https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, August 23, 2020

லெனின் ( ரஷ்யாவின் விடுதலை வீரர்)

 

லெனின்

( ரஷ்யாவின் விடுதலை வீரர்)

                                                                       -ஆர்.பட்டாபிராமன்

லெனின் ( ரஷ்யாவின் விடுதலை வீரர்)-  என்கிற சிறு வெளியீடு 1933ல் 2 அணா விலையில் வெளியிடப்பட்டது. தமிழரசு புத்தகாலயம், நெ. 31, வைத்தியநாத முதலி வீதி சென்னை என்கிற முகவரியிலிருந்து இப்பிரசுரம் வெளியானது. நூலை எழுதியவர் திரிசிரபுரம் . நடராஜன் அவர்கள்.


இதற்கான ஒரு பக்க முன்னுரையை பா. பக்கிரிசுவாமி செட்டியார், தமிழாசிரியர் எழுதியுள்ளார். சென்னை - 24-5-1933 என இடம் நாள் காட்டப்பட்டுள்ளது. அவர் முன்னுரையில் தமிழரசு வாரப்பத்திரிகையில் லெனினது வாழ்க்கை, தோற்றம், செயல், குணம் முதலிய விவரங்கள் அனைத்தையும் . நடராஜன் சுருக்கமாக எழுதியதாகவும், டாக்டர் மே. மாசிலாமணி முதலியார் வெளியிட்டு உதவியமைக்கு தமிழுலகம் பெரிதும் கடமையுடையதாகும் எனவும் பக்கிரிசுவாமி செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

பொள்ளாச்சி நசன் அவர்களின் அனைத்து பழமையான இதழ்கள் சேகரத்தில் தமிழரசு மலர் 4 இதழ் 9 செந்தமிழ் மாத வெளியீடு என காட்டுகிறது. இவர்களுக்கு அப்போது அரும்பக்கூடிய நிலையில் இருந்த கம்யூனிஸ்ட்கட்சி தமிழ் இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததா- இவர்கள் லெனின் குறித்து விடுதலைவீரர் எனும் தாகத்தில் மட்டும் விவரம் தெரிந்துகொண்டு எழுதினார்களா என்பதை எல்லாம் ஆய்வாளர்கள் எவரேனும் தெளிவுபடுத்த முடியும்.


இப்பிரசுரத்தில் மார்க்ஸ்ஜர்மானிய அரசியற் பேராசிரியராம் என குறிக்கப்படுகிறார். லண்டனில் லெனின் தங்கிய காலத்தில் பிரிட்டிஷ் முசீயம் நூற்சாலைக்கு சென்று ஓயாது படித்துவந்தார் என அந்த நூலகம் சொல்லப்படுகிறது.

 லெனின் குணம் பற்றி பேசுகையில் நல்லதாய எதனையும் தீமைதான் என்று வாதிக்கும் பொல்லாப் பழக்கமுடையவர்கள் இவ்வுலகிற் பலர்- இவர்களை சீர்ப்படுத்துதலினும்  அப்புறப்படுதலே அறிவுடைமை யாதலான், லெனின் இத்தன்மையினரைக் காணின் அகன்று போய் விடுவர் என்பது இவர்தம் அறிவின் பெருக்கிற்குச் சான்றாகின்றதே தவிர,இழிய செருக்கிற்குச் சான்றாகாமை காண்க என உயர்வாக ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

லெனின் மனநெகிழ்ச்சி யற்றவர் என்றும், வன்மனத்தினர் என்றும் உள்ளுருகும் சிந்தை யிலாதவர் என்றும் மொழிவர். எனினும் சிற்சில நிகழ்ச்சிகள் இதனைப் பொய்ப் படுத்துகின்றனவாம். ஆசிரியரே ஏற்பது போல் லெனின் குறித்து முதலாளி தத்துவ நூல்களே அதிகம் கிடைத்ததால் இக்காட்சியை அந்நூல்களில் இவ்வாசிரியர் பெற்றிருக்கலாம்.

 ஒருவரைப் பார்க்குங்கால், லெனின் தம் வலக்கையால் கண்களை மூடிக்கொண்டு விரற் சந்துகள் வழியாகப் பார்ப்பார். உவல்ஸ் என்னும் ஆங்கில பேராசியரை இங்கனமே பார்த்துவிட்டு எத்துணை விதண்டாவாதி! எத்துணை முதலாளித் தத்துவம் படைத்த சிறிய பேய் என்று மொழிந்தார்.  லெனினை சந்தித்துவந்தபின் The Dreamer in the Kremlin என H. G. WELLS JANUARY 15 1921ல்  ரிவ்யூ ஒன்றை எழுதினார். இந்த புத்தக ஆசிரியர்  உவல்ஸ் என வெல்ஸ் அவர்களையே குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மதம் மக்களுக்கு ஒரு மயக்கப் பொருளாய் இருக்கிறது- அபின் என பொதுவுடைமைக் கட்சியினர் கூறுகின்றனர். இவ்வாசிரியர் இதை சொல்லிவிட்டு இந்து மதம் புத்தமதம் பற்றி பேசுகிறார். இந்து மதம் போன்ற மதங்களில் கடவுளைக் கண்டுபிடி என்று கூறப்படுகின்றதே யன்றி கடவுள் உண்டு என வலியுறுத்திக் கூறுவதாக காணப்படவில்லை.

 புத்தர் கடவுள் உண்டா என வினவியமைக்கு மெளனம் கொண்டு உண்டு- இல்லை எனபதை தெரிந்து கொள்ளுதல் அவரவர்தம் முயற்சியைப் பொறுத்தது எனக் காண்பித்துவிட்டார். யோகிகளும் முயற்சியால் கண்டுபிடி என்கிறார்கள். ஆதலின் மதம் என்பதை மனிதன் தன் உண்மை நிலையை அறிதற்குரிய ஒரு முயற்சியில் துணை கொடுக்கும் ஓர் கலை என்று உணராமல் பிளவு- போராட்டங்கட்கு உபயோகித்துகொள்வது ஏன் என ஆசிரியர் வினவுகிறார்.

கூட்டம் சேர்க்கும்முறையில் நீ கிறிஸ்துவன், நான் இஸ்லாமியன், நீ இந்து, நான் யூதன் என்னும் பன்மையில் ஒருவர் தொண்டையில் ஒருவர் பாய்ந்து உதறுவதற்கு மதம் உளது என மக்கள் கருதுவார்களாயின், மதத்தினும் கொடிய மயக்கச் சரக்கு அயனாட்டு பிராந்தியும் ஆகாமை காண்க என எடுத்து சொல்கிறார் இப்பிரசுர ஆசிரியர்.

 மெய்யறிவில் இலகும் ஒன்றை மக்கள் அந்தோ மதம், சாதி, சம்யம் என்னும் குப்பைகளில் ஆழ்த்திவிட்டனர்... இக்காலத்தில் குரோதத்திற்கு மதத்தினும் பெரிய துணை வேறொன்றுண்டோ எனக் கருதற்பாலதாய் இருக்கின்றது. எனவே லெனின் மதத்தை தம் அரசியல் திட்டத்தினின்றும் அறவே ஒழித்துவிட்டார். மதத்திற்கு இரண்டாவதாக செல்வம், மூன்றாவதாக புகழ் சமத்துவத்திற்குப் பகைமையுடையன எனவும் லெனின் கண்டார். இவற்றையும் ஒழித்தாலன்றி உலக மக்கள் முன்னேற மாட்டார் எனத் துணிபு கொண்டார்.

 இவ்வாசிரியர் லெனின் கையாண்ட கொள்கைகளைலெனின் மதம் எனச் சொல்கிறார். செயலையும் பயனையும் ஒன்றுபடுத்தி நோக்குவார்க்கு ருஷ்ய மதத்தின் மேன்மை புலப்படும் எனச் சொல்கிறார். அக்டோபர் புரட்சியையும் இவ்வாசிரியர் ருஷ்ய மதபுரட்சிப் போராட்டம் என்றே விளக்குகிறார். அப்போதைய நிலையில் லெனின் டிராட்ஸ்கி கருத்துநிலைகளை ஆசிரியர் தொட்டுச் செல்கிறார்.

 அரசர் ஆட்சி அழிபட்டு ருஷ்யாவில் குடியானவர், நிலக்காரர், தொழிலாளர் ஆட்சி அரசாங்கம் நிலவியது.  ஜார் வீழ்த்தப்பட்டு கெரன்ஸ்கி அரசாங்கம் வந்ததைத்தான் இவ்வாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கவேண்டும். லெனினோ இவ்வாட்சி அகற்றப்பட்டு குடியானவர் தொழிலாளர் ஆட்சி நிலைபெற வற்புறுத்தியதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். பிறிதொரு இடத்தில் கிரன்ஸ்கியை குறிப்பிடுகிறார்.

சட்ட வரம்பிற் போவதும் பிரசாரத்தால் மக்களைத் தட்டி எழுப்பி எல்லா மக்களுக்கும் நல்லறிவும் சுதந்திர வேட்கையும் உதித்த பின்னர்தான் புரட்சிப் போரிடுவது என்பதும் வெறும் கதை என லெனின் சொன்னதாக இவ்வாசிரியர் விளக்குகிறார். இப்படியொரு விவாதம் காந்தி நேரு இடையே இங்கும் இந்தியாவில் நடந்துள்ளது.. இந்த சாயலில் கேள்வியை நேரு காந்தியிடம் கேட்டிருந்தார்.

பெரும்பான்மைக் குடியினரால்   நிறுவப்பெற்றுள்ள குடியரசில், தொழிலாளர் குடியானவர் சார்பாய்ப் பிரசாரம் புரிதல் அடாது எனத் தோழர் காமினேவ் எள்ளினார் என்பது சுட்டிக்காடப்பட்டுள்ளது. லெனின் வழி அராஜகம் எனும் அனார்க்கிசம்- சிறுபான்மை ஆட்சி எனும் பிளாங்கிசம் என குற்றம் சுமத்தப்பட்டது. லெனின் பணக்காரர்களின் குடியரசை ஏழை- தொழிலாளர் குடியரசாக நிலைநிறுத்த விரும்புகிறேன் என பதில் தந்தார்.

 அக்டோபர் எழுச்சியை ஆசிரியர் விளக்குகிறார். பெட்ரக்ராட் பரிபாலனம் மாஸ்கோ பரிபாலனம் போல்ஷ்விக் கட்சிக்குட்பட்டன. இங்கு சோவியத் என்பதைத்தான் அவர் பரிபாலனம் என்கிறார். அனைவரும் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள்- வேலை செய்யாதவனுக்கு சோறில்லை- பணக்கடைகள்( பேங்கு) முதல் எல்லா ஸ்தாபனங்களையும் தொழிலாளர் கைப்பற்றி நடத்தவேண்டும் என்றார் லெனின்.

காந்தியடிகள் தர்ம சத்திரங்கள் செய்த தீமை குறித்து பேசியபோது வேலை செய்தால்தான் சாப்பாடு என்பது வரவேண்டும்- வேலை செய்யாவிட்டால் சாப்பாடில்லை என சொல்லவேண்டும் என பேசினார் என்பதை பார்க்கமுடிகிறது.

 இந்த நூலின் ஆசிரியர்  constitutional agitation  சட்ட இயைபு கிளர்சியை விமர்சனக் கண்கொண்டே பார்த்துள்ளார். இந்தியாவிற்கு சட்டத்திற்கு இயைந்த கிளர்ச்சி பொருந்தாக் கூற்றாகின்றது. இங்கு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், லிபரல் கட்சிக்காரர்களும் சட்டத்திற்கியைந்து கிளர்ச்சி செய்யும் கொள்கையைக் கொண்டவர்கள்- இவ்வரி அந்நூலின் 23ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது.

இவ்வாதத்தை நிரூபிக்கச் சட்ட சபைகளில் புகுந்து அமைச்சர் பதவிகளை ஏற்பவர்கள்- போலீஸ் அநீதிகளை கண்டித்து வந்த தீர்மானத்திற்கு எதிராக தலைமை அமைச்சர் பதவி ஏற்ற ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் வோட்டை அளித்தார்- இவ்வரிகள் பக் 24ல் காணப்படுகிறது. சட்ட இணக்கக் கிளர்ச்சி என்பதை நம்புபவர்கள் மண் குதிரைகளை நம்புவர்களை ஒப்பர் என ஆசிரியர் எழுதுகிறார்.

ரஷ்யாவில் இருந்த ஒற்றுமை நம் இந்திய மக்கள் பால் இருக்குமாயின் ரஷ்யாவைப் பார்க்கினும் இந்திய மக்கள் கடிதில் தம் லட்சியங்களைப் பெறலாம். ஒரு நாடு மேம்பட வேண்டுமாயின் அந்நாட்டில் ஒரு தலைவர்தாம் மக்களைப் போராட்ட முறையில் செலுத்தற் கியலும்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் தலைவர் என்று ஏற்றுகொள்ளப்பெற்ற காந்தியடிகளைத் தலைவராக ஏற்க மறுக்கும் சில சிறிய தலைவர்கள் ஏன் காந்தியடிகளைப் போன்று தாமும் செல்வாக்கைப் பெற்று ஒப்பற்று விளங்கலாகாது? உலக அறிஞர்கள் மனதில் குடிகொள்ளலாகாது? எந்த அரசாங்கம் இதற்குத் தடைக் கட்டளை பிறப்பித்துவிட்டது? போராட்டக் காலத்தில் ஒருவரைத் தலைவராய்க் கொள்வதனால் நாம் அவருக்கு அடிமைப்படவர்களாகவில்லை. இவ்வரிகள் 26 ஆம் பக்கத்தில் வருகின்றன.

 அக்டோபர் புரட்சியின் காலத்தில் காமினோவ் சினோவிவ் ஏற்பின்மையை உப்பு சத்தியாக்கிரகத்தின் போது காந்தி முயற்சி பலிக்காது என இங்கு எழுதிய தலைவர்களுடன் ஒப்பிடுகிறார் இந்நூல் ஆசிரியர். லெனின் இதனை கஷ்டமான காலம் கஷ்டமான காலத்தில் கஷ்டமான விஷயங்கள்- இதனை முடிவு செய்யும் முன்னர் கஷ்டமான துரோக சிந்தனைகள் என குறிப்பிட்டதாக நூலாசிரியர் எழுதுகிறார்.

லெனினை சோதிடம் கூறுபவர் என ஏளனம் பேசிய டிராட்ஸ்கி இப்போது தேசப்பிரட்டராய் ஸ்பானிய நாடு சென்று சொந்த நாட்டைத் தாக்கி எழுதி உயிர் வாழ்கின்றார். லெனின் புரட்சி இயக்கத்தில் வெற்றி பெற்று, பொதுவுடைமை ருஷ்யாவை உலகம் வியப்பெய்த நிறுவினார். லெனின் உருவப்படமில்லாத வீடு ருஷ்யாவில் ஒன்றுமில்லை. அந்நாட்டில் கடவுள் நம்பிக்கையில்லை- விடுதலைப் போராடி வெற்றிக்கொடி நாட்டி இறந்து போன லெனின் மீது நம்பிக்கை உண்டு. எதற்கும் நம்பிக்கை வேண்டும். என ஆசிரியர் தனது வரிகளுடன் பிரசுரத்தை நிறைவு செய்கிறார்.

இச்சிறு நூலின் இறுதியில் இன்பசாரம் எனும் தாது விருத்தி இரத்த விருத்தி மாத்திரை மருந்து புட்டிக்கான விளம்பரம் டாக்டர் மாசிலாமணி முதலியார் முகவரியுடன் ( பிரசுர முகவரி) வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து தமிழரசு மாதப்பத்திரிகை இலகுவான இனிய செந்தமிழ் நடையில் படிக்கப் படிக்க இன்பமூட்டும், நினைக்க நினைக்க ஆவேசம் உண்டாக்கும் அரிய கட்டுரைகள் வேண்டுமா- நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், உரிமைவேட்கையும் உண்டாக்கும் உயர் வியாசங்கள் வேண்டுமா- குறைந்த விலையில் தமிழரசு மாதப் பத்திரிகையைப் படியுங்கள் என்கிற விளம்பரம் தரப்பட்டுள்ளது. தமிழரசு தமிழரது புதுவாழ்வில் தணியாத தாகமுடியது- மக்கள் தொண்டே கடவுள் தொண்டு என்ற  கருத்துடையது- சலியாது உழைப்பது என்பதும் அதில் தரப்பட்டுள்ளது.

இந்நூலின் சிறப்பே குறுகிய பக்கங்களில் அன்றிருந்த தமிழ் சூழலை உள்வாங்கி இந்திய விடுதலைப்போராட்ட உணர்வுடன் ருஷ்ய புரட்சி- லெனின் குறித்து மொழி நடை கருத்து நடை கொண்டு அமைந்தது  என்பதே எனலாம்.

 The Russian Revoultion Lancelot Lawton புத்தகம் 1927ல் வெளியானது. இந்த  புத்தகத்தை இந்நூலாசிரியர் ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார். இப்புத்தகம் 500 பக்கங்களுக்கு மேலான ஒன்று. மாக்மிலன் வெளியீடு. அந்நிறுவன வெளியீடுகள் சென்னை, கல்கத்தா, பம்பாய், லண்டன், நியூயார்க் நகரங்களில் கிடைக்க வகை செய்யப்பட்டிருந்தன.

 கீற்று இணைய தள கட்டுரை இசை நாடகத்துறையில் பெரியார் இயக்க கலகங்கள் என்பதில் இந்நூலாசிரியர் பற்றி “ 22.12.1929இல் மதுரையில் நிகழ்த்தப்பட்டதாய்ப் பதிவாகியிருக்கிற (அரங்கேற்றம் எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை) திரிசிரபுரம் .நடராஜன் அவர்களின்சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றிக்குப் பிறகுஎன்கிற செய்தி தரப்பட்டுள்ளது.

 லெனினின் 150ஆம் ஆண்டில் இந்நூல் குறித்து சிறு அறிமுகம் கொடுக்க வாய்ப்பு  அமைந்தது.

23-8-2020

No comments:

Post a Comment