அரசியல் பொருளாதார
சிந்தனைகள்
( 20 ஆண்டுகளுக்கு முன்னர் மே 1998 மேடை இதழில் வெளிவந்தது)
-
ஆர். பட்டாபிராமன்
மனிதர்கள் அடையாளமற்று வாழ முடியுமா? கற்பனை செய்வது கூட
கடினமாக உள்ளது. பெயர், ஊர், சாதி, மதம், இனம், தேசம், இசம் என ஏதோ ஓர் அடையாளம் உறவாடிக்கொண்டே
வருகிறது. அடையாளமற்று போவதல்ல பிரச்சனை. ஒற்றை அடையாளம்- அதுவே அடையாளம் என ஒன்றை
மட்டும் புனிதப்படுத்தி மற்றவற்றை ஒதுக்கிவிடுவது- கண்டுகொள்ளாமல் புறந்தள்ளுவது- ஒன்றை
அதிகாரத்திற்கு உயர்த்திவிடுவது- மற்றவற்றை அதற்கு கீழிறக்கிவிடுவது என்பதே பிரச்சனையாகிறது.
மனிதர்களுக்கிடையிலும், ஒரே மனிதருக்குள்ளும் பல அடையாளங்கள் நிலவுகின்றன. நிகழ்ச்சிநிரலில்
ஒவ்வோர் காலத்திலும் ஏதேனும் ஒன்றை பிரதானப்படுத்தவேண்டிய தேவை எழலாம். இதற்கு பொருள்
அந்த நேரத்தில் வேறு அடையாளங்கள் ஏதுமே இல்லை என்பதாகாது.
அம்பேத்கருக்கும் பொதுவாக ஏற்கப்பட்ட பிரதான அடையாளம் என
ஒன்று உள்ளது. அந்த அடையாளம் பரவலாக வெளிக்கொணரப்பட்டு
அறியப்பட்டுள்ளது. அது சில நேரங்களில் புனைவாகக்கூட உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர் எதிராக,
அம்பேதகரின் தீவிர ஆளுமை கொண்ட மேதைமை- நிகரற்ற அறிவாற்றலின் நீள்பாதை- தன் வழியில்
சந்தித்த அனைத்தையும் விசாரித்தது- ஆய்வு செய்தது என்பது போதுமான அளவிற்கு வெளிக்கொணரப்படவில்லை.
சாதி, தீண்டாமை கொடுமை, இந்துமதம், சாதி ஒழிப்பு பற்றிய அவரது சிந்தனைகள் இந்திய சமூகத்தின்
செவ்வியல்களாக ஏற்கப்படவேண்டியவை. அவரது அரசியல் பொருளாதார சிந்தனைகள் குறித்த விவாதங்கள்
தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் சில அம்சங்கள் இங்கே முன்வைக்கப்படுகிறது.
மேற்கித்திய சிந்தனை மரபின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில்
அம்பேத்கரும் ஒருவர்.மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி விமர்சனரீதியான அணுகுமுறைகளையும்
மேற்கொண்டவர். இந்தியாவிற்கு உகந்தது நாடாளுமன்ற அரசாங்கமா- சர்வாதிகாரமா என்பதை தொடர்ந்து
விவாதத்திற்கு உள்ளாக்கியவர். தனது இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ
அடிப்படையில் அமையும்- தேக்கமற்று முன்னேறும் எனக் கருதினார்.
பல நூற்றாண்டுக் கால வாழ்வெளியில் அரசியல் அதிகாரம் ஒரு சிலரின்
கைகளிலேயே குவிந்து கிடந்து பெரும்பான்மை மக்கள் சமூக வாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட
நாட்டில் அரசாங்க அதிகாரம் அரசியல் அதிகாரம் பெறும் முறைகள் பற்றி அவர் ஆய்ந்து நடைமுறைப்படுத்த
விழைந்தார். அப்படி பரவலாக அரசியல் அதிகாரம் நகர்ந்து நீடித்து பலன்களை உருவாக்கும்
அரசியல் முறைப்பற்றியும் அவர் யோசித்தார். சர்வாதிகாரம் அது பாட்டாளிவகைப்பட்டதாக இருந்தாலும்
முதலாளிவகைப்பட்டதாக இருந்தாலும் கொடுங்கோன்மைக்கே வழிவகுக்கும்- எனவே நாடாளுமன்ற ஜனநாயகமே
தேவை என்றார். அரசு சோசலிசம், நாடாளுமன்ற ஜனநாயகம்,
சர்வாதிகாரமின்மை என்ற அம்சங்களின் இணைப்பையே அவர் பரிந்துரைத்தார்.
அரசே எல்லாம் என்கிற முழுமுதல் கொள்கையை அவர் ஏற்கவில்லை.
மாக்கியவெலி, ஹாம்சன் கோட்பாடுகளை அவர் விமர்சிக்காமல் இல்லை. அரசை புனித புதிராக்கி
கடவுளின் கட்டளையாக்கும் கூத்தை அவர் கேலி செய்தார். சட்டங்களுக்காக மக்கள் இல்லை-
மக்களுக்காகவே சட்டங்கள்- மக்களுக்காகவே அரசு என்றார். மக்களின் விருப்பார்வங்களுக்கு
பணிந்து நடக்கும் அரசையே அவர் விழைந்தார். சட்ட மறுப்பு என்பதை அராஜகம் என வர்ணித்தார்.
நாகரீகமான சமுதாயம் சட்டரீதியாகவே அமையமுடியும் என்றார். பலதரப்பட்ட மக்களின் சமூக அமைதிக்கு நீதி செய்வதே சட்டம் என்றார். தனிநபர்
உரிமையை தொடர்ந்து வலியுறுத்திய அம்பேத்கர் அரசு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையியும்
அத்துடன் இணைப்பதற்கு முயன்றார்.
விடுதலை, குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வு, அவர்தம் மகிழ்ச்சி,
மத உரிமை, ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் சிறப்பு
கவனம், பயமற்ற சூழல் ஆகியவற்றை உத்தரவாதம் செய்யவேண்டியது அரசின் அடிப்படை கடமைகள் என்றார் அம்பேத்கர். அரசு என்பது
எஜமான மனப்பாங்குடன் நடந்துவிடக்கூடாது- சேவகத்தனமை கொண்டதாக இருக்கவேண்டும் என்றார். அரசியல் விடுதலையுடன் நிற்பதல்ல மானுடவிடுதலை. சமூக,
பொருளாதார ஆன்மீக அறிவாற்றல் என விடுதலையின் பாதை நீண்டது என்றார் அம்பேத்கர்.
ஜனநாயகம் என்பது
ஓர் அரசாங்க வடிவம் அல்ல. அது சமூக அமைப்பின் வடிவம். ஜனநாயகம் வெற்றி பெற சாதகமான
சமூக ஏற்பாடு தேவையாகிறது. ஒருவர் மற்றவர்க்கு மரியாதையையும் உரிய மதிப்பினையும் கொடுத்து
இணைந்து வாழும் முறை ஜனநாயகம். மனிதர்கள் தங்களிடம் அமைந்துள்ள பொதுமை குணங்களையும்,
பொதுமை உணர்வுகளையும், தேவைகளையும் முன்னிட்டு சமூகமாக அமைகிறார்கள். மொழி, தகவல் இதர தொடர்புகளால் சமூகம் தொடர்ந்து நிலைபெறுகிறது-
வாழ்கிறது.
இந்தியாவில் சாதிய
ஏற்பாடுகளால் பொது ஏற்பாடு தடுக்கப்பட்டுவிட்டது. மக்களிடம் மலரவேண்டிய ஒத்துழைப்பை
சாதி தடை செய்துவிடுகிறது. மிக உன்னதமான இலட்சியம் என்கிற ஒன்றை நிறைவேற்றிடக்கூட அவர்களை
ஒன்றுபட முடியாமல் செய்துவிடுகிறது. மனித உரிமைகள் அடிப்படையானது. ஜனநாயக சமூகம் அவற்றை
உத்தரவாதப்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் ஜனநாயகத்தில் ஆக முக்கியமானவர். அவர்களுக்கான
வாழ்வை ஓய்வை ஜன்நாயகம் உறுதிசெய்திடவேண்டும் என்கிற வரையறைகளை அவர் முன்வைத்தார்.
கட்டுப்பாடற்ற சுந்தந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை. ஏன்
எல்லாவற்றிலும் அரசாங்கம் தலையிடுகிறது என வரும் குரல்களை அவர் கூர்ந்து கவனித்தவராகவும்
இருந்தார். அதேநேரத்தில் அரசாங்கம் தன் தலையிடாக் கொள்கை மூலம்தான் விடுதலையை உணரவைக்கமுடியும்
என்பதை அவர் ஏற்கவில்லை. அந்த விடுதலை யாருக்கானது- எதற்கான விடுதலை என்பதை அவர் அம்பலப்படுத்தினார்.
நிலப்பிரபுக்களின் முதலாளிகளின் சுரண்டலுக்கு அவர்கள் உயர்வாழ்விற்கான விடுதலை என அவர்
சாடினார்.
சமத்துவம் எனப் பேசும்போது சம அளவு வருவாய்- சம அளவு சொத்து
என புரிந்து கொள்ளக்கூடாது என அவர் எச்சரித்தார். சிலருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள்
இல்லாமல் இருப்பது- அனைவருக்குமான வாய்ப்புகள் என அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
இந்தியாவில் சோசலிசத்திற்கான சவால்கள் பொருளாதார தளத்தைவிட சமூக தளத்தில்தான் என்பதை
புரிந்துகொள்ளுங்கள் என அவர் உரத்து சொல்லிவந்தார்.
இந்தியாவில் பொது உடைமை நனவாக வேண்டும் என நினைக்கும் கம்யூனிஸ்ட்கள் சமூக சீர்திருத்தம்
மிக அவசியமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இதில் தப்பிக்கவே முடியாது எனவும்
அழுத்தமாக அம்பேத்கர் வாதிட்டுவந்தார்.
புத்தமா-மார்க்சியமா எவ்வழி என்கிற ஆய்வில் வன்முறை, சர்வாதிகாரம்,
பொதுவுடைமை சித்தாந்தத்தின் பலம்- பலவீனம் பற்றி அவர் விவாதித்தார். கம்யூனிச வாழ்க்கை
முறையைவிட புத்த வாழ்க்கைமுறை சிறந்தது என பரிந்துரைக்கிறார். புத்தருக்கும் மார்க்சிற்கும்
குறிக்கோள் பொதுவானதாக இருந்தாலும் மார்க்கம் வேறுபடுகிறது. எவ்வழி மேலானது? எது நீண்டகாலம்
நிலைத்து பயன்தரப்போவது என்கிற வினாக்களை அவர் எழுப்பி விடைகாண முயன்றார்.
பொதுவுடைமைவாதிகள் வன்முறையை ஒரு முற்றான தத்துவமாக முன்வைக்கிறார்கள்.
உழைப்பாளர் சர்வாதிகாரம் எனப் பிரகடனப்படுத்துகிறார்கள். புத்தர் சர்வாதிகாரத்தை ஒருபோதும்
ஏற்றதில்லை. குறிக்கோள் போலவே அதை அடையும் மார்க்கமும் மதிப்பிற்குரியதாக இருக்கவேண்டும்.
கம்யூனிஸ்ட்கள் தங்கள் மதிப்புமிக்க குறிக்கோளை அடைய வேறு மதிப்புமிக்க குறிக்கோள்களை
அழிக்கவில்லை என சொல்லமுடியுமா என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். மனிதகொலைகளுக்கு
மதிப்பு கிடையாதா? உயிர்வதையில்லாமல் உடைமை மீட்பு முடியாதா? அரசு உதிர்ந்துபோகும்
என்கிறார்களே அதற்கு பதில் அவ்விடத்திற்கு ஏதேனும் வருமா? அராஜகம் அரங்கேறிவிடுமா என்கிற
வினாக்கள் அவரிடம் இருந்தன.
ருஷ்யாவின் பொதுவுடைமை சர்வாதிகாரம் பல சாதனைகள் புரிந்திருப்பதை
மறுக்க முடியாது.எனவேதான் பிற்பட்ட நாடுகளுக்கு அதை நான் பரிந்துரைக்கிறேன் என அவர்
கூறினார். பலத்தினால் ந்டத்தப்படும் அரசு என்பதைவிட
அறநெறி இயல்பின் வழியான அரசு உயர்ந்தது என்பதில் ஆழமான நம்பிக்கையை அம்பேத்கர் வெளிப்படுத்தினார்.
ருஷ்யப்புரட்சியை நாம் வரவேற்கிறோம். அதன் நோக்கம் சமத்துவத்தை உருவாக்குவது என்பதாக
இருக்கிறது. சமத்துவத்தை உருவாக்கும்போது சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை தியாகம் செய்துவிடமுடியாது
என்கிற எச்சரிக்கை உணர்வையும் அவர் சேர்த்தே சொல்லிவந்தார். புத்தரின் வழியால்தான்
இம்மூன்றையும் தர இயலும். கம்யூனிசத்தால் ஒன்றைத்தான் கொடுக்க முடியும் என்கிற முடிவிற்கு
அவர் வந்தடைந்தார்.
சோவியத் விமர்சகராக இருந்தபோதிலும் அமெரிக்க ஆதரவு என்கிற
நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. அமெரிக்கா ஜனநாயகம் பேசினாலும் நடைமுறையில் முதலாளித்துவமாகவே
இருக்கிறது என்றார். அமெரிக்காவின் செல்வாக்கு விரிவுபடுவது பேராபத்தின் அறிகுறி என
எச்சரித்து வந்தார். நேருவின் வெளிநாட்டு கொள்கையை வாய்ப்பு கிடைத்தபொழுதெல்லாம் தாக்கியவர்களில்
அம்பேத்கரும் ஒருவர். கூட்டுசேரா கொள்கை இந்தியாவை நண்பரற்ற நாடாக மாற்றிவிடும் என
நாடாளுமன்றத்திலேயே எச்சரித்தவர் அம்பேத்கர்.
ருஷ்யா, சீனாவிற்கு இந்தியாவில் கம்யூனிசம் பரவவேண்டும் என்கிற நோக்கம் உள்ளது என்பதையும்
அவர் குற்றசாட்டாக பேசினார். நமது வெளிநாட்டுக்கொள்கை நமது பிரச்சனைகளை தீர்க்கிறதோ
இல்லையோ மற்ற நாடுகளின் பிரச்சனைகளை தீர்த்துவிடுகிறது என கேலியாக குறிப்பிட்டவர் அம்பேத்கர்.
’ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வாழ்க்கைமுறைதான்’ நாட்டில் அதன்
தேசியத்திற்கான தூண்டலாக அமையும் என்ற கருத்து அம்பேத்கரிடம் இருந்தது. நாடு முழுவதற்கும்
ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருந்திடலாம் என்றும் அவர் தெரிவித்தார். திராவிடப்பகுதியில்
எதிர்ப்பு வரலாமே என வினவியபோது தேசத்திற்கு அவசியம் என கருதுவதை நாம் செய்தாகவேண்டும்
என்றார். நிர்வாக வசதிக்காகவே நாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் ஜனநாயகத்தை
விரிவுபடுத்தும் என்றாலும், நாளடைவில் இந்தியா சிதறுண்டு போவதற்கு இது வழிவகுத்துவிடும்
என வெளிப்படையாக பேசினார் அம்பேத்கர். மராட்டியன் என்கிற பெருமிதம் காரணமாக மீண்டும்
பிறந்தால் அங்கேயே பிறக்கவேண்டும் என விழைந்தார். அதேநேரத்தில் இந்தியன், ஆசியக்காரன்,
உலக குடிமகன் என பெருமைப்படுதலையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.
பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றிய ஆக்கங்களை அம்பேத்கர் தந்துள்ளார்.
நாணயத்தின் பிரச்சனை, நிதிபற்றிய புத்தகங்கள் உலக அரங்கில் பாராட்டைப்பெற்றன. நிலவரி,
வரிக்கொள்கை, தொழில்கொள்கை, விவசாயம், உணவு பாதுகாப்பு, தேசியமயம் போன்ற பல பிரச்சனைகளில்
அவர் தலையிட்டு தன் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். சோவியத் திட்டமிடுதல், ரிகார்டோ
துவங்கி கீன்ஸ்வரை மேற்கின் பொருளாதார சிந்தனைகளை அவர் உள்வாங்கியிருந்தார்.
மூலதனம் என்பது சேமிப்பால்,
சேமிப்பு என்பது உபரியால்தான் என்பதை தெளிவாக ஏற்றுக்கொண்டார். துண்டு துக்காணி நிலங்களும்,
துண்டு துண்டாக நில விநியோகங்களும் நிலமற்ற தொழிலாளர்க்கு உதவாது என நினைத்தார். கம்யூனிஸ்ட்
தலைவர் டாங்கேவுடன் நடத்திய உரையாடலில் எல்லோருக்கும் பிரித்துக்கொடுக்க எங்கே நிலம்
இருக்கிறது. சோவியத் முறையை பின்பற்றுவதே நல்லது. கூட்டுப்பண்ணை முறை சிறந்தது என்றார்.
விவசாயம் நவீனப்படுத்தப்படவேண்டும். உரிய விஞ்ஞான திட்டங்கள் உடனடி அவசியம் என்றார்.
நில அடமான வங்கிகள், கூட்டுறவு மற்றும் மார்கெடிங்
சொசைட்டிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும் என்பதை அவர்தன் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.
விவசாயமானாலும் தொழிற்சாலையானாலும் மூலதனத்தை அரசே வழங்கிடவேண்டும்
என கோரினார். விவசாயத் தொழிலாளர்க்கு குறந்தபட்ச கூலி உத்தரவாதம் செய்யப்படவேண்டும்
என்றார். பொருளாதார வாழ்வை அரசாங்கமே திட்டமிடல் நன்று என்றார். அதே நேரத்தில் அரசாங்க
சோசலிசம் என்கிற பெயரில் சர்வாதிகாரம் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வையும்
அவரெழுப்பிக்கொண்டே இருந்தார். தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இன்ஷ்யூரன்ஸ், பேருந்துகள்
தேசிய மயம் என முன்வைத்தார்
அரசியல் சாசன சட்டங்கள் நாட்டின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல,
பொருளாதார அமைப்பையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்திவந்தார்.
விரைவான தொழிற்மயமாக்கலுக்கு அரசாங்க சோசலிசம் அவசியம் என அவர் நினைத்தார். தர்மகர்த்தாமுறை
என்பதை அவர் கடுமையாக சாடினார். சாதியும் பொருளாதார முன்னேற்றமும் பொருந்திபோகாது-
கைகோர்க்காது. சாதிய உணர்வு பொருளாதார வளர்ச்சிகளை தடை செய்துவிடும் ஆற்றல் கொண்டது
என்றார்..
நாட்டு மக்களின்
வாங்கும் சக்திதான் நாணயம் தொடர்பான கொள்கையின் சாரமாக இருக்கவேண்டும். மற்ற நாடுகளின்
நாணயங்களுடன் ஒப்பீடு செய்து நாணய மதிப்பு வீழ்ச்சி என்கிற கணிப்பை தவறு என்றார். இருநாடுகளின்
பரிவர்த்தனை மதிப்புகள் மாறாமல் இருக்கும்போது இருநாடுகளின் பொருட்கள் விலையில் வித்தியாசமிருப்பது
ஏன் என்கிற முக்கிய கேள்வியை அவர் எழுப்பினார். இந்தியாவிலும் தங்கமே நாணயமாக்கப்படவேண்டும்
என்றார்.
மாநில வருவாயை உய்ர்த்தும்
வரிவிதிப்பு குறித்து அம்பேத்கர் பேசினார். விற்பனைவரி முழுமையாக மாநிலபட்டியலில் இருக்கவேண்டும்
என்றார்.நிலவரியில் கெடுபிடி கூடாது என்றார். பட்ஜெட்டில் இராணுவ செலவினங்கள் கூடுதலாகி
வருவதை அவர் விமர்சனக் கண்கொண்டு பார்த்தார். மது ஒழிப்பு என்பதைவிட பட்டினி ஒழிப்பில்
கவனம் குவிப்போம் என்ற அம்பேத்கர் தனது
1952 தேர்தல் அறிக்கையில் மதுத்தடை நீக்குதல், இராணுவச் செலவைக் குறைத்தல் ஆகியவற்றை
எழுப்பினார்.
கிராமப்புறங்களை தொழில்மயமாக்குதல் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார்.
தனியார் சொத்துரிமையை முற்றிலுமாக ஒழித்தல் என்பதில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை.
உயர் உற்பத்தி பெருக்கம் பொதுத்துறைகள் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் சொல்லிவந்தார்.
முதலாளிகள் தங்கள் தொழிலின் பட்ஜெட்டை கண்டிப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்கான சட்டம்
ஒன்று தேவை என்றவர் அம்பேத்கர். வேலை நிறுத்தம் என்பது கிரிமினல் குற்றமல்லவே என்றார்.
அனைத்து தகராறுகளிலும் அரசாங்கம் முதலாளிகள் பக்கமே நிற்பது ஏன் என்கிற வினாவை அவர்
எழுப்பினார். பொதுப்பணத்தில் இயங்கும் போலீஸ்துறையை வேலைநிறுத்தம் செய்திடும் தொழிலாளர்
மீது ஏவிவிடும் அரசாங்க செயலை ஏற்கமுடியாது என்றார். அப்படி செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு
இருக்கக்கூடாது எனவும் கருதினார்.
கூடுதலாக சற்று கூலி ஏற்றிக் கேட்டால் அஞ்சுவோர் யுத்தத்திற்கு
கண்மூடித்தனமாக செலவு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வியை தொடுத்தவர்
அம்பேத்கர். தொழில் அமைதி என்பது சமூக நீதி சார்ந்தது. அதை வெறும் அதிகாரம் சார்ந்து
நிலைப்பெற செய்யமுடியாது. சட்டம் சார்ந்து கூட செய்யமுடியும். தொழிலாளர் பிளவுப்பட்டுக்
கிடப்பதை, உள்ளீடற்று இருப்பதை, புரிந்துகொள்ளும் ஆற்றலில் மிக மேலெழுந்துவாரியாக இருப்பதை
கண்ணுற்று துயருற்றவர் அம்பேத்கர். விடுதலை அடைவது என்பதைவிட எவர் அதை கையகப்படுத்துவது
என்பதே மிக முக்கியமானது என்றார்.
அம்பேத்கரின் அறிவுப்பயணத்தில்
அவர் பார்த்திடாத மைல் கற்களே இல்லை எனலாம். தன் கருத்து குறித்து எழும் விமர்சனங்களுக்கு
அவர் அஞ்சியதே இல்லை. ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்பதற்காக தன் சிந்தையில் தேடிப்பிடித்து
பதிந்தவைகளை அவர் நெஞ்சுரத்துடன் முனவைத்தார்.
Comments
Post a Comment