https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 15, 2022

மார்க்ஸ் பற்றி சாமி சிதம்பரனார்

 

மார்க்ஸ் பற்றி  சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார் (1900-1961) தமிழறிஞர். பெரியார் சரிதம் 1939ல்எழுதியவர். 60க்கும் மேற்பட்ட நூல்கள் தந்து தமிழ் அறிவுலகிற்கு தொண்டாற்றியவர். தனித்தமிழ், நீதிக்கட்சி என பயணித்தவர். இவர் குறித்த ஆய்வறிஞர்கள் பகுத்தறிவுப் பார்வையில் பழந்தமிழ் இலக்கியம் வழி தமிழ் மக்களின் வாழ்க்கையை பண்பாட்டை தெளிவு படுத்தியவர்  சாமி சிதம்பரனார் என்பர்.

அறிஞர் சாமி சிதம்பரனார்   காரல் ஹென்றி மார்க்சு எனும் சிறிய வெளியீடு ஒன்றை 1937ல் எழுதியுள்ளார்.  அறிவுக்கொடி எனும் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதை 1980ல் தோழர் எம் வி சுந்தரம் சிறு வெளியீடாக கொணர்ந்தார். மார்க்ஸ் குறித்த எளிய சித்திரம்தான் சாமி அவர்கள் தந்திருப்பது- ஆனாலும் 1937ல் மார்க்சின் வாழ்க்கை கட்டங்களை (timeline)  முடிந்தவரையில் விடாமல் சுருக்கமாகவாவது தொட்டுக்காட்டியிருப்பது ஆச்சர்யமான ஒன்று. இன்று மார்க்ஸ் குறித்து பல்லாயிரம் பக்கங்கள் கொட்டிக்கிடக்கிறது. அன்று மிகச் சிலரே மார்க்சை தொட்டு எழுதின காலத்தில் சாமி அவர்கள் செய்திருப்பது சிறப்பானது.சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் வரலாறு 80 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தன் சிறப்பு குறையாத புத்தகம். அவருக்கு 1942ல் அதைக்கொணரும்போது ஹரால்ட் லாஸ்கியும், இசையா பெர்லினும் தங்கள் அற்புத நூல்வழி துணை புரிந்தனர். சாமி சிதம்பரனாருக்கு எங்கிருந்து நூலாதாரம் எனத் தெரியவில்லை. ஆனாலும் அவரின் சிறு வெளியீடு அன்றைய கால வெகுமதிக்குரியதே. இனி சாமி அவர்கள் சொல்வதை சுருக்கமாக பார்க்கலாம்.புதிய மனித சமூக வாழ்க்கையமைப்பை ஏற்படுத்த சோதனைகளை பலர் செய்துள்ளனர். அதில் ஓவன் எனும் பெரியார் துவங்கி செய்யப்பட்டதை சாமி சிதம்பரம் சொல்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டு பெரிய அறிவாளிகள் எனமார்க்சு- ஏஞ்சல்ஸ்யை ( மார்க்ஸ்- எங்கெல்ஸ்) குறிப்பிட்டு அவர்களின் சமூக சமத்துவத் திட்டத்திற்கு விஞ்ஞான சமதர்ம முறை என்று பெயர் என்கிறார்.

”இவர்களுடைய திட்டங்கள் சமதர்மக்காரார்களாலேயே நடத்திக்காட்டுவது முடியாத காரியம் என கைவிடப்பட்டுவிட்டன.. ஆனால் இப்பொழுது பொருளாதார சமத்துவம் என்ற பேச்சு உண்டானதற்கு இவர்களுடைய திட்டங்களே அடிகோலின” என்கிறார்

மார்க்சு சமதர்மக் கொள்கையை விடாப்பிடியாக கொண்டு நின்றார். அதனால் அவருக்குண்டான துன்பங்கள் அளவற்றவை. அவர் சிறந்த பொருளாதார நிபுணர். மக்களின் எதிர்கால இன்ப வாழ்விற்கு வழிகோலிய தீர்க்கதரிசிஎன மதிப்பிட்டார் சாமி சிதம்பரனார்.

 மார்க்சின் பிறப்பு- படிப்பு- ஜென்னி காதல்- ஹெக்கல் சாஸ்திரம் மீது (ஹெகல்) ஈர்ப்பு- தந்தையுடன் உறவு- மார்க்சின் தத்துவ சாஸ்திரப் பயிற்சி குறித்தெல்லாம் மிகச் சுருக்கமான பதிவை சாமி சிதம்பரனார் தருகிறார். மார்க்சின் பத்திரிகை அனுபவத்தைப் பற்றிய சுருக்கம் தரப்படுகிறது. ரெனிக் ஜீட்டங் ( ரெயினிஷ் ஜெய்டுங்), பிரான்ஸ் ஜெர்மன் வருஷ அனுபந்தம்- இந்தக் காலத்தில் ஏஞ்சல்ஸ் ( எங்கெல்ஸ்) உடன் ஏற்பட்ட நட்பு சொல்லப்படுகிறது.

 ஏஞ்செல்ஸ் மார்க்சைப்போல் அவ்வளவு படிப்புடையவர் அல்லர்; ஆயினும் தெளிந்த அனுபவ அறிவுடையவர்; குற்றமற்ற மனமுடையவர். அபிப்ராயங்கள் தெளிவாக இருக்கும். செயலில் நடத்திக் காட்டக்கூடியதாக இருக்கும். இந்த சிறந்த நட்பாளர் கிடைத்திருக்காவிட்டால் மார்க்சு சிறந்த நூல்களை வெளியிட்டிருக்க முடியாதுஎன எங்கெல்ஸ் குறித்த சாமி சிதம்பரனார் மதிப்பீட்டைக் காண்கிறோம்.

 ஏஞ்செல்ஸ் தொழிலாளர் இயக்கத்தில் அளவுகடந்த அனுதாபமுடையவராயிருந்தார். பார்மென் சென்று தந்தையிடம் இனி மான்செஸ்டர் தொழிற்சாலையை கவனிக்க முடியாதென்று கூறி வெளியேறி பிரான்ஸ் வந்து சேர்ந்தார்என  சாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

மார்க்சின் பிரஸ்ஸல்ஸ் வாழ்க்கை ஜெர்மன் தொழிலாளர் நிறுவனம்- மறைமுக இரகசிய சமதர்மச் சங்கம்- வறுமையின் தத்துவம் எனும் புர்தான் ( புருதான்) நூலுக்கு மறுப்புரை பற்றியெல்லாம் காலவரிசையில் சாமி சிதம்பரனார் எழுதிச் செல்வதைப் பார்க்கமுடிகிறது. ”இதற்கு புர்தான் வெட்கமடைந்தார். பள்ளிப்படிப்பை முடித்து வெளிவந்த பையன் என்னைத் தோல்வியடையச் செய்துவிட்டான் என இறக்கும்வரையிலும் புர்தான் மறக்கவில்லை” என சாமிசிதம்பரம் குறிப்பிடுகிறார்.

 மார்க்சும் ஏஞ்செல்சும் சேர்ந்து சமதர்ம அறிக்கை ஒன்று வெளியிட்டனர். வரலாறு, முதலாளி- தொழிலாளி போராட்டம்- இனி சமதர்மக்காரர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி விளக்கமாக வெளியிட்டிருந்தார்கள்என கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ பற்றி சாமி குறிப்பிடுகிறார்.

இந்த அறிக்கை அவ்வளவு உற்சாகமாக பொதுமக்களால் வரவேற்கப்ப்டவில்லை; ஆயினும் நாளடைவில் மக்கள் மனத்தில் இதன் உண்மை படிந்து ஓங்கி வளர்ந்து வந்தது” என தன் கருத்தை சாமி சிதம்பரனார் வைக்கிறார்.

 பிரான்சில் 1848 புரட்சி- கலோன் வழக்கு- விடுதலை, பிரஷ்யா விட்டு வெளியேற்றம்- பிரான்ஸ் செல்லல்- வெளியேற்றம்- இங்கிலாந்தை அடைதல் என சிறிய அளவிலான பதிவை மார்க்சின் வாழ்க்கையின் பகுதிகளை விடாமல் தொட்டுக் காட்ட்டுகிறார் சாமி.

 இங்கிலாந்தில் மார்க்ஸ் வறுமை பற்றி சாமி அவர்களின் எழுத்தில்:

இவருடைய ஆறுகுழந்தைகளில் வறுமையின் காரணமாக மூன்று குழந்தைகளே உயிரோடிருந்தன. மனைவி உடல்நலமின்றி வருந்திக் கொண்டிருந்தார். இந்நிலையிலும் அவரை முதலாளிகள் சும்மா விடவில்லை. அறிக்கை எழுத காகிதமில்லாமல் ஓவர்கோட்டை அடகுவைக்கும்படி நேர்ந்தது. ஒரு குழந்தை இறந்தபோது அடக்கஞ்செய்ய இரண்டு பவுன் கடன் வாங்கும்படி இருந்தது. இந்தக் கஷ்டங்களையெல்லாம் பார்த்து அவருடைய மனைவி நானும் குழந்தைகளும் இறந்துவிட்டால் உங்களுக்கு கஷ்டம் இருக்காது என்று கூறுவாராம். வறுமை காரணமாக ஏஞ்செல்ஸ் உதவியை நாடவேண்டியிருந்தது. ஏஞ்செல்சும் தன்னால் இயன்றரவரையிலும் உதவி செய்து வந்தார்

 1860ல் ஏஞ்செல்ஸ் தந்தையார் இறந்தார். இதன்பின் அவர் மார்க்சுக்கு தாராளமாக பணவுதவி செய்து வந்தார். ..வருஷம் 350 பவுன் வீதம் உதவி வந்தார்

 அடுத்து இங்கிலாந்தில் மூலதனம் கொணர்ந்தது பற்றி இவ்வாறு சொல்கிறார்  சாமி சிதம்பரனார் :

“ 1859ல் மார்க்சு புத்தகமமொன்றை வெளியிட்டார்.முதலாளித்துவத்திற்கு எதிரான பொருளாதார உண்மைகள் பற்றி..ஆயினும் அது அதிகமாகப் பரவவில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து மூலதனம் முதற்பாகம் வந்தது. மார்க்சு இறந்தபின் மூலதனத்தின் இரண்டு பாகங்களும்  1867ல் ஏஞ்செல்சால் வெளியிடப்பட்டன.”

 இங்கு சாமி அவர்கள் குறிப்பிடும் 1867 என்பது முதல் பாகம் வந்த ஆண்டு. மார்க்ஸ் மறைவு 1883. அதற்குப் பின்னர் அடுத்த வால்யூம்கள் வந்தன.

மூலதனத்தில் என்ன விஷயங்கள் முக்கியமானவை என்றும் சிறிய அளவில் சாமி எழுதியுள்ளார். அடுத்து (அகிலம்) அகில உலக தொழிலாளர் சங்கம் 1864 - மார்க்சின் உரை- அதன் மாநாடுகள்- 1871 பாரிஸ் எழுச்சி- பாரிஸ் கம்யூன்- அவர்கள் அறிவித்த சட்ட நடவடிக்கைகள்- அதன் தோல்வி- அகிலம் கலைப்பு என ஒன்றுவிடாது சாமி சிதம்பரனார் தொட்டுக்காட்டியுள்ளது சிறப்பு.

 இந்த சிறு படைப்பை சாமி சிதம்பரனார் இப்படித்தான் முடித்துள்ளார்.

தமது வாழ்நாள் முழுவதும் செலவு செய்து எழுதிய மூலதனம் என்னும் புத்த்கம் வெளிவந்தவுடன் எதிர்பார்த்த அளவு அப்புத்தகம் பாராட்டப்படவில்லை. இதனாலும் அவர் மனமுடைந்தார். மனைவி 1881ல் இறந்தார்.”

மார்க்சுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தன, அவர்களின் இரண்டு பெண்களைத் தொழிலாளர் தலைவர்கள் இருவருக்கே மணஞ்செய்து கொடுத்திருந்தார். அவர்கள் தன் விருப்பப்படி நடப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர்கள் மார்க்சின் விருப்பப்படி நடக்காமல் தங்கள் விருப்பப்படியே நடந்துகொண்டார்கள். இவ்வாறு குடும்ப சம்பந்தமாகவும் அவருக்கு மனக்கவலை ஏற்பட்டது. கடைசியாக மார்க்சு 1883 மார்ச் 14 ஆம் தேதி இறந்தார்

மேற்கூறிய அவரது மார்க்ஸ் குறித்த எழுத்துக்களுக்கு அன்றிருந்த சோவியத் எழுத்துக்கள் மட்டும் உதவியிருக்காது- மேற்கு எழுத்தாளர் எவரையாவது சாமி சிதமபரனார் படித்திருக்ககூடும் எனத் தோன்றுகிறது. பகுத்தறிவு கூடிய தமிழ் அறிஞர் ஒருவரின் ஆக்கம் என்ற வகையிலும் 85 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பார்வை என்ற விதத்திலும் சிறப்பான ஒன்றாக இந்த ஆக்கத்தை பாவிக்கலாம்.

14-5-2022

No comments:

Post a Comment