Skip to main content

பெரியாரின் பொதுவுடைமை புரிதல்

 

பட்டாபியின் புதிய புத்தகம் 

மின்புத்தகமாக கீழ்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

https://freetamilebooks.com/ebooks/periyar_communism/

அல்லது

https://ia801507.us.archive.org/3/items/periyar_communism/periyar_communism_a4.pdf

https://archive.org/details/periyar_communism/periyar_communism_a4

பிரிண்ட் வடிவில் பெற விரும்புவோர் காரைக்குடி தோழர் லெனின்குரு அவர்களை 9578078500 ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.



முன்னீடு

பெரியார் பெரும் ஆளுமைகளுள் ஒருவராக உயர்ந்து நிற்பவர். தந்தை பெரியார் என தமிழகத்தில் பெரும் மரியாதையுடன் நன்றிபாராட்டி அழைக்கப்படுபவர். கடவுள் மறுப்பு- மத எதிர்ப்பு- பிராமண எதிர்ப்பு- ஜாதி ஒழிப்பு ஆகியவற்றில் அவரது கலகக்குரல் உரக்கக்கேட்டது. விளைவுகளுக்கு அஞ்சாமல் ஒளிவு மறைவின்றி அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியவர். இடமறிந்து என்பதெல்லாம் இல்லாமல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சரியென தனக்குப்படும் கருத்துக்களை வெளியிட்டவர் பெரியார் எனும் பேருரு மனிதர்.

பொதுவுடைமை- பொதுவுரிமை விவாதத்தை கூர்மையாக நடத்தியவர் பெரியார். கம்யூனிஸ்ட்களுடன் தோழமையாக இருந்து விவாதத்தை மேற்கொண்டவர் - வேறுபட்டும் நின்றவர். கடும் விமர்சனங்களையும் செய்தவர் - தாங்கியவர். சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பெரியாருடன் உடன் நின்றும் - வேறுபட்டும் விவாதம் நடத்தியவர்கள்.

 சமீப ஆண்டுகளில் பெரியாரின் பொதுவுடைமை  பார்வை குறித்த விவாதம் பொதுவெளிகளில் பரவலாக நடைபெறவில்லை. தமிழகத்தில் இன்று இந்துத்துவா எதிர்ப்பு கருத்தியல் போராட்டம் தீவிரப்பட்டு நிற்கும் நிலையில் இவ்விவாதம் எதிர் சக்திகளுக்கு உதவுவதாக அமைந்துவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்வும், எண்ணப்பாங்கும் மார்க்சியர்களுக்கு சற்றுக்கூடுதலாகவே இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி புத்தக காட்சியில் திராவிடர் கழக அரங்கு பெரியாரின் பொதுவுடைமை கருத்துக்களை திரட்டி மூன்று வால்யூம்களாக வெளியிட்டுள்ளது.  சிங்காரவேலர் சிந்தனையாளராக அறியப்பட்ட தோழர் பா வீரமணி தொகுத்துள்ளார். ஆசிரியர் வீரமணி அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார். தொகுப்பு என்பதால் பெரியார் பேசியவை எழுதியவை அப்படியே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுவெளியில் மீண்டும் இவ்விவாதம் எழுவதற்கான தூண்டுகோலாக இத்தொகுப்புகள் அமைகின்றன. முகநூலில் சிலர் எழுதத் துவங்கிவிட்டனர். குறிப்பாக தோழர் அ.க.ஈஸ்வரன் தொடர்ந்து முகநூலில் எழுதிவந்தார்.

பெரியார் சமதர்மம், ஆகஸ்ட் 15 போன்ற தொகுப்புகளை  தோழர் எஸ் வி ராஜதுரை 2000க்கு முன்னர் கொணர்ந்தார். சிங்காரவேலர் தொகுப்புகள், ஜீவா தொகுப்புகளும் வந்துள்ளன. தோழர் ஆனைமுத்து அவர்கள் கொணர்ந்த பெரியார் சிந்தனைகள் தொகுப்பும் 1974லேயே வந்தது. இவைகளிலிருந்து இளம் தலைமுறையினர் பெரியாரின் பொதுவுடைமை பார்வை குறித்து  அவரது புரிதல் – அதன் மீதான விமர்சனங்கள் குறித்து விளங்கிக்கொள்ள இயலும்.

வடவர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சுதந்திர தமிழ்நாட்டில்தான் மனித சமத்துவ கொள்கைகளை தன் இஷ்டம் போல் அமுலாக்கமுடியும் என்பதை விடுதலைக்கு முன்னரும் பின்னரும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேற்கூறிய தொகுப்புகளிலிருந்து கூர்மையாக இன்றளவும் தேவைப்பட்டு நிற்கும் சில அம்சங்களை தொகுத்துக்கொண்டும், அவற்றிற்கு சமகாலத்திலும் பின்னரும் எழுந்த சில மார்க்சியர்களின் விமர்சனங்களையும் தர முயற்சித்துள்ளேன்.

கம்யூனிஸ்ட்கள் பொதுவாக பெரியாரின் பொதுவுடைமை சார்ந்த கருத்துக்களை கொச்சை பொருள்முதல்வாதம் (  Vulgar Materialism) என்றே வகைப்படுத்தினர். இப்படிச் சொல்வது தவறானது என பேசுவோரும் உளர். இவ்வாண்டு வெளிவந்துள்ள பெரியாரின் மூன்று வால்யூம்களிலிருந்து சில முக்கிய கருத்தாங்களும், வே ஆனைமுத்து அவர்களின் வால்யூம்களிலிருந்தும் சில அம்சங்களும் இங்கு தொகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சிங்காரவேலர், ஜீவாவின் தொகுப்புக்களிலும் திராவிடர் இயக்கத்துடன் மேற்கொண்ட விமர்சன உரையாடல்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில குறிப்புகள் இங்கு இடம் பெற்றுள்ள விமர்சன குறிப்புகள் எனும் இரண்டாம் பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ளன. தோழர் எஸ் வி ராஜதுரை தொகுப்புகள் கம்யூனிஸ்ட்கள் மீதான விமர்சனங்களையும் பெரியார் மிகச் சரியானவர் என உயர்த்திப் பிடிக்கும் தொகுப்புகளாக இருக்கின்றன.  தோழர் பி ராமமூர்த்தியின் புத்தகமான விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் முழுநீள திராவிட இயக்கம் பற்றிய ஆய்வு நூலாகும்.  அதிலிருந்து பொருத்தம் என நினைத்த பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளது. இந்நூலுக்கு ஆசிரியர் வீரமணி பதில் நூல் எழுதியுள்ளார்.

நிறப்பிரிகை பெரியார் தொகுப்பில் இடம் பெற்ற சில கருத்துக்கள் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. அதே போல் தோழர் கோவை ஞானியின்  சில கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. சிந்தனையாளர் ராமகிருஷ்ண ராவ் திராவிடர் இயக்கத்தின் மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு என்கிற சிறு கட்டுரை ஒன்றிலிருந்து சில ஆங்கில வாசகங்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. திரு சட்டநாதன் அவர்களின் உரையிலிருந்தும், நம்பி ஆரூரான் புத்தக அத்தியாயம் ஒன்றிலிருந்தும் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் பரவலாக விவாதிக்கப்படும் வலுவான கருத்தாக்கங்களின் பிரதிபலிப்பை - தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பலனை கடந்த 60 ஆண்டுகளில் எச்சக்திகள் பெரும் ஈவாக அடைந்துள்ளன என்ற மதிப்பீட்டில்தான் பெறவியலும். அதற்கு வெளித்தெரியும் அரசியல் சொல்லாடல்களைத் தாண்டி பொருளாதார மேம்பாட்டு அம்சங்களை நுணுகிப் பார்க்கவேண்டிய தேவையிருக்கிறது. பலன்கள் பரவலாக வெகுமக்களை சென்றடைந்துள்ளதா- இல்லை சிலரிடம்  செல்வக் குவிப்பை உருவாக்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

பெரும் பக்கங்களை கொண்ட மேற் சொல்லப்பட்ட  தொகுப்புக்களை- உள்ளார்ந்து முழுத்தொகுப்பையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை சிலரிடமாவது தூண்டுவதற்கு துணையாக இச்சிறு நூல் இருக்கும் என நினைக்கிறேன்.

17-9-2020                                  - ஆர். பட்டாபிராமன்


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு