மதசார்பின்மை காந்தியின் புரிதல்
-ஆர்.பட்டாபிராமன்
காந்தியடிகளின் மதம் குறித்த பார்வை பன்முகத்தன்மையிலானது.
சர்வமதங்களின் அடிப்படை உண்மை என்பதில் அவருக்கு நம்பிக்கையிருந்தது. எந்தவொருமதத்தின் போதனைகளையும் அதனை நம்புவோர் படித்தறியும் வகையில்
நாம் புரிந்து கொள்ளத் துவங்கினால் சமயங்களின் ஊடே காணப்படும் இணக்கமொழியை உய்த்துணரமுடியும்
என அவர் கருதினார்.
உண்மையைத் தேடுவதில்
பொதுவிவகாரம், தனிவிவகாரம் என பிரித்து பார்க்க அவர் விரும்பியதில்லை. மதம் குறித்தும்
அவருக்கு அப்படிப்பட்ட பார்வை இருந்தது. உண்மை தான் இறுதியானது. என்ன விலையானாலும்
சரியானதை செய்யும் தைரியம் என்பதுதான் வழிகாட்டும் நெறி. எவ்வளவு பேசினாலும் நம்மை
நாம் ஆள்வதற்கு அப்பேச்சுக்கள் மட்டுமே நம்மை தகுதிப்படுத்திவிடாது. செயல் மூலம் நாம் நடந்துகொள்வதில்தான் ஆள்வதற்கு பொருத்தமானவர்களாக
ஆகமுடியும். இறையை நம்பி அவருக்கு மட்டும் பயந்து நடந்தால் நாம் மகாராஜாக்களுக்கு,
நம்மை இரகசியமாய் மோப்பம் பிடிப்பவர்களுக்கு, வைஸ்ராய்களுக்கு அஞ்சவேண்டியதிருக்காது.
இதுதான் தன்னைப் பொறுத்தவரை கோல்டன் ரூல் என்றார் காந்தி.
மதசார்பின்மை மேற்கத்திய அனுபவத்தில் அரசியல் அதிகாரத்திற்கும்
மதாலய அதிகாரத்திற்குமான முரண்பாட்டில் சர்ச்சிற்கும் அரசியலுக்குமான அதிகார செல்வாக்கு
வெளியை பிரிக்க வேண்டிய சூழலை சந்தித்தது. மதத்தை ஏற்காத மதசார்பின்மை என்கிற கருத்து
மதசார்பின்மையின் விளக்கமானது. சமரசமாக மதம் மனித வாழ்க்குரிய புனித இடத்தையும், அரசாங்க
நிறுவனங்களில் அரசதிகாரம் மதசார்பற்றும் என்கிற கருத்துக்கள் ஏற்கப்பட்டன.
இந்திய அனுபவம் என்பதில் மதம் மற்றும் அரசியல் மோதல் போக்கில்
உருவான ஒன்றல்ல மதச்சார்பின்மை என்பது மார்க்சியர்களும் ஏற்கும் கருத்து. அனைத்து மதங்களையும் நல்லிணக்கப்படுத்துவது என்பதை கடந்து மதத்தை முற்றிலுமாக பிரித்து நீக்குவது என்பது பொதுவான
மார்க்சிய புரிதல். ஆனால் காந்தியைப் பொறுத்தவரை அவரது அணுகுமுறை மத நிராகரிப்பு
என்பதாக இல்லை. சர்வ மத சம பாவிப்பு- மத நம்பிக்கை-எம்மதத்தின் மீதும் வெறுப்பின்மை
என்பதாக இருந்தது. இந்துமதம், இஸ்லாம் வாழ்வியல் சார்ந்தவைகளாக உணரப்பட்ட இந்திய சூழலில்
மேற்குவகைப்பட்ட மதசார்பின்மை என்கிற புரிதல்
பொருத்தப்பாடு குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.
காந்தி செக்யூலரிசம் என்பதையும் மதம் என்பதையும் எதிர்நிலை
கருத்துருவங்களாக பார்க்கவில்லை. அரசியலிருந்து மதம் முறித்துக் கொள்ளவேண்டும் என்பதை
அவர் ஏற்கவில்லை. அரசியலில் பங்கேற்பவர்களுக்கும் அவர்கள் வழிநடத்தும் திரளான மனிதர்களுக்கும்
மதம் உதவிகரமாக இருக்கும் என்றே அவர் கருதினார். மதம் அவசியமா இல்லையா என்பதல்ல அவருக்கு
பிரச்சனை. அனைத்து மதமும் அவரவர் மதத்தை சரியாக கடைபிடிப்பதா அல்லது மதம் என்கிற பெயரில் செக்டேரியன் ஆக, வகுப்புக்கலவரம், மதவெறி தூண்டுபவராக
இருப்பதா என்பது அவர் முன் நின்ற சவால். உண்மையான மதநம்பிக்கை என்பதற்காக அவர் தன்னை
ஆற்றுப்படுத்திக்கொண்டார். பன்மைத்துவ வாழ்க்கைமுறையை ஏற்று ஒழுகுதல் என்பதில் அவர் உறுதிபட நடந்து காட்டினார்.
நடைமுறை பிரச்சனைகள் குறித்து கவனிக்காத எம்மதமும் மதம் என
ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லும்போது மதம் இந்த பூமிசார்ந்த பிரச்சினை, சொர்க்கலோக பிரச்சினையல்ல
என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
செக்யூலரிசம் என்பதை விழிப்படைந்த மதத்தன்மையாக அவர் பார்த்தார்.
அனைத்து மதப்பிரிவினரும், அனைத்து சாதியினரும், பெண்களும் விடுதலை இயக்கத்தில் இணையவேண்டும்
என்கிற உயர்நோக்கு அவரை இயக்கிக்கொண்டிருந்தது. அதில் பேதமுற்று நின்றால் சேதாரமாகும்
என்பதை அதிகமாக புரிந்தவராக காந்தி விளங்கினார். அனைவரின் ஒன்றிப்பு என்பதை அவர் வெறும்
தந்திர நடவடிக்கையாக கைக்கொள்ளவில்லை.
இந்து முஸ்லீம் பிரச்சினை மதம் சார்ந்த ஒன்றாக இருப்பதால்
மதங்களின் நல்லிணக்கம் ஒற்றுமை என்பது நடைமுறை அவசியம் என்பதை அவர் ஆழமாக புரிந்தவராக
இருந்தார். கிலாபத் இயக்க ஆதரவு கூட உணர்ச்சிவசப்பட்டு அவர் எடுத்த முடிவல்ல. அரசியலில்
மதம் கலப்பது குறித்த விமர்சனத்தை அவர் இதில் எதிர்கொள்ளாமல் இல்லை.
இந்து முஸ்லீம் பிரச்சினையில் அரசியல் பொருளாதார நலன்கள்
எதிர்பார்ப்புகள் இருப்பதையும் அவர் புரிந்துகொள்ளத்துவங்கினார். நாட்டின் பிரிவினையின்போது
ஜின்னா பொறுப்பேற்று ஒன்றுபட்ட இந்தியாவை தலைமை தாங்கலாம் என அவர் தெரிவிக்க தயங்கவில்லை.
அவரின் ராமராஜ்யம் என்பதுகூட குறுகிய பொருளில் புரிந்துகொள்ளப்படும் இந்துராஜ்யமல்ல.
அப்படி ஒரு கனவை வளர்த்துக்கொள்வது தேசபக்தியாகாது என்கிற கருத்து அவருக்கு 1924லேயே
இருந்தது.
அரசாங்க மதம் என ஒன்று கூடாது என்றே அவர் கருதினார். நாடுமுழுக்க
ஒரேமதத்தவர் வாழ்ந்தாலும் கூட அரசாங்க மதம் ஏற்புடையதல்ல என்றார். நாட்டின் சட்டங்களை
மதித்துவாழும் குடிமகன் அவர் விரும்பும் மத அனுசரிப்புகளை மேற்கொள்வதில் தடை இருக்கக்கூடாது
என அவர் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். நான் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்
அரசும் தனித்தே இருக்கும் என்றார். . அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாக அவர் மதத்தை பார்க்கவில்லை.
மதம் தனிப்பட்ட விவகாரம் என்பதில் நாம் வெற்றி அடைந்துவிட்டால் அரசியலில் எல்லாம் நன்றாகவே
போகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையினருக்கு என்ன உளதோ அதே அளவு சுதந்திரத்தை உறுதி
செய்திடாத விடுதலை எத்தகைய விடுதலை என்கிற கேள்வியை அவர் மற்றவர் விழிப்படைய கேட்டுக்கொண்டிருந்தார்.
அரசை நம்பி தன் இருப்பிற்கு செயல்படும் மதம்
எப்படி மதம் என்கிற தன்மையை வெளிப்படுத்தும் எனவும் அவர் வினவ தவறவில்லை.
சமுகத்தில் அனைத்து
மதங்களுக்கும் சம பாவிப்பு என்கிற பார்வையை
வலியுறுத்தியவர் காந்தி. தனது அன்றாட வாழ்க்க்கையின் நிகழ்வுகளின் தொகுப்புதான் தன்
மதம் என்றார்.. நமது அனைத்து நடவடிக்கைகளிலும் மதம் உள்ளார்ந்து இருக்கவேண்டும் என்று
சொல்லும்போது அன்றாட வாழ்வின் நடத்தை மட்டும் செயல்களை குறிப்பதாகவும் அவை உண்மை மற்றும்
நீதிநெறி சார்ந்தவைகளாக இருக்கவேண்டும் என்கிற விளக்கத்தை அவரிடம் பெறமுடியும். அன்றாட
தனது செயல்களை மீறிய மதம் என ஏதுமில்லை எனவும் தெரிவித்தவர் காந்தி.
கடவுள் சொர்க்கத்திலோ , பாதாளலோகத்திலோ இல்லை. நம் ஒவ்வொருவரிலும்
இருக்கிறார். மானுடசேவை மூலம் கடவுளை பார்க்க நான் முயற்சிக்கிறேன் என்றார். இந்து மதம் என்பதை பிற
மதங்களைவிட உயர்வாக கொண்டாடுவதல்ல என் மதம்.
இந்துயிசம் கடக்கத்தெரிந்தது அது. உண்மையை
எப்போதும் இணைத்துக்கொள்வது, நமது செயல்களை சுத்தப்படுத்துவது என அவர் விளக்கினார்.
டாக்டர் இராதாகிருஷ்ணணிடம் உரையாடும்போது என் மதம் இந்துமதம்-
அனைத்து மத உயர்வானவற்றைறையும் கொண்ட மதம், மானுடத்தின் மதம் என்கிறார். பல்வேறு மார்க்கங்களின் வழியே ஒரே இலக்கைத்தான்
பல சமயங்களும் அடைகின்றன. எனது அண்டைவீட்டாரின் நம்பிக்கை என் நம்பிக்கையைவிட தாழ்ந்தது
என எவ்வாறு எண்ண முடியும் என கேட்டவர் காந்தி. மதங்கள் குறையுள்ளதாக ஏன் தெரிகிறது
என்பதற்கு முழுமையற்றவர்கள் வழியான விளக்கங்களை நாம் பெறுவதால் என்கிற விளக்கத்தை அவர்
தந்தார்.
மற்றவர்க்கான பிரார்த்தனை என்பது அவர்கள் உயர் வளர்ச்சிக்கான
ஒளியை அவர்களுக்கு வழங்கிடுக என்பதானதே. பிற மதங்களின் புனிதநூலை நம்புவது என்பதற்காக
தனது மதத்தை ஒருவர் விடவேண்டியதில்லை என அவர் வற்புறுத்தினார். மதமாற்றம் என்பதை அவர்
ஏற்கவில்லை. கீதையைப் போலவே அவர் பைபிள் குரான ஆகியவற்றையும் செரித்து புரிந்துகொண்டவர்.
தனது பைபிள் விளக்கப்படி தான் கிறிஸ்துவர், குரான் விளக்கத்தில் தான் முசல்மான் என
அழைத்துக்கொள்ளும்போது இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்பவை ஒத்த பதங்கள் என்றே உணர்வதாக
அவர் பேசியிருக்கிறார். இஸ்லாமியர்களின் நண்பன் நான். அவர்களின் சுகதுக்கங்கள் எனதானதாகவும்
இருக்கின்றன. அவர்களின் தவறு எனது தவறும்கூட. அவர்களின் நல்லனவற்ற செயல் என்னை இந்து
ஒருவரின் நல்லனவற்ற செயல் போலவே பாதிக்கிறது. சிறு தவறுகளை நாம் ஊதி பெரிதாக்கிவிடக்கூடாது
என்கிற அறிவுரை மூலம் மதநல்லிணக்க வழியை காட்டியவர் காந்தி.
மதசகிப்பு என சொல்லும்போதுகூட தமது மதம் உயர்ந்தது என்கிற
எண்ணம் எழுந்துவிடலாம் என்பதற்காக அவர் பரஸ்பர மரியாதை எனப் பேசினார்.. அனைத்து மதங்களும்
அடிப்படையில் சமதையானவைகளே என்பதை அழுத்தமாக சொல்லியும் அனுசரித்தும் வந்தார். நாம்
முதலில் இந்தியனாக இருப்போம். பின்னர் இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்துவராக இருக்கலாம்
என்றார். அவரை பொறுத்தவரை செக்யூலர் என்பது மதமறுப்பு கருத்தாக்கமல்ல. சமமதிப்பு கருத்தாக்கம்.
சி எஃப் ஆண்ட்ரூஸ் காந்தியை அரசியலில் துறவி என மதிப்பிட்டார்.
முழுமையாக மானுடகுலத்துடன் என்னை அடையாளப்படுத்திகொள்ளாமல் எனது மத நடைமுறை இல்லை என்றார்
காந்தி. எனது அரசியலும் பிற நடவடிக்கைகளும் சமயத்திலிருந்து பெறப்பட்டவைதான். அரசியல்
நுழையாத சமய வாழ்க்கை இல்லை என்ற கருத்து அவரிடம் தொழிற்பட்டது. காந்தி தன்னை புலமையாளராக
காட்டிக்கொண்டதில்லை. நடைமுறை செயலுக்குரியவராகவே தன்னை உணர்த்தியவர்..
தேசத்தில் அனைத்து மதங்களும் அருகாமையில் ஒன்றை ஒன்று பொறுத்துக்கொண்டு
உயர்ந்த நாகரிக மனிதர்கள் போல் வாழவேண்டும் என்பது அவரின் இந்தியக்கனவு. I do not
expect the India of my dreams to develop one religion, that is wholly Hindu, or
wholly Musalman or wholly Christian, but I want it to be wholly tolerant with
its numerous sects working side by side with one another like cultured human
beings. அவரது கனவுப்பாதையில் இந்தியா சறுக்கிடாமல் செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பன்மதங்களின் நம்பிக்கை
கொண்ட மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் மதசார்பின்மை என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது
என்பது விடுதலைக்கால தலைவர்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. இந்தியாவில்
பிறந்த அனைவருக்கும் இந்துஸ்தான் உரியது என்றார் காந்தி. விடுதலை அடையும் இந்திய இந்து
ராஜ்யமாக இருக்காது, இந்திய ராஜ்யமாகவே இருக்கும் என்றார். இந்து இஸ்லாம் என்கிற பெயரில்
இருதேச கொள்கை தனக்கு உடன்பாடானதல்ல என்றார் காந்தி. காந்தியின் ராமராஜ்யம் என்பது
இந்து ராஜ்யமல்ல. அது ஒருவகை விவசாயிகளின் உடோபியா என்கிற விளக்கமும் நமக்கு கிடைக்காமல்
இல்லை.
எம் என் சீனிவாஸ் சமய பிரச்சனைகளில் காந்தியின் நவீனத்துவம்
பற்றி உயர்வாக குறிப்பிடுவார். குழந்தை மணம் எதிர்ப்பு, வரதட்சிணை கொடுமை, விதவைகளை
கொடுமையாக சமூகம் நடத்துவது, தீண்டாமை எதிர்ப்பு போன்றவற்றில் அவரது நவீனத்துவத்தை
சீனிவாஸ் பேசுகிறார். காரணகாரிய அறிவிற்கு உட்படுத்தப்படாத மத அனுஷ்டானங்களை ஏற்காமை
என்பதை அவர் அனைத்து மதங்களிலும் சரிபார்த்துக்கொண்டார் என்கிறார் சீனிவாஸ்.
மத நம்பிக்கைகளுக்கு ஏற்ற இறக்க படிமுறைகளை கடைப்பிடித்தவர்
அல்ல காந்தி. மத சடங்குகளில் உட்படுத்திக்கொள்ளாமல் அதன் உள்ளார்ந்த ஆன்மீகத்தன்மைக்கு
அவர் முன்னுரிமை கொடுத்தார். அவர் வர்ணாஸ்ரம நம்பிக்கை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அவர் தான் ’பங்கியாக’ பிறக்க விரும்புவதாக அறிவித்தவர்.
ஆசிரம வாழ்க்கை துவங்கி பொதுச் சமூகம்வரை வேலை,
வழிபாடு, சட்டதிட்ட முறைகள் என்பதில் சமத்துவம் என்பதை அவர் உயர்த்திப்பிடித்தார்.
அனைத்து மதங்களின் பொது ஈவாக அவர் விழைந்தது அன்பு, அகிம்சை,
நன்னெறி. இஸ்லாம் என்பதற்கு அமைதி எனப்பொருள் என்றார். அது உலக அமைதியும் கூட என என
தனது புரிதலை விரிவுபடுத்தினார்
இந்திய கலாச்சாரம் என்பது இணைவு கலாச்சாரம். இங்கு வந்து
தங்கியவர்கள் எல்லாம் செல்வாக்கு செலுத்தியுள்ளனர். செல்வாக்கிற்கும் உள்ளாகியுள்ளனர்.
அது இந்திய கலாச்சாரம். இந்து கலாச்சாரமோ, இஸ்லாமிய கலாச்சாரமோ அல்லது முழுமையாக வேறு
ஒன்றின் கலாச்சாரமோ அல்ல. கீழைத்தேய ஒன்றிப்பது. இந்தியர் என அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும்
அதன் மதிப்புணர்ந்தவர்களாக தாக்குதலை தடுப்பவர்களாக இணைவுத்தன்மையை காப்பவர்களாக இருப்போம்
என்றார் காந்தி.
Comments
Post a Comment