https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, April 11, 2022

கிரன் மைத்ரா எழுதிய Marxism in India From Decline to Debacle

 கிரன் மைத்ரா எழுதிய  Marxism in India From Decline to Debacle  என்கிற புத்தகம் 2012ல் வந்த ஒன்று.  தலைப்பை பார்த்து இந்த மாதிரி எழுத்துக்கள் விமர்சனத்தை வாரி இறைப்பவை என்ற சந்தேகம் வரலாம். படித்தால் அப்படி சந்தேகம் கொள்வது தேவையற்றது என உணரவாய்ப்புண்டு. 


கிரன் மைத்ரா இந்திய வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் -  ICHR  சார்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில்(1971-81) இருந்தவர். இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் உருவான காலம் துவங்கி மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசாங்க வீழ்ச்சிவரையிலான  ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மேலான காலவோட்டத்தின் சுருக்கமான பதிவாக இந்த புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். சுருக்கமான என்று சொன்னால் கூட ஒரே புத்தகத்தில்  மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட  கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று விரிவை இப்புத்தகம் உள்ளடக்கமாக வைத்துக்கொண்டுள்ளது. அந்த அளவில் இந்திய மார்க்சியரும் ( இந்திய மார்க்சியம் குறித்து அறிய விருப்பமுள்ள மார்க்சியர் எங்கிருந்தாலும்), மார்க்சியர் அல்லாதவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் எனச் சொன்னால் அது மிகைப்படுத்த ஒன்றாக இருக்காது என்றே கருதுகிறேன்.

இந்த புத்தகம் இந்திய கம்யூனிச இயக்கம் தொடர்பான ஏராள ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. அந்த ஆவணங்கள் அந்த அந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் புரட்சியின் தாக்கம், இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் நுழைவு,  என் என் ராய் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள், இந்தியர் தங்களுக்கான மார்க்சிய கட்சியை ஏற்படுத்திகொள்தல், உலகப்போரும் மார்க்சியர்களும், இந்தியா விடுதலை தருணத்தில் மார்க்சியர், விடுதலைக்குப்பின்னர் மார்க்சியர் (கேரளா- மே வ ஆட்சி) போன்ற முக்கிய அத்தியாயங்கள் பேசப்பட்டுள்ளன.

இந்திய மார்க்சியர்களில் தலைமை பொறுப்புகளுக்கு வந்த தோழர்கள் குறித்த சில மதிப்பீடுகள்- அவர்கள் சோவியத் தலைமைக்கோ, பிரிட்டிஷ் கட்சி தலைமைக்கோ-  even 1948 ல் ஏற்பட்ட அதீதத்திற்கு யுகோஸ்லோவியா தலைமைக்கோ yield  ஆனார்கள் என்பதை இப்புத்தகத்தை படிப்பவர்கள் உணரமுடியும். 1950ல் சீனப்பாதை  என்கிற பார்வையும் வந்தது. இவை தனிநபர் சார்ந்ததல்ல - கமிட்டியில் கூட்டு முடிவுகள் என்றாலும் அவர்கள் பொறுப்பில் இருந்த காலம் என்கிற அடையாளத்தால் விமர்சனங்களுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும்  தலைமை உள்ளானதை பார்க்கலாம்.

அதேபோல் விடுதலை காலம் நெருங்கும் ஆண்டுகளில் (1942லேயே) 1945-47ல் சுயநிர்ணய உரிமை- அதையொட்டிய அரசியல் நிர்ணயசபை அமைத்தல் ஆகியவற்றில் முதலில் பாகிஸ்தான் ஏற்பு- பின்னர்   17 தேசிய இனங்களுக்கும் தனித்தனியான இறையாண்மை- அவற்றிற்கு தனித்தனியான  constitutional Assembly- India a confederation of Unions  அதாவது India as a confederation of voluntary unions of sovereign national states என்கிற கருத்தாக்கம் போன்ற நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன. பெதிக் கேபினட் குழு வந்தபோது பத்திரிகையாளராக உடன் வந்த ஆர் பி தத் உடன் நடந்த  interactions  உருவாக்கிய ’ஒரே யூனியன்- ஓர் அரசியல் அமைப்பு சபை’ நிலைப்பாடு என பல கருத்து மாற்றங்களுடன் பயணித்த வரலாறு இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

எந்த வரலாற்று ஆசிரியரும் இட்டி நிரப்பப்படவேண்டிய இடைவெளிகளே இல்லாமல்- தாவிப்போதல் இல்லாமல் எழுதுவதில்லை. இந்த ஆசிரியரும் இதில் விதி விலக்காக இல்லை. மார்க்சியர் குறித்த விமர்சன நிலைப்பாடுகளுக்கு ஆவணங்களை முன்வைக்கும் கிரன் மைத்ரா , காந்தி குறித்து ஆங்காங்கே தெளித்து போகும் விமர்சனங்களுக்கு எவ்வித ஆவணக் காட்டலையும் செய்யவேண்டிய பொறுப்பை சுமந்துகொள்ளாமல் போவதைக் காண்கிறேன். அது அவருடைய ஒபீனியன் என்று கடக்கவேண்டியுள்ளது.

 300 பக்க அளவே உள்ள ரூ 295-தற்போது அமேசான் வழி 200க்கு கிடைக்கும் இந்த புத்தகத்தை இந்திய மார்க்சியர்கள் படிப்பதும், அதன் மீதான எதிர்வினைகளை வரலாற்று சாய்வு இல்லாமல்- உண்மையை அறிதல் என்கிற வகையில் வைத்தலும் அவசியமாகவே படுகிறது.

11-4-2022

No comments:

Post a Comment