https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 9, 2021

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 1

                                                   விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர்

                             -    ஆர். பட்டாபிராமன்

சாவர்க்கர் என்றால்  பொதுபுத்தியில் ஏறி நிற்பது அவரது இந்துத்துவா- முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் என்பதுதான். அவரை காந்திக்கு மாற்றாக தந்தை ஸ்தானம் கொடுக்க விழையும் அரசியலும் தீவிரமாக  பரந்து நிற்கிறது. இணையாக அவரை கடுமையாக அவமதித்து புறந்தள்ளி உதாசீனம் செய்யும் அரசியலும் ஆழமாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில் சாவர்க்கர் குறித்து சமீபத்தில் வெளியான இளம் ஆய்வாளர் விக்ரம் சம்பத்தின் 1200 பக்க அளவிலான இரு பெரும் ஆங்கில புத்தகங்கள்-சாவர்க்கர் மறந்துபோன கடந்தகால எதிரொலிகள், சாவர்க்கர் மரபிற்கான வாதங்கள் ஆகியன  ஊடகவெளியில் உரையாடல்களை  உருவாக்கிவருகின்றன.சாவர்க்கர் இப்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளார். காந்தி படுகொலைக்குப் பின்னர் மூடுண்டுபோன அவரை பொதுமேடைகளில் பேசவைக்கவேண்டும் என்கிற பெரும் முயற்சியில் வலது அரசியல் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். இதற்கான எதிர்வினை இடது மற்றும்முற்போக்கு முகாம் களிலிருந்து வந்தாலும் சாவர்க்கர் மறுவாசிப்பு என்பது தவிர்க்கவேண்டாத ஒன்றாகியுள்ளது. இதை விக்ரம் தன் புத்தகங்கள் மூலம் சாதித்துள்ளார். கடுமையான உழைப்பை அந்த இளைஞர் தந்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்களை நம் சமூகம் முன்வைத்து இந்த புத்தகங்கள் எழுப்பும் கேள்விகளை, அல்லது சாவர்க்கரை வைத்து பேசும் அம்சங்களை விவாதிக்கவேண்டும்.

சாவர்க்கர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சிகர சாகசங்களில் தன்னை முற்றாக ஒப்படைத்துக்கொண்ட இளம்பருவ வாழ்க்கைக்குரியவர் என்பதை விக்ரம் சம்பத் நிறுவுகிறார். பிரிட்டிஷ் அதிகாரிகள் என சில தனிப்பட்டவர்களை அழித்து ஒழித்தல் (annihilation of enemies என்ற பதத்தை பயன்படுத்தாவிட்டாலும்) என்பதையும் தாண்டி புரட்சிகர அமைப்புவடிவ சங்கிலிபிணைப்புகளில் அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளமுடியாத இணைப்புகளுடன் தொழிற்பட்டுள்ளனர் என விக்ரம் நிறுவ முயல்கிறார். இதற்கு பெரும் ஆதர்சனமாக சாவர்க்கர் இருந்துள்ளார் என்பது அவரின் மய்யமான முன்வைப்பு.

லண்டனில்  இந்தியா ஹவுசில் இருந்த சூழல் வ வே சு, தி சே செள ராஜன், மதன்லால் திங்கரா, மேடம் காமா, விரேந்திரநாத் , ஹர்தயாள், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என எல்லோரும் ஏதோவொருவகையில் பிரிட்டிஷ் எதிர்ப்பை தீவிரமாக சுவாசித்த காலமது. இரகசிய திட்டங்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள் கொலைகள்- வழக்குகள்  என சாவர்க்கர் சிக்கி இரட்டை ஆயுள்தண்டனை 50 ஆண்டுகளுக்குள்ளாவது- அந்தமான் செல்லுலார் சிறைக்கொடுமைக்கு அனுப்பப்படுதல், அங்கு அவரின் தமையனார் பாபராவுடன்  செக்கிழுத்தல், கயிறு திரித்தல், கால் கை விலங்கிடப்பட்டு  மணிக்கணக்கில் நிற்கவைத்து உடல்நோகும் அவதிக்குள்ளாதல் என்பதெல்லாம் நடந்தது.

இந்தியாவில் எந்த தியாகிக்கும் குறைவில்லாத இந்த தியாகங்களை போற்றிச் சொல்லுதலில் எவரும் குறைகாணமுடியாது. அந்தமான் கொடும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பம், இளம் மனைவியுடன் சேர்ந்து உலகியல் வாழ்விற்கான தாகமிருந்ததும். பிரிட்டிஷ் விதிகளைப் பயன்படுத்தி   கருணைமனுக்களை போட்டதையும் மனிதாபிமானத்தை குருடாக்கிவிட்டு விமர்சிக்கவேண்டிய நிலைப்பாடுகள் பொதுவெளியில் எடுபடுமா எனத்தெரியவில்லை.

அந்தமான், ரத்னகிரி என 14 ஆண்டுகள் சிறைவாசம் கடந்த நிலையிலும் ஊரைவிட்டு செல்ல கட்டுப்பாடு அடுத்து வருகிற  13 ஆண்டுகள் அவருக்கு பிரிட்டிஷ் அரசால் நீட்டிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. சாவர்க்கர் தன் விண்ணப்பங்களில் எவ்வளவு பணிவான மொழியை தந்தாலும்- அரசின் அரசியல் சட்ட எல்லைக்குள் நின்று செயல்படுவேன் என்கிற உறுதிமொழிகளை தந்தாலும் பிரிட்டிஷ் பார்வையில் அவர் ஆபத்தானவராகவும் சந்தேகத்திற்குரியவராகவும்தான் பார்க்கப்பட்டார் என்பதை நாம் உணரமுடியும்.

வன்முறை வழியில் விடுதலை, ஆயுதம் நிறைந்த நாடு கம்பீரமானது. ஆயுதம் ஏந்த தெரிந்த இந்துக்களால்தான் அந்த கம்பீரம் உலக அரங்கில் சாத்தியமாகி நிலைக்கும்- எதிரியை நிலைகுலைய செய்யும் என்கிற கருத்துக்கள் வாழ்நாள் முழுவதும் சாவர்க்கருடன்  நின்றவைகளாகும்.

லண்டனில்  சாவர்க்கர் உள்ளிட்டோரை சந்தித்த காந்தி அவர்களுக்கு மறுமொழியாகத்தான் இந்திய சுயராஜ்யம் எழுதினார் என்பது பொதுவாக பேசப்படும்   ஏற்கப்படும் கருத்தாகவுள்ளது. விக்ரம் சம்பத் இதை ஒரு இடத்தில் மறுக்கிறார். அதே போல் கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமையையும் காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமை என முன்னெடுத்ததற்கு எதிர்வினையாகத்தான் சாவர்க்கரின் இந்துத்துவா ஆக்கம் எழுந்தது என்பதும் ஏற்கப்பட்ட ஒன்றாகவுள்ளது. சாவர்க்கரைப் பொருத்தவரை காந்தி இதில் மிகப்பெரிய தவறை செய்ததாகவே பேசிவந்தார்.  காந்தியுடன் சாவர்க்கர் முரண்பட்ட  காந்தியை கடுமையாக ( even below the belt)  விமர்சித்த அமசங்கள் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.

சாவர்க்கர் மரபை தூக்கி நிறுத்தவேண்டிய கடப்பாட்டில் விக்ரம் தமது முழு உழைப்பையும் தந்துள்ளார். அத்துடன் நூல் தனது பிரதி பரப்பை வைத்துக்கொள்ளாமல் காந்தி மீதான குற்றப்பத்திரிகையாகவும் விரிவதைப் பார்க்க முடிகிறது

No comments:

Post a Comment