பகத்சிங்கை காவு
கொடுத்தாரா காந்தி?
- ஆர்.பட்டாபிராமன்
-
இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச
சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சனமாக
இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங்,
ராஜகுரு, சுகதேவ் மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களை காப்பது காந்தியின் பெரும் பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை
மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள் நடக்கத்துவங்கின. அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை. பகத்சிங் போன்ற போராளிகளின்
நடவடிக்கைகள், காந்தியின் பங்குபாத்திரம், பிற தலைவர்களின் நிலைப்பாடுகள் இக்கட்டுரையில்
சுருக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒத்துழையாமை-பகிஷ்கரிப்பு போராட்டத்தை காந்தி அறிவிக்கிறார். ரெளலட் சட்டம் ஜாலியன்வாலாபாக் காலத்தில் பஞ்சாப் நுழைய காந்திக்கு
அரசாங்கத்தடை இருந்தது. அக்டோபர் 1919ல்தான் தடை நீக்கப்படுகிறது. காந்தி கூட்டம் லாகூரில்
என அறிந்து தனது நண்பர்களுடன் பகத்சிங் செல்கிறார். காந்தியின் உரை கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த
பகத்சிங் பள்ளியிலிருந்து வெளியேறி ஓத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஜனவரி
4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா பகுதியில்
போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலையம்
தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர்.. அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை
என போராட்டத்தை காந்தி திரும்ப பெற்றார். ஆறு
ஆண்டுகள் கடும் தண்டனை கொடுக்கப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள்
தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத்சிங் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
காந்தி அறைகூவலை கேட்டு பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் காந்தி
போராட்டத்தை கைவிட்டதுமான செயல்கள் பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள்
மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளை காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது
தவறு என பகத் பேசத்தொடங்கினார்..
சர்தார் கர்த்தார்சிங் தனது 19ஆம் வயதில் ஆயுத கலகத்தால்
கைதாகி மரணதண்டனை பெற்று உயிர்த்தியாகம் செய்ததும் அவரது உரையும் பகத்சிங்கை கவர்ந்தன.
அகிம்சை வழியில் பிரிட்டிஷாரை தூக்கி எறிய முடியாது என்ற எண்ணம் பகத்திற்கு ஏற்பட்டது.
லாலா லஜ்பத்ராய் துவரகாதாஸ் நூலகம் ஒன்றை அமைக்கிறார். நூலக பொறுப்பாளர் ராஜாராம் சாஸ்திரிக்கும்
பகத்திற்கும் ஏற்பட்ட நல்லுறவால் அவர் பரிந்துரைத்த
புத்தகங்களை படிக்கிறார் பகத். மார்க்ஸ், பகுனின்
புத்தகங்கள் அறிமுமாயின, பகுனின் அவரை கவர்கிறார். சோசலிச கோட்பாடுகள் அதற்கான புரட்சிப்போராட்டங்கள்
ஆதரிக்கப்பட வேண்டியவை என்ற கருத்திற்கு பகத்சிங் வந்து சேர்கிறார்.
நூலகத்திற்கு வந்த
புதிய புத்தகம் அனார்க்கிசம் குறித்த கட்டுரைகள் அவருக்கு தரப்படுகிறது. அதில் இடம் பெற்ற வன்முறையும் உளவியலும் பிரஞ்சு
அனார்க்கிசவாதி வேலன் அறிக்கையும் அவரை கவர்கின்றன. தொழிலாளி வர்க்கம், தொழிற்சங்கங்கள்
குறித்த பதிவையும் பிரஞ்சு சட்டமன்றத்தில் அவரால் வீசப்பட்ட குண்டுகுறித்த பதிவையும்
பகத் அறிகிறார்.. நூலகர் சாஸ்திரியிடம் நாமும் இவ்வாறு செயல்படவேண்டும் என்கிறார் பகத்.
பொது இடங்களில் இப்படிப்பட்ட கருத்துப்பகிர்வு கூடாது என சாஸ்திரி எச்சரிக்கை உணர்வை
தருகிறார்.. இப்புத்தகம் 60க்கும் மேற்பட்ட முறை நூலகத்திலிருந்து பகத் பெயரால் பெறப்பட்ட
செய்தியை நாம் அறிய முடிகிறது.
காந்திய இயக்கத்தால் சாதிக்கமுடியாது என பகத்சிங் நம்பத்துவங்கினார்.
மதன்லால் திங்கராவின் செயலை காந்தி ஏற்கவில்லை. தவறான வழியில் செய்யப்படும் தியாகம்
என அவர் கருத்துக்கூறி இருந்தார். பகத்சிங்கிற்கோ அது ஈர்ப்பை தந்தது. இந்துஸ்தான்
ரிபப்ளிக் அசோசியேசன் 1923ல் ஏற்படுத்தப்பட்டு சச்சீந்திர சன்யால் மானிபெஸ்டோ வெளியிட்டார்.
யுனைட்டேட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா எனும் குடியரசை ஆயுதபுரட்சி மூலம் உருவாக்குவது திட்டமாக
சொல்லப்பட்டது. இதன் மூலம் சுரண்டலை ஒழிக்க முடியும் என தெரிவித்தனர். கதர் இயக்கம்,
இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் மூலம் வளர்கிறார் பகத்சிங்..
லாகூர் ரகசிய புரட்சிகரகுழுவில் முக்கிய தோழர்களாக சந்திரசேகர்
ஆசாத், பகத் ராம்பிரசாத் பிஸ்மில், ரஜிந்தர் லாஹிரி, அஷ்வகுல்லாகான், பதுகேஸ்வர் தத்
செயல்பட்டுவந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதில் உள்ள சிரமங்களை தீர்த்திடும்
வகையில் அரசாங்க நிதியை கொள்ளையிடுவது என முடிவெடுத்தனர். ஆக 9 1925 லக்னோவிற்கு மிக அருகாமை ககோரியில் தங்கள் இடுப்பு
துப்பாக்கிகளுடன் அரசாங்க நிதி ரூ8600யை கொள்ளயிட முடிந்தது. ஆனால் அதற்கு அவர்கள்
பெரும் விலை கொடுக்க வேண்டியதானது. பல புரட்சியாளர்களுடன் பிஸ்மில்லும் கைதானார். ராம்பிரசாத்
பிஸ்மில், ராஜேந்திரலாஹிரி, அஷ்வகுல்லா, ரோஷன்சிங் ஆகிய தோழர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது..
அவர்களை தப்பவைத்து மீட்டிட பகத், ஆசாத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர் முயற்சிகள்
பலனளிக்கவில்லை. நான்கு புரட்சியாளர்களும் தூக்கு கயிற்றில் வீரமரணம் அடைந்தனர்.
சைமன் கமிஷன் திரும்பிப் போ இயக்கம்
1928ல் தீவிரமாக எழுந்தது.
லாலாலஜ்பத்ராய் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் கடுமையாக பிரிட்டிஷ் போலிசாரால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் வலுவிழந்து செப்டம்பர் 1928ல் உயிர் இழந்தார். கர்னல்
வெட்ஜ் உட் லாலாஜியின் மரணம் போலீஸ் தாக்குதலால் நிகழ்ந்ததா- நியாயமான விசாரணை தேவை
என்கிற கேள்வி எழுப்பியபோது யேர்ல் வின்டர்சன்
என்கிற அரசாங்க துணை அதிகாரி அவ்வாறில்லை எனவும் விசாரண ஏதும் தேவையில்லை எனவும் நிராகரித்தார்.
இந்த இயக்கத்தில் பங்கேற்ற பகத்சிங் போன்ற இளஞர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு பாடம் புகட்ட விரும்பினர்.
ஃபெரோஷா கோட்லாவில் பகத், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா, ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள்
கூடினர். பகத்சிங் அக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதேசங்களிலுள்ள புரட்சிகர குழுக்கள்
இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தெரிவித்தார். நாம் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் இயங்கலாம்
என அறிவித்தார். ஆசாத் பங்கேற்க முடியாவிட்டாலும் அவர் சேர்மன் என்றும், பஞ்சாப் பிரிவு
பொறுப்பில் சுகதேவ், ராஜஸ்தான் பிரிவு குந்தன், உத்தர பிரதேச பிரிவிற்கு சிவ வர்மா,
பீகார் ஃபனிந்திர நாத் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டனர். அனைத்து பிரதேச
ஒருங்கிணப்பு பொறுப்பிற்கு பகத், விஜயகுமார் நியமிக்கப்பட்டனர். அரசு வங்கி கொள்ளை
என்பதும் முடிவானது.
டிசம்பர் 10, 1928ல் அசோசியேஷன் கூடி ஸ்காட் போலீஸ் அதிகாரியை
கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுக்கிறது. ராஜகுரு போலீஸ் நிலையத்திற்குள்ளேயே அவனை
கொல்ல அனுமதி வேண்டும் என்கிறார். ஆசாத் அறிவுரைக்குப் பின்னர் பொருத்தமான நேரத்திற்காக
புரட்சியாளர்கள் காத்திருந்தனர். டிசம்பர் 17 அன்று காவல்நிலையத்திலிருந்து வெளிவந்த
போலிஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத் தொடர்ந்து சுடுகிறார்.
பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில்
இருந்த சைக்கிளில் ஏறி போராளிகள் தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து
கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர்.
பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர
பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது
என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது. பகத்சிங் வெளியே இருப்பது அமைப்பிற்கு தேவை என்றும் பதுகேஷ்வரும், விஜய் சின்ஹாவும்
சட்டமன்றத்திற்குள் குண்டெறிவது என்றும் அமைப்பு முடிவெடுத்தது. துண்டறிக்கைகள் மூலமல்ல
நமது வாழ்வை தியாகம் செய்வதே பெரும் பிரச்சாரமாகவும் விழிப்புணர்வை உருவாக்குவதாகவும்
அமையும் என பகத் கருதினார். அசெம்பிளிக்கு நுழைவு அனுமதி பெறுவதற்கான ஏற்பாட்டை ஜெயதேவ்
கபூர் செய்தார்.
1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட
தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத் இருவரும் குண்டுகளை
யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர்.
மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கி கொண்டார். தோழர்கள் இன்குலாப்
முழக்கமிட்டனர். ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அசெம்பிளியில் அமர்ந்திருந்தனர்.
சில போலிசார் முன்னேறி வந்தனர். போராளிகள் கைதாக தயார் என்பதற்கான செய்கைகளை காட்டினார்.
இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 8 1929 குண்டு வீசப்பட்டப்பின்னர் பகத்சிங்கும், தத்தும்
தப்பிக்க நினைக்கவில்லை. சார்ஜெண்ட் டெர்ரியிடம் நீங்கள் கைது செய்துகொள்ளலாம் என்றனர்.
பகத்சிங்கிடம் இருந்த துப்பாக்கியை எடுக்கவும் எந்த தடையும் செய்யவில்லை. இதுவே பின்னர்
அவர்களது சாண்டர்ஸ் கொலை வழக்கில் குற்றத்தை
உறுதிப்படுத்த தடயமானது. நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சிமுறைக்கு எதிராகவே, கேளா காதினரை
கேட்க செய்யவே குண்டு வீசினோம். எவரையும் கொல்வது நோக்கமல்ல என்றனர். புரட்சியாளர்களின்
உலகளாவிய நெஞ்சுரத்தை பேசிய அவர்களது அறிக்கை வெளியிடப்படக்கூடாது என அரசாங்கம் கருதியது.
ஆனால் பயானீர் அதற்கு முன்பே அதை வெளியிட்டது.
அசெம்பிளி குண்டு வழக்கில் ஜூன் 12 1929 அன்று ’அந்தமான்
நாடுகடத்தல்’ என்கிற தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்திற்கு ஆசப் அலி வழக்கை எடுத்துச்
சென்றார். எங்களை கொலையாளிகள் என அழைக்கக்கூடாது என்றார் பகத்சிங். இதனிடையில் குண்டுகள்
தயாரிக்கப்படும் இடம் ஒன்றை போலீசார் கண்டறிந்து HSRA தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பகத்சிங், தத் இதில்
தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டது., லாகூர் சதி வழக்கு என புகழ்வாய்ந்த வழக்கில்
சாண்டர்ஸ் கொலை, வங்கி கொள்ளை, அசெம்பிளியில் குண்டுவீச்சு போன்ற குற்றங்கள் இணைக்கப்பட்டன.
சிறைக்கைதிகளுக்கு நேரும் அவலங்களை, கொடுமைகளை கண்டித்து
லாகூர் சிறையில் ஜூன்14, 1929 முதல் பட்டினிப்
போரை தோழர்கள் மேற்கொள்கின்றனர்... சுகதேவ்,
ராஜகுரு, ஜதிந்திரர், ஜெயதேவ், அஜாய்கோஷ், சிவ வர்மா அச்சிறையில் பகத்துடன் பட்டினிப்போரில்
ஈடுபடுகின்றனர். மூத்த போராளி பாபா சோகன் சிங் சிறையில் 1915 முதலே இருந்து வந்தார். சாண்டர்ஸ் கொலை வழக்கும் நடக்க துவங்கியது. மருத்துவ
படுக்கையிலேயே பட்டினி பலவீனத்துடன் பகத், பதுகேஷ்வர் இருவரையும் நீதிமன்றம் அழைத்து
செல்கின்றனர். தேசபக்தர்களுக்கு கைவிலங்கு போடப்படுவதை எதிர்க்கிறார் பகத். பட்டினியால்
ஜதிந்திரர் இரத்த ஓட்டம் நின்றது. கை கால் விளங்காமல் போனது. ஜதிந்தர் தாஸ் நிலைமை
மோசமானது டாக்டர் கோபி சந்த பார்கவா ஏன் மருந்து தண்ணீர்கூட மறுக்கிறீர்கள் எனக்கேட்டார்.
அரசியல் கைதிகள் நிலை மேம்பட நாட்டிற்காக என் உயிர் போகட்டும் என்றார் தாஸ். மன உறுதி
இருக்கும்வரை உயிர்வாழ்வேன் என்றார்.. போராட்டத்தை நிறுத்தினால் ஜதிந்திரரை விடுதலை
செய்யலாம் என்றது சிறை நிர்வாகம். பகத் போராட்டத்தை நிறுத்தி ஜதிந்திரரை காக்க விரும்பினார்.
சிறை நிர்வாகம் ஏமாற்றுவதாக உணர்ந்த பகத்சிங் தனது பட்டினிப்போரை நீட்டிக்கிறார். செப்
13 அன்று ஜதிந்திரரை மரணம் கவ்வியது. இந்திய
விடுதலைபோரின் மகத்தான தியாக வரலாற்று நாளாக
அந்நாள் மாறியது.
பகத்சிங், பதுகேஸ்வர், ஜதிந்திரநாத் ஆகியோர் லாகூர் பார்ஸ்டல்
சிறையில் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேரு அவர்களை ஆக 9 1929ல் சந்தித்தார்.
கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் போராடிவந்தனர். மோதிலால் நேருவை கண்டவுடன்
அவர்கள் ஏகாதிபத்தியம் வீழட்டும்- புரட்சி ஓங்குக என முழக்கமிட்டனர். சிறைக்கைதிகளின்
நிலையை மேம்படுத்தக்கோரி போராளிகள் பட்டினிப்போர் மேற்கொண்டனர். மிக உயர்ந்த இலட்சியதாகமும்
சுதந்திர வேட்கையும் கொண்ட இவர்களை கிரிமினல்போல் நடத்துவது சரியல்ல என மதன்மோகன் மாளவியா
அசெம்பிளியில் கண்டித்தார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டினார்.
ஜதிந்தர் தன்னை வங்காளி மாதிரி நடத்தவேண்டாம். நான் இந்தியன் என குறிப்பிட்டிருந்தார். . அரசாங்கம் நீரோ போல் நடந்துகொண்டது
என மோதிலால் விமர்சித்தார்.. புருஷோத்தம் டாண்டன் இனி இப்படிப்பட்ட சிறை அவமானங்களை
சகிக்ககூடாது என எச்சரிக்கைவிடுத்தார். சிறை
விசாரனை கமிட்டி அமைக்கப்பட்டு சில மேம்பாடுகளை
அது பரிந்துரைந்தது.
சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர்..
பகத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர், கமல்நாத் திவாரி, கிஷோர்லால், சிவ வர்மா, அஜாய்கோஷ்,
குந்தன்லால் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆசாத், பகவான் தாஸ், பகவதி வோரா
போன்றோர் தலைமறைவாய் இருந்தனர். ஜெய்கோபால், மன்மோகன் பானர்ஜி, லலித் முகர்ஜி போன்றவர்
அரசு தரப்பு சாட்சிகளாக மாறிப்போயினர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம்
தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்க்காமல் கூட வழக்கு நடத்திட
அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றை கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார்.
இர்வின் பிரபு மூவர் விசாரண கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக
மே 1. 1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார்.
பின்னல் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தருகிறார். மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணக்கூடத்திற்கு
புரட்சிகர தோழர்கள் வருகின்றனர்.. அவர்கள் போலீஸ்காரர்களால் அங்கு தாக்கப்படுவதை கண்டிக்கும்
வகையில் மூவர் கமிட்டியில் ஒருவரான நீதிமான் அகாஹைதர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறார்.
தனது மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 26, 1930ல் வழக்கு முடிவிற்கு
வருகிறது.
அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாய பிரதிநிதி சிறைச்சாலை வந்து
தீர்ப்பின் 68பக்க நகலை வாசிக்கிறார். பகத்சிங்,
ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்படுகிறது. அதிர்ச்சி நிலவுகிறது.
மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். மற்றவர்களுக்கு
கால வரையுடன் கூடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. பின்னாளில் சி பி அய் பொதுச்செயலராக
வந்த பகத்சிங் புரட்சிகர குழுவில் அன்றிருந்த அஜாய் கோஷ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் தண்டனை என அறிவிக்கப்படுகிறது. நாடு
முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொது கூட்டங்கள்
சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. ஆயுள் தண்டனை பெற்ற பதுகேஷ்வர் தீர்ப்பறிந்து
மனநிலை பாதிக்கப்படுகிறார்.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய தோழர்களுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து மார்ச் 23 1931 அன்று அதை நிறைவேற்றியது. வன்முறை மீது நம்பிக்கையற்ற காந்தி பகத்சிங்கை காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக சென்றது.
மஹாத்மாவின் சிந்தனை எப்படி இருந்தது? பகத் வழக்கு குறித்து எப்படி எதிர் வினை ஆற்றினார்? புகழுடன் விளங்கிய மஹாத்மா தனது அகிம்சை கொள்கை காரணமாக பகத்சிங் பிரச்சினையில் emotional ஆக involve ஆகவில்லை என சொல்வதை கேட்கிறோம். இறுதிகட்டம் வரை பல்வேறு முயற்சிகளை செய்தார்- அவர் வெற்றி பெறவில்லை என சிலர் சொல்வதையும் பார்க்கமுடியும். இர்வினிடம் அதிகமான அழுத்தம் தந்தார் எனவும்-வைஸ்ராய் அவரை வஞ்சித்துவிட்டார் எனவும் வேறுபட்ட
பார்வைகள் நமக்கு கிடைக்கின்றன.
இர்வின் காந்தி இருவரும் நினைத்திருந்தால் தூக்குதண்டனயை மாற்றியிருக்கமுடியும் என்கிற பொதுவான கருத்தும் நிலவுகிறது. The Assumption is
questionable- பிரிட்டீஷ் சிஸ்டம் என்கிற சூழலை வைத்து நாம் பார்க்கவேண்டும்- புரிந்துகொள்ளவேண்டும். பகத்சிங்
தூக்கு பிரச்சனையில் காந்திய அரசியலை மட்டும் விமர்சிப்பவர்கள் பிரிட்டிஷ் சட்டமுறைக்கு பகத்சிங் பலியானவர் என
சேர்த்து பேசுவதில்லை.
காந்தி இர்வினை சந்தித்து Remission of death sentence என்பதைக்கோரி வருகிறார். என்பதை அறிந்த பஞ்சாப் கவர்னர் காந்தியின் முயற்சி வெற்றிபெறக்கூடாது என எண்ணினார். அவர்கள் மார்ச் 24 என்பதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 23 அன்றே இரகசியம் காக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றுவது என முடிவெடுக்கின்றனர்.
காந்தி மார்ச் 23 அன்றும் விடியற்காலை மணி ஒன்றுக்கு நீண்ட கடிதம் ஒன்றை இர்வினுக்கு எழுதுகிறார். மாளவியா, நேரு, தேஜ்பகதூர் சாப்ரு ஆகியோரும் பெருமுயற்சி எடுக்கின்றனர். காந்தி மார்ச் 26 1931 கராச்சியில் கூடிய காங்கிரஸ் அமர்வில் எடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்குகிறார். முயற்சி பலனளிக்கும் என நம்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் 23 அன்று பகத்சிங்கின் குடும்பத்தாரை காந்தி சந்திக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. காந்தியை வில்லனாக சித்தரிக்கும் முயற்சிகள் பின்னரும் நடைபெறாமல் இல்லை.
II
காந்தி- இர்வின் இருவரையும் சகல அதிகாரங்களும் கொண்ட தனிநபர்களாக
பார்ப்பது சரியா?. காந்திக்கு பகத்சிங் உயிர்மேல் அக்கறையே இல்லையா? வெளியில் அம்மாதிரியான
இளைஞர்களின் தேசபக்தியை பாராட்டிவிட்டு செயல்படாமல் இருந்தவரா காந்தி? அவர் எடுத்த நடவடிக்கைகள்
முழுமனதுடன் எடுக்கப்படவில்லையா? பகத்சிங் பிரச்சனையில் காந்தி ஏமாற்றியவரா? இவை போன்ற
கேள்விகள் தொடர்ந்து பொதுவெளிகளில் ஆதாரத்துடனும் ஆதாரமில்லாமலும் விவாதிக்கப்படுகின்றன
பகத்சிங்கிடம் மார்க்சியம் லெனினியம் மட்டுமல்லாது பல்வேறு
சிந்தனைகளின் தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. தனது சொந்த அனுபவங்களின் மூலம் அவர்
கற்கவும் செய்தார். தனது உயிர்தியாகத்தால் நாட்டின் மனசாட்சியை அவரால் உலுக்கமுடிந்தது.
இந்த மாதிரியான இளைஞர்கள் காட்டிய போர்க்குணமிக்க தேசியம் ஆபத்தான போக்கு என காந்தி
உறுதியாக நம்பினார். காந்தி மார்ச் 7, 1931 பொதுக்கூட்ட உரையில் ஆயுதம் ஏந்தியவர் அதனாலேயே
மரணிக்கப்படலாம் எனப் பேசினார். வெளியில் பரிவுகாட்டுவது போல் பேசிவிட்டு வைஸ்ராயுடன்
சேர்ந்து தூக்கிற்கு பகத்சிங் செல்ல காந்தி நின்றுவிட்டார் என்கிற விமர்சனமும் எழாமல்
இல்லை.
வழக்கின் விசாரணைப்படி பார்த்தால் சுகதேவ் உண்மையான மூளையாக செயல்பட்டார் என தெரியவந்தது.
அவர் அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படவில்லை. அவருக்கு வரலாற்று
வெளிச்சம் போதுமான அளவு கிடைக்கவில்லை என்கிற விமர்சனமும் சேர்ந்தே நிலவுகிறது.
சுதந்திரம் என்பதை பிறரை கொன்று அடையமுடியாது என்பதை
1909லேயே தனது கருத்தாக வெளிப்படுத்தியவர் காந்தி. பிரிட்டிஷ் வைஸ்ராய் அல்லது குடும்பத்தார்-
அதிகாரிகள் மீது வன்முறை தாக்குதல் நடந்தபோதெல்லாம் அதை கண்டித்த்வர் காந்தி. இர்வின்
துணைவியார் மீது டெல்லியில் டிசம்பர் 23, 1929ல் குண்டு வீசப்பட்டதையும் கண்டிக்கும்
தீர்மானத்தை அடுத்து நடந்த லாகூர் காங்கிரஸ் அமர்வில் அவர் முன்மொழிந்தார். அதற்கு
எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் அதன் நியாயத்தை எடுத்துச்சொல்லி காந்தி தீர்மானத்தை ஏற்கவைத்தார்.
வைஸ்ராய் குண்டு வெடிப்பில் தப்பிய நிகழ்விற்கு பின்னர் காந்தி
எழுதிய கல்ட் ஆப் பாம் என்பதற்கு பகவதி சரண்
’தி பிலாசபி ஆப் பாம்’ என பதில் ஒன்றை எழுதினார். அது அமைப்பின் தலைவர் என்ற
பெயரில் வெளியானது. காந்தி அதையும் யங் இந்தியாவில்
வெளியிடுகிறார்.
“The philosophy of bomb" Satyagraha is insistence
upon truth. why press, for the acceptance of truth by soul force alone? why not
add physical force also to it? While revoultionaries stand for winning
independence by all the forces physical as well as moral, at their command, the
advocates of our soul force would like to ban the use of physical force.. ”
”உண்மையின் வடிவாக சத்தியாக்கிரகம் பேசப்படுகிறது. அது ஆன்ம
சக்தி என சொல்லப்படுகிறது. அது ஆன்மாவின் சக்தியாக மட்டும்தான் வெளிப்படவேண்டுமா- உடலின்
சக்தியாக வெளியிடப்படக்கூடாதா- அதில் உண்மை இருக்கக் கூடாதா? கேள்வி வன்முறையா இல்லையா
என்பதல்ல- சத்தியாக்கிரகத்திற்கு ஆன்ம சக்தி மட்டும்தானா- உடல் சக்தியும் உண்டா இல்லையா
என இளைஞர்கள் அதில் கேள்வி எழுப்பினர்.( the question is whether you will have
soul force plus physical force or soul force alone not violence.). எங்களுக்கு மக்களைப்பற்றி
என்ன தெரியும் என கேட்கப்படுகிறது. காந்தி ரயில் பாதைகளில் மோட்டார் செல்லும் பாதைகளில்
பயணித்திருப்பார். காய்ந்த சருகுகளை கொளுத்தி அந்த வெளிச்சத்தில் அமர்ந்து பேசும் விவசாயக்
குடும்பங்களுடன் உட்கார்ந்து காந்தி அவர்கள் தேவையை உணர்ந்திருப்பாரா? பாக்டரிக்கு
சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசியிருக்கிறாரா?. நாங்கள் இதைத்தான் செய்து வருகிறோம்.
எனவே மக்களை அறிவோம் “ என ஆவேசமாக இளைஞர்கள்
காந்திக்கு எதிர்வினையை தந்தனர்.
பகத்சிங் குறித்த அக்கறை காந்திக்கு இருந்தது என குல்திப்நாயர்
தெரிவிக்கிறார். ஆனால் பகத்சிங்கின் வன்முறை பாதையை அவர் ஏற்கவே இல்லை. பகத்திற்கு
சிலை எழுப்பும் இயக்கத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காந்தி இன்னும் சற்று தீவிர முயற்சியை
எடுத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம் என்பது எச் ஆர் பக்ஷியின் கருத்தாக
இருக்கிறது. டி எஸ் டியோலும் பகத்சிங் விடுதலையை நிபந்தனையாக்கி இர்வினுடன் காந்தி
பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்கிறார். பகத்சிங் போன்றவர்கள் வலுப்பெறுவதை காந்தி விரும்பவில்லை
என்பது ஜெனரல் மோகன்சிங் பார்வையாக இருக்கிறது.
மரணதண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்கலாம் என்கிற காங்கிரசின்
கருத்தை காந்தி ஏற்றார். அதை அமைதி திரும்புவதற்கான நிபந்தனையாகக் கூட வைக்கலாம் என காங்கிரஸ் செயற்குழு
கருதியது. ஆனால் காந்தி நேர்மையாக கராச்சி காங்கிரஸ் அமர்வை எதிர்கொள்ள விரும்பினார்.
ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பது உறுதியானால் அது
கராச்சி சந்திப்பிற்கு முன்பே நடந்துவிடவேண்டும் (If the boys should be hanged
they had better be hanged before the Congress session than after it) என்றார் காந்தி.
காந்தி முயற்சிகள் எடுத்தார் என்றாலும் வைஸ்ராய் அவரை ஏமாற்றிவிட்டார்
என புரிந்துகொண்டவர்களும் இருக்கின்றனர். இக்கருத்தை கே கே கல்லு பிரதிபலிக்கிறார்.
இர்வின் சுயசரிதை எழுதிய அல்லாம் கம்பெல் ஜான்சன் இர்வின் காந்தி உடன்பாட்டிற்கு பின்னர்
பகத்சிங் தூக்கு குறித்த உரையாடல் இரு துறவிகளுக்கு மத்தியில் நடந்தது போல் இருந்ததே
தவிர ராஜாங்க மனிதர்களுக்குள் போல் இல்லை என்ற பதிவைத் தருகிறார்
“ Sir Herbert
Emerson, the Home Member who was called upon to play a prominent role in
Delhi negotiations records listening with amusement to Irwin and Gandhi after
agreement had been reached by them that Bhagat singh must be executed, engaged
in a prolonged decision not as between two statesman but as between two saints
on the sanctity of human life”
மனசாட்சியுடன் போராடிய இர்வின் இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் தூக்குத்தண்டனை மாற்றம் என்பதை
அவர் ஏற்கவில்ல என்கிறார் ஆண்ட்ரு ராபர்ட்ஸ். காந்தி தண்டனையை நிறுத்திவைக்கத்தான்
கோரினார். இரத்து செய்யக்கோரவில்லை. காந்தி கடைசிவரை சென்று முயற்சிக்கவில்லை. இர்வின்
காந்தி உரையாடல்களை வெளிப்படையாகவும் அவர் தெரிவிக்கவில்லை என ஏ ஜி நூரணி எழுதினார்.
காந்தி மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் தரும்
வகையில் காந்தி அனைத்து முயற்சிகளையும் செய்ததாக அனில் மெளரியா தெரிவிக்கிறார். காந்தி
தூக்குத்தண்டனையை மாற்றக் கோரினார். மகாதேவ தேசாயின் குஜராத் குறிப்புகளின்படி பார்த்தால்
இர்வின் உடன்பாட்டின் அம்சமாக இடம்பெற செய்யவும் காந்தி முயற்சித்தார் என்பது மெளரியா
தரும் தகவல். உரிய காலத்தில் முயற்சி எடுக்கவில்லை- மார்ச் 3 1931ல்தான் எடுத்தார்
என்கிற நூரணி தகவல் சரியானதல்ல. காந்தி பிப் 19 முதல் பெருமுயற்சிகளை எடுத்தார் என்பது
மெளரியா முன்வைக்கும் வாதம்.
காந்தி பெரும் முயற்சிகளை எடுத்தார். வைஸ்ராய் எந்த உறுதிமொழியையும்
தராவிட்டாலும் ரிமிஷன் கிடைக்கும் என காந்தி
நம்பியதாக மீராபென் தெரிவித்துள்ளார். பகத்சிங்
கலகக்காரர் அதற்குரிய தண்டனை தரப்படலாமே தவிர மரணதண்டனை வேண்டாம் என்றார்.
அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வறிஞர் பிரேம் பசின் காந்திக்கு
இர்வின் உறுதிமொழி தந்ததாக எழுதினார். அப்படி உறுதிமொழி பெறப்பட்டதை காந்தி காங்கிரஸ்
செயற்குழுவில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால் இச்செய்தி வெளிச்சென்றால் முடிவு எடுப்பதில்
சிக்கல் நேர்ந்துவிடலாம் என்கிற எச்சரிக்கையும் தரப்பட்டது. ஆனால் பஞ்சாப் பிரதிநிதி
அச்செய்தியை பத்திரிகைக்கு தெரிவித்தார். இதனால் பிரிட்டனின் ஆளும் தலைமை கொதிப்பு
அடைந்து ஒட்டுமொத்த ராஜினாமா செய்துவிடுவோம் என இர்வினுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியதாக
பிரேம் சொல்கிறார். பஞ்சாப் அரசாங்க பார்வையில் பகத்சிங் தூக்கு பிரச்சனையை அணுகவேண்டுமே
தவிர காந்தியை முன்வைத்து பார்க்கக்கூடாது என
ஆளும் தரப்பினர் அறிவுறுத்தினர்.
காந்தி ஜனவரி 26 1931ல் விடுதலையான பின்னர் பிப்ரவரி 18 முதல்
மார்ச் 5வரை இர்வினுடன் பேச்சுவார்த்தை நடந்தது. எட்டு சுற்றுக்கள் 221/2 மணிநேரம்
பேச்சுவார்த்தை நடந்ததாக அறியமுடிகிறது. மார்ச் 5 காலை எட்டப்பட்ட உடன்பாட்டில் நேருவிற்குகூட
ஏமாற்றம் இருந்தது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் மார்ச் 4 அன்று இரவெல்லாம் விழித்து
காந்திக்காக காத்திருந்தனர். காந்தி உடன்பாடு ஏற்பட்டு மார்ச் 5 விடியற்காலை 2 மணி
அளவில் திரும்புகிறார். ராபர்ட் பெர்னேசின் டைரிகுறிப்புகள் இவ்வுடன்பாட்டு நிகழ்வுகளை பேசுகின்றன.
சிவில் ஒத்துழையாமையை நிறுத்திக்கொள்வது, வட்டமேசையில் பங்கேற்பது,
சுயாட்சிக்கான அரசியலமைப்பு சட்டவிதிகள், வன்முறையில் ஈடுபட்டிராத அரசியல் கைதிகளை
விடுவிப்பது, அரசாங்க ஒடுக்குமுறைகளை நிறுத்துவது, பறிமுதலான சொத்துக்களை திரும்பத்தருவது,
அரசாங்க ஊழியர்களுக்கு திரும்ப வேலை, உப்பு தயாரிக்க அனுமதி, வரிகளை கட்டுவது என்பது
உடன்பாட்டின் சாரமாக இருந்தது. ஆனால் 22 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விவாதங்கள் பதிவாகவில்லை.
ஜனவரி 26 1931ல் தான் காந்தி விடுதலையாகி வருகிறார். இர்வினுடன் பேச்சுவார்த்தை என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் தயக்கம்
இருந்தது. பின்னர் பிப்ரவரி 17ல் துவக்குகிறார். பிப்ரவரி 14 அன்று மதன் மோகன் மாளவியா
கருணைகாட்டவேண்டும் என்கிற வேணுகோளை விடுக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் மரணதண்டனையையை
மாற்றவேண்டும் என்கிறார். அதே நாளில் தேஜ்பகதூர் சாப்ரு மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளிடம்
கருணைமனு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மகாதேவ தேசாய் மூலம் காந்தி செய்தி அனுப்புகிறார்.
இதை சந்தர் பால் சிங் பதிவு தெரிவிக்கிறது.
On Feb 17, 1931, Gandhi discussed this matter with the
viceroy. According to Gandhi, he told the viceroy, “This has no connection with
our discussion and it may even be inappropriate on my part to mention it. But
if you want to make the present atmosphere more favourable, you should suspend
Bhagat Singh's execution.” என்கிற குறிப்பை பேராசிரியர் ஜெயின் நாரயண் சர்மா தருகிறார்.
சந்தர்பால்சிங் காந்தியின் தொடர் இர்வின் சந்திப்புகளையும்
தெரிவிக்கிறார்.
”On
20th March, Gandhi had a long conversation with Herbert Emerson, the Home
Secretary. The question as to whether it (the execution) should take place
before or after the Karachi Congress had been very seriously considered by the
Government who realised the difficulties of either course, but thought it would
have been unfair to the condemned persons to postpone execution and also not
fair to Gandhi to allow the impression to gain ground that commutation was
under consideration when this was not the case. He agreed that of the two
alternatives it is better not to wait, but he suggested, though not seriously
that the third course of commutation of the sentence would have been better
still. on the issue of Bhagat Singh's execution. On 21st March, Gandhi met
Irwin and again communicated his request for reconsideration of the impending
executions.19 Gandhi met Irwin yet again on 22nd March to discuss the issue.
The Viceroy promised to consider Gandhi's submission. Sensing some hope, Gandhi
wrote a personal letter on the morning of 23rd (Monday) to the Viceroy”
பிப்ரவரி 18 அன்று காந்தி பகத்சிங் பிரச்சனையை பேசினார்.
பொதுவாக காந்தி மரணதண்டனைக்கு எதிராக நின்றவர். முதல் சந்திப்பில் தண்டனை மாற்றம் குறித்து
ஏதும் பேசவில்லை என்று இர்வின் தரப்பு குறிப்புகள் தெரிவிக்கின்றன. கண்ணுக்கு கண் என்பது
உலகை குருடாக்கிவிடும். எவராக இருந்தாலும் திருந்த வாய்ப்பு தரவேண்டும் என்பதே அவரது
பார்வை. பகத்சிங் பிரச்ச்னையில் மரணதண்டனையில் மாற்றம் என்றால் கூடுதலாக அமைதி நிலவும்
என்றும் காந்தி கருத்து தெரிவித்தார். சரியோ தவறோ வெகுஜன கருத்து அவ்வாறு இருக்கிறது
என்றும், இந்த உயிர்களை காப்பதன் மூலம் பல அப்பாவி உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படலாம்
எனவும் காந்தி இர்வினுக்கு மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
சிறப்பு பிரதிநிதி மூலம் அக்கடிதம் அனுப்பபட்டது. Execution is an irretrievable
act. If you think there is slightest chance of error of judgment, I would urge
you to suspend for further review, an act that is beyond recall . Charity never
faileth என்கிற வாசகம் கொண்ட அக்கடிதத்தை அனுப்பிவிட்டு
அவசியமெனில் நேரில் வந்து பேசவும் தயார் என காந்தி தெரிவித்தார்.
இர்வின் தனக்கு மார்ச் 27, 1931 அன்று கொடுக்கப்பட்ட பிரிவு
உபச்சார விழாவில் காந்தியின் வற்புறுத்தலை குறிப்பிட்டுப் பேசினார். தனது கொள்கைக்கு
எதிராக நடந்துகொண்ட இளைஞனுக்காக மரணதண்டனையை மாற்றவேண்டும் என அந்த அகிம்சை மனிதர்
தன்னிடம் வலியுறுத்தியதையும், அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டு இப்படிப்பட்ட முடிவுகளை
எடுக்க கூடாது என தான் உணர்ந்ததாகவும் விளக்கிக்கூறினார். “ As I listened the other day to Mr Gandhi
putting the case for commutation forcefully before me, I reflected first, of
what significance it surely was that the apostle of non- violence so earnestly
be pleading the cause of a creed so opposite his own. But I should regard it as
wholly wrongin allowing the matter to be influenced or deflected by purely
political considerations. இதை ட்ரிப்யூன்
செய்திப்பத்திரிகை மார்ச் 28 1931 அன்று பிரசுரித்திருந்தது.
பகத்சிங்கை தூக்கில் ஏற்றினால் அவர் தேசத்தியாகியாக கொண்டாடப்படுவார்.
நிலைமைகள் சற்று விபரீதமாகும். ஆனாலும் சட்டப்பிரச்சனைகளில் அதன்படி செயல்படுவதுதான்
தனக்கு சரியாகப்படுகிறது என்பதையும் காந்தியிடம் தான் சொன்னதாக இர்வின் தெரிவித்தார்.
மேலும் பகத்சிங்கிற்கு அத்தண்டனை சரியானதே என்பதால் அதை மாற்றவேண்டும் என்பது தன்னால்
இயலமுடியாத ஒன்றானது என்றும் இர்வின் தெரிவித்திருந்தார். The Earl of Halifax- fullness of daysல் இப்பதிவு
இருப்பதாக அறியமுடிகிறது.
ஆரம்பத்தில் பகத்சிங்கின் பட்டினிப்போராட்டம்போது ஜின்னா
ஆதரவான நிலையை எடுத்தார். பின்னர் தாகூர் போன்றே ஜின்னா தூக்குதண்டனைப் பற்றி மெளனம்
காத்தார்.
குண்டுவீசிய வழக்கிற்கு பகத்சிங் சார்பாக ஆசப் அலி வழக்கறிஞராக
இருந்தார். வன்முறை வழியை ஏற்கவில்லை என்கிற பொருட்பட நகல் ஒன்றை எழுதிக்கொண்டுபோய்
பகத்சிங்கை ஏற்கவைத்து அவரின் ஒப்பம் பெற்றுவந்து காந்தியிடம் காட்டினால் பகத்சிங்
தண்டனை குறைப்பிற்கு காந்தியின் கரங்களை அது வலிமைப்படுத்தும் என ஆசப்பலி கருதினார்.
இம்முயற்சி குறித்து காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. பகத்சிங்கும் நண்பர்களும் வன்முறையை
ஏற்கவில்லை என்பதை உரிய அதிகாரிகளுடன் விவாதித்துவிட்டு தனக்கு தெரிவிக்குமாறு காந்தி
அறிவுறுத்தினார். ஆனால் உள்துறைச் செயலர் பகத்சிங்கை சந்தித்து ஆசப் அலி உரையாட அனுமதி
மறுத்துவிட்டார்.
பஞ்சாப் அரசாங்க செயலரின் தனி உதவியாளர் ஆண்ட்ரூஸ் மகளைத்தான்
சாண்டர்ஸ் திருமணம் செய்வதாக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அவரின்
செல்வாக்கும் இவ்வழக்கில் இருந்திருக்கலாம். ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்ட போலீஸ் சூப்பரிண்டெண்ட்
ஜேம்ஸ் ஸ்காட்டும் வழக்கின் திருப்பங்களை உன்னிப்பாக
கவனித்து ஆலோசனைகளை சொல்லிவந்ததாகவும் அறியமுடிகிறது. ஆண்ட்ரூஸ் தான் பல ஆங்கில அதிகாரிகளை
சந்தித்து முறையிட்டதாகவும் தனக்கு ஆறுதலாக நிற்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதையும்
அறியமுடிகிறது. ஆங்கில மாதுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது
என்கிற தாக்கம் பரவலாக்கப்பட்டது.
அன்று பொறுப்பில் இருந்த 7 கவர்னர்கள் உறுதியாக நின்று வைஸ்ராயை
வலியுறுத்திய செய்தியை ராபர்ட் பெர்னே தெரிவிக்கிறார். காந்திக்கும் பகத்சிங் மரணதண்டனையை ரத்துச் செய்ய அடிப்படைகள்
இல்லை என அறிந்தும் அவர் மனிதாபிமான அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டதாக ராபர்ட்
சொல்கிறார். பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா எச்சரிக்கையை செய்ததாக பீப்பிள்
என்கிற பத்திரிகை தலையங்க செய்தியில் எழுதியது. அந்த இளைஞர்கள் இரு போலீஸ் உயிரை பறித்தவர்கள்
என்கிற போலீஸ்தரப்பு வாதத்தை எழுதியது.
பகத்சிங்கின் தந்தை
கிஷன் சிங் கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி பிரைவி கவுன்சிலுக்கு
பெட்டிஷன் ஒன்றை செப் 20, 1930ல் தந்தார். பிப்ரவரி 17, 1931ல் அது நிராகரிக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் லால்கபூர், பால்ஜித் சிங் போன்றவர்கள் பிரவரி 16 அன்று வைஸ்ராய்க்கு
தந்தி அனுப்பினர். நீதிமன்ற அமர்வுக்காலம் முடிந்த நிலையில் மரணதண்டனை செல்லாது என்றனர்.
பிப்ரவரி 25ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை போட்டனர். அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
On 27 th Feb
ru&ry , 1931 , Viscount Dunedin , while rejecting the appeal to the Privy
Council, observed : "Their Lordship must add that although the Governor General
thought tit to expound the reasons which induced him to promulgate this
Ordinance, this was not in their Lordships' opinion in any way incumbent on him
as a matter of law. Their Lordships for these reasons have humbly advised His
Maje sty that this petition should be dismissed, "
பிரிட்டன் நாடாளுமன்ற உறுபினர்கள் மாக்ஸ்டன், கிங், ஜோவெல்ட்
போன்ற்வர்கள் பகத்சிங் மரணதண்டனையை மாற்றவேண்டும் என வைஸ்ராய்க்கு வேண்டினர்..
இர்வின் அவர்களின் இல்லத்தில் ஆங்கில அதிகாரிகளை சமாதானப்படுத்தும்
வகையில் அவசரக்கூட்டம் ஒன்று மார்ச் 12 மற்றும் 13 1931ல் நடத்தப்பட்டு கருத்துக்கள்
கேட்டறியப்பட்டது.
வைஸ்ராய் அரசாங்க செயலருக்கு தந்தி மூலம் தங்களது நிலைப்பாட்டை
தெரிவித்தார். தலமட்ட அரசாங்கம் சொல்வது சரியாக தெரிகிறது. கராச்சி காங்கிரசிற்கு பின்னர்
தண்டனை நிறைவேற்றம் என்பதில் சாதகமான அம்சம் ஏதும் தெரியவில்லை. எனவே மார்ச் 23க்குள்
நிறைவேற்றிவிடலாம் என்பது தெரிவிக்கப்பட்டது. மார்ச் 24 1931ல் தணடனை நிறைவேற்றம் என
இருந்தது. கடுமையான போராட்டங்கள் எழலாம் என அரசாங்கம் அறிந்து முதல் நாள் மார்ச்
23 அன்றே தூக்கை நிறைவேற்றும் வகையில் கடைசி விருப்பம் கேட்கப்பட்டது. அம்மா சமைத்த
உணவு என்றார் பகத். விழித்த வார்டனிடம் கவலை வேண்டாம் இங்குள்ள போகா என்கிற கழிப்பறை
சுத்தம் செய்யும் தொழிலாளியைத்தான் அவர் அம்மா என குறிப்பிடுவதாக தெரிவித்தார். கண்ணீர்
மல்க தயங்கிய அத்தொழிலாளியை தனக்கு உணவு சமைக்க சம்மதிக்க வைத்தார் பகத்.
காந்தி மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் வைஸ்ராயை சந்திக்கும்
விருப்பத்தை தெரிவித்திருந்தார். கராச்சி செல்வதை ஒருநாள் ஒத்தியும் போட்டார். காந்தி
கராச்சி சென்றபோது திரும்பி போ முழக்கத்துடன் இளைஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
செய்தனர். காந்தியம் வீழட்டும் என முழக்கம் இட்டனர். பிரிட்டிஷ் சுரண்டலாளர் பக்கம்
காந்தி என்கிற வசை வீசப்பட்டது. கொடி ஏந்திவந்த ஒருவர் காந்தி மண்டையில் அடித்தார்.
கராச்சி காங்கிரசில் உற்சாகம் இல்லை. மூவரின் தூக்கு என்கிற சோகம் கவ்விப்படர்ந்திருந்தது.
பகத்சிங் பெயர் பெருமளவு உச்சரிக்கப்பட்டது. காந்தியை புகழ்ந்தவர்கள் எழுதிய தீர்மானம்
கூட மொழி உக்கிரத்தை கொண்டிருந்தது என பட்டாபிசீதராமைய்யா பதிவு சொல்கிறது.
காந்தி தனது அகிம்சை குறித்த நிலைப்பாட்டை விளக்கி சொற்பொழிவாற்றினார்.
வன்முறையால் சுயராஜ்யம் உருவாகாது- அழிவே மிஞ்சும் என்றார். என்னைக் கொல்லலாம். காந்தியம்
இருக்குமே என்றார். உண்மையை அகிம்சையைக் கொன்றால்தான் காந்தியத்தைக் கொல்லமுடியும்
. சுயராஜ்யத்தை உண்மையான அகிம்சை வழியில் பெறுவது என்பதுதானே காந்தியம். மரணதண்டனையை
மாற்றுவது என்பதை இர்வினுடன் உடன்பாட்டு அம்சமாக தான் மாற்றவில்லை என்பதையும் அவர்
தெளிவுபடக்கூறினார். I pleaded Viceroy as
best as I could. I brought all pressure at my command to bear him. I poured my
soul into it but no avail என அவர் குறிப்பிட்டார்.
பகத்சிங்கின் தியாகத்திற்கு புகழாரம் சுட்டினார் நேரு. வன்முறை
பாதையாகாது, அழிவிற்கு கொண்டு சேர்க்கும் என்றார். கீழ்கண்ட தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார்.
“The Congress while disassociating itself from and
disapproving of political violence in any shape or form, places on record its
admiration of the bravery and sacrifice of the late Bhagath Singh and his
comrades Shuk Dev and RajGuru, mourns with the bereaved families the loss of
these lives. The Congress is of opinion that this triple execution i an act of
wanton vengeance and it deliberate flouting of the unanimous demand of the
nation of commutation. This Congress is further of opinion that Govt has last
the golden opportunity of promoting the goodwill between the two nations,
admittedly held to be essential at this juncture, and of winning over to the
method of peace the party which being driven to despair, resorts to political
violence.”
தீர்மானத்தின் முதல்வரி குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. காந்தி
மறுமுறையும் உரையாற்றினார். பகத்சிங் வழியை காப்பியடிக்க முடியாது. கொலைகளின் வழியே
நியாயத்தை நிலைநிறுத்த முடியாது. அப்படித்தான் நியாயத்தை பெறவேண்டும் என்கிற எண்ணம்
நம்மிடம் எழுந்துள்ளது என்பதாக அவர் உரை சென்றது..
மார்ச் 23 அன்றுதான் லெனின் புத்தகத்தை பகத் படித்துக்கொண்டிருந்தார்.
முடிக்க விரும்பினார். இன்குலாப் முழக்கம் கேட்க துவங்கியது. தலைமை வார்டன் சர்தார்
சத்தார் சிங் முடிவு வந்துவிட்டது மகனே என்றார். எப்போது அந்த அதிர்ஷ்ட நிமிடம் என்றார்
பகத். இன்று மாலை என்றனர். என்னை படைத்தவனை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.
பிரார்த்தனை செய் மகனே என்றார் வார்டன். உங்கள் உணர்வை மதிக்க்கிறேன். நீங்கள் முன்னதாக
தெரிவித்திருக்க வேண்டாமா என்றார் பகத். மாலை 3 மணிக்கு தான் உறுதி செய்தனர் என்றார்
வார்டன். கடைசி நேரத்தில் நான் இறைவனை பிரார்த்தித்தால் அவர் என்னை கோழை என நினைத்து
விடுவார் என்றார் பகத்.
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் அன்றிருந்த கம்யூனிஸ்ட்களைப்
போலவே பகத்தும் நம்பிக்கை வைத்திருந்தார். சோசலிச புரட்சி என பேசிவந்தார். கம்யூனிஸ்ட்
அகிலம் வாழ்க எனக் கூட முழங்கினார். ஆனாலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களில் சேர்ந்து
ஏன் செயலாற்றவில்லை என்பது குறித்து ஏராள விவாதங்கள் நடந்து வருகின்றன. தான் தனிநபர்
பயங்கரவாதி அல்ல என தெளிவுபடுத்த முயன்றார். தங்களை விடுதலைப் போரின் இராணுவப்பிரிவாக
புரிந்து கொள்ளவேண்டும் என்றார். புத்தக வாசிப்பையும் அறிவு பெருக்கத்தையும் நேசித்தவர்
அவர். அவரும் தோழர்களும் படித்த நூற்றுக்கணக்கான புத்தக பட்டியல் கூட வெளியாகியுள்ளது.
நான் ஏன் நாத்திகன் ஆனேன் உட்பட ஏராள கட்டுரைகளை எழுதியவர் பகத். இந்திய இளைஞர்களின்
ஆதர்ஷ நாயகனாக பகத்சிங் மின்னத்துவங்கினார்.
தண்டனைமாற்றம் பெறுவது என்பதைவிட தியாகத்தால் ஆற்றும் தேசக்கடமை உயர்ந்தது என பகத்சிங் கருதினார்.
The country will be served better by my sacrifice என்றவர் பகத்சிங்.
துணைநின்றவை:
1. Shaheed Bhagat sing An immortal revoultionary The
marxist ap 2006
2. Bhagath Sing- Doctorate Thesis Rupinder Kaul
3. GANDHI AND BHAGAT SINGH – V N DUTTA
4. The life and times of Bhagat Singh by Mahesh
Sharama
5. The History of Legend by Kama Maclean
6. What Mahatma Gandhi did to save Bhagat Singh Chander
Pal Singh Gandhi Marg, October-December 2010
7. Mahatma Gandhi and Bhagat Singh : A Clash of Ideology by Prof J N sharama Gandhi Marg Jan 2012
.
Comments
Post a Comment