https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, September 4, 2018

காந்தியும் மார்க்சும் 3 Gandhi and Marx 3


காந்தியும் மார்க்சும் 3
(லோகியா பார்வையில்)
-                                        ஆர்.பட்டாபிராமன்

நவீன அரசியல் சித்தாந்தத்தில் ராம் மனோகர் லோகியா முக்கிய பங்களித்தவர். விடுதலை போராட்டம், காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், சோசலிஸ்ட் இயக்கங்கள் என பயணித்தவர். தான் சரி என கண்டறிந்தவற்றிற்காக போராடியவர். மார்க்சியம்- காந்தியம்- ஆசியவகைப்பட்ட ஜனநாயக சோசலிசம் என பேசிவந்தவர். இந்திய வரலாற்றை வெறும் வர்க்க போராட்டம் என சுருக்கிவிடமுடியாது. சாதிய வரலாறை பார்க்காமல் இந்திய வரலாற்றை அய்ரோப்பிய நான்கு கட்ட சமுக அமைப்பு என மார்க்சிய விளக்கத்தினுள் அப்படியே பொருத்திவிட முடியாது என பேசியும் எழுதியும் வந்தவர் . சாதி குறித்த விரிவான உரையாடலை  நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நடத்தியவர்.
லோகியா  மார்க்சை விட காந்தியிடம் நெருக்கமாக வந்தவர். நேருவுடன் நட்பும் கடும் எதிர்ப்புகளையும் கொண்டிருந்தார். ஜெயபிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் போன்றவர்களுடன் ஒன்றாக நின்று பணியாற்றியவர் லோகியா. அவர்களுடன் கடுமையான வேறுபாடுகளை பகிரங்கமாகவும் வைத்தவர். சோசலிஸ்ட் இயக்கம் மிக கடுமையான உடைவுகளுக்கு உள்ளாகி தனது அரசியலை நீர்க்க செய்துகொண்டுவிட்ட இன்றைய சூழலிலும்  அவரது எழுத்துக்களின் பொருத்தப்பாடு குறித்த உரையாடல்களை உதிரியாக உள்ள லோகியா சிந்தனைவாதிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவரது சில முக்கிய ஆக்கங்கள் இப்போதும் பேசப்படுகின்றன.

 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடத்திய மார்க்சியம்- சோசலிசம் குறித்த உரையாடல்கள், சமத்துவம் குறித்த பேச்சுகள், உலக மனம்- மானிடவர்க்கம் போன்றவை தொடர் விவாதத்திற்கு உரியனவாக இருக்கின்றன, அவரது எழுத்துக்களில் சில முக்கியமானவை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ளன. மார்க்ஸ்- காந்தி- சோசலிசம், மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம்,  Meaning of Equality, caste essays- speeches, சரித்திர சக்கரம் போன்றவை பொருட்படுத்த வேண்டிய ஆக்கங்களாக உள்ளன.   இங்கு அவரின் மார்க்சியம் காந்தியம் குறித்த பார்வை சுருக்கமாக முன்வைக்கப்படுகிறது.
மார்க்சியர் பேசிவருகிற வரலாற்று பொருள்முதல்வாத சமுக கட்டங்களை அப்படியே உலக நாடுகள் முழுமைக்கும் பொருத்த முடியாது என்பது லோகியாவின் முடிபு. இந்திய மார்க்சியர் சிலர் அடிமை சமுதாயம் இருந்ததாக பேசுவது அவருக்கு திரித்துக் கூறலாகவே படுகிறது. அதே போல் உலகம் முழுமையும் ஒரே கட்டத்தில் நிலபிரபுத்துவமும் ஏற்பட்டிருக்கமுடியாது. சோசலிசம் ஏற்பட்டு விஞ்ஞானத்தை பூரணமாக பயன்படுத்திவிட்டால்  பொன்னுலகம் என்று பேசுவது யாந்திரிகமானது போன்ற விமர்சனங்களை லோகியா தொடுக்கிறார். Golden Future  என்பதை அவர் விமர்சித்தார்.
மார்க்ஸோ வரலாறு என்பதே வர்க்கப்போராட்டத்தின் வரலாறு தான் என்கிறார். வர்க்கப்போராட்டம் என்பதை லோகியா மறுக்கவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு பாட்டாளிகளுக்கான வேறுபாடு என்ற ஒன்றை மார்கஸ் கவனிக்க தவறினார் என்றார் லோகியா. உலக ரகசியங்களை வெளிப்படுத்திய பொருள்முதல்வாத விளக்க சாவி மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளி எந்த இருளை அகற்றியது என தெரியவில்லை என்றார். ஒன்றுக்கு மேற்பட்ட விதிவிலக்குகள் கொண்ட எதுவும் எப்படி பொதுவிதியாக இருக்கமுடியும் என கேள்வி எழுப்பினார். பொருள்முதல்வாதம் கூட ஐரோப்பிய பெருமிதவாதமாகவே தனக்கு படுவதாக அவர் எழுதினார். வர்க்கங்களை ஒழிக்கவேண்டும் என்ற ஆர்வம் யாரைவிடவும் தனக்கு குறைவானதல்ல எனவும் பேசுகிறார்.
ருஷ்யாவில் உணவு பிரச்சனை தீர்க்கப்பட்டது சாதனை என பேசப்படுகிறது.  நிலப்பரப்பு, குறைந்த மக்கள் சமுகம் ஒன்றை இந்தியா போன்ற அதிக மக்கள் குறைந்த நிலப்பரப்புடன் ஒப்பிட முடியாது. ருஷ்யாவில் சதுர மைல் ஒன்றில் 20 பேரும், இந்தியாவில் 300 பேரும் வாழ்கிறார்கள். சரித்திர பூகோள நிலைகளை கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும்  ஒப்பீடும் அதே முறையை எடுத்துக் கொள்வதும் எதிர்மறை விளைவுகளைக் கூட உருவாக்கும் என்றார்.
கருத்துமுதல்வாதம்- பொருள்முதல்வாதம் என நவீனமனம் இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டுவிட்டது. இரண்டிற்குமான முரண்பாடு தனக்கு தோன்றவில்லை என்றார் லோகியா. சரித்திரத்தில் நாம் பேசும் அசோகன், புத்தனைவிட புராண ராமனும் சிவனும் மக்களை கவ்வி பிடித்துள்ளனர். அன்பு, பக்தி, தயை போன்ற புனைவுகள் அய்க்கியம் ஒன்றை உருவாக்குவதை நாம் பார்க்காமல் இருக்கக்கூடாது என்கிறார். மனிதகுல வாழ்விற்கு வரலாறு உரைநடை என்றால், தொடர்ந்து மக்களிடம் செல்வாக்கு செலுத்திவரும் புராண புனைவுகள் கவிதைகள் போல் இருக்கின்றன என்றார். வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, புராணங்களிலிருந்தும் கூட மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். மதம் குறித்த விவாதத்தில் மதம் அபின் என்ற மேற்கோள்களுடன் நிற்க முடியாது. ஒழுக்கம், தனிநபர் குணநலன் மேம்பாடு ,பண்பாட்டுபோதனையில். கருணை புலனடக்கம் என்பதில் நாம் மதம் என்பதை ஒதுக்கமுடியாது என கருதினார். பொருளாதாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நிரந்தர பகைத்தன்மை இல்லாமல் உறவு ஏற்படவேண்டும் என்றார்.
போராட்டமின்றி எந்த மாற்றமும் வராது என்பதை ஏற்கும் லோகியாவால் அது ரத்தக்களறி மூலம் வந்தால்தான் சிறப்பு என்பதை ஏற்கமுடியவில்லை. புரட்சிக்கு புனிதமான நோக்கத்துடன் உறவுகொள்ள வேண்டும்.. இல்லையேல் எழாது- நிற்காது என்றார். நல்ல ஒன்றை தீய வழிகளால் அடையமுடியாது என்கிற காந்தியத்திற்கு அவர் வந்து சேர்கிறார்.
மூலதன குவிப்பு, ஏகபோகம் உருவாதல் ஆகியவற்றில் மார்க்சியத்தை நிராகரிக்க முடியாது என்பதை ஏற்கிறார் லோகியா. ஆனால்  ஏழ்மை, வர்க்கபோராட்டம், புரட்சி ஆகிய விதிகளில் அதனால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை என்கிறார். முதலாளித்துவத்தின் இறுதி கட்டமே ஏகாதிபத்தியம் என்கிற லெனினிய வரையறுப்பில் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் இரண்டும் சேர்ந்தே வளர்வதாக அவர் கருதினார். முதலாளித்துவம் வளர்வதற்கு இடமில்லாத நிலையில் போர்கள் ஏற்பட்டன  என்பதை அவர் ஏற்கிறார். ஏகாதிபத்திய எல்லைக்குள் பல முதலாளித்துவங்கள் செயல்படுகின்றன. முதலாளித்துவம் குறித்த மார்க்சிய வரையறுப்புகள் மேற்கு அய்ரோப்பிய  நிலவரங்களின் விளக்கங்களாகவே உள்ளன என்றார்.
குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் ஒரு தொழிலாளி பெறும் ஊதியம் எவ்வளவு, அக்காலத்திய உற்பத்தியில் ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி பங்கென்னஅதன் வித்தியாசம்தான் உபரிமதிப்பு என்பதுதான் சரியான கணக்கீடு. இந்த கணக்கீட்டை உலகளாவியது என்று பேசுகிறார்.  காலனிகள் முதலாளித்துவத்தின் கிராமங்கள் என பேசும்போது ரோசாலக்சம்பர்க் அருகில் லோகியா வருகிறார். நமது நகரங்கள் கிராமங்களை சுரண்டுவதைவிட காலனிநாடுகளை முதலாளித்துவ நாடுகள் சுரண்டுவது மிக அதிகமானது . இருவட்ட கருத்துதனை புரிந்து கொள்ளாமல் உபரிமதிப்பு கணக்கீட்டை சரியாக வரையறுக்க முடியாது என்பதும் அவரது விமர்சனம்.
ருஷ்யா சோவியத்தில் இலாப நோக்கில்லை என்றாலும் முதலாளித்துவ தொழில்நுட்ப அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றவர் லோகியா. ஒருநாட்டின் தொழில் நிறுவன பிரச்சனை வேறு- அது தனிஉடைமையா அல்லது பொது உடைமையா என்பது வேறு என்கிறார். விஞ்ஞானத்தை உற்பத்திக்கு பயன்படுத்தவேண்டிய எந்த நாட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு ஒன்றுடன் ஒன்று இயங்குபவை. முந்திய ஆண்டுகளில் சேமித்த உழைப்பு சக்தியே சோசலிச பொருளாதாரத்தில் மூலதனமாகிறது. கனரக எந்திரங்களாக காட்சி அளிக்கிறது. அதே நேரத்தில் குவியல் முறையில் எந்திரங்களை புகுத்தி பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் முயற்சி வறட்டுத்தனமாக அங்கு நடைபெறுகிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்தார்.
மார்க்சியம் தனது இறுதி இலட்சியமாக சுரண்டலற்ற சமுதாயம் அமைப்பது பற்றி பேசுகிறது. செயல்படகோருகிறது. அப்படி அமையும் சமுதாயம் மானுட ஆளுமைகளை உயர்த்தும் என நம்புகிறது. அங்கு சில காலத்திற்குள் அரசாங்கம் இற்று வீழும் என்றும் சொல்கிறது. எந்த இசமும் பேசுகிற இறுதி இலட்சியங்கள் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து அதை மதிப்பிடவேண்டுமா? அதன் நோக்கங்களுக்கு அனுசரிக்கும் வழிமுறைகள் மதிப்பிடலுக்கு அப்பாற்பட்டவையா? கையாள விரும்பும் முறைகளின் சரி தவறு பற்றி பேசக்கூடாதா? வரலாற்றின் புதிய கட்டம் மார்க்சியம் கூறுவதுபோல்தான் கட்டாயம் நடக்கவேண்டுமா?  வேறு எந்த வகையிலும் நடக்க இயலாது என்று விதியே தீர்மானித்துவிட்டதா போன்ற கேள்விகளை லோகியா எழுப்பினார். தன்னை pro Marxist or Anti Marxist  என மதிப்பிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
உலகப் புரட்சிக்காக எவ்வழியும் உகந்ததே என  மார்க்சியர்கள் கருதுகின்றனர். ஒழுக்கநெறி குறித்து அவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. புரட்சிக்காக ஜனநாயகத்தை சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை என்கிற விமர்சனம் லோகியாவிடம் இருந்தது.
முதலாளித்துவ சங்கிலி அதன் வலிமையான கன்னியில் உடைவுறும் என மார்க்ஸ் நம்பினார். அதன் பலவீனக்கன்னி ருஷ்யாவில் உடைகிறது என டிராட்ஸ்கி எழுதினார். லெனின் எங்கு பாட்டாளிகள் இயக்கம் கட்சி வலுவாக தலையிடுகிறதோ அங்கு உடையும் என்றார். முதலாளித்துவ சங்கலி உடைவது பற்றிய பார்வைகள் மாறுபட்டு  தமக்கு கிடைப்பதாக லோகியா எழுதினார். உற்பத்தி சக்திகளை பொறுத்து அமெரிக்காவும் ருஷ்ய கம்யூனிசமும் ஒன்றுபோலவே நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இன்றுள்ள இந்தியாவில்(1952ல்) நபருக்கு ரூ 150 மதிப்புகொண்ட உற்பத்தி கருவிதான் இருக்கிறது. ஒட்டுமொத்த மூலதனமும் அவ்வளவுதான். முதலாளித்துவத்தை ஒழித்தபின் இச்சூழலில் நாம் அமெரிக்கா ருஷ்யா பொருளாதார நிலையை எட்ட வேண்டும் எனில் 20 கோடி வேலைக்கு தலா ரூ 10000 மூலதனமாவது வேண்டும். அதவாது 2 லட்சம் கோடி வேண்டும். 2000 பில்லியன் கோடி தேவை. நமது 5 ஆண்டு திட்ட ஒதுக்கீடோ 25 பில்லியன் அளவில் தான் இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் முதலீட்டிற்கு என்ன செய்வார்கள்.  ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் இறுதிகட்டம் என்பதெல்லாம் சரியல்ல. இரண்டும் இரட்டைப் பிறவிகள். சேர்ந்து வளர்ந்துவருபவை என்றார் லோகியா. மார்க்சியத்தின் அற்புதமான அம்சம் சொத்து குறித்த நாட்டத்திலிருந்து வெளியேற்றம் என்பதே(  Not to be fascinated by property).
இந்தியாவின் இன்றுள்ள பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த அது முதலாளித்துவம் அல்லது சோசலிசம் என எந்த வழியானாலும் குறைந்தது 80 ஆண்டுகளாவது தேவைப்படலாம் . ஆசியா ஆப்ரிக்கா மக்கள் தங்கள் நாகரீகத்தை மேற்கு பாணியில் கட்ட முடியாது . முதலாளித்துவம் மனிதகுல முழுமைக்கும் மேம்பாட்டை தந்த  முற்போக்கான ஒன்றாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் இப்போது சீரழிவுகளை தந்துவருகிறது என மார்க்சியம் சொல்வதில் திருத்தம் தேவை என்றார் லோகியா. அய்ரோப்பாவிற்கு ஒருகாலத்தில் முற்போக்கானதாக மேம்பாடுகளை தந்தது என்றுதான் சொல்லவேண்டும் என்றார். 
கம்யூனிஸ்ட்கள் தாங்கள் மிகப்பெரிய லட்சியத்திற்கு வரித்துக்கொண்டவர்கள் என்பதால் நாம் பேசும் நன்னடத்தை உபதேசங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். உலக புரட்சி என்பதால் ஜனநாயக சீர்குலைவுகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. தங்களின் சோசலிச சமூகம் என்கிற உண்மைக்காக கொலைகளுக்கு அஞ்சுவதில்லை. உலக தொழிலாளர் ஒற்றுமை என்பதன் பொருட்டு நாடுகளின் சுயேட்சைத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை.    எனவே நெறிகளைப் பற்றி அவர்களுடன் உரையாட முடிவதில்லை. எங்களைப் போன்றவர்களைஅமெரிக்கன் ஏஜெண்ட்’ எனச் சொல்லி சோசலிஸ்ட்களை ஒழித்துவிடலாம் என நினைக்கிறார்கள். 
மனிதனை சொத்துரிமை ஆசையிலிருந்து வெளியேற செய்வது என்பது மார்க்சியத்தின் பெரும் கொடை என்றார் லோகியா. மார்க்ஸ் கருத்துக்களில் தவறு இருந்தாலும் சொத்துரிமை ஒழிப்பு என்பது அதன் தனிச்சிறப்பு என்கிற ஏற்பை தந்தார் லோகியா. சில காந்தியர்கள் பேசுவதைப் போல முதலாளித்துவ அமைப்பில் நல்லொழுக்கம், நீதிநெறி போன்றவற்றை இடம்பெறச் செய்யலாம் என்பது பகற்கனவு. ஆயிரக்கணக்கான முதலாளிகளை தர்மகர்த்தாக்களாக ஆக்கிடவும் இயலாது என்கிற காந்தியம் குறித்த விமர்சனப்பார்வையையும் சேர்த்தே முன்வைத்தார் லோகியா. முதலாளித்துவம்  தங்குதடையற்று   பொருளாதார  ஏற்பாடாக நிலவவும் மற்றொருபுறத்தில் நல் ஒழுக்கம், நன்னெறி என்கிற கலாச்சார வாழ்வு எனச் சொல்வதும் அபத்தமே. அது காந்தியை சுருக்கி புரிந்து கொள்வதாகவே அமையும் என்றார் லோகியா.
 தனிமனிதனும் சூழலும் இணைந்து முன்னேறும் வகையில் சொத்துரிமையை அகத்திலும் புறத்திலும் ஒழிப்பது சவாலான செயல் என்றாலும் இயலாத ஒன்றல்ல என்கிற தனது நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.
மார்க்ஸ் எழுதியவை சித்தாந்தமாகிவிட்டது. ஆனால் காந்தி தீர்க்கதரிசிகளைவிட திட்டவட்டமாகவும், தத்துவ அறிஞர்களைவிட பொதுப்படையாகவும் எழுதியும் பேசியும் வந்தார். அவரது செயல்கள் மூலம்தான் அவர் மிளிர்கிறார். அவரது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் மூலமே அவர் அதிகம் பரவினார். காந்தியியம் என்ற செயல்முறையில் வடிகட்டப்பட்டு வெளிப்படும் சோசலிச கருத்துக்கள் கசடற்று தூய்மை பெறுவதுடன் காந்திய நிறத்தையும் ஓரளவு பெறும் வாய்ப்பு கொண்டது என்றார் லோகியா.
காந்தி தனது பெரும் எழுத்துப் படைப்புகளால் .உலகத்தை வசீகரிக்கவில்லை. தனது செயலால் வாழ்ந்து காட்டுவதன் மூலம் அவர் மக்களை ஈர்த்தார். வாழ்ந்ததற்கும் செயல்பட்டதற்குமான கமெண்டரி என அவர் எழுத்துக்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் இருந்த காலத்தில் இருந்த முதலாளித்துவம், சோசலிசம் என்கிற முறைமைகளில் அவர் செல்வாக்கு செலுத்த முடிந்திருந்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பேன் என்றார் லோகியா.
அநீதிக்கு எதிரான நியாயத்திற்கான சுய துனபத்தை ஏற்றுக்கொண்ட உலக அடையாளம் என காந்தியை சொல்லமுடியும். நாம் காணும் உலகில் பெரும் அமைப்பில் அதன் பாகமாக உணரும் அளவில் மட்டுமே தனிமனிதன் தெரியமுடியும். அய்ரோப்பா தனிநபர் அமைப்பின்றி ஆதரவற்றவன் போல் இருக்கிறான். இந்த மேற்கு சூழலில்தான் மகாத்மா வருகிறார். உன்னிடம் ஆயுதம் இல்லாவிடிலும், அமைப்பு இல்லாவிடிலும் உன்னிடம் உள்ள அநீதி எதிர்க்கும் ஆன்ம சக்தி உள்ளது. அதனால் ஏற்படும் துன்பங்களை தாங்கிக்கொள்ளும் மனவலிமை உள்ளது என சாதாரண மனிதனுக்கு காந்தி உணர்த்தினார்.
நவீன உலகில் தனிமனிதன் கூட்டத்தின் ஒருபகுதியாக இருந்தால்தான் பயனுள்ள முறையில் இயங்க முடிகிறது. தகுந்த அமைப்பின் அரவணைப்பு இல்லையெனில் அவன் எலியைப்போல் ஆகிவிடுகிறான்.  இன்னல்களை சகித்துக்கொள்ளும் ஆற்றலை கற்கும் மனிதன் அநீதி எதிர்த்து போரிடும் ஆன்ம பலம் கொண்டவனாகிவிடுவான் என ஒவ்வொருவருக்கும் நடைமுறையில் உணர்த்தியவர்  காந்தி. மிகச்சாதாரண தனிமனிதனின் ஆன்மபலத்தை உணரசெய்தவர் காந்தி. தனியாகவும் கூட்டாகவும் பொருந்தா சட்டங்களை மீறும் புதுவழி ஒன்றை காந்தியிடமிருந்து மக்கள் பெற்றனர்.
அன்பு ஆயுதங்களுக்கு எதிரானது. உலகின் தலை சிறந்த மனிதர்கள் தங்கள் சிந்தனை மற்றும் செயலை ஆயுதமற்ற வகையில்தான் தந்துள்ளனர். ஆனால் தங்கள் பகுதியினர் மேல் அன்பு என்பது மானுடம் மீதான அன்பிற்கு எதிராக போவதை பார்க்கமுடிகிறது. மனிதன் தன்னை பிறரிடமிருந்து நிலைநிறுத்திக்கொள்ள ஆயுதம் தேவை என கருதுகிறான். ஆயுதம் என்றாலே அநீதி என்பது அதன் வேர் ஆகிவிடுகிறது. ஆயுதம் இல்லாமல் எப்படி போலிஸ், அந்நிய படையெடுப்பு தற்காப்பு என கேட்கப்படுகிறது.   உலகில் சமத்துவ நீதியை வன்முறையற்று நிலைநாட்டுவது எப்படி என்பதுதான் மையமான கேள்வி. அதற்கு பதில் காந்திய சிவில் ஒத்துழையாமை என்பதே என்றார் லோகியா.
Gandhi was a pluralist-  அவர் கடவுள் பற்றி அதிகம் பேசியிருக்கலாம். ஆனால் அவருக்கு இலட்சியவாதம், பொருளாதாரவாதம் என எதுவும் முற்று முழுமையானதல்ல. அவர் அனைத்துவகை சாத்தியங்களையும், காரண விளைவுகளையும் பார்ப்பவராக இருந்தார். அவரிடம் மோனிசம் இல்லை. காந்தியிடம்  programatic liberalism  இருந்தது எனலாம்.
இலட்சியப் பயணத்தில் சாதனம் எனும் வழிமுறைகளும் இலட்சியத்திற்குரியவை என வலியுறுத்தினார் காந்தி. நல்வாழ்வு என்பதை கொலைகள் மூலம் கண்டடையமுடியாது என உரக்கத் தெரிவித்தார். இன்றைய பொய்களின் மூலம் நாளைய உண்மையை நிலைநாட்டமுடியாது. சர்வாதிகாரம் ஜனநாயகத்தை தந்துவிடும் என்பது கட்டுக்கதை என்றார். ஓர் அடி ஆனாலும் அதுவே போதும் என்பதன் மூலம் அனைவரையும்  அனைத்து செல்லவேண்டிய பொறுப்பை உணர்த்தினார் காந்தி. எண்ணமுடியாத ஏணிப்படிகளில் இலட்சக்கணக்கானவருடன் இணைந்த பயணத்தை ஒவ்வோர் அடியாக செய்தவர் காந்தி.
புரட்சியா பார்லிமெண்ட்டா என்பதல்ல பிரச்சனை. ஓட்டின் மூலமா- துப்பாக்கியா என்பது கூட தவறான கேள்விதான். பதில் காணவேண்டிய கேள்வி மக்களின் சத்தியாக்கிரக உரிமையா- ஒரு சிலரின் துப்பாக்கி உரிமையா என்பதுதான் என்றார் லோகியா. கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த மக்களின் சத்தியாக்கிரகம் எனும் மகத்தான ஆயுதத்தை உதாரணமாக்கியுள்ளார் காந்தி.
கிராம அளவில் தரமான ஜனநாயகம் என்பதை காந்தி முயற்சித்தார். சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளமுடிந்த கிராமக் குடியரசு தேவை என்றார். ஆனால் நமக்கு கிடைத்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் ராட்டை காணாமல் போய்விட்டது. பஞ்சாலை சிமெண்ட் ஆலைகள் எழுந்தன. கிராம அரசு விரும்பத்தக்கது என ஒற்றை வரியுடன் அரசியல் அமைப்பு சட்டம் திருப்தியுற்றது என்கிற விடுதலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து லோகியா தனது விமர்சனத்தை வைத்தார்.
நூற்புக் கருவியின் செய்தி என்ன? வாழும் இடம் தன்னிறைவு கொண்டதாக, தன்கட்டுப்பாட்டிற்குள் டெக்னாலஜியைக் கொண்ட கிராம நிர்வாகம் என்பதுதான். காந்திக்கு எளிமையும், எளிய கருவிகளும் அவசியமாக தெரிந்தது. ஆனால் நம்மவர்களுக்கோ அது கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது. கம்யூனிஸ்ட் ஹோசிமின் கூட எளிமையான வாழ்க்கையைத்தான் காட்டுகிறார்.. கம்யூனிஸ்ட்களுக்கு அதில் கோட்பாட்டுத்த்ன்மை இல்லை. ஆனால் காந்திக்கோ அது கோட்பாடு சம்பந்தமானது.(To communism simple living is not doctrinal, where as to Gandhism it is). எளியவகை வாழ்க்கையே கூட புரட்சிகரமானதுதான்.
இன்றுள்ள நிலைமையில் காந்தி பேசியவை எல்லாம் மரியாதைக்குரிய கருத்துக்கள் அவ்வளவே. நடைமுறை அமுலாக்கத்திற்கு உகந்தவை அல்ல என்பதற்கான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. காந்தியின் கருத்துக்களை பொருளாதார, நிர்வாக முறைகளில் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் இந்தியா உலகிற்கு புதியதோர் நாகரீகத்தன்மையை காட்டமுடியும். மனிதன் நல்லவனாக இருந்தே தீரவேண்டும் என்கிற சமூக கட்டுமானமாக அது இருக்கும் என்று எழுதினார் லோகியா.
இந்திய விடுதலைப் போர் சில சமரசங்களை செய்துகொண்டது. எதிராக போராடிவந்த காந்தியம் (Gandhi in opposition) தனது போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல முடியாத பலவீனங்களிலிருந்து கூட அரசாங்க காந்தியியத்தின் போதாமைகள் வந்திருக்கலாம்  ஆட்சிக்கு வந்தவுடன் அவரது சீடர்கள் அவரின் மிக முக்கிய சிவில் ஒத்துழையாமை போன்றவற்றிற்கு அஞ்சுகிறார்கள்.
ஆட்சி எதிர்த்த காந்தியம் புரட்சிகரமானதாக இருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் காந்திய அரசாங்கம் என்றவர்கள் முன்பு இருந்த அதே நடைமுறையை அப்படியே பின்பற்றினார்கள். மார்க்சியமோ  ஆட்சிக்கு எதிரே நிற்கும்போதும், ஆட்சியிலே அமர்ந்தபோதும் புரட்சிகரமாக இருக்கவேண்டியுள்ளது. முன்பிருந்த நிலைமைகளை அது அடியுடன் மாற்ற போராடுகிறது என்கிற  வேறுபாட்டை லோகியா நேரு மீதான விமர்சனமாக வைத்தார்.
ஒருமுறை சுபாஷ் லோஹியாவிடம் கேட்டார். காங்கிரசா- காந்தியா யார் பலமானவர்கள். காந்திதான் என்பதை அறிந்தே தான் செயல்படுவதாக லோகியா பதில் தந்தார். காங்கிரஸ் இயற்றிய தீர்மானம் ஒன்றை  காந்தி  வீட்டோ செய்தார். அதை காங்கிரஸ் ஏற்ற நேரத்தில் இக்கேள்வி எழுந்தது.
காந்திக்கு  உலககுடிமகன் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். சாதி, இன, வர்க்கங்களுக்கு அப்பால் அது தேவை எனவும் கருதினார். அவரது தர்மகர்த்தாமுறை பயன்தராது என்கிற கருத்து லோகியாவிற்கு இருந்தது. ஆனாலும் காந்தி என்ன சொல்லவருகிறார் என்பதை லோகியா பார்க்கத்தவறவில்லை. காந்தி முத்லாளிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்த விழைகிறார். சமூகத்திற்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கோருகிறார் என லோகியா எழுதினாலும் முதலாளிகளை மனமாற்றம் செய்வதெல்லாம் சாத்தியமல்ல என  கருதினார்.
கடவுள், சர்க்கா, தர்மகர்த்தா கொள்கை என்பதில் லோகியாவிற்கு உடன்பாடில்லை. ஆனால் காந்தியன் ஸ்பிரிட் என்பதில் நிற்க விரும்பினார். போர்க்குணமிக்க சோசலிசம் காந்திய ’லீகசியுடன்’ என லோகியா விரும்பினார். காந்திக்கு அரசியல் என்பது நெறி சார்ந்த அதை மேம்படுத்தும் அம்சம். அரசியலில் நெறிபிறழ்வு என்பதை அவர் ஏற்க மறுத்தார். உண்மையான அதிகாரம் அல்லது சக்தி ஒவ்வொரு தனிமனிதனிடமும் உறைந்திருக்கிறது. அதிகாரம் அரசாங்கத்திடம் அல்லது சட்டமன்றங்களில்  கெட்டிப்பட்டுவிடக்கூடாது என்பார் காந்தி. லோகியா அகிம்சா என்பதை பயன்படுத்தவில்லை என்றாலும் தீர்மானகர கோபம் தேவை எனக்கருதினார். அதேபோல் உண்மை எனப் பேசும்போது லோகியா எப்போதும் நாம் பார்த்தவரையிலான உண்மை  partial truth  என்றே பேசினார். மேற்கு நாகரீகத்தை   ’moral and religious’  அடிப்படையில் காந்தி விமர்சித்தால் லோகியா அரசியல் நெறிசார்ந்து விமர்சித்தார்.
ஜமன்லால் பஜாஜ் மூலம்தான் காந்தியின் அறிமுகம் லோகியாவிற்கு கிடைக்கிறது. லோகியாவின் திறமையை காந்தி பயன்படுத்த தவறவில்லை. அவரின் சில கட்டுரைகளை ஹரிஜன் பத்திரிக்கையிலும் வெளியிட்டார். மிகவும் தைரியமான மனிதர் லோகியா என்கிற புகழாரத்தை காந்தி சூட்டினார். தான் அவரின் மேதமைக்காக புகழவில்லை. அவரின் தீர்மானகர குணத்திற்காக புகழ்கிறேன் என்றார் காந்தி. 1946 லோகியாவின் கோவா விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவை நல்கினார் காந்தி. போர்த்துக்கீசியர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது இந்தியாவின் ஆன்மா சிறையில் என்றார் காந்தி.
காந்தி மனிதனுக்கு முக்கியத்துவம் தந்து சூழலின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்கிற குறையை லோகியா வெளிப்படுத்தாமல் இல்லை. சோசலிஸ்ட்களாகிய நாம்மனிதனை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம். சோசலிசம் ஏற்கனவே மானுட நிகழ்ச்சி நிரலில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. காந்தியக் கருத்துக்களை அதனுடன் சேர்த்து ஏற்புடைய சோசலிச கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்றார் லோகியா. மனிதன் கருவிகளுக்கு அடிமையாகிவிட்டான் என்பதை நாம் ஏற்கவேண்டும். காந்தியம் சம்பிரதாயமான மரியாதைக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது.  ’sagehood, sainthood satyagraha’  என்பன காந்தியிடமிருந்து எடுத்துக்கொள்ளத்தக்கனவாக இன்றும் இருக்கின்றன.
சத்தியாக்கிரகம் எனும் நியாயம் கேட்கும் முறை, நற்பண்பு நாட்டம், எளிமை நிறைந்த மனிதன் என்பதே காந்தி  அளித்த வாழ்க்கைமுறை.
உதவிய நூல்கள்
1. Marx  Gandhi and Socialism   by Lohia
2. Gandhi and Lohia etrnal optimists- mainstream weekly oct 10, 2009
3. Economic Ideas of Lohia: Some Aspects Mainstream,  March 24, 2012

No comments:

Post a Comment