Skip to main content

Com Ajoy Ghosh


தோழர் அஜாய்கோஷ்
                  
அஜாய்குமார் கோஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக மிக முக்கிய தருணத்தில் 1951-1962வரை இருந்தவர். அஜாய் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர்  பிப்ரவரி 20 1909 வங்கத்தில்  மிகிஜம் என்கிற ஊரில் பிறந்தவர். அஜாய் என்பது அங்கு ஓடிய ஆற்றின் பெயர். தந்தை சச்சிந்திரநாத் கோஷ் கான்பூரில் டாக்டராக இருந்தார். அஜாய் கான்பூரில் தனது 14 வயதில் பகத்சிங்கை சந்திக்கிறார்.. அலகாபாத் பல்கலைகழகத்தில்  வேதியியலில் பட்டம் பெறுகிறார்.
பகத்துடன் தனது உறவுகளை கல்லூரியிலிருந்து திரும்ப வந்தவுடன் வலுப்படுத்திக் கொள்கிறார்.  விவாதங்கள் மூலம் புரட்சிகர இயக்கங்களை அறிந்து கொள்கிறார். பகத்  செயலாற்றிய  HSRA என்கிற இந்துஸ்தான் சோசலிச புரட்சிகர கட்சியும் அவரை ஈர்க்கிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அறியும் ஆர்வமும் அவருக்கு ஏற்படுகிறது. யாரால் எப்போது ஆயுதம் தாங்கிய புரட்சி என்பதில் அவருக்குள்ளே விவாதம் எழுகிறது.
1929 லாகூர் சதி வழக்கில் அஜாய் கைது செய்யப்படுகிறார்.  60 நாட்களுக்கு மேல் போராடி ஜதின்தாஸ் உயிர்த்தியாகம் செய்திட்ட அந்த பட்டினிப் போரில் அஜாயும் பங்கேற்ரார். சிறை வாழ்க்கையும் புத்தகங்கள் மூலம் கம்யூனிசம் சோவியத் புரட்சி குறித்த அறிவாற்றலும்  சிறைவாழ் தோழர்களின் புரட்சிகர எண்ணங்களை வலுப்படுத்தின. இந்துஸ்தான் புரட்சிகர கட்சியில்  மத்தியதர வர்க்க இளைஞர்கள் சிலரின் தனிநபர் புரட்சிகரவாத முறைகளையும் அக்கட்சி சிதைந்து போனதையும் சிறையிலிருந்த வெளிவந்த அஜாய்கோஷால் பார்க்கமுடிந்தது. விடுதலைக்கான, சோசலிசத்திற்கான  போராட்டத்தில் தனிநபர் பயங்கரவாதத்திற்கு மாற்று என்ன என்பதை அவர் யோசிக்க துவங்கினார்.
தோழர் எஸ் ஜி சர்தேசாய் தொடர்பும் அவருடன் தொடர்ந்து மேற்கொண்ட விவாதங்களும், கான்பூர் தொழிலாளிவர்க்க மத்தியில் பணியாற்ற துவங்கியதும் அவரை முழுநேர கம்யூனிஸ்ட் ஆக்கியது. 1933 துவங்கி  1962ல் மறையும்வரை கட்சியின் பொறுப்புகளில் மிக முக்கிய  பொதுச்செயலர் பொறுப்புவரை உயர்ந்து அவர் செயலாற்றினார். புரட்சிகர ஜனநாயகவாதி என்பதிலிருந்து கம்யூனிஸ்ட் என்கிற மாற்றம் அவரிடம் முழுமையாக நடந்தேறியது. துவக்க ஆண்டுகளில் கான்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகளில் செயலாற்றி 1936ல் மத்திய கமிட்டிக்கு அவர் சென்றார்.
1935ல் பி சி ஜோஷி பொதுச்செயலர் பொறுப்பேற்றபோது காட்டே தெற்கு பகுதிக்கும், அஜாய் மேற்கு பகுதி, ஆர்.டி பரத்வாஜ் வடக்கு பகுதிக்கும் பொறுப்பாக்கப்பட்டனர்.. கம்யூனிஸ்ட் என்ற சைக்கிளோஸ்டைல் பத்திரிகையும் கொணரப்பட்டது. டிமிட்ரோவின் அய்க்கிய முன்னணிதந்திரம் உட்பட பல  ஆவணங்கள் வெளியானது. கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு தலைமையகம் மாற்றப்பட்டது. தோழர்கள் தங்களிடமிருந்த சில உடைமைகளையும் விற்று அச்சகம் நிறுவினர். நேஷனல் பிரண்ட் வாரபத்திரிக்கை  முதல் இதழ் பிப்ரவரி 13, 1938ல் கொணரப்பட்டது. தோழர்கள் ஜோஷி, அஜாய், ரணதிவே, டாங்கே போன்றவர்கள் ஆசிரியர் குழுவில் இருந்தனர். National Front பத்திரிக்கையில் அஜாய் பணியாற்ற துவங்கினார். கட்சியின் மிக முக்கிய வழிகாட்டியாக இருந்த டாக்டர் அதிகாரி பீஜப்பூர் சிறையிலிருந்து தப்பிட ஏற்பாடுகளை அஜாய் செய்தார் . தோழர் எம் என் ராய் எதிர்த்த கட்சி போராட்டத்தில் அஜாய் முன் நின்றார். சமஸ்தான பகுதிகளில் மக்கள் போராட்டங்களை கட்டுவதற்கு வழிகாட்டினார்.
1940ல் கைதாக்கப்பட்டு தியோலி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கும் புகழ்வாய்ந்த பட்டினிபோராட்டத்தில் பங்கேற்றார். தனது உடலை அனைத்து துன்ப துயரங்களையும் தாங்குவதற்குரிய வகையில் கட்டுமஸ்தாக வலுவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அஜாய் அக்கரை காட்டினாலும் அவர் டிபி நோயால் அவதிப்பட துவங்கினார். அவர் காஷ்மீர் பகுதிகளிலும், பஞ்சாபிலும் பணிபுரியட்டும் என கட்சி வழிகாட்டியது. அங்கிருந்துதான் பம்பாய் மத்திய கமிட்டி கூட்டங்களுக்கே அவர் செல்லவேண்டிய நிலையில் இருந்தார். அவருக்கு பளுதூக்குதல், பாக்சிங் பயிற்சி இருந்தது. சோவியத் யூனியனுக்கு தூதராக அம்பாசிடராக இருந்த டி பி தார் போன்றவர்கள் காஷ்மீரில் அஜாய் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டனர். காஷ்மீரில் இயக்கம் கட்டுவதில் பெரும் முயற்சிகளை அஜாய் செய்தார்.
பஞ்சாபில் பின் நாட்களில் புகழ்வாய்ந்தவர்களாக மாறிய அன்றைய கல்லூரி மாணவர்களான ரொமேஷ் சந்திரா, பெரின் போன்றவர்கள் அஜாய் செயல்பாட்டால் கவரப்பட்டவர்கள். பஞ்சாபில் இருந்தபோதுதான் 1947ல் அஜாய் லித்தோராயை மணக்கிறார். அவர் இந்தோ சோவியத் கலாச்சார கழகத்தின் தலைவராக  செயல்பட்டார். 1948 கல்கத்தா காங்கிரசில் அஜாய் பொலிட்பிரோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அவதிப்பட நேரிடுகிறது. தோழர் ரணதிவே தலைமையிலான இடது அதிதீவிரம் குறித்த விமர்சனங்கள் பக்கம் அஜாய் நிற்கத் துவங்கினார். கட்சிக்குள் கொள்கை மோதல் வலுப்பெறுகிறது. நிலைத்து நிற்கும் அமைதி மற்றும் மக்கள் ஜனநாயகம் போன்ற தலையங்கங்கள் வரத்துவங்கின. கட்சியின் ஆவணங்களில் புகழ்பெற்ற 3P என்கிற மூவர் ஆவணம் ஒன்றை அஜாய் டாங்கே காட்டே வழங்குகின்றனர். பிற நாடுகளில் ஏறபட்ட புரட்சியை நகல்படுத்துவது அல்ல, இந்திய நிலைமைகளுக்கேற்ற புரட்சி உருவாக்கம் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில் 1951 கல்கத்தாவில் தலைமறைவு முறையில் நடந்த மாநாட்டில் அஜாய் பொதுச்செயலராகிறார்.

இந்தியாவில் வர்க்கங்களின் தன்மை, நிலபிரபுத்துவம், பணக்கார விவசாயிகள், நேரு அரசாங்கம்  போன்றவை குறித்து கட்சிக்குள் நிலவிய வேறுபாடுகளை களைந்து கொள்வதற்காக  ஸ்டாலினிடம் விவாதித்து ஆலோசனை பெற  மாஸ்கோவிற்கு இருபிரிவாக நின்ற தலைமைத்தோழர்கள் அஜாய், டாங்கே, ராஜேஸ்வரராவ், பசவபுன்னையா செல்கின்றனர். பிப்ரவரி 4,6,9 1951 விவாதங்கள் குறித்து ருஷ்ய ஸ்டெனோகிராபர் குறிப்புகள் பின்னாட்களில் கிடைக்கப்பட்டன. ருஷ்ய குறிப்புகளை விஜய் சிங் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். நேரு சர்க்கார் மக்கள் செல்வாக்குள்ள அரசாங்கம் என்பதை தோழர்கள் கணக்கில் கொள்ளவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்ததாக குறிப்பு காணப்படுகிறது.
சோவியத்தில் ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள், உலகளாவிய கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட வேறுபாடுகள், பொதுத்தேர்தலில் பங்கேற்பு, தேர்தல் மூலம் கேரளாவில்  தோழர் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட்களின் மாநில  அரசாங்கம், மாவோயிச செல்வாக்கு பரவும் சூழல் போன்ற முக்கிய காலமாக அவரது பொதுச்செயலர் பதவிக்காலம் இருந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட கருத்துமோதல்கள் கட்சி உடைந்துவிடுமா என்ற அளவிற்கு செல்லும்போதெல்லாம் பல்வேறு தரப்பு தோழர்களுடன் பேசி உடைப்பை தடுப்பதில் அஜாய் பெரும் பங்காற்றினார். முதல் தேர்தலில் சோசலிஸ்ட்களைவிட அதிகமான இடங்களையும் காங்கிரசிற்கு அடுத்த பெரும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது.
அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம்,  ஆப்ரிக்கா- ஆசியா ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு ஊக்கம் தந்தவர் அஜாய். உலக கம்யூனிச இயக்கம் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்மதிப்பை அவர் பெற்றுத் தந்தார். பொருத்தமான ஆய்வுகளை தரக்கூடியவர் என்ற சிறப்பு அவருக்கு  இருந்தது. 1960 மாஸ்கோ சர்வதேசிய மாநாட்டில் தேசிய விடுதலை போராட்ட தீர்மான கமிட்டியில் அவர் சேர்மனாக இருந்தார். அம்மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை அவர் விமர்சித்து சோவியத் கட்சியின் பங்கு பாத்திரத்தை உயர்த்திப் பிடித்தார்.
கட்சியின் கொள்கை திசைதனை வரையறுப்பதில் 1956 பாலக்காடு 4வது காங்கிரஸ், 1958 அமிர்தசரஸ் காங்கிரஸ், 1961 விஜயவாடா கட்சி மாநாடுகளில் பெரும் பங்களிப்பை அஜாய் வழங்கினார். கேரளா அமைச்சரவை எதிர்த்த போராட்டங்கள், ஆட்சிக்கலைப்பின்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், ஜனநாயகமும் பலவீனப்படுத்தப்படுகிறது என்பதையும் நேரு மீதான விமர்சனக்களையும் தனது பிரச்சாரமாக கொண்டு சென்றார்.  அதே நேரத்தில் நேருவிற்கு மாற்று வளர்ந்துவரும் வலதுசாரி தலைமையல்ல என்றார். கோவா விடுதலைப் போராட்டத்திற்கு தனது வழிகாட்டுதல்களை தந்தார். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை விலக்கிக் கொள்வது, சோசலிச ஆட்சியிலும் எதிர்கட்சிகளும் இயங்க ஜனநாயக வாய்ப்பு  போன்ற மிக முக்கிய கொள்கை தெளிவாக்கங்களை  அவர் பொதுச்செயலராக இருந்த அமிர்தசரஸ் மாநாடுதான் வழிகாட்டியது. விஜயவாடா மாநாட்டில் புதிய நிலைமைகளும் கடமைகளும் என அவர் ஆற்றிய உரைக்கு சில திருத்தங்கள் வந்தபோதும் அவரது மிக முக்கிய கட்சி ஒற்றுமைக்கான உரையாக பொதுவாக அவரது உரை ஏற்கப்பட்டது.
குறுகிய பொருளாதார தீர்மானவாதம் என்பதை எதிர்த்து அவர் போராட தவறவில்லை. தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் 1961ல் அவர் ஆற்றிய உரை நன்மதிப்பை விடுதலைக்கு பின்னால் ஆன நிகழ்வுகள்- நாட்டின் எதிர்காலம் குறித்த சரியான அணுகுமுறையை தந்தது. இந்திய- சீனா எல்லை பிரச்சனைகள் குறித்து அஜாய் நேருவுடன் தொடர்ந்து விவாதித்தார். ஏகாதிபத்திய ஏவல் நாய் நேரு என்கிற வரையறைகளை அஜாய் ஏற்கவில்லை. நேரு எதிர்த்த தனிப்பட்ட தாக்குதல்கள் கட்சியிலும் பிரச்சனையானது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்திற்கு ஏகபோக அதிகாரம் படைத்ததுபோல் உரிமை பாராட்டுவது குறித்தும், கட்சிக்குள் பிரச்சனைகளை உருவாக்குவது குறித்தும் அவர் தனது பேட்டிகளில் தெளிவுபடுத்தினார்.
அவர் மறைவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவருக்கு இதய நோய் ஏற்பட்டது. அவர் உடல்நிலை சீர்படுத்திட மாஸ்கோ செல்வது என்ற வேண்டுகோள்  ஏற்கப்படவில்லை என்பதை அவர் விடுப்பில் இருந்தகாலத்தில் பொதுச்செயலராக இருந்த தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது 53 வயதிலேயே ஜனவரி 13, 1962ல் மறைந்தார். அவரது நூற்றாண்டுவிழா 2009-10ல் நடந்தது. இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளிலும் மார்க்சிய-லெனினிய பயிற்சியிலும்  தேர்ச்சியை அவரால் நிறுவ முடிந்தது.  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தேச நலன் சார்ந்த இயக்கங்களிலும் அஜாய்  தனது செயல் சிந்தனைகளால் உயர்ந்து நிற்கிறார்.


Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு