Skip to main content

தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும்


தோழர் இ எம் எஸ் பார்வையில்
காந்தியும் அவரது இசமும்
                   -ஆர். பட்டாபிராமன்
எளிய வாழ்க்கையில் நிறைவுபெற்றவராகவும், எந்நேரமும் தளர்வின்றி உழைப்பவராகவும் இருந்தவர் இ எம் எஸ் நம்பூதிரிபாட்.. Marxist Scholar என அவர் ஏற்கப்பட்டவராக இருந்தார். விவசாய இயக்கத்திலிருந்து தனது வர்க்கப்போராட்டத்திற்கான களப்பணியை துவக்கியவர் இ எம் எஸ்.
கேரளாவில் வெகுமக்கள் மத்தியில் அரசியல் மற்றும் தத்துவார்த்த உரையாடலை தொடர்ந்து செய்து வந்த எம் எஸ்  தனது தாய்மொழியில் ஏராளம் எழுதி குவித்துள்ளார். 1942ல் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியாக இயங்க வாய்ப்பு பெற்றது. சி பி அய் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943ல் நடந்தது. அதில் எம் எஸ் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார். 1953-54ல் நடந்த மூன்றாவது கட்சி காங்கிரசில் அவர் பொலிட்ப்யூரோ உறுப்பினராகிறார். நியுஏஜ் பத்திரிக்கை ஆசிரியராகிறார். கட்சியில் காங்கிரஸ் குறித்த அணுகுமுறை, சீன யுத்த கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தன. 1977ல் நம்பூதிரி அவர்கள் சி பி எம் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 14 ஆண்டுகள் செயல்பட்டார்.

Mahatma and the Ism, Nehru Ideology and Practice, Indian Freedom Struggle , கேரளா குறித்த ஆய்வுகள், இந்தியாவின் சோசலிச பாதை, கம்யூனிஸ்ட்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும் போன்றவை அவரின் குறிப்பிட தகுந்த முக்கிய ஆக்கங்கள். ஆதிசங்கரின் தத்துவம், இந்திய விடுதலை இயக்க வர்க்கத்தன்மை, கேரளாவில் விவசாய இயக்கம், வர்க்கம்- சாதி- கட்சி, முதலாளித்துவ நீதித்துறை, கிராம்ஸி சிந்தனை போன்ற சில முக்கிய கட்டுரைகளை அவர் எழுதினார்.. அவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.
இ எம் எஸ் அவர்கள் நியுஏஜ் பத்திரிகையில் 1954-56 ஆண்டுகளில் காந்தியடிகள் குறித்து  கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகளுடன் புதிய கட்டுரைகளாககாந்தியம் பற்றி, காந்திக்கு பின்னர் காந்தியம்’ என எழுதப்பட்டு  மகாத்மாவும் அவரது இசமும் என்கிற புத்தக வடிவத்தை அவை பெற்றன. அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இ எம் எஸ் அவர்களின் காந்திஜி குறித்த பார்வை இங்கு சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.


2
காந்தியரில் சிலர் பேசுவது போல் காந்தியம் என்பது வன்முறை தவிர்த்த கம்யூனிசமா என்ற பிரதான கேள்வியை இ எம் எஸ் எழுப்பினார். மார்க்சியம் குறித்து ஆய்ந்திட ஏராளமான அடிப்படை நூல்கள் இருக்கின்றன. எங்கெல்சின் சோசலிசம் கற்பனாவாதம் விஞ்ஞான சோசலிசம், லெனினின் கார்ல் மார்க்ஸ், ஸ்டாலினின் இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் போன்றவை உதவும். ஆனால் காந்தியம் பற்றி புரிந்துகொள்ள அவரது வாழ்க்கை செயல் அனைத்தையும் பார்க்கவேண்டும். அது எளிய ஒன்றல்ல என்பதையும் EMS ஏற்கிறார்..
காந்திஜி பற்றிய சுய அனுபவத்தை இ எம் எஸ் சொல்கிறார். ’’காந்தியம் என்றால் என்ன என்பது குறித்த விளக்கங்கள் எதுவும் வரவில்லை. டெண்டுல்கர், பியாரிலாலின் வால்யூம்களை பார்க்கவேண்டும்.. எனது காந்திஜி குறித்த மதிப்பீடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை என்பதை ஏற்ற இ எம் எஸ்,. எனது மதிப்பீடு மார்க்சிய லெனினிய அடிப்படையிலானது. பலரைப்போலவே மார்க்சியனாவதற்கு முன்னர் நானும் காந்திஜியின் சீடர்தான். எனது 12 வயதிலேயே அவரைக் குறித்த ஈர்ப்புகள் வரத்துவங்கின. காந்தியர் மத்தியிலேயே இடது குணம்கொண்ட நேருவை பின்பற்றுபவனாக நான் இருந்தேன். ஜெயபிரகாஷ் துவங்கிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் நாங்கள் இருந்தோம். சிறையில் இருந்தபோது முக்கிய காந்தியர்களான ராஜாஜி, பட்டாபி சீதாரமையா, புலுசு சாம்பமூர்த்தி, கொண்ட வெங்கடப்பையா போன்றவர்களுடன் காந்திஜி குறித்த உரையாடல்களை 18 மாதங்கள் நடத்த முடிந்தது’’
உறங்கி கிடந்த லட்சக்கணக்கான மக்களை எழுந்து போராட வைத்தவர் என்று மதிப்பிடும்போது அவர் முதலாளிகளின் லீடர் என்று சொல்வது முரண்பாடில்லையா எனக் கேட்கிறார்கள். பூர்ஷ்வா என்பதை மோசமான பதமாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் முரண்பாடு இல்லை என புரிந்துகொள்ளலாம் என்கிற விளக்கத்தை தருகிறார் இ எம் எஸ்.  மக்களை திரட்டி விழிப்படையவைத்து போராட அழைத்துச் செல்லும் பூர்ஷ்வாத் தலைமைக்கு எல்லைகள் இருக்கிறது. இதற்கு மேல் செல்ல அவர்கள் விரும்புவதில்லை என்ற வரையறை இருக்கிறது ( When I characterised Gandhiji as the ideological representative of the borgeosie, I did not at all ascribe to him any motive of protecting the interests of the bourgeosie. ).
. இந்திய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அவர் பெரும் தீர்க்கதரிசி. அவரின் அன்பு, அகிம்சை, உண்மை, நீதி என்பன அனைவரையும் வசீகரித்தவை. இந்திய தொழிலாளிவர்க்கம், படித்த மத்தியதரவர்க்கம் என அனைவரையும் அவர் ஈர்த்தார். உயர் நோக்கத்திற்காக போராடுவதையும் அதற்காக தியாகம் செய்வதற்கும் அவர் கற்றுத்தந்தார்.  Gandhi's idealism has its strong and weak points.  His weak point is his insistence on a scrupulous adherence to what is called non violence, in effect served to restrain the masses.. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்திற்கு நிதி உதவி செய்தவர்கள் பட்டியலில் ரதன் ஜி ஜாம்ஷெட்ஜி டாட்டா ரூ 25000, அகாகான் 3000, ஹைதராபாத் நிஜாம் 2500 என இஎம் எஸ் பட்டியலிடுகிறார்.
 காந்திஜி நடைமுறைகளின் விளைவுதான் என்ன ? நரகத்திற்கான பாதைக்கூட நல்லெண்ணங்களின்படி சமைக்கப்படுகிறது காந்திஜியின் பிற்போக்கான சமூகப்பார்வையும் போராட்டக்குணத்துடன் சேர்ந்தே மக்களிடம் சென்றது-(  leading militant struggles and taking obscurantist ideas to the common people.)  இந்தவகையில் அவர் லெனின் ஸ்டாலின் எனும் தனது காலத்திய மனிதர்களுடன் வேறுபடுகிறார். காந்தி இங்கிலாந்தில் விஜிடேரியனிசம் என எழுதிக்கொண்டிருந்த காலத்தில் லெனின் ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி என எழுதிக்கொண்டிருக்கிறார் .  (Lenin combined  the militant struggle with the most advanced ideology but Gandhi with the most reactionary obscurantist ideologies .)
1909ல் காந்தி எழுதிய இந்திய சுயராஜ்யம் மேற்கு நாகரீகம் மீதான கண்டனம் என புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் படி அதை மதிப்பிட்டால் குட்டி முதலாளித்துவ சோசலிச பார்வை குறித்த வர்ணனையாக இருக்கிறது என்றார் எம் எஸ்-(the idealist willingness to undergo suffering in struggle against evil.). அவரது மேற்கின் கண்டனம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாக இல்லை. காந்திஜி தான் ஒரு விசுவாச பிரிட்டிஷ் பிரஜை என சொல்லியும் நடந்தும் காட்டினார்.
மதன்லால் திங்கரா விசாரணையின்போது சர் கர்சான் வைலி கொலையில் தேசபக்தன் என்ற வகையில் தான் செய்தது சரியே என வாதாடினார். இந்தியாவிற்கு இன்று தேவை வீரம்நிறைந்த தியாக மரணம். அதனையே நான் செய்துள்ளேன் என்றார் திங்கரா. அன்று துணைச் செயலர் ரேங்கில் இருந்த சர்ச்சில் கூட தேசபக்தி என்ற பெயரில் நடந்துள்ள நேர்த்தி என இதை மதிப்பிட்டார். ஆனால் காந்தியோ திங்கரா போன்றவர்களின் நடவடிக்கை தவறானது என்றார். அவர் தேசபக்தர் ஆனால் கண்மூடித்தனமான இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார். தனது உடலை தவறாக அவர் தந்துவிட்டார். அதன் விளவுகள்   mischievous என்றார்.
கோகலே உட்பட அவர் காலத்திய மூத்தவர்களானாலும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆனாலும் காந்தியைபோன்று  அரசியல் இயக்கம் பற்றிய  கருத்துக்களை  கொண்டிருக்கவில்லை. அவரின் வரவால் செயல்பாட்டுத்தன்மையால் பலர் வாயடைத்துப்போய் அவரால் வசீகரிகப்படலாயினர். அவரைவிட அறிவிர் சிறந்தவர்கள் கூட அவரின் முடிவிற்கு கட்டுப்படலாயினர். கோகலே, நெளரோஜி மிதவாத அரசியலுக்கு மாற்றாக திலகர், லாலாஜி, பிபின் லால் தீவிர அரசியல் தலைவர்களாக பார்க்கப்பட்டனர். நவீன அரசியல் இயக்கத்தில் உருவான தலைவர்களுள் திலகர் 6 ஆண்டுகள் கடும் தண்டனை பெற்ற முதல் தலைவர் என்ற மரியாதையைப்பெற்றார்.
மற்ற தேசிய உயர் தலைவர்கள் டோரிகள் அல்லது லிபரல் போல் அரசியல் பார்வை வைத்திருந்தால், தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தியடிகள் கிறிஸ்துவமத  செல்வாக்குடன்  இந்துயிச அடிப்படையில் வந்தார். செக்யூலர் அரசியல் என்பதின் விலகலாக தெரிந்தார் ( appeared to them as the very negation of the basis principle of secular politics). ஆனால் மிக  முக்கியமாக ஓர் அம்சத்தில் அவர் வேறுபட்டவராக விளங்கினார். அவர் மக்களுடன், அவர்களின் பிரச்சனையின்பாற்பட்டு, அவர்கள் விருப்பம்சார்ந்து வாழ்பவராக இருந்தார். செயல் என்பது காந்தியத்தின் பிரதான குணமாக இருந்தது.
சம்பரான் போராட்டம் அய்ரோப்பிய தோட்ட முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிய போராட்டம். அங்கிருந்த முக்கிய அறிவுஜீவிகளான ராஜேந்திரபிரசாத், கிருபளானி, மஸ்ருல் ஹக் போன்றவர்களை ஈர்த்த போராட்டம். தியாக மனப்பான்மை கொண்ட உயர்தட்டு மத்தியதர வர்க்கம் உழைக்கும் மக்களுடன் நின்று அவர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள். அகமதாபாத் 1918 பிப்- மார்ச் மில் தொழிலாளர் போராட்டம் காந்தியவகைப்பட்ட தொழிற்சங்க இயக்கம் உதயமாக வழி செய்தது.  ( evoultion of bourgeosie leadership over the working class movement).
 அகிம்சை எனப் பேசிய அவர்  ஏகாதிபத்திய யுத்தத்திற்கு இந்திய இளைஞர்களை மனசாட்சியின்றி திரட்டினார். இவ்விஷயத்தில் அவர் பூர்ஷ்வா அரசியல்வாதியாகவே இருந்தார். ரெளலட் பில் அரசிதழில் வந்தவுடன் சத்யாக்கிரக உறுதிமொழியை பட்டேல், சரோஜினி, சங்கர்லால், அனுஷ்யா ஆகியோர் சட்டமறுப்பு இயக்க அறிக்கையுடன் வெளியிட்டனர். உண்மையும் அகிம்சையும் பின்பற்றப்படும் என்றனர். பம்பாயில் சத்தியாக்கிரக உறுதிமொழியில் 1200 பேர் 15 நாட்களில் கையொப்பம் இட்டனர். தடை செய்யப்பட்ட காந்திஜியின் இந்திய சுயராஜ்யம், சர்வோதயா போன்றவைகளை கொணர்வது என முடிவெடுத்தனர். ஏப்ரல் 6, 1919ல் ஹர்த்தால் என்றார் காந்தி. இப்போராட்டம் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளில் முடிந்தது.
1920 மார்ச்சில் கிலாபத் அறிக்கையை தந்தார். இந்த நிகழ்வுகளின் ஊடாக அவர் ஆகஸ்ட் 1920ல் ஒத்துழையாமையை அறிவித்தார். காந்தியும் அலி சகோதரர்களும் சுற்றுப்பயணம் செய்து மக்களை திரட்டினர்.. காங்கிரசும் செப்டம்பர் 1920ல் கூடி அகிம்ச வழி ஒத்துழையாமை என்றது. நீதிமன்றம், கல்விக்கூடங்களை விட்டு வெளியேறுதல், பட்டங்களை திரும்ப தருதல் போரட்டமுறைகளாக அறிவிக்கப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் பகிஷ்கரிப்பும் சொல்லப்பட்டது. இந்த திட்டத்தின் வர்க்க பின்புலத்தை எளிதில் அறியமுடியும். ஏகாதிபத்தியத்திற்கு எந்த உலுக்கலையும் தராத போராட்டம். போர்க்குண போராட்டங்களில்லை. இது இயல்பான பூர்ஷ்வ்வாக்களின் அச்சம் தவிர வேறல்ல என மதிப்பிடுகிறார் இ எம் எஸ்.
Nonviolent and truthful atmosphere alone can justify mass civil disobedience  என காந்திஜி பேசினார். 1922 செளரி செளராவரை சிவில் ஒத்துழையாமை தன் கைமீறி செல்லும் என்பதை அவர் உணரவில்லை.  (Churi Chura showed that once peasantry comes face to face with the organs of state power, it, inevitable, is led to forms of action outside the definition of non violence laid down by Gandhiji.)  அவரின் அகிம்சை என்பது மிதவாதிகளை திருப்திபடுத்தியது என்றால் அவரின் மக்கள் போராட்ட அறைகூவல் தீவிரமாக செயல்படுபவர்களை உற்சாகப்படுத்தியது. எது பாதை? பிரிட்டிஷாருடன் அமைதியான பேச்சுவார்த்தையா- போர்க்குணமிக்க போராட்டம் மூலம் தீர்வா என்கிற பிரச்ச்னை எழுந்தது. சிவில் ஒத்துழையாமை நிறுத்தப்பட்டதில் அதிருப்தி ஏற்பட்டது. மோதிலால் போன்ற் சுயராஜ்யவாதிகளின் சட்டமன்ற கவுன்சில் நுழைவு  என்றனர். அதைவிட மேலான வழியை மற்றவர்கள் சட்டமன்றத்திற்கு வெளியே செயல்பட்டுத்தான் நிரூபிக்கவேண்டும் என ராஜாஜி போன்றவர்க்கு காந்திஜி எடுத்துரைத்தார்.
3
காந்தி நாடுமுழுதும் சென்று மக்களை சந்தித்து தனது திட்டம் குறித்த விளக்கிவந்ததன் மூலம் அவர்கள் திரட்டப்பட்டார்கள். அதேநேரத்தில் ஏகாதிபத்திய எதிரிப்பில் போர்க்குண போராட்டங்களிலிருந்து தடுக்கப்பட்டார்கள். அவர் மக்களிடம் ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம் ஆகியவற்றின் கொடுமைகளை பேசாமல் மக்களின் பொதுவான கஷ்டங்கள், ஏற்ற இறக்க வேறுபாடுகள்- அசமத்துவம் , அதை மாற்றவேண்டும் என பொதுவாக பேசினார். அவர் அனைத்துப்பகுதி மக்களின் வாழ்க்கைமுறைகளையும்,  துயரங்களையும் அறிந்தவராக இருந்ததால் மக்கள் அவருடன் திரண்டனர். தேவதாசிகளுடன் கூட கெளரவ வாழ்க்கைமுறைக்கு திரும்புவது குறித்து அவரால் உரையாடமுடிந்தது. தேவதாசிகள் என அழைத்து மதத்தின் பெயரால் கடவுளை நாம் நிந்திக்கிறோம் என்றார்.
1927ல் சக்லத்வாலாவுடன் அவர் உரையாடினார். சக்லத்வாலா விவரங்களை ஆய்வு செய்யவில்லை, ஆனால் நேர்மையானவராக எழை எளியவர் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்றார் காந்திஜி. கதர் மூலமாக சமதையான வாழ்க்கைமுறை நோக்கியும் சுயராஜ்யம் நோக்கியும் செல்லமுடியும் என காந்திஜி பேசினார். அதில் தொழிலாளர் முதலாளி நல்லுறவு இருக்கிறது என்றார். செயல் ஊக்கத்தை உருவாக்கி , அதன் நோக்கமே சுயராஜ்யத்திற்குத்தான் என்கிற உணர்வை காந்திஜி உருவாக்கினார். அரசியல் அம்சமற்ற அவரது கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை அரசியல் செயல்வீரர்களுடன் இணைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை வசைபாடுவது என்கிற அரசியல் கடமையுடன் நடைமுறை வேலைத்திட்டத்தை அவர்களுக்கு முன் வைத்தார்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் மதரீதியான வகுப்புவாத மோதல் காந்திஜிக்கு சவலாக முன்நின்றது. இறுதியில் காந்தியின் அனைத்து முயற்சிகளையும் தாண்டி நாடு பிரிவினைக்கு உள்ளாகி பாகிஸ்தான் உருவாவதில் முடிந்தது. இந்து மதவெறியர் அவரை கொலை செய்திட்ட துயரமும் நிகழ்ந்தது.
1920களில் வெளிநாடுகளிலிருந்து புதிய கருத்துக்கள் இந்திய இளைஞர்களை ஈர்க்கத்துவங்கின. அயர்லாந்தின் போராட்டங்கள், துருக்கியில் ஏற்பட்ட மாற்றங்கள், சோவியத்தின் புரட்சி. பெருநகரங்களில் குறிப்பாக பம்பாய் கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின. தனிநபர் பயங்கரவாதத்தின் மீது நம்பிக்கைக்கொண்ட  குழுக்கள் உருவாயின. காங்கிரஸ் தலைமையில் இருந்த காந்திஜி மோதிலால் போன்றவர்கள் டொமினியன் அந்தஸ்து என்கிற நிலைப்பாட்டிலிருந்தனர். மதராசில் நடந்த காங்கிரஸ் கூட்டம் 1927ல் பூர்ண சுயராஜ்யம்  இலக்கு என தீர்மானம் இய்ற்றியது. காந்தியை அதை கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் தன்னால் நிறைவேற்ற முடியாதவற்றை தீர்மானமாக போடுவதாக கூறி விமர்சித்தார். பள்ளி சிறுவர்கள் போல் நடந்துகொள்வதாக கடிந்துகொண்டார்.
லாகூரில் நடந்த காங்கிரஸ் 1929ல் உடனடி நோக்கம் பரிபூர்ண சுதந்திரம் என தீர்மானம் நிறைவேற்றியது. நேருவை தனது அறிவுரையை ஏற்க செய்ய காந்திஜி முயற்சித்தார். சில ஆங்கிலம் தெரிந்தவர்களே இந்தியாவாகிட முடியாது என்றார் காந்திஜி. மோதிலால் விடுதலை டொமீனியன் என்கிற குழப்பம் எல்லாம் வேண்டாம், நாம் அறிந்த சுயராஜ்யம் என்பதை பயன்படுத்துவோம் என்றார். பட்டேல் தலைமை பொறுப்பிற்கு வருவது என்பதை காந்திஜி ஏற்கவில்லை . நேருவை கட்டுப்பாடு நிறைந்தவர், நடைமுறை சார்ந்து இயங்கத் தெரிந்தவர் என அவர் எழுதினார் (He is undoubtedly an extremist thinking far aheadof his surroundings. But he is humble and practical enough not to force the pace to the breaking point )

லாகூர் காங்கிரசிற்கு பின்னர் காந்தியும் முழுவிடுதலை என்பது நமது தூர லட்சியம் அல்ல. உடனடி நோக்கம் என்றார். 1930 ஜன 26 சுதந்திரதினமாக அனுசரிக்கவிடப்பட்ட அறைகூவல் மக்களிடம் ஈர்ப்பாக பற்றியது. இதற்கான பிரகடன ஆவணம் பிரிட்டிஷாரின் ஆட்சியை கடுமையாக சாடியது. சுதந்திர உறுதிமொழியாகவே அது ஏற்கப்பட்டது. தொடர்ந்த உப்பு சத்தியாக்கிரகம் தண்டி யாத்திரை மக்களை கவ்விப் பிடித்தது. கல்கத்தா, சென்னை, கராச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது. கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை போடப்பட்டது. சிட்டகாங் ஆயுதகிடங்கு சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்கள் வசம் சோலாப்பூர் என்ற நிலை உருவானது. பதான்களுக்கு எதிராக குண்டுகள் போடப்பட்டன. இந்த பீறிட்ட உற்சாகத்தை மடைமாற்றி பூர்ஷ்வா வர்க்கத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் வழக்கம்போல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் நடந்துகொண்டனர்.. முழுவிடுதலை எனப் பேசிவிட்டு நடைமுறையில் அதை கைவிட்டனர் என்பதை இ எம் எஸ்  விமர்சனமாக முன்வைக்கிறார்,
நிலவருவாயை 50 சதம் குறைத்தல், சிவில் ஊழியர் சம்பளத்தை 50 சதம் என மாற்றி குறைத்தல், மதுவிலக்கு, அந்நிய துணிகளுக்கு உரிய வரிமுறைகள், அரசியல் கைதிகள் விடுதலை, சி அய் டி  கண்காணிப்பு முறையை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வைஸ்ராய் பரிசீலித்தால் சிவில் ஒத்துழையாமை எழாது என்றார் காந்திஜி. அவரைப் பொறுத்தவரை சிவில் ஒத்துழையாமை என்பது தனிநபர்களின் நன்னடத்தையை அடிப்படையாககொண்டதே தவிர எண்ணிக்கை பலம்சார்ந்த ஒன்றல்ல. சுயவதைகள் துன்பங்களை அனுபவிப்பவர்கள் தேவை என அவர் நினைத்தார்.
கோடிக்கணக்கான தொழிலாளர் விவசாயிகள் கோரிக்கையை அவர் இடம்பெற செய்யவில்லை. கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் பல இடம்பெற்று இருந்தன . வாழ் ஊதியம், வேலைநேர வரையறுப்பு, சுகாதார பணிச்சூழல், வயதுகால பாதுகாப்பு, விவசாய வாடகை குறைப்பு போன்றவைகள் எல்லாம் மக்களை திரட்டி தாங்கள் விரும்பும் எல்லையுடன் கோரிக்கைகளை தீர்த்துக்கொள்வதற்குத்தான் என எம் எஸ் விமர்சனம் வைக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை ஒடுக்கியது. காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது. இந்த இரட்டை நிலை நிர்வாகம் அவர்களுக்கு வசதியாக இருந்தது என்கிறார் எம் எஸ்.
வட்டமேஜை மாநாட்டில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டது. அரசு கம்யூனல் அவார்ட் அறிவித்தது. அரசியல் அமைப்பு சட்ட பிரச்சனைகளில் காங்கிரசின் பலவீனம் தெரிந்தது. காந்தி லண்டனிலிருந்து திரும்பும் நேரத்தில் நேரு உட்பட பலர் சிறையில் இருந்தனர்.. தண்டி யாத்திரைக்கு பின்னர் உப்பு எடுக்க அனுமதி என்பதும், அரசியல் கைதிகள் விடுவிப்பு என்பதும் ஏற்கப்பட்டது.
ஜனவரி 4 1932ல் காந்தி கைது செய்யப்படுகிறார். மார்ச் 11ல் அவர் கம்யூனல் அவார்ட் குறித்து தனது நிலைப்பட்டை தெரிவித்து கடிதம் எழுதுகிறார். காந்தியின் உண்ணாநோன்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது. சிறையிலிருந்து ஹரிஜன் சேவை என்பதை காந்தி துவங்குகிறார். பின்னர் அவ்வேலைகள் இதய சுத்தியுடன் நாடுமுழுதும் நடக்கவில்லை எனச்சொல்லி ஆத்மசுத்திக்கான 21 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார். 1933-34 காலத்தை நாடுமுழுதும் சுற்றிவர பயன்படுத்திக்கொள்கிறார்.
ஒவ்வொருமுறையும் மாபெரும் மக்கள் இயக்கம் எழுந்தபோதெல்லாம் சுப்ரீம் தலைவரான காந்திஜி ஏன்  தீண்டாமை போன்ற மைனர் பிரச்சனைகளில் கவனத்தை மாற்றுகிறார் என எம் எஸ் கேள்வி எழுப்பினார். காந்திஜி அரசியல் என்பதைவிட சமூக பிரச்சனைகளை மேலானதாக பார்த்தவரா என கேள்வி எழுப்பி இல்லை என்கிறார் எம் எஸ்..  Gandhiji was above all the astute political leader of a class- the bourgeosie in whose class interests he always acted.  அதாவது அவர் புத்திகூர்மையான முதலாளித்துவ நலன்களுக்காக எப்போதும் செயல்பட்ட அரசியல்வாதி என்கிற கருத்திற்கு வருகிறார் எம் எஸ்.
 காந்திஜியின் ஹரிஜன நலன் என்பது வெறும் சோசியல் பிரச்சனைக்கானதல்ல-. நின்றுபோன பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் துவக்கி புதிய நிலைமைகளில் காங்கிரசை மீண்டும் முன்னிலைப்படுத்துவதே ஆகும். பாராளுமன்ற நடவடிக்கைகள் என்கிற போக்கிற்கு செல்வதாகும். ஆனால் நேரு உட்பட பலருக்கும் கேள்வி இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளா- அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான சாதனமா என்பதே அக்கேள்விகளாக இருந்தன என்கிறார் எம் எஸ்.
செப்டம்பர் 1934ல் காந்தி படேலுக்கு கடிதம் எழுதினார். நேரு தலைமையில் சோசலிஸ்ட் குழு ஒன்று வளர்ந்து வருகிறது.  சோசலிஸ்ட்கள் வெளியிட்ட கொள்கைதிட்டத்தில் எனக்கு வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அக்கருத்துக்கள் பரவுவதை என்னால் தடுக்கமுடியாது என்று அதில் தெரிவித்திருந்தார். காங்கிரசிலிருந்து விலகுவது குறித்தும் அவர் செப் 17 1934ல் அறிக்கை வெளியிட்டார். சோசலிஸ்ட்கள் வளர்ச்சியை தன்னால் தடுக்கமுடியாது. தான் அகிம்சைமீது முழுமையாக நம்பிக்கை கொண்டு சத்தியாக்கிரகம் நடத்துபவன் என்றார்.. காங்கிரசில் உள்ள பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்க்கும் தேவையற்றமாரல் பிரஷர்’ தராமல் இருந்திடவும், தான் விரும்பும் திட்டத்தை சுதந்திரமாக செயலாக்குவதற்கும் காங்கிரசிலிருந்து வெளியேறுவதாக என அவர் விளக்கமளித்தார்.
பம்பாயில் கூடிய காங்கிரஸ் காந்திஜிக்கு கொடுத்த வேண்டுகோள் பயனளிக்காத நிலையில் அவர்மீது முழு நம்பிக்கைவைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டது. காங்கிரசிலிருந்து விலகியதற்கு பின்னர் அவர் ஹரிஜன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். முரண்பட்ட அரசியல் அறிக்கை ஏதும் தராமல் இருந்தார். காதி, கிராமத்தொழில்கள், தீண்டாமை, சுற்றுப்புறத்தூய்மை, பசுபாதுகாப்பு, பிள்ளைப்பேறு கட்டுப்பாடு போன்ற தற்காலிக அரசியலுக்கு தொடர்பற்ற அம்சங்களில் கவனம் செலுத்தினார் என எம் எஸ் தந்து விமர்சன கண்ணுடன் எழுதுகிறார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் எப்போதும் கலந்துரையாடிவந்தார். முக்கிய தலைவர்கள் அரசியல் ஆலோசனைக்காக அவரிடம் விரைந்தனர். எனவே காங்கிரசிலிருந்து விலகல் என்றாலும் அது அரசியல் விலகலாக இல்லை எனவும் எம் எஸ் கூறுகிறார்.
காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களுக்கும் அவர் அறிவுரை வழங்காமல் இல்லை. ஆச்சார்யா நரேந்திர தேவாவை நேருவுடன் ஆலோசித்து செயல்பட அறிவுறுத்தினார். விஞ்ஞான சோசலிசம் என்றில்லாமல் நடைமுறை நிலைமைகளுக்கு உகந்த இந்திய சூழல் சோசலிசம் என்பது பற்றி திட்டமிட அறிவுறுத்தினார். நேருவையும் லாகூர் காங்கிரசிற்கு தலைமையேற்க செய்தார். இளைஞர்களின் வேகம் முறைப்படுத்தப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படுவது, அளவறிந்து செயல்படவைப்பது குறித்து அவர் பேசினார்.
 காங்கிரஸ் ஓர் அமைப்பு என்கிற வகையில் பலதரப்பட்ட போக்குகளுக்கு இடமளித்து தன்னை முன்நகர்த்தவேண்டியிருந்தது. பாராளுமன்றவாதம், சோசலிஸ்ட் சிந்தனைகள், வலதுசாரி போக்கு, சமூக மத பிரச்சனைகளின் தாக்கம் ஆகியவற்றை விவாத அமர்வுகளில் எதிர்கொண்டு  செல்லவேண்டியிருந்தது. அனைத்துதரப்பினரையும் தகமைத்துக்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. இடதுசாரிகள் காங்கிரஸ் உண்மையாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறதா என்பதை சோதித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையில் இருந்தனர். 1929, 1946 களில் நேரு தலைமை மூலம் காங்கிரஸ் அதைக் காட்ட விரும்பியது. நேரு 1936-1937லும் சுபாஷ் 1938லும் தலைமைக்கு அமர்த்தப்பட்டனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினர் காரியக்கமிட்டியில் இக்காலங்களில் இருக்கமுடிந்தது.
1936ல் நேருவிற்காக தன்பெயரை விலக்கி கொண்டபோது நேருவின் அனைத்து கருத்துக்களிலும் தனக்கு உடன்பாடில்லை என பட்டேல் தெரிவித்தார். பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் நேருவிற்கும் பெருத்த வேறுபாடுகள் இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் எந்த தனிநபருக்காகவும் இல்லை. ஆனாலும் நேரு சிறந்தவர் ஆதரவு தருவோம் என பட்டேல் பேசினார். 1936-38 நேரு காலத்தில் விவசாய திட்டம், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் மற்றும் நேருவின் பெரும் மக்கள் சந்திப்புகள் நடந்தன. 1937 தேர்தலில்  காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று  செல்வாக்கை நிரூபித்தது.
 கவர்னர்களுக்கு இருந்த அதிகாரம் குறித்த பிரிட்டிஷ் எதிர்த்த சர்ச்சையில் இடதுசாரிகள் முழுமையாக நின்றனர். காந்தியும் இந்திய அரசாங்க சட்டம் 1935 விடுதலையை தராவிட்டாலும் கத்தியின்பாற்பட்ட சாம்ராஜ்யம் என்பதை பெரும்பான்மை மக்களின் ராஜ்யம் என்கிற அளவிற்காவது செய்துள்ளது என எழுதினார். மூன்றுகோடி வாக்காளர் என்பது சாதாரண விஷயமல்ல என்றார். எனவே அவர்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு ஏமாற்றம் தராமலும்  பிரிட்டிஷார் நோக்கத்திற்கு இடம்தந்துவிடாமலும் பணியாற்ற வேண்டும் என்றார்.
காந்திஜி மீண்டும் காங்கிரசின் தலையாய சக்தி என்பதை காட்டினார். அமைச்சரவைக்கு அறிவுரை தந்துகொண்டிருந்தார். மதுவிலக்கு, கல்வி, வரி குறித்து எழுதினார். கவர்னர், வைஸ்ராயுடன் முரண்கள் ஏற்பட்ட காலத்தில் தலையிட்டார்.
காங்கிரஸ் அமைச்சரவை விவசாயிகள் போராட்டம் போன்ற எதிர்ப்புகளை காணவேண்டியிருந்தது. அதிருப்தியும் எழுந்தது. காந்தியின் வழிக்காட்டலுடன் இருந்த காங்கிரஸ் தலைமைக்கு இருவகை போராட்டங்களை  சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் எதிர்ப்பு, இடதுசாரிகளின் முயற்சியால் எழும் மக்கள் போராட்டங்கள். எனவே இடதுசாரி வலதுசாரி மத்தியில் இணக்கம் என்பதில் சிக்கல் நிலவி காங்கிரசில் வலதுபிரிவு தங்களின்  செல்வாக்கை நிலைநாட்டும் போராட்டம் எழுந்தது. மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன என்பதுடன் சிந்தாந்த கொள்கை போராட்டங்களும் வலதுபிரிவால் முன்னெடுக்கப்பட்டன. காந்தியும் இந்தவகை அடக்குமுறைகளை தனது புரிதலில் நியாயப்படுத்தினார். சிவில் உரிமைகள் என்பன கிரிமினல் சுதந்திரமல்ல என்றார்.
காங்கிரஸ் மாகாணங்களின் தொழிற்துறை அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டு நேரு, கே டி ஷா பொறுப்பில் கமிட்டி அமைக்கப்பட்டது. விஸ்வேஸ்வரய்யா திட்டம் அடிப்படையாக எடுத்துக்கோள்ளப்பட்டது. அதேபோல் கல்வி மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டு புதிய கல்வித்திட்டம் பேசப்பட்டது. இப்படிப்பட்ட ஆரோக்கிய முன் எடுப்புகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனமாக இருப்பது என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமஸ்தான (பிரின்ஸ்லி) அரசுகள் என்பதிலும் ஜனநாயகப்படுத்துவது என்கிற பார்வை மேலோங்கியது. ஹரிபுராவில் 1938ல் கூடிய காங்கிரஸ் சமஸ்தானஆட்சிப் பகுதிகளுக்கான கொள்கைகளை தீட்டியது. காந்திஜியே ஆலோசனைகளை சொல்லத்துவங்கினார். அவரது சகாக்களான பட்டாபி சீதாரமைய்யா, பஜாஜ் போன்றவர்களின் தலையீடும் உற்சாகமாக நடந்தேறியது. ராஜ்கோட் பிரச்சனையில் காந்திஜி முன்நின்று போராட்டமும் நடத்தினார். அங்கும் மக்கள் எழுச்சிகர போரட்ட வடிவங்களுக்கு சென்று விடாமல் கட்டுக்குள் நிறுத்தப்பட்டனர்.
4
நியுயார்க் டைம்ஸ் நிருபர் டொமினியன் அந்தஸ்து ஏற்கலாம் என நீங்களும் முழுவிடுதலை என சுபாஷும் பேசுவது வேறுபாடில்லையா எனக் கேட்டார். இல்லை இருவரும் வேறு வார்த்தைகளை மொழியை பயன்படுத்துகிறோம் கருத்துவேறுபாடு ஏதுமில்லை என்றார் காந்தி. ஆனால்  அது வெறும் வார்த்தை வேறுபாடல்ல. காந்திஜியின் பட்டாபி சீதராமைய்யா சுபாஷால் தோற்கடிக்கப்பட்டார். பட்டாபி சீதாரமைய்யா போன்ற வலதுசாரி வேட்பாளரை நிறுத்துவது முக்கியமல்லாத ஒன்றல்ல என சுபாஷ் விமர்சித்தார்.. இடது வேட்பாளர் எனில் அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள் போன்று உள்ளது என்ற ’கமெண்ட்டை’  சுபாஷ் தந்தார்.
மெளலானா, நேரு,பிரசாத், புலாபாய் தேசாய், கிருபளானி மகாத்மா ஆகியோருடன் தாமும் இருந்து எடுத்த முடிவுதான் பட்டாபி சீதாரமையாவை நிறுத்துவது என பதில் உரைத்தார் பட்டேல். ஆனால் நேரு தான் கலந்துகொண்டது உண்மைதான், பட்டாபியா சுபாஷா என்பதில் தான் கமிட் ஆகவில்லை என விளக்கம் தந்தார்.
சுபாஷ் தலைமையில் இயங்க விரும்பாமல் வலதுப்பிரிவின் தலைவர்கள் 12 பேர் தங்கள் விலகலை தெரிவித்தனர். நேரு அக்கடிதத்தில் கையொப்பம் இடாவிட்டாலும் விலகுவதாக அறிவித்தார். நெருக்கடி அதிகமானது. காந்தியை கலந்து செயற்குழு அமைப்பது எனும் முயற்சியை சுபாஷ் ஏற்று அவருடன் விவாதித்தார். விவாதத்தில் சுபாஷ் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் தன்னால் காணமுடியாத நிலையில் அவரே அமைத்துக்கொள்வதுதான் சரி என காந்தி தெரிவித்தார்..  காந்திஜியின் அணுகுமுறையால வேறுவழியில்லாமல் சுபாஷ் தனது விலகலை தரநேர்ந்தது என எம் எஸ் எழுதுகிறார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு ராஜேந்திரபிரசாத் வந்தார். காங்கிரஸ் தலைமையை கேட்காமல் எங்கும் சத்தியாக்கிரகம் கூடாது என முடிவெடுத்தனர். பொறுப்பிற்கு நேரு கூட இல்லாமல் வலது பிரிவினர் நியமிக்கப்பட்டனர். சுபாஷ் போன்றவர்கள் எதிர்ப்புநாள் அனுசரித்தனர். ஒழுங்கு மீறல் என அவர்மீது நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை எடுத்தது. ஆகஸ்ட் 1939 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நேதாஜி சுபாஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 இரண்டாம் உலகயுத்தம் துவங்கிய நேரத்தில் பிரிட்டிஷ் வெல்லவேண்டும் என காந்திஜி விரும்பினார். அதே நேரத்தில் வன்முறை எதிர்த்த தனது அகிம்சையை வற்புறுத்தியும் வந்தார் என்பது உண்மையென தன்னால் ஏற்க முடியவில்லை  என்பது எம் எஸ்ஸின் முடிவு.
முதல் உலகப்போர் காலத்தில் அவர் பிரிட்டனுக்கு யுத்த ஆளெடுப்பிற்கு உதவினார். சுயராஜ்ய போராட்டத்திற்கு இது எதிரான ஒன்றல்ல என்றார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாநில அரசாங்க அனுபவம் என்பது காங்கிரசிற்கு கிட்டியது. அடுத்து மத்திய அரசாங்க உரிமை என்பதை காங்கிரஸ் நிபந்தனையாக்கியது. முஸ்லீம் லீக், இந்துமகாசபா என அனைவரும் அதையே பேசினர். அவர்களுக்கு காங்கிரஸ் மீது விமர்சனம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் தலைவர்களில் பட்டேல் ராஜாஜி போன்றவர்கள் கூட காந்தியின் நெறிசார்ந்த அகிம்சை என்பதில் உடன்படமுடியவில்லை என சொல்லத்துவங்கினர். பிரிட்டிஷருக்கு நிபந்தனையற்ற ஆதரவு என காந்திஜி சொல்லிவந்தார். காங்கிரஸ் செயற்குழு நிபந்தனையுடன் என்றது. யுத்த சூழழால் பிரிட்டிஷ் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் என்ற நிலையில் இல்லாமல் இருந்தது.
அய்ரோப்பிய நலன்கள், ராணுவம், மன்னர்கள் ஆட்சி, வகுப்புவாத மோதல்கள் என்கிற நான்கு தூண்களை நம்பி பிரிட்டிஷார் ஆள்கின்றனர் என்று காந்திஜி சொல்வார். அதில் வகுப்புவாத எழுச்சி அதிகமானதை காங்கிரஸ் உணர்ந்தது, முஸ்லீம் லீக் தன்னை பலப்படுத்திக்கொண்டு வந்தது. நிலைமைகளை சீராக்க அமைச்சரவை ராஜினாமா என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் கைக்கொண்டது. 1934க்கு பின்னர் மீண்டும் ராம்கரில்தான் காந்தி காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றவருகிறார். ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியும் சத்தியாக்கிரக கமிட்டியாகட்டும் என்றார் காந்திஜி.
1940களின் மத்தியில் பிரிட்டன் உட்பட மேற்கு அய்ரோப்பா நாஜிகளால் பின்னடைவிற்கு உள்ளாக்கப்படுகிறது. சர்ச்சில் ஆட்சி போய் சாம்பர்லின் வருகிறார். காங்கிரஸ் செயற்குழு பிரிட்டனின் தேசப்பாதுகாப்பு என்கிற முற்றிய சூழலில் காங்கிரசுடன் உடன்பாட்டிற்கு வருவதே உகந்தது என கருதினர். ஜுன் 1940ல் நாட்டின் பாதுகாப்பு என்பதில் அகிம்சை சமயப்பற்று போல் இருக்கமுடியாது என செயற்குழு முடிவெடுத்தது.  Mahatma Gandhi desires the Congress to be true to the creed of non- violence and to decalre its willingness that India should maintain armed forces to defend her freedom against external aggression or internal disorder while they themselves are unaable to go to the full length with Gandhiji; but they recognise that he should be free to pursue his great ideal in his own way and therefore absolve him from the responsibility for the programme and activity which congress has to pursue  என்பதாக தீர்மானம் சென்றது.
காங்கிரஸ் இந்திய விடுதலைக்கான அரசியல் ஸ்தாபன. உலக சமாதான நிறுவனம் இல்லை. அது பலவீனம்தான். மகாத்மா அளவிற்கு எங்களால் செல்லமுடியவில்லை என செயற்குழு தன் நிலைப்பட்டை விளக்கியது. பின்னர் பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தொடர் முரண்பாட்டில் யுத்தம் எதிர்த்த தனிநபர் சத்தியாக்கிரகம் என்கிற காந்திஜியின் ஆலோசனையை காங்கிரஸ் ஏற்றது. முதல் சத்தியாக்கிரகியாக வினோபாஜி அனுப்பபட்டார். நமது பேச்சு எழுத்துரிமை போராட்டம் என காந்திஜி அப்போராட்டத்தை முன்னிறுத்தினார்.
 டிசம்பர் 1941ல் பர்தோலியில் செயற்குழு கூடியது. அகிம்சையை முக்கியத்துவம் எனக் கருதாத யுத்த எதிர்ப்பு என்பதால்  தன்னால் உடன்படமுடியாத நிலையை காந்தி விளக்கி கடிதம் எழுதினார்.  பிப்ரவரி 1942ல் சியாங்காய் ஷேக் டெல்லி வந்தார். பிரிட்டனின் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவிற்கு விடுதலை எனவும் பேசினார்.  மார்ச் 7 1942ல் ரங்கூன் ஜப்பானிடம் வீழ்ந்தது என்ற செய்திக்கு பின்னர் சர்ச்சில் கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி பேசினார். ஜப்பானை முறியடிக்க இந்தியா தனது சக்தி முழுமையும் தரவேண்டும் என்றார்.
’குவிட் இந்தியா’ முழக்கம் வந்த நேரத்தில் தேசப்பாதுகாப்பிற்கு வன்முறை என்பதோ வேறு நெறிகளோ பிரச்சனையாக இல்லை. பிரிட்டிஷாருக்கு நெருக்கடி தந்து எவ்வாறு பேச்சுவார்த்தையை அமைத்துக்கொள்வது என்பதே இருந்தது. காந்தியின்அகிம்சை’, ’போர் சூழலிலும் அகிம்சைவழிநிற்றல்’ என்பதெல்லாம் பிரிட்டிஷார் மீது உருவாக்கவேண்டிய தாக்கம் என்பதாகத்தான் இருந்தது. எனவே காங்கிரஸ் செயற்குழுவிற்கு காந்திஜியின் பின்னால் நிற்பது என்பதில் எவ்வித பிரச்சனையும் எழவில்லை.
நடைமுறையில் காங்கிரஸ் தலைமை  அதிகாரமாற்றம் என்பதற்கு உத்தரவாதமெனில் பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு என்றே செயல்பட்டது. அவ்வப்போது காந்தியின் அறிவுரை ஆலோசனை என அவரிடம் காங்கிரஸ் தலைமை செல்லாமல் இல்லை. பிரிட்டிஷ் எதிர்ப்பு போர் எதிர்ப்பு இயக்கம் மீண்டும் காந்தியிடமே தலைமை பாத்திரத்தை கொடுத்தது. அவரே இந்தியாவை விட்டு வெளியேறு என்கிற முழக்கத்தையும் தந்தார். முதல்முறையாக மக்கள் திரள் போராட்டங்களில் நடந்த வன்முறையை அவர் கண்டிக்காமல் இருந்தார். அரசின் வன்முறைக்கு இயல்பான எதிர்வினை எனவும் கருத்து தெரிவித்தார்.
லூயி பிஷரிடம் உரையாடும்போது முதலில் வரிகொடாமல் இருக்கும் விவசாயிகள் நெஞ்சுரத்துடன் தனித்து போராடும் ஆற்றலைப்பெறுவர். அவர்கள் நிலப்பறியும் செய்வர். நிலப்பிரபுக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றார். எவ்வாறு என்கிற கேள்விக்கு அவர்கள் ஓட்டம் பிடித்து ஒத்துழைப்பர் என்றார் காந்திஜி. அவர்கள் வன்முறையுடன் எதிர்த்தால் அந்த எதிர்ப்பு 15 நாட்கள் இருக்கலாம். முழுமையாக கட்டுக்குள் கொணரப்படும் என அழுத்தமான கருத்தை காந்திஜி வெளிப்படுத்தினார். இவ்வாறெல்லாம் பேசினாலும் அவர் தொழிலாளர்களையோ விவசாயிகளையோ புரட்சிகரமாக திரட்டி போராட அழைக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவர் ஆற்றிய இரண்டுமணிநேர உரையில் இதற்கான அழைப்பும் ஏதுமில்லை. இந்து- முஸ்லீம் பிரச்சனை இணக்கம் பற்றி பேசினார். வாழ்வா சாவா போராட்டம் என சொல்லி சில நிமிடம் பேசினார். இளவரசர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பான வேண்டுகோளை விடுத்தார். போர்க்குணமிக்க இயக்கம் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார் என அவரது உரை குறித்த மதிப்பீட்டை எம் எஸ் தருகிறார்.
விவசாயிகளிடமும் அவர் அரசாங்க எதிர்ப்பு என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுகோள் வைத்தார்.  ஆகஸ்ட் இயக்கத்தை புரட்சிகரமானது என்று கருதிக்கொள்வதற்கு ஏதுமில்லை (There is therefore, no cause for assumption, still made by several political groups and individuals, that August Revoultion had been planned by Gandhiji as a really revolutionary mass struggle)  என்பது எம் எஸ்ஸின் விமர்சனமாக இருக்கிறது.
பிரிட்டிஷ் அரசாங்கமும் எழுந்த இயக்கங்களை செப்டம்பர் 1942க்குள்ளாகவே  ஒடுக்கிவிட்டது. தொடர்ந்த நிகழ்வுகளுக்கு பின்னர் காந்திஜி உண்ணாநோன்பு மேற்கொண்டார். அவரின் வயது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டியிருந்தது. காந்திஜி விடுவிக்கப்படால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் வைத்தனர். 1943 உண்ணாநோன்பின்போது காங்கிரஸ் முஸ்லீம்லீக் இணக்கத்திற்கான பார்முலாவை ராஜாஜி காந்தியிடம் தெரிவித்தார். அதை ஜூலை 1944ல் வெளியிடவும் செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சிறைகளில் வாடவேண்டிய நிலை இருந்தது. காந்திஜியின் உடல்நிலை சீர்கெடுகிறது என அறிந்து அவர் மே 1944ல் விடுவிக்கப்படுகிறார்.
காந்திஜி வைஸ்ராய்க்கு சில முக்கிய கோரிக்கைகளுடன் ஒத்துழைப்பை தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதினார். உடனடி விடுதலை என்கிற பிரகடனம் செய்யப்படுமானால் காங்கிரஸ் யுத்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது என்பது சாத்தியமாகும். தேசிய மத்திய அரசாங்கம் ஒன்றை அமைக்கலாம். இந்தியாவிற்கு நிதிச்சுமை இல்லாமல் இன்றுள்ளபடி இராணுவ நடவடிக்கைகள் தொடரலாம் என்  அவர் எழுதினார்.
செப்டம்பரில் காந்திஜி ஜின்னா பேச்சுவார்த்தையும் துவங்கியது. ஒருபுறம் இந்தியாவைவிட்டு வெளியேறு இயக்க பின்வாங்குதல் நடந்தது. மற்றொரு பக்கத்தில் வெளிநாடு தப்பி சென்று ராணுவ முயற்சிகளை சுபாஷ் மேற்கொண்டதும் நடந்தது.  நாட்டை மீட்கும் புனிதப்போருக்கு தேசத்தந்தையான மகாத்மாவின் ஆசிகோருகிறேன் என்கிற உரையை நேதாஜி ரங்கூனில் நிகழ்த்தினார்..  காந்திஜியிடம் எப்பதிலும் இதற்கு இல்லை. இரண்டு தலைவர்களின் நடவடிக்கைகளுமே வெற்றி பெறவில்லையென எம் எஸ் மதிப்பிடுகிறார்.
 INA  கைதிகள் விடுவிப்பு என்ற கோரிக்கையில் போராட்டங்கள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிப்போட்ட வக்கீல் கோர்ட்டை நேரு அணிந்து வாதாட சென்றார். புலாபாய் தேசாய் தேசத்தின் கவனத்தை இதில் ஈர்த்துவந்தார். 1942 போராட்டத்தை ஒடுக்கியதாக இருந்தாலும் சுபாஷின் அய் என் கைதிகளை ஒடுக்கிய நிலைமைகளிலும்  RIN  கப்பற்படை எழுச்சி ஏற்பட்டது. அதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் காந்திஜி ஹரிஜனில் எழுதியிருந்தார். ஐ என் ஏ மயக்கம் நாட்டில் இருக்கிறது. நேதாஜியின் தேசபக்தி எவருக்கும் குறைந்த ஒன்றல்ல. அதற்கு மேல் என்னால் பாராட்டமுடியாது (The hypnotism of the INA has cast its spell upon us. Netaji's name is one to conjure with. His patriotism is second to none.. My praise and admiration can go no further) என குறிப்பிட்டிருந்தார்.  கப்பற்படை எழுச்சியை அவர் ஏற்கவில்லை.
 பிரிட்டிஷாருடன் காங்கிரஸ் முஸ்லீம் லீக் தலைமைகளின் பேச்சுவார்த்தைகள் அடிப்படையில்  இடைக்கால அரசாங்கம் அமைந்தது. நாடு பிரிக்கப்பட்டு  இந்தியா பாகிஸ்தான்  என  இரு நாடுகளின் விடுதலையாக பிரிவினையுடன் வரலாறு உருக்கொண்டது.
ஆகஸ்ட் 15 நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அன்று காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா கிருபளானி  தனது கருத்தை வெளியிட்டார். கோடிக்கணக்கான மக்களுக்கு குறைந்தபட்ச வன்முறையுடன் இரத்தம் அதிகம் சிந்தாமல் இப்படிபட்ட மாற்றம் உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. மகாத்மாவின் வசீகர தலைமையால் இது சாத்தியமானது. அவர் அகிம்சைவழியில் நம்மை அழைத்து சென்றார் என்ற மதிப்பீட்டை கிருபளானி தந்தார். ஆனால் மகாத்மாவே இதை ஏற்றதாக தெரியவில்லை. அவர் எந்த கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை. நான் வற்றிப்போய்விட்டேன் என்றார். என்னிடம் செய்தி ஏதும் இல்லை என்றார். அது  நல்லதல்ல எனில் அப்படியே இருந்துவிட்டுபோகட்டும் என்றார்.
காந்திஜி சுடப்பட்டு மரணிப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 26 அன்று அவர் “சுதந்திரம் என்பதை நாம் இன்று கையாள்பவராக இருக்கிறோம். ஆனால் எனக்கு எந்த  மயக்கமும் இல்லை, உங்களுக்கு இருக்கலாம்” என்றார் . அப்போது நடந்துவந்த வகுப்பு மோதல்களால் அவர் வருத்தமுற்றிருக்கலாம். எப்போதும் அன்பின் வழி என்றே அவர் உரிமை பாராட்டியிருந்தார். ஆனால் அவரின் வழிமுறைகள் தோற்றதை அவர் கண்ணுற்றார். இந்தியர் மனங்களையே ஒன்றுபடுத்தி மாற்றமுடியவில்லை. அவர் பேசிய பிரிட்டிஷ் ஆன்மா மாறியிருக்குமா என்கிற கேள்வியை எம் எஸ் முன்வைத்தார்.
 காந்திஜி தான் வாழ்நாள் முழுதும் பேசிவந்த கொள்கைகள் தோல்வியுற்றதாக தெரிவித்தார். அவரின் வருகையால் நவகாளி, கல்கத்தா டெல்லியில் மதமோதல்கள் சற்று மட்டுப்பட்டது உண்மைதான். ஆனால் இருபக்க வெறியர்களின் குறியாக தான் ஆகியுள்ளதையும் அவர் உணராமல் இல்லை. இதை நன்குணர்ந்தே அவர் ராஜ்குமாரி அம்ரித் அவர்களிடம் ஜனவரி 28 1948ல் பைத்தியக்காரன் குண்டிற்கு தான் இரையாகி மடிந்தால் புன்முறுவலுடன் சாவை ஏற்பேன் என்றார். அப்படிப்பட்ட துயரம் இரண்டே நாட்களில் நடந்துவிட்டது.
நவம்பர் 1947ல் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி தான் விலகிவிடுவதாக அறிவித்தார். செல்வாக்கு வாய்ந்த அரசாங்க தலைவர்களாகவும் உள்ள நேருவும் பட்டேலும் காங்கிரஸ் கட்சித்தலைமையை கலப்பதில்லை என்பது கிருபளானிக்கு வருத்தமானது. அவரையடுத்து ராஜேந்திரபிரசாத் பொறுப்பேற்றார். நேரு, படேல் உறவுகள் சீர்கெட்டன.
காந்திஜி தான் சுடப்படும் ஜனவரி 30 அன்று மாலை 4 மணிக்கு படேலுடன் உரையாடுகிறார். வழிபாட்டு கூட்டத்திற்கு பிறகு நேரு ஆசாத் சந்திக்க இருந்தனர். காங்கிரஸ் தனது வராலாற்றுக் கடமை முடிந்த தறுவாயில் தன்னைக் கலைத்துக்கொண்டு லோக் சேவக் சங் ஆக மாற வேண்டுகோள் வைத்தார் காந்திஜி. மற்ற எல்லோரும் விடுதலை கொண்டாட்டங்களில் திளத்தபோது அவர் இந்திய அரசின் நிலைத்தன்மை மீது கவலையுடன் இருந்தார்.
மதமோதல்கள், காங்கிரஸ் அமைப்பின் பலவீனங்கள் அவரை விசனமுற செய்தன. . முப்பது ஆண்டுகள் போதித்த அன்பை இந்திய மக்கள் கடைப்பிடிக்காமல் மதத்தின் பெயரால் பிரிந்து கிடந்து மோதிக்கொண்டது ஏன்- இருநாடுகள் உருவானதேன்? அவரின் சீடர்களாக தியாகம் பல செய்த தலைவர்கள் அதிகாரம் புகழ் என மோதிக்கொள்வதேன்  (He was unabale to give rational explanation as to why after three decades of his preaching the gospel of love, he had had the misfortune to see in his last days the Indian People so divided into two warring communal camps that the very consummation of his political aim- the creation of independent state- led to the creation of two anatagonistic states set up on the basis of religion.Nor could he offer convincing explanation as why the very people, who had, under his leadership, made tremendous sacrifices for the cause of the nation, started quarrelling among themselves for power and personal aggrandizement.")  என இரு முக்கிய கேள்விகளை காந்தியின் சோதனைகள் கொள்கை மீது எம் எஸ் வைத்தார். இன்று எம் எஸ் அல்லது அவர் காலத்திய எந்த மார்க்சிய இயக்கத்தோழர்க்கும் இம்மாதிரி கேள்விகள் தங்கள் பணி குறித்து பிற்காலத்தில் எழும் என்பதை எம் எஸ் அன்று உணர்ந்திருப்பாரா என தெரியவில்லை
பூர்ஷ்வா உலகக் கண்ணோட்டம் காந்திஜியிடம் இருந்ததால் அவரால் இந்த பிரச்சனைகளை உணரமுடியவில்லை. சமூக வளர்ச்சி விதிகள் குறித்து அறியமுடியவில்லை. காந்தியம்புதிய மனிதன் உருவாக்கம்’ என்பதில்சமூக தத்துவம்’ என்ற வகையில் முழுத்தோல்வி அடைந்துவிட்டதாக தீர்ப்பிடுகிறார் எம் எஸ்.
5
காந்தியம் என்றால் என்ன என்கிற தனி அத்தியாயம் ஒன்றை எம் எஸ் இவ்வாக்கத்தில் எழுதியிருக்கிறார். காந்திஜி சத்திய சோதனை என சொல்கிறார், காந்திஜியின் வளர்ச்சியை நாம் எப்படி பார்ப்பது- பிரிட்டிஷாருக்கு உலகப்போரில் ஆள் சேர்த்த மனிதரிலிருந்து தேசத்தந்தையாக போற்றப்படுவது- பிரிட்டிஷாரே வெளியேறு என போராட்டம் மேற்கொண்டது, போர்பந்தர் சிறு மன்னர் ஆட்சியில் இடம்பெற்ற பிரபுத்துவ சூழலிலிருந்து இந்திய ஜனநாயகத்திற்கு போராடியது, லண்டனில் விஜிடேரியன் சொசைட்டியில் இளைஞனாக சென்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது போன்றவற்றை எவ்வாறு விளக்குவது என்கிற கேள்வியை முன்வைத்து விடை தேடுகிறார் எம் எஸ்..
வினோபாஜியின் பூதான் இயக்கம் காந்திஜியின் செல்வாக்கால் ஏற்பட்ட ஒன்றே. அதை நாம் புறக்கணிக்கமுடியாது. நில சொத்துக்கு எதிரான அகிம்சைவழி இயக்கமது. கம்யூனிஸ்ட் கட்சி நீங்கலாக காங்கிரஸ்  மற்றும் அதன் பலபிரிவுகள் காந்திஜியின் பெயரை சொல்லியே இயங்குகின்றன.
காந்திஜி உயர் அளவில் சிக்கலான ஆளுமை. அவரது போதனைகளும் அப்படிப்பட்டவையே. எளியவகை முடிவுகளுக்கு நம் வந்துவிடமுடியாது. மக்களை திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்து சென்றவர் என்பது ஒருபக்கம். எதிர்புரட்சியாளர் என்கிற வகையில் மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தியவர் என்பது மறுபக்கம்.  ஏராள நிகழ்வுகளின் பெரும் பரப்பு அவரது வாழ்க்கை. எவரும் சிலவற்றை கோர்த்து இதுதான் காந்தியம் என்றே சொல்லக்கூடும். ஆனால் அவர் குறித்துவரலாற்று பார்வையில் ஒருங்கிணைந்த புரிதலுக்கு வருவது கடினமான ஒன்றாகும். எளியவகைப்பட்ட புகழ்பாடல்களும், எளியவகை புரிதலுடன் வசைபாடல்களும் தான் உள்ளன என்கிற முடிவிற்கு இ எம் எஸ் வருகிறார்.
காந்திஜி ஒரு கருத்துமுதல்வாதி. நெறிசார்ந்த உண்மை, அகிம்சை, சந்ந்தோஷங்களை தேடாமை ஆகியவற்றிற்கு அவர் நின்றார். சுதந்திரம், ஜனநாயகம், அமைதி என்கிற அரசியல் அவரிடம் இருந்தது. சாதி ஏற்றத்தாழ்வு கூடாது, பெண்கள் முன்னேற்றம், மத ஒற்றுமை என்கிற சமூக மதிப்புகளுக்காக நின்றார்.’ செமி ரிலிஜியஸ்’ மொழியாடலை  அவர் கையாண்டார். அவரைரீஆக்ஷனரி’ என எளிய முத்திரை குத்திவிடவும் முடியாது. ஏனெனில் அந்த ரீஆக்ஷனரிதான் மக்களை பெருமளவு திரட்டியவர்.  This self contradiction is a manifestation of the contradiction in the real political life of our nation, arising out of the fact that the national democratic movement was led by the bourgeoisie, linked with feudalism எனவும் மதிப்பிட்டார் இ எம் எஸ்..
கிராமப்புற மக்களை விவசாயிகளை திரட்டியதில் காந்திக்கு பெரும் பங்களிப்பு உள்ளதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில் அனைத்தும் காந்திஜியால்தான் என்பதும் ஏற்புக்குரியதல்ல. ஜனநாயக போராட்டம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை அனைத்து தரப்பார் மத்தியிலும் உருவாக்கியவர் காந்திஜி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தன் சொந்த பூர்ஷ்வா வர்க்க எல்லைக்குள் வைத்ததும் அவரே  (Enormous help to bourgeosie in rousing the masses in action against imperialism and in preventing them from resorting to revoultionary mass action)  என குறிப்பிடுகிறார் எம் எஸ். இங்கு புரட்சிகர மக்கள் எழுச்சி என்பதற்கு ஆயுதம் ஏந்திய வன்முறை போராட்டம் என்கிற அர்த்தம் இருக்கிறதா என வெளிப்படையாக எம் எஸ் அவர்கள் பேசவில்லை.
 காந்திஜி பூர்ஷ்வா வர்க்கத்தின் அனைத்து நடவடிக்கைளுக்கும் துணையாக இருந்தார் என்றும் சொல்லக்கூடாது என்கிறார் எம் எஸ். நடைமுறை அரசியல் சார்ந்த  படேலும் விஞ்ஞான நவீன பார்வை கொண்ட நேருவும் தங்களுக்குள் வேறுபட்டனர். காந்திஜியுடனும் கூட மாறுபட்டனர். காந்திஜி தொடர்ந்து வலியுறுத்திய நெறிகள் ஆட்சி பொறுப்பு ஏற்க இருந்தவர்களுக்கு தடையாகவும் இருக்கத் துவங்கியது. காந்திஜியோ ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் காட்டிய அதே மதிப்பீடுகள் தொடரவேண்டும் என செயல்படுபவராக இருந்தார்.
காந்தி மறைந்த இந்த 10 ஆண்டுகளில் அவரின் காந்தியத்திற்கு என்ன நேர்ந்தது என்கிற அத்தியாயம் ஒன்றையும் எம் எஸ் எழுதியுள்ளார்.  1940ல்தான் வினோபாவே தெரியவந்தார். அவர் காந்தியின் கொள்கைகளை உண்மையிலேயே பின்பற்றுபவர் என ஏற்கப்பட்டார். 1951ல் காந்திஜியின் சாரத்தில் பூதான் துவங்கினார். மக்கள் சக்தி மூலம் நிலப்பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முடியும் என பேசினார் வினோபாவேஜி. வர்க்க பேதமற்ற சமூகம் அகிம்சை வழியில் என சிலர் புகழவும் செய்தனர். சிலர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பிற்கு என அதைப் பயன்படுத்தினர்.  .
அரசதிகாரம் வந்தவுடன் மக்கள் போராட்டம் என்பதை தடையாக காந்திஜியை கொண்டாடி வளர்ந்தவர்கள் நினைத்தனர். காங்கிரசை கலைத்துவிட்டு லோக் சகாயக் சங் அமை என காந்திஜி சொல்லியதை அவர்கள் கேட்கவில்லை.. மனம் மாற்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பது சாத்தியமல்ல. அரசின் தலையீடு வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் சொல்லிவந்தனர். எனவே தான் நிலப்பிரபுக்கள் வர்க்கம் என்கிற வகையில் சமூக மாற்றத்திற்கு உதவமுடியாது என்கிற கருத்தை கம்யூனிஸ்ட்கள் பேசினார்கள்.  எந்த வர்க்கமும் தன் அதிகாரத்தை தானே முன்வந்து இழக்காது எனபது மார்க்சிய பாடமாகும்.
Ref:
The mahatma and the Ism- EMS Jan 1959

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...