https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, February 23, 2023

இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள்

 

           இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள்

இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள் ஆங்கிலத்தில்  காலவரிசைப்படி (664-1858) அவரால் எழுதப்பட்டுள்ளது. அவற்றை தொகுத்து Moscow Foreign Language Press  வெளியிட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கட்டுப்பாட்டில் இருந்த மார்க்சிய லெனினிய இன்ஸ்டிட்யூட் ருஷ்ய பதிப்பிற்கு பின்னர் ஆங்கில பதிப்பை 1947ல் இறுதிப்படுத்தி வெளியிட்டது.632 என அந்தக்குறிப்பு நபிகள் மறைவுடன் துவங்கும். முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை காலவரிசையில்  சிற்சில வரிகளாகச் சொல்லும். இந்த இந்திய வரலாறு குறித்த மார்க்சின் குறிப்புகளை பலவேறு வரலாற்று புத்தகங்கள் வழி மார்க்ஸ் சேகரித்ததாக இதன் பதிப்பாளர்கள் சொல்கின்றனர். அதன் இறுதிக் குறிப்பு ஆகஸ்ட் 2, 1858 தேதியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2, 1858 ஸ்டான்லி பிரபுவின் இந்தியா பில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிழக்கிந்திய ஆட்சி முடிவுற்றுஇந்தியா ராஜதானிவிக்டோரியா மகாராணி ஆட்சிக்குள் வந்தது. இங்கு மார்க்ஸ்  India Province  என்று பயன்படுத்தியிருப்பார்.

இந்த சிறு கட்டுரையில் மார்க்ஸ் எழுதியவற்றிலிருந்து கஜினி படையெடுப்பு, துக்ளக் ஆட்சி, பாபர்- அக்பர்- அவுரங்கசேப், சிவாஜி என்கிற காலத்தின் குறிப்பை மட்டும்  கொடுத்துள்ளேன். சுவாரஸ்யமான வரலாற்றுத்தகவல்கள்.

எனது பள்ளிக்கால சரித்திர புத்தகம் கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தாக எனக்குச் சொல்லித்தந்தது. மார்க்ஸ் தன் இந்த குறிப்பில் கஜினியின் 12 படையெடுப்புகளைத் தருகிறார். கஜினி சுல்தான் 1001ல் லாகூர் மீதான படையெடுப்பு அவரின் முதல் படையெடுப்பு. லாகூர் ராஜா ஜெயபால் வீழ்த்தப்பட்டார். பஞ்சாபின் பதிந்தாவரை அப்போது கஜினி வந்துள்ளார்.  1003, 1005, 1008 என அடுத்த படையெடுப்புகள் நடந்தன. 1008ல் ஜெயபால் மகன் ஆனந்த் பால் கஜினியை எதிர்த்து நின்றுள்ளார். மார்க்ஸ் இங்கு இவ்வாறு குறிப்பை எழுதியுள்ளார்.  Hindus fought fanatically; Mahmud defeated them, sacked temple of Nagarkot.

கஜினியின் அடுத்த படையெடுப்பு 1010, 1011களில் நடந்துள்ளன. 1011ல் கஜினி தானேஷ்வர் கோயிலை கைப்பறிய செய்தியை மார்க்ஸ் தருகிறார். 1013, 1014 கால படையெடுப்புகள் காஷ்மீர் மீதாக இருந்தன என மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  கஜினியின் 9 ஆம் படையெடுப்பு 1017 குளிர்காலத்தில் பெஷாவர்- காஷ்மீர் வழியாக கனாஜ் நோக்கியிருந்ததாம். 1022லேயே அவர் இருமுறை படையெடுத்து வந்தாராம்.

 1024தான் மார்க்ஸ் கூறும் 12 ஆம் படையெடுப்பாண்டு. சோம்நாத் கொள்ளை என்கிற வரலாற்று முக்கிய செய்தியை நாம் காணமுடியும். கஜினி மூல்தான் சிந்து வழியாக குஜராத்தை அடைகிறார். அதன் தலைநகரான அங்கல்வாரை கைப்பற்றியதாக மார்க்ஸ் எழுதியிருப்பார். ஆஜ்மீர் ராஜாவின் பிரதேசங்கள் அழிக்கப்பட்டதாகவும், ராஜபுத்திரர்கள்  gallantly defended  என்கிற வார்த்தைகளை நாம் காண்கிறோம். ஜெர்மனியில் மார்க்ஸ் என்ன பதத்தைப் பயன்படுத்தினார் எனத் தெரியவில்லை. கஜினி அத்தலைநகரில் ஓராண்டு இருந்தாராம். முன்பெல்லாம் படைத்தாக்குதல், கைப்பற்றல் திரும்ப ஊர் திரும்புதல் என்பது இங்கு மாறுவதைக் காண்கிறோம். இதை மார்க்ஸ் குறிப்பிடவில்லை. இந்த படையெடுப்பில்தான் சோமநாத் கோயில் கைப்பற்றப்பட்டதாக மார்க்ஸ் எழுதியிருப்பார்.

 ஏப்ரல் 29, 1030ல் கஜினி மறைந்த செய்தியையும் அவரது அவையில் பிர்தெளசி எனும் புகழ்வாய்ந்த மேதை இருந்ததையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கஜினி படைப்பிரிவில் துருக்கிய  அடிமைகள் இருந்ததாகவும், அராபியர் கனவான்களாக  இருந்ததாகவும் சொல்கிறார். மதம், நீதி, சிவில் ஆட்சி முறை அனைத்தும் பெர்ஷியர் கட்டுப்பாட்டில் இருந்ததையும் அவர் எழுதியுள்ளார்.

முகம்மது துக்ளக் பற்றி 1325-1351 கால குறிப்பில்  ablest prince of his time, he ruined himself by his own much too extensive plans எனச்சொல்லிவிட்டு சில மோசமான விளைவுகளைத் தந்த அவரது திட்டங்கள் பற்றி மார்க்ஸ் சொல்லியிருப்பார். கஜான காலியாகும் போதெல்லாம் கொடும் வரிகளைப் போட்டார் என்கிறார். Most  ruinous exactions on the people- taxes heavy  என மார்க்ஸ் எழுதுவதைக் காண்கிறோம்.

1421 ஆண்டின் குறிப்பில் பாமினி அரசு தெலங்கானா ராஜாவை வாரங்கலிருந்து வெளியேற்றினார் என்ற செய்தியை மார்க்ஸ் தந்திருப்பார். தெலங்கானா என்பது   Northern Circars, Hyderabad- Balaghat, carnatic and the language spoken Telinga  என அவர் குறிப்பிடுவதைக் காண்கிறோம். தெலுங்கு என்பதை அப்படி குறித்துள்ளார். ராஜமுந்திரி, மசூலிப்பட்டினம், காஞ்சிபுரத்திலும் தெலுங்கு மொழி பேசப்பட்டதாக அவரது குறிப்பு சொல்கிறது.

பாபர் என அவர் ஆரம்பிப்பது 1526-1530 காலத்தில். பாபர் துவக்கிய முகலாயர் ஆட்சி 1526- 1761 என 235 ஆண்டுகள் குறிக்கப்பட்டுள்ளது. பாபர் டிசம்பர் 26, 1530ல் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியில் மறைந்தார். அவரது விருப்பப்படி அவரது உடல் காபூலில் அடக்கமானது என மார்க்ஸ் சொல்வார். ஹீமாயுன் பானிபட் யுத்தம் பற்றியெல்லாம் சிறு குறிப்புகளை மார்க்ஸ் எழுதியிருப்பார்.

அக்பர் 1560ல் ஆட்சிக்கு வருகிறார். 18 வயது அக்பரின் ஆளுகை டெல்லி, ஆக்ரா, பஞ்சாப் சுற்றி இருந்தது. பின்னர் ஆஜ்மீர், குவாலியர், லக்னோ, மால்வா என அவர் கைப்பற்றினார். அக்பரின் சகோதரர் ஹக்கீம் காபூலைப் பிடித்தார். 1568ல் ராஜ்புதன ஆட்சிகளை அக்பர் கைப்பற்றினார். இங்கு மார்க்ஸ் குறிப்பில்

 Akbar married two Rajput queens in order to have peaceful connection with Jaipur and Marwar .

அக்பர் மீர்சாக்களை வென்று குஜராத் பகுதிகளை எடுத்துக்கொள்கிறார். மீர்சாக்கள் கலவரங்களை அவர் ஒடுக்கினார் என மார்க்ஸ் குறிப்பு செல்கிறது. 1575ல் ஒரிஸ்ஸா, வங்கம் அக்பர் வசமாயின. பீகாரும் அவரின் ஆளுகையில்.

1582-85 காலக்குறிப்பில் மார்க்ஸ் எழுதியிருப்பதாவது

 Akbar settled the empire- was different in religious matters, tolerant; his chief religious literary advisors were Faizi and Abdul Fazl. Faizi translated old Sanskrit poems, including Ramayana and Mahabharatha. Akbar brought a Roman Catholic Portuguese Priest from Goa, Faizi also translated the Evangelists. Indulgence towards the Hindus; Akbar only insisted on abolition of Suttee. He abolished Jeziah- capitation tax.

அக்பரின் வருவாய் நிர்வாகம் பற்றியும் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். 15 ராஜதானிகளில் வைஸ்ராய்கள் அமர்த்தப்பட்ட நிர்வாகம்.  Mir-i-Adl என்கிற தலைமை நீதிபதியின் கீழ் நீதித்துறை-  represents will of the Sovereign, hearing the conclusion and passing sentence. Akbar reformed the Code of Punishments partly on Mohammedan Custom, partly on the laws of Manu  என்கிற முக்கிய விஷயத்தை மார்க்ஸ் தன் குறிப்பில் தருவதைக் காண்கிறோம்.

1657 அவுரங்கசேப் பற்றிய குறிப்பாகும். ஷாஜஹானுக்கு தாரா ஷிகோ, ஷுஜா, அவுரங்கசேப், முரத் என்கிற நான்கு புதல்வர்கள். தாரா ஒரு பகுதி வைஸ்ராய், முராத் குஜராத் பொறுப்பு, ஷுஜா வங்கப்பொறுப்பு கவர்னர், அவுரங்கசேப் ஹைதராபாதை கைப்பற்றினார். ஷாஜகான் உடல் சுகவீனத்தால் தாராவிடம் பொறுப்பு என்றனர். ஷுஜா கூடாது என்றார். அவுரங்கசேப் இஸ்லாமின் பெயரால் எனச் சொல்லி தாராவையும், ஷுஜாவையும் போட்டியில் பின் தள்ளி அவர் முன்னேறினார். தாராவையும் ஷாஜகானையும் அவுரங்கசேப் சிறை வைத்தார்.  A lamgir  என்ற பட்டத்துடன் அரியணை ஏறிய  அவுரங்கசேப் கதையை மார்க்ஸ் மிக சுருக்கமாக குறிப்பெடுத்துள்ளார். தாரா ஷிகோ பல நகர்களுக்கு தப்பிச் சென்றாலும் இறுதியில் கொல்லப்பட்டார். டெல்லி கலவரங்களை அவுரங்கசேப் ஒடுக்கினார்.

ஸ்ரீநகர் அரசன் தாராவின் புதல்வன் சுலைமானை விடுவிக்க அவர் விஷம் வைத்து அவுரங்கசேப்பால் கொல்லப்பட்டதாக மார்க்ஸ் குறிப்புச் சொல்கிறது. சகோதரன் முராத்தும் கொலை செய்யப்பட்டார்.

1660-70 என்கிற குறிப்பில் சிவாஜி பற்றி மார்க்ஸ் எழுதுகிறார்.  He acquired habits of a robber, which he practiced early. He seized his father's own territory, captured many forts with his capital Kalyan.

1665  சிவாஜியின் செயல்களால் ஆத்திரமடைந்த அவுரங்கசேப் படையெடுத்தார்.  சிவாஜியுடன் உடன்பாடு ஏற்பட்டது. சிவாஜி மராத்தியர்கள்  as nation  என்ற கட்டுமானத்தை செய்தார். சிவாஜி தனது பிரதேச விரிவாக்கத்தை செய்தார்.

1677ல் சிவாஜி கர்நூல், கடப்பா வழியாக மதராஸ், வெல்லூர், ஜிஞ்சி வரை வந்தார்.. 1680ல் சிவாஜியிடம் மைசூர், தஞ்சாவூர் வந்ததையும் மார்க்ஸ் குறிப்பாக எடுத்து வைத்துள்ளார். 1680 சிவாஜி மரணமடைகிறார். அவரது மகன் சாம்பாஜி பொறுப்பேற்கிறார். 1689ல் சாம்பாஜி பிடிபட்டு அவுரங்கசேப் ஆட்சியில் தலைகொய்யப்படுகிறார். பிப்ரவரி 21, 1707 தனது 89ஆம் வயதில் அவுரங்கசேப் மறைந்தார். தனது மகன்கள் எவரும் சாகும்போது அருகே இருக்கவிடவில்லை என்ற குறிப்பையும் மார்க்ஸ் எழுதிவைத்துள்ளார்.

மார்க்ஸ் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முகலாயர் ஆட்சியில் நில உறவுகள் குறித்தும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்டு, இந்தியா குறித்து கிடைத்தவற்றையெல்லாம், குறிப்பாக அதன் வரலாற்றை மிக ஆர்வத்துடன் படித்துள்ளதை  இந்த குறிப்புகள் நமக்கு காட்டுகின்றன.

இந்தியாவில் வாழும் நம் தலைமுறையே இந்தியா குறித்து முனைப்புடன் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைக் காட்டாத நிலையில், அந்த மனிதர் அன்று அவ்வளவு ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள தவித்தது அவர் மீதான மரியாதை கூட்டாமல் இருக்காது.  மார்க்ஸ்க்கு வணக்கம்.

22-2-2023                                                                       - ஆர்.பட்டாபிராமன்

 

No comments:

Post a Comment