மறைமலையடிகளார் நாட்குறிப்புகளிலிருந்து..
மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் அவரது மகன் வித்துவான் மறை. திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்ட ஒன்று. சிறு நூலாக கொணர்ந்துள்ளனர். ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த இந்நூல் 1988ல் வந்தது. 1898-1950 காலத்திற்கான
சில குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
அடிகளார் அவர்கள் தனது குறிப்புகளை
ஆங்கிலத்தில் எழுதியிருந்தாராம். காரணம் ஏன்
எனத்தெரியவில்லை. இளம் வயது முதலே ஏராள ஆங்கில நூல்களை வாசித்தவராகவும், தனது கருத்துக்களை
ஆங்கிலம் வழியாகவும் தந்தவராகவும் அடிகளை நாம் பார்க்கமுடியும்.
ஏறத்தாழ 50 ஆண்டுகள் கால இடைவெளியுடன்
கூடிய இக்குறிப்புகள் 1000 பக்கங்கள் அளவிலானவையாம்.
அதில் சிலவற்றை தேர்ந்து இங்கு தொகுத்து பதிப்பித்துள்ளனர்.
இக்குறிப்புகள் சுவாரஸ்யமானவை
மட்டுமல்ல, அன்றைய காலத்து தவிப்புகொண்ட மனதின் தேடல்களுக்கான வரலாறும் கூட. அவர்கள்
தமிழ் புலமையில், ஆங்கில மற்றும் வடமொழி அறிவில் மட்டுமல்லாது, நாட்டுப்பற்று, நிகழும்
அரசியல் நிகழ்வுகளை கவனித்து தம்மளவில் வினையாற்றுதலாகவும் இருந்துள்ளனர். தம் காலத்தில்
பல துறைகளில் புகழ் வாய்ந்தவர்களுடன் தொடர்பில் இருத்தல், அவர்களிடமிருந்து கற்க தயாராக
இருத்தல், அதே நேரத்தில் அவர்களுடன் முரண்பட்டால் அதை வெளித்தெரிய மரியாதையுடன் சொல்லுதல்
போன்ற பண்புநலன்களையும் இந்தக் குறிப்புகள் நமக்குக் காட்டுகின்றன.
அப்போது இருந்த தமிழ் அறிஞர்கள் பலரும் அவரை சந்தித்த நூல்கள், கொடுத்து வாங்கிக்கொண்ட
செய்திகள் பதியப்பெற்றுள்ளன. காந்தியுடன் உடன்பாடின்மை, பெரியாருடன் பிணக்கு, நேயம்
சொல்லப்பட்டுள்ளது. காந்தி சுடப்பட்ட மறுநாள் சென்னையில் இரயில் ஓடாமை, என்ன நேருமோ
என்கிற கவலையைக் காண்கிறோம். காந்திக்கு முன்னவர்களான திலகர், பிபின் பால், சுரேந்திர
பானர்ஜி, தாகூர், பெசண்ட் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
ரூ 90 க்கு பல்லாவரத்தில் அவரால்
வீட்டு மனை வாங்க முடிந்துள்ளது. மகன், மகள் குறித்த செய்திகள்- மகன் காங்கிரஸ் இயக்க
ஈர்ப்பை தடுத்த செய்தி, பிராமணர் அல்லாத இயக்கத்தில் அடிகளார் ஆர்வமுடன் இருந்தமை,
இந்தி எதிர்ப்பில் முன் நின்றமை குறிப்பாக எழுதப்பட்டுள்ளன.
ரூ 30 ஊதியம் வாங்கும் காலத்தில்
தன் தாகம் காரணமாக ரூ 11க்கு புத்தகம் அடிகளார் வாங்கியதைக் காண்கிறோம். இப்படிச் செய்தால்
வீட்டில் எவராவது முகமா கொடுத்திருப்பார்கள்? பாரதிதாசன் விழாவிற்கு வர மறுத்துள்ளார்
அடிகள். பாரதியார் பற்றி இக்குறிப்புகளில் ஒரு வரியைக் கூட என்னால் பார்க்கமுடியவில்லை.
ஏன் எனத்தெரியவில்லை.
என் போன்ற வாசகர் வசதிக்காக 4
பகுதிகளாக இக்குறிப்புகளில் சிலவற்றை மட்டும் எடுத்து தந்துள்ளேன். என் நோக்கில் அவை
எடுக்கப்பட்டுள்ளன. நூலை முழுமையாக படிக்க முடியாதவர்க்கு இந்த சிறு பிரசுரம் உதவலாம்.
வாசித்துப் பாருங்கள்..
21-7-2023 - ஆர். பட்டாபிராமன்
Comments
Post a Comment