மொழித்தூய்மை
மொழித்தூய்மை என்கிற புத்தகம் திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறையால் கொணரப்பட்ட ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தேசியக் கருத்தரங்கம் நிமித்தம் வாசிக்கப்பட்டவை. பதிப்பாசிரியர் சித்ரா அவர்கள். ஆய்வுரைகளை வழங்கிய நன் முனைவர்கள் கோதண்டராமன், இராமமூர்த்தி, நரேந்திரன், மணவை முஸ்தபா, மா. நயினார், கார்த்திகேயன், திருமாறன், பூங்காவனம், மற்றும் உதயசூரியன்.
கோதண்டராமன் அவர்கள் தன் ஆய்வில் மொழித்தூய்மை மற்றும் மொழிப்பயன்பாடு பற்றிப் பேசுகிறார். ஒன்று உளவியல் சார்ந்தும் மற்றது சமூகம் சார்ந்தும் இயங்குவெளியைக் கொண்டவை. பிறமொழிச் சொற்களைத் தன்மொழியில் பயன்படுத்தும்போது அது சமுதாயத்தின் மனநிலையைப் பொறுத்து அமையும்.
மொழியிழப்பு என்பது குறித்து அவர் சொல்லும்போது பிறமொழித் தாக்கம் மொழியின் அமைப்பியல் கட்டமைப்பினைச் சிதைக்காதவரை அம்மொழி நிலைத்து நிற்க வல்லதே என்கிறார். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி சிறுபான்மையினர்- ஆனால் அவர்கள் தமிழ்மொழியை அதிகம் சார்ந்தவர்களாக இருக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் சிதறிபோகாமல் ஒன்றுபட்டு நிற்கும்போது- உதாரணமாக மதுரை செளராஷ்ட்ரர் - தங்கள் மொழியை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.
அதேபோல் மொழியின் தனித்தன்மையை எழுத்தியல், சொல்லியல், தொடரியல், தொடரனியல் ஆகிய நிலைகளில் அமைவதை அவர் சொல்கிறார். தமிழ் பொதுவாக பின்னொட்டு மரபைக் கொண்ட மொழி. ஆனாலும் அசைவம், அநாகரிகம், அசுத்தம், அவமரியாதை, அவநம்பிக்கை போன்ற முன்னொட்டு சொற்களும் நம் மரபை சிதைக்காதவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொழியின் தூய்மையைப் பொறுத்தவரை தமிழில் வடசொற்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியர் முற்றிலுமாகப் புறக்கணிக்கவில்லை என்கிறார். அவை தமிழ் எழுத்தியல் மரபிக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருப்பதையும் ஆராய்ச்சியாளர் சொல்கிறார். இதை ராஜாஜி அவர்களும் தன் கட்டுரை ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழில் செவ்விய வழக்கு, பேச்சு வழக்கு எனும் இரட்டை வழக்குண்டு. திரிசொற்கள் மிகுதியாக இருப்பதைப் பார்த்தால் பழந்தமிழ் ஒரு குறிப்பிட்ட கிளைமொழியின் அடித்தளத்தைக் கொண்டதாகக் கருதமுடியாது. பல்வேறு கிளைமொழிகளின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம். பாரதியின் ’தேன் வந்து பாயுது- சக்தி பிறக்குது’ என்பதில் பாயுது, பிறக்குது பேச்சு வழக்கினதாகும் என்கிறார். சங்க இலக்கியத்திலும் இதைக் காணமுடியுமாம். எனவே பேச்சு வழக்கால் தூய்மை பாதிப்பில்லை.
தமிழ்ச் சமுதாயத்தில் மொழி வெறும் பரிமாற்றக் கருவியல்ல- உணர்வுடன் கலந்த ஒன்று. எனவே தனித்தமிழ் இயக்கங்கள் பங்கு முக்கியமானதாகிறது. மொழிக்கலப்பற்ற சொல்வளத்தை அவர்கள் காத்து நிற்கின்றனர். ஆனாலும் செய்தி பரிமாற்றம் எனில் பிறமொழிச் சொற்கள் பயன்பாடு வரலாம். அமைச்சு, அதிகாரம், ஆணை, ஊசி, காரணம், விஷம், நாள்- மதப் பெயர்கள், உயில் கைதி போன்ற சொற்கள் தமிழுக்குரியவையல்ல. அதேநேரத்தில் வேட்பாளர், அறிவிக்கை போன்ற தமிழ்ச் சொற்களை படைக்கும் ஆற்றல் தமிழுக்கு உள்ளது.
ஆய்வாளர் இராமமூர்த்தி தனது ஆய்வில் சமூக மாற்றங்கள் மொழியில் பிரதிபலிக்கும் என்கிறார். சுத்தமானது என்பது கருத்தியல் நிலை. அதன் முதல் தகுதி அறியாமை. அதேபோல் அசுத்தமானதை சுத்தமாக்கலாம் எனும் நம்பிக்கை. இதுதான் பிராமணர் அதிகார நிலைக்கான காரணிகளாகவும் ஆயின. அதிகார சமுதாயம் தன்னை தக்க வைத்துக்கொள்ள சமயம், மொழியை கருவியாக்கிக்கொண்டது.
அதேபோல் மரபார்ந்த மருத்துவ முறைகளைத் தீட்டுகளாகக் கருதும் நிலை ஏற்பட்டது. வேற்று சமூகம், வேற்று மொழி ஆதிக்கம் என்ற நிலையில் எதிர் விளவாக தூய்மைச் சிந்தனைகள் உருவாகும் என இவ்வாய்வாளர் சொல்கிறார். அது கருத்தியலிருந்து செயல்பாடாக மாறுகிறது.
இந்தியாவில் வடமொழியின் கலப்பு பிற மொழிகளின் தனித்தன்மைக்கு எதிராக அமைந்தது. மொழியின் பேச்சு மொழிக்கூறுகளை இழிவாகக் கருதும் போக்கு தூய்மையாக்கத்தின் தீவிரத்தை உணர்த்தும்.
தமிழ்ச் சமுதாய விழுமியங்கள் இறையியலை அடிப்படையாகக் கொண்டிருந்த காலத்தில் வடமொழி வழியாக புதிய சிந்தனைகள் புகுந்தன. தமிழகத்தில் மொழித்தூய்மைக்குரல் ஒலிக்க இரு காரணங்கள் வலுவானவை என்கிறார் இந்த ஆய்வாளர். ஒன்று நம்மவர் மொழி ஈடுபாடு, மற்றது தமிழின் இலக்கிய இலக்கண செழுமை. மொழி பெருமிதம் இங்குண்டு. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு போன்ற உணர்ச்சி மிகு சொல்லாடல்கள் எழுந்ததைக் காணலாம்.
வடமொழிச் சொற்களை நீக்குவது என்பதுதான் பிராமணர் ஆதிக்கச் சக்திக்கு எதிர்ப்பானது என்கிற ’அதிகாரப் போட்டி- பகிர்வுதான்’ தனித்தமிழ் இயக்க சமூக பின்புலம். அதேபோல் ஆங்கில கலப்பு குறித்த எதிர்ப்புணர்வும் வெளியானது. ஆங்கிலத்தைக் கலந்து பேசுபவன் முட்டாள், கலந்து எழுதுபவன் அயோக்கியன், மோகம் பிடித்தவன் காட்டுமிராண்டி எனப் பேசியதையும் கண்டோம்.
எழுத்துமொழி கற்றவர் அதிகார வர்க்கமாகி பிறமொழி புகுத்தலைச் செய்கின்றனர். முன் நவீனத்துவக் காலகட்டத்தில் பிராமண பண்பாடு வடமொழி வழியாக என்றால், நவீனத்துவம் மேலைப் பண்பாட்டை ஆங்கிலமொழி வழியாக கொணர்ந்தது. இன்று உலகமய சூழலில் உற்பத்திக் கலாச்சாரம் மாறி நுகர்வு கலாச்சார விழுமியம் பெற்றுள்ள நிலை.
நவீன தொழில் நுட்ப உத்திகள் பிற பண்பாட்டை ஏற்று சகிக்கும் தன்மையை உருவாக்குகின்றன. சாதியப் படி நிலை வடமொழிப் பண்பாடு, பகுத்தறிவு சமத்துவ முன்னேற்றம் எனும் ஆங்கில பண்பாடாகி இன்று பொருளாதார மேம்பாடு ஒன்றே எனும் உலகப்பண்பாட்டிற்கு அழைத்துப் போயுள்ளதாக இந்த ஆய்வாளர் சொல்கிறார். எனவே இன்று மொழித்தூய்மை என்பதைவிட பண்பாட்டுத் தூய்மை பேசவேண்டியுள்ளது என்கிறார் இராமமூர்த்தி.
முஸ்தபா அவர்கள் தூயமொழி என ஏதுமில்லை. மொழிக்கலப்புறுவது தவிர்க்கவியலா ஒன்றேயாகும் - முடிந்தவரை குறைக்கப் பார்க்கலாம் என்கிறார். அதேநேரத்தில் கலப்பிலா தூய மூலச் சொற்களே ஓர் இனத்தின் உண்மையான பண்பாட்டை கலையை பழக்க வழக்க நாகரீகத்தை பறைசாற்றும் காலக்கண்ணாடி என்கிறார் முஸ்தபா. ஷவரம் என்பது சவரமானது- மழித்தல், சிரைத்தல், வழித்தல் எங்கே என்கிறார்.
ஆங்கிலம் பிறவிக் கலப்புமொழியாகும். அதேபோல் இந்தியாவில் உருவான உருது பிறவிக் கலப்பு மொழியாகும். அங்கும் கூட தூய உருது இயக்கம் எழாமல் இல்லை.
அறிவியல் தமிழ் எனில் அறிவியலுக்கே முதல்நிலை. மொழி இரண்டாம் நிலையாகிறது. பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி எனும்போது கிரந்த ஸ் வருகிறது. சம்ஸ்கிருத எழுத்துக்களின் துல்லியமான உச்சரிப்பு ஒலியை வெளிப்படுத்த எழுத்து தமிழில் இல்லை. எனவே கிரந்த எழுத்து வருகிறது. அதேபோல் தமிழ் தமிங்கிலம் ஆனதை முஸ்தபா பேசுகிறார். உலக மொழிகளில் அதிக வேர்ச் சொற்களையுடைய மொழி தமிழ். அதைக்கொண்டுதான் 50 ஆண்டுகளில் தங்கள் குழுவால் ஆறரை இலட்சம் கலைச் சொற்களை உருவாக்க முடிந்ததை முஸ்தபா சொல்கிறார். ஜீனோம்- உயிர்மம், குளோனிங் - படியாக்கம் என்றோம். தமிழ் அடிப்படையில் அறிவியல் மொழியாக அறிவியலைச் சொல்வதற்கான மொழியாக அமைந்திருப்பதைச் சொல்கிறார்.
நயினார் அவர்களும் மொழித்தூய்மையின் அவசியத்தைப் பேசுகிறார். மொழி கலத்தல் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் ஏற்கிறார். கடன் சொற்கள் இல்லா மொழியில்லை. Loan shift வான ஊர்தி, Lone Transaltion நீர் வீழ்ச்சி என மாறுதல் நடைபெற்றுள்ளன.
ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புற்றிருந்தால் அதைக் கற்கும்போது அதன் சொற்கள் ஒருவர் மொழியுடன் கலந்து விடுகின்றன.. இதனால் கடன்பெறும் மொழியில் சிறிது மாற்றம் ஏற்படும்.
கடவுளை என் மொழியில், இசையை என் மொழியில், ஆட்சி என் மொழியில், கல்வி என் மொழியில் எனக் கோருவது வடமொழிக்கு, தெலுங்கிற்கு, இந்திக்கு, ஆங்கிலத்திற்கு விரோதமாகி விடுமா என்கிற கேள்வி எழுகிறது. வைதீக சொற்களை மட்டுமல்ல வேளாள வைதீகச் சொற்களும் அவசியமா என்கிற கேள்வியும் இங்கு எழுந்தது என்கிறார் இவ்வாய்வாளர். தூய தனித்தமிழ் என சமூகத்திலிருந்து அந்நியமாதல் அவசியமா என்கிற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. எனவே மொழித்தூய்மை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லும் முயற்சியாகாமல் மொழியை எளிமைப்படுத்தும் எண்ணமாக எழவேண்டும் என்கிறார் ஆய்வாளர்.
கார்த்திகேயன் தன் ஆய்வில் திருவாசகம், திருப்பள்ளியெழுச்சியில் கலந்துள்ள சொற்கள் சிலவற்றைத் தருகிறார். உதயம், சூரியன், ஆனந்தம், மது, கமலம், கீதம், நயனம், கருணை, பூமி .
மொழியியல் உள்ளது உள்ளவாறு விவரிப்பதாகும். தரப்படுத்தலால் கல்விப் பயன்கள் ஏற்படும். பெருமை காரணமாக பெறப்படும் கடன் சொற்களைத் தடுக்கவே மொழித்தேசியம் - தூயமொழி இயக்கம் உருவாவதாக இந்த ஆய்வாளர் எடுத்துரைக்கிறார். ஆங்கிலம் கலந்து தமிழின் இசையோட்டம் புறக்கணிக்கப்படுவதாக இந்த ஆய்வாளர் சொல்கிறார்.
திருமாறன் தன் ஆய்வில் ’தூய்மையம்’ என்பது மொழியை வளப்படுத்துவதற்குத் தன்மொழி வாயில்களைத் திறத்தலும் பிறமொழி வாயில்களை அடைத்தலும் என்கிறார். மேட்டிமை நோக்கு எண்ணத்தில் தமிழை புறக்கணிப்பதைப் பேசுகிறார். பல்வேறு மொழிகளில் தூய்மை இயக்கங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் திருமாறன் விளக்குகிறார்.
13 - 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிறமொழியாளர் குடியேற்றம் ஏற்பட்டு கன்னடம், தெலுங்கு, இந்துஸ்தானி, அரபு, மாராத்தி மொழிகள் தமிழன்னையின் சிறப்பினைப் பகிர்ந்துகொண்ட காலம் என்கிறார் திருமாறன். 19 ஆம்நூற்றாண்டில் ஆங்கிலம் வந்தது. ஆட்சிமொழியாக கல்வி மொழியாக மாறியது. அன்னிபெசண்டோ ஆரிய சம்பத்து என்றார். 1856ல் கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தந்தார். தமிழர் இயக்கம் எழுந்தது என்கிறார் இவ்வாய்வாளர். சங்க இலக்கிய வெளியீடும் அதற்கு துணையானது. இன்றிமையா வேற்றுமொழிச் சொற்களை அதன் இயல்புக்கு பொருந்தினால் சேர்க்கலாம்- அதுதான் அழகானது. தமிழ் சொல் இருந்தால் அதை விடுத்தலாகாது என்கிறார் இந்த ஆய்வாளர்.
பூங்காவனம் அவர்களும் நம் சொற்கள் எங்கே போயின என ஆய்கிறார். மேகம் வந்து முகில், எழில், களம், கார், மால் போன்றவையும், சன்னல் வந்து சாளரம், பலகணி, வளிவாய், காற்றுவளியும் போனது. மத்தியானம் வந்து உருமம், உச்சிவேளை, நண்பகல் போனதையும் சொல்கிறார். வாரிசு என்பதால் எச்சம், கான்முறை, கால்வழி, மரபு போனது. தமிழின் தாய்மைப் பண்பும் தலைமைப் பண்பும் அறியப்படாமை, அறியப்பட்டபோதும் ஏற்கப்படாமை எனும் இரு நிலைகளை அவர் எடுத்துரைக்கிறார்.
மொழித்தூய்மை என்பது எண்ணத்தூய்மையையும் செயல்தூய்மையையும் உள்ளடக்கிய செப்பநிலையின் வெளிப்பாடு என்கிறார் பூங்காவனம். பெருஞ்சித்திரனார் தூய்மை நிலை குறித்து உதயசூரியன் அவர்கள் செய்துள்ள ஆய்வும் இந்த கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
160 பக்கங்களில் சிறந்த ஆய்வுகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் மொழியறிவில்லாத எனக்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது.
29-5-2022
Comments
Post a Comment