https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, June 28, 2021

நினைவுச் சுழல்

 

                             நினைவுச் சுழல்

Arthur Koestler ன் Bisociative Revoultion என்பதை முகநூலில் பதிவிட்டபோது ஆர்தர் கொய்ஸ்லர் குறித்து நினைவு போனது. அவர் உட்பட  சில முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய  God That Failed புத்தகம் நினைவிற்கு வந்தது. 28 ஆண்டுகளாவது இருக்கலாம். இன்றைய புகழ்பெற்ற எழுத்தாளர் அன்று வளர்ந்து கொண்டிருந்த தோழர் ஜெயமோகன் அதை எனக்கு படிக்க அனுப்பியிருந்தார். நினைவுச் சுழல் அத்தருணங்களுக்கு என்னை அழைத்துச் செல்கிறது. வேறு சில புத்தகங்களையும் குறிப்பாக சோவியத் உடைவு குறித்த புத்தகங்களை எனக்கு அனுப்பி படிக்கவைத்தது நினைவிற்கு வருகிறது. அவரின் ரப்பர் படித்திருந்த நேரம்.

ஜெயமோகன் தோழர் வீரபாண்டியன் அவர்களின் தமக்கை உறவுகொண்ட பட்டுகோட்டைப்பெண்ணை திருமணம் செய்திருந்த காலமது. அங்கு மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார் என அறிந்து வீரபாண்டியனும் நானும் சந்தித்து சிலமணி நேரம் உரையாடிவிட்டு வந்தோம். அவர் DOT Telecom ஊழியர் என்ற வகையில் தொலைபேசி உரையாடல்கள் அதற்கு முன்பே இருந்தது.

வயதெனப்பார்த்தால் ஜெயமோகன் முப்பதின் ஆரம்பத்தில் அப்போது இருந்திருக்கலாம். வீரபாண்டியும் நானும் எங்கள் முப்பதின் இறுதியில் இருந்திருக்கலாம். கலைஇலக்கிய முகாம்கள் பற்றிய விவாதங்கள் இருக்கும். சுந்தர ராமசாமி அவர்கள் அமைக்கும் நாகர்கோவில் முகாமிற்கு செல்வது என வீரபாண்டியும் நானும் முடிவெடுத்தோம். ஜெயமோகன் அதற்கு உதவினார். முகாமில் வேதசகாயகுமார், ஞானி, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைப் பார்க்கமுடிந்தது. கம்யூனிஸ்ட்கள் என அறிந்து இந்த இளைஞர்களுடன் உரையாடவேண்டும் என்பதற்காக உணவு கூடத்தில் எங்கள் எதிரே  அமர்ந்து சுந்தர ராமசாமி அவர்கள் அன்புடன் விவாதித்தது நினைவிற்கு வருகிறது

விஷ்ணுபுரம் நாவல் வந்தவுடன் அதற்கான ஆய்வுக்கூட்டம் மாயவரத்தில் எழுத்தாளர் சா கந்தசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. தோழர் வீரபாண்டியும், நானும் தனித்தனியாக எங்கள் பார்வையை எழுத்துவடிவில் முன்வைத்தோம். நாங்கள் நேர்மறையாக பாராட்டுமொழிகளை தந்திருந்தோம். அப்போது தஞ்சையில் இருந்த தோழர் பெ. மணியரசன் அவர்கள் எங்களது கட்டுரைகளைப் பார்த்துவிட்டு விமர்சித்தது நினைவிற்கு வருகிறது.

பின்தொடரும் நிழலின் குரல் எழுதிக்கொண்டிருந்தபோது அதன் நகலுடன் ஜெயமோகன் திருவாரூர் என் இல்லத்திற்கு வந்தார். இரவு தெப்பம் பார்க்க போனதாக நினைவு.  திருவாரூரில் அவரது உறவுமுறை இளைஞர் ஓரிரு முறை என்னை சந்தித்தது நினைவிற்கு வருகிறது. நகலைப் படித்தேன்.

பின்தொடரும் நிழலின் குரல் வந்தவுடன் அதன் வெளியீட்டு நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்தது. தோழர் ஜெகன் கூட்டத்திற்கு தலைமையேற்றார். தோழர் (ரமேஷ்) பிரேம், அஷ்வகோஷ் மற்றும் நான்  நாவல் குறித்து பேசியதாக நினைவு. மூவரில் நான் மட்டும் நாவலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன்.

அந்நாவலை படித்துவிட்டு அதற்கு பதில்தரவேண்டும் என்ற எண்ணமே அப்போது எனக்கு மேலோங்கியிருந்தது. சுமார் 5000 பக்கங்களாவது தரவுகளை தேடிப் படித்திருப்பேன். திருவாரூர் CPIM அலுவலகத்திலிருந்து ஏராள புத்தகங்களை எடுத்துச் சென்றது நினைவிற்கு வருகிறது. தோழர் கோ வீரையன் அவர்களின் மருமகன் சேகர் பெரும் உதவியைச் செய்தார்.

கூட்டத்தில் ஞானி, சுந்தர ராமசாமி போன்ற பெரும் ஆளுமைகள் நிறைந்து இருந்தனர். என் உரையால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். தோழர் ஜெகன் கூட கடுமையாக எதற்கு எனக்கேட்டது நினைவிற்கு வருகிறது. கட்டுரையை  சு ரா விற்கு அனுப்பியிருந்தேன். அப்போது காலச்சுவடு கிடைக்கும் இடம் எனச் சொல்லப்பட்ட சில முகவரிகளில் எனது முகவரியும் ஒன்று. எழுத்தாளர் ஆசிரியர் சிவகுருநாதன் என்னிடம் காலச்சுவடு பெறுவார். அவர் வாங்கும் ஏராள இதழ்களை தருவார். நாகர்கோவிலிலிருந்து பிரசுரிக்க இயலாது என்கிற கடிதம் வந்தது. தோழர் கோவை ஞானி அக்கட்டுரை இருந்தால் அனுப்பவும்- பிரசுரிக்கிறேன் என எனக்கு எழுதினார். அவர் வெளியிடவும் செய்தார். தோழர் பேரா அ, மார்க்ஸ் வேறு தருணங்களில் ஜெகன் அந்நிகழ்வில் பங்கேற்றது குறித்து விமர்சனப் பார்வையை முன்வைத்தார்.



ஜெயமோகன் அவர்கள் இன்று அசுர எழுத்தாளர். அனைவராலும் கவனிக்கப்படுபவர். புகழப்படுபவர். பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளாகிவருபவர். தொடர்புகள் விட்டுப்போனது. எப்போதாவது நலம் விசாரித்துக்கொள்வதாக ஆனது. ஒருமுறை தோழர் குப்தா, ஜெகன், வீரபாண்டி, என்னைப்பற்றி அவரது இணையதளத்தில் குறிப்பிட்டு தனது பார்வையை நேர்த்தியாக அவர் வைத்திருந்தார். தொழிற்சங்கத்தில் சிறந்த தோழர்கள் என்கிற கருத்து அவரிடம் இருக்கிறது.

ஏராள இளைஞர்களுக்கு இன்று அவர் பிரமிப்பானவராக இருக்கிறார். பெரும் எதிர்வினைகளை சந்திப்பவராகவும் இருக்கிறார். எல்லாப் பொருள் குறித்தும் விரிவாக எழுதுபவராக இருக்கிறார்…

ஆர்தர் கொய்ஸ்லருக்கு நன்றி சொல்லவேண்டும். இந்த நினைவுச்சுழல் பெயர்ந்ததற்காக..

28-6-21

 

No comments:

Post a Comment