Skip to main content

நீட்சே Nietzche

நீட்சே
நீட்சே தனது 35 ஆம் வயதில் பேராசிரியர் பணிதனை முற்றிலுமாக துறந்தார். தனது பார்வை மங்கியதாலும், உடல்நிலை கோளாறுகளாலும் தனது ராஜினாமா ஏற்கப்பட கோரியிருந்தார். அந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை அதிகம் படிக்கவேண்டாம் என்றும், சிந்தித்து துன்புறுத்தி கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். நீட்சே அதனை பொருட்படுத்தவில்லை. அதிமானுடன் தாகம் அவரை துரத்தியது.
அடுத்த 10 ஆண்டுகள் தீவிர எழுத்துப்பணியில், அவற்றை புத்தகமாக பதிப்பிப்பதில் ஈடுபட்டார். தனித்த வாழ்வு சூழலில் இருந்த அவரின் எழுத்துக்கள் ஆரம்பத்தில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படியே பொருட்படுத்தியவர்களிடமிருந்து மனித தொடர்பற்ற ஒருவரிடமிருந்து என்ன மதிப்பீடுகளை பெறமுடியும் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் அனுபூதநிலையிலிருந்து அதீத எண்ணங்களை வெளிப்படுத்துகிறார் என்ற விமர்சனம் இன்றளவிலும் உள்ளது. அவர்  தொடர்பறுந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினாரா என்ற கேள்விக்கு அவரின் ஆய்வாளர்கள் இல்லை என்ற பதிலை தருகிறார்கள். ஒத்திசைவும், உறுதியான கருத்து திசையும் கொண்டவர் நீட்சே என அவரை ஆழ்ந்து படிப்பவர்கள் உணரமுடியும் என்கின்றனர். குறைந்த செலவில் எளிய வாழ்க்கையின் ஊடாக மிக குறைந்த தொடர்புகளை கொண்ட மனிதன் உன்னத சிந்தனைகளை வெளிப்படுத்தமுடியும் எனப்தற்கு நீட்சே உதாரணம் என புகழ்வாரும் உளர். ரஸ்ஸல் போன்றவர்கள் அவர் மனசிக்கல் உள்ள மனிதன் என்றார்.
அவர் வெளிஉலகை காணாதவர் அல்லர். பயணப்பட்டவர். ஸ்விட்சர்லாந்த், ரோம், துரின் பகுதிகளில் அவர் இருந்தபோது அவரது புத்தகங்கள் வெளிவந்தன.  அவரை தலைவலி மிகவும் வதைத்தது. துரின் தெருக்களில் அவர் விழுந்துவிடுகிறார் என்ற செய்தி அவ்வப்போது நண்பர்களுக்கு எட்டியது.

பிரடெரிக் வில்ஹெம் நீட்சே அக்டோபர் 15 1844ல் பிரஷ்யாவின்(ஜெர்மனியா பேரரசு) ராக்கென் பகுதியில் பிறந்தார். தனது 55 ஆம் வயதில் ஆகஸ்ட் 25 1900ல் வைமர் பகுதியில் மறைந்தார். ராக்கென் பிரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதி எனினும் நீட்சேயின் தந்தை அப்பகுதி ஆட்சியாளர் பெயரையே அவருக்கு வைத்தார்.  தந்தையார் லுத்ரன் மதபோதகர். நீட்சேயின் 5 வயதில் அவர் மறைந்தார். பாட்டியார், அம்மா, தக்கை  என பெண்கள் உலகில் நீட்சே வளர்க்கப்பட்டார்.  பான் பல்கலைகழகத்தில் ப்லோலோஜி Philology என்கி ’பாஷை சாஸ்திரம்’( மொழி அறிவு) பின்னர் தத்துவம் பயின்றார்.  கிரேக்க மொழி ஈடுபாடு அதிகரித்தது. கிறிஸ்துவசாரம் ஏதும் அவரிடம் பற்றவில்லை. வாழ்நாள் முழுதும்  இறை எதிர்ப்பாளராகவும் கடவுள் இறந்துவிட்டார் என்ற புகழ்வாய்ந்த சொற்றொடரை மனிதகுலத்திற்கு தந்தவராகவும் இருந்தார்.
ஓபரா இசைநாடக அறிஞர் வாக்னர், தத்துவ அறிஞர் ஆர்துர் சோபன்ஹார் ( Arthur Schopenhauer) அவரை கவ்வி பிடித்தவர்கள் சோபன்ஹார் ஹெகலுக்கு எதிராக நின்றவர். ஹெகலின் உரைகளுக்கு பெருங்கூட்டம் கூடும். சோபன்ஹாருக்கு அவ்வாறு இருக்காது.  ஆனாலும் பின்னாட்களில் தான் பேசப்படுவதை அறிந்து மகிழ்ந்தார். சோபன்ஹாரின் புத்தகமான  விருப்பமும் எண்ணமும் ஆன உலகம்( The World as Will and Idea)  நீட்சேயிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிக அறிவு அதிக துயரம்- மிகை ஞானம் மிகை துக்கம்- அறிவு சேகரம் துன்ப சேகரம். மகிழ்ச்சி என நாம் நினைப்பது துன்பத்திலிருந்து நாம் விடுபடும் தற்காலிக தருணங்களே. நேர்மறை தாக்கங்களைவிட எதிர்மறை அம்சங்கள் உலகை ஆள்கின்றன. மனிதர்கள்தான் தங்கள் துன்பத்திற்கு காரணம். கடவுளை குறை சொல்லி பயனில்லை. நாம்தானே நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வலுவான அரசை நிறுவிகொண்டோம். அது இறைவன் தந்ததல்ல. நமது விருப்பங்களின் வடிவாகவே உலகின் நிகழ்வுகள். விருப்பமில்லையெனில் உலகில்லை. எண்ணமில்லை. வெறுமை- ஏதுமற்றதுதான். நல்லமனிதன் என்பவன் சுயவறுமை, சுயவதை, நேர்மைக்குள்ளாபவன்தான்.. என்ற சிந்தனை அவரிடம் உள்நுழைந்தது. இதனை வளப்படுத்த நீட்சே முயன்றார்.
மனிதன் மேம்பட மனித ஆற்றலே போதுமானது. வெளியிலிருந்து எந்தவகை இறை ஏஜென்சியும் தேவையில்லை.. எனவே கடவுள் இறந்துவிட்டார் என்பதே மனிதனை உயர்த்தும் என்ற அதிரடி சிந்தனையை அவர் வெளிப்படுத்தினார். சோபன்ஹார் கூட புத்தமதம் குறித்து நேர்மறை எண்ணம் வைத்திருந்தார். நீட்சேவிற்கு எம்மதம் மீதும் நல்ல எண்ணமில்லை. அவசியமில்லை என கருதினார். தனது சூழலில் பழக்கமாக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ மதம் மீது வெறுப்பு அவருக்கு ஏற்பட்டது.
நீட்சே என பேசும்போது அவரின் உடல் உபாதைகளும் சேர்ந்தே பேசப்படுகின்றன. 1870ல் குதிரை சவாரியின் போது விழுந்தததால் மார்புவலிக்கு உள்ளானார். 1871ல் மருத்துவ விடுப்பில் சென்றார். பல்கலை சூழலில் உண்மை உணர்தல் முடியாது என்பதை நண்பர்களிடத்தில் தெரிவித்து வந்தார். 1876ல் பல்கலையிலிருந்து வெளியேறினார்.  தனது 28ஆம் வயதில் தன் காதலை ருஷ்ய பெண் லூ வான் சலோனிடம் தன் நண்பர் ஒருவர் மூலம் வெளிப்படுத்தினார்.  வேடிக்கையாதெனில் அந்நண்பரும் அப்பெண்ணிடம் தன் காதலை தெரிவித்தவர். அப்பெண் இருவரையும் நிராகரித்தர். சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு மாணவரானார் அப்பெண். கலோன் விபச்சார விடுதி ஒன்றில் தன் நண்பருடன் சென்ற நீட்சே பயந்து ஓடிவந்ததாக தகவல் உள்ளது. இதன் பொருள் பெண் உறவே அவருக்கு இல்லை என்பதல்ல. நிறைய இருந்திருக்கலாம். அவர் வி டி என்கிற பாலியல் நோய்க்கு உள்ளானார். Syphilis Insane  நோய் தாக்கப்பட்டதாக அறிய முடிகிறது. Self-Renunciation என்கிற சுயதுறவு அறநெறியை அவர் ஏற்கவில்லை. தனது ஆக்கங்களில் அதை விமர்சிக்கிறார்.  வாழ்க்கைக்கு கிறிஸ்துவம் எதிரானது  (நமது நாட்டில் நாம் இந்துத்துவம் என புரிந்து கொள்ளலாம்) என்றார் நீட்சே. கடவுளின் மரண அறிவிப்பின் மூலம் நாம் அளவு கடந்த விடுதலை பெறுகிறோம் என எழுதினார்.
அவரிடம்  நிரந்தரமாக திரும்ப திரும்ப நிகழ்தல்  eternal recurrence என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. அவரின் Super Man- Der Ubermensch அதிமானுடன்  என்பதற்கு இக்கருத்தாக்கம் துணைபுரியும் என கருதினார். நமது வாழ்க்கை பலமுறை மிகச்சிறிய அனைத்து அம்சங்களுடன் பலமுறை வாழப்படுகிறது என்கிற கவித்துவ தெறிப்பை அவர் நல்கினார். நாம் கடந்த காலங்களில் வாழ்ந்தோம்- இனி வரப்போகும் காலங்களிலும்  வாழப்போகிறோம். வாழ்க்கை நீடிக்கிறது என்பதின் அடையாளம் இடைவிடாத நடைபெறுதலில்தான் தெரிகிறது என்றார். சாவால் நாம் முற்றிலும் அழிந்துவிடுவதில்லை என்றார். திரும்ப திரும்ப நமது வாழ்க்கை நடைபெறுகிறது. நாம் திரும்ப வருகிறோம் என்பதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள். துன்பம் என அலறுகிறார்கள்- விடுபட விழைகிறார்கள். ஆனால் சரியாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் விருப்ப உறுதியுடன் விடுதலையை காண்கிறார்கள். சாதாரணமானவர்களைவிட அவர்களுக்கு வலுவான சக்தியும் கட்டுப்பாடும் உள்ளது. அவர்கள் அதிமானுடர்கள்  என்ற சிந்தனையை நீட்சே வெளிப்படுத்தினார்.

கீழைத்தேய சிந்தனைகள் போன்றவற்றை மேற்குலகம் புரிந்துகொள்வது சற்று கடினமானது. எவ்வளவு கவித்துவ நடையில் இச்சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும் புரிய வைப்பது கடினம் என உணர்ந்த நீட்சே தனக்கான வாகனமாக பெர்சிய மாமுனி ஜராதுஸ்ட்ரா பேசியது ( Thus Spoke Zarathustra) என்ற  வகையில் புகழ்வாய்ந்த படைப்பை தந்தார். 1883-85  ஆண்டுகளில் அவை வெளியாயின. எனது தத்துவம் முழுமையும் இந்நூல் மூலம் பேசப்பட்ட எளிய வார்த்தைகளில் உறைந்திருக்கிது என்றார் நீட்சே.
வாழ்வின் சக்தி மற்றவர்களைவிட உயர்ந்த ஞானம் பெற்றவர்களிடம் உள்ளது. ஜனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் ஞானத்திற்கு எதிரிகளாகவே இருக்கும். பயமற்ற பார்வையும் கலப்படமற்ற மாசுமறுவற்ற தனித்த பெரும் சிந்தனையாளர்களிடம்தான் தீர்வுகள் வசப்படும். அவர்களிடம் காணும் அதீத தைரியம் அதற்கு துணையாக நிற்கும். அவர்கள் அதிமானுடர்கள் என திரும்ப திரும்ப ஞாவான்களின் மேன்மை ஒன்றே உலக மேன்மையாக நீட்சே படம் பிடித்தார். இந்த அதிமானுட சிந்தனைதான் நாசிகளை பாசிசவாதிகளை கவ்வி பிடித்து மானுட விரோத படுகொலைகளுக்கு இட்டு சென்றது- உலகை போர் மூலம் சொல்லொனா துயர்களுக்கு இட்டு சென்றது என்கிற கடும் விமர்சனத்திற்கு நீட்சே உள்ளானார். நீட்சே அதிமானுடன் என தனி நபர் பற்றி பேசினார். நாசிகள் அதிமானுட இனம் என அதை நீட்டிக்கொண்டனர் என நீட்சேவை காக்க வருவோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Beyond Good and Evil  ல் Master Morality  -Slave Morality  உயர்நெறி- மந்தை நெறி குறித்து பேசுகிறார். இரண்டும் ஒவ்வொருவரிடத்திலும் கலந்தே இருக்கலாம். அன்பு, கனிவு, பரிவு போன்றவை மந்தை நெறிகளாக கொண்டாடப்படலாம். ஆனால் அதிமானுடன் சமரசமில்லாதவன். அவனுக்கு மந்தை தனமையுடன் சகவாழ்வு சாத்தியமில்லை என்றார் நீட்சே. சோசலிசம் கூட பொறாமையின் அரசியலாகவே இருக்கிறது. ஒரே ஒத்த சீரான என்ற பெயரில் மந்தைத்தனம் உருவாக்கிட கிறிஸ்துவம் , ஜனநாயகம், சோசலிசம் முயற்சிக்கின்றன. ஆனால் அதிமானுடன் தனித்த மதிப்பீடுகள் கொண்டவன் என விமர்சித்தவர் நீட்சே.
கடவுள் இறந்துவிட்டார் என்பதை அவரின் மாபெரும் தத்துவக்கொடையாக பார்க்கமுடிகிது. கடவுள் எனும் கருத்தாக்கம்  மனிதனின் சாத்தியப்பாடுகளை மறுக்கிது. அது மனித இருப்பை உதாசீனப்படுத்தி கேள்விக்குள்ளாகிறது என்றார். மதசார்பற்ற சமுகத்தில்தான் ஆக உயர்ந்த மானுட ஆளுமைகளை உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை அவர் தந்தார். அவர் கட்சி என்கிற அமைப்பு ஒன்றிற்காக சிந்தித்ததாக தெரியவில்லை. அவரது சிந்தனைகளை நிறுவனப்படுத்திட  முயற்சிக்கவில்லை. அவரது எழுத்துக்கள் allusion- suggestion  பாணியில் இருப்பதாக அவரை ஆராய்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நம்பிக்கைவாதங்களை நாம் அவரிடம் காணமுடியாது. வாழ்வு என்பது முடிவாக இருந்தாலும் வாழ்தலை நோக்கமாக வைத்தல் என அவர் பேசினார். வாழ்க்கையின் குறிக்கோள் முடிவுகளை எட்டுவதல்ல- உச்ச மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருப்பது என்றார். அதிமானுடன் அதனை துணிச்சலுடன் எதிர்கொள்கிறான். நீட்சேவை கடவுளற்ற சமுகவியலாளர் என அவரது சிந்தனைகளை எடுத்து செல்வோர் புகழ்கின்றனர்.

நீட்சேயின் இறுதி ஆண்டுகள் பெரும் மெளனத்தில் கடந்தது. மனம் மூடுண்டது. Nihilism  உச்ச அளவில் பற்றியது. பிஸ்மார்க்கின் மீசை அவரிடமும் வளர்ந்தது. அவர் தனது அதிமானுடனை அரசியல்வாதியாகவோ கொடுங்கோல் தலைவனாகவோ சித்தரிக்கவில்லை. அக்கருத்தாக்கம் மாயையால் கட்டப்பட்ட ஒன்றா? பெரும் விருப்பமா? பூமி விளைச்சலின் உயர் அர்த்தமா?  தெரியவில்லை. நீட்சே பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பேசவில்லை. காணப்படும் மதிப்பீடுகளை கடந்து புதிய உச்சத்திற்கான பயமது. நம் குழந்தைகள் பார்த்து குதூகலிக்கும் ஸ்பைடர்மேன் அல்ல அதிமானுடன். அவன் நாகரிக உச்சம் . சுதந்திர தாக வெளிப்பாடு. எளிய சிக்கன வாழ்வின் அடையாம். நல்லது கெட்டதுக்கு அப்பால் செல்லும் பயணம். மானுடம் என்பது பாலமே அன்றி இறுதி இலக்கல்ல. கடக்கவேண்டியதை கடந்து புதிய மாதிரிகளை உருவாக்குவோம் என்கிறார். இறுதி இலக்கு என ஏதுமில்லை என்கிறார் .
பிரடெரிக் வில்ஹெல்ம் நீட்சே எனும் மேற்கித்திய தத்துவாதியின் அதிமானுட பிறப்பிற்கு உலகம் காத்திருக்க போகிறதா- ஏற்கனவே  அதிமானுடர்கள் தோன்றிவிட்டார்கள் அந்த மாதிரிகள் போதும் என சொல்லப்போகிறதா.. இல்லையேல் கண்டுகொள்ளாமல் செல்லப்போகிறதா? அவரின் இயல்பான மத சார்பற்ற எளிய வாழ்விற்கான தேடல்களை நாம் பொருட்படுத்தலாம். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் தாக்கி பாசிச அரசியலுக்கு துணைபுரியும் கருத்தியல் செல்வாக்காக அவர் இருந்துவிட்டார்  என்ற விர்சனம் அவருடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அவரது இறுதிக்காலம் தோழமையற்ற தனிமையில் கழிந்தது. அவர் இற்று வீழ்ந்தார் எனக்கூட சொல்ல முடியும். நான் கடவுள் ஆக்கப்படுவதைவிட மீண்டும் பேராசிரியர்கூட ஆகிவிடலாம் என பேசினார். அகந்தை அழிவைத்தரும் . பலரை பயித்தியமாக்கும். அகந்தை அவரை தொற்றுவதற்கு  முன்னரே அவர் அப்படி ஆனார். தத்துவதேடல்களால் அலைக்கழிக்கப்பட்ட அவரது மனம் பின்னர் mental suicideக்கு உள்ளானது. சகோதரியும் தாயும் குணப்படுத்த முயற்சித்தனர். ஆகஸ்ட் 25 1900ல் மரணம் அவரை பிடித்துக்கொண்டது. இரங்கல் கூட்டம் ஒன்றில் பின்வரும் தட்டிவாசகம் வைக்கப்பட்டது.
கடவுள் இறந்தார்- 1884 நீட்சே

நீட்சே இறந்தார்- 1900 கடவுள்

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு