மகாத்மா காந்திஜியின் இறுதிநாள்
(ஜனவரி
30 1948)
-
ஆர்.பட்டாபிராமன்
வழக்கம்போல்தான் அன்றும் விடிந்தது. அந்த நாளில் இந்தியாவை
ஏன்
உலகையே குலுக்கும் சம்பவம் நடைபெறும் என எவரும் கணித்திருக்கவில்லை. விடியற்காலை 3.30க்கு வழிபாட்டிற்கு அனைவரும் எழுந்தனர். காந்தி செப்டம்பர்
9 முதல் பிர்லா வீட்டில் அவருக்கு என எளியவகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தங்கியிருந்தார். வழக்கம்போல்
அன்றைய
நாளும் காந்திக்கு நிகழ்ச்சிகளும் சந்திப்புகளும் நிறைந்த தினமாகவே இருந்தது..
காந்தி ஆபாவை எழுப்பினார். பல்குச்சியால் வழக்கம்போல்
வாயை
சுத்தம் செய்துவிட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு காந்திஜி வந்து அமர்கிறார். காலையின் திறப்பாகவும் மாலையின் நடை சாத்தலாகவும் அவர் பிரேயரை பார்ப்பார்.
சமய புனித புத்தகங்களின் மேற்கோள்கள்
குறிப்பாக இந்து இஸ்லாம் மேற்கோள்கள்
இருக்கும்.
ஆபா துயில் எழவில்லை,
அவர் இல்லாமலேயே
பிரார்த்தனை 3.45க்கு துவங்கியது. மனு பகவத்கீதையிலிருந்து படித்தார்.
முதல் மற்றும் இரண்டாம் பாடலை படித்தனர். ஆபா வராததில் காந்திஜிக்கு சங்கடம் இருந்தது. இப்படி காட்சிகளை காண விரும்பவில்லை என்றார்.
மனு அடுத்து என்ன பாடல் எனக் கேட்க குஜராத்தி பாடலை சொல்கிறார் காந்திஜி.
மனிதா கவலையோ இல்லையோ நிற்காதே தாமதிக்காதே தனித்த போராட்டமாக இருந்தாலும்
தொடர்ந்து செல் என்கிற பொருள்தரும்
பாட்டாக அது இருந்தது. ForGive, O Merciful and loving God of Gods,
all my sins,of hand, orfoot, body or speech, eye or ear, of commission or
omission..I ask neither for a Kingdom nor for Heaven nor for liberation but
only for an end to pain of the suffering ones என்கிற பாடலையும் அவர்கள் பாடினர்.
பிரேயர் முடிந்தவுடன் சற்று கதகதப்பிற்காக காந்திஜியின் கால்களை கம்பளி போட்டு போர்த்துகிறார் மனு.
பிரார்த்தனை முடிந்தவுடன் மனு காந்திஜிக்கு குடிப்பதற்கு தேன் எலுமிச்சை சாறு கலந்த சுடுநீரை தந்தார். குஜராத்தியில் ஆபா பிரார்த்தனைக்கு வராததை குறிப்பிட்டு காந்திஜி சொன்னார். மனத்தூய்மைக்குரியது பிரார்த்தனை. அது குறைகிறதா என்றார். உனக்கு தைரியம் இருந்தால் என் அதிருப்தியை ஆபாவிடம் தெரிவித்துவிடு என்கிறார். அவருக்கு விருப்பமில்லை எனில் அவர் என்னை விட்டு விலகிபோய்விடலாம் எனவும் தெரிவித்தார். ஆபா எழுந்து தன்வேலைகளை பார்க்கத்
துவங்கினார். ஏனோ காந்திஜி நேரிடையாக
அவரிடம் தன் மனதை தெரிவிக்கவில்லை என கல்யாண சுந்தரம் தன் பதிவில் அந்த இறுதி
நாளின் துவக்கம் குறித்து தெரிவிக்கிறார்.
வார்தா சேவா
கிராம்
சென்று பிப்ரவரி 2 முதல் 10 நாட்கள் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு என்னிடம் தெரிவிக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸ்
கலைக்கப்பட்டு அது சேவைக்கான அமைப்பாக மாறவேண்டும் என்பது குறித்த அமைப்புவிதிகளை தட்டச்சு செய்திட என்னிடம் முதல்நாள் சொல்லப்பட்ட வேலையை முடித்து அதை காந்திஜியிடம் காட்டினேன். அதில் பதில்சொல்ல
ஆர்வம் காட்டவில்லை என கல்யாணசுந்தரம் சொல்கிறார். இதில் மற்றவர்கள் பதிவு வேறுமாதிரி சொல்கிறது. பியாரிலாலை அழைத்து கவனமாக பரிசிலீத்து
திருத்தம் ஏதேனும் தேவைபட்டால் செய்யுமாறு
பணித்தார்.
காந்திஜி அடுத்து முதல்நாள்
எழுதப்பட்ட காங்கிரஸ்
கலைப்பு அறிக்கைதனை
சரிபார்க்கிறார். அது அவரின் கடைசி விருப்பம் உயில் எனவும் ( last will and Testament) சொல்லப்படுகிறது . உண்ணாநோன்பு ஏற்படுத்திய
பலவீனம் இருக்கும்
நிலையில் அன்று அவர் அரைமணிநேரம்
மட்டுமே
நடைபயிற்சி மேற்கொண்டார். வந்தவுடன்
கடிதபோக்குவரத்து கோப்புகளை
பார்த்தார். முத்லநாள்
கிஷோரிலால் மஷ்ருவாலாவிற்கு சேவாகிராம் விஜயம் பற்றிஎழுதிய
கடிதம் போஸ்ட் ஆகாமல் இருந்தது.
பிப்ரவரி
2 சேவாகிராம் செல்வது பற்றியும்- மஷ்ருவாலாவை
பார்க்கலாம் என்பது பற்றியும் மனு கேட்கிறார்.
காந்தி எதிர்காலம்
பற்றி என்ன சொல்லமுடியும். மாலை பிரேயரில் முடிவானால்
அறிவிக்கலாம். அது ரேடியோ செய்தியாக
போகும் என்கிறார்.
அவருக்கு கடுமையான இருமல் இருந்தது. ஏலக்காய் பொடி எடுத்துவந்தார். அது தீர்ந்து இருந்ததைப் பார்த்த மனு அதை தயார் செய்துவிட்டு வருகிறேன் என்றார். என்ன நடக்கும் என யார் அறிவார். தேவையெனில் இரவு பொடி செய்து கொள்ளலாம் என்றார் காந்திஜி. அலோபதி தொண்டை மாத்திரையை
மனு
எடுத்து வந்தபோது என்னைப்பற்றி தெரியாதா என்றார் காந்திஜி.
அன்று காலை 6 மணிக்கு திருமதி ஆர். கே நேரு வந்தார் (7 மணிக்கு
என்கிற பதிவும் இருக்கிறது). அவர் அன்று மதியம் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவேண்டும். ஏழையர் நாட்டை சார்ந்தவர்
என்கிற வகையில் நீ எளிய சிக்கன வாழ்க்கையை
மேற்கொள்ளவேண்டும் என எழுதி கையெழுத்து
இட்டார்
காந்திஜி..
பியாரிலாலிடம் மிகவும் மனக்கஷ்டத்துடன் தான் காங்கிரஸ் கலைப்பு
அறிக்கையை தயாரித்துள்ளதாக காந்திஜி கூறினார்.. பிரிஜ் கிருஷ்ணா காந்திஜிக்கு அரைமணி மசாஜ் செய்துவிடுகிறார். பியாரிலாலை
அழைத்து அறிக்கையை
சரி பார்த்தாகிவிட்டதா எனக் கேட்கிறார்.
அந்த புதிய அமைப்புவிதியின் நகலில் இந்திய தேசிய காங்கிரஸிற்கு
பிரச்சாரம், நாடாளுமன்ற அரசியல் என்கிற கட்டம் முடிவிற்கு வருகிறது. தனது 700 ஆயிரம்
கிராமங்களின் வழியே சமூக, பொருளாதார, மாரல் நெறிசார்ந்த விடுதலையை இந்தியா பெறவேண்டும்.
வகுப்புவாத அமைப்புகளிலிருந்தும் பிற அரசியல் கட்சிகளுடன் போட்டியிலிருந்தும் காங்கிரஸ்
விலகி நிற்கவேண்டும். எனவே அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தன்னைக் கலைத்துக்கொள்வது
என தீர்மானிக்கிறது. லோக்சேவக் சங் என்கிற மாற்றம் கொள்கிறது. விவசாயம், கைத்தறி மூலம்
சுயசார்பு பெற்ற கிராமங்களை உருவாக்க லோக்சேவக் பாடுபடும்- கல்வி படிப்பறிவின்மை, தீண்டாமை,
வேலையின்மை, மதவெறுப்பு போன்றவைகளின் தீர்விற்காக நிற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
காந்திஜி கடிதங்களுக்கான விஷயங்களை சொல்ல சொல்ல மனு எழுதிக்கொண்டிருந்தார். பியாரிலால் சரி செய்து கொணர்ந்த புதிய அமைப்புவிதி
நகலை பார்த்து மீண்டும் சரி செய்கிறார். திருத்தப்பட்ட பக்கங்கள் ஆச்சார்யா ஜிகல் கிஷோரிடம்
தரப்படுகிறது.
நவகாளி யாத்திரை அனுபவத்தில்
மதராஸ் அரிசி பிரச்சனையை தீர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை அவர் பியாரிலாலிடம் வெளிப்படுத்துகிறார்.. மதராஸிசில் உணவு நெருக்கடிப்பற்றி உணவு அமைச்சகம் பயந்து நடுங்குகிறது. மதராஸ்
மாகாணம் போன்ற ஒன்றில் இயற்கையாகவே தென்னை, பனை, கடலை, வாழை விளைச்சல் அமோகமாக இருக்கும்போது
பட்டினி என்பதற்கான அவசியம் இல்லை. மக்களுக்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு கையாள்வது
எனத்தெரிந்தால் போதும் என்றார். அடுத்துவரும் ஹரிஜன் இதழுக்கான விஷயமாகவும் பேசப்பட்டது..
மனு காந்திஜி குளிப்பதற்கு உதவுகிறார். உனக்கான கை உடல்பயிற்சியை செய்தாயா என காந்திஜி வினவுகிறார். மனு தனக்கு அப்பயிற்சியில் விருப்பமில்லை என சொன்னதால்
காந்திஜி கடிந்துகொள்கிறார். பின் அவர் எடை பார்க்கப்பட்டு உண்ணாவிரதத்திற்கு பின்னர் 21/2 பவுண்டு கூடியிருப்பதாக மனு தெரிவித்தார்.
பெங்காலிமொழிப் பயிற்சியில் அவர் பைரவ் வீடு நைஹாத்தியில் இருக்கிறது.
ஷீலா முதல் பெண். இன்று ஷீலாவிற்கு கைலாஷ் உடன் திருமணம் நடந்தது என்பதை எழுதிப் பார்த்தார்.
காலை 9.30க்கு வேகவைத்த காய்கறி,
12 அவுன்ஸ் ஆட்டுப்பால்,
4 தக்காளி, 4 ஆரஞ்சு, காரட் ஜூஸ், இஞ்சி எலுமிச்சை
சாறு எடுத்துக்கொண்டார். பியாரிலால் இந்துமகாசாபா தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக் குறித்து தெரிவித்தார் . முகர்ஜியிடம் இந்துமகாசபா தொண்டர் காங்கிரஸ் தலைவர்களை
கொல்லவேண்டும் என பேசியதை சுட்டிக்காட்ட காந்திஜி சொல்லியிருந்தார்.
முகர்ஜியியால் இப்படிப்பட்டவைகளை தடுக்கமுடியாதா என காந்திஜி எனவும் வினவியிருந்தார். முகர்ஜியின்
பதில் திருப்தியாக
இருக்கவில்லை என பியாரிலால் தெரிவித்தார்.
நவகாளி கொதிநிலை குறித்து பியாரிலாலுடன் காந்தி விவாதித்தார். தான் சேவாகிராம் போய்வந்தவுடன் பியாரிலால் நவகாளி செல்லவேண்டும் என காந்திஜி தெரிவித்தார். நவகாளி உடன் கிளம்பவேண்டுமா எனக் கேட்டதற்கு இல்லை நான் வார்தா சென்ற பின்னர் என்கிறார். அது வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எதையும் தள்ளிப்போடாமல் உடன் செய்ய விரும்புவர்
அவர் என பியாரிலால் பதிவு செல்கிறது பாகிஸ்தான்
செல்லவேண்டும் என்கிற விருப்பத்தையும் அவர் தெரிவிக்கிறார்.
நவகாளி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து
சிறுபான்மையினர் வெளிவரவேண்டியதுதான் நல்லது எனச் சொல்லப்பட்டபோது கூடாது என மறுத்தார் காந்திஜி. தனது செய் செத்துமடியை சொல்லி
நின்று வாழ்வா சாவா போராட்டத்தை நடத்தவேண்டும் என்றார். பலவீனத்திலிருந்து பலத்தைப்
பெற்றாகவேண்டும் என்றார். சாவுகுறித்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.
தென்னாப்பிரிக்கா காலத்து நண்பர் ருஸ்டம் சொராப்ஜி குடும்பத்துடன் காந்திஜியை பார்க்க வந்தார். காலை
10.30க்கு அவர் சிறிது நேரம் தூங்க செல்கிறார். அவரின் பாதங்களை நெய்விட்டு
துடைக்கிறார்கள்.எழுந்தவுடன்
சுடுநீரில் தேன் கலந்து குடிக்கிறார். பின் தனியாக பிடிமான துணையின்றி பாத்ரூம் செல்கிறார். மனு பதறிப்போய் என்ன பாபுஜி என்கிறார்.
தனித்து செல் தனித்து செல் என்ன அற்புதம் என தாகூரின் வரிகளை சொல்கிறார்.
வந்திருந்த
கிழக்கு பஞ்சாப் ஜாட் தலைவர்களிடம் அங்கு தலித்களின் நிலைமைப்பற்றிக் கேட்டறிகிறார்.
மதியம்
12.30க்கு டாக்டர் ஒருவர் மருத்துவமனை அநாதை இல்லம் கட்டுவதற்கு
ஏற்றுக்கொண்ட பிளான் குறித்து விவாதிக்கிறார். பின்னர் தினம் வருகின்ற இஸ்லாமிய தலைவர்களின்
குழுவை சந்திக்கிறார். டெல்லி முஸ்லீம் தலைவர்கள் ஹிப்ஸர் ரஹ்மான், அகமது சேட் போன்றவர்கள் சந்திக்கின்றனர்.
வார்தா பிப்ரவரி 2 போய்விட்டு
பிப்ரவரி 14 தான் வரமுடியும் என அவர்களிடம் சொல்கிறார்.
கடவுள் விட்ட வழி என்கிறார்.
டெல்லியில்
அமைதியிருக்கும் காந்திஜி சென்று வரலாம் என நம்பிக்கையை
அவர்கள்
தருகின்றனர்.
அடுத்து அவர் சுதிர் கோஷை சந்திக்கிறார் . பிரிட்டிஷ் பத்திரிகைகள் நேரு படேல் உரசலை எழுதியிருப்பதாக சுதிர் சொல்கிறார். சுதிர் லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் படேலை கம்யூனலிஸ்ட் எனவும் நேருவை புகழ்வது போல் நடித்தும்
வெளியிட்ட செய்திகளை
காட்டுகிறார். படேலிடம் முதலிலும் பின்னர் இரவு 7 மணிக்கு நேரு மெளலானாவுடனும் விவாதிக்க இருப்பதாக காந்திஜி தெரிவிக்கிறார்.
மதிய சூரிய ஒளியில் நவகாளியில் பெற்ற விவசாயின் மூங்கில் தொப்பியை முகத்தில்
மறைத்துக்கொண்டு வயிற்றில் mudpack
வைத்துக்கொண்டு படுத்துக்கொள்கிறார். கானு- ஆபா இருவரும் காலை பிடித்து விடுகின்றனர். நிருபர் ஒருவர் வந்து காந்தி சேவாகிராம்
பிப்ரவரி 1 அன்று செல்கிறாரா எனக் கேட்டார். யார் சொன்னது என காந்தி மறு கேள்வி கேட்கிறார்.
பத்திரிகை செய்தி காந்திஜி செல்கிறார்
என நிருபர் கூற அது எந்த காந்தி எனத் தெரியவில்லை
என காந்திஜி பதில் தருகிறார்.
மதியம் மணி 1 அளவில் சாந்தகுமார் மொரார்ஜி
எனும் தயாளர் காந்தியை பார்க்கவந்தார். மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறு ஒன்று வெளியாகவேண்டும்-
அவரது டைரிக்குறிப்புகள் எடிட் செய்யப்படவேண்டும் என்றார் காந்திஜி. அதற்கான நிதிச்சுமை
பற்றி விவாதித்தபோது தான் அச்செலவை தான் ஏற்பதாக சாந்தகுமார் மொரார்ஜி சொல்கிறார். மகாதேவ தேசாயின் நெடுநாளைய நண்பர் நரகரி
பரிக் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆசிரம நண்பர் சந்திரசேகர் சுக்லா இவ்வேலைகளை
செய்யலாம் என காந்திஜி சொல்கிறார். சந்திர சங்கர் சுக்லாவுடன் மஷ்ருவாலாவும் இவ்வேலையில் சேர்ந்துகொள்ளப்படலாம் என ஸ்டீபன் குறிப்பு தெரிவிக்கிறது.
மதியம்
1.30க்கு பிரிஜ் கிருஷ்ணா மாஸ்டர் தாராசிங் கோபமான அறிக்கையை
படித்துக்காட்டுகிறார். காந்திஜி அனைத்திலிருந்தும் விலகி இமயமலை சென்று ஓய்வெடுக்கட்டும் என அதில் காட்டமாக சொல்லப்பட்டிருந்தது . பிறகு கொஞ்சம் காரட் எலுமிச்சை
ஜூஸ் தரப்படுகிறது. அகதிகள் சிலர் சந்திக்கின்றனர். பிரிஜ் கிருஷ்ணாவிடம் அவர்களை கேட்டறியுமாறு சொல்கிறார்.
அடுத்து அலகாபாத் கலவரம் குறித்த அறிக்கை காந்திஜிக்கு படித்துக்காட்டப்படுகிறது.
மதியம் 2 மணிக்கு நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரேயருக்குள் வருவதாக ஆபாவும் மனுவும் சொல்லி செல்கின்றனர் மாலை உணவை கல்யாணசுந்தரம் தந்ததாக சொல்கிறார்.
வழக்கமாக காந்திஜியின் பேட்டிகள்
மதியம் 2.15க்கு நடக்கும். புகழ்வாய்ந்த புகைப்படைகலைஞர் மார்கரெட் போர்க் ஒயிட் லைப் பத்திரிகைக்காக காந்திஜிடம்
பேட்டி கண்டார். அப்பெண்மணி 125 வயது வாழ விருப்பம்
என்பீர்களே எந்த நம்பிக்கையில் என்றார். ஆச்சரியப்படுத்தும்படி நம்பிக்கை
இப்போது
இல்லை என்றார் காந்திஜி. உலகில் நடக்கும் கொடுமைகள்
காரணமாக, இருளில் வாழ நான் விரும்பவில்லை என்றார்.
அடுத்து பேராசிரியர் என் ஆர் மல்கானி வந்தார். அவர் பாகிஸ்தானின் துணை உயர் கமிஷனராக சிந்து பகுதியில்
இந்துக்களின் துயரை எடுத்துரைத்தார். நான் சொல்வதைக் கேட்டிருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கும். நான் பேசுவது இப்போது போவதில்லையே. ஆனாலும் நான் உண்மை என நினைப்பதை
சொல்லியே வருகிறேன்
என்றார். நான் வழக்கொழிந்தவனாக ( back number) இருக்கிறேன் எனவும் காந்திஜி கூறினார். பாப் ஸ்டிம் சன் பிரேயருக்கு முன்னர் பி பி சி சார்பில் சில கேள்விகளை
கொடுத்திருந்தார். வரலாற்று ஆசிரியர் ராதாகுமார் முகர்ஜி வந்தார்.தான் எழுதிய
புத்தகம் ஒன்றை தருகிறார். பைசனிடம் சொல்லி பயணத்திற்கு பேரா முகர்ஜியின் புத்தகத்தை
வைக்கச்சொல்கிறார்.
டாக்டர் டி சில்வா சிலோன் பிரதிநிதி தனது மகளுடன் வருகிறார் தங்களின் பிப்ரவரி
4க்கான சுதந்திரம்
குறித்து செய்தி ஒன்றை கேட்டார்.
அவரின் மகளுக்கு காந்தி ஆட்டோகிராப்
போட்டார். அதுதான் அவரின் கடைசி ஆட்டோகிராப் ஆக அமைந்தது என ஸ்டீபன்
பதிவு செய்கிறார். இரண்டு பஞ்சாபியர்கள் ஹரிஜன்களின் அவதி குறித்து காந்தியிடம் எடுத்து சொன்னார்கள்.
மதியம் 3 மணிக்கு வந்த பேராசிரியர் ஒருவர் நீங்கள் போதிப்பதைத்தான் புத்தர் போதித்துள்ளார் என்றார். 3.15க்கு பிரஞ்சு புகைப்படகலைஞர் ஆல்பம் ஒன்றை தந்தார்..
அடுத்து சீக்கியர்கள் சிலர் வந்து பிப்ரவரி
15 அன்று மாநாட்டிற்கு தலைவர் ஒருவரைத்தர வேண்டினர்.
தான் செய்தி அனுப்புகிறேன். ராஜேந்திர
பிரசாத் அவர்களை அழைத்துக்கொள்ளுங்கள்
என்கிறார் காந்திஜி. படேல் வருவார் எனச்சொல்லி
மாலை 4 மணியுடன் பேட்டியை முடித்துக்கொள்கிறார்..
படேல் வந்தபோது பாத்ரூமில்
இருந்தார் காந்திஜி.
மறுநாள் சனிக்கிழமை வார்தா செல்ல பயண ஏற்பாடு செய்திட மீண்டும் பிரிஜ் கிருஷ்ணாவிடம் சொல்கிறார். வார்தா வருவது குறித்து தந்தி அனுப்பட்டுமா எனக்கேட்டதற்கு எதற்கு வீண் செலவு. பிரேயருக்கு
பின்னர் அறிவித்தால்
வானொலி செய்தியாக
அது போய்விடும்
என்கிறார்.
காந்திஜி வெளிவந்தவுடனேயே படேலுடன் உரையாடத் துவங்கிவிட்டார். படேலோ நேருவோ அமைச்சரவையிலிருந்து விலகிகொள்ளவேண்டும் என நினைத்தேன்.
மெளண்ட்பேட்டன் இருவரும் அவசியமானவர்கள் என்றார். பிரச்சனை இருவருக்கும் இருக்கும் என்றால் வார்தா போவதை தள்ளிக்கூட போடலாம், பிரேயரில் இது குறித்து சொல்லவிரும்புகிறேன் என படேலிடம் தெரிவித்தார்.
கத்தியவார் தலைவர்கள்
வந்து காந்திஜியை
பார்க்கவேண்டும் எனக் கோருகிறார்கள். மனு காந்தியிடம் தெரிவிக்கிறார். நான் உயிருடன் இருந்தால்
பிரேயருக்கு பின்னர் பார்க்கலாம் என காந்திஜி சொல்லி
அனுப்புகிறார். காந்திஜிக்கு அப்போது ஆட்டுப்பால், காய்கறி சூப், ஆரஞ்சு, காரட் ஜூஸ் எனத் தருகின்றனர்.
காந்திஜி தனது ராட்டையைக் கேட்கிறார்.
அது அவரின் கடைசி ராட்டை சுற்றலாக அமைகிறது எனவும் ஸ்டீபன் தெரிவிக்கிறார்.
யுஎன் தேபர், ரசிகலால் பரேக், வின்செண்ட்
ஷீன் ஆகியோர் பின்னர் வந்ததால் அன்று காந்திஜியை பார்க்கமுடியாமல் ஏமாந்தனர்.
கோட்சே தனது புராண டெல்லி ரயில்நிலைய ஓய்வு அறை 6ல் தங்கியிருந்தார். இணை சதிகாரர்கள் ஆப்தே விஷ்ணு கர்கரே ஆகியவர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். காந்திஜி பிரேயர் மேடைக்கு வரும்போது 35 அடி தூரத்திலிருந்து சுடமுடியும்
என்கிற நம்பிக்கை
அவர்களுக்கு இருந்தது.
கோட்சே சுடவேண்டும்.
மற்ற இருவரும் எவரும் அதை தடுக்காவண்ணம் பாதுகாக்கவேண்டும் என்பது திட்டம். மதியம் கிளம்பி மூவரும் பிர்லா மந்திர் செல்கின்றனர். மாலை 4.30க்கு புதிய காக்கி உடையை கோட்சே அணிந்துகொள்கிறார்.. காக்கி வெர்ச்ஸ் காதி போல் நிகழ்வு இருந்தது என ஸ்டீபன் இதை வெளிப்படுத்துகிறார். ஜகதிஸ் பிரசாத் என்பவரிடம்
கோட்சேவும் ஆப்தேவும்
பிஸ்டலை ரூ 500க்கு குவாலியரில்
பெற்று டெல்லி வந்ததாக பியாரிலால்
தெரிவிக்கிறார்..
தனது மகள் மனிபெனுடன்
படேல் சரியாக 4 மணிக்கு வந்தார். நேரு அமைச்சரவையிலிருந்து படேலை விலகச் சொல்லிவிடலாம் எனக்கூட காந்திஜி கருதினார். பட்டேலுடன்
காந்திஜி உரையாடிக்கொண்டிருந்தபோது ஆபாவும் மனுவும் திரும்பினர்.
அவர்கள் பிரேயருக்கு
நேரமானதை மனிபென்னிடம் சுட்டிக்காட்டினர். காந்தி பாத்ரூமிற்கு சென்று நேரடியாக பிரேயர் மைதானத்திற்கு கிளம்பினார்.
சுமார் 250 எண்ணிக்கையில் மக்கள் கூடியிருந்தனர்
என்பது கல்யாணசுந்தரம் தரும் தகவல்.
பிரேயர் நிகழும் பிர்லா மாளிகை மைதானத்தில் அன்று ஆயிரம்பேர்
திரண்டு இருந்ததாக ராமமூர்த்தி அவர்களின் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. காந்திஜி வந்துவிட்டார் என குரல்கள் எழத்துவங்கின. இரு பெண்களின் தோள்களை துணையாகக் கொண்டு காந்தி சுறுசுறுப்பாக நடந்து வந்தார். அவருக்கு இடப்பக்கத்தில் தாம் வந்ததாக கல்யாணசுந்தரம் சொல்கிறார். ஏன் நேரமானதை சொல்லவில்லை என அப்பெண்களை காந்தி கடிந்துகொண்டே நடந்தார்..
காந்திஜியிடம்
பிரேயருக்கு நேரம் கடந்து வருவதை சுட்டும் வண்ணம் தங்கள் இடுப்பில் ஆடும் கடிகாரம்
கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது என்றார் ஆபா. காந்திஜி அதை நான் ஏன் பார்க்கவேண்டும்.
இரண்டு டைம்கீப்பர்கள் ஏன் இருக்கிறீர்கள் என வினவினார். லேட் ஆகிவிட்டது.
இப்படித்தான் காரியங்களை
செய்கிறேன் என காந்திஜி சொன்னார்..
மிகமுக்கியமான விவாதத்தில்
குறுக்கிட்டு சொல்லமுடியவில்லை என மனுகாந்தி பதில் சொன்னார். கடவுளே வந்து தடுத்தாலும் சரியான நேரத்தில் தாதி மருந்து
தரவில்லையெனில் நோயாளி இறந்துவிடுவார் என்றார். ஒருநிமிடம் தாமதமாக பிரேயருக்கு வந்தாலும்
சங்கடமாக உணர்கிறேன் என்றார் காந்திஜி. இது அவரது இறுதி சம்பாஷனையாக இருந்தது என ராமமூர்த்தி
சொல்கிறார்.
காந்திஜி சில அடிகள்
நடந்திருப்பார். நாதுராம் கோட்சே தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முன்வருகிறார் என
எவரும் அறிந்திருக்கவில்லை. காலில் குனிந்து வணங்க முயற்சிக்கிறார். காலதாமதமாக செல்கிறோமே
என்கிற பதைபதைப்பில் ஆபா வழியை சரிசெய்ய முயற்சிக்கிறார். அம்மனிதன் முரட்டுத்தனமாக
ஆபாவை தள்ளிவிட்டார். கையில் இருந்த எச்சிற்படிகம், ஜெபமாலை(spittoon, rosary) கீழே விழுந்தன.
கையில் எடுத்துக்கொண்ட பிஸ்டலால் கோட்சே சுடுகிறார். இரண்டு
குண்டுகள் காந்திஜி மார்பின் வலப்புறத்திலும் , ஒரு குண்டு வயிற்றின் வலப்புறத்திலும்
பாய்ந்தன. அவருக்கு வரலாறு வித்தியாசமான ’நமஸ்காரை’ நாதுராம் கோட்சேவிடமிருந்து செய்தது என்கிறார் ராமமூர்த்தி. காந்திஜியின் கண்ணாடியும் காலணியும் கீழே விழுந்தன..
நேரு அலுவலகத்திற்கு தான் தொலைபேசியில் அழைத்து செய்தியை சொன்னதாகவும், கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு காரில் ஏறி பட்டேல் வீட்டிற்கு
சென்று செய்தி சொன்னதாகவும் கல்யாணசுந்தரம் தெரிவிக்கிறார். காந்திஜி வீழ்ந்த இடத்தின் மண்ணை புனிதமாக மக்கள் எடுத்து செல்லத்துவங்கினர். அந்த இடம் பள்ளமாகிவிட்டது. ஹே ராம் என அவர் கூறி சாயவில்லை எனவும் கல்யாணசுந்தரம் தெரிவிக்கிறார்.
பியாரிலால் பதிவில் இரண்டாவது மூன்றாவது
குண்டை தாங்கும்வரை
அவர் கால்கள் வீழவில்லை. அவர் ராமா ராமா என வீழ்ந்தார் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்மோகன் காந்தியும்
’ராம் ராம்’ என்றே முணகினார் என்கிற பதிவைத்தருகிறார்.
மக்களுக்கு நமஸ்கார் செய்ய உயர்த்தியபடி ஒரு கரமும் மற்றொன்று
ஆபா தோள்மீதும்
வீழ்ந்தது. சந்த்வாணி டாக்டருக்கு
போன் செய்யுங்கள்
என ஓடிவந்தார்.
காந்திஜிக்கு பின்னால் வந்துகொண்டிருந்த ஹார்டிங்கே
மெடிக்கல் கல்லூரி டாக்டர் தன் மடியில் வீழும் காந்தியின் உடலை தாங்கி தலையை மெதுவாக கீழே வைத்தார். அவர் அமரும் மெத்தையில்
அவரை மெதுவாக தூக்கி வந்தனர். சுடுநீரும் தேனும் கொடுக்க முயற்சித்தனர். விழுங்கவில்லை. உடனடி சாவாக அது இருந்தது. டாக்டர் பார்கவாவும் சோதித்துவிட்டு 10 நிமிடம் ஆகிவியிருக்கும் என்றார். ஆபாவும் மனுவும் அலறி அழுதனர். ராம நாமம் உச்சரித்தனர். சர்வ மதங்களின் பாடல்களை வந்த சீக்கியர், இஸ்லாமியர் மற்றவர்
பாடினர்.
சர்தார் வந்தார். பின் நேரு வந்து தேம்பி அழுதார் படேல் அவரை சமாதானப்படுத்தினார். தேவதாஸ் அழுதுகொண்டே வந்தார். காந்தியின் கரங்களைப்
பற்றிக்கொண்டு அழுதார். மெளலானா, ஜெய்ராம்தாஸ், ராஜ்குமாரி
அமிரித், கிருபளானி,
முன்ஷி வந்தனர். மெளண்ட்பேட்டன் மெட்ராஸிலிருந்து விமானம் மூலம் திரும்பினார். மெளண்ட்பாட்டன் நுழைந்தபோது முஸ்லீம் ஒருவன் கொன்றுவிட்டான் என எவனோ ஒருவன் சொல்லக்கேட்டு ’முட்டாள் கொன்றது இந்து’ என அனைவருக்கும் தெரியும் என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார்.
நேரு படேல் இருவரையும்
மெளண்ட்பாட்டன்
அழைத்து நீங்கள் ஒன்றாக செயல்படவேண்டும் என்பது காந்திஜியின் கடைசிவிருப்பமாக இருந்தது என்றார். இருவரும் அவரின் வேண்டுகோள் ஏற்று வானொலியில் உரையாற்றினர். அவரது உடலை பதப்படுத்திவைக்கலாமா என்ற பேச்சு வந்தபோது காந்திஜி அதைவிரும்பமாட்டார் - எரியூட்டப்படுவதையே விரும்பினார் என அறிந்த மெளண்ட்பாட்டன் அவரது விருப்பத்தை மதிப்போம்
என்றார்.
அவுரங்கசேப்-துக்ளக் சாலை சந்திப்பில் கோட்சே வைக்கப்பட்டிருந்தார்.
சிலர் அவரை தாக்கியிருந்ததால் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்தது.
தனக்கு காந்திஜியை கொலை செய்தத்தில் எந்த வருத்தமும் இல்லை, மற்றவற்றை நீதிமன்றத்தில்
தெரிவிப்பேன் என பத்திரிகையாளரிடம் கோட்சே சொல்லிக்கொண்டிருந்தார். போலீசார் அவரிடம்
யாரும் செல்லவேண்டாம் என தடுத்தனர். கோட்சேவிடம்
Beretta automatic பிஸ்டலும் ரூ 400 பணமும் இருந்தன என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது
என்கிற பதிவை ராமச்சந்திர குஹா செய்துள்ளார்.
காந்தி கதர்துணியில் படுக்கவைக்கப்பட்டிருந்தார். எங்கும்
மின்வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருந்தது. மகாத்மா காந்திக்கு ஜே என்கிற முழக்கமும் அழுகையும்
கேட்டுக்கொண்டிருந்தது.. விடியற்காலை 2 மணிக்கு அவரின் உடலை குளிப்பாட்ட எடுத்து சென்றனர்.
1919 முதலே காந்திஜியுடன் பழக்கத்தில் இருந்த பிரிஜ் கிருஷ்ணா தான் குளிப்பாட்டினார்.
ஜனவரி மாதம் உறைகுளிரில் விடியற்காலை 2 மணிக்கு ஒருநாளும் காந்திக்கு செய்யாத குளிர்நீரில்
குளிப்ப்பாட்டிவிடுகிறோமே எனச் சொல்லி அழுதார். இரத்தம் தோய்ந்த அவரது ஆடையை மேல் கம்பளியை
தேவதாசிடம் தந்தார். அவை பொத்தல்களுடன் இருந்தன. வழக்கமான அரைஆடை உடுத்தப்பட்டது. அவரது
ராமநாம ஜபமாலை, மாலைகள் அணிவிக்கப்பட்டன. திலகம்
இடப்பட்டது. சாவிற்கு அஞ்சாது அவர் உறங்குவது போலவே இருந்தது.
Ref:
1. The Last Phase vol 2 Pyarelal
2. The Last Hours Of Mahatma Gandhi By Stephen Murphy
3. From The Pages of Hindu Mahatma Gandhi The Last 200 days V Ramamurthy Rtd IAS
4. Gandhi The
Years That Changed The World 1914-48
Ramachandra Guha
5. Mohandas A
True Story of A Man, His People and an Empire
Rajmohan Gandhi
6. The Last Day Of Mahatma Gandhi V Kalyanam
.
.
மிகச் சிறப்பான எழுத்துக்ககள்.
ReplyDeleteகடைசி வார்த்தை அவருடைய முரு வாழ்க்கைகையின் தன்மையை வெளிப்பபடுத்துகிறது.
சாவிற்கு அஞ்சாது உறங்குவது போன்று இருந்தது.. அருமை
Thank You
Deleteஅருமை சார்.
ReplyDelete