Skip to main content

காந்தி -- மாவோ

 

காந்தி -- மாவோ

                                   -ஆர். பட்டாபிராமன்

காந்தியடிகளை மார்க்ஸ் லெனினுடன் ஒப்பிட்டதுபோல் மாவோவுடனும் ஒப்பீடு செய்யலாம். இந்தப்பணியை Mao Tes Tung and Gandhi  என்கிற ஆக்கத்தின் மூலம் Jayantanuja Bandyopadhyaya செய்துள்ளார்.



இந்த ஆக்கத்தில் ஜெயந்தனுஜா காந்தியின் சத்தியாகிரகம் மாவோவின் மக்கள் யுத்தம் குறித்தும், மாஸ்லைன் மற்றும் நிர்மாணத்திட்டம் குறித்தும் ஆய்விட்டுள்ளார். இரு பெரும் ஆசிய ஆளுமைகளான மாவோ மற்றும் காந்தி ஆகியவர்களின் செல்வாக்கு எப்படி பலரிடம் சென்றடைந்தது என்பதை குறித்தும் ஆசிரியர் விவாதிக்கிறார். சமூக மாற்றத்திற்கு இந்தியாவில்- சீனாவில் குறிப்பிட்ட சூழலில் இருவரின்  பங்களிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 காந்தி மாவோவைவிட 24 ஆண்டுகள் வயதில் மூத்தவர். ஆனால் சொந்த நாட்டின் அரசியல் மற்றும் நிகழ்வுகளில் அவர்கள் சமகால நுழைவை பார்க்கமுடிகிறது. விடுதலைக்குப் பின்னர் 5 மாதங்களில் காந்தி படுகொலை நிகழ்ந்துவிடுகிறது. மாவோ சீனப்புரட்சியின் நாயகனாக எழுந்து 1976ல் மறையும்வரை அந்நாட்டின் உயர்பீடத் தலைவராக- ஆட்சிபுரிந்தவராக இருந்து மறைந்தார்.

இரு நாடுகளிலும் 80 சத மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள் . சீனாவில் ஜப்பான்- கோமிண்டாங் வீழ்ச்சியில் மார்க்சிய- லெனினிய வகைப்பட்ட சீனக் கட்டுமானம் என மாவோ செயல்பட்டால், பிரிட்டிஷாரை வெளியேற்றி தன் இந்திய நிர்மாணத்திற்காக காந்தி செயல்பட்டார். இருவருக்குமே கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை, கிராமப்புற விவசாயிகளை திரட்டுவது என்பது இயக்க ஆதாரமாக இருந்தது.

சீன கம்யூனிச இயக்கத்தில் மத்தியதர வர்க்க அறிவுத்தலைமையும் வளர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவிலும் மேற்கத்திய கல்வி பின்புலம் கொண்ட மத்தியதர வர்க்கத்தலைமையின்  வளர்ச்சி இருந்தது. இந்த அறிவுத்தலைமையை மக்கள் நல செயல்பாட்டில் முழுவீச்சாக இறங்கவைத்த வரலாற்றுக் கடமையை காந்தியும் மாவோவும் ஆற்றினர்.

சர்வதேசியம்- மானிட சகோதரத்துவம்  என்ற விரிந்த பார்வையில் சீனத்தேசியம்- இந்திய தேசியம் என்கிற எல்லையில் நின்று இருவரும் செயலாற்றினர். அனைத்து சூழலும் இருவருக்குமே ஒரே மாதிரி ஒன்றுபோலவே அமையவில்லை. மார்க்சியர்கள் மாவோவின் வழியை வர்க்கப்போராட்டவழி என ஏற்றால் காந்தியின் வழியை வர்க்க சமரசவழி என்றே  சொல்வர்.

விவசாய எழுச்சிகள் அதிகம் நடந்த பூமியாக சீனா இருந்தது. விவசாயிகள் விழிப்புணர்வும் மேம்பட்டதாக இருந்தது. உற்பத்தி திறன், வாழ்க்கைத்தரம் இந்திய விவசாயிகளை ஒப்பிடுகையில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்திய அம்சங்கள் காந்தியின் அகிம்சைவழி போராட்ட சூழலுக்கு களம் அமைக்க அவருக்கு உதவின. மாவோவிற்கு அமைந்த சூழலைவிட சற்று கடினமான சூழலே மக்களை திரட்டுவதில் காந்திக்கு அமைந்தன என்பது ஜெயந்தனுஜா அவர்களின் மதிப்பீடாக இருக்கிறது.  இந்தியாவின் கிராமங்களுக்கு ஆட்சியாளர் எவரே ஆனாலும் தங்களின் தேவைகளை ஓரளவிற்கு சுயமாக நிறைவேற்றிகொள்ளும் நீண்ட கால வரலாறிருந்தது.

புறச் சூழல் என்பதில் பலவகை இணை அம்சங்கள் இருந்தால் கூட அதனை கருவியாகக்கொண்டு செயல்படும் தனிநபர்  பாத்திரம் அவரது மனோபாவம் என்பதும் ஓரளவிற்கு  தனித்துவ அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். மாவோவின் குடும்ப பின்னணி, கல்விச் சூழல், புரட்சிகர இயக்கத்தில் கற்ற பாடங்கள்  என்பதும், காந்தியின் குடும்பப் பின்னணி. கல்விச் சூழல், தென்னாப்பிரிக்க அனுபவங்கள், இந்திய விடுதலை இயக்க சூழல்  என்பதும் ஒருபடித்தானவையல்ல. இருவரும் மக்களை அணுகினர். அவர்களை அச்சத்திலிருந்து விடுவித்தனர். ஒருவர் ஆயுத வழி என்றால் மற்றவர் அகிம்சை வழி என்றார். இருவராலும் தங்கள் வழியின் மேன்மை  சிறப்பு குறித்து தங்கள் மக்களிடம் உரையாட முடிந்தது.

சீனாவில் மாவோவின் உரையாடலை  செவிமடுத்ததால் சீனப்புரட்சி 1949ல் எழுந்தது. காந்தியின் உரையாடல் இந்திய மக்களை கவ்விப்பிடித்தது. இந்திய விடுதலை 1947ல் அறிவிக்கப்பட்டது. மாவோ தனது இளம் வயதிலேயே மார்க்சிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காந்தியோ டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ, பகவத்கீதை , குரான், மலைப்பிரசங்கம் போன்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.  காந்தி தனது முதுமைக்காலத்தில் மார்க்சிய எழுத்துக்களை படித்தாலும் அவற்றால் ஈர்ப்பிற்கு உள்ளாகவில்லை.

மார்க்சிய கருதுகோளில்  socialised production- socialised humanity  என்பது மிக முக்கியமானது.  civil society என்பதோ பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களோ சுரண்டல் வர்க்கத்திற்கே சாதகமாக இருந்த அனுபவத்தை மார்க்சியம் எடுத்துக்கொண்டது. திறமைக்கேற்ற திறனுக்கேற்ற உழைப்பை பெற்றுக்கொண்டு ஓவ்வொருவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் கம்யூனிச அமைப்பை மார்க்சியம் முன்மொழிந்தது.

தனிநபர்கள் நெறிகளுடன் அகிம்சவழியில் உண்மைக்கும் நீதிக்குமாக நடைமுறையில் நின்று  செயல்படும் வகையில்அனைவரையும் உள்ளடக்கும் சமத்துவம்என்கிற இலட்சிய சமுதாயம் பற்றி காந்தி பேசினார். அவரது சுயராஜ்யம்  அரசாங்கம் சார்ந்த விஷயமட்டுமல்ல- சமூகத்திற்கும்  தனிநபருக்குமான  சுயராஜ்யம் என்பதாகும்.

மாவோ தனது அனுபவத்தில் சோசலிச புரட்சியின் பொருளாதார கட்டுமானத்திலும் வர்க்கப் போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டங்களாக அவை எழும் என்றார். நிலைமறுப்பின் நிலைமறுப்பு என முரண்பாடு குறித்து மாவோ பேசியது போல் காந்தியின் இயக்கவியலிலும்  negation of negation இருந்தது என ஜெயந்தனுஜா சொல்கிறார்.

காந்தி முரண்பாடு- நிலைமறுப்பு என்றெல்லாம் சொல்லாடல் செய்திருக்கமாட்டார். ஆனால்  Rejection of untruth is necessary for the vindication of truth  என அவர் பேசுவதைப் பார்க்கலாம். பெரும் முதலாளிகளும் ஏழை உழைப்பாளர்களும் உள்ள சமூகம் நீடிக்கப்பட்டால் அங்கு அகிம்சை சாத்தியமில்லாமல் போய்விடும் எனவும் அவர் பேசினார். மாற்றாக தர்மகர்த்தாகொள்கையை முன்வைத்தார்.

 மாவோ பகை முரண்பாடு- பகையற்ற முரண்பாடு என விளக்குவார். சமூகத்தில்  சுரண்டல் ஒடுக்குமுறை வழிப்பட்டோ அல்லது எதிரிகளை அழித்தொழிக்கும் வழியிலோ தனது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது எனக் காந்தி கருதினார். மக்களுக்கு சுயராஜ்யம் வன்முறை வழிப்பட்டு வரவே வராது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  A non violent revoultion is  not a programme of seizure of power but it is a programme of transformation of  relationships  என காந்தி பேசினார்.

முதலாளிகளியோ நிலப்பிரபுக்களையோ  அழித்து ஒழிப்பதல்ல பிரச்னை. அவர்களுக்கும் வெகுஜனங்களுக்குமான உறவை எவ்வளவு ஆரோக்கியமானதாக, தூய்மை நிறைந்ததாக மாற்றமுடியும் என்பதுதான் பிரச்னை என்பது காந்தியின் உரையாடல். இதை மார்க்சியர்கள் பொதுவாக  சந்தேகத்துடன்தான் பார்த்தனர். வாய்ப்பில்லை என நிராகரிக்கவும் செய்தனர். காந்தியோ போல்ஷ்விசம் மற்றும் மேற்கு ஜனநாயகத்தை விமர்சனக் கண்கொண்டே பார்த்தார். ஃபாசிஸ்ட்களையும், நாஜிகளையும் அவர் 1942ல் லூயி பிஷருடன் பேசிக்கொண்டிருந்தபோது விமர்சித்தார்.

 peoples'war- Mass Line  என்பதில் நம்பிக்கை வைத்து  மார்க்சியர்கள்- மாவோ செயல்பட்டிருந்தால் ,  காந்தி மாற்றாக தனது சத்தியாகிரகம்- ஆக்கபூர்வ நிர்மாணத் திட்டம் முன்வைத்து மக்களை திரட்டினார்.

Socialistic consciousness of the individual would follow from the socialization of the means of production  என்பது மார்க்சியர்களின் கருதுகோள். மாவோவும் உற்பத்தியில் ஈடுபடும்போது புரட்சிகர உணர்வைப் பெறமுடியும் என்பார். ஆனால் கலாச்சார புரட்சியின் தருணத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் உற்பத்தி என்பதுடன் நில்லாமல்  personal moral effort  குறித்துப் பேசத்துவங்கினார். அவரது மேற்கோள்கள் தனிநபர்களின் புரட்சிகர உணர்வு மட்டத்தை உயர்த்தும் எனவும் சொல்லப்பட்டது.

காந்தி புரட்சியின் மதிப்புகளைவிட மதிப்புகளின் புரட்சியை கொண்டாடினார் என்பதை அறிவோம்.     உணவையும் அவசியமான தேவைகளையும் அவரவர் தங்கள் உழைப்பின் மூலம் பெறவேண்டும் என்றவர் காந்தி (Bread labour divine law). தான் திரட்டும் மக்களிடம் சுயக்கட்டுபாட்டையும் நேர்மையையும், உண்மைக்கும் கடவுளுக்கும் நெருக்கமாக இருப்பதையும் காந்தி எதிர்பார்த்தால், மாவோ அம்மக்களின் இராணுவக் கட்டுப்பாடு, அரசியல் மற்றும் சோசலிச உணர்வுகள் என்பதை எதிர்பார்த்தார். மாவோ கூட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற நேரிடை சொல்லாடலுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்பதை முன்வைத்தார்.

காந்தியின் சத்யாகிரகிகள் போராட்டம் மற்றும் நிர்மாண திட்டத்திலும் ஈடுபடுபவர்களாக இருந்தனர். இரண்டிற்குமான  இணைப்பு அங்கு முக்கியமானது.

மாவோ எட்கர் ஸ்னோவிடம் உரையாடும்போது 1965ல் ஒடுக்கப்பட்டோரின் புரட்சிகர இயக்கத்தினர்தான் மக்கள் யுத்த பாதையை மேற்கொள்ளமுடியும். அது  ’would not work in reverse’  என விளக்கினார்.. காந்தியின் சத்தியாகிரக பாதையும் ஒடுக்கப்பட்டோருக்கான ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது. இராணுவமோதல்களில் அழித்தொழிப்பு என்பது அடிப்படையானது என லின் பியோ விளக்கினார். ஆனால் காந்தி  non violent  non coopeartion  என்பதை முன்வைத்தார்.

மக்கள் ஒத்துழைப்பு இருக்கிறவரைதான் அரசாங்கம் ஆளமுடியும் என்பதை மக்களுக்கு புரியவைப்பதில் காந்தி கவனம் செலுத்தினார்.  Disobedience of the laws of an evil state is therefore duty  என அவர் சொல்லித் தந்தார். உப்பு சத்தியாகிரக வேள்வியை நடத்தியும் காட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 78 சத்தியாகிரகிகளுடன் 241 மைல் உப்பு யாத்திரையது.  மாவோ தனது  Long March  எனப்படும் நீண்ட பயணத்தை காந்தியின் உப்பு யாத்திரைக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 1934ல் 2000மைல்கள் நடத்திக் காட்டினார்.

 இருவரின் அணுகுமுறையை விவாதித்த ஜெயந்தனுஜா கீழ்கண்ட ஒப்பீட்டை சுருக்கமாக தருகிறார்

While People's war is essentially the art of the organised destruction of other human beings representing the enemy, through relatively inferior weapons, satyagraha is that of confronting the opponent with a moral challenge and psychological situation. ..People's war is the function of an essentially military machine"

 எதிராளிகளின் பலம் வாய்ந்த ஆயுதங்களை தனது துன்பங்களை தாங்கிக்கொள்ளும் ஆன்ம பலத்தால் செயலிழக்க வைப்பது என்பது சத்தியாகிரகப்பாதை . மக்கள் யுத்தம் சுரண்டுகிற கொடூர முதலாளித்துவ நிலபிரபுத்துவ சமூக முறையை தூக்கி எறிய பயன்படுத்தப்படும் போராட்டவகையாக இருக்கலாம். புதியவகையிலான பாட்டாளிவர்க்க அல்லது மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அதைப் பயன்படுத்த அங்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவசியம் இருக்காது என்கிற நம்பிக்கை அங்கே புரிதலாக வைக்கப்படும். சத்தியாகிரகம் சுயராஜ்ய சர்க்கார் அமைந்தாலும்- விடுதலைக்குப் பின்னரான அரசுடன் அவசியமானால் ஒத்துழையாமை என்பதற்கு இடம் கொடுக்கும் முன்மொழிவாக இருந்தது.

1943ல் மாஸ் லைன்  (Mass Line)  பற்றி மாவோ கீழ்கண்டவாறு விளக்கினார்.

கட்சியின் நடைமுறை வேலைகளுக்கு வெகுஜனங்களிடமிருந்து வெகுஜனங்களிடம் பணியாற்ற தலைமை வரவேண்டும். மக்களிடமிருந்து சிந்தனைகளை உள்வாங்கி செரித்து அவற்றை திடப்படுத்தி சித்தாந்தமாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தல் வேண்டும். அவர்களை கவ்விப்பிடிக்கும் சிந்தனைகளாக அவற்றை முன்வைக்கவேண்டும்.. இந்த நிகழ்வு தொடர் நிகழ்வாக மீண்டும் மீண்டும் நடைபெறவேண்டும்.  இதைத்தான் மார்க்சிய அறிவுகோட்பாடாக சொல்கிறோம்.

 நிர்மாணத்திட்டம் என்பது செயல்படுவதில்தான் முகம் கொள்ளும். அதை கட்டவிரும்பும் நாம் அது சொர்க்கத்திலிருந்து வந்துவிடும் என எண்ணலாகாது. அவசரமும் ஆகாது. செங்கல் செங்கல்லாக வைக்கப்பட்டு எழும்பும் கட்டிடம் போல செயலாக்கம் தேவை என்கிற அறிவுரை காந்தியிடமிருந்து வந்தது. மாஸ்லைன் என்பது மார்க்சிய லெனினிய வகைப்பட்டு என்ற பொதுவான அம்சத்தில் திரட்சியைக் கோரினால், காந்தியின் நிர்மாணத்திட்டம் தீண்டாமை, மதுவிலக்கு, காதி, அடிப்படை கல்வி, கிராம சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், தாய்மொழிக் கல்வி போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டமாக அறிவிக்கப்பட்டது.

 கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மூலம் கிராமப்புற மக்களை திரட்டி பொருளாதாரகட்டுமானம் என மாஸ்லைன் செயல்பட்டால், சத்தியாகிரகிகளை முழுமையாக இறக்கி மக்களுடன்  அவர்களின் தேவை மற்றும் மாற்றங்களுக்கு நிற்கச் செய்வதாக நிர்மாணத்திட்டம் இருந்தது எனலாம். சீனாவில் நிலச்சீர்திருத்தம் மய்யம் கொண்டது. வெகுஜன வழி என்பதற்கு 90 சத விவசாயிகளை இணைக்கவேண்டும் என மாவோ கட்சி ஊழியர்களிடம் எடுத்துரைத்தார். 1957ல் பெரும் பாய்ச்சல் மூலம் 15 ஆண்டுகளில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு இணையான பொருளாதார கட்டுமானம் முன்மொழியப்பட்டது. 10 கோடி விவசாயிகள் மாபெரும் உழைப்பை நல்கி பெரும் சாதனைகளை செய்தனர். காட்டப்பட்ட அதிஅவசர நடவடிக்கைகளால்  நடந்த தவறுகளை சில ஆண்டுகளிலேயே சரி செய்துகொண்டு மாஸ்லைன் கொள்கையை அவர்கள் தொடர்ந்து அனுசரித்தனர்.

கிராமங்களின் சுயதேவையை பூர்த்தி செய்திடும் வகையிலும்  வறுமை- வேலையின்மையை போக்கும் வகையிலுமான திட்டமாக நிர்மாணத்திட்டத்தை காந்தி பார்த்தார். பெருந்தொழிற்சாலைகள்,  விவசாயத்திலும் எந்திரமயம் என்பது சீனாவில் ஏற்கப்பட்டு அமுலானது.  நேருவின் ஆட்சியில் தொழில்மயம், பொதுத்துறை வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டன. காந்திய மாதிரி என்பது நடைமுறையில் வராத நிலையை விடுதலை இந்தியா கண்டது.

ஜெயந்தனுஜா எழுதுகிறார்  Gandhi was not a materialist in any sense and was not even familiar with the intricacies of the Marxist theory of knowledge and yet he argued like Mao that true  knowledge and education could only result from particiaption in productive labour.  காந்திக்கு மார்க்சிய கோட்பாடுகள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழைப்பில் ஈடுபடுவதன் மூலமே அறிவும் கல்வியும் பலனளிக்கும் என அவர் மாவோ பேசியது போலவே பேசியதை காணலாம்.

  மனிதன் சக மனிதர்களுடன் சேர்ந்து செய்திடும் கூட்டுழைப்பின் மூலம் கற்றல் என்கிற ஏற்பு இரு தலைவர்களுக்கும் இருந்தது என்பதை ஜெயந்தனுஜா தெரிவிக்கிறார். இரு தலைவர்களும் உற்பத்திக்கு துணைநிற்கும் கல்விமுறைக்காக நின்றதையும் பார்க்கிறோம்.

 சீனாவில் ஏற்றத்தாழ்வு என்கிற பிரச்னையானாலும் மதம் குறித்த பிரச்னையானாலும் மாவோ திறம்பட தீர்த்தார் என்பதை ஜெயந்தனுஜா சொல்கிறார். காந்தி வாழ்நாள் முழுதும் தீண்டாமைக்கொடுமையை எதிர்த்து பேசினாலும் சாதி பிரச்னை என்பது இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மதமோதலுக்கு எதிராக இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்தி தன்னை அர்ப்பணித்தாலும் இந்தியாவில் இந்த பிரச்னை அவ்வப்போது கொதிநிலையை எட்டுவதையும் பார்க்கிறோம். மாவோவை ஒப்பிடுகையில் ஏற்றத்தாழ்வு- வகுப்புவாதம்  பிரச்னைகளில் காந்தி வெற்றி பெறவில்லை என்பது ஜெயந்தனுஜா மதிப்பீடாக இருக்கிறது.

மாவோ துவக்கத்திலிருந்தே செஞ்சேனையின் கடமைகளை வரையறுத்து வந்தார். மக்களை திரட்டுவது, ஆயுதப்பயிற்சி அளிப்பது, அவர்களுக்கான புரட்சிகர அரசியல் பயிற்சியை கொடுப்பது- கட்சி அமைப்புகளை கட்டுவதற்கு கூட துணை நிற்கவேண்டிய கடமைகள்  உணர்த்தப்பட்டன. 1938ல் அதன் எல்லையையும் மாவோ தெளிவுபடுத்தினார்.  Our principle is that the party commands the Gun, and the gun must never be allowed to command the party.   ஆயுதம் ஏந்திய சேனையின் எல்லையை வரையறுக்கும் துல்லிய வார்த்தைகளாக மாவோ வெளியிட்டதைப் பார்க்கிறோம்.

 சீனா மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் பொதுவாக விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதற்குப் பொருள் அவர்களுக்கு சுதந்திர உணர்வு இருக்கிறது என்பதல்ல.  If masses have any freedom, it is only the freedom to coopearte with the party leadership and to implement the government policies decided by it  என ஜெயந்தனுஜா எழுதுகிறார்.

 முடிந்தவரை காந்தி அதிகார வெளியிலிருந்து தூரமாக தன்னை வைத்துக்கொண்டார்.  காந்தியின் நிர்மாணத்திட்டத்தில் மக்கள் சுயவிருப்பத்துடன் செயல்படுதல்- எந்தவித முற்றதிகார மய்யத்தின் கட்டுப்பாட்டையோ அதிகார குரலுக்கு செவிமடுக்காமலோ செயல்பட வழி இருந்தது. ருஷ்யா- சீனா அனுபவங்களில்  suppressing  the activities of counterrevolutionaries, liquidation  என்ற பெயரில் மனித உயிர்கள் பறிப்பு என்பது நடந்தேறியது.  லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு குறித்து யுனஸ்கோ  1955ல் தகவல் வெளியிட்டது. மில்லியன் கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக அவதிக்கு உள்ளான செய்திகள் வெளியாயின. பெரும்பான்மை மக்களின் நலன்காக்க சர்வாதிகாரம் என்றாலும் இவை குறித்த பெரும் விமர்சனங்கள் எழத்துவங்கின.

அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் அடிமையாக மனிதன் சிக்கிவிடகூடாது என்பதை காந்தி அழுத்தமாக சொல்லிவந்தார். சீனா  தொழில்நுட்பம் மிகுந்த பெரும் பொருளாதார நாடாக நிற்கிறது. இந்தியாவும் பொருளாதார வல்லரசு கனவுகளில் பேரளவு உற்பத்திமுறையை பெரும் தொழில்நுட்பத்தை நம்பி வளர்ந்து வருகிறது. மானுட பொருளாயத தேவைகள் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் காந்தியின் அவசியம் உலகினரால் உணரப்பட்டு வருகிறது .

 

Ref

Mao Tes Tung and Gandhi by Jayantanuja Bandyopadhyaya

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா