Skip to main content

M N ROY II

 விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்  II பகுதி 2
1919 இந்திய அரசாங்க சட்டத்திற்கு ஒத்துழைப்பு என்ற வகையில் காந்தி, மதன்மோகன் மாளவியாவும்  எதிர்ப்பு என்ற வகையில் சி ஆர் தாஸ் போன்றவர்களும் செயல்பட்டனர். பின்னர் நிலைமை மாறியது . காந்தி ஒத்துழையாமையை அறிவிக்கிறார். சி ஆர்  தாஸ் ஒத்துழையாமைக்கு ஒத்துழைப்பதில்லை என செயல்படுகிறார். சுயராஜ்யம் என்பதை விளக்குவதில் கருத்து வேறுபாடு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இருந்தது. கிலாபத்தையும் ஒத்துழையாமையையும் காந்தி இணைத்தார். 1921 வேல்ஸ் இளவரசர் வருகையின் போது போராட்டங்கள் தீவிரமாயின. தாஸ், நேருக்கள், லஜ்பத், மெளலான போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முதல் உலகப்போர் பாதிப்பால் சம்பள வீழ்ச்சி எதிர்த்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தும் மில் தொழிலாளர்கள், ரயில்வே அஞ்சல் போராட்டங்கள் எழுந்தன. 1920ல் மட்டும் 200 வேலை நிறுத்தங்கள் நடந்ததாக ராயல் கமிஷன் பதிவு செய்தது. 1920ல் AITUC உருவானது. முதல் அமர்விற்கு லஜ்பத்ராய் தலைமை தாங்கினார். காந்தியின் சம்பரான் இயக்கம் தொடர்ந்து கிராமப்புறங்களில் விவசாய இயக்கங்கள் எழலாயின. அரசாங்கத்திற்கு வரிகொடா இயக்கம் என்ற காந்தியார் ஜமின்தார்- விவசாயிகள் உறவுகள் சீர்குலையாமல் இருக்க விரும்பினார். ஆனால் விவசாயிகளுக்கு கண்ணெதிரே நடக்கும் மண்ணின் கொடுமைகளே அரசு கொடுமைகளைவிட அதிகம் தெரிபவனவாக இருந்தன. வெளிநாட்டில் இருந்த ராய் போன்றவர்கள் நிலங்கள் தேச உடைமை- விவசாயிகளுக்கு பிரித்து வழங்குதல் என பேசிக்கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் எவ்வளவு தடுக்க நினைத்தாலும் மீறி சோவியத் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் கவ்வி பிடிக்கத் துவங்கியது. சோவியத் குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிடலாயின
அரசியல் பொருளாதார கட்டுமானம் குறித்த் செயல் திட்டம் கொள்கைஅறிக்கை  ஏதும் இல்லாமல் தேசிய இயக்கம் செயல்படுவதாக ராய் கருதினார். 1921 அகமதாபத்தில் காங்கிரஸ் என அறிந்து ராயும் அபானியும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை லெனின் ஸ்டாலின்  ஏற்புடன்  அனுப்பப்படுகிறது. சி ஆர் தாஸ் தலைவர் என்பதால் செல்வாக்கு செலுத்தமுடியும் என ராய் கருதியிருக்கலாம். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி போராட வைப்பதின் மூலம் மட்டுமே சுயராஜ்யம் என அறிக்கை பேசியது. ஆனால்  அறிக்கைதனை தலைவர் தாஸ் அவர்களிடம் உரிய  நேரத்தில் சேர்ப்பிக்கப்பட முடியவில்லை. வேறு சார்பாளர்கள் கையெழுத்துடன் விநியோகிக்கப்பட்டன. ஹஸ்ரத் மொகானி முழு சுதந்திரம் தீர்மானத்தை கொணர்ந்தார். காந்தி ஏற்க மறுத்து ஆபத்தில் முடியும் என நிராகரித்தார். ஒத்துழயாமை இயக்கம் கைவிடப்பட்டது கிலாபத் இயக்கத்தையும் பாதித்ததாக அலிகார் மாணவர்கள் கருதினர். காந்தியின் கைதும் காங்கிரசை பலவீனப்படுத்தியது.
அகிலத்தின் மூன்றாம் மாநாட்டில் டிராட்ஸ்கி வைத்த உலக நிலைமைகள் குறித்த அறிக்கையின் மீது ராய் கருத்து தெரிவித்தார்.  முதல் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு உலகம் அமெரிக்கா தலைமையிலும் கிழக்குலகு இங்கிலாந்து தலைமையிலும் உள்ளன. போருக்குப்பின்னர் தனது எந்திர பாகங்களுக்கு சந்தை தேவை என்பதால் காலனி நாடுகளை தொழில்மயமாக்க துவங்கியது என்றார் ராய். காலனி நாடுகள்தான் இங்கிலாந்தின் நீடித்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுகின்றன என்றார். எனவே இங்கிலாந்திற்கு தொடர்ந்து இந்த வாய்ப்பை நல்காமல் சோசலிசத்தின் ஆதாரத்தளங்களாக காலனிநாடுகள் புரட்சிகர இயக்கங்கள் மூலம் மாற்றப்படவேண்டும் என்றார் ராய். புரட்சிகர மக்கள் பக்கம் காந்தி நிற்கப்போகிறாரா இல்லையேல் காலனியத்தன்மையை காக்கும் பூர்ஷ்வா சீர்திருத்தவாதிகளுடன் நிற்கப்போகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ராய். கீழை நாடுகளின் அரசியல் சமுக பொருளாதரா இயக்கங்கள் மேற்கு இயக்கங்கள் போல் ஒத்த தனமை கொண்டவையல்ல எனவும் ராய் கருத்து வெளியிட்டார்

1922ன் மத்தியில். பெர்லினுக்கு கட்சியின் தலைமையகத்தை மாற்றி வேன்கார்டு பத்திரிக்கையை ராய் கொணரத் துவங்கினார். India in Transition, India’s problem and solution, What we want போன்ற பிரசுரங்கள் சுற்றுக்கு வந்தன. டாங்கேவால் கொணரப்பட்ட socialist பத்ரிக்கைக்கு மதிப்புரையை அக்டோபர் 1922ல் ராய் எழுதினார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்டான சார்லஸ் அஸ்லேவை டாங்கே, முசாபர் ஆகியோரை சந்திக்க ராய் அனுப்பினார். கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைய இச்சந்திப்பும் ராயுடனான தொடர்பும்  உதவின. இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பை டாங்கே கொணரமுடியும் என்ற நம்பிக்கை சார்லஸிற்கு வந்தது. பெஷாவர், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா, அகமதாபாத் பகுதிகளில் கட்சி அமைப்புகள் உருவாகிவிட்டதாக கோமிண்டர்னுக்கு ராய் தெரிவித்தார்.
சி ஆர் தாஸ் ருஷ்யாவிற்கும், மார்க்சியத்திற்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டார். கயா காங்கிரஸிற்கு ராய் அனுப்பிய இந்திய தேசிய காங்கிரசிற்கான திட்டம் என்பதை ராய்ட்டர் போல்ஷ்விக் சதி என வர்ணித்தது. தேசிய இயக்கத்தை தீவிரப்படுத்துதல் என்கிற தனது நடவடிக்கைகள் வெற்றிபெறாமை குறித்து ராய் சோர்வடைந்தார். கயா காங்கிரஸிற்கு பிறகு மோதிலால், தாஸ் போன்றவர்கள் சுயராஜ்ய கட்சியை உருவாக்கி மத்திய சட்டமன்றத்திற்கு சென்றனர். 1924ல் லேபர்கட்சி பிரிட்டனில் ஆட்சிக்கு வருகிறது. காந்தி விடுதலை செய்யப்படுகிறார்.
சிங்காரவேலர், டாங்கே போன்றவர்கள் அய்ரோப்பா வரவேண்டும் என ராய் விரும்பினார். அகிலத்தின் 4வது மாநாட்டில் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகள் வரவில்லை என்ற வருத்தம் ராய்க்கு இருந்தது. 1923 ஏப்ரலில் சிங்காரவேலர் சென்னையில் கூட்டிய லேபர் கிசான் மாநாட்டில்  டாங்கே பங்கேற்கவில்லை. அவ்வமைப்பு சார்பில் முதல் மேதினத்தையும் சிங்காரவேலர் கொண்டாடினார். சிங்காரவேலரின் வேண்டுகோளை ஏற்று ராய் அவரது அமைப்பை மையமாக கொண்டு முசாபர், டாங்கே குழுக்கள் அதற்கு கிளையாகவும் செயல்படவேண்டும் என நினைத்தார். ஆனால் போல்ஷ்விசம் குறித்து சிங்காரவேலர் மாறுபட்ட கருத்து வைத்திருந்தால் கோமிண்டர்ன் ஆதரவு இருக்காது என்பதையும் ராய் தெளிவுபடுத்தினார். கான்பூர் சதி வழக்கில் கம்யூனிஸ்ட் இளந்தலைவர்கள் கைதாகின்றனர்.
1924ன் மத்தியில் ராய் தனது செயல்பாடுகளை பாரிசிலிருந்து நடத்தி வந்தார். ஆனால் பிரஞ்சு அரசாங்கம் வேன்கார்டு கொணர்வதில் தடை ஏற்படுத்தியது. பாரிசிலிருந்து அவர் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கான்பூர் சதி வழக்கால் தொடர்புகள் கடினமாயின. கான்பூரில் உஸ்மானி கைதிற்கு பின்னால் சத்யபக்தா  முன்முயற்சி எடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 50 நபர்களுடன் 1924 நவம்பரில் தான் துவங்கிவிட்டதாக பேசிவந்தார். இந்த செய்தி ராயை எட்டவில்லை. ஆனால் சத்யபக்தாவுடன் தொடர்புடைய ஜானகி பிரசாத் பாகர்கட்டா ராயுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார். டிசம்பர் 1924ல் பெல்காமில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் விநியோகிக்க தேசியவாதிகளுக்கு வேண்டுகோள் என்ற அறிக்கையை பாகர்கட்டா மூலம் ராய் அனுப்ப முயற்சித்தார். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துவேறுபாடுகளை சரி செய்துகொண்டு ஒன்றுபட்ட செயல்பாடு என பெல்காமில் முடிவெடுத்தனர். ராயின் தீவிர புரட்சிகர தேசியம் ஆதரவு பெறாமல் போனது.  எழும்பிய முழுவிடுதலை தீர்மான முயற்சியும் காந்தியடிகளால் அவசியமற்றது என ஒதுக்கப்பட்டது.  1926ல் மாளவியா லஜ்பத்ராய் ஆதரவுடன் சுயராஜ்ய கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை காங்கிரஸ் கட்சி மேலும் வலதுசாரி சரிவுடன் கூடிய அமைப்பை  ஒன்றை துவங்கினார். முப்பதாண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு- ஒராண்டு ஒத்துழையாமை கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்கிற விமர்சனங்கள் எழத்துவங்கின.

Masses என்கிற பத்திரிக்கை துவங்கி காங்கிரசை கடுமையாக விமர்சித்து ராய் எழுதிவந்தார்.  இந்து-முஸ்லீம் வேற்றுமைகளும் அதிகரித்து வருவதாக ராய் தெரிவித்தார். அனைத்து வகுப்புவாத அமைப்புகளையும் உடன் கலைக்கவேண்டும் என ராய் வேண்டுகோள் விடுத்தார். சி ஆர் தாஸ் மீதான நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாக ராய் கருதினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் வலிமை குறித்து அதிதமாகவே  மாஸ்கோவிற்கு தெரிவித்து வந்தார் என்றும் அதனால்தான் நிதி உதவியை அவரால் பெறமுடிந்தது என்கிற விமர்சனம் ராய் மீது எழத்துவங்கியது.
1925ல் பஞ்சாலைத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களில் இறங்கினர். வடமேற்கு ரயில்வே தொழிலாளர்கள் முதன்முதலாக தங்கள் பகுதியில் செங்கொடி ஏற்றினர். 1924ல் அகிலத்தின் 5வது மாநாடு கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கங்களில் தீவிரமாக பணியாற்றவேண்டும்- மோதிலால், லஜ்பத்ராய் செல்வாக்கிலிருந்து விடுபடவேண்டும் என்ற வழிகாட்டுதலை தந்திருந்தது. ’சிவப்பு விவசாயிகள் அகிலம்’ இந்திய விவசாயிகள் அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விழைந்தது. இந்திய தேசியவாதிகள் குறித்த ராயின் தொடர்ந்த எதிர்மறை பார்வையை அகிலத்தில் ஜினோவீவ் போன்றவர்கள் ஏற்க மறுத்தனர்.  இந்தியாவில் வளர்ந்துவரும் முதலாளித்துவத்தால் அங்குள்ள மக்கள் பிரச்சனைகள் போராட்டங்கள் பொருளாதார காரணிகள் கொண்டவை தவிர தேசியத்தனத்தால் அல்ல என் ராய் பிடிவாதமாக வாதிட்டு வந்தர். பிரிட்டிஷ் லேபர் அரசாங்கத்தை எதிர்த்து பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி ஏதும் செய்யவில்லை என்ற குற்றசாட்டையும் ராய் எழுப்பினார். ஆனாலும் அகிலத்தின் மார்ச் 1925 செயற்குழு கம்யூனிஸ்ட்கள் காங்கிரசிலும் சுயராஜ்ய கட்சியிலும் செயல்படவேண்டும் என்ற வழிகாட்டுதலை தந்தது.
1925ன் துவக்கத்தில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அனுப்பப்பட்ட கிலேடிங் இந்தியாவில் தங்கி கம்யூனிஸ்ட் இளந்தலைவர்களை சந்தித்த பின்னர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி என ஏதுமில்லை என்ற செய்தியை அனுப்பினார். அப்போது நாடளுமன்றத்தில் இருந்த தோழர் சக்லத்வாலா மூலம் தொழிற்சங்கத்லைவர்கள் சமன்லால், கோசாமி, என் எம் ஜோஷி போன்றவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு ஆம்ஸ்டர்டாமில் கீழைத்தேய மாநாடு ஒன்றிற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ராய் அதற்கு அழைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் குழுக்கள் இருப்பதை கிலேடிங் கண்டறியவில்லை என ராய் விமர்சித்தார். கிளேடிங்கை தொடர்ந்து 1926-28 ஆண்டுகளில் ஜார்ஜ் அல்லிசன், பிலிப் ஸ்பிராட், பெஞ்சமின் பிராட்லி போன்றவர்கள் அனுப்பப்பட்டனர். ராயின் செல்வாக்கு கோமிண்டர்ன், இந்திய கம்யூனிஸ்ட்கள் மத்தியில் சரியத்துவங்கியது.
ஸ்டாலின் சக்திமிக்கவராக மாறத்துவங்கியிருந்தார். விடுதலைப் போராட்ட நாடுகளில் சுயேச்சையான கம்யூனிஸ்ட் கட்சி, பூர்ஷ்வாக்களில் முற்போக்கு புரட்சிகரசக்திகளுடன் ஒத்துழைப்பு என பேசத்துவங்கினார். 1926 நவம்பரில் அகிலத்தின் தலைமை ஜினோவீவிடமிருந்து  புகாரினுக்கு மாற்றப்பட்டது. கீழை கமிஷனுக்கு ராய் பொறுப்பாக்கப்பட்டார். சீன நிலைமைகள் என்பது தீவிர விவாத நிரலில் இடம் பெற்றது. கோமிண்டர்னின் இம்ரிகார் பத்ரிக்கையின் ஆசிரியர்குழுவில் ராய்க்கு இடம் கிடைத்தது. 1927ல் ராய் சீன கட்சிக்கு உதவிட அனுப்பப்பட்டார். 
இந்தியாவில் வெளிப்படையான புரட்சிகர தொழிலாளர் விவசாய கட்சியைத்தான் பலப்படுத்தவேண்டும் என ராய் வலியுறுத்தி வந்தார். ஆனால் 1925ல் துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட்கட்சியை தொடர்வது என இளம் கம்யூனிஸ்ட்கள் முடிவெடுத்தனர். சத்யபக்தா கோமிண்டர்ன் இணைப்பு இல்லை என பேசிவந்தார். மொகானி, பாகர்கட்டா ராய் ஆலோசனைப்படி ரிபப்ளிகன் கட்சி என பேசினர். கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாடு என சிறையிலிருந்த டாங்கே ஆலோசனை தந்தார். கான்பூர் காங்கிரஸ் சூழலில்  டிசம்பர் 26-28, 1925ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அப்போதும் சத்யபக்தா தேசிய கம்யூனிஸ்ட் கட்சி என்றே பேசிவந்தார். பிரிட்டிஷ் உளவாளி ராய் என்ற கண்டனக் குரலை சத்யபக்தா எழுப்பினார். பின்னர் தான் முன்முயற்சி எடுத்த கட்சியிலிருந்து வெளியேறினார். பாகர்கட்டா, முசாபர், ஜோலேகர் போன்றவர்கள் கட்சிப்பணியை தொடர்ந்தனர்.
1927ல் கோமிண்டர்ன் முன்முயற்சியில் பிரஸ்ஸல்சில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதியாக ஜவஹர் பங்கேற்றார். அதன் செயற்குழுவிலும் இடம் பெற்றார். சோவியத் தாக்கத்தில் அவர் பல்வேறு தீர்மானங்களை சென்னை காங்கிரஸ் அமர்வில் நிறைவேற செய்தார். இந்த பின்னணியில் ’சைமன் கமிஷன் திரும்பி போ’ பெரும் இயக்கமாக மாறியது. லாகூர் ஊர்வலத்தில் லஜ்பத்ராய் தாக்கப்பட்டு பின்னர் மரணித்த சூழல் புரட்சிகர தேசிய இயக்கம்  வளரவும் உதவியது. இளைஞர்களின் புரட்சிகர அமைப்புகள் உருவாக்கப்பட்டு சோசலிச புரட்சி பேசத்துவங்கின. தொடர் நிகழ்வுகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உயிர்த்தியாகம்வரை சென்றன. சென்னை அமர்வில் பிலிப்ஸ்ப்ராட், பிராட்லி பங்கேற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியை, தொழிற்சங்க இயக்கங்களை வலுப்படுத்துதல் என்பதில் அவர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர். ராய் சைமன்கமிஷன் விவகாரத்தில்  பகிஷ்கரிப்பு என்கிற எதிர்மறை நிலைப்பாட்டைவிட  அரசியல் அமைப்பு அசெம்பளி என்கிற நேர்மறையான கோரிக்கை தேவை எனக்கருதினார்.

தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் போலவே விவசாயிகள் பர்தோலி வரிகொடா இயக்கம் வல்லபாய் தலைமையில் தீவிரமானது. அரசின் அடக்குமுறைகள் இருந்தாலும் பின்னர் அரசாங்கம் பணிய நேர்ந்தது. 1928 AITUC ஜாரியாவில் பழிவாங்கப்பட்ட ரயில்வே தலைவர் குல்கர்னியை நேருவிற்கு எதிராக தலைமைக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரித்தனர். நேரு வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட்கள் ரெட் இண்டெர்னேஷனல் என்றும், சமன்லால், என் எம் ஜோஷி , கிரி போன்ற்வர் பிரிட்டிஷ் லேபர் TUC இணைப்பு என்றும் பிரிந்து நின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகுடன் இணைப்பு என்பதில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடிந்தது.  இந்த சூழலில் மோதிலால் தலைமையில் நடந்த கல்கத்தா காங்கிரசில் உழைப்போர்கள் 50000க்கும் மேற்பட்டோர் பெரும் ஊர்வலமாக பந்தலுக்கு வந்து உடன்விடுதலை என்கிற தீர்மானத்திற்கான முழக்கமிட்டனர். ராய் இவ்வெழுச்சி குறித்து பெருமிதமாக பிரஞ்சு புரட்சியுடன் ஒப்பிட்டு எழுதினார்.
அகிலத்தின் ஆறாவது மாநாட்டில் 6 இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். செளமேந்திரநாத் தாகூர் பிரிட்டன் முன்புபோல் இல்லாமல் தேசிய முதலாளிகளின் தொழிலை ஊக்கப்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார். செளகத் உஸ்மானி கடந்த 10 ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்தவர்கள் இருட்டிலேயே உழன்றுள்ளனர் என ராய்க்கு எதிராக பேசினார். அகிலம் காங்கிரசின் சீர்திருத்த முகத்தை அம்பலப்படுத்துவது, தொழிலாளிவர்க்க கட்சியை வலுப்படுத்துவது என்ற வழிகாட்டுதலை தந்தது.  சீனாவிலிருந்து திரும்பிய ராய்   காலனிமய நீக்கம் என்ற விவாதத்தில் பங்கேற்றார். புகாரின் பயன்படுத்திய சொல்லாட்சி என்றாலும் இந்தியாவில் வளர்ந்துவரும் தொழிற்மயத்தை ராய் சுட்டிக்காட்டினார். பண்டைய கம்பெனி முறையில் பிரிட்டிஷ் நடந்து கொள்ளமுடியாது- உள்நாட்டு முதலாளிகளை ஊக்கப்படுத்தாமல் இருக்கமுடியாது என்றார். இதன் பொருள் ஏகாதிபத்திய்மே காலனிமய நீக்கத்தை தானாக செய்துவிடும் என்பதல்ல என ராய் தனது நிலையை தெளிவுபடுத்தினார்.
1928பிப்ரவரியில் ராய் பெர்லின் சென்றார். அங்கு தால்ஹைமென், ஹெய்ன்ரிச் பிராட்லெர் போன்றவர்களின் குழுவுடன் நட்பு பாராட்டிவந்தார். சில மாதங்கள் அகிலத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார். ஜெர்மனில் கம்யூனிச விரோத பத்திரிக்கை ஒன்றில் அகிலத்தின் நெருக்கடிகள் குறித்து கட்டுரை எழுதினார். குசினென் போன்றவர்க்கு ராயை ஒழித்துக்கட்டுவதற்கு நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. 1929 ஜூலை பிளினத்தில் ராய் குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தன. கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான பொதுபாதுகாப்பு மசோதாவிற்கு(பகத்சிங் குண்டெறிந்தது) ஆதரவு தந்த சுயராஜ்ய கட்சியினரை ராய் பாராட்டிவருகிறார்  என்கிற விமர்சனத்தை குசினென் முன்வைத்தார்.  ராயிடம் மென்ஷ்விக்குகள் மணம் வீசுகிறது என்ற தாக்குதலும் வந்தது. 1929 செப்டம்பரில் ராய் அகிலத்திலிருந்து நீக்கப்பட்டார். 1929 டிசம்பரில் இது உறுதி செய்யப்பட்டது.
முதலில் பெர்லின் குழுவினர் எனப்பட்ட சட்டோ, புபன் தத்தா குழுவினர் லெனினிடம் ராய் குறித்த எதிர்ப்புகளை செய்து வந்தனர். ஆரம்பத்தில் ராயுடன் நின்ற அபானிமுகர்ஜி சட்டா குழுவினருடனும், மகேந்திர பிரதாப் குழுவினருடனும் சேர்ந்து ராயை எதிர்க்க துவங்கினார். இந்தியாவிலும் கூட சிங்காரவேலர், மணிலால் போன்றவர்களுடன் அபானிக்கு தொடர்பு இருந்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர் பி தத், சக்லத்வாலா பொறுப்பில் ராயின் நேரடி இந்திய தலையீடு மட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் நளினி குப்தா, செளமியா தாகூர் போன்றவர்களும் ராயின் செல்வாக்கு வீழ காரணமாயினர். நிதிபகிர்வு குற்றாசாட்டுக்களும் தோழர்கள் மத்தியில் எழுந்தன. புகாரினுடன் ராய் நின்றதும் ஸ்டாலினிடமிருந்து ராயை தள்ளிப்போகவைத்தது.  இந்தியாவில் வெளித்தெரியும் மக்கள் கட்சி, இரகசிய கம்யூனிஸ்ட் கட்சி என்கிற ராயின் வழிகாட்டுதல் ஏற்கப்படவில்லை.  .

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு கம்யூனிஸ்ட்களை  வெளியேற்றத்தான் பொதுபாதுகாப்பு சட்டத்தை பிரிட்டிஷ் கொணர்கிறது என தெரிவித்த ராயின் கடிதம் அசெம்பிளி கடிதம் என பெயர் பெற்றது. இதில்   மோதிலால், லாலாலஜ்பத், தாகூர்தாஸ் போன்றவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். பென்பிராட்லி, பிலிப் ஸ்பிராட் இருப்பதால்தான் வேலைநிறுத்தங்கள் அதிகரித்தன என்பது அபத்தமானது என்றார் மோதிலால்.  அவர்களால்தான் ஆபத்து எனில் பிரிட்டிஷ் ஏன் அவர்களை இந்தியாவிற்கு வரவிட்டது  என்ற கேள்வியை ஸ்ரீநிவாச அய்யங்கார் எழுப்பினார். இத்தாலி போன்ற பாசிச சர்க்காரில்தான் இத்தகைய சட்டங்கள் நிலவமுடியும் என்று கேலி செய்தார் லஜ்பத். உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் கொள்கைகளை பரவவிடாது  தடுக்கத்தான் இச்சட்டம் என என எம் ஜோஷி தெரிவித்தார்.  ஏப்ரல் 8 1929ல் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி சார்பில் பகத்சிங்கும் பதுகேஸ்வர் தத்தும் குண்டு வீசினர். கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு சட்டத்தை சுயராஜ்ய கட்சியினர் எதிர்த்து போராடினர் என்ற ராயின் கருத்து அகிலத்தில் விமர்சிக்கப்பட்டது. முன்னதாக மார்ச்சில் 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மோதிலால் இதன்மீது விவாதம் எழுப்ப மத்திய சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. மீரத் வழக்கு ஜனவரி 1930ல் துவங்கி மூன்று ஆண்டுகள் நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா