Skip to main content

Dakshayayani The First Dalit woman Leader In the Constituent Assembly

தாட்சாயிணி வேலாயுதம் (1912-1978) 
                    -ஆர்.பட்டாபிராமன்

தாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய பெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர். இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணய அசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர். அங்கு இடம் பெற்ற ஒரே தலித் (அரிசன) பெண்மணியும் அவர்தான் என்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிக நாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952 வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு செல்லும் போது  அவரின் வயது 34  மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும்  குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.
 கேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர் சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார்.  தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுக கேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல். மேலாடை கூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது. நிமிர்ந்து  பார்த்துவிடமுடியாது. ஆபரணங்கள் அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள் வலுப்பெற்ற சூழல் நிலவியது.
அய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கான பள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும் கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர் கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன் வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு சமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில் அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள் அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு, சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டனமுலவக்காடு பகுதியில் உள்ள புனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம் கொடுத்து உதவினார்
 கிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர் 1913ல் புலையர் மகாசபை அமைத்து உரிமைகளுக்காக போராடத்துவங்கினர். தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடை அணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி என சென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித் பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன் சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சி அரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம் இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது. சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம் பெற்றார்.
கொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி 1935-42வரை  திருச்சூர் பெரிகோதிகரா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அங்கும் தீண்டாமையின் கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல் பின்புலம் மீது பெருமிதம் கொண்டு  கொச்சி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னை ராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்கு இடம் பெற்றார்.
தாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இரு ஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை  வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவு என்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபை சிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல் நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும் என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானது என்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பை வழங்க உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்ற அனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வை தலித்களும் பெறவைக்க உதவவேண்டும் என்றார்.
நேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின் லிச்சாவி குடியரசு குறித்து  டிசம்பர் 19, 1946 அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சன பார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது. அதே நேரத்தில் சோசலிஸ்ட் குடியரசின் மூலம்தான் தலித்களின் நலன்களை காக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர் தெரிவிக்க தவறவில்லை.
அதேபோல் சர்தார் வல்லபாய் உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்த தனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்று நடந்த விவாதத்தில் முன்வைத்தார்தனித்தொகுதி, இட ஒதுக்கீடு என்பவற்றையெல்லாம் புறந்தள்ளி உரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார அடிமைகளாக இருக்கும்வரை தனித்தொகுதி, இணைத்தொகுதி, கூடுதல் சதவீத   ஒதுக்கீடு இடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காது என தனது உரையில் அவர் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள் நிறைந்த பொதுவான அடையாளம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது என அவர் கருதினார். இல்லையெனில் பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூக மோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியா மாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில் இருந்தது.
 அதேபோல்  அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்ட நகல் குறித்து கடுமையான விமர்சனத்தை எழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்ற தரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமான வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. . கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில் குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை. பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார். கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார். அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள் வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம் என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயக ஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.

தீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்திய அரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிற கருத்தை அழுத்தமாக தன் உரையில் முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரி காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். தீண்டாமை எதிர்ப்பு எனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம் நன்கொடை கேட்டபோது, இதற்கு காரணமானவர்களிடம் மட்டும் கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்ட என்போன்றவர்களால் தர இயலாது என காரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி, கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில் பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கி நின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.
 தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்கிற தீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும் என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இது காங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம் போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாக இப்பிரச்சனை மீதான அணுகுமுறையை மேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது.  ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து  தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில் நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன் விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாக தன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி. தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால் மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில் தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.
லிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும் ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று  இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள் போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர் என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியா தரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்த பிரிவினையும் கோரவேண்டாம் என  ஹரிஜன உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர், அரிஜனங்கள் என எவ்வகையிலும் பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனது உரையில்  தெரிவித்தார். சர்ச்சில் அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ் காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணி அவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்க சட்டம் கொணர்ந்தார்களா என வினவினார். ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில் இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும் நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி என பேசுவதை ஏற்கமுடியாது என்றார். அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாக இங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு நெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாக வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமே தவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.
அதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில் நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிற கேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார். தங்களை இந்துக்களாக கருதவில்லையா என்கிற கேள்வியை அவர் தொடுத்தார். அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும் சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்து விடுபட வைப்பது பாசிச சமுதாய வடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதார புரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி. மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிற முறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் என சாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.
தலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தை அவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில் வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார். வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்கு தேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்து விலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம் கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில்  சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளா ஜாக்ரதி பரிஷத்  என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.

                                                 ( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)
1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய், குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார். அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சத வாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சத வாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கே ஆர் நாரயணன் இந்தியாவின்  தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர் என்ற வரலாற்றை உருவாக்கினார்.  தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.
.

.

Comments

  1. இதுவரை அறியாத புதிய செய்தியுடன் கூடிய பதிவு...இது போன்ற பதிவுகள் உங்கள் பிளாக்கை அலங்கரிக்கட்டும். வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. சிறந்த கட்டுரை.தகவல்கள் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா