https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, September 15, 2019

புதிய மின்புத்தகம் காந்தியை கண்டுணர்தல்

தோழர் பட்டாபியின் புதிய மின் புத்தகம்  ’காந்தியை கண்டுணர்தல்’
நேரமும் விருப்பவும் உள்ளவர்கள்  கீழ்கண்ட இணைப்பில் பெறமுடியும்.

https://ia801508.us.archive.org/23/items/gandhibook_201909/Gandhi%20Book.pdf
முன்னுரையும் உள்ளடக்கமும் இங்கு தரப்பட்டுள்ளன.

காந்தியை கண்டுணர்தல்
                                      முன்னுரை
காந்தி காலம் கடந்தவரா- அவரது நடைமுறைகளும் சிந்தனைகளும் இன்றுள்ள உலகிற்கு பொருத்தமற்றவையா எனத் தேடுவதற்காக காந்தி ஆக்கங்களிலும் அவர் குறித்த எழுத்துக்களிலும் பயணிக்க ஆரம்பித்தேன். காந்தி மிகப் பொருத்தமானவர்- என்னால் ஒருக்கணம் கூட அவர் போல் நிற்க முடியவில்லை என்பதை உணரத்துவங்கினேன். காந்தியை கண்டுணர்தல் எனத்துவங்கி என் அகங்காரத்தை- உண்மை புறக்கணிப்புகளை- பல தருணங்களில் பிசிரற்ற மானுடநேயம் தொலைத்ததை என்னால் கண்டுணரமுடிந்தது. இக்கட்டுரைகளை எழுதிப்பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதில் படுதோல்வி அடைந்துள்ளதை உரக்கச் சொல்லும் தைரியத்தால் ஆகப் போவது ஏதுமில்லை.
இங்கு இடம்பெற்றுள்ள கட்டுரைகள் எனது இணையதளத்தில் கடந்த  சில மாத இடைவெளிகளில் வெளிவந்தவைகள்தான். கட்டுரைகளை தொகுத்தால் எனக்கு மட்டுமில்லாமல் வேறு எவருக்கும் கூட சற்று உதவியாக இருக்குமே என்கிற ஆசை உந்துதலால்  ’காந்தியை கண்டுணர்தல்’ புத்தக வடிவமாக வருகிறது. மேலும் காந்தியின் 150 ஆண்டுகள் என்கிற சூழலும் இந்த ஆர்வத்திற்கு காரணமாயிற்று.
வாழ்க்கை என்பது கடமைக்கான காலம் என்பதை தானே வாழ்ந்துகாட்டி தன் வாழ்நாட்களில் உணர்த்தியும் சென்றவர் காந்தி. தன்னை உணரச்செய்திடும், தன்னை பிரதிபலிக்கும் , தன்னை மாற்றத்திற்குள்ளாக்கும்  தொடர் நிகழ்வாக காந்தி அரசியலை உணர்ந்தார். சுயத்தை தேடும் மனிதன் ஒருவரின் நன்னெறியின் வெளிப்பாடாக  அரசியலை அவர் புரிந்துகொண்டார் .
புரட்சியின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார். நன்னெறிக்கான புரட்சி அவசியம். உண்மையைத் தேடல் என்பது அதிகார ஆசையில்லாத நிலையில்தான் சாத்தியமாகும். கடமையை அனைவரும் செய்வோமானால் உரிமைகள் வசப்படும் என்கிற வரிகளை இக்கட்டுரைகளில் நாம் காணமுடியும்.
அகிம்சை உலகாளும் எனில் பெண்வழி உய்வாகவே அது உலகில் மலரும் என்றவர் காந்திஜி. உள்ளத்தை ஆட்கொள்ளும் அபூர்வ ஆற்றல் பெண்களைப்போல் ஆண்களுக்கு வருவதில்லை என்பதும் அவரது மதிப்பீடு. மனைவி தோழியாதல் வேண்டும். அவள் காண்ட்ராக்ட் அடிமையல்ல என அனுபவ வழியே அறிந்து சொன்னவர் காந்தி.
அறிவெனில் அது ஆங்கிலம் என  கருதிக்கொள்ளும் நோய் குறித்தும் பேசியவர் காந்தி. பெற்றோரிடமிருந்து பெறவேண்டியவை சொத்தைவிட நன்னடத்தை நற்குணங்கள்தான் என்பதை  சமூகம் கற்கவேண்டுமே என  செயல்பட்டவர் காந்தி.
விடுதலைக்கு பின்னர் பெரும் விஷயங்களில் மட்டுமே கவனம் குவிந்துவிடும்-  சிறு விஷயங்கள் (little things ) உதாசீனமாக்கப்பட்டுவிடும் என்கிற கவலை அவருக்கு இருந்தது. நமது கிராமங்கள் சிறு விஷயங்களை நம்பியே இருக்கின்றன என அவர் கருதினார். மக்களுக்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு கையாள்வது எனத்தெரிந்தால் போதும் பட்டினி என்பதற்கான அவசியம் இருக்காது  என தன் இறுதி நாளில் அவர் தனது செய்தியை தந்தார்.
அனைத்து மதங்களும் அன்பையும் அருளையுமே போதிக்கின்றன என்பதை அடிப்படையாக எடுத்துக்கொண்டுவிட்டால் என் மதம் மட்டுமே புனிதமானது என்பதோ என் மத அபிமானத்தால் பிற மதங்கள் மீதான வெறுப்பு என்பதோ எழாது . காந்தியின் மதம் குறித்த புரிதலில் நாம் இதை சரியாக உணரமுடியும்.

 தொழிலாளர் அரசியல்வாதிகளின் செஸ் ஆட்டக் காய்களாகிவிடக்கூடாது என எச்சரித்தவர் காந்தி. வேலைநிறுத்தம் ஒன்றை காந்தியடிகள் எவ்வாறு நடத்திக்காட்டினார் என்ற ஆர்வத்தில் அகமதாபாத் பஞ்சாலை வேலைநிறுத்தம் குறித்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. 40 ஆண்டுகள் தொழிற்சங்க பணியாளன் என்ற வகையில் பங்கேற்ற போராட்டங்களில் நான் இவ்வாறு பொறுப்பாக நடந்து கொண்டேனா என்கிற விமர்சனபூர்வ கேள்வி என்னுள் எழுந்தது. அப்போராட்டத்தின் நூற்றாண்டு தருணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டது.

சாதி குறித்த காந்தியின் புரிதல் மற்றும் வெளிப்படுத்தல்கள் எப்படி சாதி ஒழியட்டும் என்பதாக பயணித்தது என்பதை பேசும் கட்டுரையும் இங்கு இடம் பெற்றுள்ளது. காந்தியின் சாதி குறித்த தொகுப்புகள் முன்னரே சில வந்திருந்தாலும் நிஷிகாந்த் கோல்கேவின் சாதிக்கு எதிரான காந்தி முக்கியமாக எனக்குப்படுகிறது. அப்புத்தகம் குறித்த அறிமுகவுரை தர காந்தி கல்வி நிறுவன நண்பர்கள் வாய்ப்பளித்தனர்.  அவர்களுக்கு எனது நன்றி.

அம்பேத்கர் காந்தி இருவரும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரே இலக்கை அடைய வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் பகைப்புலனில் வைத்து பார்க்கப்படவேண்டியவர்களா இணக்கப்படுத்திக் கொள்ளப்படவேண்டியவர்களா என்கிற விவாதம் பெருமளவில் நடந்து வருகிறது. இதுகுறித்த கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

காந்தியும் பெண்களும் கட்டுரை புதிய செய்தி எதையும் தராது எனினும் சுருக்கமான பார்வை ஒன்றை வாசகர்களுக்கு நல்கும் என நம்புகிறேன். காந்தி - பகத்சிங் சர்ச்சை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. பகத்சிங்கை காந்தி காவு கொடுத்தாரா எனும் கட்டுரை இது குறித்து விரிவாகப் பேசுகிறது.

 இத்தொகுப்பில் உள்ள முக்கிய கட்டுரை மறுப்பின் மெய்யியல். ரமீன் ஜெகன்பெக்லூ எனும் இரானியர் காந்தி குறித்து புத்தகங்கள் எழுதி வருபவர். அவரின் கீழ்ப்படியாமை – மறுப்பு மற்றும் காந்தி அதை செயல்படுத்தியது குறித்து காந்தி கல்வி நிலையத்தில் உரையாற்ற வாய்பு கிடைத்தது. அக்கட்டுரை இன்றுள்ள அரசியல் சூழலில் ஒருவருக்கு தேவைப்படும் மறுப்பிற்கான தைரியத்திற்கு மேலும் பலம்கூட்டும்.

இத்தொகுப்பிலுள்ள ஆறுகட்டுரைகளை மார்க்சியர் காந்தியர் உரையாடலாக எடுத்துக்கொள்ளலாம். மார்க்சியம் - கம்யூனிசம் குறித்த காந்தி மற்றும் காந்தியர் பார்வையும், காந்தி - காந்தியம் குறித்த மார்க்சியர் பார்வையும் இக்கட்டுரைகளில் பரக்கப் பேசப்பட்டுள்ளன. இவ்விவாதங்களில் நிர்மல் குமார் போஸ் மற்றும் பன்னலால் தாஸ் குப்தா ஆளுமை மிக்கவர்கள். அவர்கள் எழுத்துக்களை இடம் பெற செய்யாமல் தவறியுள்ளேன்.

இறுதி இரு கட்டுரைகள் விடுதலை நெருக்கத்தில் நிலவிய சூழலையும்  காந்தியின் மனப்போராட்டத்தையும் ஒரளவு வெளிப்படுத்துகின்றன. ஆகஸ்டு 1947ல் எப்படி எங்கே  தன் போராட்டத்தை அவர் நடத்திகொண்டிருந்தார் என ஒரு கட்டுரை பேசினால், அவரின்  இறுதி வாழ்நாள் எவ்வாறு பெரும்பணிகளின் ஊடாக கடமைகளால் மட்டுமே கடந்தது என மற்றொரு கட்டுரை பேசுகிறது. இருந்தபோதும், சுடப்பட்டு மரணிக்கும் தருணத்திலும், மறைந்த பின்னரும் அவர் மகாத்மாவாகவே  உணரப்பட்டார்.

காந்தி பேசாப் பொருளில்லை. அவரைப் பேச பேச அவர் பெருகிக் கொண்டேயிருக்கிறார்.


8-9-19                                                         ஆர். பட்டாபிராமன்


காந்தியை கண்டுணர்தல்

(கட்டுரைத் தொகுப்பு)

                                        உள்ளடக்கம்

1. மதச்சார்பின்மை காந்தியின் புரிதல்
2.  காந்தியின் கீதை        
3. சாதிக்கு எதிராக காந்தி   
4 . அம்பேத்கர் காந்தி இணக்கம்
5 . பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?
6.  காந்தியடிகள் வழிகாட்டிய வேலைநிறுத்தம்
7. பெண்கள் குறித்து காந்தியடிகள்
8. காந்தியும் மார்க்சும்
9.  மஷ்ருவாலா பார்வையில் காந்தியும் மார்க்சும்
10. லோகியா பார்வையில் காந்தியும் மார்க்சும் 
11. ஹிரன் முகர்ஜியின் காந்தி   
12. தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும்
13. எம் என் ராயின் காந்தி
14. மறுப்பு  மற்றும் ஒத்துழையாமையின்  மெய்யியல்
15. ஆகஸ்ட் 1947- கவலை தோய்ந்த காந்தி
16. மகாத்மா காந்திஜியின் இறுதிநாள்

No comments:

Post a Comment