அம்பேத்கார் காந்தி இணக்கம்
-ஆர். பட்டாபிராமன்
விடுதலைக்கு முன்னர் எனில் இத்தலைப்பு காந்தி அம்பேத்கார்
இணக்கம் என்று எழுதப்பட்டிருக்கலாம். காந்தியுடன் அம்பேத்காரை இணக்கப்படுத்துவது என்பதற்கான
முயற்சிகள் அப்போது பெருமளவு தேவைப்பட்டன. காந்தி குறித்த விமர்சனங்களை வெளிப்படையாக
அம்பேத்கார் பேசியும் எழுதியும் வந்தார்.
1930களில் கம்யூனல் அவார்ட் எனும் ராம்சே மக்டானல்ட் அவார்ட் காலத்தில் இவ்விணக்கத்திற்கான
பெரும் முயற்சியை வரலாறு பதிவிட்டுக்கொண்டுள்ளது.
தனித்தொகுதி- பொதுவாக்காளர் என்கிற சமரசம் குறித்த உரையாடல்கள்
இன்றும் தொடராமல் இல்லை. விடுதலை இந்தியாவில் அம்பேத்காரின் பங்களிப்பு பெரும் போற்றுதலுக்குரியதானது-
விடுதலைக்குப் பின்னர் காந்தி மெதுவாக பின்
தள்ளப்படுவதும் நடந்தேறியது. பல இயக்கங்களிலிருந்து பல்வேறு தரப்பட்டு வெளிப்பட்ட விமர்சனங்கள்
காரணமாக இருக்கலாம். அவரை பார்த்து பழகி வந்த தலைவர்கள் அருகிப்போனதும் காரணமாக இருக்கலாம்.
காந்தியின் நூல்தொகைகள்- எழுத்துக்கள் பரவலாக சென்றடையாமையும் காரணமாக இருக்கலாம்.
அம்பேத்கருக்கு பின்னரான அம்பேத்கரிய இயக்கங்கள் மற்றும்
மகராஷ்ட்ர அரசு முயற்சி காரணமாக அம்பேத்கர் எழுத்துக்கள் ஓரளவிற்காவது கிடைக்கத்துவங்கின.
பல்வேறு மொழிகளிலும் கிடைக்கத்துவங்கின. அவரை கொண்டாடும் எழுச்சிகளும் பெருகின. அம்பேத்காரையும்
காந்தியையும் எதிர் எதிரே நிறுத்தும் முயற்சிகளும் அவ்வப்போது விவாத அரங்கிலே இடம்பெறலாயின.
இச்சூழலில் அம்பேத்காருடன் காந்தியை இணக்கப்படுத்தும் எதிர்வினைகள் தேவைப்படலாயிற்று.
அப்படி எழுந்த எதிர்வினையில் ஒன்றாக மதுலிமாயி எழுதிய 5 சிறிய கட்டுரைகள் அமைந்துள்ளன.
அவர்தம் கட்டுரைகளின் சாரம் இங்கு தரப்படுகிறது.
மனு-காந்தி மற்றும் அம்பேத்கார் என்கிற புத்தகம் மதுலிமாயி
1993-94 களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவில் தாராளமயமாக்கம் அமுலாக்கபட்ட
காலமது. உலகவர்த்தக அமைப்பு காட் ஒப்பந்தம் விவாதகாலம்.-சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர்
ருஷ்ய உறவுகள் குறித்து பேசப்பட்ட காலம் கன்ஷிராம் மாயாவதி அரசியல் மாற்றாக விவாதிக்கப்பட்ட
காலம். இவை அனைத்தும் குறித்த லிமாயின் 29 கட்டுரைகள் கொண்ட புத்தகம் வெளிவந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அதன் மறுபதிப்பு
2016ல் வந்தது. லிமாயி ஜெயபிரகாஷ் நாரயண், லோகியா, தந்தவதே போன்றவர்களுடன் பணியாற்றிய
சோசலிஸ்ட் தலைவர்களுள் ஒருவர்.
இங்கு இடம்பெறும் கருத்துக்கள் அவரின் சாதி- சமூகநீதி எனும்
பகுதியில் உள்ள சிறிய 5 கட்டுரைகளிலிருந்து தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் தலைப்பாக்கப்பட்டுள்ள
மனு காந்தி அம்பேத்கார் என்பதும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்டுரையே.
காந்தியை சிறுமைப்படுத்துவதை நிறுத்துங்கள் என்கிற கருத்தில்
முதல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மகாத்மாபூலே, நாராயணகுரு, பெரியார், அம்பேத்கார் குறித்த
நன்மதிப்புகள் அவசியமானதே. அவர்கள் சாதியற்ற சமூகத்திற்காக போராடியவர்கள். அதேநேரத்தில்
இவர்கள் குறித்த நன்மதிப்பீடுகள் காரணமாக காந்தியை சிறுமைப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை.
காந்தி துயர்நிறைந்த மானுட சமுதாயத்தின் பக்கம் நின்ற உலக குடிமகன். சர்வதேச பிரதிநிதி.
ஷெட்யூல்ட் மக்களுக்காக போராடியவர். ஒடுக்கப்பட்டவர்க்கும் ஆயுதமற்றவர்க்கும் சிவில்
ஒத்துழையாமை எனும் பேராயுதம் தந்தவர்.
அம்பேத்கார் போலவே அனைவருக்கும் வாக்குரிமை என நின்றவர் காந்தி.
சர்ச்சில்கூட அம்பேத்காரிடம் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை நடைமுறை சாத்தியமில்லை
என்றே தெரிவித்தார். பிரிட்டிஷ் மக்கள் வாக்குரிமை பெற 150 ஆண்டுகள் சொந்த ஆட்சியரிடமே
போராடவேண்டியிருந்தது.
சவுத்பரோ கமிட்டி முன்பு அம்பேத்கார் திறமையாக வாதங்களை எடுத்துவைத்தார்.
படித்தவர்க்கு மட்டும் வாக்குரிமை என்பதுடன் நிறுத்தக்கூடாது என்றார். பாமரருக்கும்
வாக்குரிமை என்பதே ஒருவகை கல்விதான் என்றார். சைமன் கமிஷனிடம் அவர் Joint Electorate with Adult Franchise என்பதற்கு
ஏற்பை தெரிவித்தார். கர்னல் ஃபாக்ஸ் உடன் அம்பேத்கார்
நடத்திய உரையாடலை லிமாயி தருகிறார். பூர்வீககுடிகள் கிரிமினல் டிரைப்ஸ் பகுதிக்கு வாக்குரிமை
தரமுடியுமா என்கிற விவாதம் வருகிறது. அப்போது அது இயலாத ஒன்று என்பதை அம்பேத்கார் ஏற்கிறார்.
அவ்விவாதத்தில் வயதுவந்தோர் வாக்குரிமை- இடஒதுக்கீடு என்பதில் உறுதியான வாதங்களை அடுக்குகிறார்.
வயதுவந்தோர் வாக்குரிமை என்பதை பரிசீலிக்கமுடியாவிட்டால்
என்கிற கேள்விக்கு separate
Electorates என பதில் தருகிறார். ( பக் 5 லிமாயி)
பூர்வீககுடிகள் வாக்குரிமை எனும் அம்சத்தில் அம்பேத்கார்
1945 மே வரை கொண்டிருந்த கருத்தை லிமாயி தருகிறார்
“ ..these aboriginals tribes do not yet possess the
political capacity which is necessary to exercise political power for one’s own
good” (Dr Ambedkar writings and speeches vol 1 page 357-379)
அதேபோல் முஸ்லீம்களை
சமாதானப்படுத்துவது (Appeasement) குறித்தும் விமர்சனங்களை அம்பேத்கார் தந்திருந்தார்.
தக்கர் பாபா பூர்வீககுடிகள் குறித்து அம்பேத்கார் கூறிய கருத்துக்கு மறுப்பளித்து பழங்குடிகள் உட்பட அனைவருக்கும் வாக்குரிமை என குரல்
கொடுத்தார்.
கராச்சியின் 1931 காங்கிரஸ் தீர்மானத்தில் இடம்பெற்ற வயதுவந்தோர்
அனைவருக்கும் வாக்குரிமை, இலவச ஆரம்ப கல்வி, பண்ணையடிமை விடுதலை என்பதெல்லாம் காந்தி
வலியுறுத்தியவைகளே. அதே ஆண்டில் டிசம்பர் 3 அன்று ஹரால்ட் லாஸ்கியுடன் காந்தி மேற்கொண்ட உரையாடலில் அனைவருக்கும் வாக்குரிமை
என்பதன் மூலம் தீண்டப்படாதவர்கள் கையில் பெரும்
அதிகாரம் ஒன்றை தரமுடியும் என்கிற கருத்தை வெளிப்படுத்தினார்.
விடுதலைக்குப் பின்னர் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை
நிலைநாட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 1/5 செட்யூல்ட் பகுதியிலிருந்து
என்பதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய
சூழலில் காந்தி வர்ணாஸ்ரமவாதி என்றோ- அம்பேத்கார் ட்ரைப்ஸ்களுக்கு வாக்குரிமையை அன்று
வலியுறுத்தவில்லை என்றோ விவாதம் தொடர்வது அவசியமற்றது என்கிற கருத்தை லிமாயி முன்வைக்கிறார்.
அம்பேத்கார் தலைமையேற்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மேற்கூறியவைகள்
உறுதி செய்யப்பட்டுள்ளன.
காந்தி எதிர் அம்பேத்கார் என்பது தேவையற்ற சர்ச்சை என்கிற
மற்றொரு கட்டுரையை லிமாயி எழுதினார். அம்பேத்கார் அறிவுத்தேடலுக்கு முன்னுரிமை தந்தவர்.
தனிநபர் வழிபாட்டை சாடியவர். அம்பேத்கரும் காந்தியும் ஒரே இலக்கை நோக்கி வெவ்வேறு பாதைகளில்
பயணித்துள்ளனர் என்கிற புரிதல் பலப்படவேண்டும் என வேண்டுகோளை லிமாயி வைத்தார்.
1895ல் காங்கிரஸ் மாநாட்டில் திலகர் ஆதரவாளர்கள் சோசியல்
மாநாடு (social conference) என்பதையும் சேர்த்து நடத்துவதற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அம்முறை காங்கிரசால் அப்போது கைவிடப்பட்டது. இதை அம்பேத்கார் விமர்சித்தும் உள்ளார்.
காந்தியின் 1919-20 வரவால் காங்கிரஸ் சமூக பிரச்சனைகளை தனது நிகழ்ச்சிநிரலில் இணைத்துக்கொள்ளவேண்டியதானது.
அதன் உச்சத்தை 1932-33களில் அது உணர்ந்தது. கம்யூனல் அவார்ட் பிரச்ச்னையில் காந்தியின்
உண்ணாநோன்பு- அம்பேத்கர் தன் இறுக்கமான நிலையை கைவிட்டு அன்றிருந்த சூழலை தணித்திட
உடன்பாட்டுக்கு வருதல் நடந்தேறியது.
சாதிகள் இருக்கும்வரை விலக்கப்பட்ட சாதியும் இருக்கும் என்கிற
எச்சரிக்கையை அம்பேத்கார் தந்தார். சாதி என்பது கருத்துநிலை- மனோநிலை. எனவே மனதில்
புரட்சி எழவேண்டும் என விழைந்தார். சாஸ்திரங்களும் புராணங்களும் ஒழியவேண்டும் என கோரினார்.
சமத்துவ மனப்பான்மையுடன் மனிதர்கள் எழவேண்டும் என்பது அவரது இந்திய கனவாக இருந்தது.
வர்ணாஸ்ரமம் ஒழியாமல் தீண்டாமை ஒழியாது என்கிற ஏற்பில் காந்தி இல்லை. ஆனால் தீண்டாமை
எதிர்த்த விட்டுக்கொடுக்கமுடியாத போராட்டம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கோட்பாட்டில்
சண்டை என்பதிலிருந்து நடைமுறை போராட்டம் என்ற செயல்பாட்டுவகைப்பட்டு பணிபுரிந்தார்.
நாம் இருவரும் இறுதியில் ஒரே கேம்பில் நம்மை பார்த்துக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை
தெரிவித்து அம்பேத்காருக்கு காந்தி எழுதினார்.
சட்டமோ, பொருளாதார முன்னேற்றம் மட்டுமோ மதத்தில் சமத்துவத்தை
உருவாக்கிவிடாது. சாதி இந்துக்களின் மனமாற்றத்தில் அது சாத்தியப்படும் என்கிற கருத்தை
காந்தி வெளிப்படுத்தினார் (நூல்தொகை 53 பக்307). இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான்
தன்னை தற்காத்துக்கொள்ளும் சமூகமாக இயங்கமுடியும்
என அம்பேத்கார் கருதினார். பிறப்பின் வழி சாதி உயர்வு தாழ்வுகளின் சமூக பலவீனத்தை காந்தியும் உணர்ந்தவராக இருந்தார்.
கலப்புமணத்திற்கு ஆதரவு தரக்கூடியவராக தன்நிலையை மாற்றிக்கொண்டதாக லிமாயி குறிப்பிடுகிறார்.
தன்குடும்பத்திலும் காந்தி அதை அனுமதித்தார்.
அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைமை பொறுப்பு தனக்கு
அளிக்கப்பட்டதை ஆச்சரியமான ஒன்றாகவே அம்பேத்கார் கருதினார். காங்கிரசின் பங்களிப்பிற்கு
பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
லிமாயி அம்பேத்காரியம் அசலும் போலியும் என்கிற கட்டுரை ஒன்றையும்
எழுதினார். காந்தி எதிர்ப்பு ட்ரைப்ஸ் என ஒன்று உருவாகிவிட்டது. அது அவ்வப்போது தலையை
காட்டி தொடர்கிறது என்கிற தனது விமர்சனத்தை
லிமாயி வைத்தார். இந்துமகாசபா, சங்பரிவார், சாவர்க்கர்வாதிகள் என்கிற பெயரில் அது வெகுகாலமாக
நடந்துவருகிறது. அவ்வமைப்புகள் தங்களின் பிராம்மண பெருமிதம் என்கிற பார்வையிலிருந்து
காந்தியை விமர்சித்தன. பனியா வந்து வழிநடத்துவதா என்கிற சிக்கல் அவர்களுக்கு.
கன்சிராம், மாயவதி போன்றவர்கள் வேறு கோணத்திலிருந்து காந்தியை
விமர்சித்து வருகின்றனர். அம்பேத்கர் ஆழக்கற்றலின் முன்மாதிரி. அவ்வாறு கற்கவேண்டும்
என சொல்லிக்கொடுத்தவர். இவர்களில் பலர் அறியாமையுடன் பேசுவதை பார்க்கமுடிகிறது. விடுதலைக்கு
முன்னர் அம்பேத்கார் காந்தி காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அதேநேரத்தில் பட்டேல் கேட்டதற்கிணங்க
அவர் அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை தந்திட முன்வந்தார். செட்யூல்ட்
பகுதியினருக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தினார். தீண்டாமை ஒழிப்பு, வயதுவந்தோர் வாக்குரிமை,
இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டன. சுயராஜ்ய போராளி, அகிம்சாவாதி என்பதையெல்லாம்விட
தீண்டாமை ஒழிப்பில் நின்றவர் எனபதை காந்தி உயர் மதிப்புகொண்டதாக பாவித்தார் என்பதை
அம்பேத்கார் உணராமல் இல்லை.
இராஜ்யசபாவில் செப் 6, 1954ல் அம்பேத்கார் ஆற்றிய உரையில்
தீண்டாமை என்பது மனநோய்- மனத்திருகல் எனக் குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து நாம் செட்யூல்ட்
பகுதியினர் முன்னேற அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களுக்கு போராடியே ஆகவேண்டும். தீண்டாமை ஒழிகிறதோ
இல்லையோ இந்தபணியை நிறுத்த எந்த காரணமும் இல்லை எனப்பேசினார். உப்புவரியைகூட கொணரலாம்.
அன்று காந்தி போராடியபோது அரசிற்கு அது 10 கோடி வருமானத்தை தந்திருக்கலாம். இன்று
20 கோடிகிடைக்கும். அதை காந்தியின் பெயராலேயே டிரஸ்ட் அமைத்து செட்யூல்ட் வகுப்பார்
நலனுக்காக பயன்படுத்த்லாம். மறைந்த காந்தியின்
ஆசியும் நமக்கு கிட்டும் எனப் பேசினார்.
காந்தி தீண்டாமையை மனத்திருகல் (mental twist) என விமர்சிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பாவம்
(Sin) எனக் கருதினார். இந்துக்களின் மனமாற்றமே
சமூகநிலைமை மாறிட உதவும் எனவும் நம்பினார். எனவே காந்தியின் மனசாட்சி அம்பேத்கார் என்கிறார்
லிமாயி.
மனு காந்தி அம்பேத்கார் என்பதும்கூட சிறிய கட்டுரைதான். காந்தியைப்
பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் கருத்துக்களில் மாற்றம் தேவை என உணர்ந்தார் எனில் தயங்காமல்
செய்துகொள்வார். அவரிடம் கலப்புமண தம்பதிகள் சிம்லாவில் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
சிறைக்கு அனுப்பப்படுகின்றனர் என்கிற கேள்வியை செப்டம்பர் 1946ல் கேட்டபோது சீர்திருத்த
சிந்தனையாளர்கள் சிறைக்கு அஞ்சக்கூடாது. துன்பத்தை சகித்துக்கொண்டு செய்தவைக்காக நிற்கவேண்டும்
எனப் பொருள்பட பதில் தந்தார்.
முன்னதாக ஜூலை 1946ல் அவர் ஹரிஜன் இதழில் கலப்புமணம் பற்றிய
தனது முன்னுரிமை பற்றி தெரிவித்திருந்தார். உயர் நடத்தை கொண்ட சாதி இந்துவை ஹரிஜனப்
பெண் மணம் செய்துகொள்ளும்போது இருசாராருக்கும் நன்மை கிடைக்கும். பிறக்கும் குழந்தைகளும்
தீண்டாமை மறைய உதவுவர். சாதி இந்துப்பெண் ஹரிஜனக் கணவனை பெறுவதும் விரும்பத்தக்கதுதான். ஆனால் அதுதான் சிறந்தது என
சொல்லத்தயங்குகிறேன். எனது வழியில் அதை நான் ஊக்குவிக்கவே செய்வேன். ஆனால் தற்போதுள்ள
நிலையில் அரிஜனப்பெண் சாதி இந்து மணமகனைப் பெறுவது சிறந்தது எனக் கருதுகிறேன். திருமணத்திற்கு
பின்னர் வெற்றி என்பதும் அவசியமாகிறது என காந்தி
கருதினார்.
சீர்திருத்தங்கள் மெதுவாக நத்தை வேகத்தில்தான் நகரும். மெதுவாக
நடைபெறுகிறதே என அதிருப்தி அடையக்கூடாது. இறுதியில் ஒரே சாதி- அதுவும் அனைத்தையும்
சீர்செய்து சுத்தமாக்கும் பங்கி( Bangi) என்ற பெயரில் என்றாகும். அந்த நாளிற்காக பிரார்த்திப்போம்
என எழுதினார் காந்தி. இப்படி பேசிவந்த காந்தியை மனுதர்மவாதி என முழுமையாக அறியாமல்
விமர்சிப்பது சரியா என லிமாயி வினவினார். மனு இருந்திருந்தால் காந்தியின் கருத்துகள்-
செயலுக்காக அவரை சிறையில் தள்ளியிருப்பார் என்கிறார் லிமாயி.
அம்பேத்கார் டாக்டர் சவீதாவை மணம் முடித்தார். அப்போது பட்டேலின் வாழ்த்து செய்தியில்
பாபு (காந்தி) உயிருடன் இருந்திருந்தால் தங்களுக்கு மனப்பூர்வ ஆசியை தந்திருப்பார்
என எழுதினார். பதிலாக அம்பேத்கார் ஆமாம் ஏற்கிறேன்.
காந்தி என் திருமணத்திற்கு நல்லாசியை தந்திருப்பார் என எழுதினார்.
கன்னாட் பிளேஸ் பகுதியில்
பியாரிலால் வருவதை கண்ணுற்ற அம்பேத்கார் காரிலிருந்து இறங்கிப்போய் காந்தி இல்லாமல்
போய்விட்டாரே அவரது ஆசி கிடைத்திருக்கும் என்கிற தனது வருத்தம் தோய்ந்த ஏமாற்றத்தை
வெளிப்படுத்தினார். We did not understand
him என்றார். ஆமாம் காந்தியை நாம் இன்னும்
சரியாக புரிந்துகொள்ளாமல்தான் தொலைத்துவருகிறோமோ?
Need of the present situation and precise one
ReplyDeleteThank you
Delete