https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, January 26, 2017

P C JOSHI பி சி ஜோஷி பகுதி 2

                         II P c ஜோஷி
மவுண்ட்பாட்டன் தனது திட்டத்துடன் மார்ச் 1947ல் வருகிறார்.  காங்கிரசுடன் உறவுகளை சரி செய்திட அறிவுறுத்தல் வருகிது. கட்சி இந்து முஸ்லீம் ஒற்றுமை முழக்கத்தை பலப்படுத்த துவங்கியது. விடுதலை காலத்தில் நாட்டின் பிரிவினை, வகுப்புவாத கலவரங்களால் நாட்டின் ஆன்மா பாதிக்கப்படுகிறது. நாடு அலைக்கழிக்கப்படுகிறது. காந்தி, நேருவுடன் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் அய்க்கிய முன்னணி என்கிறார் ஜோஷி. கட்சிக்குள் இந்தப்பாதை மீது விமர்சனம் எழுகிறது. நேரு சீனாவின் சியாங்காய் ஷேக்குடன் ஒப்பிடப்படுகிறார். தெலங்கானா ஏனான் என்ற ஒப்பீடு வருகிறது. இந்திய சுதந்திரம் போலி என கருத்துக்கள் முன்வருகின்றன. ரணதிவே, அதிகாரி இவ்விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அய்ரோப்பாவிலிருந்த டாங்கே பெல்கிரேடில் அகிலத்தின் பிரதிநிதி எட்வர்ட் கர்டெல்ஞ் என்பாரை சந்திக்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பும் போராட்டமும் அறிவுறுத்தப்படுகின்றன.. நாடு திரும்பிய டாங்கே இந்த வழிகாட்டலை பொலிட்ப்யூரோவில் வைக்கிறார். ஜோஷி பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகிறார்.
 கட்சியின் பெரும்பான்மை ஜோஷியை நிராகரிக்கிறது. பொதுச்செயலரிலிருந்து ஜோஷி வெளியேறுகிறார். தோழர் ரணதிவே பொறுப்பேற்று பிப்ரவரி 1948 கல்கத்தா கங்கிரசில் பொதுச்செயலராகிறார். ஜோஷி தனிமைப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. சுயவிமர்சனம் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அப்போது கட்டாயமாக இருந்தது . தலைவர்கள்  அதை அனுசரிக்கவும் செய்தனர். ஆரம்பத்தில் சுந்தரையா போன்றவர் ஜோஷி பக்கம் நின்றாலும் பெரும்பான்மைக்கு முன் யாரும் நிற்கமுடியாது என்பது பொதுவான சூழல். கட்சி ஆயுதம் தாங்கிய எழுச்சி என பேசியது. நகரங்களில் வேலைநிறுத்தம் கிராமங்களில் போராட்டங்கள் என்று வழிகாட்டப்பட்டது. புரட்சி மிக அருகாமையில் போன்ற சித்தரிப்புகள் வந்தன.  விடுதலை நேரத்தில் ஏறத்தாழ வெகுஜன கட்சி 80 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்த கட்சி  சரியத்துவங்கியது. இந்திய பூர்ஷ்வாக்கள் முழுமையாக ஏகாதிபத்திய பக்கம் என்பதை ஏற்கமுடியாது என்றார் ஜோஷி. சீர்திருத்த அபாயம் என 1949ல் ஜோஷியை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது.
1980களில் புபேஷ் குப்தா அன்று ஜோஷி நீக்கம் கட்சிக்கு மிகப்பெரிய அடி என தெரிவித்தார். ஜோஷி  பேராசிரியர்  ஜே டி பெர்னால் மூலம் கட்சியின் தவறான பாதை குறித்தும் தனது நிலைப்பாட்டை குறித்தும் பிரிட்டிஷ் கட்சிக்கு எடுத்துரைக்க செய்தார். ரதிவே மீது விமர்சனம் எழுந்து ஆந்திர தோழர்கள் சீனப்பாதை என ராஜேஷ்வர்ராவ் தலைமையில் பேசினர். பின்னர் மூன்று பி ஆவணம் என டாங்கே, அதிகாரி, ஜோஷி முன்வைத்தனர். ஜோஷிக்கு அனைத்திலும் கருத்து வேறுபாடு இருந்த்து. ராஜேஸ்வர்ராவிற்கு பின்னர் அஜாய் பொதுச்செயலர் பொறுப்பேற்றார். ஜோஷி மீண்டும் 1951 ஜூனில் கட்சிக்குள் சேர்க்கப்பட்டர். கட்சி ரணதிவேவை சுயவிமர்சன நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியபோது தனது அனுபவம் அவருக்கு வேண்டாம் என பேசினார் ஜோஷி. கட்சி தோழர்களை தனிமைப்படுத்துவதுபோல் நடப்பது சரியல்ல என்றும் கருதினார்.
ஜோஷி அலகாபாத் திரும்பி India Today என்கிற மாதப்பத்திரிக்கையை துவங்கினார். ரஜினிபாமிதத் எழுதிய புகழ்வாய்ந்த புத்தக தலைப்பு அது. இந்தியா சீனா சோவியத் கூட்டு அவசியம் என அதில் எழுதினார். முதல் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசின் வெற்றியை குறைத்து மதிப்பிடவேண்டாம் என எச்சரித்தார். கட்சிக்கு வெளியே சிறந்தவர்கள் இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து தோழமை கொள்வது அவசியம் என்றார். 1952 டிசம்பரில் வியன்னாவிற்கு சமாதான கவுன்சில் மாநாட்டிற்கு சென்றார். பாமிதத் அவரை பொறுமையுடன் இருக்க வேண்டிக்கொண்டார். அஜாய் சரி செய்வார் என்றார். மாற்றங்களை கொணர்வார் என்றார்.
நேருவின் 5 ஆண்டுதிட்டம், சீன-ருஷ்ய உறவுகள், நேரு குறித்து நேர்மறையான அணுகுமுறை அஜாய்- டாங்கேவிடம் ஏற்படவில்லை என ஜோஷி கருதினார். 1956 பாலக்காடு காங்கிரசில் விடுதலை குறித்த பார்வை அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஜோஷியையும் ரணதிவேயையும் சமப்படுத்தி கயிற்றின் மேல் நடக்கும் வேலையை அஜாய் செய்யவேண்டியிருந்தது என்பதை ஜோஷியே ஏற்றுக்கொண்டார். எந்தவித வறட்டுத்தனமும் வெகுஜன கட்சிக்கு உதவாது என்பதில் ஜோஷி அழுத்தம் தந்தார். 1968 பேட்டி ஒன்றில் நமது செக்டேரியன் அணுகுமுறையால் நாம் கேரளா ஆட்சியை இழந்தோம் என கருத்து தெரிவித்தார்.

1958 அமிர்தசரஸ் காங்கிரசில் அவர் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி வந்தார். 1962வரை நியுஏஜ் ஆசிரியராக செயல்பட்டார். அவரால் டெல்லி தனிமையை பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. சீன யுத்தத்தின்போது கட்சிக்குள் வேறுபாடுகள் அதிகமாயின. டாங்கே பிரிட்டிஷ் ஏஜெண்ட் என தாக்கப்பட்டார்.  டாங்கே பதவி விலகி ஒற்றுமைக்கு உதவலாம் என்ற கருத்து ஜோஷியிடம் இருந்தது. கட்சி உடைவு என்பது பலருக்கு அளித்த வருத்தம் போல் ஜோஷிக்கும் வேதனையை தந்தது. 40 ஆண்டுகள்  தவப்பணி வீண் போனது என கருதினார். கட்சியைவிட்டு வெளியேறியவர்களில் சிலர் அதிதீவிர இடது பேசுபவர்கள் அல்லர், அவர்களுக்கு டாங்கே எதிர்ப்பு இருந்தது அவ்வளவுதான் என  ஜோஷி பேசிவந்தார். உடைவிற்கு பின்னரும் கட்சி டிசம்பர் 1964ல் டாங்கேவை சேர்மனாக தேர்ந்தெடுத்தது. டாங்கே சேர்மன் ஆவது சரியல்ல என ஜோஷி கருதினார். அவர் தனக்கு மத்திய பொறுப்பு ஏதும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.
உ.பி மாநிலமையத்திற்கு தனது உறுப்பினரை மாற்றிக்கொண்டு அவர் சென்றார். அவரது கட்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. தனது வாழ்நாட்களை இனி ஆய்வுகளில் கழிக்கலாம் என ஜவஹர்லால் பலகலைகழக வளாகத்தை தேர்ந்தெடுத்து பெரும்பான்மை நேரத்தை செலவழித்தார். கேரளாவின் புகழ்வாய்ந்த சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்பட்ட தோழர் தாமோதரனுடன் இணைந்து ஜே என் யு வில் இடதுசாரி ஆவண காப்பகம் நிறுவிட பாடுபட்டார்.  இதற்காக பெர்லின், மாஸ்கோ என தேடிச் சென்றார். இந்தியாவில் பல்வேறு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு ஆவணகாப்பிற்கான தொண்டினை செய்தார். 1857 முதல்விடுதலைப்போர் குறித்த கட்டுரைகளை கொணர்ந்தார்.

தோழர் ஜோஷியின் துணைவியார் தன்னளவில் புகழ் வாய்ந்த கல்பனா தத்தா என்பார். விடுதலை புரட்சியாளர். . கல்பனாதத் இன்றுள்ள பங்களாதேஷ் பகுதியில் உள்ள ஸ்ரீபூர், சிட்டகாங்கில் ஜூலை 27, 1913ல் பிறந்தவர். 1929ல் மெட்ரிக் முடித்தவுடன் மாணவர் இயக்கத்தில் இணைந்து  சூர்யாசென் புரட்சிகர செயல்பாடுகளுக்கு துணையாக நின்றவர்.  அவர்கள் மே 19, 1933ல் சிட்டகாங் ஆயுத கிடங்கு கொள்ளை வழக்கில் கைதாகின்றனர்.  சென், தாரகேஷ்வர்தஸ்திதார், கல்பனாவிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது, அப்போது கல்பனாவிற்கு வயது 20. தாகூர் போன்றவர்கள் தலையிடுகின்றனர். கல்பனாவிற்கு தண்டனை மாற்றப்பட்டு, பின்னர் 1939ல் அவர் விடுதலையாகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். கட்சி வகுப்பு ஒன்றிற்கு அவர் 1942ல் வந்தார். ஜோஷியிடம் நட்பு ஏற்பட்டு இருவரும் 1943 ஆகஸ்டில் மணம்புரிகின்றனர். கட்சி அலுவலகத்தில் ரணதிவேவும், முசாபரும் மணமக்கள் சார்பில் இருந்து பிஸ்கட்- தேநீர் செலவில் திருமணம் நடந்தேறியது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காலத்தில் கணவர் ஜோஷிக்கு ஆறுதலைதரும் துணையாக நின்றார். Indian Statistical துறையில் சில காலம் பணிபுரிந்தார். தனது இறுதி காலத்தில் பத்திரிக்கைகளில் பணிபுரிந்த தம் மகன் சந்த்ஜோஷி, மருமகள் மானி சட்டர்ஜியுடன் இருந்தார். பிப்ரவரி 8, 1995ல் அவர் இயற்கை எய்தினார். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக தோழர் பி சி ஜோஷி நவம்பர் 9, 1980ல் மறைந்திருந்தார்.

ஜோஷியின் மனிதநேய தோழமை குறித்து அவருடன் நெருக்கமாக பழகிய தோழர்கள் பதிவு செய்துள்ளனர். பம்பாய் கம்யூன் வாழ்வில் லீலா சுந்தரையா பொறுப்பில் தோழர்களுக்கான உணவுக்கூடம் துவங்கியது, இளம் மொகித் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள போராடியதுவரை  ஜோஷி நகைச்சுவை உணர்வுடன் தோழமை பாராட்டியவற்றின் பதிவுகள் உள்ளன.
1934ல் 50 உறுப்பினர்கள் அதுவும் உதிரியாக  என்று பிபன் சந்திரா தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார். 1943ல் இது 17000 ஆக முதல் மாநாட்டின்போது உயர்ந்தது. விடுதலை காலத்தில் 80000 தாண்டியது. புகழ்வாய்ந்த இந்தியர்களான பி சி மகலனாபிஸ், டி டி கோசாம்பி. ராகுல்ஜி, பால்ராஜ் சஹானி, பி என் கங்குலி, கியான் சந்த், சம்பு மகராஜ் போன்றவர்கள் ஜோஷியிடம் அன்பு பாராட்டிய பெரியோர்களில் சிலர். People’s Democarcy ல் ஜோஷி நூற்றாண்டின் போது ஜோஷியின் பங்களிப்பை சுட்டிக்காட்டி தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை ஒன்றை எழுதினார். ஜோஷியை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டிய முன்னோடிகளுள் ஜோஷி முக்கியமானவர். அவர் பங்களிப்பை மறப்பது வரலாற்றுக்கு புறம்பானது- மார்க்சியத்திற்கும் புறம்பானது என்று அதில் அவர் குறிப்பிடுகிறார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் போன்ற சர்வதேச கோட்பாடுகளைகொண்ட இயக்கங்கள் நேஷனலிசம் என்பதை பூர்ஷ்வா கருத்துருவம் என குறுக்கிவிடக்கூடாது என்பதிலே ஜோஷிக்கு அளப்பரிய பங்களிப்பு இருந்தது.  காந்தி பற்றிய புரிதலில் அவரது பார்வையை கட்சியின் பார்வையை வரலாற்றாய்வாளர் பிபின் சந்திரபால்  குறையாக விமர்சிக்கிறார்.  பாமிதத் வழியாக காந்தியை அவர்கள் கண்டனர். பாமிதத்தின் ஆய்வுகள் அரைகுறையாக இருந்தன என்பது பிபின் வைத்த விமர்சனமாக இருந்தது. நேருவின் மறைவு முதலாண்டு நினைவில் Nehru Legacy- A self Critical Communist Evolution என்ற கட்டுரையை ஜோஷி எழுதினார்
பாலக்காடு காங்கிரசின்போது ராஜேஸ்வர்ராவ்,பவானிசென், சோமநாத் லாகிரி, ரவிநாரயண் ரெட்டி போன்றவர்கள் ஜோஷி நிலைப்பட்டிற்கு நெருக்கமாக இருந்தனர். கட்சியின் கொள்கை நிலையில் திருப்புமுனையாக அமைந்த 1958 அமிர்தசரஸ் காங்கிரசில் ஜோஷி முக்கிய பங்காற்றினார். 1977-78 படிண்டாவிற்கு அவர் வந்தபோது பலரும் அவரிடம் நேயத்தை காட்டினர். கம்யூனிஸ்ட் கட்சியை அதன் குழந்தை நிலையிலிருந்து தேசிய பருவத்திற்கு உயர்த்தியவர் ஜோஷி என்ற பெருமிதத்தை அவரது நூற்றாண்டின்போது பலரும் தெரிவித்தனர்,.

Ref:
1.P.C. Joshi : A Political Journey , by Bipan Chandra
2.P.C. Joshi: A Biography Gargi Chakravartty

3. Joshi Centenary Articles in PD, Mainstream

No comments:

Post a Comment