https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, January 1, 2019

அம்பேத்கரின் ஆளுமைப் பயணம் Making of Ambedkar


                  அம்பேத்கரின் ஆளுமைப் பயணம்
-    ஆர்.பட்டாபிராமன்
(கடலூர் NFTE நடத்திய 125 வது  பிறந்த தினகூட்ட சொற்பொழிவு ஏப்ரல் 15 2016-    உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்)
 அம்பேத்கர் மகத்தான சமூகப்போராளியாக எப்படி உருவானார், எவற்றை உருவாக்க விரும்பினார் என்பதை இன்றைய நாளில் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அவரின் எழுத்துக்களின் தொகுப்பில் பத்தாயிரம் பக்கங்களாவது நமது தொடர்தேடலுக்காக காத்து நிற்கின்றன.
பிரித்தானியர் வருகைக்கு முன்பான இந்திய சமூகம் தொடர்ச்சியான ஒரே நாடாகா இருந்ததா- தொடர்பறா சமூகமாக விளங்கியதா என்பதைப் பற்றி முற்கால புராதன இந்தியா குறித்து ரொமிலா தாப்பர் உள்ளிட்டவர் தங்கள் ஆய்வுகளை தந்துள்ளனர். பிரிட்டிஷாருக்கு இந்திய நாடு பெரும் சுரண்டல்காடாக இருந்ததுடன் பல ஆய்வுக்களனாகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும் இருந்தது. வாழ்க்கைமுறையில் உணவு, உடை, மொழி, கலாச்சார வித்தியாசங்களை அவர்கள் கண்டனர்.  தங்கள் அய்ரோப்பிய கலாச்சாரத்தின் பெருமைதனை உணரத்தக்க  சமூகத்தட்டு ஒன்றை அவர்கள் ஏற்படுத்த முனைந்தனர். நம்து மொழியைக்கூட அவர்களில் சிலர் கற்றனர். நம்க்கு வீரமாமுனிவர். ஜி யு போப் போன்றவர்கள் கிடைத்தனர்.
பிரிட்டிஷார் வரவால் இந்தியர்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வரத்துவங்கின. ஆங்கிலமொழி அறிவால் மேற்கத்திய கருத்துக்களின் செல்வாக்கு படரத்துவங்கியது. பிரஞ்சு புரட்சி, பிரிட்டிஷ் நாடாளுமன்றமுறை, அமெரிக்க விடுதலைப்போர், இத்தாலியின் மாஜினி கரிபால்டி, சோவியத் புரட்சி என பல்வேறு தாக்கங்களுக்கு இந்தியர்கள் தொடர்ந்த பல ஆண்டுகளில் உள்ளானார்கள். மேற்கு எழுத்துக்களால் பாதிக்கப்படாத முன்னணி தலைவர்களே இல்லை எனலாம். ஆங்கிலேயர் உதவியுடன் இந்திய சமூகத்திற்கு தேவைப்பட்ட சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளும் நடந்தேறின. ராஜாராம் மோகன் ராய் போன்றவர் இதில் பெரும்பங்காற்றினர். பிரம்மசமாஜம் ஆரிய சாமாஜங்கள் உருவாயின. தாகூர் மூத்தோர்கள் இவற்றில் ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர், மராட்டியத்தில் பூலே தம்பதிகளின் சிந்தனைகள் தாக்கத்தை உருவாக்கின. சமஸ்தான மன்னர்கள் சிலர் ஆங்கிலம் கற்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் நின்றனர். பரோடா மன்னர் கெய்க்வார்டு அத்தகையவர்களில் ஒருவராக இருந்தார். மகாத்மா பூலே சாதிக்கொடுமைகளை சாடிப்போராடினார். பிராம்மண எதிர்ப்பு போராட்டமாகவே அவை அமையமுடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி அறிவு மேம்பாடு, நாகரீகமான இருப்பிட சூழல், அடிமைப்போல் உழைக்கும் நிலையை மாற்றல், எதிர்க்கவேண்டியவைகளுக்கு மெளனம் கலைத்து போராடுதல்  என்பதற்கான போராட்டக்களத்தை பூலே அமைத்தார்.
தமிழகத்தில் அயோத்திததாசர் பண்டிதர் ஒரு பைசா தமிழன் என்கிற பத்திரிகை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், பெரியார் என்கிற பெரும் ஆளுமைகள் தமிழகத்தில் இப்போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த இந்திய சூழலில்தான் அம்பேத்கர் பிறக்கிறார். வளர்ந்துவருகிறார். அவரின் மூதாதையர்கள் இரத்தினகிரி மாவட்டத்தில் மஹர் என்கிற பிரிவைச் சார்ந்தவர்கள். 1890களில் அவர்கள் குடும்பம் பிரிட்டிஷ் இராணுவ ஆளெடுப்பில் வாய்ப்பை பெற்றனர். மஹர் என்பதற்கு பொதுவாக தாய்வீடு என்கிற பொருள் உண்டு. தாய் வீட்டில், பிறந்தவீட்டில் இருக்கிறோம் என்கிற பெருமித அடையாளமது. ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களாக சிலருக்கு வாய்ப்புக்கிடைத்தது. முதல் உலகப்போர் காலத்தில் மஹர் பட்டாலியன் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. மஹர் இனத்தாருக்கு சேரும் செல்வாக்கு சிலருக்கு கண்களை உறுத்தியது. அவர்கள் கிரிமினல் டிரைப் என சில சாட்சியங்களை எடுத்துக்காட்டி இராணுவவேலைக்கு சேர்த்தல்கூடாது என சட்டம் கொணர சிலர் போராடினர். திலக்ர்கூட ஆதரவாக பேசினார் என்கிற செய்தி கிடைக்கிறது. இதனால் அரசாங்க வேலை என்கிற வாய்ப்பு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தடைப்பட்டது. விவசாயவேலையும் பெரும் பலனை தரவில்லை.
அம்பேத்கரின் தந்தை ராம்ஜி இந்தப்பிரச்ச்னையை புகழ்பெற்ற மகாதேவ் ரானடே அவர்களிடம் எடுத்து சென்றார். ரானடே, கோகலே ஆகியோருக்கு ஆங்கிலேயர்களிடம் மரியாதை இருந்தது. காந்திக்கு முன்பான பெரும் தலைவர்களாக திலகருடன் சேர்த்து அறியப்பட்டவர்கள். பின்னாட்களில் அம்பேத்கர் இவர்கள் அனைவருடனும் கருத்து மோதல் செய்தார். காந்தியுடன் ஆனாலும், கம்யூனிஸ்ட்களுடன் ஆனாலும் அவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி போராடுபவராக இருந்தார். ரானடே தலையீட்டால் மஹர் பிரிவினர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அம்பேத்கர் வளர்ந்து புகழ்வாய்ந்த எல்பின்ஸ்டன் கல்லூரிக்கு செல்கிறார்
மஹர் சமூகத்திலிருந்து முதல்முறையாக வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகம் ஆய்வுகளின் முன்னோடி கல்விநிறுவனம். அங்கு அம்பேத்கர் தனது மிகமுக்கிய ஆய்வறிக்கைகளை வெளியிடுகிறார். வர்த்தகரீதியாக ரூபாயின் மதிப்பு  என்பது வருகிறது, இந்தியாவில் சாதிகள்  எனும் புகழ்வாய்ந்த செவ்வியல் தாக்கம் நிறைந்த அறிக்கை இந்தியன் ஆண்டிக் எனும் பழமைகளை- வரலாறுகளை பதிவு செய்யும் இதழில் வெளியாகிறது.

 இந்தியத் தலைவர்கள் பலரையும் போல அம்பேத்கரும் மேற்கித்திய சிந்தனைகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறார். அவர் மறைவதற்கு  முன்னர் 1952ல் என்னுடைய ஒட்டுமொத்த அறிவிற்கும் நான் யாருக்காவது கட்மைப்பட்டிருக்கிறேன் என்றால் அந்த அறிவார்ந்த கடனுக்குரியவர்(Intellectual debt) ஜான் பிரடெரிக் துவெ ( John Frederik Dewey) என தெரிவிக்கிறார்.  தனது அமெரிக்கப் பயணத்தின்போது அவரை சந்திக்கவும் அவர் விருப்பமாக இருந்தார். ஆனால் பேராசிரியர் ஜான் துவே ஜூன் 1952ல் மறைந்துவிடுகிறார். பேராசிரியர் செலிகன்  என்பவரும் செல்வாக்கு செலுத்தியவர்.
இரண்டு முக்கிய முழக்கங்களை அம்பேத்கர் மேற்கித்திய சிந்தனை மரபிலிருந்து, புரட்சிகளின் வரலாற்றிலிருந்து எடுத்துக்கொண்டார்.  சுதந்திரம், சம்த்துவம், சகோதரத்துவம் என்கிற பிரஞ்சு புரட்சியின் புகழ்வாய்ந்த முழக்கம், இந்த வாச்கத்தை அம்பேத்கர் தொடர்ந்து முழங்கிவந்தார். இந்திய தன்மையில் இதன் பொருள் என்ன என்பதை ஆழமாக விளக்கியுள்ளார். இரண்டாவது முழக்கம் , தமிழகத்தில் அவர் சிலையுள்ள இடங்களில் எல்லாம் காணப்படும் முழக்கமான கற்பி, ஒன்று சேர், போராடு ( Educate, Organise, Agitate)  .  இம்முழக்கம் Fabian Socialist கள் வெளிப்படுத்திய முழக்கம். மார்க்சியவகைப்பட்ட சோசலிச சொல்லாடல்கள் நமக்கு பழக்கமானவையாக இருக்கும். ஜெயபிரகாஷ், நரேந்திரதேவ் போன்றவர்கள் டெமாக்ரடிக் சோசலிசம்  எனப்பேசினர்.  இங்கிலாந்தில்  வெப், கோல், பெர்னாட் ஷா போன்றவர்கள் புகழ்வாய்ந்த பேபியன் சோசலிஸ்ட்களளாக இருந்தனர். அன்னிபெசண்ட் கூட தன் இளமைப்பருவத்தில் இத்தலைவர்களுடன் பணியாற்றி சோசலிச தாகம் கொண்டவராக இருந்தார்.
 பொருளாதார அறிஞர்களுக்கு லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் பெருமைக்குரிய ஒன்று. இந்த லண்டன் பொருளாதாரப்பள்ளியையும் பேபியன் தலைவர்கள்தான் நிறுவினார்கள். அங்கே அம்பேத்கர் செல்கிறார், கற்கிறார்.
 லாகூரில் 1922ல் சற்று முற்போக்கான ஜாட் பட் தோடக் மண்டல் சாதி எதிர்ப்பு நிறுவனமாக உருவானது. ஆர்ய சமாஜ் உடன் அதற்கு மோதல் போக்கு ஏற்பட்டது.1931ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதியை சொல்லாதே என்கிற இயக்கத்தை மண்டல் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 1936ல் அவர்களது ஆண்டு மாநாட்டிற்கு தலைமை உரையாற்ற  அம்பேத்கரை அழைத்திருந்தனர். இது தொடர்பான கடிதப்போக்குவரத்து மண்டல் நிர்வாகிக்கும் அம்பேதக்ருக்கும் நடந்தது. உடன்பாடின்மை காரணமாக அம்பேத்கரால் அங்கு உரையாற்றமுடியாமல் போனது. அப்படைப்பு இன்று மிகவும் புகழ் வாய்ந்த ஒன்றாக கருதப்படும்   சாதியை ஒழிக்க வழி Annihilation of Casteஆகும்.
 அம்பேத்கர் ஒருவிஷயத்தில் மிகத்தெளிவாக இருப்பார். பலநாட்கள் கண்விழித்து ஆய்வு செய்து  சரி என வந்தடைந்தவற்றை மாற்ற அவர் சம்மதிக்க மாட்டார். ஆய்வில்லாமல் எச்சொல்லையும் அவர் பயன்படுத்துவதில்லை. பிறருக்கு எரிச்சல் தருகிறது என்பதற்காக எதையும் மாற்றமாட்டார். இப்படிப்பட்ட தீவிர கமிட்மெண்ட் அவரது எழுத்துக்களில் இருக்கும்.
ஆற்றப்படமுடியாமல் போன அவ்வுரை லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, விவேகானந்தரின் சிகோகோ உரை போன்றவைகளுக்குரிய மரியாதையை பெறத்தக்கதோர் உரை என கருதப்படவேண்டும். செவ்வியல்தன்மை கொண்ட நூலாக அதைப் பார்க்கவேண்டும். அருந்ததிராய் காந்தியையும் முன்வைத்து  Doctor and the saint என இப்புத்த்கம் பற்றி விரிவாக விவாதித்துள்ளார்.
 அம்பேத்கர் தன்னளவில் பத்த்ரிகையாளராகவும் போராடியுள்ளார். மூக்நாயக் என்கிற வாய் அடைக்கப்பட்டோரின் குரல் எனும் பத்திரிகை, பகிஷ்கரித் பாரத், மூன்றாவதாக ஜனதா என்கிற பத்திரிகை. ஜனதா எனும் பத்திரிகையை பின்னர் சோசலிஸ்ட்களும் நடத்தினர். லோகியா, ஜெயபிரகாஷ், பேரா மதுதண்டவதே ஆகியோர் ஆசிரியராக இருந்துள்ளனர். அரசு சட்டக் கல்லூரியின் பேராசிரியராக அம்பேத்கர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் முதல்வராகவும் ஆனார். சைமன் கமிஷனில் சாட்சியம் சொல்ல வாய்ப்பு பெற்றார். வட்டமேஜை மாநாடுகளில் தனித்த த்ன் வாதங்களை வைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் தலித்களுக்கு தனித்த வாக்குரிமை என்பதையும் தரவேண்டியிருந்தது. காந்தியின் பட்டினிப்போராட்டம் , தலித்களுக்கு தனித்த இடங்கள் பொது வாக்குரிமை என்கிற பூனா உடன்பாடுவரை அது சென்றது.
இந்தியாவிலும் பிரிட்டிஷ் லேபர் பார்ட்டியைப் போன்ற ஒன்றை இந்தியாவிலும் சோதிக்க அம்பேத்கர் விரும்பினார். ILP கட்சி உருவாக்கி சோதித்தார். பின்னர் தனித்த தலித்களுக்குரிய பிரத்யேகமான செட்யூல்ட் ஃபெடரேஷன்  SCF உருவாக்கினார். கிருபளானி, ஆச்சார்யா நரேந்திரதேவ் போன்றவர்கள் கூட அம்பேத்கருடன் உடன்பட்டு செயல்படவிரும்பினார்கள். அம்பேத்கர் காந்தியுடன், சோசலிஸ்களுடன், கம்யூனிஸ்ட்களுடன், பெரியாருடன் இன்னும் இந்துத்துவா பேசிவந்த தலைவர்களுடன் கூட தன் உரையாடலை நடத்தியிருக்கிறார். இந்தியாவில் முஸ்லீம்கள், பாகிஸ்தான் பிரச்சனை போன்ற ஆய்வுகளை அம்பேத்கர் நடத்தியிருக்கிறார்.
 அமபேத்கர் காந்திஜி பயன்படுத்திய ஹரிஜன் என்பதை பயன்படுத்தவில்லை. அவர் டி சி (  depressed class) என்ற பதத்தைப் பயன்படுத்தினார். அவர் வைஸ்ராய் கவுன்சில் மெம்பராக இருந்தபோது ஏராள தொழிலாளர் பிரச்சனைக்ளைக் கையாண்டுள்ளார்.
 அம்பேத்கரின் இந்தியாவில் நாணயம் என்கிற ஆய்வுதான் ரிசர்வ் வங்கி சட்டம் உருவாக வழிவகுத்தது. அதேபோல் நிதிக்கமிஷன் என்கிற மத்திய மாநில நிதி உறவுகளுக்கான அமைப்பு உருவாகவும் அவரது ஆய்வுகள் அடிப்படையாக இருந்தன. பட்டேலுக்கு சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் என்கிற புகழ் கிடைத்தது. இந்தியா ஒற்றை அரசாக இருக்கவேண்டுமா- மாநிலங்களின் சம்மேளனமாக இருக்கவேண்டுமா என்கிற விவாதத்தையும் முன்னெடுத்தவர் அம்பேத்கர்.
 அரசியல் சட்ட உருவாக்க அசெம்பிளி விவாதங்கள் வால்யூம்களாக பதிவாகியுள்ளன. அங்கு இருந்தவர்கள் எல்லோரும் தங்கள் வாதங்களை வலுவாக வைக்கும் ஆற்றல் நிறைந்தவர்கள்.  வரைவுக்குழு தலைமை பாத்திரத்தில் உரிய விளக்கங்களை முன்வைத்து அரசியல் அமைப்பு சட்டம் அற்புதமாக எழுதப்பட தன் தூக்கத்தை தொலைத்தவர் அம்பேத்கர். அவரின் பல புகழ் வாய்ந்த மேற்கோள்கள் அங்கு உரையாற்றும் போது தரப்பட்டவை. தேசியம் என்பது குறித்தும் பெரும் விவாதம் எழுந்தது. இந்தியா சாதிகளின் கூட்டமைப்பு என அம்பேத்கர் சமூக யதார்த்தத்தை எடுத்துரைத்தார். உட்புகமுடியாத மூடிய சமூகமாக இந்தியா இருந்து வருகிறது என்றார் அவர். இந்திய சமூகம்  ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய சமூகமாக மாறவேண்டும் என அவர் விழைந்தார். காம்போசிட் கல்ச்சர் எனபதும் சாதியற்ற சமூகம் உருவாகுமா என்பதும் அவரது கேள்வியாக இருந்தது.
இப்படியொரு சமூக அமைப்பு உருவாக்கம் என்பதற்கு நூறு ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். இந்தியாவில் மேல்நிலையாக்கம் எவ்வகையில் நடந்துவருகிறது. அனைவரும் மத்தியதரவர்க்கம் என்கிற பொருளாதார நிலை ஏற்பட்டு அது சமூக உறவில் ஜனநாயக வெளியை உருவாக்குமா என்பதே அம்பேத்கரின் கவலையாக இருந்தது.
அம்பேத்கர் இந்துமதத்தை கடுமையாக சாடியிருந்தாலும் அவர் மதத்திற்கு விரோதியல்ல. இந்துமதம் சூப்பர் மனிதர்களின் சொர்க்கமாக இருக்கலாம்- சாதாரணமானவர்க்கு அது சாக்கடையாக இருக்கிறது என்றுகூட அவர் எழுதியிருக்கலாம்,  My philosophy is based on Religion only  என்கிற வாக்குமூலத்தை அவர் தருகிறார். ஆனால் அதற்கு சில சிறப்புத்தன்மைகளை அவர் வரையறுக்கிறார். எந்தமதம் வறுமையை போற்றுகிறதோ (ennobling poverty), எந்த மதம் உங்களின் இன்றைய கஷ்டத்திற்கு உங்களின் முன் ஜென்மப் பலன் என காரணம் காட்டுகிறதோ அந்த மதத்தை நான் சகியேன் என்றார். அது மதமே அல்ல என்றார். எந்த மதம் பகுத்தறிவு காரணகாரிய அறிவிற்கு உட்பட்டு நடக்கிறதோ, சமத்துவமாக மனிதனை நடத்துவதற்கு தயவு தாட்சண்யமின்றி போராடுகிறதோ, பொதுவெளிக்குள் அனைத்து மனிதர்களையும் அனுமதிக்கிறதோ அந்த மதம் இருக்கட்டும் என்றார் அம்பேத்கர். பெண்கள் வந்தால் பாதுகாப்பில்லை என சொல்லாமல் எந்த மதம் வரட்டும் பாதுகாப்போம் என அனுமதிக்கிறதோ அந்த மதம் இருக்கட்டுமே என இன்று பேசத்தோன்றுகிறது.
 மார்க்ஸ் கூட அபின் என நிறுத்திக்கொள்ளவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மதம் புகலிடம், நிர்கதியான மனிதனுக்கு ஆறுதல் நம்பிக்கை கிடைக்கும் இடம் என்றார். அம்பேத்கருக்கு மதசார்பின்மை என்பது மதநீக்கம் அல்ல. இந்துக்களுக்கு மட்டும் என்றோ முஸ்லீம்களுக்கு மட்டும் என்றோ சட்டம் இயற்றும் இடமாக நாடாளுமன்றம் இருக்கவேண்டாம் என்பது அவர்தம் நிலைப்பாடு.
சமூகக் கொடுமைகளை அனுபவித்த பகுதியிலிருந்து தான் வந்தாலும் நாட்டில் மாற்றம் வருவதற்கு இரத்தக்களறி கூடாது என்றவர் அம்பேத்கர். சாதி ஒழிப்பு பிரச்சனையில் அவர் கம்யூனிஸ்ட்களுடன் விவாதம் செய்தவர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற முழக்கத்தில் அவருக்கு ஏற்பு இல்லை. இந்தியாவிற்கு நாடாளும்ன்ற ஜனநாயகமே பொருந்தும் என்றவர். அதன் தனித்துவமான மூன்று கூறுகளான நாடாளுமன்றம், மந்திரிசபை, நீதிமன்றம் ஆகியவற்றின் வெற்றி என்பது அவ்வமைப்புகளில் பொறுப்புக்கு வரும் மனிதர்களைப் பொறுத்தே அமையும். எங்களுக்குள் விவாதித்து நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றியிருந்தாலும் அது மனிதர்களைப் பொறுத்தே வெற்றிப்பெறும் என்றார் அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றிய கிரான்விலி ஆஸ்டின் என்பார் எழுதிய  The Indian Constitution: Corner stone of a Nation  என்பதில் அம்பேதகரின் ஆளுமை வியக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமராகவுள்ள திரு மோடி அவர்கள் தன்னைப்போன்ற பாத்திரம் தேய்த்த குடும்பத்து பிள்ளை நாடாளமுடியும் என்பதற்கு அம்பேத்கர் வகுத்த சட்டமே காரணம் என அம்பேத்கர் பிறந்த பகுதி கூட்டமொன்றில் பேசினார். அதைவிடமுக்கியமாக அம்பேத்கரை நவீன மனு என்றழைத்தார். மனுவை வாழ்நாள் முழுக்க எதிர்த்து போராடியவர் அம்பேத்கர்.
நேபாள காத்தமண்ட் புத்த பிக்குகள் கூட்டம் ஒன்றில் மார்க்ஸா புத்தரா என்கிற விவாதத்தை அம்பேத்கர் எழுப்பினார். அந்த உரைக்கு பின்னர் அவர்கள் அங்கே தந்த பட்டம் நவபௌத்தா என்பதாகும்.
 விடுதலை இந்தியாவில் நேருவின் அமைச்சரவையில் அம்பேத்கரும் சட்ட அமைச்சராக பங்கேற்கிறார். நேருவுடன் கருத்து மோதல் ஏற்படுகிறது. இந்து கோடு பில் பிரச்சனையாகிறது. கருத்துவேறுபாட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறார். 1952 தேர்தலில் அம்பேத்கர் தோற்கடிக்கப்படுகிறார். இதுதான் முரண் நிகழ்வு. யார் எதற்காக வாழ்நாள் முழுதும் நிற்கிறார்களோ அதனாலேயே அவர்கள் தோற்கடிக்கப்படுவதும் நிகழ்கிறது. அம்பேத்கர் இராஜ்ய சபாவில் இடம் பெறுகிறார். பாகிஸ்தானில் தீண்டாமை பிரச்சனை அறிந்து ஜின்னாவிடம் பேசிப்பார்க்கிறார்.  All untochables you come to India- I will safeguard you என்கிற வேண்டுகோளை விடுக்கிறார்.
மொழி குறித்த அவரது கருத்துக்கள் முரண்பட்டதாக இருக்கும். இந்தியாவிற்கு பொதுமொழி தேவை எனக் கருதினார். அது இந்தியாக இருக்கலாம் என்றார்.
 அவர் சோசலிசத்திற்கு எதிரானவராக காட்டிக்கொள்ளவில்லை. அரசாங்க சோசலிசம் எனப் பேசினார்.. நிலப்பிரச்சனையில் ஒரு ஏக்கர் என்றெல்லாம் பிரித்துக்கொடுத்தால அவர்களால் அதை காப்பாற்ற முடியாது எனக் கருதினார். கூட்டு பண்ணைகள் என்றார். அங்கு அவர்கள் சம்பளத்திற்கு பணியாற்றலாம். விவசாய சட்டம் வேண்டும் என்றார்.
 இந்தியாவில் சோசலிசம் கொணரவிரும்பும் கம்யூனிஸ்ட்களிடம் மிக முக்கிய கேள்வி ஒன்றை அவர் எழுப்பினார். இந்த நாட்டின் சமூகபிரச்சனையாக சாதியை பார்க்காமல் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் சோசலிசத்தைக் கொணரமுடியுமா என்பதே அக்கேள்வி. ஏன் அரசியல் அமைப்பு சட்டத்தில் சோசலிசம் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி அவரிடம் எழுப்பட்டபோது வழிகாட்டுக் நெறிகளை படித்து புரிந்துகொள்ளுங்கள் அதைவிட சிறந்த சோசலிச பிராஜக்ட் என்ன வேண்டும் என மறுமொழி தந்தார்.
அரசியல் சட்டத்தில் தங்களுக்கு பிடித்த ஷரத்து எது என அவரிடம் கேட்டபோது ஆர்ட் 17- உயிர் வாழும் உரிமை. அதில்தான் தீண்டாமை குற்றம் என்பது இருக்கிறது. ஆர்ட் 15( 4 ) இட ஒதுக்கீடு பற்றியது, ஆர்ட் 16 (4) கல்வி வேலை உரிமை பற்றியது. ஆனால் ஆர்ட் 32 தான் எனக்கு பிடிக்கும் என்றார். அதில்தான்  constitiuional remedy  இருக்கிறது.  எவராக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சனையை எழுப்பவும் தீர்வுகளைப் பெறவும் அந்த ஷரத்து வழி செய்கிறது - சட்டரீதியான மருந்தாகிறது என்றார்.
 இந்தியாவில் விடுதலை காரணமாக  அரசியல் ஜனநாயகம் ஒரு மனிதன் ஒரு வாக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் சமூக மதிப்பு அப்படி இருக்கிறதா- ஒரு மனிதன் ஒரே மதிப்பு இருக்கிறதா என அவர் மிக முக்கிய கேள்வியை  அனைவரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் எழுப்பினார். அப்படி ஒரே மதிப்பு என்பது வராவிடில் இந்திய ஜனநாயகம் இரத்தக் களறியை சந்திக்க நேரும் என்றார். இந்திய குடியரசு நோஞ்சான் களின் குடியரசாக வளராமல் மனிதர்கள் மத்தியில் வறுமை நீக்கப்பட்ட சம சமூக மதிப்புள்ள மனிதர்களின் குடியரசாக வேண்டும் என்கிற பெரும் கனா அவரிடம் இருந்தது.

No comments:

Post a Comment