Skip to main content

Subahdra Joshi


மதநல்லிணக்கப்போராளி சுபத்ரா ஜோஷி
-    ஆர்.பட்டாபிராமன்
சுபத்ரா ஜோஷி இந்தியாவின் பெண் ஆளுமைகளில் ஒருவர்.. ஜனநாயகம், மதசார்பின்மை, சோசலிசம் குறித்த போராட்டங்களில் முன்நின்றவர். காங்கிரசில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். காதுகேளாதார், வாய் பேசாமுடியாதோர் ,ரிக்க்ஷாகாரர்கள் , டீகடை தொழிலாளர்களுக்கு கூட்டுறவு இயக்கம் கண்டவர், மகிளா இயக்கத்தில் பெண்கள் உரிமைகளில் வழிகாட்டியாக இருந்தவர். இந்திய- ஜெர்மன் நல்லுறவிற்காக இந்தோ ஜிடி ஆர் நட்புறவு கழகத்தில் சிறந்த பணியாற்றியவர்.
அனைத்திற்கும் மேலாக சமுக பணிகளில் மதநல்லிணக்க சேவைகளில் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இந்திராவை டெல்லியில் சுபத்ராவுடன் தொடர்புகொண்டு பணிசெய் என்கிற அறிவுரை காந்தியடிகள் தரும் அளவிற்கு அவர் உயர்ந்திருந்தார். செக்யூலர் டெமாக்ரசி என்கிற இதழை 50 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கியவர்.  குவாமி ஏக்தா டிரஸ்ட் மூலம் பல வெளியீடுகளை கொணர்ந்தவர்.
சுபத்ரா வெள்ளையனே வெளியேறு காலத்தில் பி டி ஜோஷி அவர்களை சந்திக்கிறார். இருவரும் தொழிற்சங்கவேலைகளில் ஆரம்பத்தில் பயணித்தனர். ஆனால் வகுப்புவாத அபாயம், நல்லிணக்க பணிகள் சுபத்ராவின் கவனத்தை ஈர்த்தன. அவரது தனிப்பாதைக்குரிய போராட்டங்கள் துவங்கின.

சுபத்ரா தற்போது பாகிஸ்தான் பகுதியாகவுள்ள சியால்கோட்டில் மார்ச் 23 1919ல் பிறந்தார். அவர் தந்தை வி என் தத்தா போலிஸ் அதிகாரி.  சுபத்ராவின் உறவுக்காரர் கிருஷ்ணன் கோபால் தத்தா  பஞ்சாப் காங்கிரஸ் வேலைகளிலும், நேருவிற்கு நெருக்கமாகவும் இருந்தவர். நாட்டின் விடுதலை வேட்கை மற்றும் குடும்ப சூழலில் சுபத்ரா தேசவிடுதலை உணர்வுகளால் ஈர்க்கப்பட்டத்தில் ஆச்சரியம் இருக்க முடியாது. காந்தியின் பால் பெரும் மதிப்புகொண்டு அவரைப்  சுபத்ரா பின்பற்றலானார்.
தனது ஆரம்ப பள்ளியை அவர் ஜெய்ப்புரில் முடித்து உயர் கல்விக்கு தனது சகோதரியுடன் லாகூர் செல்கிறார். பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவத்துவங்கியிருந்த பிரிட்டிஷார் எதிர்ப்பு அவரையும் கவ்வியது. யூனியன் ஜாக் கொடிக்கு மரியாதை செய்யமுடியாது என்கிற எதிர்ப்பை பள்ளியில் காட்டினார். இதனால் பள்ளியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து ஜலந்தர் கன்யா மகாவித்யாலாயாவில் சேர்க்கப்பட்டார். பின்னர் லாகூரில் கல்லூரி படிப்பில் அரசியல் முதுகலை பட்டம் பெற்றார். தேச விடுதலை இயக்கம் சார்ந்த குழுக்களில் பங்கேற்று தொண்டாற்றினார்.
 உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் கோயமுத்தூரில் பணிபுரிந்ததால் அவர் மருத்துவ சிகிட்சைக்காக அங்கு அழைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் காந்திக்கு எழுதிய கடிதம் கண்டு  காந்தி சுபத்ராவை ஆசிரம் பணிக்கு அழைத்தார். கோவையிலிருந்து லாகூர் திரும்பும்போது வார்தா ஆசிரம் சென்று தங்கினார். அங்கு அவர் அறியத்துவங்கிய அகிம்சை கோட்பாடு, சர்வமத சம பாவிப்பு, உண்மை உணர்தல்- உணர்த்துதல், மிக ஆழமான மனிதநேயம் ஆகியவை அவரை வாழ்நாட்கள் முழுதும் இயக்கும் கொள்கைகளாகின.
வெள்ளையனே வெளியேறு போராட்டக் காலத்தில் அவர் டெல்லி பள்ளி ஒன்றில் தன்னை ஆசிரியையாக அமர்த்திக்கொண்டார். அதுவும் போராளிகளுக்கு உதவிடவேண்டும் என்பதற்காக.. ஹமாரா சங்க்ராம் என்கிற பத்ரிக்கையையும், இரகசிய பிரிட்டிஷ் எதிர்ப்பு பிரசுரங்களையும்  சுபத்ரா இளம் குழுவினர் வெளியிட்டு சுற்றுக்கு அனுப்பினர்.. ஆனால் போலீசார் பார்வையிலிருந்து தப்பமுடியாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லாகூர் பெண்கள் சிறையிலிருந்து சுபத்ரா வெளிவந்தவுடன் தொழிற்சங்க வேலைகளில் கவனம் செலுத்தினார்.
1946-47 வகுப்புக்கலவரங்கள் அவரை உலுக்கின. டெல்லியில் நடந்த கலவரம் பற்றி அறிந்தவுடன் அவர் மருத்துவமனை சிகிட்சையிலிருக்கிறோம் என்பதையும் பாராமல் வெளியேறி கலவர இடத்திற்கு உடல் சுகவீனமில்லாத நிலையிலும் சென்றார்.  சம்பந்தபட்டவர்களை சந்தித்து அமைதிபடுத்தினார். டாக்டர்கள் அவரை கடுமையாக எச்சரித்தனர். காந்தியே மருத்துவமனைக்கு வந்து சுபத்ராவை பார்த்து சென்றார்.
இந்தியாவில் இருக்க விழையும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து காந்தி மிகவும் கவலையுடன் இருந்தார். சுபத்ரா அதை உள்வாங்கி முஸ்லீம் அகதிகள் தங்கியிருந்த திகார் கூடாரம் சென்று காந்தியும் அங்குவரவேண்டும் என அழைத்தார். காந்தியின் பாதுகாப்பு குறித்து சுபத்ரா பொறுப்பில்லாமல் இருப்பது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் காந்தி அங்கு சென்றார். நீ பைத்தியம்.. நானும்தான் என சுபத்ராவை பார்த்தவுடன் காந்தி தட்டிக்கொடுத்தார்.( Ek tu pagal aur eh mein pagal hoon).  அங்கு அவர்கள் இந்தியாவில் இருக்கமுடியும் என்கிற நம்பிக்கை தரப்பட்டது.
வகுப்புக்கலவரம் நடக்கும் பகுதியில் சுபத்ரா சிதறிக்கிடக்கும் உடைமைகளையெல்லாம் சேகரித்து ஓரிடத்தில் வைப்பார். ஒருமுறை அது போலீசாரால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. எந்த அதிகாரத்தில் இதை செய்கிறீர்கள் என்றதற்கு எந்த அதிகாரத்தில் கலவரங்கள் நடந்தது என்ற எதிர் வினா எழுப்பி  போலீஸ் அதிகாரிகளை வாயடைத்தார் அவர்.
காந்தி பிர்லா வீட்டில் தங்கியிருந்தபோது, லோகியாவுடன் சுபத்ரா உள்ளிட்டோர் கலவரம் குறித்து காந்தியிடம் விவரிக்க சென்றனர். எவ்வளவு முஸ்லீம்கள் இறந்திருப்பர் என காந்தி வினவ பத்தாயிரம் அளவாவது இருக்கும் என்றனர்.. எங்களால் முடிந்தவரை மற்றவரை காப்பாற்றியிருக்கிறோம் என்ற விளக்கமும் தந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் எவராவது இறந்துள்ளனரா என காந்தி கேட்டபோது இல்லை என்கிற பதில் அவருக்கு தரப்பட்டது. அவர் மிக பொறுமையாக பின்னர் எவ்வாறு அவர்களை காப்பாற்றினீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள் என்றார். போலீசார் சொன்னபடி கேட்கவிலை என்றனர். பிரிட்டிஷ் எதிர்த்து போராடிய உங்களால் இந்த போலீஸ் எதிர்த்து நிற்கமுடியவில்லை என ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் காந்தி

இந்த நிகழ்வு சுபத்ராவை உறுத்தியதுடன்  மேலும் செயல்பட உந்தி தள்ளியது. சுபத்ரா டெல்லியில் சாந்திதல் (அமைதி தளம்) என்கிற  குழுக்களை அமைத்து நல்லிணக்கம் கொணர அரும்பாடுபட்டார். அவரின் சகாக்கள் ஒத்துழைப்புடன்  நடத்தப்பட்ட சேவைகள் பெருமளவில் பாராட்டுக்களைப் பெற்றன. சுபத்ராவின் பல ஆலோசனைகளை ஏற்று நேரு அவரது சேவையை உற்சாகப்படுத்தினார். இந்திராவும் உடன்நின்று பணியாற்றினார். மிருதுளா சாரபாய் அவர்களுடன் இணைந்து பெண்குழந்தைகள் பாதுகாப்பு, கடத்தப்பட்ட பெண்கள் மீட்பு போன்றவற்றில் சுபத்ரா உழைப்பை நல்கினார். இக்பால் ஜோஷி என்கிற பெயரிடப்பட்ட குழந்தையை அவர் வளர்த்தார்.
1961ல் மத்திய பிரதேசத்தில் வகுப்புக் கலவரம் என அறிந்து மூன்று மாதங்கள் முகாமிட்டு அமைதி உருவாக்க அனைத்து நடவடைக்கைகளையும் சுபத்ரா எடுத்தார்.. தொடர்ந்த ராஞ்சி, மீரத், அகமதாபாத், அலிகார், மொராதாபத், ஜல்காவான், பிவந்தி என வகுப்புக் கலவரம் நடந்த பகுதிகளுக்கு சென்று அமைதி நல்லிணக்க நடவடிக்கைளில் ஈடுபட்டவர் சுபத்ரா. 1962 முதல்  மத ஒற்றுமை கருத்தரங்குகள்  மாநாடுகள் வெளியீடுகள் கொணர்வதில் கவனம் செலுத்தினார்.
1952-77 காலங்களில் அவர் நாடாளுமன்ற பணிகளிலும் காங்கிரஸ் சார்பில் ஈடுபட்டிருந்தார். 1962ல் அவர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை காங்கிரஸ் வேட்பாளராக நின்று தோல்வியுற செய்தார். 1957 நாடாளுமன்ற தேர்தலில் .பி பல்ராம்பூர் தொகுதியில் வாஜ்பாய் ஜனசங்கம் சார்பில் காங்கிரசின் ஹைதர் ஹுசைனை பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். அடுத்து 1962 தேர்தலில் சுபத்ரா அவரை 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1967 தேர்தலில் வாஜ்பாய் மீண்டும் வெற்றி பெறுகிறார். எதிர்த்து நின்ற சுபத்ரா முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கிறார்.
.தேர்தல் கூட்டத்தில் வாஜ்பாய் தன்னை எதிர்த்து எவ்வாறு பேசினார் என்பதை 1998ல் சுபத்ரா பேட்டியில் கூறியிருந்தார். யார் இந்த சுபத்ரா ஜோஷி. இந்து கலாச்சாரத்துடன் அவருக்கு தொடர்பு உண்டா. அவரை யாருக்கு தெரியும். அவரது பெற்றோர் பற்றி கேள்விபட்டிருக்கிறோமா? அவர் நெற்றியில் சிந்தூர் வைத்துள்ளாரா, கையில் வளையல் போட்டுள்ளாரா என்பது மாதிரியான பிரச்சாரம் செய்ததாகவும் , தான் என்ன டிராமாவில் நடிக்கவா வந்திருக்கிறேன் தேர்தலில் நிற்கிறேன் என சுபத்ரா பதில் சொன்னதாகவும் அப்பேட்டியில் தெரிவிக்கிறார். லஷ்மணன் சீதையின் பாதங்களைப் பார்த்து பேசியதுதான் இந்து கலாச்ச்சாரம் எனில் இவர் ஏன் என் முகத்தின் சிந்தூர் பார்த்து பேசவேண்டும் என அவர் உரையாற்றி பெரும் கைதட்டல்களை பெற்றதாக தெரிவித்தார் சுபத்ரா. போர்முனையில் நாட்டை காக்கும் எவரும் சிந்தூர் அல்லது வளையல் அணிந்து செல்வதில்லை என பதிலை தந்தார் சுபத்ரா. அதேபோல் 1999 தேர்தல் பரப்புரை ஒன்றில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காங்கிரஸ் தலைவர் சோனியாவை இரசனை குறைவாக பேசியதை கண்டித்து சுபத்ரா ஜோஷி உள்ளிட்ட பல பெண் போராளிகள் அறிக்கைவிடுத்தனர். பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களை அவர் எவ்வளவு உயர் குடும்ப பின்னணியுடன் வந்தாலும் அவதூறுகளை சந்திக்கவேண்டியுள்ளது என்பதில் சுபத்ராவும் தப்பவில்லை.
வகுப்புவாதத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலை தந்தவர் சுபத்ரா. 1972ல் வகுப்பு பதட்டங்களை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதற்கு வேண்டிய திருத்தங்களை பீனல் கோடில் கொணரபாடுபட்டார். மன்னர் மான்ய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயம் ஆகியவற்றிற்கு ஆதரவான சக்திகளுடன் முன்நின்றார். வெள்ளையனே வெளியேறு பொன்விழாவின்போது அவர்  quit communalism  என்கிற  அற்புதமான முழக்கத்தை நாட்டிற்கு  தந்தார். வகுப்புவாத அபாயம் குறித்து அவர் 200க்கும் மேற்பட்ட சிறுவெளியீடுகளை கொணர்ந்ததாக அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அவரின் உறுதிப்பாட்டின்மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது.
. பி டி ஜோஷி தன் அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொழிற்சங்கத்தில் முக்கிய டெல்லித்தலைவராக உயர்ந்தார். சுபத்ரா பி டி ஜோஷி இருவரும் தங்களுக்கு உகந்த பாதைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். ஜோஷி  சோசலிஸ்ட்டாக இருந்து சிபி அய் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். டியு சியின் பெரும் தலைவராக உயர்ந்தார். இருவரும் கருத்து சுதந்திரத்திற்கு தலைவணங்கி குடும்ப உறவுகளை காத்துக்கொண்டவர்களாக இருந்தனர்.
சிம்லாவில் பிறந்து சம்ஸ்கிருத கல்வி பின்புலத்தில் பஞ்சாலைத்தொழிலாளர் மத்தியில் பணியாற்ற வந்தவர் ஜோஷி. அவரது சகோதரர் கிலாபத் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். ஜோஷி 1938ல் அரசாங்க வேலையில் சேர்ந்தவுடன் கடைநிலை ஊழியர்களை திரட்டினார். பிரிட்டிஷ் எதிர்ப்பில் ஈடுபட்டதாக அவர் கைதாகி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு அரசாங்க வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னரும் அவர் அரசாங்க ஊழியர்களை திரட்டுவதில் உதவிகரமாகவே இருந்தார். டெல்லியில் பஞ்சாலை தொழிலாளர்களுக்கென சங்கம் அமைத்தார். பர்மா ஷெல் தொழிலாளர்களை திரட்டி சங்கம் அமைத்தார். ரயில்வே, பஸ் தொழிலாளர் என விடுதலை அடைந்த ஆரம்ப ஆண்டுகளிலேயே 12 தொழிற்சங்கங்களை ஜோஷி டெல்லியில் துவங்கி வழிகாட்டினார். பி டி ஜோஷி 1952ல் எச் எம் எஸ் இயக்கத்திலிருந்து கணிசமான தோழர்களை டியு சிக்கு அழைத்து சென்றார். இதில் அருணா ஆசப் அலி உறுதுணையாக இருந்தார் என்பதை எச் எம் எஸ் வரலாற்றில் பார்க்க முடியும். 1954 முதல் கம்யூனிஸ்ட் கட்சியிலும் , ஏ ஐ டி யு சியிலும் வளர்ந்து 1996ல் அதன் அகில இந்திய தலைவராக இருந்து பின்னர் அவர் மறைந்தார். . தேசிய தொழிலாளர் உரிமைக்கான கமிஷன் என்கிற இயக்கத்தில் பிரேம் சாகர் குப்தாவுடன் பி டி ஜோஷி முன்நின்றார்.
காந்திக்குப் பின்னர் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் சுபத்ரா துணைநின்று மதநல்லிணக்கம் என்பதில் தனது முத்திரையை தொடர்ந்து பதித்துவந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராஜிவ் பெயரால் மதநல்லிணக்க அவார்டை கொடுத்துவருகிறது. இவ்விருது பெற்ற தெரசா அம்மையார், உஸ்தாத் பிஸ்மில்லாகான், கிராமின் முகமது யூனஸ், கே ஆர் நாரயண், சுவாமி அக்னிவேஷ் போன்றவர்களின் பட்டியலில் சுபத்ராவும் இணைந்து ராஜிவ் மதநல்லிணக்க அவார்டை பெற்றார். உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது 86ஆம் அகவையில் டெல்லியில் அக்டோபர் 30, 2003ல் சுபத்ரா மறைந்தார்.. நினவு கூறவேண்டிய மதநல்லிணக்கப்போராளி சுபத்ரா.

.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...