கம்பராமாயணம் 10500 க்கும் மேற்பட்ட பாடல்களாக கிடைக்கிறது. ஒருமுறை வாசிக்க வாழ்நாள் அனுமதிக்குமா தெரியவில்லை. முதல் 50 பாடல்களை வாசித்தேன். அதில் 5 பாடல்கள் தற்போது மனதில் பட்ட பிடித்தவையாக இருந்தன
பாயிரம்-அவையடக்கம்
- முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?
உரை:
முத்தமிழ்த் துறையின்-இயல், இசை, நாடகம் என்று பகுக்கப்படும் தமிழ்த் துறைகளின்; முறை நோக்கிய-(நூல்களின்) முறைமைகளை ஆராய்ந்தறிந்த; உத்தமக் கவிஞர்க்கு-உயர்ந்த புலவர்களுக்கு; ஒன்று உணர்த்துவென்-ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன் (அது யாது எனில்); பித்தர் சொன்னவும்-பயித்தியக்காரர்கள் சொன்ன சொற்களும்: பேதையர் சொன்னவும்-அறிவற்றோர் சொன்ன சொற்களும்; பக்தர் சொன்னவும்- பக்தர்கள் சொன்ன சொற்களும்;பன்னப் பெறுபவோ- ஆராயப்ப்படுவனவோ? (ஆராயும் தகுதிடற்றவை என்பதாம்)
28 பாலகாண்டம்-ஆற்றுப்படலம்
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
அரு மருதம் ஆக்கி,
எல்லையில் பொருள்கள் எல்லாம்
இடை தடுமாறும் நீரால்,
செல்லுறு கதியின் செல்லும்வினை
என, சென்றது அன்றே.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி- முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கியும்; மருதத்தை முல்லை ஆக்கி- மருத நிலத்தை முல்லை நிலமாகச் செய்தும்; புல்லிய நெய்தல் தன்னை- புன்புலமாகிய நெய்தல் நிலத்தை; பொரு அரு மருதம் ஆக்கி- நிகரில்லாத மருத நிலமாகச் செய்தும்; எல்லை இல் பொருள்கள் எல்லாம்- (பல்வேறு நிலங்களின்) அளவற்ற பண்டங்களை யெல்லாம்; இடை தடுமாறும் நீரால்- தத்தம் இடத்தை விட்டு வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும் தன்மையால்; செல்லுறு கதியில் செல்லும்-செலுத்தப்படுகின்ற போக்கிலே இழுத்துப் போகின்ற; வினை எனச் சென்றது- இரு வினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது.
- பாலகாண்டம்- நாட்டுப்படலம்
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம்.
வரம்பு எலாம் முத்தம்-(வயல்) வரப்புகளிலெல்லம் முத்துக்கள்; தத்தும் மடை எலாம் பணிலம்- தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம் சங்குகள்; மாநீர்க் குரம்பு எலாம் செம்பொன்- மிகுந்த நீர்ப்பெருக்குடைய செய்கரை களிலெல்லாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை- எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெ்லாம் செங்கழுநீர் மலர்கள்; பரம்பு எலாம் பவளம்- பரம் படித்த இடங்களிலெல்லாம் பவளங்கள்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்- நெற்பயிர் நிறைந்த பரப்புகளிலெல்லாம் அன்னங்கள்; பாங்கர்- அவற்றின் பக்கங்களில் இருக்கின்ற; கரம்பு எலாம் செந்தேன்- சாகுபடி செய்யப்படாத நிலங்களி லெல்லாம் செந்தேன்; சந்தக் கா எலாம் களிவண்டு ஈட்டம்- அழகிய சோலைகளிலெல் லாம் மதுவுண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம்;(ஆக இவ்வாறு வளங்கள் அங்கே பெருகியுள்ளன).
பலவகை வளங்களும் கோசல நாட்டில் கொழித்திருந்தன என்பது கருத்து. பயிர்த்தொழிலுக்கு ஏற்பப் பண்படுத்தாத கரம்பிலும் செந்தேன் பெருக்கு இருந்தது என்பதொன்றே கோசலத்தின் வளத்தைப் புலப்படுத்தப் போதுமானது. குரம்பு: செய்கரையாகிய அணை. சந்தம்: அழகு முதம் முதலான எழுவாய்களுக்கு உள்ளன என்பது பயனிலையாக உரைக்கப்பட்டது - எச்சப் பயனிலை.
மருத வளம்
34.
ஆறு பாய் அரவம், மள்ளர்
ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச்
சாங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில்
எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில்
மயங்கும் - மா மருத வேலி.
மா மருத வேலி- பெருமைக்குரிய (கோசல நாட்டின்) மருத நிலத்து எல்லைக்குள்; ஆறு பாய் அரவம்- ஆற்று நீர் பாய்வதால் எழும் ஓசையும்; மள்ளர் ஆலை பாய் அமலை- உழவர்கள் ஆலையாடுதலால் உண்டாகும் ஓசையும்; ஆலைச் சாறு பாய் ஓசை-அக் கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும்;வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை- நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து பெருகும் ஓசையும்; ஏறுபாய் தமரம்- எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது எழும் ஓசையும்; நீரில் எருமை பாய் துழனி- நீர்நிலைகளில் எருமைகள் பாய்வதால் உண்டாகும் ஓசையும்;இன்ன- ஆகிய இத்தகைய ஓசைகள்; மாறு மாறு ஆகி- வெவ்வேறாக அமைந்தனவாகி; தம்மில் மயங்கும்- தமக்குள் ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும்.
ஓரிடத்து எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறியலாகும். சங்கு கடலுக்கு உரியது; புதுவெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்து வந்தது. தனித்தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்’என விளக்கினார். அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி;இவை ஒரு பொருட் சொற்கள், பொருட் பின்வருநிலையணி.
- கடல்வாணிகம்
முறை அறிந்து, அவாவை நீக்கி,
முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை
கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்த்து உயிர்க்கும் தெய்வப்
பூதலம்தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு
முதுகு ஆற்றும், நெய்தல்.
முறை அறிந்து- ஆளும் முறையை அறிந்து; அவாவை நீக்கி-ஆசையை அகற்றி; முனிவுழி முனிந்து- கோபிக வேண்டிய போதில் கோபித்து; வெஃகும் இறை அறிந்து- தான் விரும்பும் வரியின் அளவை அறிந்து; உயிர்க்கு நல்கும்- தன் குடிகளுக்கு இரங்கும்;இசைகெழு வேந்தன் காக்க- புகழ் அமைந்த மன்னன் பாதுகாப்பதால்;பொறை தவிர்த்து- (பாவமாகிய) சுமை நீங்கப் பெற்று; உயிர்க்கும் தெய்வப் பூதலம்தன்னில் - (அமைதியாகிய) இளைப்பாறு கின்ற தய்வத் தன்மை வாய்ந்த நிலம் போலே; பொன்னின் நிறை பரம் நெய்தல் சொரிந்து- பொன்னாகிய நிறைந்த பாரத்தை நெய்தல் நிலத்திலே இறக்கிவிட்டு; வங்கம் நெடுமுதுகு ஆற்றும்- கப்பல்கள் நீண்ட முதுகுகளை ஆற்றிக் கொள்ளும்.
மன்னன் முறை அறிந்து உயிர்க்கு நல்குவோனாக அமைந்துபொறுப்பை ஏற்றிருப்பதால் நிலமகள் தன் சுமை இறக்கி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள். கப்பல்கள் ஏற்றிவந்த சுமையை நெய்த நிலத்தில் இறக்கிவிட்டு நெடுமுதுகு ஆற்றுகின்றன. உவமையணி. முறை; அரச நெறி. இறை; ஆறில் ஒரு பங்கு வரி; பழங்கால வழக்கு இது. பரம்-பாரம் என்பதம் குறுக்கல் விகாரம்.
Comments
Post a Comment