தோழர் காந்தி மகாத்மாவின் சோசலிச உரையாடல் புத்தகத்திற்கு நான்கு தோழர்களின் திறனாய்வுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. தோழர்கள் ரகுபதி, பால்சாமி, கணேசன், பீட்டர் ஆகிய தோழர்கள் புத்தகத்தை பொருட்படுத்தி உள்வாங்கி தங்கள் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளனர். தோழர் கணேசன் திறனாய்வு காந்தி கல்வி நிலையம் சார்பில் புதன் உரையாக அமைந்தது. மற்ற மூவரும் கொடுத்த எழுத்து வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தோழர்களுக்கும்- காந்தி கல்வி நிலையம் திரு அண்ணாமலை, மோகன், சரவணன் உள்ளிட்டோருக்கும், அறம் சாவித்ரி கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றி.
திருச்சி தோழர் பால்சாமி அவர்களின் திறனாய்வு
அன்புள்ள பட்டாபி
வணக்கம். இப்போதுதான் தோழர்காந்தி படித்து நிறைவுசெய்தேன். தோழமைமிக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள். எனக்குதெரிந்து காந்தியத்தை தன்கட்சிக்காரர் ஆக்கி வழக்காடத்துணிந்த முதல்சிகப்புஅங்கி வக்கீல் நீங்கதான்.
காந்திக்கு பல எதிர் தரப்பு உண்டு. தலித் முஸ்லீம் இந்துத்வா கம்யூனிஸ்ட் இதில் எந்த தரப்பினராவது காந்தி உயிரோடிருந்தபோது காம்ரேட்காந்தி என அழைத்திருக்கிறார்களா எனக்குதெரிந்து நீங்கள்தான். காந்தி நூறாண்டுகள்
காத்திருந்தார். மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.
இதுவரை நான் படித்த கம்யூனிஸ்ட்கள் காந்தி நல்லவர் பட் காந்தியம் நவீனமனிதனுக்கு உகந்தது அல்ல என்றே எழுதியிருக்கிறார்கள். நீங்கள்தான் உலக.. இந்தியமேதைகளின் மேற்கோள்வழியாக காந்தியம் இன்றும் செல்லுபடியாகும் தத்துவம் என்று
அவர்களுக்கு பிடித்த விஞ்ஞான அனுகுமுறையில் விளக்கியிருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட்கள் அன்று தவறவிட்ட பஸ்ஸை இன்றையதலைமுறை தவறவிடக்கூடாது என்ற உங்கள் அக்கறையின் ஆக்கபூர்வமான வெளிப்பாடே இந்நூல்.
தனிமையான இனிமையான ஒற்றை வயலின்இசை காந்தியம். டமாரக்காதுகளுக்கு உங்கள் மென்மையான மேன்மையான காந்திய இசை போய்ச்சேர விரும்புகிறேன்.
இனி என் தனிப்பட்ட கருத்துக்கள்.
முன்னுரையில் அறம்சார்ந்த அரசியலுக்கு காந்தியைவிட உகந்தவரை மார்க்ஸீயர்கள் உணர முடியாது என்கிறீர்கள். அறம்சார்ந்த அரசியலுக்கு மார்க்ஸீயம் உகந்ததா இல்லை என்றே உணர்கிறேன். சர்வாதிகாரம் என்ற பிரகடணத்தில் அறத்திற்கு இடமுண்டா
Turn the search light inward புரட்சிகளின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சி உயர்ந்தது என்றால் காந்தியும் மார்க்ஸும் இயற்கை கூட்டாளிகளாக இருக்கமுடியுமா.. உங்கள் கட்டுரைகளில் உள்ள மேல்நாட்டு இந்திய அறிஞர்களுக்கு இல்லாத ஒரு தகுதி
உங்களுக்கு உண்டு. காந்திக்குப்பின் நடந்த நூறாண்டு உலக வரலாறு உங்களுக்கு தெரியும். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் நாற்பது ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்ட கம்யூனிஸ்ட் நீங்கள் என்பது கூடுதல் தகுதி.
படிப்பறிவு பட்டறிவின் துணைகொண்டு மார்க்ஸீயத்தின் போதாமைகளை கூர்மையாக தீட்டியிருக்கலாம். ஆனால் உங்கள் நூலைப்படிக்கப்போகும் கம்யூனிஸ்ட் சகாக்களை அதிகமாக கவனத்தில்கொண்டு அதிகமான எச்சரிக்கை உணர்வுடன் வார்த்தைகளை சுத்திகரித்திருக்கிறீர்கள். சத்தியத்தின் கவுச்சிவாசனை விரும்பும் என் போன்ற வாசகர்களுக்கு ஏக்கம்தான். உங்கள் ஓய்வுகாலவாழ்க்கை பயனுள்ள வழியில் பயணிப்பது கண்டு மகிழ்ச்சி. ஒரு தொழிற்சங்கதலைவர் குறுகியகாலத்தில் இத்தனை நூல்கள். நிச்சயம் சாதனைதான். இனி எழுத்தில் என்றும் வாழ்பவராக இருப்பீர்கள். தோழனாக பெருமிதம் கொள்கிறேன். காந்தியை கண்ணீரின்றி நான் படித்ததில்லை. என் கம்யூனிஸ்ட் தோழன் எழுதிய காம்ரேட்காந்தி நூலில் உங்களை அந்த புனிதமான கண்ணீருடன் பல முறை சந்தித்துக் கொண்டேன். அதற்காக நன்றி.
என்றும் அன்புடன்
எஸ். பால்
சென்னை தோழர் பீட்டர் திறனாய்வு ( அறம் இணைய இதழில் வெளியானது)
தோழர் காந்தி : ஆர்.பட்டாபிராமன்
===========================
காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. காந்தி அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம் என பலவற்றையும் தொடர்ந்து பேசி, எழுதி வந்திருக்கிறார். 'பொது இடத்தில் பலர் மத்தியில் 24 மணிநேரமும் இருப்பவராக இருந்தார்'. காந்தி உலகம் முழுவதும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார். இங்குள்ள ஒவ்வொரு தத்துவங்களோடும் காந்தி ஒப்பிடப்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் ஆர்.பட்டாபிராமன் எழுதியுள்ள 'தோழர் காந்தி - மகாத்மாவின் சோசலிச உரையாடல்'.
ஆர்.பட்டாபிராமன் ஒரு தொழிற்சங்கவாதி; சோசலிச கண்ணோட்டம் கொண்டவர். ஆனாலும் காந்தியைப் பார்த்து அவர் வியக்கிறார். காந்தியை 'எழுதிப் பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும், செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது' என்கிறார். மார்க்சியர்கள், காந்தியோடு ஒத்துப்போக ஏராளமான காரணிகள் உள்ளன என்பதை தத்துவநோக்கில் சொல்லும் ஒரு நூல்தான் தோழர் காந்தி.
இந்த நூலில் 199 பக்கங்களே உள்ளன. ஆனாலும் பல நூறு பக்கங்களின் பிழிவாக இது உள்ளது. பல அறிஞர்களின் வாதங்களைச் சுட்டி எழுதப்பட்டுள்ளது. மார்க்சியர்களும், காந்தியவாதிகளும் இணைந்து பணிபுரிய வேண்டிய இணைப்புப் புள்ளிகளை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த நூலைப் படிக்கும் காந்தியர்கள், மார்க்சியர்களை ஆதரவோடு பார்ப்பார்கள். மார்க்சியர்கள் பெரியாரைப் போல, அம்பேத்கரைப் போல காந்தியையும் இயல்பாக தமது வழிகாட்டியாக கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. 'காந்தியின் நடைமுறை' என்ற முதல் அத்தியாயம், காந்தி ஒரு 'அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட் என்றே புரிந்து கொள்ள வேண்டும்' என்று பேராசிரியர் பேணுதார் பிரதான் கருதுகோளோடு முடிவடைகிறது. இந்த நூலின் பெரிய கட்டுரை இதுதான். காந்தி ஒரு தோழராகவே வாழ்ந்தார் என்பதை ஆசிரியர் சொல்ல வருகிறார். 'காந்தி தன் வாழ்நாட்களிலேயே சனாதனவாதி, பழமைவாதி,எதிர்ப்புரட்சி சக்தி, முதலாளித்துவ ஊதுகுழல் என ஏளனங்களுக்கு உள்ளானவர். ஆனால் அவர் சோசலிசம் என்பதை தான் உணர்ந்த வகையில் அந்த இலட்சியத்திற்கு நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார்" என்கிறார் நூலாசிரியர்.
வைஸ்ராய் - க்கு எழுதிய கடிதத்தில் உங்களின் மாத ஊதியம் ரூ.21,000, அதாவது தினம் ரூ.700 வீதம் பெறுகிறீர்கள். ஆனால் இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ.180 வீதம் மாதம் ரூ.54000 பெறுகிறார் என எழுதுகிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போனிக்ஸ் பண்ணையில் அனைவருக்கும் சமமான 3 பவுண்டு ஊதியம்தான் வழங்கப்பட்டது. 'இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார்.அவர்களைப் போல உடையணிந்தார். அவர்களின் மொழியில் உரையாடினார். அவர் உண்மையாக இருந்தார். மக்கள் அளித்த மகாத்மா என்பது அவரின் உண்மைப் பெயராயிற்று'. '
நேரு,நேதாஜி ஆகியவர்களை விலக்கிப் பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார்' என்கிறார் நூலாசிரியர். மீரத் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு போன்றவைகளில் குண்டு வீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத் தோழர்கள்பாற் கரிசனத்தைக் காட்டியவராகவே காந்தி இருந்தார். 'இதை நாம் புரிந்துகொள்ளாமல் 'miss'செய்துவிடக் கூடாது' என்கிறார் பட்டாபிராமன்.
காந்தியவாதிகளும், சோசலிசவாதிகளும் அரசை எப்படிப் பார்கிறார்கள் ! காந்தி - லெனின், காந்தி - மாவோ, காந்தியும் அரசும் போன்ற அத்தியாயங்கள் காந்தியர்களும், மார்க்சியர்களும் உடன்படும்/முரண்படும் பகுதிகளைச் சொல்லுகிறது. காந்தியைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டவர்களை, சோசலிசம் என்ற கருதுகோள்பால் அக்கறை உள்ளவர்களை இந்த நூல் யோசிக்க வைக்கும். இருசாராரும் உரையாடும் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம்.
காந்தி கூறும் ஆலோசனைகள், கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்டக் குழு தன் அணிகளுக்கு விடுக்கும் அறைகூவல் போல உள்ளது " கிராமத்திற்குச் சென்று பணிபுரியுங்கள் என நான் சொல்லுவதை நீங்கள் இன்று கேட்கத் தயார் இல்லாமல் போனால் ஒரு நாள் உங்கள் பிரசங்கங்களை கேட்க யாருமே இல்லாத சமயம் வந்துவிடும்".
காந்தி சோசலிசவாதிகளோடு முரண்படும் இடங்ளை, காந்தியின் பொருத்தமான வார்த்தைகள் மூலம் சொல்லுகிறார் ஆசிரியர். "மார்க்சின் முறையைத் தவிர வேறு இல்லை- அது மட்டுமே சிறந்த முறை என்பதை நான் ஏற்கவில்லை" என்று காந்தி சொன்னதாக, அவரது உதவியாளராக இருந்த பியாரிலால் பதிவிட்டுள்ளார். "மார்க்சிற்கு இருந்த கல்வித் திறமை எனக்கு இல்லை. அது இருந்திருக்குமானால் மார்க்ஸ் தத்துவத்தை மார்க்ஸைவிட இன்னும் நன்றாக எழுதியிருப்பேன்" என்று காந்தி, தனது 74 ம் வயதில் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை படித்துவிட்டு சொன்னதாக அறிகிறோம். 'பலாத்காரம் இல்லாமல் கம்யூனிசம் வந்தால் தானாக வரட்டுமே' என்று சொன்னதையும் பார்க்கிறோம். இரண்டாவது உலகப் போரில் ' ருஷ்யா தோற்றுவிட்டால்' உலகில் ஏழைகள் வேறு எவரை நோக்க முடியும்' என்று கவலைப்பட்ட காந்தியையும் நாம் பார்க்கிறோம்.
காந்தி தான் கடைபிடிக்காத எதையும் சொன்னதில்லை. போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் போன்ற காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை முறை ஒருவகைப்பட்ட சோசலிச சிறு சமூக குடியேற்றமாகப் பார்க்கப்படுகிறது. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, வாழ்வூதியம் , கூட்டம் கூடும் உரிமை, பேச்சுரிமை,மத வழிபாட்டுரிமை, சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள் போன்றவை குறித்த 'கராச்சி தீர்மானம்', 1931ல் நேருவும், காந்தியும் இணைந்து உருவாக்கியவை.
காந்தியின் உப்பு யாத்திரையானது 241 மைல்கள் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1934 ல் மாவோ தனது long march ஐ நடத்தினார். இப்படி போராட்டங்கள் நடத்துவதை,ஏகாதிபத்தியத்தை மதிப்பிடுவதில், அடிப்படை உரிமைகள் குறித்த அநேக விஷயங்களில் இருதரப்பாரும் உடன்படுவதை காண முடியும்.' மார்க்சிய வகைப்பட்டு காந்தி வர்க்கப் போராளியல்ல; ஆனால் பாட்டாளிவர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர்' என்று ராஞ்சி கூறியுள்ளார். அதனால்தான் பொதுவுடைமைவாதியான எஸ்.ஏ.டாங்கே தனது மிக இளம் வயதில் அதாவது 21 வது வயதிலேயே காந்தி Vs லெனின் என்ற நூலை எழுதினார் என்கிறார் பட்டாபிராமன்.
அரசின் பாத்திரம், வன்முறையின் எல்லை, மரண தண்டனை போன்ற விஷயங்களில் காந்தி தன் கருத்தை மறைத்ததே இல்லை." எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார். பொருளாசை, சொத்து பேராசை, குறுகிய மனோபாவம், மிருகத்தனம், சுயநலம் என அனைத்தையும் அகற்ற காந்தியம் மிக முக்கிய வழியாகவே தெரிகிறது. மார்க்சியர்கள் தங்களுக்கு மிக நெருக்கமாக கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே காந்தியின் உரையாடல்கள் தொடர்கின்றன" என்று இந்த நூல் முடிகிறது. இதுதான் இந்த நூல் சொல்லும் சேதி.
பக்கங்கள் 199/ விலை ரூ.155/ உவேசா பிரிண்ட்ஸ்/ 9578078500.
பொள்ளாச்சி தோழர் ரகுபதி திறனாய்வு ( முன்பே ரகுபதியின் முகநூல் பக்கத்தில் வெளியான ஒன்று)
தோழர் காந்தி- மகாத்மாவின் சோசலிச உரையாடல்
ஆசிரியர் : ஆர். பட்டாபிராமன்
பட்டாபியிடமிருந்து புதிய நூல். காந்தியைக் கண்டுணர்தலின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். நூலின் பெயர் கவனம் பெறுகிறது.
இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்படும், விமர்சிக்கவும் படும் தலைவர் மகாத்மாதான். தேசப்பிதா என்பதால் சிறு வயதிலே நமக்கு கற்பிக்கப்படுகிறார். அவரைக் கற்பிப்பவர்கள், கொண்டாடுபவர்களைப் பொறுத்து காந்தியைப் புரிந்தும், புரியாமலும், மறுத்தும் வளர்ந்தது எங்கள் தலைமுறை. காந்தியை சுட்டுக் கொன்றவர்களைப் பொறுத்து, இன்றைய காந்திய பார்வை கூர்மையடைவதுதானே நியாயம்.
இந்திய இடதுசாரிகள் காந்தியை முழுமையாக துணைக்கு வைத்திருந்திருக்கலாமோ என்ற எண்ணம் காந்தியை உள்வாங்கத் துவங்கிய பின்னர் நூலாசிரியருக்கு தலைப்படடிருக்கிறது. அதன் உந்துதலாக காந்தியின் சோசலிச உரையாடல் குறித்த கருத்துகளை எழுதியுள்ளார். காலம் இந்த முயற்சிக்கு அழுத்தம் தருகிறது. முயற்சியின் போது காந்தியின் சோசலிச உரையாடல் தெறிப்புகளுடன் அவை தன்னிடம் ஏற்படுத்திய எதிர்வினைகளையும் சேர்த்துத் தந்துள்ளார்.
உரையாடல் தெறிப்புகளில் சில ............
- தன்னை வன்முறையை போதிக்காத கம்யூனிஸ்ட் என அழைத்துக் கொள்ள முடியும் என்றார் காந்தி.
- 'முதலாளிகளின் மனமாற்றம்' என்கிற நம்பிக்கை, வரலாற்றில் நடக்காத ஒன்று என்பதால் நடக்கவே முடியாத ஒன்று என அவர் ஏற்கவில்லை.
- காந்தி வர்க்கப் போராளி அல்ல, ஆனால் பாட்டாளி வர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர்.
- நிரந்தரமற்ற வேலையெனில் அதிக கூலி கொடுங்கள்- காந்தி
- சோசலிசம் விரும்புவோர் மாற்றத்தை தன்னிடமிருந்து தொடங்க வேண்டும்.
- தனி மனிதருக்கு ஆன்மா இருக்கும்- அரசுக்கு அப்படி ஒன்று இல்லை
- சமூக மாற்றத்தில் நம்பிக்கை வைத்து செயலாற்றும் ஒவ்வொருவருக்கும் காந்தி தந்த செய்தி Turn the searchlight inward.
- மானுட பொருளாயத தேவைகள் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் காந்தியின அவசியம் உலகினரால் உணரப்பட்டு வருகிறது.
- எந்திர மோகத்தைதான் எதிர்க்கிறேன். எந்திரங்கள் எஜமானன் ஆவதை எதிர்க்கிறேன்- காந்தி
'காங்கிரசில் சோசலிச கருத்துகள் வளர்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை.'
- காந்தி அகிம்சைவாதி - நடுநிலை வாதி அல்ல
- மக்களுக்கு அச்சம் என்பதை அறியாமல் செய்தவர்.
- காந்தி - means and ends should be equally pure.
சோசலிசம் என்பது உன்னதமான நெறி மிகுந்த சமுதாயம் என்றால் அதை அடைவதற்கான வழிமுறைகளும் நெறி மிகுந்தவையாக இருக்க வேண்டும்.
- உங்களது வன்முறை பாதையை என்னால் ஏற்க இயலாது.
- உண்மையைத் தவிர ராஜதந்திரம் என ஏதுமில்லை. அகிம்சையை தவிர வேறு கருவி என்னிடம் இல்லை.
- எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார்.
---------------------------------------------------------------
படித்து முடிக்கும் போது, இன்றைய சூழலில் இருந்து எதிர்வினைகள் எழுந்து நிற்கின்றன....
.. காந்தியிலிருந்து கடவுளை எடுத்து விட்டால்?
.. லட்சியத்திற்கு உரிய நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார். (அதனால்தான் மகாத்மா, ஆனால் அது மட்டும் போதுமா?)
.. காந்தி காலத்தை விட இன்று பிரச்சனைகள் வளர்ந்திருக்கின்றன - விரிந்திருக்கின்றன - அபத்தமாகியிருக்கின்றன.
.. அவர் இருந்திருந்தால் இன்றைய மதவெறியில் என்ன செய்திருப்பார்- ஏற்கெனவே ஒரு முறை உயிரை விட்டாரே?
.. மார்க்சிய வழியில் புரட்சிக்கு முயன்றவர்களே தடுமாறிய போது...?
.. கம்யூனிசம் பற்றிய பேச்சு Vs கம்யூனிச வாழ்வு
- நாம் - எதை தேடுகிறோம்? சோசலிச பாணிகளின் தோல்வி - விஞ்ஞான வளர்ச்சி - மனிதனின் தோல்வி - மதவாதிகளின் வெற்றி - இந்தியாவில்?
- இந்திய விடுதலை காந்தியத்தால் மட்டுமே வந்ததா?
சர்வதேச நெருக்கடிகள் எவ்வாறு உருவாகின? உள்நாட்டு போராட்டங்கள்?
- காலம்தானே காந்தியை, கருத்துகளை உருவாக்கியிருக்கும்? நிலைமைகள் மாறும் போது கருத்தை மாற்றியிருப்பார்
- சோற்றுக்கு அலையும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்வது எப்படி?
- காந்தியின் நிர்வாக அனுபவம்?
- காந்தியிடம் விருப்பம், விமர்சனம் இருந்தது.
- காந்தியால் கடவுளை கேள்வி கேட்க, விமர்சிக்க, நிராகரிக்க முடியுமா?
- காந்திய மாதிரி இந்தியாவிலேயே வர முடிந்ததா?
- காந்தி கடவுளிடம் தோற்றார்?
அவர் காந்தியாக இருந்ததால்...
------------------------------------------------------------
நூலின் மய்ய சரடு- கடைசி பத்தியில் ....
எவ் வழியில் சோசலிசம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்க பலமாக மார்க்சியம் நிற்கும் என்பது சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிச கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில் அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார்..
நல்ல மனிதர் - நன்னெறிகள், போராட்டம்...எல்லாம் சேர்ந்த மகாத்மா - தோழர் என அழைத்துக் கொள்வோம் - மண்ணுக்கேற்ற மார்க்சியப் பெருமையுடன்...
---------------------------------------------------------------
புத்தகம் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறும்.
லெனின் குருசாமி
சன் கிரியேஷன்ஸ், 57/1 காலேஜ் ஜங்ஷன் ரோடு
அழகப்பாபுரம், காரைக்குடி 630003
Ph 9578078500
Rs 155
----------------------------------------------------------------
- மெர்சோ
04.08.2021
Comments
Post a Comment