இந்திராவிற்கு நேரு தன் சிறைவாழ்வில் எழுதிய உலக வரலாறு குறித்த கடிதங்களின் தொகுப்பு Glimpses of World History வந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திரா ஆட்சிக்காலத்தில் 1982ல் மீள் பதிப்பும், சோனியா முன்னுரையுடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே தொகுதியாக 1100 பக்கங்களில் நேருவின் அப்புத்தகம் வந்துள்ளது.
பெங்குவின் ரூ 900க்கு இப்பெரும் புத்தகத்தை அப்போது போட்டிருந்தனர். இப்போது கூட கிடைக்கலாம். விடுதலைக்கு முன்னரான நேருவின் மூன்று மிக முக்கிய புத்தகங்களில் Glimpses of world History ம் ஒன்று. மற்ற இரண்டு Autobiography, Discovery of India.
நேருவின் historiography வரலாற்றைப் புரிதலும் அதை முன்வைத்தலும் விரிவான வாசிப்பிற்குரிய ஒன்றாகவே எனக்குப்படுகிறது. அவர் நடந்த வரலாற்று நிகழ்வுகளை வெறும் மோதல் பாதைக்கான நிகழ் களமாக மாற்றிவிடாமல், பொருத்தமான இணைக்கத்தேர்வுகளை, composite culture காரணிகளை தேட முயற்சிப்பவராக இருப்பதைக் காணமுடியும்.
இந்திய பண்டைய வரலாறாக இருந்தாலும், உலக நாடுகளின் வரலாறுகளாக இருந்தாலும் எதுவும் still civilisation or stagnated ஒன்றாக இருக்கவில்லை என்ற புரிதலை அவர் மனம் கொள்கிறார். மானுட வரலாற்றின் நீள் திசையின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை நொடிதோறும் எவரும் உள்ளது உள்ளபடி எழுதி வைத்திருக்கவும் முடியாது. பேசி சென்றிருக்கவும் முடியாது. கிடைத்தவற்றை ஏ எல் பாசம் சொல்வது போல controlled imagination யைத் தூவித்தான் வரலாறு அதை பிரதியாக்குபவர்களால் நமக்கு கைமாற்றித் தரப்படுகிறது.
முழுமையான இருட்டில் துழாவுதற்குப் பதில் ஆங்காங்கே கிடைக்கும் சிறு கைவிளக்குகளாக இந்த history யை narrativeயை எடுத்துக்கொள்வது நலம். அதை முடிந்தவரை பகுத்தறிவின் எல்லைக்குள் வைத்திருப்பதும் நலம். அதை வழிபாட்டு நம்பிக்கை பல்லக்கில் வைத்து திருப்பணிகள் நடத்துவதும், அதையே நம்பி பழிதீர்த்துக்கொள்ளும் கள விளையாட்டுக்களை நடத்துவதும் வரலாற்றை துப்பாக்கியாக்கும் முயற்சியாகிவிடும்.
வரலாற்றை எழுதும்போது விடுபடல்கள் எவருக்கும் நேரலாம். அது conscious or unconscious attempt ஆக இருந்திருக்கலாம். அதை நேர்செய்தல் வேறுவகைப்பட்ட வரலாற்றாய்வாளர்க்கு அவசியமாகலாம். விடுபடல்களைச் சொல்வது, சொன்னதில் தரவுகளின்படி தவறு இருந்தால் அதைச் சுட்டி சரிசெய்வது , ஹிஸ்டோரியாகிராபி குறித்த ஆரோக்கியமான முறையாகலாம். தேவைப்படும் அரசியலுக்கேற்ப வரலாற்றை தைப்பது என்பது அரசியலுக்கும் வரலாற்றிற்குமே ஆபத்தாகலாம்.
நேரு சிறையில் தனக்கு கிடைத்த எச் ஜி வெல்ஸ் உள்ளிட்டவர் எழுத்துக்களைக்கொண்டு , கடித வழி இலக்கியமாக உலக வரலாற்றை இந்திரா எனும் மகள் மாணவிக்கு சொல்ல முயன்றுள்ளார். 196 கடிதங்கள்..சில இடங்களில் மட்டுமே அன்பை வெளிப்படுத்தும் personal touch மிகக் குறைந்த வரிகளாக ஏக்கத்துடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எடுத்துக்கொண்ட task ல் கவனமாக நேரு travel செய்திருப்பார். அய்ரோப்பா, ஆசியா நாடுகளின் முன்னோடி நாகரிகப் பகுதிகள் குறித்து - கிரீஸ் ரோம் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி, இந்தியா சீனா ஜப்பான் அராபியா, பின்னர் வந்த அமெரிக்கா குறித்து ஏராள செய்திகளை அவற்றின் வரலாற்று போக்கில் நேரு தந்திருப்பார்.
வரலாறு என்கிறபோது சுவாரஸ்யமான, சற்று தொய்வு ஏற்படுத்தும் எழுத்துக்கள் கலந்தே இருக்கும். நேருவின் இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கு என சொல்லமுடியாது. முதல் 600 பக்கங்களுக்கு மேல் அவர் நன்கறிந்த உணர்ந்த 19- 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று கதைகள் பின்னப்பட்டிருக்கும்.
வரலாற்றில் ஆர்வம் இருந்தவர், நேரு அபிமானிகள் என பலரும், நேரு வெறுப்பாளர்களில் சிலரும் இந்நூலை படித்திருப்பர். இக்கால இளைஞர்களுக்கும் சற்று எளிய வகையில் ஒரே நூலில் உலக வரலாற்றின் சில வெளிச்சப்புள்ளிகளை அல்லது தொடுகோடுகளை இந்நூல் 20 ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள்வரை காட்டும்.
வாய்ப்புள்ளவர் சற்று மல்லுக்கட்டினால் இந்நூலை வாசிக்க இயலும் என்று நம்புகிறேன்.
20-2-2024
Comments
Post a Comment