ஒளரங்கசீப்
Audrey Truschke எழுதிய Aurangzeb The Man and the Myth 2018ல் வெளிவந்த புத்தகம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கிழக்கு பதிப்பகத்தால் ஒளரங்கசீப் என்ற பெயரில் ஜன 2022ல் வெளியானது. ஜனனி ரமேஷ் நேர்த்தியாக ஆட்ரே ட்ரஷ்கே ஆக்கத்தை தமிழில் தந்துள்ளார்.
வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் லகுவாக இந்த 157 பக்கங்களையும் படித்துவிட முடியும். ஒளரங்க சீப் குறித்து பாரபட்சமில்லாமல், இருக்கிற, கிடைக்கிற ஆவணங்களிலிருந்து தேடி இந்த பிரதியை ட்ரஷ்கே தந்துள்ளார். எண்ணற்ற கதைகளை கற்பனைகளை தள்ளி வைத்து அவர் ஆளும் காலச்சூழலின் பேரரசன்- மனிதன் என அவரை மீட்க முயற்சித்துள்ளதாக ஆசிரியர் சொல்கிறார். படிக்கிறவர்களும் இதை ஏற்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஒளரங்கசீப் 1618ல் பிறந்து 1707 ல் மரணமுற்றவர். அந்நியனாக வந்தேன்- அந்நியனாக விடைபெறுகிறேன் என அவரின் சாவுத் தருணத்தில் அவர் எழுதினாராம்.
ஒளரங்கசீப் என்றாலே இஸ்லாமிய வெறியர், இந்துக்களை ஒடுக்கியவர் என்ற செய்தி உறைய வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்நாட்டின் வரலாற்று நினைவுகளிலிருந்து துடைத்தெறியப்படவேண்டும் என்ற இன்றைய அரசியல் பார்வை செயல்பட்டுவருவதைக் காண்கிறோம். இந்த புத்தகம் இவற்றிற்கெல்லாம் விடையைத்தேடி, மனம் உள்ளவர்களை சற்று நிதானப்படுத்தும்.
ஒளரங்கசீப் கோயில்களை இடித்தார் என்ற செய்தியை ஆதாரமாக்கினால், அவர் கோயில்களை காக்க, மான்யம் வழங்க, நிலம் கொடுக்க உத்தரவிட்டார் என்பதையும் சேர்த்து ஏன் சொல்வதில்லை என ஆசிரியர் வினவுகிறார்.
அவர் ஹோலியை மட்டும் தடை செய்தது போல் காட்டுபவர்கள், மொகரம் -ஈத் அனுசரிப்புகளுக்கும் கூட தடை போட்டார் என்பதை சொல்வதில்லை. அவரை வெறும் மத காழ்ப்புணர்ச்சியில் மட்டும், மதமோதல்களுக்கு காரணமானவர் என்று காட்டப்படும் பார்வை பிழையை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிலைமைகளை வைத்தே வரலாற்று பார்வைகொண்டவர்கள் புரிந்து வெளிக்கொணரவேண்டும் என்பதே ட் ரஷ்கே விழைவு . சமகால தரக்கட்டுப்படுகள் மீது அவரை ஏற்றி புரிந்துகொள்ள முடியுமா?
ஒளரங்கசீப் ஒரு முஸ்லீம்.. மதப்பற்றாளர். ஆனால் அவரது ஆட்சி வரலாறு முழுதுமே மதம்சார்ந்த ஒன்றாக விளங்கிக்கொள்ளக்கூடாது என்பதை ஆசிரியர் பல்வேறு தரவுகளிலிருந்து நிறுவுகிறார். அவர் பேசிய ஒழுக்கமுறை, ஆட்சி முறை, அறவுணர்வு எல்லாம் கூட இருக்கின்றன. அவர் தந்தையை சிறைவைத்தது, கூடப்பிறந்தவர்களை சாய்த்தது- ஆட்சி அதிகாரத்தில் 49 ஆண்டுகள் இருந்தது எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை. அதே போல் இந்துக்கள் மீது கொடுமைகள் என்ற செய்தியுடன், அவர் பல நேரங்களில் சகிப்புத்தன்மை, பாதுகாப்பு என்பதற்கும் முன்னுரிமை தந்தவர் என்ற செய்திகளும் இருக்கின்றன.
அவரது பிறப்பு வளர்ப்பு இளவரசன் வாழ்க்கை போர்கள் , காதல் தருணங்கள், முடிசூடிக்கொள்தல் என சிறு அளவில் காட்சிகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. சிம்மாசனமா கல்லறையா என்கிற முழக்கம் இவரது வாழ்விலும் துரத்தாமல் இல்லை.
முன்னதாக வந்த ஜாதுநாத் சர்க்காரின் Anecdotes of Aurangzeb நூலில் கிளுகிளுப்பான செய்திகளும் , தவறான தகவல்களும் இருப்பதாக ட் ரஷ்கே சொல்கிறார். ஆனாலும் ஜாதுநாத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் அவர் சொல்லாமலில்லை.
“ ஒளரங்கசீப் வரலாற்றை எளிதாக விளக்கமுடியாது..சாலை பாதுகாப்பு குறித்து கவலைப்படுவார். ஆனால் தந்தையை சிறையில், தாரா ஷுகோ உள்ளிட்டவரை கொன்று குவிக்கவோ, சம்பாஜி போன்ற எதிரிகளை உண்மையிலேயே துண்டாக்கி கூறுபோடவோ அவர் தயங்கியதில்லை.
தொழுகைக்கான தொப்பிகளை கைகளாலேயே தைத்து பக்திமானாகவே வாழ விரும்பினார். மோசமான நிர்வாகிகள், உருப்படாத மகன்கள், அழுகிய மாம்பழங்களால் கோபப்பட்டார். இசைக்கலைஞர் ஹீராபாயிடம் காதல்கொண்ட அவர், நடுவயதில் இசை விருப்பத்திலிருந்து விடுவித்துக்கொண்டார்..அவர் புதிராகவே இருந்தார்”
ஒளரங்கசீப் பாரசீக மொழியில் எழுதியவற்றில் 2000 கடிதங்கள் இப்போதும் கிடைத்துள்ளதாம்.
ட் ரஷ்கே தனது ஆய்வின் மூலம் வந்தடைந்த முக்கிய புள்ளி:
பாரசீகத்தை படிக்கும் திறன் இல்லாமல் ஒளரங்கசீப் வகுப்புவாதம் பற்றி குவிந்து கிடக்கும் படைப்புகளை சந்தேகத்தோடுதான் அணுகவேண்டியிருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் டெலிகாம் உயர் அதிகாரி ஒருவரை தொழிற்சங்க வேலைக்காக சந்தித்தபோது அவர் சொன்ன வரி நினைவிற்கு வருகிறது. Half Knowledge is dangerous. இந்த வரி
வரலாற்று அறிவிற்கும் , வேறு எது குறித்த அறிவிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.
2-4-2023
ட் ரஷ்கேயின் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் 157 பக்கங்களைக்கொண்ட சிறு ஆக்கம்தான். வாய்ப்புள்ளவர் படிக்கமுடியும்.
Comments
Post a Comment