தோழர் சி ராஜேஸ்வர ராவ்
-ஆர் பட்டாபிராமன்
இந்திய கம்யூனிஸ்ட்
இயக்கத்தில் அதன் கட்சி பொதுச்செயலராக 25 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து களப்பணியில்
பயணித்த முன்னோடி கம்யூனிச போராளி தோழர் சி ஆர். அனைவராலும் ராஜேஸ்வர ராவ்
அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தார். ஆந்திர இயக்கத்திலிருந்து தேசிய – சர்வதேச அரசியல் வானில் வளர்ந்தவர்.
நிலத்தில் எப்போதும் உறுதியாக கால்பதித்து விவசாய இயக்கங்களுடன் வாழ்ந்தவர். தெலங்கான
இயக்கப் போராளி. காடுகளில் தோழர்களுடன் நின்று கொரில்லா போர்முறையை
முன்னெடுத்தவர். தவறுகள் என உணர்ந்த உடனேயே தன்னை திருத்திக்கொள்ள தயங்காமல்
இருந்தவர். சக தோழர்களுடன் கரிசனமாக இருந்து அவர்களின் நலன்களில் அக்கறை காட்டியவர். எளிமையின் இலக்கணமாக இருந்தவர்.
விடுதலை போராட்ட
சூழல், சோவியத் புரட்சி, மார்க்சிய- லெனிய தாக்கம் அவரிடத்தும் ஏற்பட்டது. சாதாரண உழைக்கும் மக்கள்
விடிவிற்கு உடனடியாக புரட்சி என்கிற வேகம் அப்போதிருந்த அனைத்து கம்யூனிஸ்ட் இளைஞர்களுக்கும்
இருந்ததுபோல்தான் சி ஆருக்கும் இருந்தது. ஆந்திர கம்யூனிஸ்ட்கள் - சி ஆர் போன்றவர் எங்களைப் போல காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வராமல் நேரிடையாக
வந்தவர்கள் என்ற பதிவை இ எம் எஸ் அவர்கள் ஒருமுறை செய்திருந்தார். ஆனால் சிஆரும் காங்கிரஸ் சத்தியாக்கிரகிதான் என
ஜவஹர்லால் பல்கலை பேராசிரியரான சேஷாத்ரி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
காங்கிரஸ் சோசலிச மாநாடுகளில் சி ஆர் பங்கேற்ற குறிப்பு ஏதுமில்லை.
சுந்தரையா அவர்கள் தான் காங்கிரஸ்
காந்தி செல்வாக்கில் இருந்த நேரத்தில், பனாரஸ் பல்கலை நண்பர்கள் மார்க்சியம், ஆயுதம் தாங்கிய
போராட்டங்கள் குறித்து தன்னிடம் விவாதித்ததாக எழுதியிருக்கிறார். சி ஆர் அவர்களுக்கு பனாரஸ் பல்கலை கழக
காலத்தில்தான் மார்க்சிய தொடர்பு, கம்யூனிஸ்ட்கள் தொடர்பு ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான் மாணவர்களை திரட்டி மார்க்சிய
வகுப்புகள் ஏற்பாடு செய்பவராகவும் அவர்களுக்கு வழிகாட்டுபவராகவும் சி ஆர்
இருந்தார். பின்னர் மருத்துவ படிப்பை தொடர்வதற்காக அவர் அங்கிருந்து சென்றாலும்
முழுநேர அரசியல் ஈர்ப்பால் மருத்துவ படிப்பிலிருந்து வெளியேறினார்.
சி ஆர் கிருஷ்ணா மாவட்டம் மங்களபுரம் எனும்
ஊரில் 1914 ஜூன் 6 அன்று ராஜேஸ்வர ராவ் பிறந்தார். மசூலிபட்டினம்
ஆரம்ப கல்விக்கான இடமானது. நிலச்சுவான்தார் குடும்பமது. பின்நாட்களில் தனது சொத்தை முழுமையாக கட்சிக்கு கொடுத்தவர் சி ஆர்.
ஊரில் விவசாயிகளை திரட்டி தனது உறவுக்கார சல்லப்பள்ளி ஜமீன் எதிர்த்து போராடுகிறார். குதிரைப்படை தாக்குதலை அவர் எதிர்கொள்கிறார். அவரின் முதல் பெரும் களப்போர் அது . ஆந்திரா விவசாயிகள் சென்னை நோக்கி 1500 மைல்கள் பயணம் என்ற
போராட்டத்தை நடத்தினர். அதில் தலைமையேற்ற ஒருவரான ராமலிங்கையா என்பவருடன் சி ஆர் தொடர்புகளை வைத்திருந்தார்.
1934ல் ஆந்திராவில்
கம்யூனிஸ்ட் குழு அமைக்கப்படுகிறது. முதல் மாநாடு காக்கிநாடாவில் நடக்கிறது. நரசிம்மமூர்த்தி என்பார்
செயலராகிறார். மசூலிப்பட்டினத்தில் 1937ல் இளைஞர் மாநாடு ஒன்றை சி
ஆர் நடத்துகிறார். கோட்டப்பட்டினம் எனும் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும்
மேற்பட்ட தோழர்களுக்கு மார்க்சிய கல்விமுகாம் ஒன்றை அமைக்கிறார். நவசக்தி, பிரஜா
சக்தி பத்ரிக்கைகள் பலருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அய்தராபத் நிஜாம் பகுதியில் கட்சி கமிட்டி
ஒன்றை சி ஆர் போன்றவர்கள் முன்கையெடுத்து 1938ல் அமைக்கின்றனர். ரவிநாரயண்ரெட்டி பேருதவியாக
இருக்கிறார். அப்பகுதியில் தோழர்கள் சுந்தரையா, சி ஆர் பங்கேற்கும் மார்க்சிய
முகாம்கள் காம்ரேட்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.
விஜயவாடாவில் 1938
ல் நடந்த ஆந்திரா கட்சி மாநாட்டில் சி ஆர் மாநில குழுவிற்கு வருகிறார். 1943ல் மாநில
செயலர் பொறுப்பேற்கிறார். தலைமறைவாக
கட்சிப்பணி என்பதுதான் அப்போதிருந்த நிலை. 1942க்கு பின்னர் நிலைமைகள் சற்று
மேம்படுகின்றன. வெளிப்படையான பணி மேற்கொள்ளப்படுகிறது. அகில இந்திய கட்சி ஜோஷி தலைமையை நிராகரித்து
1948ல் ரணதிவேவை பொதுச்செயலராக்குகிறது. ஆந்திர தோழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட
நிஜாம் எதிர்ப்பு ஆயுதப்போராட்டங்கள் அனுபவத்தில் நேரு ஆட்சியை தூக்கி எறிய தெலங்கான வழி எங்கள்
வழி முழக்கத்தை அங்கு வைக்கின்றனர். பின்னர் அதை வலியுறுத்தும் ஆவணங்களை சீனப்பாதை என்கிற பெயரில் கொணர்கின்றனர். ரணதிவே சோவியத் பாதை
என்கிறார். கட்சி போராட்ட அறைகூவல்
விடுக்கிறது, கட்சியில் சரிவு ஏற்படுகிறது. கட்சி சி ஆரை பொதுச் செயலராக்குகிறது. தோழர்கள் டாங்கே, காட்டே, அஜாய்
இணைந்த ஆவணம் சீனா, சோவியத் இரண்டுமல்ல என பேசியது. அக்காலங்களில் கட்சியில் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர் ஒன்று இருக்கும். சி ஆர் அவர்கள் ராம் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
1949 ரயில்வே வேலைநிறுத்தம் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது. பம்பாய் சிறைக்கைதிகள் போராட்டத்தை குட்டி முதலாளித்துவ பார்வையில் அதிகாரி, அஜாய், காட்டே, டாங்கே துரோகம் செய்துவிட்டதாக பெரும் விமர்சனத்தை ரணதிவே பொலிட்ப்யூரோ சார்பில் செய்திருந்தார். ஆந்திரா தோழர்கள் ”centralisation
is possible of achievement only when the members at large feel this authority
as fundamentally efficient instrument in their common activity and struggle.
Otherwise it will appear as bureaucracy and struggle”.. whatever came out from the mouth and pen of the General
secretary became marxism என்கிற விமர்சனத்தை தோழர் ரணதிவே மீது வைத்தது. ராஜேஸ்வரராவை பொறுத்த்வரை அவர் தவறுகளுக்கு பொறுப்பில்லை. ஆனாலும் பொலிட்ப்யூரோ உடன் சமரசம் செய்தது தவறு என்ற சுட்டிக்காட்டலும் அதில் இருந்தது. ரணதிவேவின் அதிதீவிரவாத பாதை எதிர்த்து சி ஆர் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மையத்தில் இல்லை என்பதும் சொல்லப்பட்டிருந்தது.
1951ல் கட்சிக்குள்
இருக்கும் கருத்துவேறுபாடுகளை களைந்து ஆலோசனை பெற்றிட சிஆர் , பசவபுன்னையா, டாங்கே அஜாய் நால்வர்குழு மாஸ்கோ செல்கிறது. அங்கு ஸ்டாலின்
சந்திப்பும் நிகழ்கிறது. அஜாய் பொதுச்செயலர் ஆகிறார். மதுரை கட்சி காங்கிரசில்
பொலிட் ப்யூரோ உறுப்பினராக சி ஆர் ஆகிறார். பாண்டுங் மாநாட்டிற்கு சீனா அழைக்கப்படமாட்டாது
என்ற கருத்தை சி ஆர் வைத்திருந்ததாகவும், அழைக்கப்பட்டால் தனது
நிலைப்பாட்டை மாற்றி சரி செய்து கொள்வதாகவும் தோழர் கே எல் மகேந்திராவுடன் உரையாடல்
ஒன்றில் சி ஆர் தெரிவிக்கிறார். அதே போல் தனது நிலையை மாற்றிக்கொண்டதாக மகேந்திரா
குறிப்பிடுகிறார். பாலக்காடு காங்கிரசில் ஜோஷி, டாங்கே, சி ஆர் , பவானிசென் இணைந்து ஆவணம் வைக்கின்றனர்.
1950களில் இந்தியசோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்களை கடுமையாக அம்பலபடுத்துவதாக கருதியும் அவர்கள் கோமிண்டார்ண் , சோவியத் சொற்படி கீழ்படிந்து நடப்பவர்கள் என்பதை நிரூபிக்கவும்
கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு கால, இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தனர். ஆனால் அவர்கள் மக்களிடம் விதைக்க நினைத்த சந்தேக பார்வை நிராகரிக்கப்பட்டதை தேர்தல்கள் உணர்த்தின. மினுமசானி. வி பி கார்னிக் போன்றவர்கள் இதை திறம்பட தங்கள் வெளியீடுகள் மூலம் செய்து வந்தனர்.
இந்த காலத்தில் தோழர் ரஜினிபாமிதத் தோழர்கள் ரணதிவே மற்றும் டாங்கே இருவரையும் விமர்சித்திருந்தார். ஒருவர் ஒய்ட் டெரர் என்பதை அறியாமல் அதை பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் மற்றவரான டாங்கே டிட்டோயிசத்தை அதிகமாக பின்பற்றுவதாக தெரிகிறது என்ற முறையில் விமர்சனம் இருந்தது. "Armed
Struggle which is the higher form of struggle, must bear a mass character. Any
resort to armed action by individuals or small groups is only terrorism" என்பதையும் பாமிதத் குறிப்பிட்டிருந்தார். நேரு சர்க்கார் பெருமுதலாளித்துவ சர்க்கார்தான். இதன் பொருள் எப்போதும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் ஒத்துபோவதது என புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். Leadership of
the working class will be realised not merely through the leadership of the
Communist party but above all through the direct action of the working class
itself in support of the demands and
struggles of peasantry என்பது மதுரைக்கு முன்னர் Tactical Line 1953ல் (நால்வர் கமிஷன் மாஸ்கோ சென்று வந்த பின்னர்) இடம் பெற்றது
அமிர்த்சரஸ் 1958
மாநாடு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு பதிலாக பாட்டாளிகள் தலைமையில் என அதை
மாற்றிக் கொண்டது. தாங்கள்
ஆட்சிக்கு வந்தால் எதிர்கட்சிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்பதும் தெளிவு
படுத்தப்படுகிறது. நம்பூதிரிபாத் அவர்கள் தலைமையில் கேரளத்தில் ஆட்சி என்ற அனுபவம், அதை வாழவிடாது நீக்கிட நடக்கும் போராட்டம் என்ற
பின்னணியில் விவாதம் அக்கட்சி காங்கிரசில் நிலவியது. சோவியத்- சீன கட்சிகளின் அனுபவத்திலிருந்து மாறுபட்ட புதிய சோதனையாக இதை புரிந்து கொள்ளலாம்.
1961 விஜயவாடா காங்கிரசிலும் கட்சிக்குள் பெரும்
கருத்து வேறுபாடுகள் நிலவின. தோழர்கள்
அஜாய், டாங்கே, சி ஆர், பவானிசென் போன்றவர் கருத்தொருமித்து வைத்த
ஆவணம், தோழர்கள் பசவபுன்னையா, ரணதிவே, ராமமூர்த்தி போன்றவர்கள் வைத்த ஆவணம், இவை இரண்டுக்கும்
மாற்றாக இ எம் எஸ் தனித்து வைத்த ஆவணம் என மூன்று ஆவண விவாதங்கள் எழுந்தன.
நள்ளிரவை தாண்டி மணி இரண்டை நெருங்கியும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்ததாகவும் தோழர் ஜோதிபாசு
தலையிட்டு அஜாய் வைத்த ஆவணத்தை ஏற்க முடியாவிட்டாலும் அவரது உரை ஏற்க தகுந்ததாக
இருக்கிறது என கருத்து வெளியிட அஜாய் உரையே தீர்மானமாக ஏற்கப்பட்டது. இந்த பதிவை
தனது நினைவு குறிப்பில் மகேந்திரா
எழுதியிருக்கிறார். அஜாய் மறைவிற்கு பின்னர் கட்சி உடையாமல் தற்காலிகமாக
தடுக்கப்படுகிறது, தோழர் டாங்கே சேர்மனாக, இ எம் எஸ் பொதுச்செயலராக
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த ஏற்பாடு நிற்கவில்லை. சீன யுத்தம், கட்சி பிளவிற்கு சீனகட்சி விடுத்த பகிரங்க அறைகூவல்,
டாங்கே கடிதம் போன்றவை பெரும் பிரச்சனைகளாகின.
கட்சி பிளவை 1964ல்
சந்திக்கிறது. சி பி எம் கட்சி உதயமாகிறது. அவ்வாண்டு பம்பாயில் நடந்த சி பி
அய் கட்சி மாநாட்டில் தோழர் சி ஆர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தொடர்ந்து 25 ஆண்டுகள் மிக பொறுமையாக அப்பொறுப்பில் செயல்படுகிறார். மிக முக்கிய
அரசியல் திருப்பங்களுக்கேற்ப அரசியல் திசைவழியை அவரது தலைமையில் கட்சி கண்டறிய
வேண்டியிருந்தது. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்ட நிலைப்பாட்டிற்கு பின்னர் மிக
முக்கிய விமர்சனமாக கட்சி சந்திக்க வேண்டிய நிலை எமர்ஜென்சி காலத்தில் ஏற்பட்டது. கட்சியை மீட்டெடுப்பது என்கிற போராட்டத்தை தோழர்கள் உதவியுடன் சி
ஆர் நடத்தினார். 1977 பதிந்தாவில் கட்சி தன்னை தயக்கமின்றி விமர்சித்துக்கொண்டு
மீட்டுக்கொணடது. டாங்கே, மொகித்சென் போன்ற ஜாம்பவான்களின் விமர்சனங்களை
எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாளிவர்க்க
செல்வாக்கில் செயல்படும் காங்கிரஸ்- ஜனதா போன்ற கட்சிகளை முறியடிக்க வேண்டுமெனில்
இடதுசாரி ஜனநாயக மாற்று என்பது ஏற்கப்பட்டது. தோழர் சி ஆர் வலியுறுத்திய Class
Independence நிலைப்பாட்டை மொகித்சென் கடுமையாக தனது
சுயசரிதையில் விமர்சிக்கிறார்.
இந்தக் காலத்தில் இரு
கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் நெருக்கத்திற்காக பெரும் முயற்சிகளை செய்தவர் சி
ஆர். லிங் பத்ரிக்கைஆசிரியர் இல்லத்தில் இ எம் எஸ் சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆறுமுறையாவது என் வீட்டிற்கு வந்து தொடர்ந்து அரசியல் நிலைப்பாடுகளை சி ஆர் விவாதித்தார்,
கட்சியை ஒன்றுபடுத்துவது என்பதில் பெரும் தாக்கத்துடன் இருந்தார்
என்பதை தோழர் இ எம் எஸ் அவர்கள் தயக்கமின்றி பதிவு செய்திருக்கிறார். இச்சந்திப்புகள் குறித்து சி பி
எம் உடன் ரகசிய உடன்பாடு என்ற தாக்குதலை டாங்கே போன்றவர்கள் தந்தனர்.
தோழர் சி ஆர்
அவர்கள் விவசாய தொழிலாளர் இயக்கம், பெண்கள் இயக்க தோழர்களுக்கு தொடர்ந்த
வழிகாட்டல்களை செய்தது குறித்து கீதாமுகர்ஜி போன்றவர்கள் எழுதுகின்றனர். அவர்
எளிமையானவர் ஆனால் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் என்பதற்கான பதிவை சி பி எம் கட்சியின்
அனுமந்தராவ் பதிவில் நாம் காணலாம். ஆந்திராவில் வெள்ளயனே வெளியேறு போராட்டம் முடிந்த பின்னர் கட்சி கூட்டம்
நடந்து கொண்டிருக்கும் போது கட்சி பெண்களை கேலி பேச வந்த கும்பல் ஒன்றை அவரே வெளியில் வந்து
நின்று கற்களால் தாக்கி அப்புறப்படுத்தினார்.
தெலங்கான போராட்டா
காலத்தில் சுந்தரையா, சி ஆர், ரவிநாரயண் ரெட்டி, அருட்ல ராமசந்திர ரெட்டி போன்றவர்களின் பங்களிப்பு பலராலும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 16000 சதுரமைல் பரப்பில்
3000 கிராமப்பகுதியில் பல்லாயிரம் மக்களை திரட்டி நிஜாம் ராணுவம் ரசாக்குகள் போலீஸ் நிலபிரபுக்கள் அடக்குமுறை எதிர்த்த தீரம் செறிந்த
போராட்டமாக தெலங்கான பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்புகளும், கற்களும்தான் ஆயுதம். பின்னர் வெடிமருந்து துப்பாக்கி, கொரில்லா போர்முறை என
அப்போராட்டம் தீவிரமானது. நிலங்களை பகிர்ந்து அளித்தல், நிஜாமை முறியடித்தல் என திசை
கொண்டது. பம்பாய்கிரானிக்கில், கே எம் முன்ஷி போன்றவர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு
களங்கம் கற்பிகும் வகையில் செய்திகள் வெளியிட்டனர். நிஜாம் அரசு கட்சியை தடை
செய்தது. கட்சி தொண்டர்கள் மற்றும் வெகுமக்களை நிஜாம் அரசு கொன்றது. மக்கள் போராட்டமும், விடுதலைக்கு பின்னர் காங்கிரசின் சமஸ்தான
இணைப்பு நிலைப்பாடும் உறுதியானது. இந்திய ராணுவம்
கொண்டு அய்தராபாத்தை மீட்பது நடைபெற்றது. அப்போதும் கட்சி தடையில் இருந்தது.
சுந்தரையா போன்றவர்கள் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் என்றனர். ராமசந்திர ரெட்டி,
கமலாதேவி போன்றவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ரணதிவே
அவர்கள் ’மக்கள் அய்தராபாத்
நமது நிலை’ என்ற கட்டுரை ஒன்றை
பீப்பிள்ஸ் ஏஜ் பத்ரிக்கையில் எழுதினார். நிஜாம் போன்ற நிலபிரபுத்துவ சக்திகள் தனி அய்தராபாத்
என்கிறது- முதலாளித்துவ காங்கிரஸ் இந்தியாவுடன் இணைப்பு என்கிறது. கம்யூனிஸ்ட்களாகிய நாமோ ’மக்கள் அய்த்ராபாத்’ என நிற்போம் என்றார் பிடிஆர் . இப்பதிவையும் மகேந்திரா நினைவு குறிப்பில் பார்க்க முடிகிறது. நிஜாம் வெளியேற்றத்திற்கு பின்னர் தெலங்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லையெனில் பகிரங்கமாக விலக்கி கொள்வதற்கான அறிக்கையை வெளியிடுவேன் என்றார் அஜாய்கோஷ். ரவிநாரயண்ரெட்டி போன்றவர்கள் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவித்திருந்தனர். இதனை கட்சி கடுமையாக விமர்சித்தது.
1970-71ல் நில மீட்பு
போராட்டங்களை திட்டமிட்டு கட்சியின்
பெரும் தலைவர்களே போராட்டத்தில் நின்று தலைமை தாங்கினர். பவானிசென்னுடன் இந்திய விவசாய அரங்கம் குறித்த ஆவணங்களை மிக பொறுப்புடன் சி ஆர்
தயாரித்ததாக அறிகிறோம். விவசாய பொருளாதாரம்- கட்சி கடமைகள் என்ற அவரது உரை மிக
முக்கியமானது என அவருடன் பனாரஸ்ஸில் ஒன்றாக இருந்த ரஸ்டம் குறிப்பிடுகிறார்.
தோழர் பரதன் சி ஆருடன் இருந்த உறவுகள் குறித்து
எழுதியுள்ளார். சி ஆர் தன்னை சித்தாந்தவாதி என காட்டிக்கொண்டதில்லை. காதுகொடுத்து கேட்பார்.
விவசாய பின்புலத்துடனே அவர் எளிமையாக நடந்துகொள்வார். இந்த நாட்டின் மதசார்பற்ற
தன்மையை உயர்த்தி பிடிக்க அவர் பாடுபட்டார் என குறிப்பிடுகிறார். பஞ்சாப், அஸ்ஸாம், அயோத்தியா
நிகழ்வுகளின்போது நேரிடையாக சென்று மக்களுடன்
உரையாடி உண்மையை கண்டறிய அவர் விரும்பினார். மக்கள் நியாயமான போராட்ட குரலை முன்னெடுத்தார்.
அனைத்துதரப்பு மக்கள் ஒற்றுமைக்கு
நின்றார் என பரதன் பதிவு செய்துள்ளார்..
மருத்துவ கல்லூரி காலத்தில் சிஆர் கப்பல்கட்டுமான தொழிலாளர்களை
திரட்டினார். அய்தராபாத் தொழிற்சங்க காங்கிரசை 1946ல் உருவாக்க உதவினார். ஆயுதம் தாங்கிய
போராட்ட காலத்தில் அவர் மலைவாழ் மக்களுடன் தங்கியிருந்தார். போலீசாரிடமிருந்து அவர்கள்
தரும் சிக்னல் மூலமாகவே அவர் தப்பிவந்தார். இரண்டாவது காங்கிரசில் ஜோஷி நீக்கப்படவிதம்
குறித்து நம்பூதிரிபாட் அவர்களுக்கு இருந்தது போலவே சி ஆருக்கும் விமர்சனம் இருந்தது.
நம்பூதிரி, சி ஆர், பசவபுன்னையா ஆகியோர் அப்போது ஒரே டென்னில் (den) சேர்ந்து இருந்ததாக
இ எம் எஸ் குறிப்பிடுகிறார்.
மார்க்சிய சிந்தனைகளை வளமான இந்திய சிந்தனை, கலாச்சார அம்சங்களுடன்
இணைந்து புரிந்து கொள்ள வற்புறுத்திவந்தார்.
இக்கட்டுரையாளருக்கு (பட்டாபிக்கு) 1980களின் மத்தியில் அவருடன் மூன்று நாட்கள்
உடனிருந்து உதவிட வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில நாளிதழ் செய்திகளை அவர் விவாதிப்பார்.
இளைஞனாக பேசிய அரைகுறை அம்சங்களை பொருட்படுத்தாமல் நியுஏஜ்க்கு எழுது என்றார். தோழர்
ஞானையாவுடன் மகாபாரதம் பார்க்கவே இல்லம் வந்தார்.
சோவியத்தில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என தனது அனுபவத்தை அங்கு
நடந்த அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார்.
டாங்கே வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சி மீண்டும் உடைந்துவிடாமல் காப்பதில் சிஆர் பெரும் பங்காற்றினார். ஏப்ரல் 1990 தேசிய கவுன்சிலில் அவர் பொதுச்செயலர்
பொறுப்பை துறந்தார். அய்தராபாதில் சென்று தங்கி உடல்நிலை ஒத்துழைக்கும்வரை படித்து
வந்தார். ராமானுஜர் பற்றி படித்துவிட்டு முன்பே தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே என
சொன்னதாக சேஷாத்ரி அவர்கள்: குறிப்பிடுகிறார். உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் ஏப்ரல்
9, 1994ல் மறைகிறார்.
மகத்தான இந்திய புதல்வனாக, உலக மக்களின் தோழனாக, விவசாய கிராமப்புற எளிமையுடன்
கம்பீர நெடிய உருவம் கொண்டு வாழ்ந்த தோழர் சி ஆர்
நினைவுகளில் செல்வாக்குடன் இருந்து
வருகிறார்.
Ref:
Tribute to CR
Comments
Post a Comment