4
காந்தி
படுகொலை- கோட்சே சாவர்க்கர் தொடர்பு- வழக்கு விசாரணை குறித்து விரிவாக பல மேற்கோள்களை
ஆவணங்களிலிருந்து விக்ரம் எடுத்துக்காட்டுகிறார். சதிகாரர்களின் பின்புலம்- அவர்களது
வாழ்க்கை போக்குகள்- சதியின் பின்புலம் பேசப்படுகிறது.
காந்தியின்
படுகொலையை திட்டமிட்டு ஒழுங்கமைத்தது சாவர்க்கர்தான் என நம்புவதாக நகர்வாலா உயர் போலீஸ் அதிகாரி வெளிப்படுத்தியுள்ளதும் சம்பத்தால்
தரப்பட்டுள்ளது.
வழக்கின்போது
தன்னை கோட்சே- ஆப்தே உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து அமரவைத்து போட்டோ எடுப்பதை சாவர்க்கர்
ஆட்சேபித்துள்ளார். கோட்சே பக்கம் கூட திரும்பாமல் பாராமுகத்தை மிக எச்சரிக்கையாக அவர்
கையாண்டுள்ளர். எப்படி இப்படி என கோட்சே நொந்துகொள்வதும் கூட விக்ரம் சம்பத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கில்
கொலையாளிகளுக்கு வாதாடிய திறமையான வழக்கறிஞர்களில் ஒருவரான ’இனாம்தார்’
சாவர்க்கரிடம் ஏற்பட்ட அவமானங்களை பதிவு செய்துள்ளார். இனாம்தாரிடம் தான் விடுதலை செய்யத்தகுந்த
அளவில்தான் வழக்கு போய்க்கொண்டிருக்கிறதா- வேறு எவ்வகையில் சென்றால் தான் விடுபடமுடியும்
என சாவர்க்கர் கேட்டு தெளிவுபெற்றும் இனாம்தார் பெற்ற கைம்மாறு அவமானமே என இருமுக்கிய
நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சம்பத் எழுதுகிறார். இதேபோல் இராணுவ ஜெனரலான கரியப்பா சாவர்க்கர்
வீடு தேடிச் சென்று பார்க்கவிரும்பியபோதும் சாவர்க்கர் மறுத்துவிட்ட செய்தியை பார்க்கிறோம்.
இராணுவமயமாக்கு என வாழ்நாள் முழுதும் உரக்கப் பேசிவந்த சாவர்க்கர் காட்டிய அவமரியாதை
அவரின் பெரிய முரணாகவும் தெரிகிறது.
சாவர்க்கர்
தன்னை எவ்வாறு தனது வழக்கறிஞர் மூலம் தற்காத்துக்கொண்டார் என்பதும் கோட்சே தானே முன்நின்று
தன் வழக்கை காந்திக்கு எதிராக தன் தரப்பு வாதத்தை திறமையாக எடுத்துச்சென்றார் என்பதெல்லாம் சம்பத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாத்மாவின்
படுகொலையைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிப்ரவரி 27 1948ல் படேல் குறிப்பாக
பிரதமர் நேருவிற்கு அனுப்பினார். அதில் ஆர் எஸ் எஸ் பங்கிருப்பதாக தெரியவில்லை . சாவர்க்கர்
பொறுப்பிலான வெறிபிடித்த இந்து மகாசபா பிரிவின் சதியாக தெரிகிறது. மகாத்மாவின் படுகொலையில்
விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே தொடர்புடையவர்களாக இருப்பது தெரிகிறது. ஆர் எஸ் எஸ்,
இந்து மகாசபா அமைப்புகள் கொலையை வரவேற்றுள்ளதாகவே அறியமுடிகிறது என்ற பொருள்பட எழுதியுள்ளதைக்
காண்கிறோம்.
ஷியாமா
பிரசாத் முகர்ஜி தனது இந்து மகாசபா சாவர்க்கரை சம்பந்தபடுத்தியுள்ளதால் பேசவேண்டியுள்ளது-
இல்லையெனில் இந்த வழக்கில் ஏதும் பேசியே இருக்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டை வெளிபடுத்தினார்.
அமைச்சராக இருந்துகொண்டு வகுப்புவாத வெறிகொண்டவர்களுக்கு வக்காலத்து வாங்குவது சரியல்ல-
இச்செயல்களை கண்டிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் நேரு போன்றவர்களிடமிருந்து உருவானது.
ஷியாமாவும் இந்து மகாசபாவிட்டு வெளியேறி 1951ல் ஜனசங்கம் நிறுவிய வரலாறும் உருவானது.
அம்பேத்கர்
இவ்வழக்கின்போது எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை சம்பத் தெரிவித்தாலும் சில செய்திகளை
உறுதிபடுத்தமுடியவில்லை எனவும் சொல்கிறார். அதேநேரத்தில் ஜூலை 28, 1948 அன்று அம்பேத்கர்
தனது துணைவியாருடன் வழக்கு நடவடிக்கைகளை அமர்ந்து பார்த்தார் என்ற செய்தியை ’நோட்ஸ்
பகுதியில்’ துசார் காந்தி புத்தகத்தைக் காட்டி சம்பத்
சொல்கிறார்.
சாவர்க்கர்
சாட்சியம் மற்றும் சட்டத்தின் பார்வைகளைக்கொண்டு மகாத்மா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் சாவர்க்கர் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களாக தொழிற்பட்ட கோட்சே- ஆப்தே மனசாட்சி
சாவர்க்கரை விடுவித்துவிடுமா என்ற கேள்வி சம்பத்தாலும் எழுப்பப்படுகிறது. படேலின் மொழியில்
moral culpability என
சம்பத் எடுத்தாள்வதை நாம் பார்க்கிறோம்.
தொடர்ந்த
சாவர்க்கரின் இருப்பும் சோர்வும் அவரின் மறைவுக்காலம்வரையிலான
சில செயல்பாடுகளும் சம்பத்தால் விரிவாக பேசப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியாளர்களை பாராட்டுவது-
விமர்சிப்பது என்ற இருமுறைகளையும் சாவர்க்கர் கையாண்டார். சீனா குறித்த பார்வையை கடுமையாக
விமர்சித்தார். சாவர்க்கர் 1857 முதல் சுதந்திரப்போர் புத்தகம் எழுதியவர் என்ற வகையில்
அதன் நூற்றாண்டுகொண்டாட்ட கமிட்டியினரால் அழைக்கப்பட்டிருந்தார். நேருவும் அதில் பங்கேற்க
வேண்டப்பட்டார். சாவர்க்கர் குறித்து தனக்கு மிகுந்த மரியாதை இருப்பினும் கருத்துவேறுபாடுகளை
ஒரே மேடையில் பேசவேண்டியிருக்கும் என்பதால் தன்னால் வரவியலவில்லை என நேரு அறிவித்துவிட்டார்.
1964ல் நேரு மறைந்தபோது பொதுவெளியில் அதற்கான வருத்தத்தையோ அஞ்சலியையோ பதிவு செய்யாமல்
விடுத்தார் சாவர்க்கர். சாவர்க்கரின் இச்செயலை விக்ரம் சம்பத் animosity எனக்குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கரின்
முழு வாழ்க்கையும் ஒரே பேட்டியில் பார்க்கவேண்டும் என நினைத்தால் அவர் ஆர் எஸ் எஸ்
ஆர்கனைசர் 1965 தீபாவளி இதழுக்கு கொடுத்ததைச் சொல்லலாம்.
அவர்
வாழ்க்கையின் ’திரில்’ தந்த
சந்தர்ப்பங்கள், அவரை புரட்சிகரவாதியாக மாற்றிய லண்டன் சூழல், அந்தமான் கொடுமைகள்-
சித்திரவதைகள், ருஷ்யா, சீனா இந்திய புரட்சிகரவாதிகளுக்கான வித்தியாச சூழல், 1857 குறித்த
புத்தகம், 1947 இந்திய விடுதலையை பெற்றுத்தந்த காரணிகள், காங்கிரசில் ஏன் சேரவில்லை,
அவரின் இந்தியக் கனவு, நீங்கள் வெறிபிடித்த வகுப்புவாதிதானே என்பதற்கு பதில், அணுஆயுத
சூழலில் இராணுவமயமாக்கு என்ற முழக்கம் நியாயமா, எதிர்கால அரசியல் மோதல் இந்து பாசிசத்திற்கும்-
கம்யூனிசத்திற்குமா, உங்கள் புரட்சி தொடர்கிறதா போன்ற கேள்விகள் வைக்கப்பட்டு அவரிடமிருந்து
பதில்கள் பெறப்பட்டுள்ளன.
இந்து
பாசிசம்- கம்யூனிசம் கேள்விக்கு இந்துவால் பாசிஸ்ட்டாக இருக்கமுடியாது- அவன் உண்மையான
ஜனநாயகவாதி என்ற பதிலை மட்டுமில்லாமல் நானும் ஒருவகையில் கம்யூனிச வழிகளைக்கொண்டவன்தான்
என்றும் சொல்கிறார். இந்துத்துவா என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டால் அரசியல் மோதலே இல்லாமல்
போகும் என்கிற அவரது விருப்பம் வெளிப்படுவதைக் காண்கிறோம்.
சாவர்க்கர்
பிப்ரவரி 26 , 1966ல் தனது 83 ஆம் வயதில் மறைகிறார். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், பிரதமர் இந்திரா உட்பட
பலர் இரங்கலை தெரிவிக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் டாங்கே சிறப்பான
ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியாளர் மறைவு என தன் அஞ்சலியில் தெரிவித்தார்.
விக்ரம்
சம்பத்தின் உழைப்பு அசுரத்தனமானது. ஆனால் அவருக்கு விருப்பு வெறுப்பு அற்ற வரலாற்றாசிரியர்
பார்வை இருப்பதாக அவரின் 1200 பக்கங்களை படித்து முடித்தவுடன் நம்பமுடியவில்லை. அடுத்து அவர் திப்பு சுல்தான் பற்றி எழுதப்போகிறார்.
அதற்கு பெர்சியன் மொழியை கற்று வருவதாக சொல்கிறார். நாமும் கடுமையாக உழைத்தால் விழிப்புடன் இருந்தால்
இது போன்ற ஆய்வாளர்களை கவனமாக பரிசீலித்து மேம்பட்ட புரிதல்களுடன் நகரமுடியும்.
7-11-2021
Comments
Post a Comment