அரசியலை எப்படி எக்கருத்துக்களால் புரிந்துகொள்ளலாம் என்கிற விவாதம் இந்திய தமிழ் சூழலில் இல்லாதது போலவே இருக்கிறது. 


தமிழகத்தில் ராஜாஜி என்றால் இந்தி திணிப்பை செய்து எதிர்ப்பை சம்பாதித்தவர்- குலக்கல்வி திட்டம் கொணர்ந்து கடும் விமர்சனங்களை பெற்றவர், சத்தியமூர்த்தி- காமராஜர்க்கு எதிராக கோஷ்டி கட்டியவர் என்பதே பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும். பெரியார் அவரை வாழ்நாள் முழுதும் எதிர்த்தாலும்  முக்கிய தருணங்களில் அவரது ஆலோசனையை பெற்றார்அண்ணாவின் திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணியாக இருந்தவர் என்பது கூட பெரும்பேசுபொருளாக இருந்திருக்காது. 


தேசிய அளவில் காந்தியின் சீடர்- சம்பந்தி- அவரின் மனசாட்சி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகி, 1942 போராட்டத்திற்கு எதிராக இருந்தவர், பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்தவர்,  கவர்னர் ஜெனரல், நேருவை- காங்கிரசை எதிர்த்து படுபிற்போக்கான சுதந்திரா எனும் பணக்காரர்களின் கட்சியை துவங்கியவர் என்கிற செய்திகளில் அவர் நிறைந்துவிடுவார்.


ராஜாஜி விஞ்ஞானத்தை நேசித்தவர்- சிந்தித்தவர்- எழுதியவர் என்பது கூட இங்கு செய்தியாகவே இருக்கும். அவர் அறநூல்கள் குறித்து பொழிப்புரை தந்தவர். திருக்குறள், பஜகோவிந்தம் ,கீதை, உபநிடதங்களின் சாரம் என்பவற்றையும் எழுதியவர். இந்து வாழ்க்கைமுறை எனும் புத்தகம் எழுதியவர். கம்பனின் இராமாயணம் குறித்து  வானொலியில் ஆங்கில உரை தந்தவர்.


புனே கம்யூனல் அவார்ட் உடன்பாட்டின்போது அம்பேத்கரும் ராஜாஜியும்தான் பேனாவை மாற்றிக்கொண்டார்கள் . அம்பேத்கர் எழுதிய What  Congress and Gandhi  have Done to the Untouchables என்பது பெரிதாக பேசப்பட்டுள்ளதுபோல ராஜாஜி அதற்கு பதிலாக  Ambdkar Refuted என சிறு வெளியீட்டை எழுதியுள்ளார் (சந்தானம் அவர்களும் ஒன்று எழுதியுள்ளார்) என்பது கூட பொதுவெளியில் சேர்ந்து சொல்லப்படாத அறிவுச்சூழல் இருப்பதைப் பார்க்கிறோம்.

சத்யமேவ ஜெயதே என்கிற ஆங்கில தொகுப்பு - இரண்டு 1956-61வரையிலான அவரது சுயராஜ்ய இதழ் கட்டுரைகளைக் கொண்ட விரிவான 1200 பக்க அளவிலானவை. Dear Reader 1961-1972 காலத்தில் அவர் எழுதியவை- 350 பக்கங்களை கொண்டிருக்கும். Rajaji Reader 250 பக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் அவரின் அரசியல் பொருளாதார தத்துவ சிந்தனைகள் இருப்பதைக் காணமுடியும். தமிழில் சிறு வெளியீடுகளாக அவரின் மணிவாசகம், ஆத்ம சிந்தனை, ராஜாஜி கட்டுரைகள், அச்சமில்லை, கெமிஸ்ட்ரி குறித்து திண்ணை ரசாயனம், தாவரங்களின் இல்லறம் போன்றவை இருப்பதைக் காணமுடியும்.


ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட நெறிகள், அரசியல் நடைமுறைகள், அரசு அதன் தன்மை, தேசிய பொருளாதாரம்- திட்டமிடுதல் மற்றும் அதன் பிரச்னைகள், கைத்தொழில்- கூட்டுறவு- ஆலைத்தொழில், மீன்பிடித்தொழில் என பல்வேறு தொழில்கள் குறித்து, வெளிநாட்டு உறவுகள், வகுப்புவாதம் எனும் நோய், நிலப்பிரச்னை, மொழி பிரச்னை , கம்யூனிசம், காந்தியும் கம்யூனிசமும், கட்சிகளும் நன்கொடைகளும், கட்சிக்குள் சுதந்திரம் என்பதாவது,  சுதந்திரத்தின் சாரம், காந்தி வழியிலா காங்கிரஸ், சொத்தும் சுதந்திரமும், மய்யப்படுத்தல், யார் பிற்போக்காளர், நேருவின் மரபு, இந்திய தத்துவமும் நவீன உலகும், சமயம்- அறிவியல்- தத்துவம், பத்திரிகைகளின் பொறுப்பு, சைவம்- வைஷ்ணவம், தமிழ் எழுத்துக்கள் - கலைச்சொற்கள், தமிழ் இசை, உணவு போன்ற பல்வேறு அம்சங்களை அவர் விரிவாக விவாதித்திருக்கிறார். வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்ததென்ன என்கிற சிறு கட்டுரையைக்கூட அவர் எழுதியுள்ளார். Indian Communism  என்கிற சிறு வெளியீட்டில் அவர் இந்திய கம்யூனிஸ்ட்களுடன் கடும் விமர்சன உரையாடலை நடத்தியுள்ளார். லெனினை  மதுவிலக்கில் அவரது ஆணைகளை மேற்கோள் காட்டி உரையாடுகிறார்.


ராஜாஜி வாசிப்பு அவரின் 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை மட்டுமல்ல. அவை விடுதலை இந்தியாவின் கட்டுமான விவாதமும் கூட.


Monday, April 11, 2022

கிரன் மைத்ரா எழுதிய Marxism in India From Decline to Debacle

 கிரன் மைத்ரா எழுதிய  Marxism in India From Decline to Debacle  என்கிற புத்தகம் 2012ல் வந்த ஒன்று.  தலைப்பை பார்த்து இந்த மாதிரி எழுத்துக்கள் விமர்சனத்தை வாரி இறைப்பவை என்ற சந்தேகம் வரலாம். படித்தால் அப்படி சந்தேகம் கொள்வது தேவையற்றது என உணரவாய்ப்புண்டு. 


கிரன் மைத்ரா இந்திய வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் -  ICHR  சார்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில்(1971-81) இருந்தவர். இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் உருவான காலம் துவங்கி மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசாங்க வீழ்ச்சிவரையிலான  ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மேலான காலவோட்டத்தின் சுருக்கமான பதிவாக இந்த புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். சுருக்கமான என்று சொன்னால் கூட ஒரே புத்தகத்தில்  மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட  கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று விரிவை இப்புத்தகம் உள்ளடக்கமாக வைத்துக்கொண்டுள்ளது. அந்த அளவில் இந்திய மார்க்சியரும் ( இந்திய மார்க்சியம் குறித்து அறிய விருப்பமுள்ள மார்க்சியர் எங்கிருந்தாலும்), மார்க்சியர் அல்லாதவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் எனச் சொன்னால் அது மிகைப்படுத்த ஒன்றாக இருக்காது என்றே கருதுகிறேன்.

இந்த புத்தகம் இந்திய கம்யூனிச இயக்கம் தொடர்பான ஏராள ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. அந்த ஆவணங்கள் அந்த அந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் புரட்சியின் தாக்கம், இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் நுழைவு,  என் என் ராய் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள், இந்தியர் தங்களுக்கான மார்க்சிய கட்சியை ஏற்படுத்திகொள்தல், உலகப்போரும் மார்க்சியர்களும், இந்தியா விடுதலை தருணத்தில் மார்க்சியர், விடுதலைக்குப்பின்னர் மார்க்சியர் (கேரளா- மே வ ஆட்சி) போன்ற முக்கிய அத்தியாயங்கள் பேசப்பட்டுள்ளன.

இந்திய மார்க்சியர்களில் தலைமை பொறுப்புகளுக்கு வந்த தோழர்கள் குறித்த சில மதிப்பீடுகள்- அவர்கள் சோவியத் தலைமைக்கோ, பிரிட்டிஷ் கட்சி தலைமைக்கோ-  even 1948 ல் ஏற்பட்ட அதீதத்திற்கு யுகோஸ்லோவியா தலைமைக்கோ yield  ஆனார்கள் என்பதை இப்புத்தகத்தை படிப்பவர்கள் உணரமுடியும். 1950ல் சீனப்பாதை  என்கிற பார்வையும் வந்தது. இவை தனிநபர் சார்ந்ததல்ல - கமிட்டியில் கூட்டு முடிவுகள் என்றாலும் அவர்கள் பொறுப்பில் இருந்த காலம் என்கிற அடையாளத்தால் விமர்சனங்களுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும்  தலைமை உள்ளானதை பார்க்கலாம்.

அதேபோல் விடுதலை காலம் நெருங்கும் ஆண்டுகளில் (1942லேயே) 1945-47ல் சுயநிர்ணய உரிமை- அதையொட்டிய அரசியல் நிர்ணயசபை அமைத்தல் ஆகியவற்றில் முதலில் பாகிஸ்தான் ஏற்பு- பின்னர்   17 தேசிய இனங்களுக்கும் தனித்தனியான இறையாண்மை- அவற்றிற்கு தனித்தனியான  constitutional Assembly- India a confederation of Unions  அதாவது India as a confederation of voluntary unions of sovereign national states என்கிற கருத்தாக்கம் போன்ற நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன. பெதிக் கேபினட் குழு வந்தபோது பத்திரிகையாளராக உடன் வந்த ஆர் பி தத் உடன் நடந்த  interactions  உருவாக்கிய ’ஒரே யூனியன்- ஓர் அரசியல் அமைப்பு சபை’ நிலைப்பாடு என பல கருத்து மாற்றங்களுடன் பயணித்த வரலாறு இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

எந்த வரலாற்று ஆசிரியரும் இட்டி நிரப்பப்படவேண்டிய இடைவெளிகளே இல்லாமல்- தாவிப்போதல் இல்லாமல் எழுதுவதில்லை. இந்த ஆசிரியரும் இதில் விதி விலக்காக இல்லை. மார்க்சியர் குறித்த விமர்சன நிலைப்பாடுகளுக்கு ஆவணங்களை முன்வைக்கும் கிரன் மைத்ரா , காந்தி குறித்து ஆங்காங்கே தெளித்து போகும் விமர்சனங்களுக்கு எவ்வித ஆவணக் காட்டலையும் செய்யவேண்டிய பொறுப்பை சுமந்துகொள்ளாமல் போவதைக் காண்கிறேன். அது அவருடைய ஒபீனியன் என்று கடக்கவேண்டியுள்ளது.

 300 பக்க அளவே உள்ள ரூ 295-தற்போது அமேசான் வழி 200க்கு கிடைக்கும் இந்த புத்தகத்தை இந்திய மார்க்சியர்கள் படிப்பதும், அதன் மீதான எதிர்வினைகளை வரலாற்று சாய்வு இல்லாமல்- உண்மையை அறிதல் என்கிற வகையில் வைத்தலும் அவசியமாகவே படுகிறது.

11-4-2022

Monday, April 4, 2022

A Paper on OP Gupta on the occasion of His Centenary

 

தோழர் குப்தாவிடம் கற்றதும் பெற்றதும்

-        ஆர். பட்டாபிராமன்

தோழர் குப்தாவின் பிறந்த நூற்றாண்டு நிறைவடையப்போகிறது. NFTE தமிழ் மாநில சங்கம் அதை விழாவாக கொண்டாடுகிறது.  பங்கேற்க வருமாறு மாநில தலைவர் தோழர் முரளி, செயலர் நடராஜன் அழைத்தனர். என் இயலாமையால் அவ்விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. என் நல்வாழ்த்துகள்.

டெலிகாம் தொழிற்சங்க இயக்கத்தில் அதன் தந்தை ஸ்தானத்திற்கு தோழர் குப்தாவால் உயர முடிந்தது. ‘தீர்வின் நாயகர் என தொழிலாளர் அவரை புரிந்து ஏற்றிருந்தனர். தனது பொதுவாழ்வு துவங்கியமுதல் 20 ஆண்டுகளில் (1946-66), தனது பணிகள் குறித்து நின்று நிதானித்து ஓம்பிரகாஷ் குப்தா அசைபோட்டார். அது  Some Reflections  என்று வெளியானது. அதை தமிழில் தோழர் வீரபாண்டியன் நினைவலைகள் என மொழிபெயர்த்தார்.

என்னைப்போன்ற அன்றைய ஆர்வம் கொப்பளித்த இளைஞர்கள் அந்த வெளியீட்டை சரியாக உள்வாங்கிக்கொள்ளவேண்டும் எனக் கருதி அதை டெல்லியிலிருந்து தோழர் ஜெகன்தான் எடுத்துவந்து  தந்தார்.  அதில் தோழர் குப்தா முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி பதிலைக் காண முயற்சித்தார். அவர் 1946ல் தொழிற்சங்கத்தில் முழுநேர கவனக் குவிப்பை செய்யத்துவங்கிய காலத்தில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தவர்கள் ஏன் தோற்றுப்போனார்கள்- ஓரளவு வெற்றியை தன்னால் ஏன் பெறமுடிந்தது? என்பதுதான் அவர் எழுப்பிய அக்கேள்வி.

முழு கட்டுரையும் படிக்க இணைப்பை சொடுக்கவும்

https://ia601509.us.archive.org/7/items/opg-centenary-2022/OPG%20centenary%202022.pdf

Saturday, April 2, 2022

மாநில பட்ஜெட்களும் மாடல் கதையாடல்களும்

 

                   மாநில பட்ஜெட்களும் மாடல் கதையாடல்களும்

இந்திய மாநிலங்கள் பல தங்கள் மாடல்- மாதிரிதான் ஆக உயர்ந்தது என்கிற உரையாடல்களை பெருக்கிவருகின்றன. அது இந்தியா முழுமைக்குமான ஒற்றை மாடல் என்கிற கதையாடலையும் முன்வைத்து வருகின்றன. குஜராத் மாடலா- கேரளா மாடலா விவாதம் முன்பு நடந்தது. தற்போது திராவிட மாடல் சற்று உரக்கப் பேசப்படுகிறது. இதைத்தவிர முன்பேயிருந்த சத்தமில்லாத ஒரிஸ்ஸா மாடலுடன் சற்று சப்தம் கூடிய மமதா மாடல், டெல்லியின் கெஜ்ரிவால் மாடல்களும் ஆங்காங்கே பேசப்படுகின்றன.இந்த மாடல்கள் போடும் பட்ஜெட்டுகளில் என்ன  Highlights  என்கிற ஆய்வும் ஆங்காங்கே நடக்காமல் இல்லை. அந்ததந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் வரலாறு காணா வளர்ச்சிக்கான சமூக நீதிக்கான வறுமையை ஒழிக்கும் ஒப்பிலா பட்ஜெட் என புகழ்ந்து கொள்வர். அணி கட்சிகளும் ஆமாம் என்பர். எதிர்கட்சிகள் உப்புசப்பில்லா பட்ஜெட்- ஏழைகளுக்கு மத்தியதர வர்க்கத்திற்கு ஏதுமில்லை என்பர். இவை  standard discourses.

 சரி- இனி இந்த மாடல்களில் சில 2022-23க்கு போட்ட பட்ஜெட்டின் சில அம்சங்களை இங்கு ஒப்பீட்டு காட்டலாம். தனிமாடல் என ஏதாவது தெரிகிறதா என அதை உன்னிப்பாக உற்றுநோக்குவோர் பார்த்துவிடுவர்.

இங்கு ஒப்பீட்டிற்கு குஜராத், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற சில மாநிலங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மொத்த செலவில் கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, சாலை- பாலங்கள், விவசாயம், போலீஸ்துறை என்ற ஆறு துறைகளுக்கு இந்த மாநிலங்கள் எவ்வளவு சதம் ஒதுக்கியுள்ளன எனப் பார்க்கலாம்.

குஜராத் இதை முறையே 14.1 சதம், 5.6 %, 3.3% ,4.3%,4.1 %, 3.1 % என ஒதுக்கியுள்ளதை காணலாம்.

கேரளா  14.8 %, 5.8%, 4%,  , 4.5%, 2.7 %

தமிழ்நாடு 13.4 %, 5.4%, 2.9%, 5.4%, 6.5%, 3%

மகாராஷ்ட்ரா 16.3%, 4.6%, 4.6%, 5.7 %, 6% , 5 %

மே.   16.8%, 6.9%, 8.8%, 2.1, 4.9% , 4 %

டெல்லி 23.5 %, 14.8%, ஊரக தெரியவில்லை , 3.8 %, காட்டவில்லை, போலீஸ் இல்லை

 கல்விக்கு டெல்லிதான் ஆக உயர்ந்த 23.5 % ஒதுக்கீட்டை தருகிறது. இந்த 6 மாநிலங்களில் தமிழ்நாடு குறைந்த அளவில் 13.4 % தருகிறது.

ஹெல்த் என்பதில் டெல்லிதான் ஆக உயர்ந்த 14.8 சதம் தருகிறது. மகாராஷ்ட்ரா குறைந்த 4.6 சதம் தருகிறது.

ஊரக வளர்ச்சிக்கு மே. 8.8 சதம் ஒதுக்கினால் தமிழ்நாடு 2.9 சதம்தான் ஒதுக்கியுள்ளது.

சாலை பாலம் என்பதில் மகாராஷ்ட்ரா 5.7 % ஒதுக்கினால், மே. 2.1 சதம் ஒதுக்கியுள்ளது.

விவசாயம் தமிழ்நாடு 6.5 சதம் ஒதுக்கினால் குஜராத் 4.1 சதம் ஒதுக்கியுள்ளது.

போலீஸ் மகாராஷ்ட்ரா 5 சதம் என்றால் கேரளா 2.7 சதம் ஒதுக்கியுள்ளது.

 

அடுத்து விவாதங்களில் வரக்கூடிய ஒன்று மாநில மொத்த உற்பத்தி  GSDP க்கு விவசாயம், உற்பத்தி துறை, சேவைத்துறை (  Agri, manufacturing, service industries)  தரக்கூடிய சதவீத பங்கு. இதை நாங்கள் மிகவும்  balance  ஆக வைத்துள்ளதாக உரிமை பாராட்டுவர். அந்த பங்கை இந்த 6 மாநிலங்களுக்கு பார்க்கலாம்.

குஜராத் முறையே இந்த மூன்று துறைகளின் பங்காக 20 %, 43%, 37 % எனக் காட்டுகிறது

கேரளா  12%, 23%, 66%

தமிழ்நாடு 13%, 33%, 54%

மகாராஷ்ட்ரா 16%, 24%, 60 %

மே.வ 23%, 20%, 57%

டெல்லி 2%, 14 %, 84 %

விவசாய உற்பத்தி என்பதில் மே.வ முதலிடத்திலும் டெல்லி மிகக்கடைக்கோடியிலும் இருக்கின்றன. தமிழ்நாடு,கேரளாவில் கூட உற்பத்தி 13சதம், 12 சதம் என்றே இருப்பதைக் காண்கிறோம்.

Manufacturing மூலம் குஜராத் இப்போதும் மிக அதிகம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். மகாராஷ்ட்ரா கூட அதற்கு இணையாக முடியவில்லை. குஜராத்திற்கு அடுத்து தமிழ்நாடு தன் பங்கிற்கு அதிகம் பெறுவதைக் காண்கிறோம்.

சேவைத்துறை உற்பத்தியில் டெல்லி 84 சத பங்கை பெற்றால் குஜராத் மிகக்குறைவான தன் உற்பத்தியாக  37 சதம் பெறுவதைக் காண்கிறோம்.

இந்த மூன்று துறைகளில் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தியில் மிக அதிகமான பங்களிப்பை குஜராத் பெறுகிறது. டெல்லி மிகக் குறைவாக பெருகிறது. அதிக பட்ச  balanceயை மே.வ, அடுத்து தமிழ்நாடு தருவதைக் காணலாம். இதில் உற்பத்தி துறையில் மே.வ பின்தங்கியிருந்தால், விவசாய பங்களிப்பில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதைக் காணலாம்.

அடுத்து இந்த மாநிலங்கள் வருவாய் காரணிகளாக மாநில ஜி எஸ் டி, நில வருவாய், வாகன வரி, எக்சைஸ், ஸ்டாம்ப்- ரிஜிஸ்ட்ரேஷன், விற்பனை வரி வாட் போன்ற சிலவற்றை காட்டுகின்றனர்.

மகாராஷ்ட்ராவில் இவை முறையே  1,07, 146 கோடி, 4000கோடி, 9500 கோடி, 19225 கோடி, 30000 கோடி, 40000 கோடியாக காட்டப்படுகின்றன.

குஜராத்தில் 52692 கோடி, 2470 கோடி, 4712 கோடி, 149 கோடி, 12895 கோடி, 31412 கோடியாகவும்

தமிழ்நாட்டில் 46196 கோடி, 328 கோடி, 6898 கோடி, 8134 கோடி, 14435 கோடி, 56406 கோடியாகவும்

கேரளாவில் 32388 கோடி, 376 கோடி, 3968 கோடி, 2801 கோடி , 4306 கோடி, 23263 கோடியாகவும்

மே.வங்கத்தில் 33153 கோடி, 3139 கோடி, 2826 கோடி, 16500 கோடி ,6872 கோடி ,7538 கோடி

டெல்லியில் 26000 கோடி, 3 கோடி , 2000கோடி, 9500கோடி, 4997 கோடி, 5200 கோடி என காட்டப்பட்டுள்ளன.

நில வருவாய் குறைவான மாநிலங்களாக டெல்லி, தமிழ்நாடு, கேரளா இருக்கின்றன.

மகாராஷ்ட்ரா ஜி எஸ் டி எவரும் நெருங்க முடியா உயரத்தில் இருப்பதைக் காணலாம்.

விற்பனைவரி  வாட் அதிகமுள்ள மாநிலமாக   தமிழ்நாடு இருக்கிறது. மகாராஷ்ட்ரா கூட 40 ஆயிரம் கோடிதான். டெல்லி, மே.வ குறைவாக இருப்பதைக் காணலாம்.

எக்சைஸ் வரி மிகக்குறைவாக உள்ள மாநிலம் குஜராத். மே.வ இது மிக அதிகமாக இருக்கிறது. மே.வ, டெல்லி, தமிழ்நாடு என இந்த வரிசை இறங்குகிறது

விரிவை அஞ்சி இன்னும் ஒரே ஒரு காரணியை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அது committed expenditure on Receipts இதில் ஊதியம் , பென்ஷன், செலுத்த வேண்டிய வட்டி என்ற மூன்றையும் எடுத்துக்கொள்கிறார்கள்

குஜராத்தில் 21 %, 10%, 10% என்று இவை முறையே செலவில் அமைகின்றன.

தமிழ்நாட்டில் 31%, 17 %, 20 %

கேரளாவில் 31.3 %, 20%, 19.4%

மகாராஷ்ட்ரா 33%, 11%, 12%

மே.வ 31%, 12%, 20%

இதில் கேரளா தமிழ்நாடு மிக அதிக செலவில் இருப்பதைக் காணலாம். குஜராத், மகாராஷ்ட்ரா பென்ஷன் செலவு சதம், வட்டி செலவு சதம் குறைவாக இருப்பதைக் காணலாம்.

மாடல்கள் என யார்யார் எவ்வளவு உரிமை பாராட்டிக்கொண்டாலும் சட்டியில் இருப்பதுதான் அகப்பையில்..சட்டிக்கு வருவது எங்கிருந்து என்பதும் அகப்பையிலிருந்து போவது எங்கெங்கு என்பதையும் பட்ஜெட் காட்டிவிடுகின்றன. பேசுவதெல்லாம்  எல்லாம் எகனாமிக்ஸ் ஆகிவிடுவதில்லை.

2-4-2022