https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, May 17, 2021

புதிய மின் புத்தகம் தோழர் காந்தி மகாத்மாவின் சோசலிச உரையாடல்

 தோழர் காந்தி

மகாத்மாவின் சோசலிச உரையாடல்



முன்னீடு

 

காந்தியடிகள்  அவரது வாழ்நாட்களிலேயே மகாத்மாவாக பார்க்கப்பட்டவர். எந்த அளவிற்கு அவர் கொண்டாடப்பட்டாரோ-கொண்டாடப்படுகிறாரோ அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வந்தவர் - வருபவர். அனைத்து தரப்பினரின் விமர்சன பகுப்பாய்விற்கு அவர் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக நிற்கிறார் என உணரப்பட்டு அவர்மீது வந்த விமர்சனங்கள் ஏராளம். தாங்கள் விரும்பியதை அவர் செய்யவேண்டும் என விமர்சித்தவர்கள் விழைந்தனர்.

இந்த வழிப்பட்ட விமர்சனத்தை இடதுசாரிகளும் பெருமளவில் செய்துள்ளனர். காந்தியை முதலாளித்துவ பிரதிநிதி- ரீஆக்‌ஷனரி , எதிர்புரட்சிவாதி, சனாதனம் பேசுபவர், உழைக்கும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தியவர்- வர்க்க சமரசவாதி  போன்ற விமர்சனங்களுக்கு அவர்கள் உள்ளாக்கினர். இதில் சோவியத் - பிரிட்டிஷ் கட்சிகளின் பங்கும் இருந்தது.

விடுதலைக்கு பின்னர் காந்தியை இடதுசாரிகள் மிக நிதானமாக பார்க்கத்துவங்கினர். நேருவை தொட்டுக்கொள்ளலாம் என நினைத்த அவர்கள் அதே நேரத்தில் காந்தியை எடுத்துக்கொள்ளவில்லை. சற்று மரியாதை கூடிய விமர்சனங்களை வைக்கத்துவங்கினர். காந்தியடிகள் குறித்து அதிகாரபூர்வ பார்ட்டி லைன்ஏதுமில்லை என ஹிரன்முகர்ஜி தனது காந்தி குறித்த புத்தகத்தில் தெரிவித்திருந்தார். சோசலிஸ்ட்களில் பலர் சற்று நெருக்கமாக காந்தியை வைத்துக்கொண்டனர்.

இந்திய இடதுசாரிகள் காந்தியை முழுமையாக துணைக்கு வைத்திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் காந்தியை உள்வாங்க துவங்கிய பின்னர் என்னுள் தலைப்பட்டது. அதன் உந்துதலாய்  காந்தியின் சோசலிச உரையாடல் குறித்த  கருத்துக்களை எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற அவா மேலிட்டது. இந்த உழைப்பின் வெளிப்பாடாக  தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் உருவாகியுள்ளது.

 காந்தியின் சோசலிச சிந்தனைகள் முன்னரே ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது பொருளாதார கருத்துக்கள் அடங்கிய தனி தமிழ் வால்யூமே வந்துள்ளது. ஆனாலும் வெவ்வேறு ஆக்கங்களை படிக்கும் போது  கிடைத்த  கருத்து தெறிப்புகளையும் என்னிடம் அவை ஏற்படுத்திய எதிர்வினைகளையும் சேர்த்துத்தர முயற்சித்துள்ளேன்.

காந்தியின் சோசலிசத்தை மார்க்சிய வகைப்பட்டு அளந்தால் அதை ஏற்பிற்கு உகந்ததாக சொல்லமுடியாமல் போகலாம். ஆனால் காந்தியின் மொழியில் அவரது நடைமுறை வாழ்வின் அடியொற்றிப் பார்த்தால் அதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் நடைமுறைப்படுத்துவது  கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் அது சோசலிசம் பேசக்கூடியவர் செய்யவேண்டிய நடைமுறையிலிருந்து - தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்வதிலிருந்து (transform)  துவங்குகிறது. எனவே அந்த வகையில் அது கடினமான பயிற்சியாக இருக்கும்.

காந்தியின் பொருளாதார சிந்தனைகள், தர்மகர்த்தாமுறை, அகிம்சை, சர்வோதயா, ஆஸ்ரம வாழ்க்கைமுறை குறித்தெல்லாம் தனித்தனியாக ஏராள ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இந்த கருத்தாக்கங்கள் இங்கே விரிவாக பேசப்படாமல் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவிற்கு    வந்து முழுநேர சேவையாளராக தன்னை மாற்றிக்கொண்ட காலம் என்பது சோவியத்தில் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆண்டுகள். புதுவகைப்பட்ட கட்சியின் வழிகாட்டலில் சோவியத் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி ஏற்பட்டது. புரட்சிகர ஆட்சியியல் - உழைப்பவர்களின் பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சி என்ற முழக்கத்துடன் லெனின் தலைமையிலான ஆட்சி துவங்கியது .

 சோவியத் புரட்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ருஷ்யாவின் டால்ஸ்டாயால் பெருமளவு ஈர்க்கப்பட்டு  கடிதப்போக்குவரத்துவரை நடத்திய காந்தியிடம் இந்த புதுவகை ஆட்சி ஏன் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்கிற கேள்விக்கு விடை காணவேண்டியுள்ளது.  சோவியத் புரட்சியை ஆட்சியை அவர் ஏன் மாதிரி என்று ஏற்கவில்லை ? மார்க்சியம் அவரிடம் எந்த அளவிற்கு சென்றது ?  சமத்துவ எண்ணமும் சுரண்டலுக்கு எதிராகவும் உழைப்பின் மேன்மையையும் பேசிய காந்தியால் சோவியத் ஈர்ப்பு சுற்றுக்குள் ஏன் போகமுடியவில்லை என்பன குறித்து ஓரளவிற்கு ஆங்காங்கே இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

காந்தியைக் கண்டுணர்தல்என்கிற எனது கட்டுரைத்தொகுப்பில் மார்க்சியர் குறித்து சில காந்தியர்களின் கருத்துக்களையும், காந்தி- காந்தியம் குறித்த சில முக்கிய மார்க்சியர் கருத்துக்களையும் தனிக் கட்டுரைகளில் தந்திருக்கிறேன். அக்கட்டுரைகளின் தாக்கத்தாலும் இந்த புத்தகம் உருவானதை சேர்த்தே பதிவிடவேண்டும்.

இவ்வாக்கத்தில் காந்தி- லெனின்  மற்றும் காந்தி- மாவோ என இரு பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயம் அறிமுகப்பகுதியாக பொதுவாக பேசுகிறது. பின்னூட்டம் என்கிற இறுதிப்பகுதி தொகுப்பு என்ற அளவிலும், பிற்சேர்க்கை என்ற அளவிலும் அமைந்துள்ளதை படிக்கும்போது உணரலாம். இடையில் உள்ள அத்தியாயங்கள் காந்தியின் அரசு குறித்த பார்வை, சோசலிச உரையாடல்களை பதிவிடுகின்றன. காந்தி தொழிலாளர்களின் பாத்திரமாக எதை விரும்பினார் என்பது தனி அத்தியாயமாக வைக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் முன்னோடிகள் அம்பேத்கர், பெரியாருடன் கூட முரண்பட்டனர். விமர்சித்தே வந்தனர். தற்போது கம்யூனிஸ்ட்கள் உடன்பாட்டு முறையில் செயல்பட்டுவருவதைப் பார்க்கிறோம். அதேபோல் காந்தியை கைக்கொள்வதிலும் கவனம் செலுத்தியிருக்கமுடியும். காந்தி வாக்கு அரசியலுக்கு உதவி செய்யாமல் போகலாம். அறம் சார்ந்த அரசியலுக்கு அவரைவிட நெருக்கமானவர்களை மார்க்சியர்கள் உணரமுடியாது. இந்த புத்தகம் அந்த திசைவழிக்கு சற்று உதவினாலும் மகிழ்ச்சியே.

இவ்வாக்கத்தின் மய்ய சரடு சோசலிசம் என்பது உரையாடல்களால் கோட்பாடுகளின் மேற்கோள்களால் மட்டும் உருப்பெறுவதில்லை. சோசலிச உணர்வை தனிநபர் வாழ்ந்து காட்டலில்தான் துவங்குகிறது என்பதாக இருக்கிறது.  Turn Searchlight Inward  என்பது சோசலிசம் பேசுபவர்களின் பயிற்சியாகவேண்டும் என்பதில் இருக்கிறது. புரட்சிகளின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியில் இருக்கிறது.

29-4-2021                                 ஆர். பட்டாபிராமன்

 


No comments:

Post a Comment