வ உ சி 150
வ
உ சி அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்ட புத்தகங்கள் சிலவற்றில் பொதுவாக சொல்லப்பட்ட
செய்திகள் ஏராளம். சில செய்திகள் ஒரு புத்தகத்தில் இல்லாமல் வேறு ஒரு புத்தகத்தில்
காணப்படும். அப்படி என் கண்ணில்பட்ட சில செய்திகள் மட்டுமே இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
அவர் குறித்த அனைத்து புத்தகங்களிலும் காணப்படும் ஒரே மாதிரியான செய்திகள் இங்கு சொல்லப்படவில்லை.
வ உ சி வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என நான் பார்த்ததில் என்னை அதிகம் ஈர்த்த புத்தகம் ’வ உ சிதம்பரம் பிள்ளை’ என்கிற புத்தகம். 1997ல் பப்ளிகேஷன் டிவிஷன் வெளியீட்டில் வந்த நூல். என் சம்பத்- பெ சு மணி இணைந்து எழுதிய புத்தகம்.
ஆங்கிலத்தில் வெளியாகி பின்னர் தமிழில் பெ சு மணி தந்துள்ளார். 280 பக்க அளவிலான விரிவான நூலாக இதைக்கொள்ளலாம். என் பார்வையில்படுகிற இந்நூலின் சிறப்பு அதன் ஒருங்கிணைந்த அணுகுமுறை- முடிந்தவரை ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்களை கட்டித் தருதல் என்பதாக உள்ளது . இது ஆய்வாளர் பெ சு மணியின் சிறப்பும்கூட.. ஆங்கில புத்தகம் 1992ல் வெளியானது. அதில் ஆசிரியர்கள் என ஆர் என் சம்பத்- பெ சு மணி எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழில் ஆசிரியர் என் சம்பத் ஆகிவிடுகிறார்.
ம பொ சி அவர்கள் எழுதிய நூல் 1944 ல் வெளிவந்த கப்பலோட்டிய தமிழன். மிகமுக்கிய முன்னோடி நூல் என்கிற வகையில் இந்நூல் பின்னவர் பலருக்கும் வழிகாட்டியிருக்கும். இதில் 1920ல் காங்கிரசைவிட்டு வெளியேறிய வ உ சி தொடர்ந்து 17 ஆண்டுகள் 1936வரை அரசியலில் ஈடுபடவில்லை என்கிற செய்தியை ஆரம்ப பக்கங்களில் ம பொ சி தந்திருப்பார். ஆனால் 1927ல் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த செய்தியையும் பின்னர் அவர் தருவார்.அதன் சொற்பொழிவை (அரசியற்பெருஞ்சொல்) பற்றியும் குறிப்பிடுவார்.
வித்வான் நா இராமைய்யா பிள்ளை எழுதிய நூல் ’வீர சிதம்பரனார்’. இதில் வ உ சி கப்பல் வாங்கும் சூழல் உருவானதை ஆசிரியர் விளக்குகிறார். முதலில் கப்பலை தங்களுக்கென வாங்க நினைத்து பிறகு பின்வாங்கி மாறிப்போன சிவபுரம் நல்லபெருமாள் பிள்ளை தூத்துக்குடி- கொழும்பு வியாபாரியை அவர் சொல்கிறார். பம்பாயிலிருந்து ஏஜெண்ட் வந்துவிட்ட நிலையில் வியாபாரிகள் நல்லபெருமாள் உட்பட பின்வாங்கியது சிதம்பரனார் அவர்களுக்கு ’துணிவோம்’ என்ற உந்துதலைத் தந்ததாக இவ்வாசிரியர் சொல்கிறார்.
பல வியாபாரிகளை சம்மதிக்க வைத்த வ உ சி முயற்சி கைகூடும் நிலையில் நல்லபெருமாள் பிள்ளை எதிர்நிலை எடுத்ததையும் அவர் குறிப்பிடுகிறார். கொழும்பு சென்று கப்பல் பெற்றது இரண்டே மாதத்தில் இருபதினாயிரம் இலாபம் கிடைத்தது, பின்னர் ஏற்பட்ட நெருக்கடியை வித்வான் விரிவாக இந்நூலில் தருகிறார்.
’சிவகாசி கொள்ளை’ என்பதில் பெயர் எடுத்து சிறையில் இருந்த வடுகுராமத்தேவர் வ. உ சி யை வணங்கியதால் எச்சரிக்கப்பட்ட செய்தியை இதில் இவ்வாசிரியர் கூடுதல் விவரங்களுடன் தந்துள்ளார். ஜெயிலர் தாக்கப்பட்டவிவரத்தை அதற்காக மூன்று அரிவாள்கள் பெறப்பட்ட சூழல்- வ உ சி உயிர்வதை கூடாதென சொன்ன அறிவுரை எல்லாம் இதில் சற்றுக் கூடுதலாக பேசப்படுகிறது. ஜெயிலர் ’செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்ன செய்தி இதில் வேறுவகையில் சொல்லப்பட்டுள்ளது.
வ
உ சியும் திருநெல்வேலி
எழுச்சியும் என்கிற புத்தகம் 1987ல்
வந்த ஒன்று. ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய
புத்தகம். வ உ சி
, சுப்ப்பிரமணிய சிவா என்பதுடன் பொதுவாக
வ உ சி
பற்றி பேசுபவர்கள் நிறுத்திவிடுவர். இவ்வாக்கத்தில் பத்மநாப அய்யங்கார் சேர்ந்து
மூவர் மீதும்தான் வழக்கு என்பதை ஆசிரியர்
தந்துள்ளதைக் காணலாம். கலகம் எனச் சொல்லப்பட்டதை
எழுச்சி என்கிற வகையில் ஆசிரியர்
வரையறை செய்வார். அது குறித்து சான்றாதாரங்களுடன்
ஆசிரியர் எழுதியுள்ளதைக் காணலாம். இதற்கு உதவிய ஆங்கில ஆவணங்களையும் ஆசிரியர்
பட்டியலிட்டுள்ளார்.
வ
.உ.சி முற்போக்கு இயக்கங்களின்
முன்னோடி என்பது
பேரா நா வா அவர்கள்
1976-77ல் எழுதி 1980ல் பதிப்பாக வெளிவந்தது.
சிறிய அளவிலான
நூல்.
இதற்கு பதிப்புரை எழுதியுள்ள மே து ரா ’வ உ சியின் ஒருங்கிணைந்த பார்வையை’ தந்துள்ளார். ”இந்திய விடுதலைப் புரட்சி, தொழிற்சங்கம், வகுப்புவாரி முறை, தமிழ் மறுமலர்ச்சி ஆகிய யாவும் இணைந்த முழுமையான அரசியல் இயக்கம் எதுவும் இல்லாத நிலையில், வ உ சி ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அவரது சிந்தனையோட்டம் இவை இணைந்த இயக்கமொன்றைக் கனவு கண்டிருக்கலாம்”.
நா வா அவர்கள் வ உ சி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளைச் சொல்லி செல்லும்போது அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அறிந்து “ மனைவியும் இச்செய்தி கேட்டு மூளைக் குழப்பமடைந்து, சாகும்வரை பைத்தியமாகவே வாழ்ந்தார்” என எழுதியுள்ளார். ஆனால் 1940களிலேயே வெளிவந்த ம பொ சி உள்ளிட்ட பிறர் புத்தகங்களில் சகோதரர் பைத்தியமானதே சொல்லப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் என்கிற நூலை என் வி கலைமணி எழுதியுள்ளார். டிசம்பர் 2001ல் வெளியானது. இதில் சொல்லப்பட்ட செய்திகள் பலநூல்களில் காணப்படுவதாகவே இருக்கிறது.
வ.உ.சி குறித்து மா ரா அரசு எழுதிய புத்தகம் சாகிதய அகாதமி வெளியீடாக 2005ல் வந்தது. இப்புத்தகம் பெரும்பாலும் பெ சு மணி, வெங்கடாசலபதி, ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோர் புத்தகங்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்கொண்டுபேசுகிறது. வ உ சி கட்டுரைகள் 19 என தனியாக இப்புத்தகம் விவாதிப்பது சிறப்புக்குரியது.
தமிழ் தந்த வ உ சி 1986ல் வந்த புத்தகம். டாக்டர் லீலாவதி எழுதியுள்ளார்.
வ உ சி பன்முகப்பார்வை எனும் புத்தகத்தை டாக்டர் எஸ். கண்ணன் 2005ல் எழுதியுள்ளார். அதில் வ உ சி சிறையில் இருந்த காலத்தில் பாரதியார் சுதேசிக் கப்பல்நிதி என வசூலித்து விவரத்தை இந்தியா பத்திரிகையில் 2-2-1909ல் தந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. காலணா அரையணா கூட வாங்கப்பட்டதென அறிகிறோம். வெள்ளை அரசின் கருணைச் சட்டத்தால் வ உ சி 1912 டிசம்பரில் வெளிவந்தார் எனவும் இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிறைமீண்டபின் முதலில் கோவை திருப்போரூர்த்தலத்தில் வங்கி அலுவலராக பணிபுரிந்தார் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. அதிலிருந்து ஏன் வெளியேறி சென்னை சென்றார் என எவராவது எழுதியுள்ளனரா எனப் பார்க்கவேண்டும். சென்னை பெரம்பூரில் அஞ்சல்துறை ஊழியர் சங்கத்தை துவங்கினார் என்கிற செய்தி P&T தோழர்களுக்கு உதவும் செய்தி.
1917-18ல் சபர்மதியில்
காந்தியை சந்திக்கிறார். தில்லையாடி வேதியப்பிள்ளை கொடுத்தனுப்பிய ரூ 5000த்தை மகாத்மாவிடம்
கேட்டுப்பெறுகிறார் என்கிற செய்தியை இவ்வாசிரியர்
தருகிறார். ஆனால் இது தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள்
நிலவுவதை நாம் பார்க்கிறோம்.
சென்னையில் குடியிருந்தபோது சாமியார் ஒருவருடன் பாரதி வ உ சி வீட்டிற்கு வந்த செய்தி தரப்படுகிறது. ஆனால் வந்த இருவரும் போதைதரும் லாகிரி வஸ்துவை எடுத்துப் போட்டுக்கொண்டு உரக்க சிரித்துப் பேசியதில் சற்று வ உ சிக்கு வருத்தம் என்ற செய்தியையும் இதில் காணலாம். இதை வி ஓ சி கண்ட பாரதியிலிருந்து இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.
1922ல் கோவில்பட்டியில் இருந்த வ உ சி நீதிக்கட்சியின்பாற் ஈர்க்கப்பட்டார்- 1926 பெரியார் நடத்திய பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் வ உ சி பங்கேற்கிற செய்தியும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சிறை நிகழ்ச்சி ஒன்றை வ உ சி சுயசரிதையில் சொன்னபடி இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். சாதிமதம் பார்க்காத வ உ சி இப்படி சொல்லியது ஏனோ என்ற கேள்வியையும் கண்ணன் எழுப்புகிறார். வ உ சி க்கு உணவு வழங்க வந்தவரிடம் ”ஜாதி என்ன… முதலி என்றான்..என்னடா முதலி நீ என்றேன்..பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால் உண்பேன் என்று ஜெயிலர்பால் இயம்பெனச் சொன்னேன்”
சகஜானந்தாவுடன்
இருந்த தொடர்பை பிற புத்தகங்கள்
சொல்வதுபோல் இந்த புத்தகமும் சொல்கிறது.
அவர் குடும்பத்தில் ஒடுக்கப்பட்ட சாதி
நண்பருக்கும் உணவு உபசரிப்புகளும் சொல்லப்பட்டுள்ளது.
வ ரா வை தன் வறுமைநிலையையும் பொருட்படுத்தாது அவர் கொழும்பு வீரகேசரி தலைமை ஆசிரியராக செல்க என கடிதம் எழுதி உற்சாகப்படுத்துவதும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
1932ல் காங்கிரஸ் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட செய்தி இதில் சொல்லப்படுகிறது. 1927 சேலம் மாநாட்டுடன் பலர் நின்றுவிட்ட நிலையில் இப்புத்தகம் அதைப் பேசுகிறது. அங்கு கைத்தறி உடுத்திவந்த வ உ சியிடம் எழுந்த கேள்விக்கு ’தாம் கதர்ச் சிதம்பரம் அல்ல- சுதேசிச் சிதம்பரம்’ என்கிறார் வ உ சி.
வ உ சியும் பாரதியும் ஆ.இரா வேங்கடாசலபதி தொகுத்து 1994ல் வெளியான புத்தகம். இதில் சுதேசிக் கப்பல் தருமநிதி பட்டியல் தரப்பட்டுள்ளது. பாரதியார் ரூ 5ல் துவங்கி நூற்றுக்கணக்கான பெயர்களிடம் ரூ 215க்கு மேல் வசூலான கணக்கு காணப்படுகிறது. இதில் மேலப்பாலையூர் கிருஷ்ணசாமி அய்யர் ரூ1 , எஸ் பஞ்சாபகேசய்யர் 4 அணா என்பதும் சொல்லப்படுகிறது. திருச்சேறையில் ஒருவர் வருவதால் இந்த மேலப்பாலையூர் குடவாசல் அருகிலானதாக இருக்கலாம்.
’பிரைவி கவுன்சில் அப்பீல்’ பணம் இல்லாக் குறையால்தான் காலதாமதம் ஆகிவருகிறது என்ற செய்தியை பாரதி எழுதியிருப்பதை இதில் காணலாம்.
நான் பார்த்த இப்புத்தகங்களில் பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்து தண்டனை குறைக்கப்பட்டது. அந்தமான் தவிர்க்கப்பட்டது என சொல்லப்படுகிறதே தவிர அவர் அப்பீல் நகல் எங்கும் காணப்படவில்லை. வ உ சி அப்பீல் நகல் கிடைக்கும் என்றால் உதவியாக இருக்கும்.
9-9-21
Arumai
ReplyDelete