வ.ரா வாசகத்தில் ராஜாஜியும் பெரியாரும்
வ.ராமசாமி என்கிற வ.ரா அவர்கள் எழுதிய 'தமிழ்ப் பெரியார்கள்' என்பதில் 12 பெரியவர்களைப் பற்றிய பதிவிருக்கிறது. ராஜாஜி, பெரியார், திருவிக, வரதராஜூலு நாயுடு, டிஎஸ் எஸ் ராஜன், ஜார்ஜ் ஜோசப், சத்தியமூர்த்தி, வ.உ.சி, எஸ் எஸ் வாசன், கேபி சுந்தராம்பாள், என் எஸ் கே, ராமலிங்கம் பிள்ளை என அவரது பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது.
வ.ராவை அக்கிரகாரத்து அதிசய மனிதர் என அண்ணா போற்றியதை அறிவோம். 1933-34ல் சொக்கலிங்கம் அவர்கள் நடத்திய காந்தி இதழில் இந்தப் பதிவுகள் வந்தவை. 1943ல் நூல்வடிவம் பெற்றதாக அறிகிறோம்.
வரா தான் பெரியார்கள் என்பவர்களை எப்படி மதிப்பிட்டு பொறுக்கினேன் என்பதை விளக்குவார்.
“ ஜனசமூகத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள் அறிந்தும் செய்யலாம். அறியாமலும் செய்யலாம். என்றாலும் அவர்களுடைய வாழ்க்கையினால் , ஜனசமூகத்தில் கண்ணால் பார்க்கக் கூடிய மாறுதல்கள் ஏற்பட்டுவிடுகின்றன…அனுகூலம் எதுவும் இல்லாமல் பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்ந்தும், வீறுகொண்டு எழும் பேர்வழிகள் பெரியார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். ஒவ்வோர் அளவில் மேதாவிகள். சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய காரியங்களைச் செய்தவர்கள்”
வராவிற்கு
இந்தப் பெரியவர்கள் பட்டியலில் இன்னும் எழுதக்கூடியவர்கள் இருந்திருக்கிறார்கள்
. இந்த வரையறையில் வ.ரா வும் சேர்க்கப்படக்கூடியவரே. வ.ரா வின் இந்த 12 பதிவுகளிலிருந்து ராஜாஜி மற்றும்
பெரியார் எனும் இரண்டு பதிவுகளை மட்டும் இக்கட்டுரையில் அறிமுகமாக வைத்துள்ளேன். வ.ரா வின் துலாக்கோல் நெறிக்கு
நேர்மைக்கு இவை மாதிரிகளாக எனக்குப்பட்டன.
ஆரம்பத்தில் ராஜாஜி இருந்தது பற்றி வரா எழுதுகிறார். கன்னடம் ஒட்டிய பகுதி சார்ந்த 'ஆபாசத் தமிழ்' (கொச்சை) பேசி சத்தியமூர்த்திக்காக அன்னிபெசண்ட், சரோஜினி எதிர்ப்பைக் காட்டியவர். இதன் மூலம் சர்க்காரை திரும்பி பார்க்க வைத்தவர். பின்னர் பார்த்தால் ராஜாஜியின் சுத்த தமிழ் ஆளை வெருட்டுகிறது என்றார் வரா. அவரிடம் எப்படி மாற்றம் உருவானது என்பதை வ.ரா சொல்வார். அன்னிபெசண்ட், வாடியா விடுதலையாகின்றனர். சேலம் வழி சென்னை போகிறார்கள் என்ற தகவலால் சகத் தோழர்களுடன் தடையை உடைத்துக்கொண்டு ராஜாஜி பிளாட்பாரம் செல்கிறார். வாடியாவை பார்த்து கைகுலுக்கிவிட்டு சந்தோஷம் என்று திரும்பிவிட்டார். வெள்ளைத்தோல் மீது அன்று துவேஷமா ? இருந்திருக்கலாம். அன்று அப்படியிருந்தார். இன்று உலக சகோதரத்துவம்தான் என ஆச்சாரியார் பேசுகிறார் என வரா சொல்வார். ஆச்சாரியார் காலத்தோடு வளர்ந்தவர். பெரிய தன்னம்பிக்கை அவரிடத்து இயற்கையாக கிடையாதென்கிறார் வ.ரா.
விஜயராகாவச்சாரி எனும் கிழச்சிங்கம் ராஜாஜிக்கு கொடுத்த நம்பிக்கையை வ ரா விவரிக்கிறார். ராஜாஜிக்கு கடுஞ்சுரம். ஜென்னி கண்டது. படுத்த படுக்கை. கிழச்சிங்கம் பார்த்துவிட்டு பேசியது “ராஜகோபாலாச்சாரி- இது என்ன முட்டாள்தனம்! ஜன்னி வந்து சாவதற்கு யாருக்கும் புத்தியும் தைரியமும் வேண்டியதில்லை. பிழைத்திருக்கத்தான் திடசங்கல்பம் தைரியம் வேண்டும். சந்தர்ப்பத்தை கைவிட்டுவிடாதேயும். சங்கற்பம் செய்துகொள்ளும். சரிப்பட்டு போய்விடும்” இதைச்சொல்லிவிட்டு வரா சொல்கிறார் சரியான நோயாளி. சரியான மருந்து சரியான வைத்தியர் என்று.
ஆச்சாரியர் உள்ளன்பு ஊற்று ஓட்டமில்லாத இயந்திரம் என்பது புனைவு. அவர் தொட்டால் சுருங்கி பச்சிலை போன்ற சுபாவம் கொண்டவர். அது அவரின் பழக்கமாகிய ஒன்று. அது ஒட்டிக்கொள்ளும் குணத்தையும் கொண்டிருக்கும்.
நாயுடு வழக்கு மதுரையில் என்பதை அறிவோம். அதற்கு ராஜாஜிதான் வாதாடுவதற்கான கடமையை ஏற்றுக்கொண்டவர். நாயுடு நன்றாக தூங்கிவிடுவார். வக்கீல் ராஜாஜிக்கு தூக்கம் வராது. பாரிஸ்டர் ஜோசப்புடன் விழித்துக்கொண்டு வழக்குப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். நீதிபதியின் நற்குணம் நாயுடுவிற்கு 15 மாத காவல் என்றது. என்ன இது இப்படி நாயுடு இல்லாமல் திரும்புகிறோம் என ராஜாஜி கண்ணீர் விடுகிறார். சமாளித்துவிட்டு நாயுடுவிற்கும் பாக்கியம் என்கிறார். ஜோசப் சரிசரி நடவுங்கள் என்று பேச்சை மாற்றி அழைத்துச் செல்கிறார் என வ.ரா அற்புதமாக இந்தக் காட்சிதனை வர்ணித்துள்ளார்.
இனி வக்கீல் தொழில் வேண்டாம். தேசத்தொண்டே குறி என முடிவெடுத்த சூழலில் கட்சிக்காரர் ரூ 3000 பணத்துடன் வந்து நின்று வாதாட வா என்கிறார். மூவாயிரம் என்பதெல்லாம் அப்போது பெரும் பணமல்லவா? ராஜாஜியின் உறுதியைக் காணமுடிந்தது. தேசத்துக்காக இவ்வளவு பணத்தியாகத்தை முதன் முதலாகப் பார்த்தது அப்போதுதான் என வ.ரா இந்நிகழ்வைச் சொல்வார்.
காந்தி காலத்தில் 4 ராஜதந்திரிகள் என்று மோதிலால், விட்டல்பாய் படேல், ராஜாஜி, பனகல் ராஜா நால்வரையும் வ.ரா குறிப்பிடுவார். சென்னை சட்டசபையை பனகல் ராஜா ஆண்டுவந்ததை உயர்வாக வ.ரா மதிப்பிடுவார்.
அயர்லாந்தின் சார்லச் ஸ்டீவர்ட் பார்னல் எனும் பிரிட்டிஷ் எம்.பிக்கு நிகரானவர் ராஜாஜி என்று ’பார்னால் - ராஜாஜி’ ஒப்பீட்டை வ.ரா செய்வார். தெளிந்த அறிவு, தர்க்கவாதம், முட்டுக்கட்டை உபாயம் என்பதில் இந்தியாவிலேயே ஆச்சாரியாருக்கு இணையாகச் சொல்ல எவருமில்லை என வ.ரா எழுதியுள்ளதைக் காணலாம்.
ராஜாஜி மேற்கொண்ட வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை புராணம் போல ஒன்றாக வ.ரா பாவித்து எழுதுவார். தஞ்சை கலெக்டர் தார்ன் அடவாடிக்கு ராஜாஜி கொடுத்த பதிலடிகளைச் சொல்வார். அச்சத்தை ஜனங்களிடமிருந்து ஓட்டிய ஜாலவித்தை என்பார் வ.ரா. எவ்வளவு அமரிக்கை- தைரியம் , சாதுர்யம் , அழகான கிராமிய பேச்சு ! என்ன நகைச்சுவை! எத்தகைய உருக்கம் - என்ன ரம்மியமான உபமானங்கள், உபகதைகள் இவை யாவும் ராஜாஜி பிரசங்கங்களுக்கு வ.ரா கொடுத்த பாராட்டுச் சொற்கள்தான்.
வட இந்திய தலைவர்கள் பற்றிய எள்ளல் வ.ராவிடம் இழையோடும். வட இந்தியாவிலே, அறிவிலே யாருக்கேனும் அஜீரணம் ஏற்பட்டால் மலர்ச்சியை சோதிக்க தமிழ்நாட்டுக்கு உபதேச யாத்திரை புறப்பட்டுவிடுவார்கள். தமிழர் செய்த பாவம் என்னவோ- இந்த நிரந்தர தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. இது ஏதோ பாகபத்திர மாமூல் ஷரத்தாக ஆட்சேபனையின்றி வெகுகாலம் நடைபெற்று வந்தது. இதை அடியோடு ரத்து செய்தவர் ஆச்சாரியார் என பெருமிதம் பொங்க தமிழ்ப் பெரியவரை அவர் முன் வைப்பார்.
ஆச்சாரியாரை ’சின்ன காந்தி’ எனச் சொல்வது அநியாயம் என்பார் வ.ரா. காந்தி மேதாவி. ராஜாஜி புத்திசாலி. மேதை வேறு. புத்தி வேறு. காந்திக்கு சொந்த சக்தியில் மலையை நகரச்செய்யும் நம்பிக்கை உண்டு. பிறர் சக்தியிலும் அளவற்ற நம்பிக்கை காந்திக்குண்டு. ஆச்சாரியாருக்கோ தம்மிடத்தில் சிறு சந்தேகம்; பிறரிடத்தில் எல்லையற்ற சந்தேகம்.
காந்தி தம்மை தாம் மூன்று தரம் சுற்றி வந்து , தெய்வ யானையை இந்திரனிடமிருந்து அதிகாரத்துடன் கேட்ட கணபதி போன்ற மேதாவி என்றால் ஆச்சாரியார் வியர்க்க வியர்க்க வாகனத்தில் ஏறி களைத்து அலுத்து தெய்வ யானையைப் பெறாத தேவதை.
காந்தி சாஸ்திரம் என்றால், ஆச்சாரியார் சாஸ்திரி. சாஸ்திரம் காலத்துக்கு கட்டுப்பட்டதல்ல- வளரும். சாஸ்திரியோ சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். சாஸ்திரிக்கு சாஸ்திரம்தான் பிரதானம். காந்தி உலகின் மனசாட்சி. ஆச்சாரியார் அந்த மனச்சாட்சியின் மெய்க்காப்பாளர்”
அற்புதமான சித்திரத்தை , மறுக்க முடியாத ஒப்பீட்டை வரா தந்துள்ளார். காந்தியுடன் அவர் முரண்பட்ட நிலையில் ராஜாஜிக்கு நேர்ந்தவற்றை வ.ரா சொல்கிறார்.
“ காந்தியின் வலது கை என்ற கீர்த்தியில் மிதந்து கிடந்த ஆச்சாரியாரின் ஜிப்பாவைக் கிழிப்பது, கல் எரிவது - தார் ஊற்றுவது என்ற நிலைமை அவருக்கு ஏற்பட்டது மிகவும் துக்ககரமானது. ஆனால் கொண்ட கருத்துக்களுக்காக எதையும் அவதூறையும் மேற்கொள்ளமுடியும் என ஆச்சாரியார் தெளிவாக காண்பித்துவிட்டார்”
ஆச்சாரியாருடன் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். சில விஷயங்களில் அவர் பிற்போக்குவாதிதான். ஆனாலும் அவர் முதல் தமிழன் - உயர்ந்த மனிதர் - தீர்க்காலோசனைக்காரர் என்ற வகைகளில் அவருக்கு மரியாதைக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என வ.ரா ராஜாஜி குறித்து எழுதியதை முடித்திருப்பார். அவர் மலிவுப் பிறவியல்ல எனச் சொல்லியிருப்பார்.
II
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனும் பதிவொன்றை வ.ரா செய்துள்ளார். ராமசாமி நாயக்கர் அபூர்வ பிறவி. ராஜாஜியை அயர்லாந்தின் சாதுர்யர் பார்னால் என்பாருடன் ஒப்பிட்டால் பெரியாரை வ.ரா இங்கிலாந்தின் மாஜி முதல்வர் லாய்ட் ஜார்ஜ் உடன் ஒப்பிட்டுக் காட்டுவார். பிற்போக்காளர் சபிக்க, தாராள நோக்குள்ளவர் வாழ்த்த வளர்ந்தும் வீழ்ந்து விடாமல் முண்டியடிப்பதால்தான் இந்த ஒப்பீட்டை அவர் லாயிட் உடன் செய்திருப்பார்.
’பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ போல் நாயக்கர் பள்ளிக்கு ’டிமிக்கி’ அடிக்காமல் போய் இருந்தால் பத்தோடு பதினொன்று சங்கதியாகிக்கூட இருக்கும். ஆனால் நாயக்கருக்கு பெயரைக்கொடுத்து ஸ்தாபித்தது குருவில்லாத வித்தையாகும். பள்ளிப்படிப்புக்கும் நாய்க்கரின் மேதைக்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது (ஸ்னானபிராப்தி என புரட்சிக்காரர் நாய்க்கருக்கு எழுத பேனா மக்கர் செய்துவிட்டது) என்று எழுதியிருப்பார் வ.ரா.
தமிழர்கள் அனைவரும் இடித்த புளிகளாக- அநீதி எதிர்க்க தைரியமற்றவர்களாக இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஸ்மரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடிதெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாய்க்கரைப் பெரிதும் சேரும் என்று எழுதினார் வ.ரா.
நாய்க்கருக்கு அரசியலில் முதல் குரு வரதராஜூலு நாயுடு. பின்னர் ஆச்சாரியாரின் மோகவலையில் சிறிதுகாலம் கட்டுண்டு இருந்தார். ’நல்லாரின் கண்’ நட்பை விருத்தி செய்திருக்கும். பொல்லாதார் பார்வை ’திருஷ்டிதோஷத்தை’ உண்டாக்கியது போலும். ஆச்சாரியர்- நாய்க்கர் பிரிவு நாட்டுக்கு நஷ்டமானது என்றார் வ.ரா. நாய்க்கரின் உள்ளத்தின் தியாகத்தையும் தைரியத்தையும் தூண்டி மணக்கச் செய்தவர் ஆச்சாரியார் என தன் அபிப்பிராயத்தை வ.ரா முன்வைப்பார்.
’ நாய்க்கரின் அழகு பிரசங்கம்’ பற்றி வ.ரா வர்ணிப்பார். ஆணித்தர சொற்கள், அணியணியாய் உபமானங்கள், கொச்சைத் தமிழ் உச்சரிப்பு, உடல் துடிதுடிப்பு இவை பார்க்க கேட்க ஜனங்கள் வண்டுபோல் மொய்ப்பார்கள். இலக்கணம், சந்தி, கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி முதலியன நாய்க்கர் கண்டு நடுங்கவேண்டுமே ஒழிய அவைகளை லட்சியம் செய்பவர் அல்ல நாய்க்கர்.
பெரியார் அவர்களை இயற்கையின் புதல்வன் மண்ணை மணந்த மணாளன் என்றார் வ.ரா. மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாய்க்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் போன்றது என எழுதினார் வ.ரா.
சமுதாய ஓட்டைகளை பெரியார் புரிந்து போராடியதை வ.ரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜாதிக்கொடுமை, மூடபக்தி, தீண்டாமை, வலியார் மெலியாரை வருத்தும் அசட்டுத்தன பரம்பரை அவலட்சணம், மனச்சாட்சியை ரப்பரைபோல் அமைத்துக்கொள்ளும் சாமர்த்தியம், எதற்கும் சமாதானம் சொல்லும் விசித்திர ஜாலவித்தை, பெண்களின் முன்னேயும் பின்னேயும் பக்கத்திலும் படுதா, கிளிப்பிள்ளை வேதாந்தம், திண்ணை தத்துவம், போலிமதம், பிடுங்கல் புரோகிதம் எனும் ஓட்டைகளை நாயக்கர் கண்டதாக வ.ரா அழகுத்தமிழில் கேலி மிளிர அடுக்கியிருப்பார்.
செய்யவேண்டும் என்று தோன்றியதை தயங்காமல் செய்பவர் நாய்க்கர். லாப நஷ்டக்கணக்கு அதில் பார்ப்பதில்லை என்பார் வ.ரா. சிலர் அவர் அந்த ஓட்டைகளை அடைக்கும் காரியத்தில் ஈடுபட்டதால் ’பதர்’ என அவரை அழைத்தனர். அதனாலேயே அவர் பெரியார் எனவும் மதிக்கப்பட்டு வருகிறார். அந்திமாலைக்கொண்டவர் நாய்க்கரை தூஷிக்கலாம். ஆனால் நிகழ்காலமும் வருங்காலமும் நாய்க்கருக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை என 90 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து எழுதியவர் வ.ரா.
பெரியாரின் ரசனை பற்றி எழுதும்போது வ.ரா சொல்கிறார். நாயக்கர் மகா ஸரசி; பரம ரசிகர்; ஆனால் சண்டி. உறக்கத்தில் இருப்பதுபோல் பாவனைச் செய்யும் அவரது முகம், உயிர்ச்சத்து பொருந்திய பிரச்னை வரும்பொழுது பொலிவு கூடிவிடும்.
படு நாஸ்திகன் பாதகன் என சிலர் அவரை பேசுவர். சலாம் செய்து மார்பால் ஊர்ந்து செல்லாதே சுயமரியாதையுடன் வாழ் எனும் உணர்ச்சி ஊட்டினால் நாய்க்கரை பாவி என்கிறார்கள். தொண்டுக்கும் மனச்சாட்சிக்கும் பக்தனான நாய்க்கரை நாஸ்திகம் என்றால் என்னவென அறியாதவர்கள் பேசுகிறார்கள் என எதிர்வினையாற்றிருப்பார் வ.ரா.
தீண்டாமையால் ஹிந்து சமாஜம் இறுமாப்புக்கொண்டு செயல்படுவதை சுட்டிக்காட்டிய வ.ரா அது சமாஜத்தை சீர்குலைத்துவிடும் என எச்சரித்தார். தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாய்க்கர் ’முன்னோடும் பிள்ளை’ என அற்புதமாக வரையறுத்தார் வ.ரா. மலைகளையும் மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்யும் மாருதியைபோல தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு நாம் வியப்படையவே வேண்டும் என்பார் வ.ரா.
வியாதியை வரவழைத்துக்கொண்டபின் கசப்புக்கும் பத்தியத்துக்கும் பயப்பட்டால் வியாதி குணமாகாது, பெரியார் கசப்பு மருந்து என உதாரணப்படுத்துகிறார் வ.ரா.
அதே
நேரத்தில் தனக்கான வருத்தம் ஒன்றையும்
வ.ரா பதிவு
செய்யாமலில்லை. அதில்
விமர்சன இழை ஓடும்.
“ பெருநெறியான விடுதலைப்போரைப் புறக்கணித்து, வைதிக கோட்டையை மட்டும் முற்றுகை போடும் நாய்க்கரின் அளவுக் கண் சிறிது மங்கியிருக்கிறதென்றே சொல்லவேண்டும். உடலையும் உயிரையும் வாடச்செய்யும் அரசியல் அடிமைத்தனத்தைப் போக்கும் வேலையில் சாதகமாக, சமூகச் சீர்திருத்தத்தை அழைத்துக்கொண்டால் பெரும்பயன் விளையும். நாய்க்கரின் ஆற்றலோ பெரிது. அவரது தற்போதைய லட்சியம் சிறிது”
” வைதீகத்தை எதிர்க்கத்தான் வேண்டும்- சமயம் நேரும்பொழுது அதற்கு சரியான புத்தி புகட்டத்தான் வேண்டும். வைதீகத்தின் கொடிய சேஷ்டைகளையும் பொல்லாங்கான விளவுகளையும் பொறுக்க முடியாதுதான். என்றாலும் உள்நாட்டு வைதீகத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அயல்நாட்டு ஏகாதிபத்தியத்தோடு நாய்க்கர் உறவாடுவதைக் கண்டு நான் மிகுதியும் வருந்துகிறேன்”
“ மருமகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மகன் சாகவேண்டும் என்று எண்ணும் அசட்டுத்தாயின் மனோபாவத்தைக் கொண்டு, நாய்க்கர் சமூகத்தொண்டு ஆற்றப் பார்ப்பது, கானல் நீர் வேட்டையாக முடியும் என்று சொல்லவும் வேண்டுமா? உயர்ந்த சமூகத் தொண்டரான நாய்க்கர் வழிதப்பிக் காரியம் செய்வது காலத்தின் விளைவு போலும்!”
வ.ரா
தனது பெரியார் குறித்த
பதிவை மேற்கண்ட
வருத்தத்துடன் நிறைவு செய்திருப்பார்.
அதேநேரத்தில் balance
தடுமாறாமல் விமர்சனத்தை மிகப் பொறுப்புடன்
பெரியாரின் கண்ணியத்தை குறைத்துவிடாமல் வ.ரா வைத்துள்ளதைக் காணலாம். வ.ரா விற்கு பெரியார் 90 ஆண்டுகளுக்கு
முன்னரே பெரியவர்தான் என்பதை இந்தப் பதிவில் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
வ.ரா
வின் அற்புத தெறிப்புகள்- சரியான துலாக்கோல் மதிப்பீடுகள் தமிழ் எழுத்து சமூகத்திற்கு மிக அவசியமானவை என்றே
தோன்றுகிறது.
4-6-2022
Comments
Post a Comment