பாதுகாப்புத்துறையும் மனித
வளமும்
அக்னிபத் ஆர்மி பாரதி ஸ்கீம் என்கிற அரசின் புதிய ஆளெடுப்புமுறைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்து பல இடங்களில் கொந்தளிப்பான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்கட்சிகளும் உடனே அரசு இத்திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் அக்னி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு சீருடை வீரர்களாக அமர்த்தப்படுவர் என்கிற எதிர்பார்ப்பை இத்திட்டம் தகர்ப்பதால் இளைஞர்கள் சினம்கொண்டு சீறி வருகின்றனர். அரசாங்கம் damage control என அறிவிப்புகளை செய்து வருகிறது. அதேநேரத்தில் இதன் பொருட்டு எழுந்த வன்முறைகளை எவரும் வரவேற்கவில்லை.
பயிற்சிக்கு செல்லும் அனைவரும் பணிக்கு செல்லமுடியாமல் எடுக்கப்படுவோரில் 25 சதம் மட்டுமே பென்சன் உட்பட அனைத்து சலுகைகளையும் பெறுவர் என்பது உடனடியான கோபத்திற்கு காரணம். மீதி பத்தாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம்- அவர்கள் ஆரோக்கியமான வகையில் பயன்படுத்தப்படவேண்டுமே என்கிற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளது.
அரசாங்க தரப்பில் பேசுவோர் பல்வேறு கமிட்டிகள்- ஆலோசனைகள்- சீர்திருத்தங்களின் அவசியம் குறித்து தங்கள் தரப்பை முன்வைத்து வருகின்றனர்.
Future Ready soldier-இன்றுள்ள சராசரி வயதான 32யை 26 ஆக வருகிற 6 ஆண்டுகளில் குறைத்தல், டெக்னிகல் திறன்களை கூட்டுதல் , உலகின் முன்னணி நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா இராணுவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனித்து இந்தியாவை அப்டேட் செய்தல் போன்றவை அவர்களால் பேசப்படுகின்றன.
எதிர்தரப்பில் பேசுவோர் பென்சன் செலவைக் குறைப்பதற்காக நாட்டின் பாதுகாப்பில் ஆள்வோர் சமரசம் செய்துகொள்வது ஆபத்தானது என்ற விமர்சனத்தை வைத்துள்ளனர். இளைஞர்களின் வேலை எனும் கனவை காயப்படுத்துவது
மோசமானது என்பதையும் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தை வேலைவாய்ப்பு அலுவலகமாக பார்க்கக்கூடாதென்ற பதிலும் அவர்களுக்கு சிலரால் தரப்படுகிறது. இராணுவத்தின் பணிகளில் திறமை பாதிப்பை உருவாக்காதீர் என ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் இத்திட்டத்தால் விளையும் நன்மைகளைப் பேசிவருகிறார். இனி யுத்தம் என்பது
’contactless war’ எனும்
வகைப்பட்டே நடக்கும். அதிகமாக டெக்னலாஜிகல் வகைப்பட்டே
இருக்கும். எதிரி கண்ணுக்கு தெரியமாட்டார் invisble என விளக்குகிறார். ஒருவகை Future Ready Soldier எனச் சொல்கின்றனர்.
இராணுவத்தில் உயர் பொறுப்புகளில்
இருந்து ஓய்வுபெற்றவர்கள் அரசாங்கம் பென்சன் செலவைக் குறைத்துக்கொள்ளும் தனது நோக்கத்தை
ஏன் வெளிப்படையாக தெரிவிக்காமல் இப்படிச் செய்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். திட்டத்தை
சிலர் எதிர்க்காவிட்டாலும் அதில் மாற்றங்களைக் கோரிவருகின்றனர்.
’ஜவானுக்கு’ ஆகும் செலவுடன் அக்னிவீரர்
செலவை ஒப்பீட்டால் ஒரு வீரருக்கு சேவை காலத்தில் 11.5 கோடி மிச்சமாகும் என்கிற கணக்கும்
வெளியே வருகிறது. ஆயிரம் பேர் என்றால் 11000 கோடிக்கு மேல் அரசு சிக்கனம் செய்யலாம்.
இதை மூலதன கொள்முதல் செலவிற்கு மாற்றமுடியும் எனவும் வேறு சிலர் சொல்கின்றனர். இனி
’ஜெய் ஜவான்’ என்னவாகும்?
அரசாங்கம் 25 சதம் மட்டுமே எடுக்கப்போகிறதெனில்
ஏன் நூறுசத இளைஞர்களுக்கு பயிற்சி தருகிறது. ஆள்வோர் அரசியலுக்கு சாதகமானவர்களுக்கு
அரசாங்க செலவில் ஆயுதப் பயிற்சியை- இராணுவப்பயிற்சியை தந்து நீண்டகால திட்டம் ஒன்றிற்காக
பிஜேபி இராணுவத்தை பயன்படுத்தப்போகிறதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழும்பியிருக்கிறது.
அதேபோல் வெளியே இராணுவப் பயிற்சி
முடித்து வருபவர்கள் ஆரோக்கியமான வேலைகளில் அமரும் சூழல் இருக்குமா- தனிப்பட்ட private armyக்கான மூல ஊற்றாவார்களா என்ற கேள்வியும்
எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தோவல் அப்படி பயிற்சி முடித்து வருபவர் மீது அவநம்பிக்கை
வைக்கவேண்டாம். அவர்கள் சிறந்த பொறுப்பான குடிமக்களாக தேசப்பற்றாளர்களாக இருப்பர் என
பதில் அளிக்கிறார்.
இருபக்க வாதங்கள் எதுவாயினும்
இளைஞர்கள் கசந்து அவநம்பிக்கை அடைந்துள்ளனர். இராணுவத்தில் இப்படி எதிர்கால அச்சம்-
அவநம்பிக்கையுடன் பணிக்கு சேர்பவர்களை எப்படி
சமாளிக்கப் போகிறது சமூகம் என்ற கேள்வி எழாமல் இல்லை.
2
இராணுவத்தின் மனித வளம் இன்று
எப்படியுள்ளது என்பதை ஓரளவிற்கு தெரிந்துகொள்வது பிரச்னையின் தன்மையை புரிந்துகொள்ள
உதவலாம். அதை கவனிக்கும்போது எல்லோரும் சொல்லக்கூடிய பென்சன் சுமை குறைப்பிற்குதானோ
இத்திட்டம் என்பது நிரூபணமாகலாம். அதேநேரத்தில் அது ஒன்றே முழு நோக்கம் என சொல்லமுடியாமல்
போகலாம். அது முதல் முக்கிய நோக்கம் என்பதை இந்தப் பகுதியில் புரிந்துகொள்ளமுடியும்.
ஒட்டுமொத்த பாதுகாப்பில் வீரர்கள்
- சிவில் ஊழியர்கள் எனப் பார்த்தால் ரயில்வேயைவிட, உள்துறையைவிட மிகப்பெரிய துறை பாதுகாப்புத்துறை.
அதன் ஓய்வூதியர்களையும் சேர்த்தால் மொத்தமாக மார்ச் 2020ல் 50.72 லட்சத்திற்கு மேல்
இருப்பர். மனித வளத்திற்கான செலவு, இராணுவத்தை நவீனப்படுத்தும் செலவு, நிர்வாக இயக்க
செலவு எனப் பார்த்தால் மனிதச் செலவு மொத்தச்செலவில் 58 சதம். அதாவது ஊதியம் அலவன்ஸ்
32 சதம் என்றால் 26 சதம் பென்சன் செலவு. நவீனமயமாக்கும் மூலதனச் செலவிற்கு 20 சதமும்,
O&M என்கிற நிர்வாக இயக்க செலவுக்கு
22 சதமும் என செலவுக் கணக்கை பிரித்துக் காட்டுகின்றனர்.
இதை அமெரிக்க இராணுவத்துடன் ஒப்பிட்டும்
சொல்கின்றனர். அங்கு மனிதச் செலவு 54 சதம் (பென்சன் 9 சதம், ஊதியம் 26 சதம் இத்துடன்
அவர்களுக்கு veteran support என 19 சதம்) மூலதன
நவீனமயமாக்கல் 22 சதம், இயக்கச் செலவு 24 சதம்
என செலவை பிரித்துக் காட்டுகின்றனர்.
அமெரிக்காவில் 36 மாதங்கள் சேவை
செய்துவிட்டுக்கூட வெளியேறலாமாம். 6 ஆண்டுகளுக்குள் 66 சதம் வெளியேறிவிடுவார்களாம்.
14 வருடத்திற்குள் 80 சதம் வெளியேறுவார்களாம். எனவே மீதி 20 ஆண்டுகள் இராணுவ சேவை புரிந்து
பென்சன் என முறையாக பெறுபவர்கள் 20 சத வீரர்கள் தானாம். ஆனால் இந்தியாவில் வீரர்கள்
எனில் 15 ஆண்டுகள், அதிகாரிகள் எனில் 20 ஆண்டுகள் சேவை பென்சன் பெற தேவை. பென்சன் பெறவேண்டும் என்பதால்
பெரும்பாலும் அநேகமாக 99-100 சதம் பென்சன் பெறும் சேவை முடித்துதான் செல்கிறார்கள்.
இங்குள்ள பொருளாதார சூழல் அவர்களை பென்சன் எனும் எதிர்கால உத்தரவாததை பெறாமல் வெளியே
செல்ல அனுமதிப்பதில்லை . இதில் ஒரு தவறையும் பார்க்கமுடியாது.
இந்தியாவின் மீதான சீன யுத்தம் பெரும்
கண் திறப்பை செய்தது. இராணுவத்தை சிறப்பாக தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்ததை ஆட்சியாளர்களுக்கு
உருவாக்கியது. சமாதானம்- சகவாழ்வு- பஞ்சசீலம் எதுவும் இச்செலவுகளை குறைக்க உதவவில்லை.
நாளும் பெருகிவரும் பதட்டம் பல்வேறு நாடுகளில் பெருகி வரும் இராணுவமயமாக்கல் செலவுகள்
இந்தியாவையும் பாதித்தன.
தொடர்ந்து 1975 கிருஷ்ணா கமிட்டியிலிருந்து
பின்னர் வந்த கமிட்டிகள் வரை சீரமைப்பு நவீனமயமாக்கம் பற்றி பேசாமல் இல்லை. பிரதமர்
மன்மோகன் ஆட்சியில் ஏ.கே அந்தோணி அவர்கள் ’இராணுவக்கட்டுமானம்’ என்பதில் மிக தாழ் நிலையில்
நாம் இருக்கிறோம் எனபதை வெளிப்படையாக அறிவித்தார். பல முனைகளில் சீர்திருத்தம் என்பது
திரு மோடி வந்தவுடனேயே பேசப்பட்டது. வாஜ்பாய் காலத்தில் போடப்பட்ட கார்கில் ரிவ்யூ
கமிட்டி முடிவுகளும் கிடந்தன. 2012 நரேஷ் கமிட்டி Task force பரிந்துரைகள் பல வெளிப் பார்வைக்கு வராவிட்டாலும்
100க்கு மேற்பட்ட பரிந்துரைகள் என்பது தெரிய வந்தது.
ரஷ்யா சீனா உடன்பாடுகள்- ரஷ்யாவில்
இராணுவத்தில் புடின் ஏற்படுத்திய சீரமைப்புகள்- அதைத்தொடர்ந்து ரஷ்ய பாணியில் சீனா
செய்து வரும் சீரமைப்புகள் இந்தியாவின் கவனக் குவிப்பை பாகிஸ்தானிலிருந்து சீனா நோக்கியதாக
மாற்றியுள்ளது என இந்திய பாதுகாப்பு குறித்த
ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி வருவதைக் காணலாம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா செய்துவரும் மாற்றங்களை உன்னிப்பாக
கவனித்து வரும் இந்திய establishment தன்னையும்
அவ்வாறு தகவமைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
’காந்தியின் தேசத்தில்’ இராணுவச்
செலவைக் குறைப்பது எப்படி என்பதல்ல சிந்தனை. அதற்கு பதில் செலவாவதில் எந்த componentக்கு செலவிடுவது எனும் பிரச்னை எழுந்துள்ளது.
மனித வளம் என்பதில் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டு வாழ்நாள் பென்சன் செலவைக் கூட்டிக்கொள்ளாமல்-
நவீன கொள்முதல் கருவிகளுக்கு உகந்த பயிற்சி கொண்ட
thin human force என்ற திசை நோக்கி
நகரத்துவங்கியுள்ளனர். அதன் ஆரம்பம்தான் அக்னிவீரர் ஆளெடுப்பு முறை என புரிந்துகொள்ளமுடியும்.
இந்திய இராணுவத்தில் வீரர்கள்
பகுதியில் shortage லட்சத்தை தாண்டும் என்று கணக்கிட்டால் சிவிலியன்
பகுதியில் அது 2 லட்சத்தை தாண்டும். அங்கு 30 சதத்திற்கு மேல் பற்றாக்குறையாம்.
2019 கணக்கின்படி வீரர்கள் பகுதியில் 14.38 லட்சம் இருப்பர். அங்கு 15.15 லட்சம் sanctioned strength. பற்றாக்குறை 5 சதம். மொத்த வீரர்களில் ஆர்மி 85
சதம், ஏர்போர்ஸ் 10 சதம் ,நேவி 5 சதம் என பிரிந்து பணியாற்றி வருகின்றனர். மூன்றிலும்
உள்ள அதிகாரிகள் 5 சதமளவில் இருப்பர்.
பென்சன் பகுதியைப் பார்த்தால்
மிலிட்டரி பென்சனர் 26.33 லட்சம் 81 சதமாக
இருப்பர். மீதி 19 சதம் சிவிலியன் பென்சனர்கள். சிவில் பென்சன் செலவே 20-21 பட்ஜெட்டில்
5114 கோடியென காட்டியிருந்தனர். இதில் 1000 கோடி NPS செலவும் சேர்ந்த ஒன்று. பாதுகாப்பு துறை பென்சன்
செலவு ஒட்டுமொத்த மத்திய அரசு பென்சனர் செலவில் 51 சதமாக இருக்கிறது எனச் சொல்கின்றனர்.
1971ல் வீரர்கள் 9.58 லட்சம் இருந்தனர். 1995ல் இது 11.8 லட்சமாகவும், 2019ல்
14.38 லட்சமாகவும் உயர்ந்தது. ஆனால் சிவிலியன் பகுதி 2000-2017 கால கணக்கொன்றின்படி
21 சதம் வீழ்ந்துள்ளது. பாதுகாப்பில் வீரர்கள் எடுப்பு ஆண்டுதோறும் உயர்ந்தும், சிவிலியன்
வீழ்ந்தும் இருக்கும் எண்ணிக்கை நமக்கு கிடைக்கிறது. பாதுகாப்பு சார்ந்தவர்கள் என்கிற
எண்ணிக்கையில் 62 சதம் ஓய்வு பெற்றவர்கள் என வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல - உலகெங்கும் working active population vs Retired population Ratio பெரும் பிரச்னையாகிவுள்ளது. என் போன்றவர்கள் வேலைக்கு சேரும்போது ஆளெடுப்பு 5 சதம் என்றால் ஓய்வு பெறுபவர் 2 சதம் என்றளவே இருந்தனர். பொதுவாக பணியில் இருப்பவர்- ஓய்வுபெற்றவர் 4 : 1 என்ற விகிதம் காப்பாற்றப்பட்டு வந்தது. 4 ஊழியர் ஊதிய நிலையில் pension contribution சராசரியாக ஒருவர் ஓய்வு பெறும் ஓய்வூதிய செலவை ஈடுகட்டியது. ஆனால் இன்றோ நிலைமை பெருமளவு மாறிவிட்டது.
ஆளெடுப்பு நின்றுபோய் இருப்பவர் ஓய்வு பெறுதல் மட்டுமே நிகழ்ந்து விகிதம் 1:1 என்றானது. தற்போது ஓய்வூதியர்கள் டெலிகாமில் 4 லட்சம் என்றால் இருப்பவர்கள் DOTயையும் சேர்த்தால் கூட 1 லட்சம் வரமாட்டார்கள்.
4 ஓய்வூதியருக்கு ஒரு பணியாளர் என இருக்கும் சமூகமாக டெலிகாம் மாறியுள்ளது. வளர்ந்து
வரும் டெக்னாலஜிக்கு குறைவான அதிக பயிற்சிகொண்ட ஊழியர்கள் போதும் என்பது அங்கு தொடர்ந்து
பல அரசாங்கங்களாலும் பின்பற்றப்பட்ட கொள்கையானது.
இன்று பாதுகாப்பு பகுதியில் சிவிலியன்
குறைப்பு என்பது நடந்து முடிந்த சூழலில் வீரர்கள் பக்கம் புயல் திரும்பியுள்ளது.
பென்சன் இல்லாத அரசாங்க பணியாளர்
என்பது அடுத்த முப்பதாண்டுகளில் மிகச் சாதாரண ஒன்றாக இருக்கும். தனியார் போலவே அரசாங்கமும்
நடந்துகொள்ளும் காலம் முன்பே வந்துவிட்டது. வலுத்தவன் வாழ்வான் survival of the
fittest என்பது வந்த நிலையில் நம்மை நாம் நல
அரசு என அழைத்துக்கொள்ளமுடியுமா என்கிற கேள்வி எழலாம். எவரின் நலம் - எந்த பகுதி மீது
அரசாங்கம் கவனம் தொடரவேண்டுமோ அந்தப் பகுதிக்காவது நேர்மையாக நலத்திட்டங்களை அரசு அமுல்படுத்துமா
என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.
pension species என்பதின் கடைசி தலைமுறை காலத்தில் எங்களைப் போன்றவர்கள்
இருக்கின்ற உணர்வு மேலிடுகிறது.
23-6-2022
மிக விளக்கமான கட்டுரை. அரசின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நன்றி
ReplyDelete