https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, April 11, 2023

வல்லப்பாய் பட்டேல்

                            வல்லப்பாய் பட்டேல்

Builders of Modern India வரிசையில் வல்லப்பாய் பட்டேல் குறித்த ஆங்கில புத்தகம் 1985ல் வந்தது. நவபாரதச் சிற்பிகள் வரிசையில் சர்தார் வல்லப்பாய் பட்டேல் தமிழில் 2017ல் வந்தது. ஆங்கிலத்தில் ஆசிரியர் ஜே பட்டேல். தமிழில் எஸ் கணேசன் மொழிபெயர்த்துள்ளார்.


பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிட்டுள்ள அளவில் சிறிய 195 பக்கங்களைக்கொண்ட புத்தகம்தான். சர்தார் குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தியும் எழுதியிருக்கிறார். இந்த ஜே பட்டேல் புத்தகம் சர்தார் அவர்களின் முழு வாழ்க்கையை பேசுகிற ஒன்றல்ல. குறுக்குவெட்டு தோற்றம் என்பார்களே அப்படி கட்டமைக்கப்பட்ட பிரதி. பெரும் துதியெல்லாம் இருக்காது. ஆனால் அவரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஆக்கம் எனலாம்.

லண்டன் படிப்பிருந்தும், சட்ட அறிவிருந்தும், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தும் அவர் எப்படி எளிமையான வாழ்வை, சொல்லாடலை, கிராம விவசாயி நோக்கை, உறுதியான ஸ்தாபன கோட்பாடுகளை, காந்தியுடன் விவாதத்துடன் கூடிய சீடன் என்கிற வெளிப்பாட்டை, விடுதலைப்போரை சக விவசாயிகளின் போருடன் இணைத்து நடத்திய பாங்கை, பிரிட்டிஷாருடன் யதார்த்தம் சார்ந்த உரையாடல்களை, விடுதலைக்குப் பின்னர் மேனன் போன்றவர் உதவியுடன் அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றினைத்த பெரும் இந்திய உருவாக்கத்தை செய்த மனிதர், தலைவர் என்ற காட்சியை இந்தப் புத்தகம் தந்துவிடும்.

சர்தார் தனது நடவடிக்கைகளில் ஒளிவு மறைவற்ற நேர்மையை அனுசரித்தார் என்பதுடன், இரட்டை நிலை எடுப்பவர்களின் முகத்திற்கு முன்னர் தாட்சண்யமின்றி விமர்சித்து விடுவார் என்பதும் இந்த ஆக்கத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. இதனால் கசப்பான உறவுகளை அவர் கடக்க வேண்டியிருந்தது. நமது திசைகள் எதுவானாலும் நாம் யதார்த்தமாக இருப்போம் என்றார் சர்தார்.

தனது மகன் தன் பெயரை ஒருமுறை misuse செய்தார் என அறிந்து இறுதிவரை அவரது வீட்டிற்கு பட்டேல் செல்லவில்லை என அறிகிறோம்.

பள்ளி வாழ்க்கையிலிருந்தே கனவுகளால் பறக்காமல், பூமியின் அடிகளில் நடைமுறை சார்ந்து வாழ்ந்தவர் சர்தார் என்ற சித்திரம் இதில் கிடைக்கும். அவரின் விரைப்பான புறத்தோற்றம் நட்பு வட்டத்தை சற்று தள்ளி வைத்தாலும், நெருங்கியவர்களால் அவரின் ஈரக்கசிவை எப்போதும் உணரமுடிந்துள்ளது. காந்தி, சர்தார், மகாதேவ தேசாய் கூட்டான சிறை அனுபவ செய்திகள் , இந்த கரடுமுரடான மனிதன் எவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் இருந்துள்ளார் என்பதை உணரவைக்கும். காந்திக்கு தன்னை முழுமையாக ஒப்புகொடுத்து பணிவிடை செய்துள்ளார் என்பதைக் காட்டும். அவர் காந்தியை விட 6 வயதுதான் சிறியவர் என்பதை சேர்த்துப்பார்த்தால் இந்த அர்ப்பணிப்பை புரிந்துகொள்ள முடியும்.

பர்தோலி விவசாயிகளின் தோழனாக அவர் எடுத்த முயற்சிகள்தான் அவரை அவர்கள் அன்புடன் சர்தார் என அழைக்க வைத்தன. அவர் எளிய விளக்கங்களை தந்து தன் கிராம மக்களை திரட்டுவாராம். பிரிட்டிஷ்க்கு அஞ்சாமை குறித்து அவர் இப்படி ஒப்புமைக் காட்டி பேசினாராம். உள்ளூர் பேச்சு வழக்கில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவாராம்.

’மட்பாண்டத்தை உடைக்க சிறு துண்டு போதும். சிறு துண்டு பானையை பார்த்து அஞ்சலாமா’

”காளை மாடுகள் மோட்டார் வாகனத்தை கண்டு மிரள்வது போல பிரிட்டிஷார் குறித்து ஏன் பயப்படுகிறீர்கள்

இறந்து போகாமல் நம்மில் யாராவது சொர்க்கம் போகமுடியுமா..சுதந்திரத்திற்கு போராடாமல் தியாகம் செய்யாமல் பெறமுடியுமா”

”உடல் அளவில் நோஞ்சான் ஆகத் தெரிந்தாலும் நீங்கள் எல்லாம் மனதளவில் பாயும் புலிகள்” என்பாராம்.

 

ஒருமுறை ஜப்திக்கு அதிகாரிகள் வருகிறார்கள் என அறிந்த கிராம மக்கள் ஆடு, மாடுகளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வெளியே போராடிக்கொண்டிருந்தனராம். செய்தி அறிந்து வந்த சர்தார் எருமை மாடுகளை உள்ளே பூட்டி வைத்துவெள்ளைக்கார பெண்களைப்’ போல் ஆக்கப்போகிறீர்களா எனக்கேட்டு நிலைமையின் பதட்டத்தை தன் பேச்சால் தணித்தாராம்.

வரிகொடா இயக்கம் குறித்த பாராட்டுகள் வந்தபோது பட்டேல் அடக்கமாக இவ்வாறு பேசினாராம்

”இந்தியாவில் தெய்வங்களும் மகாத்மாக்களும் படையல்களை எடுத்துக்கொள்வதில்லை. மக்களிடம் அவை வந்து வினியோகிக்கப்பட்டுவிடும். காந்தியும் எல்லாவற்றையும் நமக்கு கொடுத்துவிட்டார் .”

வத்வான் எனும் பகுதியில் அரசியல் மாநாடு நடந்தது. ஹரிஜனங்களுக்கு தனியிடம் வைக்கப்பட்டதைப் பார்த்த சர்தார், ஏதும் ஏற்பாட்டாளர்களிடம் பேசாமல், அந்தப் பகுதியில் அத்தோழர்களுடன் போய் அமர்ந்தார். அவரை அடுத்து தர்பார் சாஹேப், பக்தி லஷ்மி அங்கு வந்து அமர்ந்தனராம். பின் அனைவரும் ஒன்றாகி மாநாடு நடைபெற வேண்டிய அவசியத்தை தனது செயல்மூலம் அவர் எடுத்துரைத்ததைக் காண்கிறோம்.

சர்தாரின் மூத்தவர் வித்தல்பாய் . சில முரண்கள், அரசியலிலும் கூட வந்தது. சர்தார் குடல் உபாதையால் கழிப்பறை சென்றால் திரும்ப நேரம் பிடிக்கும். வித்தல் ஒரு முறை கதவை தாளிட்டு விட்டார். கழிப்பறையிலிருந்து கூட மீளமுடியாத இவரெல்லாம் உங்கள்தலைவர் என அண்ணன் தம்பி படேலை கிண்டல் செய்தார். பொது இடத்தில் அண்ணனுக்கு கண்ணியக்குறைவு ஏற்படுத்தாமல் ஏதும் நடவாதது போல் பட்டேல் அடுத்த வேலையில் கவனம் குவித்தார்.அவரின் பொறுமை இப்படி பல இடங்களில் அவருக்கு துணை நின்றதாம்.

 

1924 ல் போர்சாட் எனும் பகுதியில் கொள்ளைக்காரர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் ஊர் மக்கள் தற்காத்துக்கொள்ளவும், முடிந்தவரை கொள்ளையர் கிராமத்திற்கே அஞ்சாமல் சென்று அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்கவும் அம்மக்களுக்கு ஆலோசனைகளை சர்தார் தந்து அவை பலனும் கொடுத்த செய்தியை இந்தப் புத்தகம் நமக்குத்தரும்.

அவர் பொறுப்பில் காங்கிரஸ் மாநாடு என்றால் அதை எவ்வளவு நேர்த்தியாகவும் சிக்கனமாகவும் ஆற்றல் கொண்ட பலரை ஒருங்கிணைத்து நடத்துபவராகவும் சர்தார் இருந்தார் என்பதை ஐ ஜே பட்டேல் காட்டியுள்ளார். மணலில் அமர்பவர் செருப்புகளை எங்கு வைப்பது என்ற கேள்விக்கு கூட பதில் அறிந்து தனிப்பை ஒன்றை ஒவ்வொருவருக்கும் அதற்கென கொடுத்தாராம்.

நிவாரணப்பணிகள் என்றால் அதில் அவரின் திட்டமிடலும் முடுக்கிவிடலும் அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர் தந்தார். தலைவர்களுக்கு பஞ்சமிருக்காது. விசுவாசமான தொண்டர்களின் தட்டுப்பாட்டை போக்கிவிட்டால் எல்லாம் சிறப்பாகுமென்பாராம்.

இடதுசாரிகளுடன் அவருக்கு அவ்வப்போது முரண்கள் ஏற்பட்டது. அவர்களிடமும் அவர்இன்று என்ன’ என்ற நடைமுறை சார்ந்த பேச்சை எதிர்பார்த்தார்.

’புரட்சி முழக்கங்களை எழுப்புவோர் முதலில் புரட்சியை கொண்டுவாருங்கள். இல்லாத ஒன்றை எழுப்பிக்கொண்டிருக்காதீர்கள்’ என கடிந்தார். சொந்த வாழ்வில் மாற்றத்தைக்கொணர முடியாத நாம் புரட்சி முழக்கம் எழுப்புவதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி அவரிடம் இருந்தது.

”பொதுவுடைமைவாதிகளிடம் மோதலில் நான் இறங்க விரும்பவில்லை. எதிர்கால நிர்வாகமுறை, எதிர்கால சமூக அமைப்பு குறித்த சர்ச்சையில் இறங்குவது மூலம், இன்றைய நாளுக்கான எனது பணிகளை நான் ஒத்தி வைக்க விரும்பவில்லை. இன்றுள்ள பணிகளைச் செய்தால், நாளைக்கான கேள்விக்கு தீர்வு வரும்” என அவர் பேசியதைப் பார்க்கிறோம்.

 

”பொதுவுடமைவாதிகள் காங்கிரசில் பணியாற்றும் தன்மை மீது தான் எனக்கு வெறுப்பு. அதை நான் மூடி மறைப்பதில்லை” எனவும் அவரது கருத்தை அவர் பகிரங்கப்படுத்தினார்.

தண்டி யாத்திரை நேரத்தில் சர்தாரும் சிறையில் வைக்கப்பட்டார். ஒரே பார்வையாளர் அனுமதி என்ற வகையில் மகாதேவ தேசாய் சிறையில் பார்க்கப் போகிறார். எப்படி நடத்துகின்றனர் என தேசாய் கேட்டார்.

கொள்ளைக்காரனையும் திருடனையும் போல் நடத்துகிறார்கள். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என பட்டேல் பதில் தந்தார். போர்வை தந்தனர். உணவா ..நாம் என்ன இன்பமாக இருக்கவா சிறைக்கு வந்துள்ளோம் என்றார். காற்றை உட்கொண்டு வாழப்பழகுவேன் எனச் சொல்லி சிரிக்கிறார்.

அவருக்கு சிறையில் கஷ்டம் என்றால் கழிப்பறைதான். வந்த சில நாட்களுக்கு கழிப்பறை போகமலேயே தாக்குப்பிடித்து பின்னர் பழகிக்கொண்டுள்ளார்.

1931 கராச்சி மாநாடு. பகத்சிங் தோழர்கள் தூக்கில் ஏற்றப்பட்ட நேரம். காந்திக்கும் பட்டேலுக்கும் இளம் தோழர்கள் கருப்புக்கொடி காட்டுகின்றனர். தலைமை பட்டேல். ”காந்திக்கு 63 வயது எனக்கு 56. வயதான நாங்கள்தான் விடுதலையைக் காண இளைஞர்களைவிட அவசரப்படவேண்டும். விவசாயம் பற்றிப் பேசுகிறீர்கள். விவசாயிகளிடம் வேலை செய்ய எந்த இளம் தோழருடனும் நான் போட்டியிடத் தயார்” என சர்தார் தனது உறுதிப்பாட்டைக் காண்பித்ததை அறிகிறோம்.

வாய்ப்புள்ளவர் இந்த எளிய புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம்.

10-4-2023

 

 

 

 

 

No comments:

Post a Comment