https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, November 27, 2016

The Marxist Sociology in India- A study of the Contribution of A R Desai என்ற ஆய்வு புத்தகத்தை அர்பிதா முகர்ஜி என்ற பேராசிரியை எழுதியுள்ளார். நேஷனலிசம் என்கிற உருவாக்கம் அதில் பங்கேற்றவர்களின் வர்க்கப் பின்னணி, செயல்பாடுகள், இந்திய விவசாயம்- விவசாய வர்க்கம், இந்தியாவில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசு, சமுக இயக்கங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர் மார்க்சிய ஆய்வாளர்கள் பலரின் மேற்கோள்கள், வந்தடைந்த முடிவுகளுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர், சமுகவியளார், மார்க்சிய ஆய்வாளர் தேசாயின் பார்வையில் என அர்ப்பிதா தனது வாதங்களை நகர்த்துகிறார்.
அக்சய் குமார் ரம்ன்லால் தேசாய் குஜராத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெற்ற மார்க்சிய ஆய்வாளர். ஏப்ரல் 16,1915ல் பிறந்து 80 ஆண்டுகள் வாழ்ந்து செயல்பட்டு நவம்பர் 12, 1994ல் மறைந்தவர்.. இந்தியாவில் சோசியாலஜி என்கிற ஆய்வுவகைதனை நூற்றாண்டாக பலர் செழுமைபடுத்தியுள்ளனர். ராதாகமல் முகர்ஜி, குர்யி, மஜும்தார், பினாய் குமார், தேசாய், சீனிவாஸ், திபங்கர் குப்தா போன்றவர்கள் இந்திய சமூகம் குறித்து ஏராளம் எழுதியுள்ளனர். தேசாய் புகழ்வாய்ந்த ஜி எஸ் குர்யி அவர்களிடம் கற்றவர். இந்திய தேசியம் சமுக பின்புலம் குறித்து எழுதியவர். ஊரக இந்தியாவின் சமுகவியல், அரசும் சமுகமும், விவசாய போராட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை போன்ற மிக முக்கிய ஆய்வு நூல்களை தந்தவர்.
தனது இளமைக்காலத்தில் சி பி ஐ கட்சியில் செயல்பட்டவர். ஸ்டாலினிச கொள்கைகளால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாறுபட்டு டிராட்ஸ்கியவாதியாக போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி என்பதில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் நூல்களுடன் டிராட்ஸ்கி, காட்ஸ்கி, மெளரிஸ் டாப், கார்ல் மேன்ஹய்ன் எழுத்துக்களுடன் பழக்கப்படுத்தி கொண்டவர் தேசாய். பின்னர் 1953-81 காலங்களில் ஆர் எஸ் பி கட்சியின் மிக முக்கிய கோட்பாட்டாளராக விளங்கினார். இந்திய சமுகவியலாளர் சொசைட்டியில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டிஷ் காலத்தில் தொழிற்சங்கங்கள் என்ற புத்தக தொகுப்பை வழங்கினார். குஜராத்தி மொழியில் சோசலிச கருத்துக்களை பரவ செய்யும் வகையில் இதழாசிரியராக இருந்தார். நான்காம் அகிலத்துடன் தொடர்ந்து உறவுகளை வைத்திருந்தார் தேசாய். அவரது ஆய்வுகள் மார்க்சியர் வட்டாரத்தில் போதுமான கவனம் பெறாமல் போனது வருத்ததிற்குரிய ஒன்று.. அர்ப்பிதா எழுத்து நடை வசீகரமாக நம்மை அழைத்து செல்வதாக இல்லை என எனக்கு தோன்றுகிறது. சோர்வை ஏற்படுத்துகிறது . எனினும் தேசாய் போன்ற மறக்கடிக்கப்பட்ட ஆய்வாளர்களை மறு வாசிப்பு செய்ய இப்புத்தகம் உதவுகிறது. வழக்கம் போல் இம்மாதிரி புத்தகங்களை வெளியிடும்கல்கத்தா கே பி பக்ஷி நிறுவனம்தான் இதையும் வெளியிட்டுள்ளது. கன்னிமாரா சென்னை நூலகத்தில் 335.4 எண் கொண்டதாக இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 795 தான். 2015 பிப்ரவரியில் கன்னிமாரா வந்த இந்நூலை 2015 ஏப்ரலில் ஒருவர் எடுத்துள்ளார். தற்போது 2016ல் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

No comments:

Post a Comment