https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 14, 2019

ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி


ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி
-    ஆர். பட்டாபிராமன்

 பிரிவினையுடன் விடுதலை என்பது காந்தியை வாட்டி வதைக்கும் விஷயமாக இருந்தது. இந்த முடிவிற்காகவா நமது வாழ்நாள் போராட்டத்தை புனிதமானது என உரிமைப் பாராட்டிக்கொண்டோம், O Lord Lead us from darkness into light   என்றே அவர் தெரிவிக்கலானார்.  வேறொரு நேரத்தில் கடிதம் ஒன்றில் ஆகஸ்ட் 15 குறித்து என் பார்வையில் ஒரு மதிப்பும் இல்லை- எவரிடத்தும் உற்சாகமில்லை என  வழக்கம்போல் துணிவான கருத்தை வெளிப்படுத்தினார். 

 ஆகஸ்ட் 15 நெருங்கும் தருணத்தில் பாகிஸ்தான்  என பிரிந்துபோகும் பகுதியிலிருந்து முஸ்லீம் அல்லாத நண்பர் ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். உங்களைப்போன்றவர் ஆகஸ்ட் 15- சுதந்திரம் என கொண்டாட்டங்களில் இருக்கிறீர்கள். எங்கள் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? என்ன மகிழ்ச்சி எங்களிடம் இருக்கும்?  இந்த அச்ச உணர்விற்கு  பதில் என்ன என்கிற நிலை இருந்தது. அதே நேரத்தில் இந்திய யூனியன் என அறியப்படும் பகுதிகளில் வகுப்புக்கலவரம் என்பதும் காந்தியை கவலையுற செய்தன. பாகிஸ்தான் பகுதியில் ஏதாவது நேர்ந்தால் ஆகஸ்ட் 15க்கு பின்னர் அதன் விளைவுகளை இந்தியாவில் சந்திக்க நேரும் என காங்கிரஸ் மாகாண தலைவர்கள் பேசினர். இதை கேள்வியுற்ற காந்தி காங்கிரஸ் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டுவிட்டதா - அமைப்பு விதிகள் நான் அறியாமல் மாறிவிட்டனவா எனகிற கேள்விகளை எழுப்பினார். மக்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினால் யாரால் கட்டுப்படுத்த இயலும் என்றார்.
 ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை சார்ந்த ஆர்தர் மூர் காந்தியிடம் நீங்கள்தான் பெரும் சக்தி எனச் சொன்னபோது   I am a spent Bullet  -பாகிஸ்தான் வருவது உறுதியாகிவிட்டது. நட்பு வருமா எனத் தெரியவில்லை என்றார். மற்றொரு கடிதம் ஒன்றில் பாகிஸ்தான்  என்கிற முடிவு தவறான ஒன்று. ஆனால் நான் யாரை எதிர்த்து எந்த முடிவிற்காக போராடுவது என காந்தி எழுதியிருந்தார். புவிப்பிரிவினையும் சொத்துபிரிவினையும் மனங்களின் பிரிவினையாக தொடரவேண்டுமா என்கிற கேள்வியை அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். முஸ்லீம் லீகிலும் சிலர்  Hanske liya hai pakistan, Larke lenge Hindustan ( we got pakistan in fun; we will take Hindustan by force )என முழங்கி வந்தனர்
ஆசப் அலிக்கு அவர் எழுதிய கடிதத்தில்  சுதந்திரம் கிடைத்துவிட்டது- ஆனால் நான் உறைந்து போயுள்ளேன். நான் வழக்கொழிந்தவன் ஆகியுள்ளேன் (Freedom has come but it leaves me cold.. so far as I can see, I am a back number). நம்மிடம் அகிம்சை என்பது மேலெழுந்தவாரியாகவே இருந்துள்ளது. இதயத்தில் வன்முறை நிறைந்துள்ளது என தெரிவித்திருந்தார். வேறு கடிதம் ஒன்றில் பிரிட்டிஷார் போகின்றனர்- இதில் உற்சாகம் கொள்ள என்ன இருக்கிறது என எழுதியிருந்தார்.
 மருமகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் நாட்டில் அதிகார மாற்றம் -பாகிஸ்தான் உருவாக்கம் எனக்கு அதிக strain  தந்துள்ளது நீண்டநாட்கள் வாழ்வேனா என்பதில் நம்பிக்கை இழப்பு வந்துவிட்டது என எழுதினார் . I almost despair of seeing peace in my life time   என நொந்து பேசினார். அமைதி விரும்பும் மனிதனுக்கு தீங்கு நிறைந்த உலகில் இடமில்லாமல் போகலாம். ஆனாலும் அவன் அங்குதானே வாழவேண்டும் என தன்னை அவர் சமாதானம் செய்துகொண்டு வந்தார்.
கண்முன் நிகழும் அனைத்து தவறுகளையும் சரிசெய்யமுடியாது. அதே நேரத்தில் எனக்கு அதில் பொறுப்பில்லை என சொல்லவும் முடியாது. எனது ஆன்மா ஓர் பக்கம் நகர்கிறது. உடம்போ வேறுபக்கம் இழுக்கிறது. சிலுவையில் அறைந்து கொள்ளும் போராட்டம்தான் தீர்வு போல் தெரிகிறது என அவர் பேசிக்கொண்டிருந்தார்.
ஜூலை 1947ன் இறுதியில் அவர் படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நடந்துகொண்டிருப்பவை எனக்கு உவப்பாக இல்லை. நீங்கள் யாரும் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என சொல்லவில்லை. ஆகஸ்ட் 15க்கு முன் நான் பீகார் நவகாளிக்கு செல்ல விழைகிறேன். ஹரிஜன் பத்திரிகையைக் கூட நிறுத்திவிடவேண்டும் என கருதுகிறேன். அதில் நான் வேறுபட்ட வழிகாட்டலை தருவதாக அமைந்துவிடக்கூடாது  என எழுதினார்.
 காந்தியின் தோழர்களோ அரசாங்க பொறுப்பேற்று நிர்வாகிகளாக செயல்படவேண்டும். அவர்கள் பொதுமக்கள் கருத்தை  தெரிந்து செயல்படவேண்டிய நிலையில் இருந்தனர். சீர்திருத்தக்காரர் எதையும் துணிச்சலாக சோதித்துவிடமுடியும். நிர்வாகிகளால்  அவ்வாறு முடியுமா?
 முதல் கவர்னர் ஜெனரல் மெளண்ட்பாட்டன் என தனது தோழர்கள் எடுத்த முடிவை காந்தி பாராட்டினார். முன்னால் எதிரி என அறியப்பட்ட நிர்வாகம்  ஒன்றை சார்ந்தவரை நம்பி ஏற்றது துணிச்சலான செயல் என்றார். யூனியன் ஜாக் கொடி தொடர்ந்து பறக்கும் என்ற செய்தி பரவியபோது உணர்ச்சிவசப்படவேண்டாம் என்றே காந்தி கருத்து தெரிவித்தார். அது வதந்திதான் என தெரியவந்தபோது பலரும் குதித்து மகிழ்ந்தனர். அதையும் அவர் நிதானப்படுத்தவே செய்தார். திராவிடஸ்தான் என்கிற முழக்கம் எழுந்தபோது அவர் அதை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கொடி குறித்து பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என அவரிடம் கேள்வி வந்தபோது  If the Pakistan flag represents all the inhabitants equally, irrespective of religion, it will command my salute as it should yours  என்கிற கருத்தை அவர் தந்தார்.
இந்தியா ஒட்டிஇணைந்து செயலாற்ற வேண்டும் எனில் அது தனது நெறி சார்ந்தவற்றில் பிறழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். காங்கிரஸ் தனது நெறி மேன்மை கொண்டு கட்டப்பட்ட இயக்கம் எனில் அரசியல் விடுதலைக்குப் பின்னர் அதை விட்டுவிடவேண்டும் என்பதில்லையே என அவர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். காங்கிரஸ் சக்தி வாய்ந்த அமைப்பாக தொடரவேண்டும் எனில் ஆக்கபூர்வ செயல்பாடுடையவர்களின் அசோசியேஷன் ஆக அது இருக்கவேண்டும் என்றார்.
சர்க்கா போட்ட மூவர்ண கொடிக்கு பதிலாக அசோக சக்கரம் ஏற்கப்பட்டு புதிய துணிக்கொடிகள் காதி கடைகளுக்கு வந்ததால் பழைய கொடிகள் ரூ 2 லட்சம் மதிப்பில் விற்கப்படமுடியாமல் போன செய்தி அவர் செவிக்கு எட்டியது. ஏழைகளின் ஸ்தாபனம் பாதிக்கப்படக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்- பழைய கொடியை விற்காமல் புதுக்கொடிகளை விற்காதீர் என காந்தி தன் கருத்தை தெரிவித்தார்.
இந்தி தேவநாகரி எனும் பிரச்சனை அவரிடம் வந்தபோது இந்தியா இந்துக்கள்- முஸ்லீம்கள் என அனவருக்குமான நாடு. எனவே எளிய இந்தி- எளிய  உருது கலந்த இந்துஸ்தானிதான் மொழியாக இருக்கவேண்டும். அது தேவநாகரி மற்றும் உருது ஸ்கிரிப்டில் இருக்கவேண்டும் என்றார்.
விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்-  சிறு விஷயங்கள் (little things ) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது.. ஆனால் நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார்..
II
 ஜூன் 11, 1947 அன்று  திவான் சர் சி பி ராமசாமி அய்யர் ஆகஸ்ட் 15 அன்று திருவாங்கூர் சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் என்றார். உடன் ஹைதராபாத் நிசாமும் அறிவித்தார். பிரிட்டிஷ் இருக்கிறவரை அதன் அதிகாரத்தில் திருப்தியுற்ற திவான் தற்போது இவ்வாறு பேசுவது சரியாகாது என காந்தி பதில் தந்தார். திருவாங்கூருக்கு சொன்னதுதான் ஹைதராபாதிற்கும் என்றானது. படேலின் பெரும் முயற்சியால் பல சமஸ்தான பிரதிநிதிகள் அரசியல் அசெம்பிளிக்கு வர இசைந்தனர். காஷ்மீர் பெரும் பிரச்சனையாக இருந்தது. நேரு, படேல் , மெளண்ட்பாட்டன், காந்தி என பலதரப்பிலிருந்தும் முயற்சி தேவைப்பட்டது.
ஆகஸ்ட் 1947 முதல்வாரத்தில் அவர் காஷ்மீர், ராவல்பிண்டி சென்றார். காஷ்மீரில் மகாராஜா, மற்றும் அப்துல்லா ஆகியோர்களை சந்தித்து பேசினார். ராவல்பிண்டியில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்தார். என்ன மிருகத்தனம்- கொடூரம் என வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.. சாவு வருவதற்கு முன்னர் செத்துவிடக்கூடாது. அஞ்சாமல் நிலைமைதனை சமாளிக்க பார்ப்போம் என்றார். ஆகஸ்ட் 15 பற்றி பாட்னாவில் கேட்டபோது prayer, fasting, spinning  மூலம் கொண்டாடுங்கள் என்றார்.
நவகாளி- கல்கத்தா  கலவரம் நிற்க வேண்டும்  அங்கு அமைதி  தழைக்க செய்வதற்கு நேரே செல்லவேண்டும் என முடிவெடுத்தார் காந்தி. மனதிற்கு உகந்த செயல் என அவர் நினைத்துவிட்டால் அதற்காக அனைத்து துனபங்களையும் ஏற்க சித்தமாக இருப்பது அவரது இயல்பு. கல்கத்தாவில் சுக்ரவார்தியுடன்  முஸ்லீம் பகுதியில் ஒரே வீட்டில் தங்குவது என்பதை அவரது ஒப்புதலுடன் காந்தி அறிவித்தார். ஆகஸ்ட் 13 1947ல் இதை படேலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.  உடனடியாக படேல் பதிலளித்தார். மிகமோசமான பகுதியில் பொருத்தமில்லா கம்பெனியுடன் தங்கி ஆபத்தை மேற்கொள்கிறீர்கள் . நான் அஞ்சுகிறேன் என்றார் படேல்.
சரியாக அன்று மதியம் 2.30க்கு யாரும் குடியிருக்காத பாழடைந்த பெலியகட்டா ஹைதாரி மான்சனுக்கு  காந்தி சென்றார். ஜன்னல், கதவுகள் உடைந்து கிடந்தன. ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. அதற்கு முன்னர் நூற்றுக்கணக்கானவர்கள் பயன்படுத்தியிருந்த நிலையில்  அக்கழிப்பறை இருந்தது.
பெய்த மழையால் களிமண் சேறும் சகதியுமாக இருந்தது. அதன் மீது பிளீச்சிங் பவுடர் தூவியிருந்ததால் தலை கிறுகிறுக்க செய்ததாக பியாரிலால் பதிவு சொல்கிறது. காந்திக்கு ஓர் அறை. அலுவலகம் செயல்பட வேறு ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டமாக  வந்ததவர்கள் காந்தியிடம் ஏன் இங்கு வந்தீர்கள்-  இந்துக்கள் நாங்கள் கஷ்டப்பட்டபோது எங்கே போனீர்கள் என்றனர். காந்தி அறையில் அமர்ந்திருந்தார். கற்கள் வீசப்பட்டன. நவகாளியில் உங்கள் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1946க்காக 1947ல் பழிவாங்குவது என்ன நியாயம் இருக்கமுடியும் என காந்தி வினவினார். இங்கிருந்து நான் சேவை செய்ய விழைகிறேன் என்றார். என் வாழ்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் எனக்கு எதிராக நடந்துகொள்ள விரும்பினால் அவ்வாறே செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
நவகாளியில் அமைதி கொணர சுக்ரவர்தி பெரும்பாடுபடுவார் என்பதை உணருங்கள் என்றார். உங்கள் அகிம்சா உபதேசத்தை நிறுத்துங்கள். இஸ்லாமியரை இங்கு வாழவிடமாட்டோம். வெளியேறுங்கள் என்றது கூட்டம். எனக்கு உங்களைவிட வரலாறு தெரியும்.  இந்து இளைஞன் இஸ்லாமியரை மாமா என் உரிமையுடன் அழைக்கும் பழக்கம்பற்றி நீங்கள் அறியவேண்டும்.. விழாக்களில் இணைந்து கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். போலீசை அழைக்கமாட்டேன். நான் எவ்வாறு இந்துக்களுக்கு விரோதியாக இருப்பேன் என காந்தி எடுத்துரைத்தார். சுக்ரவார்தியை வரச்சொல் என்றது கூட்டம். அவர் வந்தபோது கொலைகளுக்கு நீரே காரணம் என்றனர். ஆமாம் நான்தான் பொறுப்பு என்றார் அவர். கல்கத்தாவில் 20 லட்சம் இந்து முஸ்லீம்கள் மோதிக்கொண்டிருந்தால் நான் நவகாளியில் எந்த முகத்துடன் செல்வது என்றார் காந்தி. பதட்டம் சற்று தணிய இரவு 11 மணிக்கு பின்னர் உணவு ஏதுமின்றி காந்தி படுக்கைக்கு சென்றார். இதே கோபப்பட்ட இளைஞர்களில் சிலர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு  செக்யூரிட்டி போல் நின்றனர்.
ஆகஸ்ட் 14 அன்று இன்று இரவு இந்தியா துண்டாடப்படுகிறது. நாளை முதல் விடுதலை -  சுதந்திரநாடு என்கிற கொண்டாட்டம் இருக்கும். கூடவே துயரமும் இருக்கிறதே என்றார் காந்தி. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆயிரக்கணக்கில் ஒன்றாக ஊர்வலம் செல்கிறார்கள். தேசியக்கொடி ஏற்றப்போகிறார்கள் என்ற செய்தியும் வந்தது. இரவு 10 மணிவரை ஏரிப்பகுதியில் சுக்ரவர்தியுடன் காந்தி நடைப்பயிற்சி மேற்கொண்டார். நேரமாகிவிட்டது. நான் காலை 3.30க்கு எழுபவன் எனச்சொல்லி  அவர் 11 மணிக்கு படுக்கச் சென்றார். எங்கும் விடுதலை கொண்டாட்டங்கள் கொடிகள் தோரணங்கள். இஸ்லாமிய சகோதரர்கள் காந்தி தங்கியிருந்த அந்த இல்லத்தில் தோரணம் விளக்குகளை அலங்கரித்தனர்.
ஆகஸ்ட் 15 1947 அன்று காந்தி வழக்கத்திற்கு மாறாக விடியற்காலை 2 மணிக்கே எழுந்தார். அன்று மகாதேவ தேசாய் நினைவுநாள். அதை அனுசரித்தார். சிலபெண்கள் ரவீந்திரநாத் தாகூரின்  விடுதலை கீதங்களை பாடிக்கொண்டே வந்து காந்தியை தரிசித்தனர். அதே போல் மற்றொரு  குழுவில் பெண்கள் பாடிக்கொண்டே வந்தனர்.
காந்தி காலை நடைப்பயிற்சிக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காக ஏராள மக்கள் கூடினர். அரைமணிக்கு ஒருமுறை அவர் மக்கள் பார்வைக்கு தன்னை வைத்துக்கொண்டார். மேற்கு வங்க அமைச்சர்கள் வந்தனர். முட்கிரீடம் சூடியுள்ளீர்கள். எளிமையாக இருங்கள். உண்மை அகிம்சையை போற்றுங்கள். ’அதிகாரம் எச்சரிக்கை - ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்றுங்கள் என்றார். அன்று மாலையில் 30000 மக்கள் கூடினர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார். அய்ரோப்பியர் இங்கு தங்கினால் அவர்களையும் கண்ணியத்துடன் நடத்துங்கள் என்றார். 
அன்று இரவு சுக்ரவர்தி கார் ஓட்ட கல்கத்தா நகரை சுற்றிவந்தார் காந்தி. பல இடங்களில் இஸ்லாமியர் சூழ்ந்துகொண்டு மகாத்மா காந்தி ஜிந்தாபாத் முழக்கமிட்டனர். தலைவர்கள் இருவரும் ஒருசேர ஜெய்ஹிந்த் என்றனர்.
 ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு கடிதம் எழுதினார் காந்தி. கடிதத்தில் எனக்கு எல்லா உதவிகளும் முஸ்லீம் நண்பர்களே செய்கின்றனர். எனக்கு தென்னாப்பிரிக்கா, கிலாபத் நாட்கள் நினைவிற்கு வருகின்றன.. இத்தருணத்தில் நான் பகைவன்  ஆக எவருக்கும் இல்லை. சுக்ரவர்தி மாறியிருக்கிறார். அப்படித்தான் தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார்.
 காந்தியை பார்க்க வந்த பலர் கால் ஷூக்களுடன்  நுழைந்தபோது ராஜாஜி மட்டும் மரியாதையுடன் தனது காலணியை வெளியே விட்டுவிட்டு சற்று தூரம் நடந்துவந்து காந்தியைப்பார்த்தார். இருவர் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் சிரித்து வேடிக்கை பேச்சுக்களில்  ஒரு மணிநேரம் ஈடுபட்டனர்.
 ஆகஸ்ட் 16 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் 50ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.  காந்தி தனது செய்தியில் திருட்டு குறித்து பேசினார். பண்டைய நமது முன்னோர்கள் காலத்தில்  வீடுகளை எவரும் தாளிடாத பழக்கம் இருந்துள்ளது.  மக்களிடம் நாணயம் இருந்தது. திருட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் விடுதலை தினத்தில் அரசாங்க அலுவலகத்தில்  கூட்டம் புகுந்து இருக்கைகளை நாசப்படுத்தி சிலவற்றை தூக்கி சென்றுள்ளனர். இராணுவம் வந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டியுள்ளதை நினைத்துப் பார்த்தால் அவமானகரமாக இருக்கிறது. எவர் எதை எடுத்து சென்றாரோ அதை அவர்களே அரசாங்க அலுவலகத்தில் வைத்துவிட்டனர் என்ற செய்தி வந்தால் நல்லது என்றார்.
 சுக்ரவர்தி ஆகஸ்ட் 18 ஈத் நிகழ்வுகளுக்கு இஸ்லாமியர் இந்துக்களை அழைத்துள்ளதாக தெரிவித்தார். ஈத் அன்று ஏராளமானவர்கள் காந்தியை பார்க்க பழங்களுடன் வந்தனர். மசூதி தொழுகையின் போது இந்துக்கள் பாடல்களை போடாமல் இருக்க காந்தி வேண்டுகோள் விடுத்தார். மாலை 5 லட்சம்பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டம் முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப்பில் நடந்தது. விடுதலையை காத்திட அளப்பரிய தியாகம் செய்யத்தயார் என இஸ்லாமிய தலைவர்கள் பேசினர். காந்திஜி உண்மையில் மகாத்மாதான் எனப் பேசினார் சுக்ரவர்தி.
III
 மகாராஜா ஒருவருக்கு அவர் அனுப்பிய லட்சம் ரூபாய்க்கு ரசீது அனுப்பி நன்றிக் கடிதமும் காந்தி எழுதினார். நவகாளி நிவாரணத்திற்கு 1 1/2 லட்சம் ரூபாய் இருக்கிறது. தற்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்- கல்கத்தா, சிட்டகாங், பீகார் பகுதி இந்து முஸ்லீம்களுக்கும் தங்கள் பணத்திலிருந்து நிதி ஒதுக்க தங்கள் அனுமதியை கோருகிறேன்  என எழுதினார். தான் அனுப்பும் நிதி எதற்கு செலவிடப்படுகிறது என்பதை அவர் அறியச் செய்யவேண்டும் என்கிற பொறுப்பு நிதி பெற்றுக்கொள்பவர்க்கு இருக்கிறது என்கிற பேருண்மையை காந்தி இதன் மூலம் புலப்படுத்தினார்.
 மெளண்ட்பாட்டன் One Man Boundary Force  என காந்தியைப்புகழ்ந்து  கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 15 அன்று தங்கள் பெயரைகேட்டவுடன் அரசியல்நிர்ணயசபை உற்சாகத்துடன் மெய்சிலிர்த்து தங்களை நினைத்துக்கொண்டது என்பதையும் அவர் எழுதியிருந்தார். 
ஆகஸ்ட் 17 அன்று காந்திஜிக்கு தந்தி ஒன்று வந்தது. ராவல்பிண்டியில் நடந்ததைவிட அதிகமாக லாகூர் நகரில் இந்துக்கள் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. வர்த்தகப் பகுதி தீக்கிரையாகியுள்ளது. சிலர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். தப்பிக்க நினைத்தவர்களை போலீசாரும் இராணுவமுமே சுட்டுள்ளது. எனவே லாகூருக்கு வாருங்கள் என்பது தந்தி மூலம் தரப்பட்ட செய்தி.. படேலுக்கு அதை அனுப்பி உண்மை கண்டறிய காந்தி வேண்டினார். உண்மையாக இருந்தால் கொடுமையானது என்றார்.
ஆகஸ்ட் 21 அன்று தன்னை சந்தித்த பெண்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரிகளிடம் செல்லுங்கள்- நட்பு பாராட்டுங்கள் என காந்தி தெரிவித்தார்.
 பஞ்சாப் சென்று பார்த்து வந்த நேரு ஆகஸ்ட் 21 அன்று காந்திக்கு அவரின் பஞ்சாப் வருகை அவசியம் என்கிற தந்தியை அனுப்பியிருந்தார். நவகாளியில் தேவைப்படுகிறேன். பீகாரில் சில நாட்கள் தேவைப்படலாம். இச்சூழலில் நான் எவ்வாறு வருவது என நேரு வழிகாட்டவேண்டும் என காந்தி பதில் அனுப்பினார். உடனடியாக தங்களை போகச்சொல்லவில்லை- நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். திரும்ப நான் சொல்கிறேன் என நேரு பதில் அனுப்பினார்.
பஞ்சாபியர் சிலர் காந்தியை சந்தித்து பெண்கள் கடத்தப்படுவது குறித்தும், நடைபெறும் கொலைகள் பற்றிய செய்தியையும் தெரிவித்தனர். அவசியமெனில் உடன் செல்கிறேன் என செய்தியை நேருவிற்கு காந்தி அனுப்பினார். நேரு ஆகஸ்ட் 25ல் தான் மறுமுறை பஞ்சாப் போய்வந்து அறிந்த செய்திகளை பகிர்ந்துகொண்டார். அமிர்தசரஸ் பகுதியில் 50000 இஸ்லாமியர் அழிக்கப்பட்டனர் என சொல்வது கூடுதலாக இருக்கலாம். ஆனால் 10000க்கும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இரு பக்கங்களிலும் ஏராள கொலைகள்- இழப்புகள் தெரிகின்றன. அகாலியினர் கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் இருதரப்பிலும் மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்- மாஸ்டர் தாராசிங் அமைதிக்கு முயற்சித்து வருகிறார். சில இடங்களில் அகாலிகளுடன் ஆர் எஸ் எஸ் சேர்ந்துள்ளனர்- மவுண்ட்பாட்டனும் காந்தி பஞ்சாப் செல்வது தேவை என கருதுகிறார்  என நேரு தெரிவித்திருந்தார்.
சுசிலா நாயார் ராவல்பிண்டி அருகாமையில் இஸ்லாம் அல்லாதவர் முகாம்களுக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை உருவாக்கிட சென்றார். அரசாங்கத்திற்கு கிடைத்த விவரங்களையடுத்து படேல் ஆகஸ்ட் 24 அன்று லியாகத் அலிகானுக்கு கடிதம் எழுதினார்.. முகாமில் உள்ளவர்க்கு சாப்பாட்டுவசதி, இதர வசதிகளை செய்துகொடுத்து நம்பிக்கை உண்டாக்க வேண்டினார். இயலவில்லையெனில் கிழக்கு பஞ்சாபிற்கு முகாமை மாற்றுமாறு வேண்டினார். மேற்கு பஞ்சாப் நிர்வாகம் முழு நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லியாகத் பதில் அனுப்பினார்.
சுசிலாவை அங்கு அனுப்பியுள்ளது பற்றி காந்திக்கு படேல் எழுதினார். காய்கறிகளை வெட்டுவது போன்று மனிதர்கள் நறுக்கப்படுகின்றனர் என படேல் காந்திக்கு தனக்கு கிடைத்த தகவலை பரிமாறிக்கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று படேலுக்கு பதில் எழுதினார் காந்தி. சாவின் வாயிலுக்கு சுசிலாவை அனுப்பியுள்ளேன். ஆனால் முகாமில் இருப்பவர் பாதுகாப்பை நன்மைகளை அறிந்த பிறகே சுசிலா வர இயலும் என தெரிவித்தார். ஆகஸ்ட் 27 அன்று படேல் காந்திக்கு திரும்ப எழுதினார். லேடி மெளண்ட்பாட்டனும் ராஜ்குமாரியும் சுசீலாவை பார்த்துள்ளனர். சுசிலா செல்லக்கூடாது என முகாம் மக்கள் அழுகின்றனர். எனவே அவர் அங்கு தொடர்ந்து நீடிக்கிறார். மற்றவை கடவுளின் விருப்பமென அதில் படேல் தெரிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 24 ஹரிஜன் இதழில் ஒரே வீட்டில் சுக்ரவர்தியுடன் தங்கியிருப்பது- முஸ்லீம் நண்பர்கள் உதவி பற்றி எழுதினார். நாங்கள் இருவரும் இறைவனின் விருப்பத்திற்கேற்ப  நடனமாடுபவர்கள். இறைவன் எங்களை கருவியாக்கிக்கொண்டுள்ளார் என எழுதினார்.
ஆக்ஸ்ட் 26 அன்று நள்ளிரவிலேயே விழித்த காந்திஜி தேங்கிக் கிடந்த வேலைகளில் கவனம் செலுத்தினார்.  இரவு 1 1/2 மணிக்கு படுத்து அரைமணி ஓய்வெடுத்தார். மீண்டும் 2 மணியிலிருந்து வேலையைத்துவங்கினார். காலை பிரார்த்தனைவரை  வேலை செய்துகொண்டிருந்தார்.  கவலையுடன்  அமைதியின்றி இருப்பதாக தெரிவித்தார். ஏன் நம்பிக்கை இழந்துள்ளேன் என வினவினார்.
ஆகஸ்ட் 27 அன்று கிட்டெர்பூர் துறைமுக பகுதியில் தொழிலாளர்களிடம் உரையாற்றினார். மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.  முஸ்லீமிடமா இந்துவிடமா எவரிடம் வேலைபார்க்கிறோம் என பார்க்காது ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார்.
 அடுத்தநாள்யுனிவர்சிட்டி சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களுடன் பிரார்த்தனை கூட்டம் இருந்தது. சுக்ரவர்தி குறித்து தவறாக சொல்லப்பட்டபோது நம்மிடம் வந்த எந்த விருந்தாளியின் மனதையும் நோகச் செய்வது நல்ல மரபல்ல என்றார் காந்தி.  சுய கட்டுப்பாடு, அடக்கம் என்கிற பண்புகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்றார்.
 மீராபென்னுக்கு எழுதிய கடிதத்தில் நான் அடுத்தக்கணம் எங்கு இருப்பேன் எனத்தெரியவில்ல.  சிட்டுக்குருவிகள் அப்படித்தானே வாழ்கின்றன.  கணத்திற்கு கணம் வாழ்வோம் ( Let us literally live from moment to moment)  என தெரிவித்திருந்தார்.
ராஜ்குமாரி அம்ரித் கெளருக்கு  மானுடத்தின் மீது நம்பிக்கை இழப்பு வேண்டாம். சில துளிகள் அழுக்காக இருப்பதால் சமுத்திரம் அழுக்காகிவிடுவதில்லை என்பதை புரிந்துகொள்வோம். ஜவஹர் டெல்லிக்கு வரச்சொல்கிறார் என கடிதம் எழுதினார்.
ஆகஸ்ட் 29 அன்று காந்தி மீண்டும் நேருவிற்கு தந்தி அனுப்பினார். சர்தார் அஜித் சிங் என்னை பஞ்சாபிற்கு வர வற்புறுத்துகிறார். என்ன செய்வது. உயிர்களும் உடைமைகளும் போன பின்னர் போவது கேலிக்குரிய விஷயமல்லவா என காந்தி கேட்டிருந்தார். நேரு தன் பதிலில்  தாங்கள் டெல்லிக்கு வருவது அவசியம் என தெரிவித்தார். மேலும் நேருவும் லியாகத்தும் இணைந்து பஞ்சாப் சுற்றுப்பயணம் செல்கின்றனர். அமைதி திரும்பலாம். மற்றவை கடவுளின் கிருபையில் இருக்கிறது என பஞ்சாபிலிருந்து செய்தி காந்திக்கு கிடைத்தது.
 ஆகஸ்ட் 30 1947ல் நேருவிற்கு காந்தி எழுதினார். படேல் மற்றும் தங்கள் விருப்பம் இல்லாமல் நான் பஞ்சாப் செல்லமாட்டேன். டெல்லியில் வந்து அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பது என்பது பொருத்தமானதல்ல.   My advice has value only when I am actually working at a particular thing.  வெறும் கன்சல்டண்ட் எனும் வகையில் நான் உருவாகவில்லயே என  அதில் குறிப்பிட்டிருந்தார். தான் பார்க்காத அறியாத செயல்படமுடியாத ஒன்றின்மீது கருத்து சொல்வது எனபது அவர் இயல்பிற்கு மாறானது. வெற்று விவாதங்களில் அவருக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இறங்கி காரியமாற்றினால்தான் தீர்வு என்பதில் அவர் உறுதியாக இருந்தவர்.
 ஆகஸ்ட் 31 அன்று இரவு ரெளடி கும்பல் ஒன்று காந்தி இருந்த இடத்திற்கு வந்து கலவரம் செய்தது. ’சுக்ரவர்தி ராஸ்கல் எங்கே எனக்கேட்டது அக்கும்பல். தாக்க வேண்டும் எனில் என்னை தாக்குங்கள் என்றார் காந்தி. போலீசார் அவர்களை தாக்கி அப்புறப்படுத்தவேண்டாம் என்றார். விவரம் அறிந்து முதலமைச்சர் டாக்டர் பிரபுல்லா கோஷ் வந்தார். இந்துமகாசபா தலைவர்களை கைது செய்யட்டுமா என்றார். காந்தி வேண்டாம். அமைதி நிலவ அவர்களிடம் பொறுப்பை கொடுக்கப் பாருங்கள் - அவர்களிடம் ஒத்துழைப்ப வாங்கப் பாருங்கள் என்றார். இரவு 12.30க்குத்தான் அன்று காந்தி படுக்கைக்கு சென்றார்.
 போலீசார்   கண்ணீர்புகை மூலம்தான் கூட்டத்தை விடியற்காலை கலைக்க முடிந்தது. இதுதான் ஆகஸ்ட் 15 நமக்கு தருகிறதா என காந்தி கவலையுடன் வினவினார்.
நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி கல்கத்தாவில் அமைதிக்கான வேண்டுகோளைவிட சம்மதித்தார். காந்தியும் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். காந்தியின் நம்பிக்கையில் முஸ்லீம்கள் சிலர் டிரக் வண்டியில் தங்கள் இல்லங்களுக்கு திருப்பியபோது அவர்கள் மீது கையெறிகுண்டு வீசப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர். செய்தி அறிந்து காந்தி விரைந்தார். கொடுமையான நிகழ்வைப் பார்த்தார்.
 காந்தியிடம் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டு வந்தவர்களிடம் வேறுவழியில்லை. எரியும் நெருப்பின் மத்தியில் போய் நின்று அமைதிப்படுத்தவேண்டும். அவசியமெனில் நாம் அதில் உயிர் துறக்கவும் சித்தமாகவேண்டும் என்றார். அன்று  மதியம்  கொடுக்கப்பட்ட பழத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரின் உடல் உபாதைக்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு நீர் குளுகோஸ் கொடுத்தனர். ராஜாஜி வந்தார். குண்டர்களுக்கு எதிராக பட்டினி என்பது செல்லுபடியாகுமா எனக் கேட்டார். அவர்கள் இதயத்தை தொடுகிறதோ இல்லையோ சமுகம் அவர்களை ஏற்கவில்லை எனபதாவது நடக்குமே என்றார் காந்தி. ராஜாஜி தாங்கள் இறக்க நேரிட்டால் பெருந்தீ உருவாகும்- மோசமாகும்  என்றார் (suppose you die, the conflagration would be worse) .   அதை நான் பார்க்க இருக்க மாட்டேன் அல்லவா- என கடமையை செய்தவனாவேன் (Atleast I won't be a living witness of it. I shall have done my duty. More is not given to a man to do)  என்றார் காந்தி.
காந்தி  உண்ணா நோன்பு இருக்கப்போகிறார் என்ற செய்தி ராஜாஜிக்கு காட்டப்பட்டப்பின் பத்திரிகைகளுக்கு இரவு 11 மணியளவில் தரப்பட்டது.  பாடுபட்ட சுதந்திரம் காக்கப்படவேண்டும் எனில் அனைவரும் கும்பல் தாக்குதல்- கொலை என்பதை விட்டு மறக்கவேண்டும். சட்டத்தை கும்பல் கையில் எடுக்கக் கூடாது என்பது விதியாக மாறவேண்டும் (must completely forget lynch law....The recognition of the golden rule of never taking the law into one's own hands has no exceptions.).. என் உண்ணாநோன்பு கருவி பொய்த்ததில்லை. சிலநேரம் என் வார்த்தைகள் செய்யமுடியாததை என் பட்டினி  செய்துவிடுகிறது (what my word in person cannot do, my fast may) என்கிற தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
அறிவித்தபடியே செப்டம்பர் 1 1947 இரவு 8.15க்கு அவர் உண்ணாநோன்பை துவங்கினார். நிலைமைகள் சீராகும்வரை பட்டினிதான் என்றார். நேருவிற்கு தெரிவித்த கடிதத்தில் கோபம் கொள்ளவேண்டாம்-  கல்கத்தாவில் நிலைமைகள் சீராகும்வரை  இச்செயல் தவிர்க்கமுடியாதது என எழுதினார்.
 Ref:
 Mahatma Gandhi   The Last Phase Part 2  Pyarelal

No comments:

Post a Comment