தமிழ்நாட்டின் மொழிச்சூழல்
தமிழ்நாட்டின் மொழிச்சூழல் எனும் ஆய்வு புத்தகத்தை பூபதி எழுதியிருந்தார். 1998ல் தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டிருந்தது. அதில் 1971 சென்சஸ் படியிலான விவரம் ஒன்றை பூபதி அவர்கள் கொடுத்திருந்தார். இன்று இந்த விவரம் 2011 சென்சஸ் படி மாறியிருக்கக்கூடும்.
50 ஆண்டுகளுக்கு முன்னரான தமிழக அன்றைய சென்சஸ் படி 37 மொழிகள் தமிழ்நாட்டில் பேசப்பட்டன. இதில் 5 மொழிகள் மட்டுமே அதிகமானோரால் பேசப்பட்டுள்ளன. தமிழ் 84.5%, தெலுங்கு 8.7%, கன்னடம் 2.6 %, உருது 1.8 %, மலையாளம் 1.4 %
அப்போது ஆந்திராவில் தெலுங்கு 86%, கேரளாவில் மலையாளம் 95 %, கர்நாடகாவில் கன்னடம் 65 % பேசப்பட்ட கணக்கைப் பார்க்கலாம். கர்நாடகா தவிர மூன்று மாநிலங்களிலும் அன்று ஒருமொழி monolingual சூழலே காணப்பட்டதாக பூபதி சொல்கிறார்.
அடுத்து தமிழக மாவட்டங்களில் மொழிச்சூழல் பற்றிய விவரம் சொல்லப்படுகிறது
தஞ்சாவூர் 97 % தமிழ் தெலுங்கு 1.2 %
திருச்சி தமிழ் 92.8 % தெலுங்கு 5.6 % உருது 1.2 %
திருநெல்வேலி தமிழ் 95.2 %, தெலுங்கு 4 %
தென் ஆற்காடு தமிழ் 93.7 %, தெலுங்கு 3.9 % உருது 1.8 %
நீலகிரி எடுத்தால் தமிழ் 38.1 %, படகா ( கன்னடம்) 31.9 %, மலையாளம் 19.4 % அதாவது இந்த மாவட்டம் பன்மொழி சூழல் கொண்டதாக ( multilingual) உள்ளது
தர்மபுரியில் 65.99 % தமிழ், தெலுங்கு 18.25 %, கன்னடம் 10.48%, உருது 4.4 %
கோவை தமிழ் 51.28 %, தெலுங்கு 22.95 %, கன்னடம் 7.91 %, மலையாளம் 12.79 %, உருது 2.84 %. இங்கு சரிபாதி தமிழல்லாத மொழிகள் எனத் தெரிகிறது. தர்மபுரி, கோவை பன்மொழி சூழல் கொண்டவை.
சேலம் தமிழ் 59.33% , கன்னடம் 10.85%, தெலுங்கு 6.65 %, உருது 6.37 %, குஜராத்தி 4.92 %, மலையாளம் 1.23 % சேலமும் பன்மொழி சூழலில்.
சென்னையில் தமிழ் 73.47%, தெலுங்கு 11.99 %, உருது 5.72 %, மலையாளம் 3.07 %, இந்தி 1.26 %. பூபதி ஆய்வில் சென்னை, திருவனந்தபுரம் ஒருமொழி சாய்வுச் சூழல் கொண்டதாக தெரிகிறது.
மதுரை தமிழ் 74.65 %, செளராஷ்ட்ரா குஜராத்தி 13.11 %, தெலுங்கு 7.2 %, உருது 3.09 %. பூபதி ஆய்வில் மதுரை சென்னையைவிட ஒப்பீட்டில் பன்மொழிச்சூழல் கூடுதலாக உள்ள நகராக சொல்லப்படுகிறது.
பூபதி அவர்கள் தன் ஆய்வு வழியாக வந்தடைந்த புள்ளி தமிழ்நாட்டில் மொழி மாறுபடும் தன்மை 0.28 அளவில் இருக்கிறது. அதாவது ஒருமொழி மாநிலமாகவே இருக்கிறது. நீலகிரிதான் மொழி மாறுபடும் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் தொடர்பு சாதன சாத்தியக்கூறு குறைவாக இருக்கிறது.
பூபதி அவர்கள் மாவட்டவாரியாக மொழி மாறுபாடு தன்மையின் அட்டவணையை விரிவாக தந்துள்ளார். கிரியெர்சன் திராவிடமொழி வகைப்படுத்தல் கால்டுவெல்லிலிருந்து எங்கு மாறுபடுகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். ஆண்ட்ரனோவ் வட திராவிட மொழி குழு- தென் திராவிட மொழி- துளுவை தெலுங்குக்கருகில், தோடா-கோடா தமிழ்- மலையாளத்தின் அண்டை மொழிகள் என்றார். சிலர் தெலுங்கை மத்திய திராவிடப் பிரிவில் வைத்து பேசுவதை பூபதி சொல்கிறார். சுவலபெல் திராவிட மொழிகள் பட்டியலில் வெளிக்கொணரப்பெறாத பல மொழிகளை இணைத்துள்ளார்.
இதேபோல் தமிழின் கிளைமொழிகள்- வட்டார பேச்சுமுறையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வட்டார கிளை மொழி- சாதி கிளைமொழி- தொழில் கிளை மொழி என சீனிவாச வர்மா சொல்கிறார். வட்டாரங்களில் ஒலியன்கள், இலக்கண நிலை, சில அருஞ்சொற்கள் எப்படி இருக்கின்றன என்பதும் இந்த ஆய்வில் பார்க்கப்பட்டுள்ளது.
உதாரணமாக புதுக்கோட்டை- தஞ்சை- திருச்சி- தென்னார்க்காடு வழக்கை மத்தியக் கிளைமொழி என்கிறார்கள். ழ கர கிளைமொழி. வந்திச்சு என்கிற பயன்பாடு. அவன் அவள் என்பதை அது என்பது. அக்கா அது வந்திச்சு போல. பாக்குது போவுது. உன்னய, இவுக சொன்னாக. சில சொற்கள் கொட்டாஞ்சி, எம்பளது, கெடேறி, குந்து, கவுளி ( வெற்றிலை கட்டு), நொவத்தடி. இதேபோல் பல்வேறு வட்டாரங்களின் பேச்சு சூழல் இவ்வாய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சீனிவாச வர்மா 1977ல் அரிசனர், பிராமணர், வேளாளர், நகரத்தார், படையாச்சி, கள்ளர் சாதிக்கிளை மொழிகளின் மொழியியல் கூறு வேறுபாடுகளை வெளிக்கொணர்ந்ததை பூபதி சுட்டிக்காட்டுகிறார். அவர்களின் அருஞ்சொற்கள் குறித்தும் பேசுகிறார். தொழில்வகையில் மீன்பிடி, உப்பு உற்பத்தி, மண்பாண்ட குயவர் எப்படி பேச்சு வழக்கு வைத்துள்ளனர் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.
தவிரவும் கொல்லிமலை, கல்ராயன் மலை, பச்சை மலை என பல்பகுதி மொழிச்சூழலை ஆசிரியர் விவாதிக்கிறார். தமிழ்நாட்டில் வாழ்கிற தெலுங்கர்களின் கிளைமொழிகள், கன்னடம்- மலையாளம் கிளைமொழிகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.. காட்டுநாயக்கர் மொழி, நீலகிரி கசபர், தோடர், கோத்தகிரி கோத்தர், கோவை காடர், இருளர் எனக்கூட தனியாக பேசப்பட்டுள்ளது.
பூபதி
அவர்களின் இந்த ’தமிழ்நாட்டின் மொழிச்சூழல்’ மொழியியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய புத்தகங்களுள் ஒன்று
.
Comments
Post a Comment